சங்க காலத்தில் தொழில் வளம் சிறப்புற்றிருந் துள்ளன. அவற்றுள் வாணிபத் தொழில் வளமாக இருந்துள்ளன. சங்க கால வாணிபம் என்பது பெரும் பாலும் பண்டமாற்று முறையில் இருந்திருக்கின்றன. அன்றாடத் தேவைக்கான பொருட்கள் பலவற்றைப் பண்டைய தமிழர்கள் பண்டமாற்று முறையிலேயே பெற்றுள்ளனர். வாழும் நிலப் பகுதிக்கு ஏற்ப கிடைக்கும் பொருட்களைக் கொண்டும் கொடுத்தும் வாழ்ந்துள்ளனர் சங்கத் தமிழர்கள்.

old ladyபாண் மகள் ஒருத்தி பாணன் பிடித்து வந்த மீன்களை ஊரில் கொண்டுபோய் தானியத்துக்கு மாற்றாக விற்றுவந்த குறிப்பை ஓரம்போகியார் பாடிய ஐங்குறுநூற்றுப் பாடலொன்றில் காணமுடிகிறது.

முள்ளெயிற்றுப் பாண்மகளின் கெடிறு சொரிந்த

அகன்பெரு வட்டி நிறைய மனையோள்

அரிகாற் பெரும்பயறு நிறைக்கும் ஊர

(ஐங். 47: 1- 3)

இன்னொரு ஐங்குறுநூற்றுப் பாடல் பாண்மகளருத்தி மீனுக்கு மாற்றாக நெல்லைப் பெற்று வந்த குறிப்பைத் தருகிறது.

வலைவல் பாண்மகன் வாலெயிற்று மடமகள்

வராஅல் சொரிந்த வட்டியுள் மனையோள்

யாண்டுகழி வெண்ணெல் நிறைக்கு ஊர

(ஐங். 48: 1- 3)

இப்படியாகப் பொருளுக்குப் பொருள் எனும் பொருள் மாற்றம் செய்யும் வகையில் விற்பனை முறைகளோடு, பொருளுக்குத் தகுந்த விலையை வகுத்துக்கூறி விற்பனை செய்துள்ள குறிப்பையும் சங்கப் பாடல்களில் காண முடிகிறது.

குன்றியனார் எனும் சங்கப் புலவர் பாடிய குறுந்தொகைப் பாடலொன்றில் வளையல்கள் விற்போர் பற்றிய குறிப்பொன்று உள்ளது. களவில் ஈடுபட்ட பின்னர் பிரிந்து சென்ற தலைவன் வருவதற்கு நெடுங் காலம் நீண்டுவிட்டமையால், ஊரில் அலர் தோன்றும். தலைவியின் உடல் மெலியும். இதனால் கை வளையல்கள் நெகிழும். அப்படி கை வளையல்கள் நெகிழ்ந்தால் அதைக் கண்டு ஊரார் இன்னும் மிகுதியாக அலர் தூற்றுவார்களே என்று தலைவி அஞ்சுகிறாள். அஞ்சி வருந்திய பின்னர் ‘உடல் மெலிந்து கை வளையல்கள் நெகிழ்ந்தாலும் பரவாயில்லை மெலிந்த கைகளுக்கு ஏற்ற சிறு வளையல்களை விற்போரும் ஊரில் உண்டு’ என தாமே அமைதி கண்டுகொள்கிறாள்.

கயிறரி யெருத்திற் கதழுந் துறைவன்

வாரா தமையினும் அமைக

சிறியவும் உளவீண்டு விலைஞர்கை வளையே.

(குறுந். 117: 4-6)

இங்கு, பொருளை விலைக்கு விற்பவர் எனும் வகையில் வளையல் விற்பவர் ‘விலைஞர்’ என்ற சொல்லால் சுட்டப்பட்டுள்ளனர். விலைஞர் என்றால் ‘விற்பவர்’ என்பதாக பொருள் தருகின்றது.

பதிற்றுப்பத்துப் பாடலொன்றில் ‘பண்ணிய விலைஞர்’ பற்றிய குறிப்பொன்று பயின்று வந்துள்ளது. பண்ணிய விலைஞர் (பண்ணியம் - பண்டம்) பண்டங் களை விற்கும் வணிகரை அப்பாடல் சுட்டுகிறது.

பெருங்காற்றாலும் பேரலை மோதுதலாலும் கட்டுக்கள் தளர்ந்த கலத்தைக் கரைசேர்ந்ததும் கட்டுடையதாக்கி வலியுறுத்தும் பண்ட வணிகரைப் போல, போரினால் உண்டான யானையின் புண்ணை ஆற்றுவிக்கும் சேரமன்னன். (ஒளவை.சு.து., ப. 367) என்கிறது அப் பதிற்றுப்பத்துப் பாடல். சங்க காலக் கடல் வணிகர் பற்றிய குறிப்பு இப்பாடலால் அறியவருகின்றது. பண்டங்களைக் கலத்தில் கொண்டு போய் விற்ற வணிகரா? கொண்டுவந்து விற்ற வணிகரா? என்பதை அறியமுடியவில்லை. பண்டிதர் அருளம்ப வனார் ‘பண்ணிய விலைஞர் என்றது பண்டங்களை மரக்கலம் மூலம் கொணர்ந்து விற்கும் பண்ட வாணிகர்’ (ப. 691) என்கிறார். ஒளவை துரைசாமிப்பிள்ளை ‘பல்வேறு பண்டங்களைக் கலத்திற் கொண்டு வேறுநாடு சென்று விற்பவர்’ (ப.367) என்கிறார். இப்படியான இருவேறு விளக்கங்கள் கிடைக்கப்பெற்றாலும் பண்டங்களை விற்கும் வணிகரையே ‘பண்ணிய விலைஞர்’ என்று சுட்டியுள்ளனர் என்பது மட்டும் தெளிவாக அறிய வருகிறது. இச் செய்தியை,

பெரும்கடல் நீந்திய மரம்வலி உறுக்கும்

பண்ணிய விலைஞர் போல....

(பதி. 76: 4,5)

என்கிறது பதிற்றுப்பத்துப் பாடல். அகநானூற்றுப் பாடலொன்று பூ விற்கும் பெண்ணொருத்தியை ‘விலைஞர்’ என்று சுட்டுகிறது. தோழி ஒருத்தியிடம் தலைவி சொல்வதாக அமைந்த அப்பாடலடிகள்

பல்கல வட்டியர் கொள்விடம் பெறாஅர்

விலைஞர் ஒழித்த தலைவேய் கான்மலர்

(அகம். 391: 3, 4)

என்பதாக அமைந்துள்ளன.

தனக்குரிய இரையைப் பார்த்திருக்கும் காட்டுப் பூனையின் கூர்மையான பற்களைப் போன்ற அரும்பு களைக் கொண்ட காட்டுமல்லிகை மலர்களை அகன்ற கூடையையுடைய பூ விற்போர் அதனை வாங்கு வாரின்றி எஞ்சிய மலர்களையெல்லாம் நம்பால் விட்டுப் போயினர். அந்த மலர்களோடு முல்லை மலர்களை ஒரு சேரக் கட்டிக் கூந்தலிலே சூடிக் கொண்டேன்; நம் தலைவரோ அம்மலர்களை அப்புறப்படுத்திவிட்டு என் கூந்தலையே பாயலாக்கித் துயில் கொண்டார் (வே.சுப்பிரமணியன், ப. 191). என்பதாக அப்பாடல் நீண்டு செல்லும். இங்கு ‘வலைஞர்’ தெருவில் பூக்களை விலைகூறி விற்கும் பெண்ணைச் சுட்டி நிற்கிறது.

மதுரைக்காஞ்சியில் பல்வேறு பண்டங்களை விலை கூவி விற்கும் வணிகரொருவர் ‘விலைஞர்’ என்று சுட்டப்பட்டுள்ளார். மதுரை நகரின் சிறப்பைக் கூறும் ஓரிடத்தில் நாளங்கடி பற்றிய செய்தியும், அங்குப் பல பண்டங்களைச் சேர்த்து வைத்துக்கொண்டு விலை கூறி விற்பனை செய்யும் விலைஞர் பற்றிய குறிப்பும் இடம்பெற்றுள்ளது. அச்செய்தியை

பல்வேறு பண்ணியந் தழீஇத்திரி விலைஞர்

(மதுரை. 405)

என்கிறது. பண்ணிய விலைஞர் என்பதற்குப் ‘பண்ட வாணிகர்’ என்கிறார் நச்சினார்க்கினியர். பட்டினப் பாலையில் இறைச்சிப் பொருளை விற்பனை செய்யும் வணிகரை ‘விலைஞர்’ என்று சுட்டும் குறிப்பொன்று வருகிறது. காவிரிப்பூம்பட்டினத்தின் வர்த்தகம் நிகழ்தற்கு இன்றியமையாத வணிகர் குடிவாழ்க்கையைக் கூறுமிடத்தில்

வலைஞர் முன்றில் மீன் பிறழவும்

விலைஞர் குரம்பை மா வீண்டவும்

(பட். 197 - 198)

எனும் பாடலடிகள் பயின்றுவருகின்றன. வலையைக் கொண்டு பிடிக்கும் தன்மையுள்ள செம்படவர்களின் முற்றத்திலே மீன்கள் பாய்ந்து பிறழ்ந்து திரிந்தன. இறைச்சியை விலைக்கு விற்பவரின் குடிசையிலே மிருகங்கள் திரண்டு நின்றுள்ளன (வை.மு.கோ. ப. 27). என்கிறது அப்பாடல். சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காப்பியங்களிலும் இறைச்சிப் பொருளை விற்பனை செய்யும் ‘விலைஞர்’ பற்றிய குறிப்புக்கள் உள்ளன.

புகார் நகரத்தில் அமைந்திருந்த மருவூர்ப் பாக்கத்தின் நாலங்காடிகள் சிறப்பு கூறுமிடத்தில் இறைச்சி விலைஞர் பற்றிய குறிப்பு வருகிறது.

மீன்விலைப் பரதவர் வெள்உப்புப் பகருநர்

பாசவர் வாசவர் பல்நிண விலைஞரொடு

(சிலம்பு. 5 - 25,26)

இங்கு வரும் ‘பல்நிண விலைஞர்’ என்பதற்குப் ‘பல்வகை மாமிசத் தசைகளை விற்பவர்’ என்பதாகும் (சிலப்பதிகாரம், ப. சரவணன், 92). மணிமேகலையில் வஞ்சி மாநகர் சிறப்பு கூறுமிடத்தில் இறைச்சிப் பொருள் விற்பனை செய்வார் பற்றிய

பல்மீன் விலைஞர் வெள்உப்புப் பகருநர்

கள்நொடை யாட்டியர் காழியர் கூவியர்

மைந்நிண விலைஞர் பாசவர் வாசவர்

(மணி. கச்சி. 31 - 33)

குறிப்புகள் வருகின்றன. வஞ்சி மாநகர் தெருக்களில் பலவகை மீன்களை விற்போர், இறைச்சி விற்போர் ஆகிய வணிகர்கள் இருந்தனர் என்பதைக் காட்டுகிறது இப்பாடலடிகள்.

இறுதியாகச் சில செய்திகள்

சங்க காலத்தில் தெருக்களில் பல்வகை வளையல் களையும், பூக்களையும் கூவி விற்பனைத் தொழில் செய்யும் மக்களை விலைஞர் என்று சுட்டியுள்ளனர். கலத்தைக் கொண்டு கடலில் சென்று வணிகம் செய்துவந்த வணிகர்களையும் விலைஞர் என்று சுட்டும் வழக்கம் சங்க காலத்தில் இருந்துள்ளது.

விழாக்கள் நடைபெறும் இடங்களிலும், அங்காடி களிலும் பல்வகைப் பொருட்களைச் சேமித்து வைத்துக் கொண்டு விற்பனை செய்யும் வணிகர்களையும் விலைஞர் என்றே சுட்டப்பட்டுள்ளது. நீர் நிலைகளி லிருந்து மீன்களைப் பிடித்துவந்து விற்பனை செய்யும் மீனவரையும் பல்வேறுபட்ட இறைச்சிப் பொருள் விற்போரையும் விலைஞர் என்று சுட்டும் குறிப்பைச் சங்க இலக்கியங்களில் காணமுடிகிறது.

‘விலைஞர்’ என்பது பொருளை விலை கூறி விற்பவர் எனும் அடிப்படையில் சுட்டப்படும் பெயராகச் சங்க காலத்தில் இருந்துள்ளது. பூ விற்பவர் முதற்கொண்டு பெரும் பொருள் விற்பவர்கள் வரை ‘விலைஞர்’ என்று சுட்டும் வழக்கம் சங்க காலத்தில் இருந்துள்ளது. விற்பனைத் தொழில் செய்யும் அனைவரையும் விலைஞர் என்று அழைப்பதே சங்க கால வழக்கு என்பதைச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன.

துணைநின்ற நூல்கள்

1.    அருளம்பலவனார், சு. பண்டிதர். 1960. பதிற்றுப்பத்து ஆராய்ச்சி உரை, யாழ்ப்பாணம்: அ. சிவானந்தநாதன் வெளியீடு.

2.    சிவசுப்பிரமணியன், வே. மயிலம் (ப.ஆ.). 1990. அகநானூறு நித்திலக்கோவை மூலமும் உரையும், சென்னை: டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம்.

3.    காசிவிசுவநாதன் செட்டியார், வெ.பெரி. பழ. மு. பாகனேரி (ப.ஆ.). 1946. சீத்தலை சாத்தனார் இயற்றிய மணிமேகலை, சென்னை: சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.

4.    துரைசாமிப்பிள்ளை, ஒளவை. சு. (பதிப்பும் உரையும்). 1978 (2ஆம் பதிப்பு). ஐங்குறுநூறு மூலமும் விளக்கவுரையும், அண்ணாமலை நகர்: அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

5.    துரைசாமிப்பிள்ளை, ஒளவை. சு. (பதிப்பும் உரையும்). 1949. பதிற்றுப்பத்து மூலமும் விளக்கவுரையும், அண்ணாமலை நகர்: அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

6.    சாமிநாதையர், உ. வே. (ப.ஆ.) 1986 (நிழற்படப் பதிப்பு). பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும், தஞ்சாவூர்: தமிழ்ப் பல்கலைக்கழகம்.

7.    சரவணன், ப. (பதிப்பும் உரையும்). 2008. இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் மூலமும் உரையும், சென்னை: சந்தியா பதிப்பகம்.

Pin It