sivasubramanian book 450நாட்டார் வழக்காற்றியல் துறையினர் மட்டு மின்றிப் பண்பாட்டு மானிடவியலாரும் “பொருள் சார் பண்பாடு” என்ற வகைமை வழி, “பொருள் என்பது அதன் பயன்பாட்டு எல்லையுடன் நின்று விடுவதில்லை.  இந்த எல்லையைக் கடந்து சமூக பண்பாட்டு வரலாற்று வரைவுக்கு உதவும் தரவாகவும் விளங்குகிறது”, என கட்டியம் கூறி நம்மை “பனை மரமே! பனை மரமே!” நூலுக்குள் அழைத்துச் செல்கிறார் ஆய்வறிஞர் ஆ.சிவசுப்பிரமணியன்.

நூற்றுக்கும் மேற்பட்ட துணைநூற் பட்டியலி லிருந்தும், சங்க இலக்கியம் முதல் பழமொழிகள், நாட்டுப்புறப் பாடல்கள் சைவ, வைணவ, சமணச் சான்றுகள் தள ஆய்வுத் தரவுகள் என இந்நூலின் 352 பக்கங்களிலும் சான்றுகள் வழி பேசும் ஆய்வாளர் தன்னடக்கத்துடன், “இந்நூலை நான் எழுதப் புகுந்தமைக்கு அடித்தள மக்கள் வரலாறு, நாட்டார் வழக்காற்றியல் என்ற இரு அறிவுத் துறைகளின் மாணவனாக இருந்து வருவதுதான்”, என்கிறார்.

நூலின் முன் இயம்பலில் மானுடவியல் அறிஞர் பக்தவத்சல பாரதி, “இந்நூலில் வரலாறு சமூகம், பண்பாடு... உலகமயம் என 12 இயல்கள் மூலம் பரந்த தளங்களோடு இணைத்தறியும் பெரும் வாசிப்பை ஆ.சிவசுப்பிரமணியன் நம்முன் நிறுத்து கிறார்,” என்கிறார்.  மேலும், முத்தாய்ப்பாக “இது ஓர் அச்சு அசலான மண்சார்ந்த ஆய்வு முறை” என்கிறார்.  இந்நூலினைக் குறித்த வாசகனின் பார்வை வருமாறு:-

பனையூர்:-

கிறிஸ்து பிறப்பிற்கு முன் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளில், தொல்காப்பியம், சங்க இலக்கியம் ஆகியவற்றில் ‘பனை’ பற்றிய குறிப்புகள் தமிழகத்தில் அதன் தொன்மையை சுட்டுவதாகும்.  “பாணிதம்” எனும் பதனீரின் பாகை கி.மு. முதல் நூற்றாண்டில் வாணிகப் பொருளாக விளங்கியதையும், “பாணித வாணிகன் நெடுமலன்” சமண முனிவர்கட்கு கற்படுக்கை அமைத்துக் கொடுத்த கல்வெட்டுச் செய்தியும் தமிழகத்தில் பனையின் தொன்மை குறித்து சான்று பகர்கிறது.

சோழர் காலத்தில் ஊரின் எல்லையில் தென்னையும், பனையும் வளர்க்க உரிமை அளித் துள்ளனர்.  நாடுகள், கூற்றங்கள் என்ற பிரிவில் “பனையூர் நாடு” எனக் குறிப்பிடப்பட்டிருந்ததை பேரா.ஓய்.சுப்பராயலு பதிப்பித்த கல்வெட்டு ஆதாரங்களிலிருந்து நமக்கு அளிக்கிறார்.

தொல்காப்பிய மரபியல் விளக்கத்தில் உரை யாசிரியரான “பேராசிரியர்,”

“பனையுந் தெங்கும் கமுகும் புல் எனப்படும்.

இலுப்பையும் புளியும் ஆச்சாவும்

முதலியன மரமெனப்படும்”

என்பதை சொல்லி “புல்” என்ற வகைப்பாட்டிற்குள் பனை மரத்தை அடக்கியுள்ளதை நூலாசிரியர் தெளிவுபடுத்துகிறார்.

தமிழ்ப் பல்கலைக்கழக மரப்பெயர் அகரவரிசை நூலில் 101 பெயர்களால் பனைமரம் அழைக்கப் பட்டு வருவதையும், ‘கள்’ எத்தனை பெயர்களில் தமிழ்ச் சமூகத்தில் குடிகொண்டு இருந்தது என் பதையும் இலக்கிய சான்றுகளின் மூலம் பதிவிடு கிறார்.

தொழில் வரி:-

இன்று “தொழில் வரி”யினை நிறுவனங்களும், ஊழியர்களும் செலுத்தி வருகின்றனர்.  கள் இறக்கு வதற்கும் பனை ஏறும் ஏணிக்கும் ஓலை எழுது வோருக்கும் மன்னர்கள் காலத்தில் வரி வசூலிக்கப் பட்டுள்ளது.  இடைக்கால தமிழ்க் கல்வெட்டு களில், ஈழற்கடிவரி, ஏணிக்காணம், ஓலை எழுத்து வத்தனை, ஓலைக்கூலம் என வரிகள் குறிப்பிடப் பட்டுள்ளன.

கட்டுமானங்களில் பனை:-

அளவுப் பெயராக பனை இருந்ததை தொல் காப்பியம், திருக்குறள் ஆகியன சுட்டுவதையும், “நீட்டல் அளவை” என 12 அடி, 16 அடி நீளங் களுக்கு அரசனால் தர நிர்ணயம் செய்யப்பட்டு “கோலின் அளவு” கோவில்களில் கல்லில் கோடாக வெட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்துள்ளதையும், திருவண்ணாமலை அருகில் திருப்பனங்காட்டு கோவிலில் கல்வெட்டின் இருமுனைகளிலும் இரு பனை மரங்கள் பொறிக்கப்பட்டு அவற்றில் இரு அம்புக்குறிகளின் இடையுள்ள நீளத்தினை நிலையான அளவாகக் குறித்ததையும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இன்று பிரிட்டிஷ் முறை, மெட்ரிக் முறை என அளவுகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது போன்று இடைக்கால அரசர்களால் இவை கடைப்பிடிக்கப் பட்டுள்ளன.  கட்டுமானங்களில் காய்ச்சிய பதனீர் சுண்ணாம்பு சாந்துடன் (lime mortar) சேர்த்துக் கட்டப்பட்ட அரண்கள் வலிமையாகத் திகழ்ந்ததை அறிய முடிகிறது.

காக்கை உட்கார:-

பனை மரத்தின் 12 வகையான உறுப்பும் மனித சமூகத்திற்கு எவ்வாறு பயன்படுகின்றன என பட்டியலிடப்பட்டு எண்ணற்ற ஒளிப்படங்களும், சே.பி. கதிரவவேலின் கோட்டோவியங்களும் நம்மை எளிதில் புரிந்துகொள்ள வைக்கின்றன.  ஆண் பனை, பெண் பனை, பனை வளர்ப்பு, கருவிகள், பதனீர் காய்ச்சுதல், கருப்பட்டி தயாரித்தல், பனை ஏறுதல், கள் - பதனீர் தொழில்நுட்பம், பனங்காய், பழம், கிழங்கு என நுட்பமாய் நூல் எங்கும் விவரங்கள் விரவி இருக்கின்றன.

பனை மடலில் இருந்து இன்று நாம் எழுதும் ‘மடல்’ எவ்வாறு தொழிற்பட்டது என்பதை இலக்கண, இலக்கிய நயத்துடன் சொல்லிச் செல்கிறார்.  “காக்கை உட்காரப் பனம் பழம் விழுந்தது” எதனால் என்பதையும் சொல்கிறார்.  பனம் பழத்திலிருந்து தயாரிக்கப்படும் “பனாட்டு” தொல்காப்பியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதையும், ஈழத்தமிழர்களின் விருப்ப உணவாக இருப்பதையும், முள்ளிவாய்க்கால் போர்க் காலங்களில் பனங்கிழங்கு மாவு மக்களின் பசி ஆற்றியதையும் குறிப்பிடுகின்றார்.

ஓலைச் சுவடிகள்:-

தென்னிந்திய வரலாறுகளில் குறிப்பாக தமிழக வரலாற்றை, இலக்கியத்தை, சமூகத்தை சுமந்த “ஓலைச்சுவடிகள்” பனை ஓலையில் எவ்வாறு எழுதப்பெற்றன, பேணப்பெற்றன, வரலாற்று ஆவணங்களான பழைய ஓலைகளை சடங்குகளில் எப்படி அழித்தனர் என விரிவாக ஆங்கிலேயே ஆவணங்கள், கால்டுவெல்லின் கூற்றுகள், சீகன் பால்குவின் கதைகள் என பனை ஓலைகளை அடுக்கி சுவடியாக நூலாசிரியர் தருகின்றார்.

ஓலையின் வகைகள் என ஆவண ஓலை (மூல ஓலை, படி ஓலை இவற்றைப் பாதுகாக்கும் இடம் “ஆவணக்களரி”) விலையாவண ஓலை, ஆள் ஓலை, குடவோலை, அடையோலை (அடமான ஓலை), முறியோலை, அறஓலை, முத்திரை ஓலை என நீண்ட நெடிய பட்டியலை விளக்கங்களுடன் நமக்கு அளிக்கிறார்.

மனிதர்களை அடிமையாக விற்கும் நடை முறை தமிழ்நாட்டில் இருந்ததை “ஆள் ஓலை”, “அடிமை ஓலை” என்றும், நிலம், வீடு போல மனிதர்களும் ஒத்தி வைக்கப்பட்டதை “பண்ணை யாள் ஒத்திச்சீட்டு” - என ஓலைச்சுவடிகள் கூறும் சமூக அவலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சடங்குகளில் பனை ஓலை:-

பனை ஓலைப் பெட்டிகள் தமிழர் வாழ்வில் எவ்வாறெல்லாம் பயன்பட்டன என பட்டியலிடு கிறார்.  பனை மர உச்சியில் நகை, பணம் என சேமிப்புகளை ஒளித்து வைத்த கதையிலிருந்து இன்று நம் சொல்லாட்சியில் உள்ள “பட்டை சாதம்” பனைப்பட்டையிலிருந்து வந்த கதையினை சமூகப் பார்வையுடன் கூறிச் செல்கிறார்.  அலுவலகத்தில் தவறு செய்தவர்கட்கு இன்று வழங்கும் குறிப்பாணையை (Memo) ‘ஓலை’ கொடுத்திட்டான் என விளிப்

பதும், மண ஓலை, மரணச் செய்தி ஓலை என்ற தொடர்ச்சியில் ‘காலையிலேயே ஓலை கொண்டு வந்திட்டான்” என வருத்தச் செய்தியை சொல் வதும் கிறிஸ்துவர்களின் மதச் சடங்குகளில் ‘ஓலை வாசித்தல்’ குறுத்தோலைத் திருநாள், இந்து மதச் சடங்குகளில் ‘சொக்கப்பனை’ கொளுத்துதல் அதன் சாம்பலை பயன்படுத்துதல், கிறிஸ்தவர்கள் ‘திருநீற்றுப் புதன்’ அன்று குறுத்தோலை சாம்பலை பூசுதல் என சமயம் சார்ந்த பனை ஓலையின் விளைவுகள் பதிவுற்றுள்ளன.

பதனீர் இரயில்:-

பதனீர் பாகு சர்க்கரை ஆலை குலசேகரன் பட்டினத்தில் ஆங்கிலேயர் காலத்தில் அமைந்திருந்த தையும், நெல்லிக்குப்பத்தில் அமைக்கப்பட்ட ‘இ.ஐ.டி. பாரி கம்பெனி’ சர்க்கரை ஆலைக்கு (சில நூறு கிலோமீட்டர் பயணப்பட்டு) குலசேகரன் பட்டினத்தில் பதனீர் பாகு வந்ததையும், திசையன் விளையிலிருந்து பதனீர் பாகை ரயிலில் கொண்டு வந்ததையும் சுவைபடப் பதிவிடுகிறார்.

உயர்வும், இழிவும்:-

பனை சார்ந்த தொழிலில் ஈடுபட்டவர்கள் தாங்கள் அளித்த வரியின் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், சமூக வளர்ச்சிக்கும் பங்காற்றி குடிகளுக்கான உணவு ஆதாரமாக விளங்கியுள்ளனர்.  கல்வெட்டுகளிலும், செப்பேடு களிலும் உயர்வாகக் கருதப் பெற்ற பனைமரத் தொழில் புராணக் கதைகளின் ஊடாக சாதி அடையாளமாக்கப்பட்டதை விளக்குகின்ற அதே நேரத்தில் நன்செய், புன்செய் வேளாண்மையாளர் களாக, வர்ம, சித்த வைத்தியம், களரி, சிலம்ப ஆசான்கள், வணிகர்கள் எனப் பல்வேறு தொழில் களில் ஈடுபட்டவர்களை பனைத்தொழில் சார்ந்த சாதியினராகக் குறுக்கிய பிற்கால அணுகுமுறை குறித்து விரிவாக சொல்லியுள்ளார்.  வெவ்வேறு சாதியினரும் பனைத் தொழிலில் ஈடுபட்டுள்ள தையும் சுட்டியுள்ளார்.

பதனீரும், கள்ளும் மெல்ல மெல்ல சிலரால் தீண்டத்தகாத பொருளாக ஆனதை “பரிபாடலும், சிலப்பதிகாரமும் அந்தப் பட்டியலில் தேனையும் சேர்ந்ததை” சொல்லி சைவ, வைணவக் கோயில் களில் படைக்கும் பொருளாக இருந்த ‘கருப்பட்டி’ சமண மதத் தாக்கத்தில் கோயில்களிலிருந்து விலக்கப் பட்டதையும், ‘பனை ஏறி’ என்று இழிவுக்கு ஆளாக்கப்பட்டதையும், இந்திய நாட்டின் முதல் கிறித்துவ பேராயராக நியமிக்கப்பட்ட அசரியா என்பவர் பனைத் தொழிலை பூர்வீகமாகக் கொண்ட தால் அவமானப்படுத்தப்பட்டதையும், 1973 ஆம் ஆண்டில் ‘ஆராய்ச்சி’ இதழில் கட்டுரை எழுதிய ஒருவரை கேலி செய்ய, “ஒன்றும் தெரியாதவர்கள் பாளையங்கோட்டைப் பனை மரங்களில் நொங்கு எடுக்கப் போகலாம்” என இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன் இழிவுபடுத்தியதையும் பட்டியலிட்டு பனைத்தொழிலை இழிவுபடுத்திய வரலாற்றை சான்றுகளுடன் நிறுவுகிறார்.

ஆய்வும், எல்லையும்:-

ஏறத்தாழ 20 ஆண்டுகள் உழைப்பில் இந்த ஆய்வு நூல் உருவாக்கப்பட்டுள்ளது.  காலச்சுவடு பதிப்பகம் நேரிய முறையில் பதிப்பித்து அளித் துள்ளது.  தான் மேற்கொண்ட ஆய்வு நெறியை சொல்லி எந்தெந்தப் பகுதியில் விடுபட்டன, இனி பார்க்க வேண்டிய செய்திகள் என நூலாசிரியர் பட்டியலிடுகிறார்.  பொருள் சார் பண்பாடு பற்றிய வருங்கால நூல்களுக்கு வழிகாட்டியாக இந்நூல் அமைகிறது.

பாவலர் பாலசுந்தரம் அவர்கள் தனது வழக்குச் சொல் விளக்க அகராதியில் ‘மகிழ்’, ‘மகிழ்ச்சி’ என்பன கள்ளுக்குரிய பெயர்களில் ஒன்று என குறிப்பிட்டு மக்+இழுது+மகிழ்து என உருப்பெற்று மகிழ் என ஆக்கம் பெற்றது என்கிறார்.  2002ஆம் ஆண்டில் தொடங்கப் பெற்ற ‘உலகத் தமிழ்ப் பேரவை’ தமிழர்கள் இடம் பெயர்ந்த இடங்களி லெல்லாம் பனையும் சேர்ந்து பயணித்தது என்கிற வகையில் தனது இலட்சனையாக பனை மரத்தை அறிவித்துள்ளது.  2008, 2009 காலங்களில் பனை மரக்காடே, பனை மரக்காடே என்று ஒலித்த பாடல் ஒலி நெருடுகிறது.  ஈழப் போராட்டம் சார்ந்த கலைப் படைப்புகளில் பனை மரம் ஒரு குறியீடாக மாறியுள்ளது.

பனை மரமே! பனை மரமே! நூல் தமிழ்ச் சமூக வரலாற்று தொடர்ச்சிக்கு உந்து சக்தியாக அமைந்துள்ளது.

பனைமரமே! பனைமரமே!

பனையும் தமிழ்ச் சமூகமும்

ஆசிரியர்: ஆ.சிவசுப்பிரமணியன்

வெளியீடு : காலச்சுவடு

நாகர்கோவில்

விலை: ` 425/-

Pin It