பள்ளி மாற்றுச் சான்றிதழில் சாதியைக் குறிக்கத் தடை

“பள்ளியில் சேரும் போதே மாணவர்களிடம் அவர்களின் சாதியைப் பற்றிக் கேட்டுப் பதிவு செய்வ தால்தான் சாதியமைப்பு நீடிக்கிறது” என்கிற கருத்துப் பார்ப்பனர்களால் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது. இடஒதுக்கீட்டு உரிமை அடிப்படையில் கல்வியிலும் அரசு வேலையிலும் இடம்பெற்றுப் பயனை அனு பவித்துவரும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில், தங்களை ‘அதிமேதாவிகளாகக்’ கருதிக் கொள்ளும் பிரிவினர் ‘பள்ளியில் சாதி கேட்கப்படுவதால்தான் சாதி நீடிக்கிறது’ என்று அழுத்தமாக நம்புகின்ற - வாதிடுகின்ற அளவுக் குப் பார்ப்பனர்களின் நச்சுக் கருத்து ஆதிக்கம் செலுத்து கிறது.

இத்தன்மையில், நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம், (சிபிஎஸ்சி) பள்ளிகள் வழங்கும் மாற்றுச் சான்றிதழில் (டி.சி.) மாணவரின் சாதி மற்றும் இட ஒதுக்கீடு (பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், பிற் படுத்தப்பட்ட வகுப்பினர்) ஆகிய விவரங்களைக் குறிப் பிடக்கூடாது என்று பள்ளிகளுக்குச் சுற்றறிக்கை மூலம் ஆணையிட்டுள்ளது (தி இந்து (தமிழ்) 24.10.2014).

மாணவர்கள் மேற்படிப்புக்குச் செல்லும் போது, இடஒதுக்கீட்டு உரிமையைப் பெற, சாதிச் சான்று தேவைப்படுகிறது. அப்போது, வட்டாட்சியர் அலுவல கத்தில் சாதிச் சான்றிதழ் பெறுவதற்காக விண்ணப் பிக்கும் போது பள்ளி மாற்றுச் சான்றிதழின் நகல் சாதிக்கான ஆதாரமாக இணைக்கப்படுகிறது. ‘தகுதி, திறமை’ என்கிற மோசடியான போர்வையில் கல்வியி லும் அரசு வேலையிலும் தாம் பெற்றுள்ள ஆதிக்கத் தை ‘வகுப்புவாரி இடஒதுக்கீடு’ என்கிற கோடாரி தகர்த்து விடாமல் தற்காத்துக் கொள்வதற்கான பார்ப்பன வஞ்ச கச் சூழ்ச்சியே நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத் தின் இந்த ஆணை.

இந்த ஆணை குறித்து சிபிஎஸ்இ சென்னை மண்டல அதிகாரி டி.டி. சுதர்சன் ராவிடம் கேட்ட போது, “ஒரு சில பள்ளிகளில் மாற்றுச் சான்றிதழ்களில் சாதி, இட ஒதுக்கீடு தொடர்பான விவரங்களைக் குறிப்பிட்டு விடுகிறார்கள். அவற்றைத் தவிர்ப்பதற்காகவே இந்த ஆணை வெளியிடப்பட்டிருக்கலாம்” என்று கூறியிருக் கிறார். ஆதிக்க மேல்சாதியினர் எப்போதும் விழிப்புடன் இருக்கிறார்கள். காலங்காலமாக சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட சாதியினரோ, பெரியாரையும், மேதை அம்பேத்கரையும் புரிந்துகொள்ள மறுப்பதன் மூலம் தொடர்ந்து ஏமாளிகளாகவே இருக்கின்றனர்.

பள்ளி ஆவணங்களில் மாணவரின் சாதிப் பெயர் குறிக்கப்படுவதால் இளம்பருவத்திலேயே சாதி உணர்ச்சி ஊட்டப்படுகிறது என்று பார்ப்பன மேல்சாதியினர் கூறுவது ஒரு பித்தலாட்டம். தமிழ்நாட்டில் பெரியார் இயக்கத்தின் விளைவால் ஆணின் பெயருக்குப் பின்னால் சாதிப் பெயர் ஒட்டிக் கொண்டிருப்பது ஒழிந்துவிட்டது. ஆனால் இந்தியாவில் மற்ற எல்லா மாநிலங்களிலும் பெயருடன் சாதிப் பெயர் இருப்பது சாதியை வளர்க்காதா?

பிறப்பின் அடிப்படையிலான வருண-சாதி ஏற்றத் தாழ்வு உணர்ச்சியும், வாழ்நிலை நடப்புகளும் இரண் டாயிரம் ஆண்டுகளாக இங்கே புரையோடிக் கிடக் கின்றன. ஒரே சாதிக்குள்ளாகவே திருமணம் என்கிற அக மணமுறைதான் இதன் வலிமையான அரணாக நிற்கிறது. இதை இந்துமத சாத்திரங்கள் பாதுகாக்கின்றன. இந்திய அரசமைப்புச் சட்டத்திலும் சாதியமைப்புக்கு வலிமையான காப்பு செய்யப்பட்டுள்ளது. இவற்றை யெல்லாம் தகர்ப்பதே சாதி ஒழிப்புக்கான வழிமுறை யாகும்.

பள்ளி மாற்றுச்சான்றிதழில் சாதியைக் குறித்திட தடை விதித்திருப்பது, காலங்காலமாக கல்வி, வேலை உரிமை மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சாதியினரின் உரிமையைப் பறிக்கும் வஞ்சக வன்செயலாகும்.

Pin It