ஆங்கில இதழ்களையோ, நூல்களையோ பார்த்தால் எழுத்துப் பிழையோ, சொற்பிழையோ காணமுடியாது. அயல்மொழியான ஆங்கிலத்தில் நாம் கடிதமோ, கட்டுரையோ எழுதினால்கூட ஒரு தவறும் நேராமல் பார்த்துக் கொள்கின்றோம். நாம் எழுதியதை வேறொரு வர் பார்த்துப் பிழைகளைச் சுட்டிக்காட்டினால் வெட்கித் தலைகுனிகிறோம். ஆனால் நம்மவர்கள் - தமிழையே தாய்மொழியாகக் கொண்டவர்கள் தமிழில் எழுதுவதில் தான் எத்தனை, எத்தனை பிழைகள்? அந்தப் பிழை களுக்காக நாம் வெட்கப்படுவதில்லையே! ஏன்?
நாம் எழுதுவதுதான் தமிழ் என்ற நினைப்போடு எழுதி விடுகிறோம். அடுத்தவரிடம் காட்டிப் பிழையைத் தெரிந்துகொள்ளவும் வெட்கப்படுகிறோம்.
நம்மவர் எல்லோருமே தமிழைப் பிழையறக் கற்றவர்களாக இருக்க முடியாது. எனவே நாம் எழுதியது சரிதானா என்று தமிழறிஞர்களிடமோ, தமிழைப் பிழையின்றி எழுதக் கூடியவரிடமோ காட்டித் திருத்திக் கொள்வதில் தவறில்லை; அதில் வெட்கப்படுவதற்கு ஒன்றுமில்லை. தமிழில் இன்றைக்கு வெளிவந்து கொண்டிருக்கும் நாளிதழ்களிலும் பிற தாளிகைகளிலும் உள்ள இலக்கணப் பிழைகளைக் காணும்போது நமக்கு வேதனையாக இருக்கிறது. தமிழர்களாகிய நம்மையும் வெட்கப்படச் செய்கின்றது.
குறிப்பாக, ஒற்றுப் பிழையைச் சொல்லலாம். ஒற்றுப் பிழையில்லாமல் வரும் ஏடுகளோ, இதழ்களோ இல்லை யென்றே சொல்லிவிடலாம். நூற்றுக்குத் தொண்ணூற் றைந்து பேருக்கு மேல் ஒற்றுப் பிழைகளோடுதான் எழுதுகிhறர்கள். ஒற்றெழுத்து வரக்கூடாத இடங்களில் ஒற்றெழுத்தைப் போடுகிறார்கள். ஒற்றெழுத்து வர வேண்டிய இடங்களில் ஒற்றெழுத்தே இல்லாமல் எழுதுகிறார்கள். இதற்குக் காரணம் நம்மவர்கள் - நன்கு படித்தவர்கள் கூட எங்கு ஒற்றெழுத்து வரும்; எங்கே வராது என்று தெரிந்து கொள்ளாமலே எழுதி வருகின்றனர்.
ஒற்றெழுத்து என்பது ஒரு கட்டடம் கட்டும் தொழிலாளி, இரண்டு செங்கற்களுக்கிடையே அவற்றை ஒட்டுவதற் காக சுண்ணச்சாந்து அல்லது சிமெண்டு வைத்து ஒட்டுவது போன்றது. சாந்து, சிமெண்ட் இல்லாமல் வெறுங்கல்லை அடுக்கி வீடு கட்டினால் அந்த வீடு நிலைக்குமா? கலகலத்துப் பொலபொல என்று நொறுங்கி விடாதா? தமிழும் அப்படித்தான்.
எடுத்துக்காட்டு :
வேலை கொடுத்தார்; அதாவது வேலை செய்வதற்குப் பணியில் அமர்த்தினார் என்று பொருள்படும்.
வேலைக் கொடுத்தார் என்றால் வேல் என்ற ஆயுதத்தைக் கொடுத்தார் என்று பொருள்.
ஆணை பெற்றான் என்றால் கட்டளையிடும் ஆணையைப் பெற்றான் என்று பொருள்.
ஆணைப் பெற்றான் என்றால் ஆண் குழந்தை யைப் பெற்றான் என்று பொருள்.
ஒற்று என்னும் ஓர் எழுத்து இருந்தால் என்ன பொருள், இல்லாவிட்டால் என்ன பொருள் என்பதை இதன்மூலம் அறியலாம். ஒற்றெழுத்து என்பது உப்பைப் போன்றது. உணவில் உப்பு மிகுந்தால் கரிக்கும். குறைந்தால் சுவையிருக்காது அல்லவா?
ஆங்கில இதழ்களில் ஆங்கிலத்தை நன்கு அறிந்த வர்களைத்தாம் வேலைக்கு அமர்த்திக் கொள்வார்கள். நம்மவர்களோ கிடைத்த ஆட்களை வைத்துக்கொண்டு இதழ்களை நடத்துகின்றார்கள்.
இதழ் நடத்துபவருக்கே, அதன் ஆசிரியருக்கே பிழையின்றித் தமிழில் எழுதத் தெரிவதில்லை, ஒருநாள் வெளிவரும் தமிழ் நாளிதழ்களை எல்லாம் உட்கார்ந்து படித்துப் பாருங்கள். எத்தனை எத்தனை பிழைகள்! பட்டுக்கோட்டை என்பதைக்கூடப் பட்டுகோட்டை என்று எழுதுகிறார்கள். அவனுக்குக் கொடுத்தான் என்பதை அவனுக்கு கொடுத்தான் என்று எழுதுகிறார் கள். அட்டைக்கத்தி என்பதை அட்டை கத்தி என்ற பெயரில் திரைப்படம் எடுக்கிறார்கள்.
இப்படி எத்தனையோ பிழைகள். இன்றைய நாளி தழ்களில் மட்டுமல்லாது நூல்களிலும் பிழைகள் மலிந்து காணப்படுகின்றன. தொலைக்காட்சியில் எழுதிக் காட்டுவதிலும் அப்படியே! இப்பொழுதெல்லாம் ‘புலவர்’ என்று பெயருக்கு முன்னால் உள்ள சொல்லை நம்பி, அவர் எழுதுவதெல்லாம் சரிதான், என்று நாம் நம்பி விட முடியவில்லை.
வெளிநாட்டிலிருந்து வந்து தமிழைக் கற்றுத் தமிழுக்கே ‘அகராதி’ தந்தார் வீரமாமுனிவர். தமிழை ஆராய்ந்து ஒப்பியல் இலக்கணம் எழுதினார் வெளி நாட்டறிஞர் கால்டுவெல். ஆனால் தமிழகத்திலேயே பிறந்து வளர்ந்து தமிழைப் படித்து, தமிழில் பணி யாற்றுபவர்கள் சரியாகத் தமிழை எழுதாதற்கு என்ன காரணம்? நம் தாய்மொழி தானே, நம் எல்லோருக் கும் தெரிந்த மொழிதானே, எப்படி எழுதினால் என்ன என்று தாய்மொழியைப் பொருட்படுத்தாமைதான் இதற்குக் காரணம்.
நமது பள்ளிக்கூடங்களிலும் தமிழைப் பிழையற எழுதக் கற்பிப்பதில்லை. தமிழாசிரியர்களிலேயே சில ருக்கு இலக்கணத் தட்டுப்பாடு உண்டு. நான் படித்த பள்ளியிலேயே ஒரு தமிழாசிரியர் இலக்கணத்தைச் சரியாகக் கற்பிப்பதில்லை. ஒரு மாணவன் எழுந்து இலக்கணத்தில் ஓர் ஐயப்பாட்டைத் தெளிவாக்கச் சொல்லி, வினவினால், “தேர்வில் இலக்கணத்துக்குப் பத்து மதிப்பெண்கள்தாம் வைத்திருப்பார்கள். அதை விட்டுவிட்டு மற்றவற்றை நன்றாகப் படித்து எழுதினால் போதும்” என்று சொல்லுவார். இதற்குக் காரணம் அவரே இலக்கணத்தைச் சரியாகக் கற்காது விட்டுவிட்டதுதானே!
இப்படித் தமிழர்களே தாய்மொழியைப் புறக் கணிக்கலாமா?
சில இதழ்களில் ஆங்கிலச் சொற்களை அப்படியே தமிழில் எழுதுகிறார்கள். அதற்குச் சரியான தமிழ்ச் சொல் இருக்கும்போதே அதனைப் புறக்கணித்து விட்டு ஆங்கிலச் சொற்களைப் போடுகிறார்கள்.
சில இதழ்களின் பெயர்களே ஆங்கிலத்தில் உள்ளன. ஜூனியர் விகடன். டாக்டர் விகடன். குமுதம் ரிப்போர்ட்டர் இப்படிப் பல. லாரி ஸ்ட்ரைக், புக்கிங் நிறுத்தம், வாட்ஸ் அப் ட்ரெண்டிங், மிஸ்டர் ப்ராப்ளம், பஞ்ச், இது நுஒவசய பஞ்ச், ப்ளஸ், சன்டே ஸ்போர்ட்ஸ், சன்டே சினிமா, ஹெல்த் ஸ்பெஷல், ஆட்டோ மொபைல் இப்படி எண்ணற்ற ஆங்கிலச் சொற்கள் அதே உச்சரிப் பில் தமிழில் வெளியிடுகிறார்கள். இந்த அவலம் எப்போது நீங்கும்?
இந்த நிலை ஏன்? எண்ணிப் பாருங்கள்.
பள்ளி மாணவர்கள் படிக்கும் இலக்கண நூல்களை யாவது வாங்கிப் படிக்க வேண்டும்.
நன்றி : மீண்டும் கவிக்கொண்டல், மே 2017