பசீர் சேகுதாவூத் அவர்களின் “சோர்விலாச் சொல்” நூலை முன்வைத்து...

இலங்கை முஸ்லீம் காங்கிரசின் தலைவர்களில் ஒருவரான திரு. பஷீர் சேகுதாவூத் அவர்களின் பாராளுமன்ற உரைகள் “சோர்விலாச் சொல்” என்ற தலைப்பில் நூல் வடிவம் பெற்றுள்ளன. 1991-2011 ஆம் ஆண்டுகளில் அவர் ஆற்றிய பாராளுமன்ற உரைகள் இந்நூலில் பதிப்பிக்கப்பட்டுள்ளன. 36 உரைகள் சிறிய திருத்தங்களுடன் நூலில் கட்டுரைகளாக இடம் பெற்றுள்ளன. இலங்கையில் வாழும் சிங்களவர், தமிழர், முஸ்லீம்கள் என்ற மூவகை இனமக்களின் சமூக அரசியல் வாழ்வின் மிகச்சிக்கலான ஒரு வரலாற்றுக் கட்டத்தில், திரு பஷீர் சேகுதாவூது அவர்கள் ஆற்றிய உரைகள் இந்நூலில் பதிவாகியுள்ளன. “அடையாளம்” பதிப்பகத்தின் துணை அமைப்பான “விளிம்பு” வெளி யீட்டகம் இந்நூலைச் சிறப்புற வடிவமைத்துள்ளது.

basheer bookஇரண்டு நோக்குகளிலிருந்து இந்நூலின் கட்டுரை களை நான் வாசித்து அறிய முற்படுகிறேன். முதலாவதாக, எண்பதுகளில் ஈழப் புரட்சி அமைப்பு (ஈரோஸ்) ஒன்றின் முன்னணித் தோழராக பொது வாழ்வில் ஈடுபட்ட திரு பஷீர் சேகுதாவூது அவர்கள் பின்னாட்களில் சிரிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவராக அரசியல் பரிணாமம் பெற்ற வரலாறு இக்கட்டுரைகளில் பதிவாகியுள்ளது. எனவே பஷீர் சேகுதாவூது என்ற மனிதரின் அரசியல் பரிணாமம், அத்தோடு இணைந்து இலங்கையில் முஸ்லீம்களின் இனத்துவ அரசியல் என்ற நோக்கிலிருந்து இந்நூலின் கட்டுரைகளை அணுகவேண்டியுள்ளது.

இரண்டாவதாக, இலங்கையில் கடந்த 20-30 ஆண்டுக்கால இனத்துவ அரசியலின் பல்வேறு சிக்கல் களை ஆவணப்படுத்தும் நூலாகவும் அப்பிரச்சினை களை குறிப்பிட்ட ஒரு கோணத்திலிருந்து விவாதிக்கும் ஒரு நூலாகவும் இந்நூலை நாம் அணுக வேண்டியுள்ளது. திரு பஷீர் சேகுதாவூது அவர்களைக் கடந்து சென்று, இனத்துவ அரசியலின் சிக்கல்களைக் கோட்பாட்டு ரீதியாகவும் நடைமுறைத் தீர்வுகளை நோக்கியும் பேசிப்பார்த்துக் கொள்வதற்கான ஒரு சந்தர்ப்பமாக இந்நூலை நாம் பயன்படுத்திக் கொள்ள விழைகிறோம். இந்த இரண்டு கோணங்களும் இந்நூலில் பின்னிப் பிணைந்து அமைந்துள்ளன. நூலின் ஆசிரியர் பஷீர் சேகு தாவூது தனது நூலின் முன்னுரையிலும் கட்டுரைகளிலும் இவ்விரண்டு பரிமாணங்களையும் எப்போதும் இணைத்தே பேசியுள்ளார். இவற்றை ஒவ்வொன்றாக விரித்துப் பார்ப்போம்.

முதலாவதாக, ஆசிரியரின் சொந்த அரசியல் நகர்வுகள். 2009ல் ஈழப் போர் ஒரு கோரமான முடிவுக்கு வந்துவிட்டது. 2014ல் இந்த நூலை ஆசிரியர் ஏன் பதிப்பித்திருக்கிறார்? என்ற கேள்வி முதலில் நமக்கு எழுகிறது. யுத்தம் முடிந்த பிறகு, இந்த நூலில் அடங்கி யுள்ள முந்திய காலத்துக்குச் சொந்தமான உரைகளை ஏன் தொகுக்க வேண்டும்? அவர் தனது முன்னுரையில் சொல்லுகிறார், “பதின்ம வயதுகளிலேயே பற்றிக் கொண்ட அடிப்படைக் கொள்கைகளில் பாரிய மாற்றங்கள் இன்றி, ஈழப் புரட்சி அமைப்பு கற்றுத்தந்த மாறுபடும் அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏற்ப, சிறிது சமரசங்களுடனும், விட்டுக் கொடுப்புகளுடனும், சகிப்புத்தன்மையுடனும் இத்தனை ஆண்டுகள் பாராளுமன்ற அரசியல் பாதையில் என்னால் பயணிக்க முடிந்திருக்கிறது” (XV). பதின்ம வயதுகளில் அவர் பற்றிக் கொண்ட, ஈழப் புரட்சி அமைப்பு கற்றுக் கொடுத்த அடிப்படைக் கொள்கைகளில் பாரிய மாற்றங்கள் அவரில் ஏற்பட்டுள்ளனவா? என்ற ஒரு பகிரங்க மறுபரிசீலனை அவருக்கு இப்போது தேவைப் பட்டிருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது. “சிங்களம், தமிழ், முஸ்லிம் ஆகிய மூன்று இனங்களின் மத்தியிலும் முரண்பாடுகளும் பரஸ்பர ஐயங்களும் அச்சமும் மலிந்திருந்த காலத்தில், இயன்ற அளவு நடுவுநிலையில் நின்று” (XIII) செயல்பட்டிருக்கிறேன் என்று அவர் கூறுகிறார். “முஸ்லிம் மக்களின் இன்னல் களை ஒரு சிறுபான்மை இனமான தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தாத வகையில் தேசிய அரங்குக்குச் சொல்ல முயன்றிருக்கிறேன்” (xiii-xiv) என்கிறார். கடந்த இருபது-முப்பது வருடங்களில் தனது செயல்பாடுகளை ஒரு மீள்பார்வைக்கு உட்படுத்த வேண்டும் என்ற ஓர் உந்துதல் அவரில் தொழில்பட்டிருக்கிறது. ஆசிரியரிடம் தென்படும் இந்த நியாய உணர்வை எவரும் அலட்சியப் படுத்த முடியாது என்றே நான் கருதுகிறேன். இன்னொரு புறம், யுத்தம் முடிந்தபிறகும் பிரச்சினைகள் முடியாத சூழலில், அடுத்துவரும் அரசியல் நகர்வுகளை நோக்கிய ஒரு தயாரிப்பாகவும் இந்நூலைக் கொள்ளவேண்டி யுள்ளது.

விடுதலைப் புலிகள் பற்றிய பஷீர் அவர்களின் மதிப்பீடு அவரது அரசியல் நகர்வுகளுக்கு முக்கியக் காரணமாக இருந்தது என்பதை நம்மால் யூகிக்க முடிகிறது. அந்த மதிப்பீடுகளை அவரது உரைகளில் காணமுடிகிறது. புலிகள் ஆயுத வன்முறையை சுயாதீனமான சக்தியாக நம்பத்தொடங்கி அதன் விளைவாக மக்களுடன் கொண்ட உறவுகளைத் தவற விட்டனர் என்ற குற்றச்சாட்டு பரவலாகச் சொல்லப் படுகிறது. பஷீர் அவர்களும் சொல்லுகிறார், “வடக்கு கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரையில், அந்தப் பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களுடைய பொருளா தாரத்தை மட்டுமல்ல, அவர்களுடைய அரசியல், சமூக, பொருளாதார, சமய, கலை, பண்பாட்டுக் காரணிகளைக் கூடத் தீர்மானிக்கிற சக்தியாக ஆயுத வன்முறையே மிக அண்மைக்காலங்களிலிருந்து தொடர்ந்து வருகின்றது.” (9). பஷீர் அவர்களின் இந்த உரை 1991 ல் நிகழ்த்தப் பெற்றது. அது இனப் பிரச்சினைக்கான விடுதலைப் புலிகளின் அணுகுமுறையையும் அரசின் அணுகுமுறை யையும் ராணுவ அணுகுமுறை என தனித்து நோக்கு கிறது. இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக மக்களி டையில் இனப் பிரச்சினைக்கான தீர்வு அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைகளின் மூலமாக இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறது.

ஆயுதம் தாங்கிய இயக்கங்கள் மக்களோடு கொண்டிருந்த உறவைத் தவற விடும் போது ஏற்படும் விளைவுகளை இலங்கை நிகழ்வுகள் எடுத்துக்காட்டு கின்றன. மக்களுடன் கொண்டிருந்த உறவுகள் பலவீன மடையும் போது, இயக்கத்தின் உயர்நிலை முடிவுகள் மக்களைக் கலந்து ஆலோசிக்காமல் பெரும்பாலும் ராணுவக் குழுவினரால் மட்டுமே எடுக்கப்படுகின்றன. உள்முரண்பாடுகளை ஆயுதங்களைக் கொண்டே கையாளும் மனோபாவம் தோன்றுகிறது. சொந்த மக்களின்மீதே கூட ஆயுதங்கள் பிரயோகிக்கப் படுகின்றன. நடக்கின்ற சம்பவங்கள் குறித்த அரசியல் பொறுப்புணர்ச்சி ராணுவத் தலைமையிடம் இல்லாமல் போய்விடுகிறது. ஆயுதங்களுக்காகத் தேவைப்படும் நிதி ஆதாரங்கள் ரகசிய முறைகளில், பல வேளைகளில் தவறான வழிமுறைகளில், திரட்டப்படுகின்றன. தொடர்ந்த ஆயுத வன்முறையின் ஒரு விளைவாக இயக்கத்தின், அதன் தலைவர்களின் சுய அழிவு குறித்த உணர்வு உருவாகிவிடுகிறது.

1991 ல் பஷீர் அவர்கள் நிகழ்த்திய ஓர் உரையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்து அவர் குறிப்பிடும் சில கருத்துக்கள் கவனத்துக்கு உரியவையாக ஆகின்றன. “மிக முக்கியமாக, அத்தீர்வின் (இனப்பிரச்சினைக்கான தீர்வின்) அச்சாணியாகத் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனே இருக்கிறார். அவருடைய விருப்பங்கள், அவருடைய எதிர்காலம் என்பவற்றைப் பொறுத்தே இந்தப் பிரச்சினையின் தீர்வு அமையப்பெற முடியும். இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட்டதன் பின்னர் வெளியில் வந்து சுதந்திரமாக நடமாடித் தன்னுடைய சாதாரண அல்லது பொதுவாழ்க்கையை நடத்த முடியுமென்று அவர் கருதுவதற்கு இடமில்லையென்பது உங்களுக்குத் தெரியும். ஏனென்றால், அவர் ஏற்கனவே அதிகமான நபர்களுக்கு எதிராளியாகக் காணப்படுகிறார். அவர் கடந்த காலங்களில் செய்த பிழைகள், நடந்து கொண்ட சில முறைகள் அவருக்கு உலகிலேயே பல எதிரிகளைத் தோற்றுவித்திருக்கின்றன.” (26).

தொண்ணூறுகளிலும் அவற்றைத் தொடர்ந்து வந்த காலத்திலும் மதிப்பிற்குரிய பஷீர் அவர்கள் அழுத்தமாகப் பேசி வந்துள்ள ஒரு விடயம், இலங் கையின் இன மோதல்களின் சூழல்களில் முஸ்லீம் களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்பது குறித்தது. இந்த நூலில் பெரும்பான்மையான இடத்தைப் பெற்றுள்ள பிரச்சினை அதுவே என்று கூறலாம். வடக்கிலும் கிழக்கிலும் முஸ்லீம்கள் தமது பாதுகாப்பினை இழந்து இருபுறத்திலிருந்தும் தாக்கப்படும் நிலை ஏற்பட்ட சூழல்களை திரு பஷீர் அவர்கள் படிப்படியாக விளக்கிச் செல்கிறார். முஸ்லீம்களை உளவாளிகள் என சந்தேகப் பட்டது, முஸ்லீம்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளி யேற்றப்பட்ட சம்பவம், அவர்கள் அகதிகளாக அலைந்து திரியும் சூழல்களிலும் தாக்கப்பட்ட (மூதூர்) நிகழ்ச்சி, அவர்களது காணிகள் பறிக்கப்பட்டமை, தொடர்ந்து இப்போதும் நிலங்கள் பறிக்கப்படுவது என பலவகையான தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படுவதை பஷீர் அவர்கள் விரிவாகப் பேசியுள்ளார். அவர்கள் முஸ்லீம்கள் என்பதற்காகவே அடையாளம் காணப்பட்டு துன்புறுத்தப்படுவதை பஷீர் அவர்கள் எடுத்துக் காட்டுகிறார் (111). இனத்துவ அடிப்படையில் அவர்கள் தமது தனித்த உரிமைகள் பற்றிப் பேச வேண்டிய அவசியம் ஏற்பட்ட சூழல்களை விளக்கு கிறார். எனவே எல்லாவகையான தீர்வு முயற்சிகளிலும் முஸ்லீம்களை மூன்றாவது தரப்பாக, மூன்றாவது அலகாக இணைத்துக் கொள்ளவேண்டும் என்பதை பஷீர் அவர்கள் வலியுறுத்துகிறார் (69). சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இணையான சரியாசனம் முஸ்லீம் களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்து கிறார் (145). தமிழர்களோடு உள்ள உறவுகளை நினைவு கூர்ந்து அவர் பேசும் போது, உங்களோடு இணைந்து நின்று போராடும் உரிமையை எமக்கு மறுத்து விட்டீர்களே! என அங்கலாய்ப்புடன் வினவுகிறார் (115). இருப்பினும், தமிழ் மக்களின் அரசியல் விருப்பங்களுக்கும் உரிமைகளுக்குமான போராட்டங் களுக்கு முஸ்லீம் தேசியவாதக் கருத்துக்கள் எவ்விதத்திலும் இடையூறாக இருக்காது எனத் தெளிவுபடுத்துகிறார் (58).

நூலின் இறுதிப்பகுதியில் 2009 க்குப் பிறகான மூன்று உரைகள் காணப்படுகின்றன. திரு பஷீர் அவர்களின் சமகால நிலைப்பாடுகளைப் புரிந்து கொள்ள இம்மூன்று உரைகளும் முக்கியமானவையாகப் படுகின்றன. இந்த உரைகளில், உண்மையிலேயே யுத்தம் முடிந்துவிட்டதா? என்று ஒரு கேள்வியை மதிப்பிற்குரிய பஷீர் அவர்கள் முன்வைக்கிறார் (186). இன்னொருபுறம், போருக்குப் பிறகு மேற்குலகு, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் இலங்கையின் மீது பொருளாதாரப் படை யெடுப்புகளைத் துவக்கியுள்ளதைச் சுட்டிக்காட்டி எச்சரிக்கிறார் (188). இலங்கையின் சிறுபான்மையினரின் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ள நிலையில் சிறுபான்மை இனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய அரசியல் வேலைத்திட்டங்கள் பற்றிய சில கருத்துக்களையும் இவ்வுரைகளில் முன்வைக்கிறார் (187). அடுத்துவரும் நாட்களில் தமிழர்களும் முஸ்லீம்களும் இணைந்தே தீர்வைத் தயாரிக்க வேண்டும், இணைந்தே தீர்வைப் பங்கிட்டுக் கொள்ளவேண்டும் என முன்மொழி கிறார் (208).

இலங்கையில் இனத்துவ அரசியலின் சிக்கல்கள்

இலங்கையில் கடந்த 20-30 ஆண்டுகளில் இனத்துவ அரசியலின் சிக்கல்கள் பற்றிப் பேசுவதற்கு திரு பஷீர் அவர்கள் இந்நூலில் ஏராளமாக இடமளிக் கிறார். அவை குறித்து இனி பேசுவோம்.

ஒவ்வொரு முறை நாட்டில் அவசர நிலைப் பிரகடனம் நீட்டிக்கப்படுவதற்கான (புதுப்பிக்கப்படு வதற்கான) தீர்மானம் முன்மொழியப்படும் போதும் திரு பஷீர் அவர்கள், இந்தப் போர் ஏன் நீடிக்கிறது? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு இரண்டு தரப்பினருக்குமே விருப்பம் இல்லை என்ற கருத்தை அவர் சொல்லுகிறார். போருக்கான தயாரிப்புகளைச் செய்வதற்காகவே இரு தரப்பும் பேச்சுவார்த்தை என்ற உத்தியைப் பயன்படுத்தி வந்துள்ளனர் என அவர் சுட்டிக்காட்டுகிறார். ராணுவங்களுக்கிடையில் நிகழ்ந்து வரும் போருக்கு வெளியே சிறுபான்மை மக்களின் அடிப்படை உரிமைகள் குறித்த பிரச்சினைகள் விவாதிக்கப்படாமல் கிடக்கின்றன என்பதை எடுத்துக்காட்டுகிறார்.

இலங்கையில் இனங்களுக்கிடையிலான இந்த யுத்தங்கள் உண்மையிலேயே மிக அசாதாரணமானவை. இத்தனை நீளமான ஓரு யுத்தத்தை ஒரு சிறுபான்மை மக்களால் நடத்த முடியுமா? என்பது ஆச்சரியத்திற்குரிய கேள்வியாக நீண்ட நாட்களுக்கு மிஞ்சும் என்றே நான் நினைக்கிறேன். இந்த யுத்தங்களையும் ஒட்டுமொத்த எதிர்ப்புச் செயல்பாடுகளையும் வெறுமனே புலிகள் நடத்திய போராட்டம் என்று கொள்ளாமல் அரசுக்கு எதிரான ஒரு மக்கள் போராட்டம் என்று கொள் வதானால், இப்போராட்டத்தின் பலவகையான அனுபவங்களைப் பற்றி நீண்ட நாட்களுக்கு நாம் தகவல் சேகரிக்கவும் ஆவணப்படுத்தவும் ஆய்வு செய்யவும் வேண்டிவரும். ஒரு சீக்கியர் என்னிடம் சில ஆண்டு களுக்கு முன்னரே கேட்டார்: தமிழர்களுக்கு அவர்களது வரலாற்றில் போர் மரபு (Militant Tradition) என எதுவும் இருக்கிறதா? என்று என்னால் அந்தக் கேள்விக்கு அப்போது முறையாகப் பதில் கூற முடியவில்லை. ஆனால், இனி வரும் காலங்களில், தமிழர்கள் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுதமேந்திய போராட்டம் ஒன்றை நடத்தினார்கள் என்று நாம் பேச வேண்டி வரலாம். மீண்டும் சொல்கிறேன், இங்கு நான் எந்த ஒரு ஆயுதம் தாங்கிய இயக்கத்தையும் சிலாகித்துப்

பேச வரவில்லை. எந்த ஒரு மக்கள் கூட்டமானாலும், அதனை வர்க்கம், இனம், தேசியம், மதம், அடையாளம் என்று எப்படி எடுத்துக் கொண்டாலும், அதற்குப் போராட்ட அனுபவம் என்பது மிக முக்கியமானது. மக்கள் கூட்டங்களை எதிர்ப்புணர்வு அற்றவர்களாக மழுங்கடிப்பது ஆளும் வர்க்கங்களின் திட்டமிட்ட போர்த்தந்திரமாகும். போராட்ட உணர்வற்ற மக்கள் கூட்டம் நமது காலத்தில் அழித்தொழிக்கப்பட்டு இல்லாமல் ஆக்கப்பட்டுவிடும். ஈழத் தமிழர்களுடைய போராட்டங்களைப் பற்றிக் கூறுவதானால் அம்மக்கள் ஆயுதப் போராளிகளாக மட்டும் இல்லாமல், நிர்வாகம், நிதி திரட்டல், சர்வதேசத் தொடர்புகள், விவசாயம், தொழில்துறை, கல்வி, அகதிகள் பாதுகாப்பு சார்ந்த செயல்பாடுகள் எனப் பலவகையான அனுபவம் கொண்டவர்களாக குறிப்பிட்ட இக்காலத்தில் பரிணமித்திருக்கிறார்கள் என்பதைச் சொல்லியாக வேண்டும். இந்த அனுபவங்களில் ராணுவ மற்றும் அரசியல் தவறுகளும் அடங்குமாக இருக்கலாம். இருப்பினும் தெற்காசியாவில், காஷ்மீர், பஞ்சாப் ஆகிய பகுதிகளில் நிகழ்ந்த எதிர்ப்பியக்கங்கள், நக்சல்பாரி மாவோயிச இயக்கங்கள் ஆகியவற்றோடு ஒப்பிட்டு நோக்குவதற்கான மிகப்பெரிய அரசு எதிர்ப்பு அனுபவம் கொண்ட இயக்கமாக இது அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திரு பஷீர் அவர்கள் தனது உரையன்றில் (2011) சொல்லுகிறார்: 2009ல் “உண்மையிலேயே முடிவுக்கு வந்திருப்பது பிணக்கு அல்ல, பிணக்கின் விளைபொருளான யுத்தம் மட்டுமேயாகும். பிணக்கு தோன்றுவதற்கு மூலகாரணமாக இருந்த இனப்பிரச்சினை தீர்த்து வைக்கப்படாமல், பிணக்கு முடிவுக்கு வந்து விட்டதாகச் சொல்லுவது கணக்குப் பிழைத்த கதைதான்!” என்கிறார். மேலும் சொல்லுகிறார்: “யுத்தம் என்பது வேறு; பிணக்கு என்பது வேறு. யுத்த வரலாறு எல்.ரீ.ரீ.ஈ இலிருந்து தொடங்குகின்றது. ஆனால் பிணக்கின் வரலாறு இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்து தொடங்குகிறது என்பதை அறிதல் வேண்டும். இனப்பிரச்சினை வரலாற்றைப் பரந்துபட்ட அர்த்தத்திலும் விஞ்ஞானபூர்வ மாகவும் புரிந்துகொள்ளாமல் தீர்வு வழங்க முடியாது” (187) என்கிறார்.

இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்து இனப்பிரச்சினை தொடங்குகிறது என்று திரு பஷீர் அவர்கள் கூறுவதை நாம் மனவருத்தத்தோடு புரிந்து கொள்ள வேண்டியவர் களாக இருக்கிறோம். 1948 ல் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டதை திரு பஷீர் அவர்கள் இலங்கையில் இனப் பிரச்சினையின் முதல் அசைவாகக் குறிப்பிடுகிறார். ஒரு நாடு பிறிதொரு நாட்டின் காலனியாக நீண்ட காலமாக இருந்து, நீண்ட நெடிய போராட்டங்கள் நடத்தி தன்னைத்தானே ஆளுவதற் கான சுதந்திரம் பெறுவது என்பது ஒரு மிகப்பெரிய சனநாயக நிகழ்வாகும். ஆயின் அப்படி சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து, ஆட்சியுரிமையைப் பெற்ற கட்சி குறிப்பிட்ட ஒரு மக்கள் கூட்டத்தின் அடிப்படை உரிமைகளை பறிக்கத் தொடங்குகிறது என்பது ஒரு மிகப்பெரிய சனநாயக விரோதச் செயல்பாடாகும். சுதந்திரம் என்பதை நாம் எவ்வளவு குறுகலான ஒன்றாக, சனநாயக விரோதமான ஒன்றாக புரிந்து கொண்டிருக் கிறோம் என்பதையே இந்த நாட்டின் சுதந்திர வரலாறு சுட்டிக்காட்டுகிறது. (இந்தியாவில் காஷ்மீர் பிரச்சினையும் இப்படித்தான் தொடர்கிறது.) சனநாயகம், சுதந்திரம் போன்ற நடைமுறைகள் பற்றிய அரிச்சுவடியையே அறியாதவர்களாக, ஆதிக்க அரசியல் நடத்துபவர்களாக நாம் அமைந்து போயிருக்கிறோம் என்பதனையே இந்த நாடுகளின் சுதந்திர வரலாறு எடுத்துக்காட்டுகிறது.

இன்னொரு கோணத்திலிருந்தும் இனப்பிரச் சினையின் வேர்களை அடையாளப்படுத்த வேண்டி யுள்ளது. இலங்கையில் காலனி ஆட்சிக்காலத்திலேயே இனப்பிரச்சினைக்கான ஆதாரங்கள் தோன்றிவிட்டன என்று ஒரு வாதம் சொல்லப்படுகிறது. காலனி ஆட்சிக் காலத்தில் சிறுபான்மையினர், குறிப்பாகத் தமிழர்கள் பல ஆதாயங்களை ஈட்டினார்கள். இந்தியாவில் பிராமணர்கள் போல, இலங்கையில் யாழ்ப்பாண மேட்டுக்குடிகள் காலனி ஆட்சியின் முகமாக, கரங்களாகச் செயல்பட்டார்கள், எனவேதான் சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து தமிழர்களுக்கு எதிராக இனத்துவ அரசியல் கையாளப்பட்டது என்று ஒரு வாதம் சொல்லப்படுகிறது. 1956 ல் இயற்றப்பட்ட “சிங்களம் மட்டுமே” என்ற சட்டமும் கூட ஆங்கில மொழியின் (ஆங்கிலம் அறிந்த மேட்டுக்குடிகளின்) செல்வாக்கைக் கட்டுப்படுத்துவதற்கான முனைப்பே என அந்த வாதம் வளர்க்கப்படுகிறது. அது ஒரு காலனிய நீக்கச் செயல்பாடு என்று விளக்கப்படுகிறது.

மூன்றாம் உலக நாடுகளில் காலனிய நீக்கம் தேவை. இன்றைய உலகமயமாக்கச் சூழல்களில் இந்நாடுகளில் காலனிய நீக்கச் செயல்பாடுகள் இன்னும் அதிகமாகத் தேவைப்படுகின்றன. ஆயின் இலங்கையில் காலனிய நீக்கத்தில் தமிழர்களை, பிற சிறுபான்மையினரை ஏன் இணைத்துக் கொண்டு செல்ல முடியவில்லை? தமிழர்கள் திருத்தமுடியாத அளவுக்கு மேற்கத்திய ஆதரவாளர்களா? காலனிய ஆதரவாளர்களா? காலனிய நீக்கத்தை ஆதரிக்காதவர்களா? இந்தப் பிரச்சினை வெளிப்படையாகப் பேசப்படவேண்டும். இப்போதும் கூட அந்தப் பிரச்சினையைப் பேசாமல் நாம் முன்செல்ல முடியாது. தமிழர்கள் இல்லாமல், முஸ்லீம்கள் இல்லாமல் சிங்களவர்களால் தனித்து இலங்கையில் காலனிய நீக்கம் சாத்தியமா? அந்த மக்கள் பகுதியினரை அழித்தொழித்து விட்டு காலனிய நீக்கத்திற்குச் செல்லுவது சாத்தியமா?

சரி, ஆட்சியாளர்கள் ஓர் இனத்தின் அடிப்படை உரிமைகளைப் பிடுங்கினார்கள். பாதிக்கப்பட்ட அந்த மக்கள் போராடத் துவங்கினார்கள். தமது உரிமை களுக்காக அந்த மக்கள் அணிதிரண்டு போராடத் துவங்கினார்கள் என்பது ஒரு மிகப் பெரிய சனநாயகச் செயல்பாடுதான். ஆனால் அந்தச் சிறுபான்மைச் சமூகமும் தன்னுடனேயே பயணம் செய்து கொண்டிருந்த மற்றொரு சிறுபான்மையினரின் உரிமைகளைப் பறித்து ஆயுத முனையில் அவர்களைத் தம் சொந்த மண்ணி லிருந்து வெளியேற்றுகின்றது. தனது உரிமைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராடிக் கொண்டிருக்கும் ஒரு கூட்டத்தின் அரசியல் தலைமையே இன்னொரு சிறு பான்மையின் மீது ஆதிக்க அரசியலைச் செலுத்தினால், இந்தக் கொடுமையை என்னென்று சொல்லுவது? திரு பஷீர் அவர்கள் சொல்லுகிறார்: “சிறுபான்மை மக்கள் இதுவரை உரிமைகளைப் பெற முடியாமலிருப்பதற்கான காரணிகளில் சிறுபான்மையினரின் அரசியல் சக்திகளின் தவறுகளும் ஒன்றாகும். இரு சிறுபான்மை தரப்பு களிலும் ஆதிக்க மனோபாவம் அகன்று இரு தரப்பும் இணைந்து ஒரே தீர்வுத் திட்டத்தை முன்வைக்க வேண்டும்” என்று அவர் முன்மொழிகிறார் (187).

தன்னோடு பயணம் செய்யும் சக சிறுபான்மை யினரின் உரிமைகளை நாம் மதிக்கத் தவறுகிறோம் என்ற விடயம் ஒரு சாதாரண விடயம் அல்ல. அது மனித உரிமை குறித்த உங்களது சனநாயக நிலைப்பாட்டைப் பரிசோதித்து அறிந்து கொள்வதற்கான ஓர் அடிப் படையான அளவுகோலாகும். சிங்கள அரசு தமிழர் களின் உரிமைகளை அங்கீகரிப்பதில்லை. யாழ்ப்பாணத் தமிழர்கள், மட்டக்களப்புத் தமிழர்களின் தனித்துவங் களை ஏற்றுக் கொள்வதில்லை. இருவருமே மலையகத் தமிழர்களைத் தமிழர்களாகவே கொள்வதில்லை. தமிழ் இயக்கத்தின் ஒரு தலைமை முஸ்லீம்களின் உரிமைகளை அங்கீகரிப்பதில்லை... இப்படியே செல்லுவதானால் இதுபோன்ற இயக்கங்களை எப்படி விடுதலை இயக்கங்கள் என்று சொல்ல முடியும்? ஒடுக்கும் அமைப்புக்கும் போராடும் அமைப்புக்கும் இடையில் எந்தவிதமான வேறுபாடும் இல்லாமல் போய்விடு வதைக் காண்கிறோம். போராடும் ஓர் இயக்கம் உண்மையிலேயே விடுதலைக்குப் போராடுகிறதா? அல்லது அது தனது சொந்த அரசியல் ஆதிக்கத்திற் காகப் போராடுகிறதா? என்ற கேள்வி இங்கு மிகத் தீர்க்கமாக எழுகிறது.

ஒவ்வொரு மக்கள் பிரிவிலும் அடுத்தடுத்து வேறுபட்ட உட்பிரிவுகள் தோன்றுகின்றன என்பது நமது காலத்திய அரசியல் நிகழ்வுகளின் அடிப்படைப் பண்பாகும். அப்படித் தோன்றும் வேறுபாடுகளை அழித்தொழிக்க வேண்டுமா? வேறுபாடுகள் பற்றிய நமது புரிதல் என்ன? என்ற கேள்வி இங்கு முக்கியப் படுகிறது. வேறுபாடுகள் மிகப்பெரிய சனநாயக சக்திகள். வேறுபாடுகளின் வழியாகத்தான் மக்கள் கூட்டங்களின் பல்வேறு பகுதியினர் தன்னுணர்வு பெறுகின்றனர். அவர்கள் வெகுமக்கள் அரசியலுக்குள் நுழைவதே வேறுபாடுகளின் வழியாகத்தான். இவற்றினூடே ஆதிக்க அரசியல் சார்ந்த சிக்கல்கள் இல்லாமலில்லை. ஆயின் தூய சனநாயகத்துக்கான குறுக்கு வழி ஏதும் கிடையாது. இயக்க அனுபவங்களின் வழியாகத்தான் ஆதிக்கக் கூறுகளை முனைமழுங்கச் செய்யவேண்டி வரும். எப்படிப்பார்த்தாலும், எனது உரிமைகளைப் பொறுத்த மட்டில் நான் விடுதலைச் சக்தியாகவும் பிறருடைய உரிமைகளைப் பொறுத்தமட்டில் நான் ஒடுக்கும் சக்தியாகவும் இருப்பது என்றால், இது சாதி அமைப்பின் தருக்கவியலை அப்படியே பின்பற்றுவதாக அல்லவா ஆகிவிடும்! “தமிழர்களின் போராட்டம் இளைஞர்களின் போராட்டமாக மாறி, இளைஞர்களின் போராட்டம் அடுத்த கட்டத்தில் குறிப்பிட்ட ஓர் இயக்கத்தின் அதிகாரப் போராக மாறியிருக்கிறது” என்று பஷீர் அவர்கள் குறிப்பிடுகிறார் (45).

பெரும்பான்மை என்ற சொல்லாக்கமே கூட இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் சனநாயக நடைமுறைகளுக்கு விரோதமாகப் பயன்படுத்தப் படுகிறது என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். தேர்தல் பெரும்பான்மையைச் சாதிப்பதற்காகவே அல்லது ஆட்சியதிகாரத்தை ஈட்டுவதற்காகவே இனத்துவ அரசியல் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதை இங்கு அவதானிக்க வேண்டியுள்ளது. ஒரு நாட்டில் ஓர் இனப்பெரும்பான்மை எப்போதும் ஆட்சியதிகாரத்தை நிர்ணயிக்கும் என்ற நிலை சனநாயகத்திற்கு முற்றிலும் எதிரிடையானதாகும். சிறுபான்மையினர் என்போர் எப்போதுமே இரண்டாந்தர குடிமக்கள் என்ற அந்நியமான மனோநிலையை இது அவர்களிடம் ஏற்படுத்தும். உளவியல்ரீதியாக அவர்களின் சுதந்திரம் சிதைக்கப்பட்டுவிடும். அதுதான் இங்கு நடந்திருக்கிறது.

இலங்கையில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப் பட்ட சூழல்கள் குறித்து சில விடயங்கள் இங்கு பேசப்படவேண்டும். “பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்” என்று அமெரிக்கர் களால் அறிவிக்கப்பட்ட வேலைத்திட்டம் இதில் முக்கியமான ஒரு பங்காற்றியது. அதாவது புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத இயக்கம் என்ற முத்திரை குத்தப்பட்டு, அது அழிக்கப்பட வேண்டும் என்ற சர்வதேச அங்கீகாரம் பெறப்பட்டு, அதன் மூலமாகவே இந்தப் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. சரி, பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற வேலைத் திட்டம் எப்போது, எப்படி உருவானது? அது அமெரிக் காவின் இரட்டைக் கோபுரங்கள் உடைக்கப்பட்ட நிகழ்வுக்குப் பிறகு அறிவிக்கப்பட்ட வேலைத்திட்டம். சாம்வெல் ஹன்டிங்க்டனின் “நாகரிகங்களின் மோதல்” என்ற சூழலுக்கான புதிய உலக ஒழுங்குமுறையாக அறிவிக்கப்பட்ட திட்டத்தின் ஒரு பகுதி அது. ஆக, பயங்கரவாதத்தை ஒழிப்பது என்ற அந்த திட்டம் இலங்கையிலோ, உலகின் வேறு எந்தப் பகுதியிலோ எழும் இனப்பிரச்சினைகளையோ வேறு எந்தப் பிரச்சினைகளையோ தீர்ப்பதற்காக உருவான வேலைத்திட்டம் அல்ல. மாறாக, தீவிரவாத இயக்கங்கள் எந்தப் பிரச்சினைகளிலிருந்து தோன்று கின்றன என்ற கணிப்பு அத்திட்டத்தில் சிறிதும் கிடையாது. அப்பிரச்சினைகளைப் பற்றிய அக்கறையும் அத்திட்டத்திற்குக் கிடையாது. அப்பிரச்சினைகளை எவ்வகையிலும் அத்திட்டம் அங்கீகரிப்பதே கிடையாது. அமெரிக்க நலன்களுக்கு எதிரான எல்லாவகையான தீவிர எதிர்ப்புகளையும் அடியோடு அழித்தொழிப்பதை மட்டுமே அத்திட்டம் தன்னில் கொண்டுள்ளது. சோவியத்துகளின் தகர்வுக்குப் பிறகான உலகமயமாக்கம் என்ற புதிய உலக ஒழுங்கிற்குத் தடையாக இருக்கக் கூடிய முஸ்லீம் இயக்கங்கள், கம்யூனிஸ்ட் இயக்கங்கள், தேசிய இனவாத இயக்கங்கள், பழங்குடி இயக்கங்கள் ஆகியவற்றைப் பயங்கரவாதம் என்ற பட்டியலின் கீழ் கொண்டுவந்து அவற்றை அழித்தொழிப்பதே அந்த வேலைத்திட்டம். இங்கு நாம் வலியுறுத்த விரும்புவது, இலங்கையின் இனப்பிரச்சினைக்கும் யுத்தம் முடிந்த தற்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது என்பதே. இலங்கை அரசு இலங்கையில் இனப்பிரச்சினை என்பதே கிடையாது என்று அடிக்கடி அறிவித்து வருவதை இத்துடன் இணைத்து நோக்க வேண்டும்.

இலங்கையின் இனத்துவ அரசியலுக்குள் இடது சாரிகள் எப்படி மூழ்கடிக்கப்பட்டார்கள் என்பது இங்கு பேசவேண்டிய மற்றொரு முக்கியமான பிரச்சினை யாகும். திரு பஷீர் அவர்கள் இப்பிரச்சினை குறித்து தனது உரைகளில் அதிகம் பேசவில்லை. ஆயின் இது விரிவாகப் பேசப்படவேண்டிய ஒரு பிரச்சினையாகும்.

இடதுசாரிகள் ஆரம்பத்தில் இனம் என்ற கருத்தாக்கத்தையே ஏற்றுக் கொள்ளாதவர்களாக இருந்திருக்கிறார்கள். தேசிய இனம் என்ற கருத்தாக்கமே கூட முதலாளிய வர்க்கம். அது உருவெடுக்கும்போது அதனோடு சேர்த்துக் கட்டமைக்கும் ஓர் அரசியல் பண்பாட்டுக் கருத்தியல் என்ற புரிதல் இன்றும் பல மார்க்சியர்களிடம் உள்ளது. இப்படி ஒரு கருத்தை மார்க்ஸ் சொல்லியிருக்கிறார் என்பதும் உண்மை. ஆனால் தேசியம் குறித்த மார்க்சின் பொதுவான வரையறை இது. மேற்கு ஐரோப்பிய நாடுகளின் தேசியங்கள் குறித்த மார்க்சின் அனுபவங்களிலிருந்து இவ்வரையறை உருவானது. ஏனஸ்ட் கெல்னெர் போன்ற மார்க்சியச் சார்பு கொண்ட இன்றைய அரசியல் அறிஞர்களும் அவ்வாறே வரையறுக்கின்றனர். நவீன சமூகத்தின் கருத்தியல் விளைவாகவே அவர்கள் தேசியம் என்ற கருத்தியலை அணுகுகின்றனர். அது நவீன சமூகத்தின் ஒரு கற்பிதம், அது கட்டமைக்கப் பட்ட ஒன்று என்ற கருத்தே அவர்களால் முன்வைக்கப் படுகிறது.

ஆனால் மார்க்ஸ் அவரது காலத்திலேயே இந்த வரையறையைத் தாண்டிச் சென்றார். போலந்து கிழக்கு ஐரோப்பாவில் விடுதலைக்காகப் போராடியபோது, அதேபோல அமெரிக்க ஐக்கிய நாடுகளில் கறுப்பின மக்கள் தமது விடுதலைக்காக உள்நாட்டு யுத்தத்தில் ஈடுபட்ட போது மார்க்ஸ் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் குறித்த தனது வரையறையை உருவாக்கினார். தொடர்ந்து அயர்லாந்து, இந்தியா, சீனா குறித்து அம்மக்களின் தேசிய எழுச்சிகளைப் பற்றி மார்க்ஸ் எழுதுகிறார். அந்த மக்களின் தேசிய சுயநிர்ணய உரிமை பற்றிப் பேசுகிறார். போலந்து மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக மார்க்ஸ் அகிலத்தில் வாதிட்டார்.

நம்மைப் பொறுத்தமட்டில், மார்க்சிடமிருந்து ஒரு முக்கியமான முறையியலை உருவாக்கிக் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். மார்க்சின் எழுத்துக் களில் பெரும்பாலான விடயங்கள் மேற்கு ஐரோப்பாவின் முதலாளிய நாடுகளின் வரலாறுகளை அடிப்படையாகக் கொண்டவை. ஆயின் அவற்றைக் கடந்து போலந்து, அயர்லாந்து, இந்தியா, சீனா, அரபு நாடுகள் ஆகியன குறித்து எழுதும்போது அவர் அந்நாடுகளின் பழஞ்

சமூகங்கள் பற்றிய தனித்த பண்புகள் குறித்த கவனங் களுடன் எழுகிறார். ஆசிய உற்பத்தி முறை என்ற வேறுபட்ட ஒரு சமூக உற்பத்தி முறை பற்றி அவர் பேசுகிறார். கீழைச் சமூகங்களில் ஆழமாகத் தொழில் படும் கூட்டுக்குழும வடிவங்கள் பற்றி மார்க்ஸ் எழுதுகிறார். கீழைச் சமூகங்களில் ஆழப்பதிந்துள்ள ஆசிய உற்பத்தி முறை, கம்யூன் வடிவங்கள் போன்ற வற்றிலிருந்து இச்சமூகங்களின் சாதி அமைப்பு, இனத்துவ அரசியல், மதவடிவங்கள் ஆகியவற்றைப் புரிந்து கொள்வது அவசியமாக உள்ளது. கீழைச் சமூகங்களின் தனித்த பிரச்சினைகளைப் புரிந்து கொள்ள நாம் மேற்குநாடுகளின் வரலாற்றில் விளைந்த கருத் தாக்கங்களான நவீன யுகம், முதலாளிய உற்பத்தி முறை, முதலாளிய சமூகத்தின் வர்க்க உறவுகள் போன்ற வற்றைப் பயன்படுத்துவது போதுமான புரிதலைத் தருவதில்லை. ஐரோப்பிய நாடுகள் சிலவற்றின் வரலாற்று அனுபவங்களைக் கொண்டு உலகின் எல்லா நாடுகளுக்குமான வேலைத்திட்டங்களை வகுக்கக் கூடாது என்ற கருத்து சமீபகாலங்களில் அழுத்தமாக முன்வைக்கப்படுகிறது. மாறாக, நமது சமூகங்களின் வரலாற்றிலேயே புதைந்து கிடக்கக்கூடிய பழம் வடிவங்கள் பற்றிய புரிதலோடு நாம் நமது சொந்தப் பிரச்சினைகளை அணுக வேண்டியுள்ளது. நமது சொந்த எதார்த்தம் குறித்த, நமது சொந்தக் கருத்தாக்கங்களை நோக்கிய உணர்வுபூர்வமான நகர்வு நமக்குத் தேவைப்படுகிறது. இந்த அணுகுமுறையே ஒரு பொருள்முதல்வாத அணுகுமுறையாகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்றாம் உலக நாடு களுக்கான மார்க்சியம், தெற்காசிய சூழல்களுக்கான மார்க்சியம் என்ற நிலைகளை நோக்கி இவ்வகை முயற்சி நம்மை இட்டுச் செல்லுமாக இருக்கலாம்.

ஏனஸ்ட் கெல்னரைப் பற்றி முன்பு குறிப்பிட்டோம். அவர் நவீன யுகத்தின் உருவாக்கமாக தேசியம் என்ற சிந்தனையைச் சொல்லுகிறார். ஆயின் அந்தோனி ஸ்மித் போன்ற வேறுசில சிந்தனையாளர்கள் நவீன யுகத்திற்கு மிக முந்திய காலங்களுக்குச் சொந்தமான பழங்குடி மரபுகளில் தொழில்படும் இனம் (ணிtலீஸீவீமீ) என்ற கூட்டு வடிவம் நவீன காலத்தில் தேசியமாக மறு உருவாக்கம் பெறுகிறது என்று கருதுகிறார்கள். இனங்களைத் தேசியங்களாக உருவாக்கியதில் நவீன முதலாளிய யுகத்தின் பாத்திரத்தை அந்தோனி ஸ்மித்தும் மறுக்க வில்லை.

நம்மைப் பொறுத்தமட்டில் நாம் இன்னும் கூடுதலாகச் செல்ல வேண்டியுள்ளது. இலங்கை, இந்தியா இன்னும் பல அரேபிய, ஆப்பிரிக்க நாடுகளில் காலனியம், முதலாளியம், நவீனம் ஆகியவற்றை எதிர் கொள்ளுவதற்கான ஒரு சிக்கலான வடிவமாக தேசிய இனங்களின் அடையாள அரசியல் தோன்றியது என்று நாம் வாதிட முனைகிறோம். சாதி, மதம், இனம் போன்ற பல அடையாளங்கள் இவ்வரசியலில் முன்னுக்குக் கொண்டுவரப்படுகின்றன. காலனியம், முதலாளியம், நவீனம் ஆகியவற்றை இவ்வரசியல் உள்வாங்குகிறது, அது போலவே அவற்றை அது மறுதலிக்கவும் செய்கிறது. இடதுசாரிகள் இவ்வகை அரசியலை வர்க்க நோக்கிலிருந்து அணுகும்போது அதனைப் புறக்கணிக்கும் நிலை ஏற்படுகிறது. வர்க்க அரசியல் இச்சமூகங்களின் சொந்தப் பிரச்சினைகளுக்குப் புறத்தே இருந்து தொழில்படும் ஒன்றாக மாறிப்போய் விடுகிறது. வெளியிலிருந்து உள்நுழையும் தோற்றம் அமைந்து போய்விடுகிறது. மாறாக, தமது சொந்த சமூகங்களின் மரபார்ந்த அமைப்புகளின் ஊடான செயல்பாடுகளிலிருந்து தொடங்கி அவர்கள் அதனை வர்க்க அரசியலை நோக்கி நகர்த்த வேண்டும். அந்த மரபார்ந்த அமைப்புகளில் அமிழ்ந்து கிடக்கும் சாதி, மத, இன, பாலின ஏற்றத்தாழ்வுகளைக் கையாளுவதி லிருந்து அவர்களின் அரசியல் தொடங்க வேண்டும். அதே மரபார்ந்த அமைப்புகளின் எதிர்ப்பு ஆற்றலையும் அவர்கள் கையாளவேண்டும். இரண்டு நிலைகளிலும் உள்ளிருந்தே தொழில்படும் சக்திகளாக இடதுசாரிகள் அமைய வேண்டும்.

இதுவே மூன்றாம் உலக நாடுகளின் மார்க்சியமாகப் பெருகும்.

[இக்கட்டுரையின் முதல் வடிவம் கொழும்பில் ஆகஸ்ட் 3ல் நடைபெற்ற நூல் வெளியீட்டு அரங்கில் முன்வைக்கப்பட்டது]

Pin It