(மருத்துவச் சிகிச்சைக்கு முதலில் மருத்துவரை அணுகுக - மருத்துவமனை வேண்டாம்)

2000ஆம் ஆண்டு, சனவரியில் இருசக்கர வண்டியில் அண்ணா மேம்பாலத்தில் சைதாப்பேட்டை நோக்கிப் பயணம். பாலத்திலிருந்து இறங்கியவுடன் இடப்புறம் ஒதுங்க முற்படும்போது வண்டி சாய்கின்றது. ஓட்டி கீழே விழாது நிலைகுலைந்து நிற்கிறான். உடன் பயணித்த மனைவி சாலையின் நடுவில். படுக்கை யில் படுத்திருப்பது போல் எவ்வித அசைவுமின்றி நினைவின்றி கிடக்கிறார். பார்த்துப் பதைக்கிறான். படபடப்புடன் என்ன நடந்தேறிவிட்டதெனத் தெரியாது மலைப்புடன் நிற்கிறான். எல்லாம் முடிந்துவிட்டதோ என மனம் நொடிந்து மனைவியைப் பார்க்கிறான். சாலை யோரமிருந்து அனைவரும் வந்துவிடுகின்றனர்.

அய்ந்து மணித்துளிகள் அசைவின்றி இருந்தவர் சற்று விழித்துப் பார்க்கிறார். இவனுக்கு உயிர் வந்த உணர்வு. சுற்றியுள்ளோர் தண்ணீர், சோடா, காபி கொடுக்கலாமென பதட்டத்துடன் முன் வருகின்றனர். மெல்ல எழுந்த அவரைக் கைத்தாங்கலாக அழைத்து வந்து நடைப் பகுதியில் அமர வைத்தவுடன் எல்லோ ரையும் பார்த்து ஏதும் வேண்டாம் எனத் தெரிவிக்கும் வகையில் கையை அசைத்துக் கொண்டு கையில் ஒரு குவளைத் தண்ணீரைப் பெற்று குடிக்காமல் சற்று நேரம் அமைதியாக இருக்கின்றார்.

பின் மெதுவாகத் தண்ணீரை உதட்டில் வைத்து சில துளிகளைக் குடித்துவிட்டு பின் சற்றுநேரம் கடந்து, அவ்வாறே செய்துவிட்டு எல்லோரையும் பார்த்து நேர்ச்சி நேரிட்டு மயக்க நிலையிலிருந்து திரும்புவோருக்குத் தண்ணீர், காபி என எதையும் குடிக்கத் தரக்கூடாது என்றும் அது, மூளை அடிபட்டுப் பாதிப்புக்குள்ளாயிருப் பின் அப்படிக் குடித்த தண்ணீர் குருதியுடன் வாந்தியாக வெளியேறி உயிருக்கே வினையாகி விடும் என்று அறிவுரை அளித்தார். அவர் கணவர் உள்ளிட்ட அனை வருக்கும் ஒரே வியப்பு. பின் அவர்கள் தந்த காபியைக் குடித்துவிட்டு, வீட்டுக்கு வந்து பொருள்களை வைத்து விட்டு உடன் மருத்துவரிடம் சென்றனர்.

மருத்துவர் மிகவும் அமைதியாகவும் பொறுமை யாகவும் விவரத்தைக் கேட்டறிந்து ஒன்றுமில்லை. சிறு மயக்கம் தான் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனத் தெளிவாகச் சொல்லி நம்பிக்கையூட்டினார். கை, கால்களை நீட்டி மடக்கச் சொல்லி, ஒரு பொருளைக் காட்டி அதை பல திசைகள் கொண்டு சென்று அதைப் பார்க்கச் சொல்லிய போது இவர் எவ்வித வலியும் இல்லையென்றும், இயல்பாகவே பார்க்க முடிகிறது என்றும் தெளிவாகச் சொல்கிறார்.

மருத்துவர் முடிவான முடிவுக்கு வந்தவராகத் தெளி வாகச் சொன்னார். வண்டி நேர்ச்சிக்குள்ளான போது துண்டாகத் தூக்கியெறியப்பட்டதின் அதிர்வாக சற்று மயக்கமுற்றிருந்தார் என்றும் அவருக்கு வேறு எவ்வித சிக்கலும் ஏற்படவில்லை என்றார். அவர் மருந்து எழுத முற்பட்ட போது, அடிபட்டவர் தான் ஒரு குரோசின் மாத்திரை போட்டதாகச் சொன்னார். அது (SOS); Save our Soul) ஒரு உயிர்க்காக்கும் மருந்தா கவே செயல் படும். நன்று-அதுவே போதும் எனச் சொல்லி மருந் தேதும்; தராமல் அனுப்பி வைத்துவிட்டார்.

மறுநாள் காலை எழுந்து அடுப்புப் பற்ற வைக்கக் குனிந்த போது, தலைச்சுற்றுவது போல் உணர்வு ஏற்பட்டதையடுத்து உடன் அந்த மருத்துவரை அணுகினர். அவர் விளக்கினார். இது சினிமாவில் வருவது போன்று 24 மணி அல்லது 48 மணிநேரத்தில் சரியாகிவிடுவது போன்ற மயக்கமன்று என்றும், இவர் வண்டியிலிருந்து தூக்கி எறியப்பட்ட போது ஏற்பட்ட மன அதிர்வு பல நாள்கள் கூடத் தொடரலாம்; அதுகுறித்து அஞ்சத் தேவை யில்லை என்றும் நம்பிக்கையூட்டி அறிவுரைத்தார்.

இரண்டு, மூன்று நாள்கள் கடந்தன. மனதில் அச்சம். தலையில் அடிபட்டுள்ள நிலையில் இவருடைய நம்பிக்கை யூட்டும் அறிவுரையை மட்டும் ஏற்று வாளா இருந்திடல் சரியா எனப் பலவாறு அய்யம். திரும்பவும் அந்த மருத்துவரிடமே சென்றனர். அச்சத்தைச் சொன் னார்கள். அவர் மேலும் விவரித்தார்.

நீங்கள் ஸ்கேன் (அ) எம்.ஆர்.அய். எடுத்திட வேண்டு மெனக் கருதுகிறீர்கள். அது தேவையில்லை. ஏனெனில் தலையில் அடிபட்டு 72 மணிகள் கடந்துவிட்டன. தலையில் அடிபட்டதிலிருந்து 48 மணிநேரத்தில் குருதி வெளியாகி இருந்தால் கட்டியாகி விட்டிருக்கும். அப்படி யெனில் மிகவும் கடுமையான மனப்பிறழ்வு பாதிப்புக் குள்ளாகி இருப்பீர்கள். ஆனால் நீங்கள் இயல்பு நிலையில் இருக்கிறீர்கள். சற்றும் கவலையுற வேண் டாம் என உறுதியான நம்பிக்கையளித்தார். எனினும் மலைத்து நின்றனர். சரி, நீங்கள் ரூ.2000, ரூ.3000 எனச் செலவு செய்து படம் எடுத்துப் பார்க்க நினைக்கிறீர் கள். வேண்டவே வேண்டாம். உங்கள் மன அமைதிக் காக ஒரு நரம்பியல் மருத்துவரைப் பார்த்துவிடுங்கள் எனச் சொல்லி நரம்பியல் மருத்துவர் ஒருவரைப் பார்க்கச் சொன்னார்.

நரம்பியல் மருத்துவரை உடனே சென்று பார்த் தோம். அவர் நாங்கள் பார்த்த மருத்துவரைக் குறிப் பிட்டு அவர் பார்த்த பின் நான் பார்க்கத் தேவை யில்லை எனச் சொல்லி, அவர் நுட்பமாகப் பார்த்தார். ஒன்றுமில்லை. நீங்கள் என்னிடம் வந்துவிட்டீர்கள் என்பதால், உங்கள் நிறைவுக்காக எனச் சொல்லி சத்து மாத்திரை ஒன்றை எழுதிக் கொடுத்துவிட்டார். மன நிறைவுற்றனர்.

நிகழ்வு நிறைவு பெற்றது. நிலைபாடு?

மறந்தே விட்டோம். அந்நிகழ்ச்சியை. ஆனால் இதி லிருந்து நாம் மேற்கொண்ட நிலைபாடுதான் - நம் நாட்டில் நம் மக்கள் மனதில் மருத்துவச் சிகிச்சை பற்றிய மனநிலை - உளவியல் மனங்கொள்ளத்தக்கது.

இந்தச் சிகிச்சையை நாங்கள் மேற்கொண்டதில் செலவினம் என்று பார்த்தால் 2000 ஆண்டில் வெறும் ரூ.100-க்குள்தான். ஆனால் பெற்ற மன நிம்மதி, மன நிறைவு, மருத்துவர்கள் கொடுத்த அறிவியல், மருத்துவம் சார்ந்த அறிவுரைகள், நம்பிக்கை, ஊக்கம் இவற்றை உள்ளபடியே சொற்களால் வெளிக்கொணர முடியாது என்பது என் எண்ணம்.

நேர்ச்சியில் மண்டையில் அடிபட்டுவிட்டது. எவ்வாறான  பாதிப்புக்குள்ளாகிவிட்டோமோ என்று புரிந்துகொள்ள முடியாத அச்சம் எனப் பல காரணிகள் மேலோங்கி யிருந்தால் கட்டாயம் ஓர் பெரிய தனியார் மருத்துவ மனைக்குத்தான் சென்றிருந்திருப் போம். இதுபோன்ற இக்கட்டான சூழலில் அரசு மருத்துவ மனையை அணுகும் அறிவுடைமையும் தெளிவும் எங்கேனும் எவரிடையேனும்-நல்ல சம்பளம், வசதி படைத்தவர் என்பவரின்றி, எளியோரிடயே இருக்க வாய்ப்பே இல்லை என்பது களநிலை - இதுவே பொது மக்களின் உளவியல். இது வருந்தத்தக்க இரங்கத்தக்க நிலை தனியார் மருத்துவமனை என்று சென்றிருந்தால் அவர்கள் முதலில் முதலுதவிச் சிகிச்சை அளித்திருப் பார்களா என்பதே அய்யப்பாடு. ஆனால் அதற்கு முன்பாகவே சி.டி. ஸ்கேன் - அல்லது எம்.ஆர்.அய். என்று எடுத்து அதற்கு குறைந்த அளவு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10000 பெற்றிருப்பர். ஆனால் அந்த நிலையில் அது தேவைதானா என்று நமக்கு எப்படிப் புரிந்திருக்கும்? நாம் அச்சத்தில் உறைந்து துன்பத்தின் பிடியில் துவண்டு கொண்டி ருக்கும் வேளை. ஆனால் அது முற்றிலும் தேவையற்றது என்பதை நம் மருத்து வர் உணர்த்துவதை மனங்கொள்வோம்.

நேர்ச்சியின் போது மண்டை ஓடு உடைந்தெறிந்து குருதிக் கசிவு அல்லது கொட்டுமெனில் அதற்கெல்லாம் உயரிய முதன்மையான சிகிச்சைதான். ஆனால் அந்நிலை ஏற்படாததால் அது முற்றும் தேவையில்லை. ஏனெனில் உள்ளே அடி பட்டு குருதி கசிந்திருப்பின் அதுஉறை நிலை அடைவதற்குக் குறைந்த அளவு 48 மணிநேரம் தேவைப்படும். அதற்கு முன் எடுக்கும் சி.டி.-எம்.ஆர்.அய். உறுதியான நிலையை வெளிப் படுத்திட முடியாது. அது அய்யத்திற்கிடமான தன்மை யைத்தான் வெளிப்படுத்தியிருக்கும். அதன் அடிப்படை யில் மருத்துவச் சிகிச்சை என்பது முடிவானதாக அமையாது. அய்யத்திற்கிடமானதாகவேதான் (Trail)  இருந்திருக்கும்.

எனவே எந்த நிலையிலும் இதுவரை மேற் கொண்ட சிகிச்சை முறை வெறும் பணச்செலவை ஏற் படுத்துவதாகத்தான் இருந்திருக்கும். பின் எவ்வளவு நாள் உள் நோயாளியாக நிறுத்தி வைத்து விடுவார் களோ தெரியாது. அது அவர்கள் மனம் போல் முடி வாகும். இதற்கெல்லாம் பெருமளவு பல பத்தாயிரங் களில் செலவு பிடிக்கும். செலவு ஒரு பக்கம் இருக் கட்டும். இந்தச் சிகிச்சை பெரும் காலத்தில் நமக்கு நம்புக்கையூட்டும், தெம்பு தரும் நல்லுரைகள் அளிக் கப்பட்டிருக்குமா? இல்லவே இல்லை. மாறாக அச்ச மூட்டி நம்பிக்கையிழக்கும் விளிம்பு நுனிக்கே நம்மை தள்ளிச் சென்று நிலைகுலையச் செய்து மன உளைச் சலுக்கு ஆளாக்கி விடுவர். இதுவெல்லாம் சரி, நமக்கு உண்மை நிலையையாவது விளக்கியிருப்பார்களா என்பது பெரும் அய்யத்திற்குரியது. எனவே இது குறித்து சற்று நிதானித்து இனி என்ன செய்ய வேண்டு மென்பதைக் காணலாம்.

இதுபோன்ற தேர்ச்சிகளிலும் நிதானத்தைக் கடைப் பிடித்து முதலில் தனியே மருத்துவரை அணுக வேண்டு மென்பதை அடிப்படையாகக் கொள்ள வேண்டும். கட்டாயம் மருத்துவமனைக்குள் சென்றிடக் கூடாது. அரிதாக சில விதிவிலக்குகள்  இருக்கலாம். முதலில் மருத்துவரைப் பார்த்த பின் அவர் அறிவுறுத்தலின் அடிப் படையில்தான் மருத்துவமனைக்குள் அடியெடுத்து வைக்க வேண்டும். இது நேர்ச்சி நிகழ்வுகளுக்கே இந்த அணுகுமுறைதான் என்றால் சளி, காய்ச்சல், தலை வலி  போன்ற சின்னச் சின்ன உடல் நலிவுக்கு தனியே மருத்துவரைத்தான் பார்க்க வேண்டும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

மேற்சொன்ன வழிகளை எல்லாம் நான் சொல்லவில்லை. மணிப்பால் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகப் பணியாற்றிய இதயச் சிகிச்சை வல்லுநரான எக்டே மருத்துவர் தெளிவாகவும் விரிவாகவும் விளக்குகிறார்.

அவர் கவலையுடன் சொல்கிறார். உங்கள் எந்த வகையான நலக்கேட்டுக்கும் முதலில் வசிப்பிடத்திற்கு அருகில் கிளினிக் வைத்து மருத்துவம் செய்யும் மருத்துவருள் உங்களுக்கு ஏற்றவரிடம் சிகிச்சையைத் தொடங்குங்கள்.

குறிப்பாக அந்த மருத்துவர் காது கொடுத்துக் கேட்பவராகவும், கனிவுடன் நம்பிக்கையும் ஊக்கமும் ஊட்டக்கூடிய வகையில் பேசுபவராகவும் இருப்பவரா என்று உறுதி செய்து கொள்ளுங்கள். அதுவன்றி உடன் ஏதோ தனியார் மருத்துவ மனையொன்று சென்று வீட்டீர்களெனில், இதில் எந்த மருத்துவமனையும் விதி விலக்கில்லாமல் உங்கள் பணத்தைப் பறிப்பதிலே குறியாக இருந்து சிகிச்சை முறையை வகுத்து உங் களை வறியவராக்கும் அளவுக்கு உறிஞ்சிவிட்டு சிகிச்சை அளித்ததின் விளைவால் முற்றும் குணமடைந்தவர் களாக வெளியில் அனுப்புவார்களா என்பது அய்யத் திற்குரியதுதான். என வேதனையுடனும் மானுடப் பற்றுடனும் பொறுப்புடனும் பல கட்டுரைகளில் விளக்கி யுள்ளார்.

அவர் மருத்துவராக இருந்து மட்டும், அவர் மருத்துவச் சிகிச்சையைக் குறித்து மட்டும் சொல்லவில்லை. அவர் நாட்டைப் பிடித்திருக்கும் கொடும் நோயாய் பற்றிக் கொண்டிருக்கும் வெற்று பேச்சாளர்கள், அப்துல் கலாம் போன்றோரின் கருத்துக்களை மனதிற்கொண்டு நாட்டை வல்லரசாக்குவது இருக்கட்டும். முதலில் மக்களனை வருக்கும் அடிப்படைக் கல்வி கொடுங்களடா கயவர்களே என மனம் குமுறி மனம் உடைந்து சொல்கிறார்.

எனவே தோழர்களே! மக்கள் நலம் பேணும் அரசுகளும் மக்கள் பற்றுள்ளோரும் அருகி வருகின்ற இக்காலக்கட்டத்தில் அடிப்படையில் அனைவருக்கு மான தரமான கல்வி அரசால் (தாய்மொழி வழிக் கல்விதான் தரமாக அமைய முடியும்; இதை அரசு மட்டுமே தரமுடியும்) அளிக்கப்படுவதைக் குறிக்கோளா கக் கொள்வது. அடுத்து முதன்மையாக மக்கள் அனை வருக்கும் தரமான மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படு வதை (அரசால்தான் கொடுக்க முடியும்) உறுதிப் படுத்தும் குறிக்கோளாக வரையறைப்படுத்திட வேண்டி யுள்ளது.

இந்நிலையிலிருந்து அடி பிசகி, தனியாரும் கல்வி, மருத்துவத்தில் பங்களிக்கலாம் எனக் கருதினால் இவ் விரண்டையும் பெற முடியும் என்பதே முற்றிலுமாக நீர்த்துப் போய்விடும்.

இந்த அடிப்படைப் புரிதலுக்கு வருவதற்கு வேறெந்த ஆய்வும் மேற்கொள்ள வேண்டாம். அய்ரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா, ஆசுத்துரேலியா என்பன நாடு வளர்ச்சியடைய (Growth)  வேண்டுமென்று மட்டுமே எண்ணாமல் மக்கள் மேம்பாடடைய (development) வேண்டுமென்ற அடிப்படையாக மக்கள் பற்றுடையவர்களாக, மக்கள் நாயக முதன்மைக் கோட் பாடான மக்கள் நலத்தை முன்னிறுத்தித் தான் மக்கள் மேம்பாட்டு அளவில் (HDI-Human Development In dex) மேலோங்கி இருக்க வேண்டுமென்று மக்களுக் கான கல்வியையும் மருத்துவத்தையும் அரசு மட்டுமே அளித்திட வேண்டுமெனச் செயல்பட்டு வருகின்றன. மேலும் நன் மதிப்புடனும், நல் ஊதியத்துடனுமான நல் வேலை வாய்ப்புக்களையும் பெற்றுத் தர அந்த அரசுகள் முனைந்து செயல்பட்டு வருகின்றன.

இதில் முற்றும் அரசு என்பதில்தான் கல்வி, மருத்துவம் என்பவை பெரும்பாலும் அனைத்து மக்களும் பாகு பாடின்றி, வேறுபாடின்றி ஒரே சீராகக் கிடைத்திட வழிவகை செய்திட முடியும். எவ்வகையில் தனியார் இதில் நுழைவரெனில் இரு துறைகளும் இந்தியாவில் உள்ளவாறு கேடுகெட்டத் தன்மைக்குத்தான் இட்டுச் செல்லும். இதை மனமறிந்து ஒன்றிய, மாநில அரசுகள் வெகுமக்களுக்கு முற்றும் எதிராக, இந்தச் சமூக சேவைப் பணிகளை மேற்கொள்ளும் பொறுப்புகளி லிருந்து தங்களை முற்றிலும் விலக்கிக் கொண்டுள் ளனர் என்பது தெளிவு.

இந்நிலை மாற மக்கள் பற்றுள்ளோர் அனைவரும் ஒன்றிணைந்து எவ்விலை கொடுத்தேனும் போராடிப் பெற்றிட வேண்டும்.

Pin It