கடந்த சில ஆண்டுகளாகவே ஆசிரியர் மாணவர் உறவு எத்தகைய புரிதலில் இயங்குகிறது என்பது பல்வேறு ஐயங்களை ஏற்படுத்திய வண்ணம் அமைந்து வருவதைக் காண முடிகிறது. இப்பிரச்சினைகளை மையமிட்டுப் பல்வேறு இதழ்களும் தொலைக்காட்சி அலைவரிசைகளும் அவ்வப்போது காரசாரமான விமர்சனங்களை முன்வைக்கின்றன. இருப்பினும், கல்விச் சூழலில் ஆசிரியர் மாணவர் உறவு என்பது சரியான புரிதல் இல்லாத தளத்தில் இயங்குவதையே பார்க்க நேர்கிறது. ஏன் இவ்வுறவு இப்படிச் செயல்படுகிறது? இதற்குத் தீர்வுகள் கிடையாதா? ஆசிரியர்கள் மாணவர் களைப் புரிந்துகொள்ளவில்லையா? அல்லது மாணவர்கள் ஆசிரியர்களைப் புரிந்து கொள்ளவில்லையா? அல்லது ஊடகங்கள் இவர்களின் மாற்றத்திற்குக் காரணமாக அமைகின்றனவா? போன்ற வினாக்களை முன்வைத்தால் எண்ணிக்கையில் அடங்காப் பக்கங்கள் நீளும். அதற்கான விடைகளை எழுத.

ஆசிரியர்கள் அதிகம் பயன்படுத்துவது எதை? ஏய்ய்ய்ய்ய்ய்ய், பேசாத, சொன்னா கேக்க மாட்டயா, மக்கு, தண்டம், கைய கட்டு, வாயை பொத்து, நீ திருந்தவே மாட்டயா, ஸ்டுபிட், இடியட், நான்சன்ஸ், நீ அதிகமா பேசுர, டோன்ட் டாக், கீப் கொய்ட், ஷட் அப் யுவர் மௌத், கெட் அவுட் ஐ சே, இம்போசிஷன், ரி டெஸ்ட், டி.சி கிழிக்கனுமா? உங்க அப்பா அம்மாவ அழைச்சிட்டு வா, ஹால் டிக்கட் தர மாட்டேன், எக்சாம் எழுத விட மாட்டேன்... போன்ற கெட்ட வார்த்தைகளை நிறுத்திக்கொண்டு ஓர் ஆசிரியர் மாணவர்களை நோக்கிப் புன்முறுவலோடு அவர்களின் தேவை, பிரச்சினைகள் குறித்துக் கேட்க ஆரம்பித்தால் போதும்: ஒரு மணி நேரம் அல்ல, ஓராயிரம் மணி நேரத்திற்கும் மேல் அவர்களுக்குத் தேவைப்படும், தன் வேதனைகளைக் கூற.

இன்றைய கற்பித்தல் முறைகளின் மூலமாக ஏதோ ஒரு வகையில் ஒவ்வொரு மாணவரும் மன நோயாளியாக உருமாற்றம் பெறுகிறார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை. பள்ளி மாணவர் ஆசிரியரைக் கத்தியால் குத்துவதும், கல்லூரி மாணவர்கள் முதல்வரைக் கொலை செய்வதும் சாதாரண நிகழ்வாக சமூகத்தில் நடைபெற்று வரும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டு இருக்கிறோம்.

உறங்கும் நேரத்திற்கு அடுத்தபடியாக அதிக நேரம் மாணவர்கள் செலவிடுவது பன்முகத்தன்மை கொண்ட ஆசிரியர்களிடையே தான். தன் பெற்றோரையும் விட அதிக நேரம் செலவிடுகின்ற ஆசிரியர் மாணவர் உறவு என்பது எவ்வாறு இருக்க வேண்டும். ஆனால்?

வகுப்பறைச்(சிறை) சூழலைத் தாண்டி மாணவர்கள் எங்கேயும் சென்றுவிடக் கூடாது என்பதில் ஆசிரியர்கள் உறுதியாக இருக்கிறார்கள். விளையாட்டு, பொதுநிகழ்வு, முகாம்கள் போன்றவற்றில் பங்கு பெற அனுமதிப்பதில்லை. அதாவது ஆசிரியர்கள் தம் அதிகாரத்துவத்தை வகுப்பறையில் நிலைநிறுத்த முயல்கிறார்கள். சிலர் வெற்றியும் அடைகிறார்கள். ஆனால் அவர்களுக்கு மாணவர்களின் மனநிலை தெரிவதில்லை.

அதிகாரத்திற்கு உட்படுத்தித்தான்; மாணவர்களுக்குச் சிறந்த கல்வியைத் தர முடியுமா? அவ்வாறன்றி, அன்போடு பாடம் கற்பித்தால் மாணவர்கள் கேட்கக் கூடிய கேள்விகளுக்குத் தன்னால் பதிலளிக்க முடியாது என்ற பயமா? ஆசிரியர்கள் மாணவர்களிடையே கேள்வி களை அனுமதிப்பதில்லை. பாடப்பகுதி அல்லாத பிற நிகழ்வுகளை ஆசிரியர்கள் மாணவர்களுக்குச் சொல்லித் தருவதில்லை. இது ஆசிரியர்களின் கஞ்சத்தனம் அல்ல. ஏனெனில், அவர்கள் படித்தால்தானே மாணவர்களுக்குச் சொல்லித் தர முடியும்.

மாணவர்களின் செயல்பாடுகளினால் ஆசிரியர்கள் மனஉலைச்சலுக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. ஆனால், ஆசிரியரின் அணுகுமுறையினால் மனஉலைச்சலுக்கு உள்ளாகும் மாணவர்களின் எண்ணிக்கை ஏராளம். இத்தகைய கற்பித்தல் முறை அவசியம் தானா?

ஆசிரியர்கள் மாணவர்களிடம் அதிகம் எதிர் பார்ப்பது எதை? பயத்தை. இவ்வெதிர்பார்ப்பை மாணவர்கள் நிறைவேற்றிவிட்டால் ஆசிரியர்களுக்கு உலகப்போரிலே வெற்றி பெற்ற மாதிரியான பரம சந்தோஷம். ஆனால், இதற்குப் பின்னால் மாணவர் களின் மனநிலை என்ன என்பதை யோசிக்க மறந்து விடுகிறார்கள்.

“மாணவர்களுக்காகக் கல்வி” என்ற பெயரிலே ஆசிரியரின் அதிகாரமும், பாடப் புத்தகமும் வகுப் பறையில் மையமாகச் செயல்படுவதைக் காண முடிகிறது. அங்கே மாணவர்களின் தனித்திறமைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அவர்களின் திறமைகளை வெளிப் படுத்த வாய்ப்புகளைத் தரவும் ஆசிரியர்கள் முன் வருவதில்லை என்பது மாணவர்களின் ஏக்கமாக உள்ளது. பெரும்பான்மையான வகுப்பறைகளில் அத்தியாவசியத் தேவைக்காகக்கூட வாய் திறக்காமல் மௌன யுத்தத்தையே மாணவர்கள் பின்பற்றி வருகிறார்கள். மாணவர்களின் பங்களிப்பு இல்லாத வகுப்பறை: செத்துப்போன வகுப்பறைக்குச் சமம்.

உறவுகள், இயற்கை, அரசியல், அறிவியல் போன்றவையெல்லாம் என்னவென்று தெரியப் படுத்தாமலே நாம், நம் குழந்தைகளை இவற்றிலிருந்து அந்நியப்படுத்தி வளர்க்கிறோம் என்பதை உணர முடிகிறது. மாணவர்களுக்குக் கல்வி அவசியத் தேவை என்பதை மறுக்க முடியாது. எனினும், அக்கல்வியை இத்தகைய கொடூரமான கற்பித்தல் முறைகளால் கற்பிப்பதை ஏற்க முடியாது.

ஆசிரியர்கள் தம் சொந்த வேலைக்கு மாணவர் களைப் பயன்படுத்தலும், அவ்வாறு வேலை செய்யும் மாணவர்களுக்கு மட்டுமே கூடுதலான அகமதிப்பீட்டு மதிப்பெண் வழங்குவதும் ஓரிரு இடங்களில் நடை பெற்று வருகிறது. அகமதிப்பீட்டு மதிப்பெண்ணை வைத்து மாணவர்களை மிரட்டுவதும் ஆசிரியர்களின் அதிகாரத்தை நிலைநிறுத்துகிறது.

தனக்கு வணக்கம் செலுத்தாத மாணவரை அழைத்து ஏன் எனக்கு வணக்கம் செலுத்தவில்லை என வினவுவதும், ஒரு மாணவர் விடுப்பு எடுத்தால் வகுப்பாசிரியர், துறைத் தலைவர் மற்றும் பாடம் எடுக்கும் அனைத்து ஆசிரியரிடமும் கையப்பம் வாங்கி வரச் சொல்லுதலும் எவ்வளவு அநாகரிகமான செயல். எத்தனை ஆசிரியர்கள், தாம் விடுப்பு எடுப்பதற்கு மாணவர்களிடம் அனுமதி பெறுகிறார்கள் அல்லது தெரிவிக்கிறார்கள்?

ஒரு மாணவர் ஏதேனும் தவறு செய்யும் பட்சத்தில் அவரை அழைத்து தனியாக அறிவுரை வழங்குதலையே மாணவர்கள் விரும்புகிறார்கள். அவ்வாறன்றிப் பல மாணவர்கள் மத்தியில் நிறுத்தி விமர்சிப்பதோ அல்லது அறிவுரை பகர்வதோ ஏற்புடையதல்ல. மேலும், மாணவர்களின் பெற்றோரை இழிவான நிலையில் பேசுவதும் ஏற்புடையதல்ல.

பிரச்சினைக்குரிய மாணவரை வகுப்பறையில் விமர்சிப்பதோடன்றி துறையில் உள்ள அனைத்து ஆசிரியர்களிடமும் கலந்துரையாடுவது, பிற ஆசிரியர்கள் மத்தியில் அம்மாணவர் பற்றிய மதிப்பீடுகள் தவறானதாகவே அமைந்து விடுகிறது. இச்செயலை ஓர் ஆசிரியர் திரும்பத் திரும்ப செய்வதன் மூலம் ஒரு மாணவர் ‘ஹீரோ’வாகவே உருமாற்றம் பெறுகிறார் அல்லது மன உலைச்சலுக்கு உட்படுகிறார்.

இடைவேளையின் போது கூட மாணவர்களைப் பேசக்கூடாது, வகுப்பறையை விட்டு வெளியே வரக் கூடாது என்று மாணவர்களை நிர்ப்பந்திப்பது எவ் வகையில் நியாயம்? உணவு இடைவேளையின் போதும் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்தலும், கரும்பலகையில் மாணவர்களை எழுதச் சொல்லுதலும் மாணவர்களை கல்வியின் மீது எதிர்ப்பை உண்டாக்கும் நிகழ்வுகள் என்பதை ஆசிரியர்கள் மறந்து விடுகிறார்கள்.

ஆசிரியர்களுக்கு இணையான தகுதியுடைய முதுநிலை பயிலும் மாணவர்கள்கூட இன்று நடுநிலைப் பள்ளி மாணவர்களைப் போல் வினாத்தாள்களுக்குரிய விடைகளைப் பத்து முறை எழுதும் அவலம் ஆங்காங்கே அரங்கேறி வருவதைப் பார்க்க முடிகிறது.

ஒரு வகுப்பறையில் பல்வேறு தரப்பட்ட மாண வர்கள் இருப்பார்கள். ஓரளவாவது அனைவருக்கும் புரியும் வகையில் பாடம் கற்பித்தலே சிறந்த கற்பித்தலாகும். அவ்வாறன்றி மீத்திறன்மிக்க மாணவர்களுக்கு மட்டும் புரியும் வகையில் பாடம் எடுத்துவிட்டு அடுத்த பாடத் தலைப்புக்குத் தன் கற்பித்தலைக் கொண்டு செல்லுதல் எவ்வாறு சிறந்த கற்பித்தலாகும்.

“இல்லாத வனுக்குக் கொடுத்தலே ஈகை” அவ்வாறே கற்றல் அடைவில் குறைவுடைய மாணவர்களுக்கும் புரியும் வகையில் கற்பித்தலே சிறந்த கற்பித்தலாகும். வகுப் பறையில் ஓர் ஆசிரியர் தன் கற்பித்தல் பார்வையைப் படிக்கும் மாணவர்களிடம் மட்டுமே செலுத்தாமல் படிக்காத மாணவர்களிடையேயும் செலுத்த வேண்டும்.

முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை மட்டும் கரும்பலகையில் எழுதச் செய்தலும் வகுப் பறையில் வாசிக்கச் செய்தலும் பொறுப்புகளை அம் மாணவர்களிடம் மட்டுமே கொடுத்தலும் எவ்வகையில் நியாயமான கற்பித்தலாகும்? ஏன் ஓர் ஆசிரியர் இச் செயல்பாடுகளில் பிற மாணவர்களை ஈடுபடுத்து வதில்லை?

கடமைக்கு நடத்துவது புரிந்ததா? புரியலையா? ஏன்று கூடக் கேட்பதில்லை. அப்படியே கேட்டால் “எத்தனை தடவ உனக்குச் சொல்வது, உனக்குச் சொல்லிச் கொடுக்கறதுக்குள்ள என் ஜென்மம் போயிடும்” உன் ஞாபகத்தை எங்க வச்சிருக்க? என்று சலித்துக்கொள் கிறார்கள். “ஏதாவது நடத்துவது புரியலனு நாங்க கேட்டா.

உனக்கு எத்தன தடவ சொன்னாலும் புரியாதுனு சொல்வாங்க. உண்மை என்னனா? எங்களுக்குப் புரியாம இல்ல. உங்களுக்குப் புரிய வைக்கிற மாதிரி நடத்த தெரியல. தமிழ் வழியில் படித்த மாணவர்களை ஏளனமாகப் பார்க்கும் நிலை ஆசிரியர்கள் மத்தியில் நிலவுகிறது” என்பது மாணவர்களின் குமுறலாக விளங்குகிறது. ஆசிரியர்கள் பாடம் எடுப்பதிலும் தேர்வு நடத்துவதிலும் குறியாக இருக்கிறார்களே தவிர அதில் மாணவர்களை முழுமையாக ஈடுபடுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதில்லை.

சாக்பீஸ் எடுத்தால் மணி அடிக்கும் வரை விடாமல் பாடம் எடுப்பது, சற்று நேரம் கூட மாணவர்களிடம் சுதந்திரமாகப் பேசுவதில்லை என்று மாணவர்கள் ஏக்கமடைகிறார்கள். அடிப்படையில் ஒரு மாணவர்க்கு ஆசிரியரைப் பிடித்துவிட்டால் நடத்தும் பாடப்பகுதி நன்றாகப் புரிந்துவிடும் என்பதைப் பல ஆசிரியர்கள் மறந்துவிடுகிறார்கள்.

மாணவர்களின் குறைகளைச் சுட்டிக் காட்டும் விதமாகவும் அவர்களைத் திருத்தும் முயற்சியாகவும் பெற்றோர் சந்திப்புக்கான ஏற்பாடுகள் நடைபெறுவது வரவேற்கத் தக்கதே. ஆனால், ஆசிரியர்களின் தவறு களைச் சுட்டிக்காட்ட ஒரு வாய்ப்பையும் மாணவர் களுக்குத் தருவதில்லையே ஏன்? இவற்றின் மூலம் ஓர் ஆசிரியர் தன் கற்பித்தல் முறையைச் சிறப்பாக மாற்றி யமைக்க முடியும்.

சட்டங்களும் விதிமுறைகளும் அனைவருக்கும் சமமானதே. அவ்வாறிருக்க தாமதமாக வருதல், உடை அலங்காரம், அலைபேசி பயன்படுத்தல் போன்றவற்றில் ஒருசார்புத்தன்மை ஏற்புடையதல்ல.

தன் கல்வி சார்ந்த அனுபவங்களை மாணவர் களுக்குக் கல்வியாக வழங்கலாம். அவ்வாறன்றிச் சில ஆசிரியர்கள் தற்பெருமைகளை அதிகமாகக் கூறுதலும் பிற ஆசிரியர்களிடம் பேசக்கூடாது என மாணவர்களை எச்சரித்தலும் போன்ற நிகழ்வுகள் ஆங்காங்கே நடை பெற்று வருகின்றன.

புறத்தோற்றத்தை வைத்து மாணவர்களை நல்ல வராகவோ கெட்டவராகவோ மதிப்பிடலும், கடைசி பெஞ்ச் மாணவர்கள் என்றால் அவர்கள் மீது தவறான மதிப்பிடலும், சாதி, மத, பாலின அடிப்படையில் மாணவர்களை வேறுபடுத்திப் பார்த்தலும் கண்டிப்பிற் குரியதே.

கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்பு எடுக்கும்போது ஆசிரியர் மட்டும் தேநீர் அருந்துவதும் சிற்றுண்டி உண்ணுவதும் நடைபெற்று தான் வருகிறது. இது மாணவர் மத்தியில் மேலும் மேலும் ஏக்கங்களையே வருவிக்கின்றன.

நாம் எங்கே நம் குழந்தைகளின் பாதங்கள் பூமியைத் தொடுவதற்கும், உரோமங்கள் சூரியனை தரிசப்பதற்கும் அனுமதிக்கிறோம். இவற்றின் மீது உறவில்லாத குழந்தை எப்படி வலிமையுடையதாக இருக்க முடியும்?.

சமூக மாற்றத்தின் ஒரு பகுதியான தனிக் குடும்பத்தின் காரணமாக இன்றைய குழந்தைகள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். பெற்றோர்களும் தம் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுவதில்லை.

பெற்றோர்கள் தம் குழந்தைகளைத் தம் விருப்பப் படியே படிக்க வைக்க முயல்கிறார்களே தவிர அவர்களின் விருப்பத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. தனக்குப் பிடிக்காத ஒரு துறையை ஒருவர் படிக்கும்போது அவர் எவ்வாறு கல்வியில் சிறந்து விளங்க முடியும்? இன்றைய கல்வித் திட்டங்களும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லையென்றே கூறலாம். கற்பித்தலில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்களுக்கு கற்பிக்க வேண்டிய சூழலுக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம் என்பது மறுக்கமுடியாத உண்மை. அதுபோலவே இன்றைய மாணவர்களும் சமூக நிறுவனங்களால் மாற்றம் பெற்றுள்ளனர் என்பதும் மறுக்கமுடியாத உண்மை.

அறிவியல் யுகத்தால் மாற்றம் பெற்றுள்ள மாணவர் களுக்கு நாம் இன்னும் பழைய கற்பித்தல் முறைகளையே கையாளும்போது அது எப்படிப் பொருத்தப்பாடுடையதாக இருக்கும் என்பது சிந்தனைக்குரியது. மொழி இழந்து, தாய் இழந்து, தந்தை இழந்து, தன்மானம் இழந்து, இயற்கை இழந்து, உறவுகளை இழந்து, உரிமைகளை இழந்து நாம் கற்றல் கற்பித்தல் சூழலுக்குத் தள்ளப் பட்டிருக்கிறோம். இச்சூழலில் ஆசிரியர் மாணவர் உறவு எவ்வாறு இருக்க வேண்டும்? ஆனால்... ....

கல்வி வணிகமயமாக்கப்பட்ட சூழலில் பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் தம் நிறுவனத்தின் தரத்தை உயர்த்த, முதல்வரைத் திணித்தலும், முதல்வர் துறைத் தலைவர்களைத் திணித்தலும் துறைத் தலைவர்கள் தம் கீழுள்ள ஆசிரியர்களைத் திணித்தலும் ஆசிரியர்களும் வேறுவழியின்றிப் பல்வேறு பிரச்சினைகளுக்கிடையே மாணவர்களைத் திணித்தலும் ஆங்காங்கே நடைபெற்று வருவதையே பார்க்க முடிகிறது. எது எப்படியோ இதில் பாதிப்பிற்குள்ளாவது ஆசிரியர் மாணவர் உறவே என்பது தெள்ளத் தெளிவு.

சிறந்த கற்பித்தலை நாம் பின்பற்றும்போது பலமடங்கான கற்றலை அடைகிறோம் என்பதை ஒவ்வோர் ஆசிரியரும் உணர வேண்டும். இத்தகைய கற்றலை நாம் மாணவர்களின் வாயிலாகவே அடை கிறோம் என்பதை மறந்துவிடக் கூடாது.

இரு கைகள் சேர்ந்தால் தானே ஓசை. இரண்டு மாடும் ஒன்றாக நடந்தால் தானே ஏர் உழ முடியும். அதுபோலவே ஆசிரியர் மாணவர் உறவு சிறப்பாக இருந்தால் கல்விப் பயணம் வெற்றி நடைபோடும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் பாடம் நடத்து வதற்குப் படிக்கிறார்களோ! என்னவோ? அதற்கு முன்பாக ஒவ்வொரு ஆசிரியரும் மாணவர்களைப் படிக்க வேண்டும். இந்நிலை 60,70 மாணவர்கள் இருக்கும் வகுப்பறையில் நடைபெறுவது சாத்தியமன்று. ஆனால், 20,30 மாணவர்கள் இருக்கும் வகுப்பறையிலும் ஆசிரியர்கள் மாணவர்களைப் படிப்பதில்லை என்பது வேதனைக்குரியது. மாணவர்களைப் படிப்போம். கல்வியை நேசிப்போம்.

Pin It