சேதுக்கால்வாய்த் திட்டப் பணியை 2005 சூலை 2ஆம் நாள் பிரதமர் மன்மோகன் சிங் தொடக்கி வைத்தார். கடலில் 167 கி.மீ. தொலைவுக்கு 12 மீட்டர் ஆழமும் 30 மீட்டர் அகலமும் கொண்ட கால்வாய் அமைப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்தியப் பெருங்கடலிலிருந்து வங்கக் கடலை அடைவதற்கு தற்போது கப்பல்கள் இலங்கையைச் சுற்றிச் செல்கின்றன. பாக் நீரிணையில் சேதுக் கால்வாய் வழியாகக் கப்பல் செல்லும்போது, இலங்கையைச் சுற்றிக்கொண்டு செல்லும் நிலை நீங்கும். தமிழர் களின் நீண்டநாள் கனவுத் திட்டமாக இருந்த இத் திட்டம் இப்போது, ‘கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி’ என்ற கதையாகிவிட்டது.

சேதுக்கால்வாய்த் திட்டப் பணிகள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, 2007ஆம் ஆண்டு விசுவ இந்து பரிசத்தும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அ.தி.மு.க.வின் தலைவி செயலலிதாவும், “சேதுக் கால்வாய்த் திட்டத்தால் இந்துக்கள் மிகவும் புனிதமானதென்று போற்றும் இராமர் பாலம் (ஆதம் பாலம்) தகர்க்கப்படுகிறது. எனவே இத்திட்டத்தைக் கைவிட வேண்டும்” என்று உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.

இந்துத்துவப் பாசிசக் கொள்கையை எப்போதும் உயர்த்திப் பிடிக்கும் உச்சநீதிமன்றம், “இராமர் பாலம் பாதிக்கப்படாத வகையில் வேறு மாற்றுப் பாதையில் சேதுக்கால்வாய் அமைப்பது குறித்து நடுவண் அரசு ஆராய வேண்டும். எனவே தற்போது நடைபெறும் சேதுக்கால்வாய்த் திட்டப்பணிகள் நிறுத்தப்பட வேண்டும்” என்று தீர்ப்பளித்தது.

இதன் அடிப்படையில், நடுவண் அரசு சுற்றுச்சூழல் வல்லுநர் ஆர்.கே. பச்சவுரி தலைமையில் மாற்றுப் பாதையில் சேதுத் திட்டத்தைச் செயல்படுத்துவதற் கான வழிவகைகளை ஆராய ஒரு குழுவை அமைத் தது. இதற்கிடையில் பார்ப்பனக் கொழுப்பேறிய சுப்பிரமணியசாமி, “சேதுத் திட்டத்தைச் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் அல்லது இராமர் பாலத் தைத் தேசியச் சின்னமாக அறிவிக்க வேண்டும்” என்று கோரி, உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத் தார். முதலமைச்சர் என்ற நிலையில், செயலலிதா 28.3.12 அன்று இராமர் பாலத்தைத் தேசியச் சின்னமாக அறிவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மடல் எழுதினார். உச்சநீதிமன்றம், இக்கோரிக்கை குறித்துக் கருத்துக் கூற வேண்டும் என்று நடுவண் அரசைக் கேட்டது. ஆனால் நடுவண் அரசோ, இராமர் பாலத்தைத் தேசியச் சின்னமாக அறிவிப்பது குறித்துக் கருத்துக் கூற விரும்பவில்லை என்று உச்சநீதிமன்றத் தில் கூறி, நழுவிக் கொண்டது.

2.7.12 அன்று நடுவண் அரசின் தலைமை வழக்குரைஞர் ரோகின்டோன் நாரிமேன், உச்சநீதி மன்றத்தில் நீதிபதிகள் எச்.எல். டாட்டு, சி.கே. பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன், சுற்றுச்சூழல் வல்லுநர் பச்சவுரியின் அறிக்கையை அளித்தார். பொருளாதாரர அடிப்படையிலும் சுற்றுச்சூழல் பாதிப்பு அடிப்படையிலும் மாற்றுப் பாதையில் சேதுக்கால் வாய்த் திட்டத்தை அமைக்க வாய்ப்பு இல்லை என்று பச்சவுரி தன் அறிக்கையில் தெரிவித்திருந்தார். எனவே சேதுக்கால்வாய்த் திட்டத்தின் எதிர்காலம் குறித்து எட்டுக் கிழமைகளுக்குள் நடுவண் அரசு தன்னு டைய முடிவைத் தெரிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற அமர்வு ஆணையிட்டுள்ளது.

எனவே சேதுக்கால்வாய்த் திட்டம் விரைவில் முறைப்படி ‘அடக்கம்’ செய்யப்படும் என்பது உறுதி. புராணப்படி, ஒரு ‘இலட்சத்து 70 ஆயிரம் ஆண்டு களுக்கு முன் இராமர் வாழ்ந்தார், என்று நம்பப்படு கிறது. இன்றைய அறிவியல் ஆராய்ச்சியின்படி, நம்மை ஒத்த மனித இனம் தோன்றி 50,000 - 60,000 ஆண்டுகள்தான் ஆயிற்று. அறிவியல் உண்மை இவ்வாறு இருக்க, 1.7 இலட்சம் ஆண்டு களுக்குமுன் குரங்குகளால் கட்டப்பட்டதாகக் கூறப் படும் இராமர் பாலம் என்பது பொய், புரட்டு, பித்த லாட்டம் என்று அரசியல் கட்சிகளாலோ, உச்சநீதி மன்றத்தாலோ கூற முடியாத அளவுக்கு, இந்துமத ஆதிக்கம் கோலோச்சுகிறது. அரசமைப்புச் சட்டத்தில் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று எழுதப்பட்டிருப்பது எவ்வளவு பெரிய ஏமாற்று!

Pin It