தலை, தோள், இடுப்பு

வகையறாக்களுக்கு

எங்கள்

கால்நிமிர்ந்த வணக்கங்கள்...

மேலது சமூகத்துக்கு

எங்களின் சில வினாக்களை

விண்ணப்பமாக வைக்கிறோம்.

காலகாலமாய் உங்களைச்

சுமந்து திரிகிறோமே

ஒருநாளேனும் எங்கள் வலியை

உணர்ந்ததுண்டா நீங்கள்?

உழைக்கும் கால்களுக்கு

செருப்புகூட இல்லாத நிலையில்

கழுத்துக்குச் சங்கிலியும்

கைகளுக்கு மோதிரமும்

தங்கத்தில் போட்டுத் தருக்குகிறீர்களே

வெட்கமாக இல்லையா உங்களுக்கு?

நாங்கள்தான்

நாலாந்தரமாயிற்றே...

முதல்தரமாகிய நீங்கள்

முன்னே போகவேண்டியதுதானே...?

ஏன் நீங்கள் எப்போதும்

எங்கள் மேலேயே

சவாரி செய்கிறீர்கள்?

‘தலையால்

நடக்கிற காலம்

ஒருபோதும் வராது’

என்பதுதானே

உங்கள் திமிருக்கெல்லாம்

காரணம்?

ஒன்றை மட்டும்

கவனத்தில் வையுங்கள்

எங்கள் இயக்கம் நின்றுவிடும்போது

மேலது மூன்றும்

பிணமாகத்தானே படுத்துக்கிடக்கும்?

 

Pin It