தீர்மானம் - 1: செவ்வணக்கம்

2020ஆம் ஆண்டு இருபத்தோறாம் நூற்றாண்டின் இருண்ட ஆண்டாக அமைந்துவிட்டது. கொரோனா எனும் பெருந்தொற்று மனித உயிர்களை அகவை வேறுபாடின்றி இலக்கக் கணக்கில் கொத்துக் கொத்தாகக் காவு வாங்கிவிட்டது.

இக்கொடுந்தொற்றால் மாண்டுபோன மக்கள் அனைவருக்கும்; இக்கொடுந்தொற்றுக் காலத்திலும் உயிரைத் துச்சமெனக் கருதி இந்திய மக்களுக்கே எதிரான மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெறக் கோரி நாடுமுழுவதும் நடைபெற்று வரும் இந்திய அரசுக்கும் உழைக்கும் மக்களுக்குமான அறப்போரில் களப்பலியாகி யுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட உழவர் பெருமக்களுக்கும்;

24.12.2020இல் மறைவுற்ற, பெரியார் ஈ.வெ.ரா-வைத் தமிழ்ச் சமூகத்திற்கு எதிர்நிலையில் நிறுத்த முயலும் கூட் டத்தை இடித்துரைத்து, தமிழ்த்தேச அரசியலுக்குத் திராவிடர் இயக்கத்தின் பங்களிப்புகளை நேர்மையோடு திறனாய்வு செய்வதிலும், பெரியார் ஈ.வெ.ரா-வின் சிந்தனைகள் எப்படித் தமிழுக்கும் தமிழருக்கும் அரண் சேர்ப்பவை என்பதையும் நடுவுநிலைமையோடு ஆய்ந்தளித்துப் பெரும்பங்காற்றிய சீரிய சிந்தனையாளர், தமிழ்ப் பண்பாட்டுக் காவலர் பேராசிரியர் தொ. பரமசிவன் அவர்களுக்கும்;

23.11.2020இல் நம்மைவிட்டுப் பிரிந்த, 90 அகவையிலும் மாபெபொகவுக்கும் தோழர் வே.ஆனைமுத்துவின் பணிகளுக்கும் தோன்றாத் துணையாகவும் பெரம்பலூர் மாவட்டச் செயலாளராகவும் களப்பணியாற்றிய கொள்கைக் குன்றம் வரகூர் மா. நாராயணசாமி அவர்களுக்கும்;

02.01.2021இல் மறைவுற்ற, மார்க்சிய - பெரியாரிய - அம்பேத்கரியச் சிந்தனைகளை தம் கவித்துவத்தால் எளிய மக்களுக்கும் எடுத்துச்சென்ற கவிஞர் இளவேனில் அவர் களுக்கும்; 03.12.2020இல் மறைவுற்ற, தமிழ்நாட்டில் - குறிப்பாகத் தென் மாவட்டங்களில் செயலாற்றும் மக்கள் போராளிகளுக்கு அரணாக இருந்து அரச வன்முறைகளி லிருந்தும் காவல்துறை அத்துமீறல்களிலிருந்தும் காத்து வந்த மக்கள் வழக்குரைஞர் செம்மணி அவர்களுக்கும்; 08.01.2021இல் மறைவுற்ற, பெரியார் பெருந்தொண்டர் வடக்கு மாங்குடி அ.பாலகிருட்டிணன் அவர்களின் துணைவியாரும், மாபெபொக கடலூர் மாவட்டச் செயலாளர் பா. மோகனின் தாயாருமான கனகு அம்மையார் அவர்களுக்கும்; மற்றும் மக்கள் தொண்டாற்றி, 2020ஆம் ஆண்டில் மறைவுற்ற அத்துனைப் பெருமக்களுக்கும் இம்மாநாடு செவ் வணக்கம் செலுத்தி ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறது.

தீர்மானம் - 2 : சுயமரியாதை சமதர்மத்துக்கு எதிரான வருணாசிரம ஒழிப்பு

ஈராயிரம் ஆண்டுகளாக இந்திய மக்களைப் பீடித்துக் கொண்ட ஆரியப் பார்ப்பனியம் வருணாசிரமத்தைப் புகுத்தி, 97 விழுக்காடு மக்களான உழைக்கும் மக்களைமான உணர்ச்சியற்றவர்களாக மாற்றி வைத்துவிட்டது. மனுநீதியும் வேத புராண இதிகாசங்களையும் காட்டி வெகு மக்களைச் சூத்திரப் பஞ்சமப் பட்டம் கட்டி இழிமக்களாக ஆக்கிவைத்ததோடு, காலந்தோறும் அரசதிகாரத்தில் உள்ளவர்களைக் கைக்கொண்டு தாங்கள் கொள்கையே ஆட்சிமுறையாக அமைத்துக்கொண்டது.

வெள்ளையன் வெளியேறிய பிறகான இந்தியாவிலும் தனக்குச் சாதகமாக இந்திய அரசமைப்புச் சட்டத்தையே எழுதிக்கொண்டது. இச்சட்டத்தின் பிரிவுகள் 13, 19, 25, 26, 372(3) ஆகியவைதான் வருணாசிரமத்தைப் பாதுகாக்கின்றன. அதனால்தான், தந்தை பெரியார் 1957இல் பிரிவு 372(3) - ஐக் கொளுத்தும் போராட்டத்தை அறிவித்துக் கொளுத்தினார்.

3000 தோழர்களுக்குமேல் இச்சட்டப் பிரிவைக் கொளுத்தி சிறையேகினர். 2021-இலும் இச் சட்டங்கள் நீடிப்பது வெகுமக்களை சட்டத்தின்பேரால் இழிமக்களாக வைத்திருப்பதாகும். இவற்றை ஒழிப்பதற்கு மக்கள் மான உணர்ச்சி பெற வேண்டும்; மான உணர்வு பெறவேண்டும் எனில் அதற்கான கல்வியும் சிந்தனையும் வேண்டும்; இதற்குப் பொதுஉரிமை வேட்கை வேண்டும்; மக்கள் மான உணர்வு பெற்று, கல்வியறிவோடு சிந்திக்கத் தொடங்கி தனக்கான உரிமைகளை வென்றபிறகுதான் உடைமைகளில் சமத்துவம் பெறவேண்டும் என்கிற எண்ணமும் களமும் அமையும். அப்போது, மக்கள் வாழ்வில் சமதர்மம் தழைக்கும். இதனால்தான், தந்தை பெரியார், முதலில் தன்மான இயக்கம் கண்டார்.

தந்தை பெரியாரின், புரட்சியாளரின் அம்பேத்கரின் பேரால் கண்டுள்ள இயக்கங்களும் பொதுவுடைமைச் சிந்தனையாளர்களும் ஒன்றிணைந்து இந்தியாவில் வருணாசிரம ஒழிப்பில் களம் காணவேண்டும். இதற்கான ஒரு கூட்டமைப்பாக ‘பெரியாரிய உணர்வாளர்கள் கூட் டமைப்பு’ தோன்றிச் செயலாற்றி வருவதையும் இம்மாநாடு வரவேற்றுப் பாராட்டுகிறது. அது இன்னும் தன்னை அமைப்பிலும் வேலைத்திட்டங்களிலும் விரிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என இம்மாநாடு வேண்டுகிறது.

தீர்மானம் - 3 : வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுக!

பார்ப்பனப் பனியா மார்வாடிக் கும்பலுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் இந்தியப் பண முதலைகளுக்கும் படியளப்பதற்காகவே ஆட்சிப் பொறுப் பேற்றுள்ள பாசிச வெறிபிடித்த பாஜக அரசு, கொரோனா பெருந்தொற்றுக் காலத்தைப் பயன்படுத்தி 30-க்கும் மேற்பட்ட வெகுமக்களுக்கு எதிரான சட்ட வரைவுகளை நிறைவேற்றிக்கொண்டது. அவற்றுள் மிகக் கொடுமையானவை,

‘வேளாண் விளைபொருள் வணிக ஊக்குவிப்பு அவசரச் சட்டம் -2020’, ‘உழவர்களுக்கு விலை உறுதி மற்றும் வேளாண் சேவைகள் (உரிமை மற்றும் பாதுகாப்பு) அவசரச் சட்டம் -2020’, ‘அடிப்படைத் தேவைக்கானப் பொருள்கள் (திருத்தம்) அவசரச் சட்டம் - 2020’ மற்றும் ‘மின்சாரச் சட்டத் திருத்தவரைவு 2020’ ஆகியவை.

வேளாண் மக்களின் உரிமையையும் நில உடைமை களையும் பறித்து உழைக்கும் மக்களை ஏதிலிகளாக ஆக்கிடும் இக் கொடுஞ்சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி நாடுமுழுவதும் போராட்டங்கள் தொடர்ந்த நிலையில், தில்லியில் கூடிய உழவர் பெருமக்கள் கடந்த 70 நாள்க ளாகப் போராடிவருகின்றனர்.

ஒற்றை அதிகார வெறிபிடித்த பாசக அரசு, கடுங்குளிரில் போராடிவரும் உழவர்கள் 100-க் கும் மேற்பட்டோர் களப்பலி ஆன பிறகும் இருமாப்போடு இறங்கிவர மறுக்கிறது. அறவழியிலான உழவர் போராட்டங்களுக்கு மதச் சாயமும், மாவோவிய - நக்சல் இயக்கச் சாயமும் பூசி துணை இராணுவத்தைக்கொண்டு அடக்கு முறைகளை ஏவி ஒடுக்க எத்தணித்துவிட்டது. இந்திய அரசின் இந்த ஆணவப்போக்கை இம் மாநாடு வன்மையாகக் கண்டிப்பதோடு, வெகுமக்களுக்கு எதிரான இச் சட்டங்களை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென இம் மாநாடு கோருகிறது.

தீர்மானம் - 4 : உபா உள்ளிட்ட அடக்குமுறைச் சட்டங்களை நீக்கு!

மக்களாட்சி முறையில் சட்டங்களும் திட்டங்களும் வெகுமக்களாக இருக்கிற உழைக்கும் மக்கள் நலன் கருதியே அமையவேண்டும். ஆளும் அரசுகளின் போக்குகள் இதற்கு எதிர் நிலையில் செயல்படும்போது அவற்றை எதிர்த்து மக்கள் ஒன்றுகூடுவதும், கருத்துகளைத் தெரிவிப்பதும், போராட்டங்கள் நடத்துவதும் சனநாயக நடவடிக்கைகள் என்பதை இந்திய ஒன்றிய அரசமைப்புச் சட்டம் ஏற்கிறது. மக்கள் தங்கள் கருத்து களை ஒன்றுதிரண்டு சொல்லும் உரிமைகளை ஐக்கிய நாடுகளின் மனித உரிமை சாசனங்கள் ‘அடிப்படை மனித உரிமைகள்’ என வலியுறுத்துகின்றன.

மக்கள் திரள் போராட்டங்களின் வழி பல சட்டங்கள் திருத்தி எழுதப்பட் டுள்ளன. தூத்துக்குடி சுடர்லைட் போன்ற பல திட்டங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இப் போராட்டங்களின் உள்ள கோரிக்கைகளை நீதிமன்றங்கள் வழியாக ஏற்ற அரசுகள், அதற்குப் போராடியவர்கள்மீது எண்ணற்ற வழக்குகளையும், ‘உபா’ (UAPA) போன்ற புதியபுதிய அடக்குமுறைச் சட்டங்களையும் ஏவி, கருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கிறது.

மனித உரிமைகளுக்கு எதிரான ‘உபா’ உள்ளிட்ட அனைத்து அடக்குமுறைச் சட்டங்களையும் திரும்பப் பெறுவதோடு, சனநாயக வழியிலான மக்கள் போராளிகள் மீது போடப்பட்டுள்ள எல்லா வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டுமென இம்மாநாடு இந்திய ஒன்றிய அரசையும் மாநில அரசுகளையும் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் - 5 : இடஒதுக்கீடு

இந்திய மக்கள் தொகையில் வெகுமக்களாக இருக்கிற பிற்படுத்தப்பட்ட, பட்டியல் மற்றும் பழங்குடியின மக்கள் கடந்த 20 ஆண்டுகளாகத்தான் ஓரளவுக்கு கல்வியிலும் வேலையிலும் வாய்ப்புப் பெற்று வருகிறார்கள். அதன் சுவை இன்னது என்று அறியும் முன்னதாகவே, பார்ப்பனிய - மேல்சாதிய வெறிபிடித்த பாசக ஆட்சிக்கு வந்த நாள் முதல் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட எல்லாம் செய்துவருகிறது.

அதேநேரத்தில் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாக உயர்சாதி மக்களுக்கு 10ரூ இடஒதுக்கீடு அளித்துள்ளது. இதை இம் மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. உடனடியாக சாதி வாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தி, கல்வி, வேலை, தொழில் உள்ளிட்ட எல்லாத் துறைகளிலும் நூறு விழுக்காடு இடங்களையும் மக்கள்தொகை அடிப்படையில் பங்கிட்டுத் தரவேண்டும் என இம்மாநாடு கோருகிறது.

தீர்மானம் - 6 : மாநில உரிமைகள்

விடுதலைபெற்றதாகச் சொல்லப்படும் இந்தியாவில் அதன் அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் முதல் கடந்த 70 ஆண்டுகளில், மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி உள்ளிட்ட பல சட்டங்களை, இறுதி முடிவு எடுக்கும்போது மாநில அரசுகளுக்கு எந்த உரிமையும் இல்லாத பொதுப்பட்டியலுக்கு மாற்றிக்கொண்டது, இந்திய ஒன்றிய அரசு.

இன்றைக்கு ஆட்சியில் உள்ள பாசக, ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே வரி, ஒரே பண்பாடு என எல்லாவற்றிலும் ஒற்றைத் தன்மையைத் திணித்து மொழித்தேச மாநிலங்களின் தனித்த விழுமியங்களைச் சிதைத்து வருகிறது. இதற்காகத்தான் ‘நீட்’ போன்ற தேசிய நுழைவுத்தேர்வுகள், தேசியத் தேர்வு முகமை, தேசிய உயர் கல்வி ஆணையம் என எல்லாவற்றையும் இந்தியா முழுமைக்கும் ‘ஒன்றே’ என்று கொண்டுவருகிறது.

இப்போக்கு மொழித்தேசங்களுக்கும், அதன் உரிமைகளுக்கும், ஆதாரங்களுக்கும், விழுமியங்களுக்கும், தாய்மொழி வழிக் கல்விக்கும் முன் எப்போதையும்விட பேராபத்தாகும். இப்படி வல்லடியாக மாநில உரிமைகளைப் பறித்துவரும் இந்திய ஒன்றிய அரசை வன்மையாகக் கண்டிப்பதோடு, மொழி மாநில எல்லைக் குட்டபட்ட கல்வி, வேலை, தொழில் எல்லாவற்றிலும் ஒன்றிய அரசானாலும், மாநில அரசானாலும் அந்தந்த மாநில மக்களுக்கே 90ரூ அளிக்கும்படி சட்டத்திருத்தம் செய்திடவேண்டும் என இம் மாநாடு கோருகிறது.

மேலும், இந்திய ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக 8ஆவது அட்டவணையில் உள்ள எல்லா மொழிகளையும் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் இந்திய ஒன்றிய அரசை இம் மாநாடு கோருகிறது.

நிற்க. கல்வி உள்ளிட்ட இழந்த எல்லா உரிமைகளையும் மொழித் தேசங்கள் திரும்பப் பெறுவதோடு, வலுவான அதிகாரங்களைக் கொண்ட மொழித் தேசங்கள் ஒருங்கிணைந்த உண்மையான இந்தியக் கூட்டாட்சியை அமைப்பதே இதற்கு நிரந்தரத் தீர்வாக அமையும் என்பதால், மார்க்சிய - இலெனினிய, பெரியாரிய - அம்பேத்கரிய, மொழித் தேசியச் சிந்தனையாளர்களும், இயக்கங்களும் இவ்வழியில் சிந்தித்து இந்திய ஒன்றியம் முழுவதும் களம் அமைக்கவேண்டும் என இம்மாநாடு வேண்டிக்கொள்கிறது.

தீர்மானம் - 7 : சாதிவெறி ஆணவப் படுகொலைகள்

பெரியார் மண் என்று பெருமை பேசுகிற, பெரியாரிய அம்பேத்கரிய இயக்கங்கள் நூற்றுக் கணக்கில் உள்ள தமிழ்நாட்டில் மட்டும் கடந்த ஓராண்டில் 10-க்கும் மேற்பட்ட சாதிவெறிப் படுகொலைகளும், நூற்றுக் கணக்கான தீண்டாமைத் தாக்குதல்களும் நடைபெற் றுள்ளன என்பது தமிழர் ஒவ்வொருவரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலையாகும்.

சாதிவெறிப் படுகொலையை நிகழ்த்தியவரும், படு கொலைக்கு ஆளானவரும்; தீண்டாமை வன் கொடுமை களை நிகழ்த்துபவரும், தீண்டாமைக்கு ஆட்படுபவரும் தமிழரே. தமிழ்நாட்டு அரசு இதுகுறித்துக் கவலையோடு சிந்தித்து உரிய நடவடிக்கைகளை உடனுக்குடன் எடுப்ப தோடு, சாதி ஒழிப்பு, பெரியாரியம், அம்பேத்கரியம், பொதுவுடைமை, தமிழியம் உள்ளிட்ட மண் சார்ந்த முற்போக்குச் சிந்தனைகளைக் தொடக்கக் கல்வி முதலே பயிற்றுவிக்க வேண்டும் என் இம் மாநாடு தமிழ்நாட்டு அரசைக் கேட்டுக்கொள்கிறது.

- முனைவர் முத்தமிழ்

Pin It