எல்லாரையும் ஏமாற்று
ஏழைகளின்
வயிற்றிலடி
மாதச் சம்பளக்காரனுக்கு
மரணவரி கொடு
உழவர்களின்
நிலத்தைப் பிடுங்கு
திருடிப்போக வசதியாய்
சாலை அமை
போராடுவோரைச்
சிறையிலிடு
உரக்கப் பேசுவோரின்
நாக்கை அறு
அறிவிக்கப்படாத
அடக்குமுறை செய்
பாலியல் கொடுமைகளா...
பரவாயில்லை நடக்கட்டும்
குழந்தைகள் கொலையா...
அதனாலென்ன
அவர்கள் வரி செலுத்துவதில்லை
வாக்கும் அளிப்பதில்லை
எங்கெங்கும் கொடுமைகளா...
அதை சாலை நடுவே கட்டியுள்ள
கோவில்கள் பார்த்துக்கொள்ளும்
பொருளாதார வளர்ச்சி
நாட்டு வருமானம்
தனிநபர் வருமானம்
பண மதிப்பு
எதைப் பற்றியும்
கவலைப் படாதே
இந்த உலகம்
எக்கேடு கெட்டாலும்
உனக்கென்ன...
மூக்கில் கைவைத்துப் பார்
சுவாசம் ஓடுகிறதா
சந்தோசப் பட்டுக்கொள்!
யாரோ செத்தால் உனக்கென்ன
கார்ப்பரேட்கள்தான்
நாட்டின் உயிராதாரம்
காலையில் வெளியில்போய்
இரவு வீடு வந்துவிட்டாயா
நிம்மதிப் பெருமூச்சிடு
அடுத்தவேளை
கஞ்சியைப் பற்றியெல்லாம்
சதா நினைத்துக்கொண்டிருக்காதே
இந்தியாவில் பிறந்ததைவிட
வேறென்ன பெருமைவேண்டும்
உனக்கு?
நன்கு கவனத்தில் வை
எந்தச் சூழ்நிலையிலும்
உன் உடலிலும் உயிரிலும்
ரத்தத்திலும் ஓடவேண்டிய
'ஒரே உணர்வு'
தேச பக்தி!
தேச பக்தி!!