தென்னாட்டு மக்களில் பெரும்பான்மையினர் 3000, 4000 ஆண்டுகளுக்கு முந்தைய மொகஞ்சதாரோ, அரப்பா, ஆதிச்சநல்லூர், பொருந்தல் நகர நாகரிகத்துக்குச் சொந்தக்காரர்கள் ஆவர். இனவியல்(Ethnic) வரலாற் றின்படி இவர்கள் திராவிடர்கள்; மொழியியல் பண்பாட்டின் படி தமிழகத்தில் வாழ்வோர் - தமிழர்கள்.

தமிழகத்தை ஆண்டவர்களுள், பாண்டியர்களே மூத்த வர்கள். பாண்டியர் கி.மு.540 முதல் கி.பி.1310 வரை தமிழகத்தின் பல பகுதிகளை ஆண்டனர். முற்காலச் சோழர்கள் கி.மு.320 முதல் கி.பி.300 வரையிலும்; பிற்காலச் சோழர்கள் கி.பி.880 முதல் கி.பி.1347 வரையிலும் தமிழகத்தின் பல பகுதிகளை ஆண்டனர்.

இனவியல் அடிப்படையில் இன்று தூய திராவிடர், தூய ஆரியர் என்று எவரும் இல்லை.

மொழி இயல் அடிப்படையில் நாம் இன்று தமிழர்களாக இருக்கிறோம். ஆனால் நம்மில் எந்தச் சாதிப் பிரிவைச் சார்ந்தவரும் தனியான தமிழ்ப் பண்பாடு - வாழ்க்கை முறை உள்ளவர்களாக இல்லை.

பழம்பெருந் திராவிட இயக்கத்தார், தேசியக் கட்சியினர், பொதுவுடைமைக் கட்சியினர் ஆகியோரும்; மெத்தப் படித்தவர்களும், போதிய படிப்பில்லாதவர்களும்; உலகஞ் சுற்றியவர்களும், ஊரோடு இருப்பவர்களும்; மிகப்பெருஞ் செல்வந்தர்களும், பாதி நாள் பட்டினி கிடக்கும் ஏழைகளும் இன்று இந்துக்களாக - பார்ப்பன - வேத,ஸ்மிருதி, ஆகமக் கொள்கைகளை நம்பியும் ஏற்றும் வாழ்கிறவர்களாக மட்டுமே 2013இலும் வாழ்கிறோம். வீட்டு வாழ்க்கை, தெரு வாழ்க்கை, ஊர் வாழ்க்கை, சமுதாய வாழ்க்கை, சமய வாழ்க்கை என்னும் எல்லாத் துறைகளிலும் பார்ப்பனியப் பண்பாட்டில் ஊறியவர் களாகவே வாழ்கிறோம்.

வடநாட்டில் இந்தப் பார்ப்பனியப் பண்பாடு கெட்டியாக அமைக்கப்பட்ட காலம் கி.மு.185 - 152 ஆகும். அப்போது, பார்ப்பான் புஷ்யமித்ர சுங்கன் அரசனாக விளங்கினான். அவனுடைய வழியினர் 117 ஆண்டுகள் ஆட்சி செலுத்தினர்.

அவர்களுக்கு முன்னர் கி.மு.272 முதல் ஆட்சி செய்த அசோகன் வழியினர், அசோகனின் கொள்ளுப்பேரன் பிருகத்ரதன் காலத்தில், (கி.மு.191 - 185) புஷ்யமித்ர சுங்கனால் தோற்கடிக்கப்பட்டனர். அங்கு கி.மு.152க்குள் பௌத்தம் வேரோடும் வேரடி மண் ணோடும் அழிக்கப்பட்டது.

அதுவரையில் செவி வழியாக வழங்கிய இராமாயணம் அப்போதுதான் தொகுக்கப் பட்டது. இன்றும் தமிழர்தம் வீட்டு வாழ்க்கையில் ஆட்சி செலுத்தும் மனுஸ்மிருதியும் அப்போதுதான் வடிவம் பெற்றது.

சற்றேறக்குறைய அதே சமகாலத்தில் எழுதப்பட்ட தமிழரின் பழம்பெரும் இலக்கண - இலக்கியங்களான தொல்காப்பியத்திலும், திருக்குறளிலும் சில ஸ்மிருதி நெறிகள் படிந்தன.

சிலப்பதிகாரக் காலமான கி.பி.180இல் தொடங்கி, பிற்காலச் சோழர் ஆட்சிக்காலத் தொடக்கமான கி.பி. 880க்குள் தமிழ்நாட்டுத் தமிழர் பார்ப்பனிய - இந்துத் துவ - மிருதி - ஆகம வாழ்க்கை நெறியை மேற் கொண்டுவிட்டனர்.

இவ்வளவும் நடத்தப்பட்டது அவ்வக்கால ஆட்சியாளர் களால்தான் என்பதைத் துல்லியமாக நம் மக்களுக்கு நாம் கற்பிக்கவில்லை. அது ஒரு “பண்பாட்டுப் படை யெடுப்பு” என்று, எந்தப் பொருளும் இல்லாத ஒரு கருத்தியலைப் புகுத்தி - அந்தக் கருத்துக்கு உள்ள ஆளு மையை, செல்வாக்கை, வலிமையை, கட்டுக்கோப்பை அழித்துவிட முடியும் என்றே தமிழர் பலரும் நினைக் கிறோம். ஆனால் நம் கொள்கை எதிரிகளான பார்ப் பனர்கள் அப்போதும், இப்போதும் அப்படி நினைக்க வில்லை.

பௌத்தத்தையும், சமணத்தையும் 1200 ஆண்டு களுக்குமுன் வீழ்த்தியவர் ஆதிசங்கரர். அரசர் கள் வழியாகத்தான் அவர் அதைச் செய்தார்.

அப்போது தீவிரமாகச் செயல்பட்ட சைவ சமயப் புரட்சி இயக்கம், இந்து மதத்தின் ஓர் உட்பிரிவு ஆகி விட்டது. தமிழகத்தில் 1400க்குப்பிறகு மராட்டியர்கள், தெலுங்கு நாயக்கர்கள், இஸ்லாமிய நவாபுகள் ஆட்சி நடைபெற்றது.

அக்காலத்தில் ஆட்சிபுரிந்த எல்லா அரசர்களும் தமிழகம் எங்கும் வேதபாடசாலைகளை நிறுவினர்; அவற்றுக்குப் பல ஊர்களை - ஆயிரக்கணக்கான ஏக்கர் வரியில்லா வேளாண் நிலங்களை அளித்தனர்; கருவறையில் கடவுள் பொம்மைக்குப் பூசை செய்திடப் பார்ப்பன ரையே அமர்த்தினர்; பார்ப்பனப் புரோகிதத்தைப் பிறப்பு முதல் இறப்பு வரை நீங்காத குடும்பக் கடமைகளாக விதித்தனர். பாட்டாளி மக்களை நான்காம் சாதிச் சூத்திரர் என முத்திரை குத்தினர். ஆதித்தமிழர்களை எந்தப் பெறுமானம் உள்ள சொத்தையும் வைத்துக் கொள்ள உரிமை அற்றவர்களாக ஆக்கி, அவர்களை ஊருக்கு வெளியே தனியாகக் குடிவைத்தனர்.

இவை எல்லாமே அரசினால் - அரசர்களால் - அரசுத்துறை நிருவாகிகளால்-பழக்கம், வழக்கம், நம்பிக்கை என்கிற பேரால் இன்றும் காப்பாற்றப் பட்டு வருகின்றன.

கி.பி.1542இல் கும்பகோணத்தில், கோவிந்த தீட்சிதர் என்கிற, 110 அகவையுள்ள - மூன்று அரசர்களுக்கு அமைச்சராக இருந்த பார்ப்பனரால் “ராஜ வேத காவ்ய பாடசாலை” நிறுவப்பட்டது. இன்றும் 170 பார்ப்பன மாணவர்களுக்கு அங்கு வேதம் பயிற்றுவிக்கப்படுகிறது.

மறைந்த காஞ்சிப் பெரியவர் சந்திரசேகரேந்திர சரசுவதி, வேதம் கற்ற வேத பாடசாலை, வேலூர் ஆர்க்காடு அடுத்த கலவை என்ற ஊரில் உள்ளது. இன்றும் அங்கு 30 மாணவர்களுக்கு வேதம் பயிற்று விக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 100க்கு மேற் பட்ட வேதபாடசாலைகள் உள்ளன.

இன்றும் நாம் காண்பவையல்லவா இவை?

தந்தை பெரியார் 2-5-1925இல், அவர் காங்கிரஸ் காரராக இருந்தபோதே, “குடிஅரசு” கிழமை இதழைத் தொடங்கினார். அப்போது, அவர் கடவுள் நம்பிக்கை யாளர். ஆனால், 1922 முதலே இராமாயணம், மனு° மிருதி இவைதான் சாதியும், தீண்டாமையும் இருக்கக் காரணம் என்பதை - சி. இராசகோபாலாச்சாரியாரை வைத்துக் கொண்டே உரத்துக் கூறினார்.

அவர் “குடிஅரசு” முதலாவது இதழில்,

“நமது நாடு அரசியல், பொருளியல், சமூகவியல், ஒழுக்கவியல் முதலிய எல்லாத் துறைகளிலும் மேன் மையுற்று விளங்கச் செய்ய வேண்டும்; ..... ஒவ் வொரு வகுப்பும் முன்னேற வேண்டும். இதை அறவே விடுத்து தேசம், தேசம் எனக் கூக்குரலிடுவது எமது பத்திரிகையின் நோக்கமன்று. மக்களுள் தன் மதிப் பும், சமத்துவமும் ஓங்கி வளரல் வேண்டும். மக்கள் அனைவரும் அன்பின் மயமாதல் வேண்டும்” (“குடிஅரசு”, 2.5.1925) எனத் தெளிவுபட அறிவித்தார்.

தன்மதிப்பு - தன் மரியாதை - தன்மானம் என்பது தான், “சுயமரியாதை”.

“சமத்துவம்” என்பது, மானிடரிடையே எல்லாவற்றி லும் சமத்துவ உரிமை; சமஉரிமை பேணுவது.

இன்றைய தமிழர்கள்-இந்த இரண்டிலும் எந்த இடத்தில் நிற்கிறோம்?

மகாத்மா புலே 1870 முதலும்; பண்டித அயோத்தி தாசர் 1907 முதலும்; பிறகு தந்தை பெரியார் 1925 முதலும் இவற்றைச் சொன்ன பிறகும்; மேதை அம் பேத்கர் 1927 முதலே நமக்கு இவற்றைக் கற்பித்த பிறகும் தமிழகத் தமிழர் எங்கே இருக்கிறோம்? இந்தியா முழுவதிலுமுள்ள பார்ப்பனரல்லாதார் எங்கே இருக்கின்றனர்?

இந்தியா முழுவதிலும் உள்ள இந்த ஈன நிலையை மாற்றிட - யார், யார் என்ன செய்தனர்?

“இவை எல்லாவற்றையும் கட்டிக் காக்கும் அரச மைப்புச் சட்டத்தை அடியோடு அகற்ற வேண்டும்” என, 1946 முதல் சொன்ன பெரியாரும், அப்படிச் செய்திடத் திட்டமிட்டு, அதற்கான சட்டத்திருத்தத்தை, அரசமைப்பு அவையில், 1948இலேயே முன்மொழிந்த மேதை அம்பேத்கரும் - அவர்கள் தொடங்கிய இடத்தி லேயே நின்றுவிட வைத்திருக்கிறோம்.

ஏன்?

1. முதலில், “நம் கோரிக்கை ஓர் அரசியல் கோரிக் கை - நம் குறிக்கோளை நிறைவேற்றிட ஏற்ற ஓர் அரசை நாமே அமைக்க வேண்டும்” என்பதை நாம் புரிந்துகொள்ளவில்லை; மக்களை நாம் இதற்கு ஆயத்தப்படுத்தவில்லை.

2.  இன்று “அரசு” என்பது, இந்திய அரசு - இந்திய ஆட்சி மட்டுமே.

இந்துத்துவம் பேசும் - இந்தியத் தேசியம் பேசும் - பார்ப்பனருக்கும், பனியாவுக்கும், இந்தியத் தரகு முத லாளிகளுக்கும், பன்னாட்டு முதலாளிகளுக்கும் இது புரிந்திருக்கிறது.

ஆனால் இந்தப் பொறியில் சிக்கிக் கொண்ட 122 கோடி மக்களுள், பலருக்கும் இதைப் புரிய வைத்திட எவரும் முயலவில்லை.

இம்மக்களை அடிமைப்படுத்தி - 1946 முதல் 1977 வரையிலும்; பிறகு 1980 முதல் 1996 வரையிலும் இந்தியாவை ஆண்ட காங்கிரசு இதுபற்றிக் கவலைப் படவில்லை.

1996 முதல் வெறும் 6 ஆண்டுகளே இந்தியாவை ஆண்ட பார்ப்பன - பனியா - இந்துத்துவக் கட்சியான பாரதிய சனதாக் கட்சி இதை நன்றாகப் புரிந்து கொண் டிருக்கிறது.

“சேதுப்பாலம் இராமர் கட்டியதுதான். பாபர் மசூதி யின் கூம்புக்கு நேர் கீழே உள்ள இடத்தில் தான் இராமர் பிறந்தார். இது இந்துக்களின் நம்பிக்கை.”

“இராமாயணமும், பகவத்கீதையும், புரோகிதமும், சோதிடமும் இந்துத்துவத்தின் உயிர் மூச்சு.”

“இவற்றைக் காப்பாற்றுவதற்காக நாங்கள் இந்திய ஆட்சியை நடத்திட வாய்ப்புத் தாருங்கள்” என்று எல்லாப் பார்ப்பனரும், இன்றும் இவர்களை நம்பும் சூத்திர, ஆதிசூத்திரத் தலைவர்களும் ஒரே குரலில் இன்று ஒலிக்கிறார்கள்.

2014 தேர்தலுக்கான பாரதிய சனதாக் கட்சியின் தேர்தல் அறிக்கைக்குழுவின் தலைவரான முரளி மனோகர் ஜோஷி, 18-10-13 வெள்ளியன்று இவற்றைப் பற்றித் தெளிவாக அறிவித்துள்ளார் :

1. அயோத்தியில் இராமர் கோயில் கட்டியே தீருவோம்.

2. சேதுப்பாலம் இராமர் கட்டியதுதான்; அதைக் காப்போம்.

3. ஜம்மு-காஷ்மீருக்குத் தனி உரிமை அளிக்கும் விதி 370 என்பதை அரசமைப்புச் சட்டத்திலிருந்து நீக்கு வோம்.

4. பொது உரிமைஇயல் சட்டத்தை நிறைவேற்று வோம்.

5. பசுக்களின் புனிதத் தன்மையைக் காப்போம்.

6. புனித கங்கையைத் தூய்மைப்படுத்துவோம்.

“அதாவது, இந்தியாவில், “ராமராஜ்யம்” என்கிற இந்துப் பார்ப்பன ஆட்சியை நிறுவுவதுதான், பாரதிய சனதாக் கட்சியின் கொள்கை. அதற்கா கவே அவர்கள் அரசை-ஆட்சியைக் கைப்பற்றத் திட்டமிடுகிறார்கள்.

இவற்றுக்கு,

1. இந்திய அரசமைப்புச் சட்டம் கெட்டியான பாது காப்புத் தருகின்றது;

2. 21 உயர்நீதிமன்றங்களும், இந்திய உச்சநீதிமன்ற மும் முழுப் பாதுகாப்புத் தருகின்றன.

3. எல்லா ஊடகங்களும் இவற்றைத் தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டு கூக்குரலிடுகின்றன.

வரும் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் 543 இடங் களில் 272 இடங்களைக் கைப்பற்றியே தீரவேண்டும் என, ராஷ்ட்ரீய சுயம் சேவக் சங்கம் வரிந்து கட்டிக் கொண்டு வேலை செய்கிறது.

இந்தியா முழுவதிலும் 2,500 முழுநேரப் பிரசாரகர் கள் இதற்குப் பணியாற்றுகிறார்கள்; இந்தியா முழு வதிலும் இன்று 39,000 இளைஞர்கள் நாள்தோறும் உடற்பயிற்சி (Shaka) மேற்கொண்டுள்ளனர்; தில்லி யில் மட்டும், ஒரு கிழமையில் ஒரு நாள் 5,000 பேர் உடற்பயிற்சி பெறுகிறார்கள் (‘தி இந்து’, சென்னை, 16.10.2013).

இவ்வளவு பெரிய ஏற்பாடுகளுக்கும் இந்திய முத லாளிகளும், பன்னாட்டு முதலாளிகளும் மூட்டை மூட் டையாகப் பணம் தர ஆயத்தமாகக் காத்திருக்கிறார்கள்.

பெரியார் வழியில்-அம்பேத்கர் நெறியில்-மார்க்சிய -லெனினிய நெறியில் இயங்குவதாக நம்புகிற ஒவ்வொருவரும் இவற்றை நடுநிலைக் கருத்தோடு நோக்குங்கள் என வேண்டுகிறேன்.

அப்போதுதான், நாம் நடக்க வேண்டிய தொலைவு நெடுந்தொலைவு என்பதையும்-நாம் தூக்க வேண்டிய சுமை கழுத்தை முறிக்கக் கூடியது என்பதையும் - நாம் தரவேண்டிய விலை மிக மிக அதிகம் என்பதையும் நாம் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள முடியும். நம் மக்களை - உழைப்பாளிகளை, அப்போதுதான் நாம் நம் பாதைக்குக் கொண்டு வரமுடியும். முயலுவோம், வாருங்கள்!

Pin It