நாம், மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடை மைக் கட்சியினர் - நம் குறிக்கோள் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

அருள்கூர்ந்து, 2018 திசம்பர் “சிந்தனையாளன்” இதழில் “நம் குறிக்கோள்” பற்றி வெளியிடப்பட்டுள்ள தலையங்கக் கட்டுரையை, நம் தோழர்கள் எல்லோரும் மீண்டும் ஒருமுறை படியுங்கள் என வேண்டுகிறேன்.

அக்கட்டுரையின் முடிவில், “நாம் விரும்பும் கூட்டாட்சி என்பதன் வடிவம் என்ன?” என்ற பகுதியில் சொல்லப்பட்டிருப்பது பற்றி - இப்படிப்பட்ட அரசை, இந்திய அரசு 1955இல் ஜம்மு-காஷ்மீர் அரசுக்கு வழங்கியிருந்தது என்பதை நாம் அறிதல் வேண்டும்.

1) இந்தியாவுக்கு ஓர் அரசமைப்புச் சட்டம் உண்டு. 

ஜம்மு-காஷ்மீருக்குத் தனியாக ஓர் அரசமைப்புச் சட்டம் உண்டு; 

இந்திய அரசமைப்புச் சட்டத்தை அது ஒத்துக் கொண்டது.

2) இந்தியாவுக்கு ஒரு குடிஅரசுத் தலைவர் உண்டு.

ஜம்மு-காஷ்மீருக்கு ஒரு குடிஅரசுத் தலைவர் உண்டு.

3) இந்தியாவுக்கு ஒரு பிரதமர் உண்டு.

ஜம்மு-காஷ்மீருக்கு ஒரு பிரதமர் உண்டு.

4) இந்தியாவுக்கு ஓர் உச்சநீதிமன்றம் உண்டு.

ஜம்மு-காஷ்மீருக்கு ஓர் உச்சநீதிமன்றம் உண்டு.

5) ஒவ்வொரு இந்தியனுக்கும் இந்தியக் குடிஉரிமை உண்டு.

ஒவ்வொரு காஷ்மீரிக்கும் முதலில் காஷ்மீர் குடி உரிமையும், அடுத்து, அத்துடன் இந்தியக் குடி உரிமையும் உண்டு.

6) இந்தியாவுக்கு ஒரு தேசியக் கொடி உண்டு.

ஜம்மு-காஷ்மீருக்குத் தனித் தேசியக் கொடி உண்டு.

7) ஜம்மு-காஷ்மீரின் “நிரந்தரக் குடிமக்கள் யார்?” என்பதை ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றம் தீர்மானிக்கும் என்ற, 35-ஹ விதி 1954இல், இந்தியக் குடிஅரசுத் தலைவரின் ஆணைப்படி - இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றது.

இவ்வளவு துல்லியமான தன்னுரிமை கொண்ட அரசமைப்புச் சட்டத்தை, ஜம்மு-காஷ்மீர் அரசமைப்பு அவை, 1955இல் இயற்றியது.

ஆனால், இவ்வளவு தன்னுரிமை அதிகாரங்களையும் கொண்ட ஜம்மு-காஷ்மீர் அரசிடமிருந்து, 1 முதல் 5 வரை சொல்லப்பட்ட அனைத்துத் தன்னுரிமை அதிகாரங்களையும், இந்தியப் பிரதமராக இருந்த பண்டித நேரு பறித்துக் கொண்டார்.

அதனால், ஜம்மு-காஷ்மீருக்குக் குடிஅரசுத் தலைவர் இல்லை; ஆளுநர் தான் உண்டு.

ஜம்மு-காஷ்மீருக்குப் பிரதமர் இல்லை; முதலமைச்சர் தான் உண்டு.

ஜம்மு-காஷ்மீருக்குத் தனி உச்சநீதிமன்றம் இல்லை; உயர்நீதிமன்றம் தான் உண்டு.

ஜம்மு-காஷ்மீர் பெற்றிருந்த ஓர் அதிகாரம் தவிர, மற்றெல்லா அதிகாரங்களையும் காங்கிரசு ஆட்சியினர் பறித்துக் கொண்டனர்.

எஞ்சியிருக்கிற உரிமை என்ன?

“காஷ்மீர் நிரந்தரக் குடிமக்களும், அவர்களின் வாரிசு களும் தவிர்த்த - மற்ற இந்தியர் எவரும், ஜம்மு-காஷ்மீரில் அசையாச் சொத்து வாங்கிட முடியாது” என்பதுதான்.

இந்த ஓர் அதிகாரத்தையும் பறித்துக் கொள்ள இன்றைய பாரதிய சனதா அரசு முயற்சிக்கிறது. இது உண்மை.

அண்மைக்காலம் வரையில், ஜம்மு-காஷ்மீர் முதல மைச்சராக இருந்த மக்கள் சனநாயகக் கட்சியைச் சார்ந்த மெஹ்பூபா முப்தி, அவுட்லுக் (Outlook 10.12.18) ஆங்கில வார இதழுக்கு அண்மையில் அளித்த நேர் காணலில்,

“மக்கள் சனநாயகக் கட்சிக்கும், பாரதிய சனதாக் கட்சிக்கும் இடையே இருந்த கூட்டு முறிந்த பின்னர், ஜம்மு-காஷ்மீர் மக்களின் நலனுக்கு எதிராக - பாரதிய சனதா அரசு 1) ஜம்மு-காஷ்மீர் வங்கியின் அதிகார வரம்பைக் குறைத்தது; 2) 35-அ (35- A) இந்திய அரசமைப்பில் உள்ள விதியின்படி ‘காஷ்மீர் நிரந்தரக் குடிமக்களுக்கு’ உள்ள தனி உரிமையைப் பறிக்க எல்லாம் செய்கிறது; இதுபற்றி நான் பிரதமர் மோடி அவர்களிடம் நேரில் கேட்டேன், அவர், அப்படியெல் லாம் நடக்காது என்று சொன்னார், ஆனால், இதுபற்றி உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில், இந்திய அரசு, எங்களுக்கு உள்ள இந்தத் தனி உரிமையைக் காத்திட ஏற்ற வகையில், வழக்கை எதிர்கொள்ள வில்லை” என்று கூறியுள்ளார்.

இது, இன்று நாம் சிந்திக்க வேண்டிய முதன்மையான செய்தி.

இவை மட்டும் அல்ல.

இன்று நான் பயன்படுத்தும், “இந்திய அரசமைப்புச் சட்ட நூல்” (ஆங்கிலம் - இந்தி இணைந்தது) இந்திய அரசினால் 25-3-2014இல் வெளியிடப்பட்டது. இதில் 1 முதல் 395 விதிகள் உள்ளன.

ஆனால், மேலே நான் குறிப்பிட்டுள்ள - ஜம்மு-காஷ்மீர் பற்றிய 35- A ஆம் விதியும், இந்திய அரச மைப்பின் 370ஆம் விதியில் குறிப்பிடப்பட்டுள்ள 238ஆம் விதியும் இந்திய அரசு வெளியிட்ட இந்த நூலில் அச்சிடப்படவில்லை. ஏன்? ஏன்?

இதுதான் அரசியல் மோசடி என்பது.

இப்படிப்பட்ட இந்திய வல்லாதிக்க அரசுடன் நாம் போராட வேண்டும்.

இதை நம் மா.பெ.பொ.க. தோழர் ஒவ்வொருவரும், தமிழர் தன்னுரிமை கோரும் ஒவ்வொருவரும், தனி நாடு கோரும் ஒவ்வொருவரும் துல்லியமாக உணர வேண்டும் என்பது என் பணிவான வேண்டுகோள்.

Pin It