கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

Untitled"கல்வி ஏகாதிபத்தியச் சுரண்டல்காரர்களின்

தேவைகளுக்கு ஏற்றாற்போல் அல்லாமல்,

கிராமத்து ஏழைகளின் விருப்பங்களுக்கு

ஏற்றாற்போல் புரட்சிகரமானதாக

மாற்றப்படவேண்டும்.'

- மகாத்மா காந்தி

ஐந்தாம், எட்டாம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதியில் பொதுத் தேர்வை கட்டாயமாக்கி மத்திய அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்தை தமிழகத்தில் இந்த ஆண்டு முதலே பள்ளிக் கல்வித்துறை அமுல்படுத்தியுள்ளது.

முதல் மூன்றாண்டுகளுக்கு பொதுத் தேர்வில் தோற்றாலும் யாரையும் நிறுத்தி வைக்கப் போவதில்லை என அரசு அறிவித்ததன் மூலம் 2022-23 கல்வி ஆண்டிலிருந்து மாணவர்கள் பொதுத்தேர்வில் தோல்வியுற்றால் அடுத்த வகுப்பிற்கு செல்ல முடியாது என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்தியிருக்கிறது.

தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் பின்லாந்து சென்று அங்குள்ள கல்விமுறையை அறிந்து திரும்பிய பிறகும் அரசால் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டிருப்பது கல்வியாளர்களை வியக்க வைத்திருக்கிறது.

முப்பத்து நான்கு நாடுகள் அடங்கிய பொருளாதார ஒத்துழைப்பு  வளர்ச்சிக்கான நிறுவனம் (OCED) சர்வதேச அளவில் மாணவர் திறன் மதிப்பீட்டுத் தேர்வு (PISA) நடத்துகின்றது. 15 வயது மாணவர்கள் இதில் பங்கேற்கலாம். 2015 ஆம் ஆண்டு 75 நாடுகளைச்சேர்ந்த சுமார் ஐந்து லட்சம் மாணவர்கள் கலந்து கொண்ட இத்தேர்வில் அறிவியல் மதிநுட்பத்தில் மூன்றாம் இடத்தையும், வாசிக்க, சிந்திக்க, விமர்சிக்க பெற்றிருந்த திறனில் ஐந்தாம் இடத்தையும் பின்லாந்து பிடித்திருந்தது.

பின்லாந்து கல்வி முறையில் பாராட்டத்தக்க பல அம்சங்கள் உள்ளன. முறையான பள்ளிக்கல்வி ஏழு வயதில் அங்கு தொடங்குகிறது. முதல் ஆறு வகுப்புகள் வரை பெரும்பாலும் ஒரே ஆசிரியர் தொடர்ந்து கற்றுக் கொடுக்கிறார். பத்தாம் வகுப்பு இறுதியில் தான் (16 வயதில்) பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. எனவே மாணவர்கள் தேர்வுப்பயம் எதுவும் இன்றி பிடித்த பாடங்களை சிறப்பாக கற்க முடிகிறது.

நான் பள்ளியில் படித்த காலத்தில் பதினோராம் வகுப்பு முடிவில் மட்டுமே பொதுத்தேர்வு (SSLC) நடத்தப்பட்டது. புகுமுக வகுப்புக்குப்பின் எந்த துறையில் வல்லுனர்களாக மாணவர்கள் விரும்புகிறார்கள் என்பதை தீர்மானிக்க அப்போதும் ஒரு பொதுத்தேர்வு தேவைப்பட்டது. ஆனால் இளங்கலை, அறிவியல் பட்டப்படிப்பில் சேர்ந்தால் அன்று முதலாம் ஆண்டு பல்கலைக்கழக தேர்வு கிடையாது. மொழி மற்றும் துணைப்பாடங்களுக்கான தேர்வுகள் இரண்டாம் ஆண்டில் நடத்தப்படும்.

முதன்மைப் பாடத்துக்கான (Main Subject) தேர்வுகள் அனைத்தும் மூன்றாம் ஆண்டிலேயே நடத்தப்பட்டன. முதலாம் ஆண்டில் தேர்வு ஏதும் இல்லாததால் தமிழ் மொழியில் பள்ளிக்கல்வி முடித்தவர்கள் ஆங்கில மொழியில் படிப்பதற்கும் எழுதுவதற்கும் போதிய பயிற்சியை பெற அவகாசம் கிடைத்தது. அதுபோல் இறுதியாண்டில் முதன்மை பாடத்திற்கான அனைத்து தேர்வுகளையும் எழுதியதால் படித்த பாடம் பற்றிய முழுப்புரிதலும் இருந்தது.

தற்போது பட்டப் படிப்பில் சேர்ந்த நான்கு மாதங்களுக்குள் செமஸ்டர் முறையில் தேர்வு எழுத வேண்டிருப்பதால் ஆங்கிலவழி படிப்பை தேர்ந்தெடுத்தாலும் தமிழில் தேர்வு எழுதுகின்றனர். பலர் ஆங்கில மொழியில் தேர்ச்சிபெற முடியாமல் பட்டம் பெறமுடியாத நிலைக்கும் தள்ளப்படுகின்றனர்.

புதிய ஆய்வு முடிவுகள், கண்டுபிடிப்புகள் ஆங்கில புத்தகங்களில் முதலில் இடம் பெறுவதாலும், அத்தகைய புத்தகங்கள் தமிழில் உடனடியாக மொழி பெயர்க்கத் தேவையான ஏற்பாடுகள் இல்லாததாலும் தமிழில் தேர்வு எழுதுகின்ற மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் எளிதில் வெற்றி பெற முடிவதில்லை.

முதுகலை பட்டப் படிப்பிலும் நான் பயின்றபோதும் முதலாம் ஆண்டில் பல்கலை தேர்வு கிடையாது. இரண்டாம் ஆண்டின் இறுதியில்தான் அனைத்து படங்களுக்கான தேர்வுகளும் நடத்தப்பட்டன. இன்று தவணை முறையில் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை நான்கு படங்களுக்கான தேர்வு எழுதி படித்தவற்றை உடனேயே மறந்துவிடுகிறார்கள். ஆதலால் செட்/நெட் தேர்வுகளில் அவர்கள் தோல்வியுறுகிறார்கள்.

இன்று பள்ளி - கல்லூரி தேர்வு முறை ஒரு மாணவரின் மனப்பாட சக்தியை மதிப்பிடவே பயன்படுகிறது. மாணவரின் சிந்தனை, படைப்பு, ஆய்வு மற்றும் ஆக்க திறன்களை மதிப்பிடுவதாக இல்லை.

மேலும் ஏற்றத் தாழ்வு மிக்க சமுதாயத்தில் கிராமப்புறங்களில் வாழும் ஏழை விவசாயி, சிறு வியாபாரி, கூலித் தொழிலாளி வீட்டுக் குழந்தைகளுக்கும் நகர்ப் புறங்களில் வாழும் தொழிலதிபர், பெருவணிகர், மருத்துவர், பொறியாளர், வழக்கறிஞர், பேராசிரியர், அரசு அதிகாரிகள் வீட்டு குழந்தைகளுக்கும் அறிவிலும் செயல்திறனிலும் பெருத்த இடைவெளியை கடந்த முப்பது ஆண்டுகளில் அரசு பின்பற்றிய கல்விக் கொள்கை உருவாக்கியுள்ளது.

எனவேதான் நீட் தேர்வு கிராமப்புற ஏழை எளிய குடும்பத்திலிருந்து வருபவர்களின் நலனுக்கு எதிரானது என கல்வியாளர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் கூறுகின்றனர்.

மாறுபட்ட குடும்ப சூழலிலிருந்து வரும் இரு மாணவர்கள் படிக்கும் பாடங்கள் ஒன்றானாலும் ஒரே மாதிரியான அறிவையும் செயல்திறனையும் பெறமுடியாது என்பதை ஆப்பிரிக்கா - அமெரிக்கா அறிவுஜீவி ‘டூபாய்ஸ்’ கறுப்பினத்தை சேர்ந்த மாணவனை வெள்ளையினத்தை சேர்ந்த ஒருவனோடு ஒப்பிட்டு விளக்குகிறார்:

"இங்கு இரு மாணவர்கள் வாழ்க்கைக்கான கல்வி பெறுகின்றனர். இருவரும் ஆறு மணிநேரம் பள்ளியில் உள்ளனர். மூன்று மணி நேரத்தை வீதிகளில் கழிக்கின்றனர்.

மீதமுள்ள பதினைந்து மணி நேரம் அவர்கள் வீட்டில் இருக்கிறார்கள். படிக்கும் கல்வி இருவருக்கும் ஒன்று. ஆசிரியர்களும் ஒன்று. ஆனால் ஒருவன் ஏழ்மையோடு விரும்பத்தகாத சேர்க்கைகளுடன் சேர்ந்து விளையாடுவது தெருக்களின் சந்துக்களில். மற்றவனோ வெளுத்த ஆடை உடுத்தி நன்னடத்தை கொண்டவர் மத்தியில் வாழ்கின்றான்.

முன்னவன் வீடு இருளடைந்து, மகிழ்ச்சியற்று வெறுமையாக உள்ளது. மற்றவன் வீடோ விசாலமாக, மகிழ்ச்சியுடன், புத்தகங்கள், படங்கள், இசை என அனைத்தும் அடங்கியதாக உள்ளது. ஒருவனது பெற்றோர் படிப்பறிவு இல்லாதோர். வறுமையின் வாட்டத்தால் எதற்கெடுத்தாலும் ஆத்திரப்பட்டு திட்டுபவர்கள்.

மற்றவனுக்கோ முறையாக வழிநடத்தி, ஆறுதல் சொல்லி, நெறிப்படுத்தும் பெற்றோர்கள். பத்தாண்டு பயிற்சிக்குப் பிறகு அறிவிலும் திறமையிலும் இவ்விருவரும் ஒன்றாக இருப்பார்கள் என எதிர்பார்க்கிறீர்களா? ”

நாங்கள் பள்ளியில் படித்தபோது டியூஷன் படிப்பது அவமானமாகக் கருதப்பட்டது. இன்றைக்குக்கூட சீனா, ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் எதிலும் டியூஷன் என்று ஏதும் கிடையாது என்கிறார் அமர்த்திய சென். தரம் என்றால் அதிக பாடச்சுமை இருக்க வேண்டும் என தவறாக பெற்றோர்கள் கருதியதால் ஏற்பட்ட விளைவு இது. புகுமுகவகுப்பில் நான் படித்த அறிவியலை என் மகன் ஏழாம் வகுப்பில் படித்தான்.

நான் ஒன்பதாம் வகுப்பில் கற்ற கணிதத்தை ஐந்தாம் வகுப்பு மாணவர் இன்று கற்கின்றனர். படிக்காத பெற்றோர்கள் மற்றும் பணியில் இருக்கும் படித்த பெற்றோர் ஆசிரியர் கொடுக்கும் வீட்டு பாடத்தை எழுதிட தங்கள் குழந்தைகளுக்கு உதவமுடியாததால் டியூஷனுக்கு அனுப்பி வைக்கிறார்கள். இத்தகைய வசதியை செய்து கொடுக்க பண வசதியற்ற பெற்றோர்களால் முடியாது.

ஐந்தாம் வகுப்பு இறுதியில் பொதுத் தேர்வு என்றால் தொடக்க கல்வியிலேயே டியூஷன் தொடங்கிவிடும். தேர்வுக்கான கட்டணம் வேறு. தாங்குவார்களா ஏழைமக்கள்?

இந்தியாவில் தொடக்கப் பள்ளியில் சேர்ந்த குழந்தைகள் எண்ணிக்கை 2000 -01இல் 157 மில்லியன் ஆக இருந்ததாகவும் அது 2017-18 இல் 189 மில்லியன் ஆக உயர்ந்திருந்ததாகவும் உலக வங்கி தெரிவிக்கிறது. அதே நேரத்தில் மூன்றாம் அல்லது நான்காம் வகுப்பில் படிக்கும் பட்டியல் சமூகப்பிரிவு (SC) 13 சதவீதத்தினர்க்கும், இஸ்லாமிய குழந்தைகளில் 25 சதவீதத்தினர்க்கும், பழங்குடி மாணவர்களில் (ST) 29 சதவீதத்தினர்க்கும் ஒரு பாடத்தை எழுத்துக்கூட்டி வாசிக்க முடியாது இதர சமூகத்தினரில் எழுத்துக் கூட்டி வாசிக்க முடியாதவர்கள் எட்டு சதவீதத்தினர் மட்டுமே என்ற தகவலையும் நாம் பெறுகிறோம்.

முறையான கல்வி ஆறு வயதில் தொடங்க வேண்டும் என கல்வி உரிமைச்சட்டம் கூறுகிறது. ஆனால் இந்தியாவின் 26 மாநிலங்களில் ஐந்து வயதில் குழந்தைகள் ஒன்றாம் வகுப்பில் அனுமதிக்கப்படுகின்றனர்.

ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் நடத்திய ஓர் சமீப ஆய்வின் படி ஐந்து வயதில் கிண்டர் கார்ட்டனில் சேர்க்கப்பட்ட குழந்தைகளைவிட ஆறு வயதில் சேர்க்கப்பட்டவர்கள் கற்றலில் மேன்மை பெற்றிருந்தனர். ஓர் ஆண்டு கழித்து பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவது மட்டுமின்றி சுயகட்டுப்பாடுடனும் காணப்பட்டதாக அவ்வாய்வு தெரிவிக்கிறது.

அனைத்தையும் விட அதிர்ச்சி தருவது 2014 தேசிய கணக்காய்வு அலுவலக (NSSO) அறிக்கை. அதன்படி பள்ளியில் சேர்ந்தவர்களில் 37 சதமான ஆண் குழந்தைகளும், 39 சதமான பெண் குழந்தைகளும் தொடக்கக் கல்விக்குப்பின் தொடர்ந்து பள்ளியில் படிக்கவில்லை.

ஆண்பிள்ளைகள் கூலி வேலைக்கு சென்றும் பெண்பிள்ளைகள் வீட்டுவேலை செய்தும் குழந்தை உழைப்பாளர்களாகியுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடிய நிலையை பொதுத்தேர்வு முடிவு உருவாக்கும் என்பதால் மத்தியஅரசு கல்வி உரிமை சட்ட திருத்தத்தை திரும்பப்பெற்று தொடக்க - நடுநிலை பள்ளிகளில் பொதுத் தேர்வை ரத்து செய்து கல்வி அனைவருக்கும் இலவசமாக, தரமாக சென்றடைய உத்திரவாதம் செய்யவேண்டும்.

அதுவரை 'கல்வி என்பது அனைவருக்குமான உரிமை. விசேஷ வர்க்க சலுகை கிடையாது' என்ற டாக்டர் ராதாகிருஷ்ணன் வார்த்தைகளை நினைவில் கொண்டு மக்கள் கோரிக்கையை வென்றெடுக்க உறுதி ஏற்போம்.

- பேரா.கா.அ.மணிக்குமார்