சம்பூகன் எனும் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஓர் இளைஞன் தவம் செய்ததால், ஒரு பார்ப்பன இளைஞன் மரணம் அடைந்து விட்டதாகக் கூறி, சம்பூகனை இராமன் தலைகீழாகத் தொங்கப்போட்டு, கழுத்தை வெட்டிக் கொன்றான். இதேபோன்ற நிகழ்வு ஒன்று ஒரிசா மாநிலம், மல்கங்கிரி மாவட்டம், இண்ட குடா கிராமத்தில் நடைபெற்று உள்ளது. யாகங்கள் செய்வதினாலும், மந்திரங்களை உச்சரிப்பதினாலும் ஒரு நரை மயிரைக் கருப்பாக்கக் கூட முடியாது. ஆனால் இவற்றினால் அரிய பெரிய நன்மைகள் கிடைக்கும் என்று நம்பும் ஒரு பெரும் மக்கள் திரள், நம்மிடையே இருக்கவே செய்கிறது. கூடவே இந்த யாகங்களையும் மந்திரங்களையும் பார்ப்பனர்களும் பார்ப்பனர்களின் "ஒப்புதல்" பெற்றவர்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்றும் இவர்கள் நம்புகிறார்கள். அதிலும் சாதிப்படி நிலையில் தங்கள் சாதியைவிட உயர்ந்த சாதியில் உள்ளவர்கள் தான் இவற்றைச் செய்யத் தகுதி பெற்றவர்கள் என்று மனமார நம்புகிறார்கள். அதுகூடப் பரவாயில்லை. தங்கள் சாதியைவிடக் கீழ்நிலையில் உள்ளவர்கள் இவற்றைச் செய்தால் கோபம் பொத்துக் கொண்டு வந்து விடுகிறது.
ஒரிசா மாநிலம், மல்கங்கிரி மாவட்டம், இண்ட குடா கிராமத்தில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த இர்மாகர்த்தமி என்ற 25 வயது இளைஞர் அருள்வாக்கு கூறுதல், பில்லி சூனியம் செய்தல் / எடுத்தல், மந்திரம் உச்சரித்தல் பேன்ற வேலைகளைச் செய்து கொண்டு இருந்தார். பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவன் இதுபோன்ற (ஏமாற்று) வேலைகளைச் செய்வதா என்று அக்கிராமத்தில் உள்ள "உயர்" சாதியினர் பொங்கி எழுந்து விட்டனர்.
வருணாசிரம முறையை மதிக்காத அவனை, 21.12.2019 அன்று கிராமப் பஞ்சாயத்துக் கூட்டத்தின் முன் இழுத்து வந்து நிறுத்தினர். அக்கூட்டத்தில் அவருடைய பில்லி சூனிய வேலைகளால் அதே கிராமத்தைச் சேர்ந்த ஜகமதி என்ற 23 வயது இளைஞர் மரணம் அடைந்து விட்டதாகக் குற்றம் சாட்டினர். அந்த மந்திரவாதி தன்னிலை விளக்கம் அளிப்பதற்கு முன்பேயே கூட்டத்தில் இருந்தவர்கள் அவரைத் தடியால் அடித்துக் கொன்று விட்டனர். இதன் தெடர்ச்சியாக 22.12.2019 அன்று அப்பகுதி ஆளுகையில் வரும் களிமேலா காவல் நிலையம் நான்கு பேர்களைக் கைது செய்து விசாரித்து வருகிறது.
வர்ணாசிரம அதர்மம் வெளிப்படையான சட்டமாக இருந்த காலத்திலும் சரி; மறைமுகமாகப் பின்னிப் பிணைந்து உள்ள இந்தக் காலத்திலும் சரி; கடவுள், பிசாசு, பில்லி சூனியம் பேன்ற ஏமாற்று வித்தைகளைப் பயன்படுத்துவதை முற்றுரிமையாகப் பார்ப்பனர்களே பெற்று உள்ளனர். அந்த ஏமாற்று வித்தைகளை ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் கைக்கொண்டால் காவல் துறை, நீதிமன்றம் பேன்ற அரசின் எந்த அங்கத்திற்கும் செல்லாமல் அவர்கள் ஊர்க்கூட்டத்திலேயே தண்டிக்கப் பட்டு விடுகிறார்கள். அறநிலைக்கும், அறிவு நிலைக்கும் எதிரான இப்படிப்பட்ட கடினமான இருளும், சூறாவளி யும் சூழ்ந்து உள்ள சூழலில்தான் மக்களின் விடு தலைக்காகப் போராட வேண்டி உள்ளது.
- இராமியா