பதினெண் மேற்கணக்கு என்று கூறப்படுகிற எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய நூல்களைச் சங்க இலக்கியம் என்று அழைக்கப்படுகிறது. சங்க இலக்கியம் தோன்றிய காலம் கி.மு.3 முதல் கி.பி.3 ஆம் நூற்றாண்டு வரை என்று பலகாலமாகக் கூறப்பட்டு வந்தது. கீழடி தொல்லியல் அகழாய்வுக்குப் பிறகு சங்க இலக்கியத்தின் தொடக்க எல்லை கி.மு. 6ஆம் நூற்றாண்டுக்கும் பின்னோக்கிச் செல்கிறது. இத்தகைய பழைமையான இலக்கியத்தை இன்றைய தமிழ் பயிற்சியின் மூலம் நாம் எளிதாகப் படித்திட முடியாது. படிப்பதற்கு இடைக்காலத்தில் எழுதப்பட்ட உரைகளே உதவியாகக் கொள்ளமுடியும்.

தமிழ் இலக்கிய வரலாற்றியல் கி.மு.9ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.14ஆம் நூற்றாண்டு வரை உரையாசிரியர்களின் காலமாகக் கொள்ளப்படுகிறது. இந்த உரைகள், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய இலக்கியத்துக்கு எழுதியது, அந்த உரையாசிரியர்களுக்கு அன்றைக்கு இருந்த தமிழ் பயிற்சியைக் கொண்டு சங்க இலக்கியத்தைப் படிப்பது கடினமான முயற்சியாகவே இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் 2000 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ள இன்றைய தமிழ் பயிற்சியின் மூலம் படிப்பதைவிட 1000 ஆண்டுகளுக்கு முன் சற்று குறைவான கடினத்தையே தந்திருக்கும் என்பதிலும் ஐயமில்லை. இந்த இடைக்கால உரையாசிரியர்கள் இல்லை என்றால் இக்காலத்தில் சங்க இலக்கியத்தை நேரடியாகப் படித்தறிவது மிகுந்த கடினமான செயலாக இருந்திருக்கும். ஆகவே இடைக்கால உரைகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.ncbh sanga ilakkiyangalஎட்டுத் தொகை, பத்துப்பாட்டு ஆகிய பதினெண் மேற்கணக்கு நூல்களுக்கு நச்சினார்க்கினியர் மற்றும் பெயர் தெரியாத பழையுரைகள் கிடைத்துள்ளது. இந்த உரைகளை ஏற்றும் சற்று மாற்றியும் ஒரு நூற்றாண்டுகளாகப் புதிய உரைகள் வந்துள்ளது.

இயந்திர அச்சு உருவான காலத்தில் தோன்றிய பாரதியாரின் கவிதைகளிலேயே பாடவேறுபாடு காணப்படுகிறது. 2000 ஆண்டுகளுக்கு முன்பான பதினெண் மேற்கணக்கு ஏட்டுச்சுவடியை, பல ஆண்டுகளுக்கு இடையில் மீண்டும் மீண்டும் படியெடுக்கும் போது பாடவேறுபாடு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. பல்வேறு ஏட்டுச்சுவடிகளைப் பார்வையிட்டு, பாடவேறுபாடுகளைச் சுட்டிக்காட்டியே சங்க இலக்கிய மூலப்பாடத்தை இந்த நூற்றாண்டில் பதிப்பிக்கப்பட்டது.

பல்வேறு உரையாசிரியர்கள் சங்க இலக்கியத்துக்கு உரை எழுதும் போது, அதுவும் 1000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய உரையாக இருந்தாலும், தற்போதைய ஒரு நூற்றாண்டுகளாக எழுதிய புதிய உரையாசிரியர்களாக இருந்தாலும் உரைகளுக்கு இடையே வேறுபாடுகள் இருக்கவே செய்யும். இதனை அறிந்த தமிழ் அறிஞர்கள் கூடி, சங்க இலக்கிய உரைவேறுபாடுகளைச் சுட்டிக்காட்டும் ஒரு நூல் தொகுதிகளை உருவாக்க முனைந்தனர்.

சங்க இலக்கிய மூலத்துக்கு, செம்பதிப்பு எந்தளவுக்குத் தேவையோ அதே அளவுக்கு உரைகளுக்கும் தேவைப்படுகிறது. இதைப் பற்றி முனைவர் அ.செல்வராசு, புறநானூறு பதிப்பில் உள்ள உரைவேறுபாட்டுக்கான காரணங்கள் என்கிற பகுதியில் கூறியுள்ளார்.

“ஒரு பனுவலுக்கு உரைகள் எந்த அளவிற்குப் பெருகிக் கொண்டு வருகிறதோ அந்த அளவிற்கு உரைவேறுபாடும் பெருகக்கூடும். இவ்வாறு வேறுபடுவது இயல்புதான் என்றாலும்கூட, அதனை அவ்வாறே விட்டுவிடுவது நாளடைவில் மூலபாடத்தை மாற்றும் அளவிற்குக்கூடச் சென்றுவிடக்கூடும். மேற்சுட்டிய வேறுபாடுகள் அனைத்தையும் கவனத்திற்கொண்டு பார்க்கிறபொழுது, செம்பதிப்பு என்பது மூலபாடத்திற்கு மட்டுமன்று, உரைக்கும் தேவைப்படுகிறது என்தையே புரிந்து கொள்ள முடிகிறது.”

இந்தக் கூற்றைப் புரிந்து கொண்டாலேயே இந்த “சங்க இலக்கிய உரைவேறுபாட்டுக் களஞ்சியம்” என்கிற நூலின் தேவையை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

உரைவேறுபாட்டு நூலுக்கான முறையாக, அவர்கள் பின்பற்றியதைத் தெரிந்து கொண்டால், அந்தப் பணி எவ்வளவு கடினமானது என்பதை அறிய முடிகிறது. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவற்றுக்கு வெளிவந்துள்ள உரை நூல்களைத் தொகுத்தல், உரைகளை ஒப்பிட்டுப் பார்த்தல், பாடவேறுபாடுகளைக் கண்டறிதல், உரைவேறுபாடுகளைக் கண்டறிதல், உரைவேறுபாடுகளை ஒப்பிட்டு வேறுபாடுகளைக் கண்டு, அதற்கான காரணங்களைச் சுட்டிக்காட்டுதல் இந்த முறையில்தான் இந்த நூல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மூலப்பாட வேறுபாடுகளைவிட உரைவேறுபாடுகளைக் கண்டறிவது கடுமையான பணி ஆகும். இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்கப் பணியைத்தான் இந்த நூல் தொகுதிகளில் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கடும்பணியினை முடிப்பதற்கு 10 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. இந்தக் குழுவில் உள்ளவர்கள் இந்தப் பணியை மட்டுமே தமது வேலையாகக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் தமது அலுவல் பணியைச் செய்ய வேண்டும், குடும்ப வேலைகளைச் செய்ய வேண்டும். மீதமுள்ள நேரங்களையே இதற்கு ஒதுக்க முடியும். அதனால்தான் இந்த நூல்கள் வெளிவருவதற்கு 10 ஆண்டுகள் ஆகியிருக்கிறது.

காலம் அதிகமானதற்கு வேறொரு காரணமும் இருக்கிறது. ஒரு நூல் அச்சாகி வெளிவந்த பிறகு தான், அந்த நூலைப் பற்றி மதிப்பிடப்படும். ஆனால் இந்த நூல் அச்சாவதற்கு முன்பே, புறமதிப்பீட்டாளர்கள் நியமித்து மதிப்பீட்டைப் பெற்றுள்ளனர். அந்த மதிப்பீட்டாளர் கருத்தை குழு விவாதத்துக்கு உட்படுத்தி ஏற்கக்கூடியதை ஏற்று மாற்றப்பட்டுள்ளது. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய அனைத்து நூல்களுக்கான உரைவேறுபாடுகள் இந்த முறையில் ஒழுங்குப்படுத்தப்பட்டதால் தான் இந்தத் தரத்திற்கு இந்த நூல் வந்திருக்கிறது.

இதுவரை வெளிவந்துள்ள உரைகளில் எது சிறந்தது என்பதை சுட்டிக்காட்டும் வேலையை இந்த நூல் செய்யவில்லை. உரைகளிடையே காணப்படும் வேறுபாடுகளைச் சுட்டிக்காட்டி அதில் மூலப்பாடலுக்கு நெருக்கமான பொருளைக் குறிப்பிடுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த அரும்பணிக்கு எட்டுத் தமிழ் அறிஞர்கள் கடும் உழைப்பை செலுத்தி உள்ளனர். கூட்டாகச் செயல்பட்டதினால்தான் இந்தத் தொகுப்பு இவ்வளவு சிறப்பாக வந்துள்ளது. க.பாலாஜி, இரா.அறவேந்தன், ம.லோகேஸ்வரன், இரா.மகிழேந்தி, மு.முனீஸ்மூர்த்தி, மா.பரமசிவன், அ.செல்வராசு, நித்தியா அறவேந்தன் ஆகிய எட்டுத் தமிழ் அறிஞர்கள் ஒற்றுமையாக இந்தப் பணியினை முடித்துத் தந்ததற்க்கு இவர்களை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது. இந்த உரைவேறுபாட்டுக் களஞ்சியத்தை வெளியிட்ட என்.சி.பி.எச். நிறுவனத்தையும் சேர்த்தே பாராட்ட வேண்டும். கண்டிப்பாக இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்கப் பணியே ஆகும்.

சங்கப்பாடல், பாடவேறுபாடு, அடிக்குறிப்புப் பாடவேறுபாடு, உரைவேறுபாடு, பாடல் கருத்து, அருஞ்சொற்பொருள் - இதுவே இந்தச் சங்க இலக்கிய உரைவேறுபாட்டுக் களஞ்சியம் என்கிற இந்த நூலின் அமைப்பு முறை ஆகும்.

இந்தத் தொகுப்பு நூல்களின் சிறப்பே இந்த உரைவேறுபாட்டில்தான் இருக்கிறது. உரைவேறுபாட்டைக் கண்டறிதல் என்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல. ஒரே பொருளைக் கொண்ட பல்வேறு உரைகளைப் படித்து, அதில் உள்ள வேறுபாடுகளை எடுத்து எழுதுதல் என்பது சிரமமான ஒன்றே. வெறும் சிரமம் மட்டுமல்ல மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதே பெரிய உண்மை.

அகநானூறில் உரைவேறுபாட்டைக் கண்டறிந்த முனைவர் மா.பரமசிவன் அவர்களின் கூற்றே இதற்குச் சான்றாகிறது.

“.. .. ..மாலை 6 மணிக்கு கல்லூரி முடிந்தவுடன் 7 மணிக்கு வீட்டிற்கு வந்து உரைவேறுபாட்டில் அமரும் நான், இரவு 8.30 மணிக்கு இரவு உணவுக்காக எழுவேன்; பின்னர் இரவு 12 அல்லது 1 மணிவரை எழுத்துப் பணி தொடரும். அதிகாலை 4 மணிக்கே எழுந்து எழுத ஆரம்பித்துவிடுவேன். இரவு 10 மணிக்கு மேல் விழித்துப் பழக்கமில்லாத நான், ஏறக்குறைய 4 மணிநேர உறக்கத்தோடு 301 முதல் 400 பாடல்களுக்கான உரைவேறுபாட்டை எழுதிக்கொண்டிருந்தபோது மன அழுத்தத்திற்கு ஆளானேன். இதற்கிடையில் தந்தை மணிவாளனின் படைப்புகள் குறித்த நூலாக்கத்திற்காகவும் திண்டுக்கல் சென்றுவந்து கொண்டிருக்க வேண்டிய சூழல். 350 பாடல்வரை நிறைவு செய்த எனக்கு மன அழுத்தம் அதிகரிக்கவே எழுத்துப் பணியை நிறுத்தும் சூழல் ஏற்பட்டது. பேராசிரியரும் சூழலைப் புரிந்துகொண்டார். இசிஜி எடுத்துப் பார்த்தபோது, தற்போது முழு உறக்கமும் ஓய்வும்தான் தேவை என்பதை மருத்துவர்கள் தெளிவாக உணர்த்திவிடவே, 3 மாத காலம் உரை வேறுபாட்டுப் பணி கிடப்பில் போடப்பெற்றது. உறக்கமே இல்லாமல் பணியாற்றியதால் உறங்குவதற்காகச் சித்த மருந்து உள்ளிட்ட மருந்துகள் சாப்பிட வேண்டிய சூழலும் ஏற்பட்டது. 2019 கோடை விடுமுறை முழுவதும் உடல்நலக் குறைவால் எனது மாமா வீட்டில் இருந்து ஓய்வெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. மாமா வீட்டிலும் என்னை அவர்களின் மூத்தமகனைப் போல எண்ணிக் காத்தனர். அதன்பின்னர் முழு ஓய்விற்குப் பிறகு மீண்டும் உரைவேறுபாட்டை எழுதத் தொடங்கினேன்; 2019 நவம்பர் மாதத்தில் நிறைவுசெய்தேன். என்னைப் போலவே உரைவேறுபாடு எழுதிய என் நண்பர்கள் ஒவ்வொருவரும் ஏதோவொரு மனச்சிக்கலுக்கும் தூக்கமின்மையால் மருத்துவம் பார்க்கும் சூழலுக்கும் ஆளாயினர் என்பதும் இங்குக் குறிக்கத்தக்கதாகும்.”

சங்க இலக்கிய உரைவேறுபாட்டுக் களஞ்சியம் வெளிவந்தது முதல் இந்தத் தொகுப்பை நான் முகநூலில் சிறப்பித்து எழுதி வந்தேன். அப்போது சில இடதுசாரி தோழர்கள், இலக்கியத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து நான் எழுதுவதை ஆச்சரியமாகப் பார்த்தனர். அப்படிப்பட்டவர்களுக்கு உரைவேறுபாட்டைக் கண்டறியும் பணியில் ஈடுபட்ட தமிழ் அறிஞர்களின் கடும் உழைப்பையும் அவர்கள் அடைந்த மன அழுத்தத்தையும் மனதில் கொண்டே சிறப்பித்துள்ளேன் என்று இங்கே பதிலளிக்கிறேன்.

தமிழர்களை ஒன்றிணைத்தல் என்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல, தமிழ் அறிஞர்களை ஒன்றிணைப்பது அதைவிடச் சிரமம் மிகுந்த செயலாகும். உரைவேறுபாடுகளைக் கண்டறிந்தவர்களையும் அவைகளை மதிப்பீடு செய்தவர்களையும் சேர்த்துப் பார்த்தால், இவ்வளவு தமிழ் அறிஞர்களை ஒன்றிணைக்கும் பணியினை வெற்றிகரமாகச் செய்து முடித்ததற்கு, முனைவர்

இரா.அறவேந்தன் அவர்களின் இல்லமான “தாயறமே” காரணம் என்பதை அறிய முடிகிறது. முனைவர் இரா.அறவேந்தன் அவர்களின் தலைமையில் இந்தச் சிறப்பான பெரும்பணி நிறைவேறி உள்ளது.

சங்க இலக்கிய மூலப்பாடலாக, முதல் பதிப்பையே அனைவரும் ஒரேவிதமாக ஏற்றுள்ளனர், அடுத்தப் பதிப்புகளில் மாற்றப்பட்டது பாடவேறுபாடாகக் கருதப்பட்டுள்ளது. இந்த “சங்க இலக்கிய உரைவேறுபாட்டுக் களஞ்சியம்” என்கிற இந்த நூல் மூலப்பாடம், உரைவேறுபாடு ஆகியவற்றோடு நின்றுவிடவில்லை, உரைபகுதியும் காணப்படுகிறது. சங்க இலக்கியத்துக்கு உரையாகப் புதிய தெளிவுரையை எழுதாது, இதுவரை எழுதப்பட்ட தெளிவுரைகளின் சாரமாகத் தொகுத்தளிக்கப்பட்டுள்ளது, அதனால் உரை என்கிற சொல்லைப் பயன்படுத்தாமல் "பாடல் கருத்து" என்று இந்நூலில் கூறப்பட்டுள்ளது. மேலும் மூலப்பாடலில் உள்ள கருத்தை விளக்குவதற்கு கூடுதலாக எதையும் சேர்க்காமல், மூலப்பாடல் அடிகளில் காணப்படும் கருத்துக்களை மட்டுமே கூடுமானவரை கொடுக்க வேண்டும் என்கிற நோக்கத்தின் அடிப்படையில் பாடல் கருத்து கொடுக்கப்பட்டுள்ளது.

கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயிலுவதற்கு முன்பே சங்க இலக்கியங்களைப் புலியூர்க்கேசிகன் தெளிவுரைகளின் வாயிலாக நான் பயின்றேன். இது ஒரு மக்கள் உரையாக இருப்பதினால் இதன் தரத்தைப் பற்றிய ஐயம் அன்றுமுதல் இன்றுவரை எனக்கு இருந்துவந்தது. அகநானூறு முதல் தொகுதியில் புலியூர்க்கேசிகனைப் பற்றி முனைவர் மா.பரமசிவன் கூறியதை அறிந்த பின்பே அந்த ஐயம் நீங்கியது.

"புலியூர்க்கேசிகன் எந்த இலக்கிய அடிகளையும் விழுங்காமல் அதேவேளை, எளிமையான சொற்களைக் கொண்டு தேவையான இடங்களில் தேவையான விளக்கங்களை அளித்துத் தெளிவான ஓர் உரையை உருவாக்கியுள்ளார். புலமைத்துவ உரையாளர்கள் தடுமாறுகின்ற ஒரு சில இடங்களுக்கும் இவர் உரை தெளிவான பொருளைக் குறிக்கிறது என்பது இத்தெளிவுரையின் தனித்தன்மையாகும். இந்த உரை அளவிற்கு இதைத் தழுவி எழுந்த எந்தப் பிற்கால உரைகளும் உருவாகவில்லை என்பதும் இன்றளவும் பல்வேறு மறுபதிப்புகளைக் கண்டுவருகிறது என்பதும் இவ்வுரையின் பெருமையைப் பறைசாற்றுவதாகும்."

இதனைப் படித்த பிறகு தெளிவுகிட்டியது. ஏன் என்றால், பரிபாடலில், செவ்வேள் ஒன்பதாவது பாடலில், “நான்மறை விரித்த நல்லிசை விளக்கும் வாய்மொழிப் புலவீர்!” என்பதில் உள்ள “வாய்மொழிப் புலவீர்” என்பதற்குப் புலியூர்க்கேசிகன் “வாய்ப் பேச்சில் வல்லவரான வடமொழிப் புலவர்களே” என்று தெளிவுரை எழுதியுள்ளார். இந்த உரை பாரதியார் கூறிய “வாய்ச்சொல்லில் வீரர்” என்பதின் தாக்கம் காணப்படுகிறது. இதைத் தவிர்த்துப் பார்க்கும் போது புலியூர்க்கேசிகன் உரைகளே சங்க இலக்கியத்துக்கான புரிதலை என்னைப் போன்றோர்களுக்குத் தந்துள்ளது.

2004இல் என்.சி.பி.எச். வெளியிட்ட சங்க இலக்கியத் தெளிவுரைகளுக்கு முன்பு புலியூர்க்கேசிகன் உரைகளையே நான் முழுதுமாக நம்பி இருந்தேன். இந்தப் பரிபாடல் பகுதிக்கு 2004இல் வெளிவந்த என்.சி.பி.எச். வெளியீட்டில் “வாய்மொழியாகிய வேதத்தில் வல்ல புலவர்களே!” என்று இருந்தது. ஆக நான் புரிந்து கொண்டது சரி என்பதை இந்த என்.சி.பி.எச். வெளியீடு உறுதிப்படுத்தியது.

இதுபோன்ற உரைவேறுபாடுகளைத் தொகுத்துக்காட்டுகிறது இந்த “சங்க இலக்கிய உரைவேறுபாட்டுக் களஞ்சியம்.” மேலே குறிப்பிட்ட உரைவேறுபாட்டை இந்த நூல் “தற்கால வழக்கினைக் கையாளுதல்.” “புழங்குபொருட்களை எடுத்துரைத்தலில் வேறுபாடு” என்று கூறுகிறது. இன்றைய வழக்கில் உள்ள சொல்லின் பொருளில் அன்றைய சொல்லுக்கு ஏற்றி உரைத்தல் என்பதே இத்தகைய உரைவேறுபாட்டுக்குக் காரணமாகும்.

உரைவேறுபாட்டுக்கு பல காரணங்கள் இருக்கின்றன, அதில் சிலவற்றைப் பார்ப்போம்.

1)           மூலபாட வேறுபாடு காரணமாதல்

2)            கொண்டுகூட்டிப் பொருள்கொள்ளுதல் காரணமாதல்

3)           இலக்கண மரபினைப் பின்பற்றுதலில் வேறுபாடு

4)           தற்கால வழக்கினைக் கையாளுதல்

5)            ஆணாதிக்க மனப்பாங்கில் உரையெழுதும் நிலையில்

6)           வழிபாட்டுக் கருத்துகளில் வேறுபாடு

7)           புறச்சமயக் காழ்ப்புணர்ச்சி காரணமாக

8)            பாடலிலுள்ள சமயம்சார் குறிப்பினை விளக்குதலில் தற்சார்புடன் செயல்படலால்

மூலபாடத்தில் வேறுபாடு இருந்தால், அப்படியே அது உரையில் வெளிப்படும். பாடலின் வரிசையில் பொருள் கொள்ளாது, ஒரு சொல்லையோ தொடரையோ பொருத்தமான மற்றொரு சொல்லோடு அல்லது தொடரோடு பொருத்தி விளக்குதல், கொண்டுகூட்டிப் பொருள்கொள்ளுதல் என்று அழைக்கப்படுகிறது. அப்படிச் செய்யும் போது மூலப்பாடத்துக்கு மாறாகப் பொருள் கொள்வதற்கு வாய்ப்பிருக்கிறது.

சங்க இலக்கியத்துக்கு வழிகாட்டியாகத் தொல்காப்பியம் என்கிற இலக்கண நூல் இருக்கிறது, இதனைக் கணக்கில் கொள்ளாது இலக்கணத்துக்கு மாறாகப் பொருள் கூறப்பட்டால், இலக்கண மரபினைப் பின்பற்றாமையினால் உரைவேறுபாடு ஏற்படுகிறது.

ஒரு இலக்கியத்தை அது தோன்றிய காலச் சூழலைக் கொண்டே விளக்க வேண்டும், அப்படியில்லாது இன்றைய நிலையில் உள்ள புரிதலுக்கு ஏற்ப உரை எழுதினால் அது தற்கால வழக்கினைக் கையாளுதலால் உரைவேறுபாடு ஏற்பட்டதாகக் கருதப்படுகிறது.

தாய்வழிச் சமூகம் சிதைந்து ஆணாதிக்கம் ஏற்பட்ட போது சங்க இலக்கியம் தோன்றியது. சங்க இலக்கியத்தில் காணும் சமூகம் ஆணாதிக்கச் சமூகமே, இருந்தாலும் பழைய மரபுகள் அங்கே தொடர்கிறது, அதனைக் கணக்கில் கொள்ளாது அதற்கு ஆணாதிக்க மனப்பான்மையினால் எழுதுவதினால் உரைவேறுபாடு ஏற்படுகிறது. இதற்கு உதாரணமாகக் கலித்தொகை நூலில் “ஈன்றவள்” “மகவீன்றவள்” என்று பொதுவாகக் கூறப்பட்டிருந்தாலும் இதற்கு உரை எழுதும் போது புதல்வனை ஈன்றவள் என்று புதல்வனைச் சேர்த்துக் கூறுவது ஆணாதிக்க மனப்பான்மை என்று இந்நூல் சுட்டிக்காட்டி உள்ளது.

“தேம்பலிச் செய்த வீர்நறுங் கையள்” (ஐங் 259/4) என்கிற ஐங்குறுநூறு பாடலில் உள்ள “தேம்பலி” என்பதற்கு இனிய உணவு என்பதே நேரடி பொருள், ஆனால் இதற்கு விளக்கம் கொடுப்பவர்கள் “தேவருணவு” என்று உரை எழுதுவது “வழிபாட்டுக் கருத்துகளில் வேறுபாடு” ஆகும். அதாவது தாம் வழிபடுகிற கருத்துக்களின் வழியில் உரை எழுதுவதினால் ஏற்படும் உரைவேறுபாடு.

“உறித்தாழ்ந்த கரகமும் உரைசான்ற முக்கோலும்” (9:2) என்கிற கலித்தொகைப் பாடலில் உள்ள “கரகம்” என்பது அந்தணர்க்குரிய கமண்டலத்தைக் குறிக்கிறது. ஆனால் சில உரையாசிரியர்கள் “பிச்சைப் பாத்திரம்” என்று எழுதுவதை, புறச்சமயக் காழ்ப்புணர்வு காரணமாக எழும் உரைவேறுபாடு என்று இந்நூல் கூறுகிறது.

“தொல்லியல் ஞாலத்துத் தொழிலாற்றி ஞாயிறு

 வல்லவன் கூறிய வினைதலை வைத்தான்போல்” (148:1-2)

-என்கிற கலித்தொகைப் பாடலில் உள்ள “வல்லவன்” என்ற சொல் காமனைக் குறிக்கிறது, ஆனால் இதற்கு “எல்லாம் வல்ல இறைவன்” என்று சமயச்சார்பாக சில உரைகள் எழுதப்பட்டிருக்கிறது. இவ்வாறு எழுதுவது உரையாசிரியர் தம்முடைய சமயம் சார்ந்த கருத்தோடு இணைத்து எழுதுவதால் உரைவேறுபாடு ஏற்பட்டுள்ளது.

சமஸ்கிருதமயமாதல் என்பது சங்க இலக்கியக் காலத்திலேயே தொடங்கிவிட்டது கண்டிப்பாக அதைச் சுட்டிக்காட்டி அகற்ற வேண்டும். பிற மொழி தாக்கம், அல்லது பிறவற்றின் தாக்கம் இல்லாது எதுவும் வளர்ச்சி பெற்றதில்லை, தொடர்பற்றுத் தனித்திருப்பது அழிந்தே தீரும். புதிய சூழ்நிலைக்கு ஏற்ப தம்மை வளர்த்திடும்போது பிறவற்றின் தாக்கம் இருக்கும், இந்தத் தாக்கம் வளர்ச்சிக்கானது, ஆனால் பிறவற்றில் நுழைந்து தனதாக்கும் முயற்சி என்பது மோசடியான செயலாகும். அது எதுவாக இருந்தாலும் அதை எதிர்த்து மறுத்து உண்மையை நிலைநிறுத்தப்பட வேண்டும்.

“நெடுநல்வாடை” நூலில் முன்னுரைப் பகுதியில், பொ.வே.சோமசுந்தரனாரிடம் சைவப் பற்று வெளிப்படுவதை, இந்நூல் குறிப்பிட்டுள்ளதை பாராட்டாமல் இருக்க முடியாது. சமஸ்கிருதமயமாதலைப் போன்றே சைவமயமாதலையும் மறுத்து உண்மையை நிலைநிறுத்த வேண்டும். ஆதாரத்துடன் நிறுவுவதில்தான் உண்மைத்தன்மை அடங்கி உள்ளது. எத்தகைய தலையீடும் இல்லாது உண்மை வெளிப்பட வேண்டும், அதற்கான முயற்சியே பாராட்டுதலுக்கும் சிறப்புக்கும் உரியது ஆகும்.

“1956-இல் கழக வெளியீடாக, பொ.வே.சோமசுந்தரனாரின் உரையுடன் வெளிவந்த பத்துப்பாட்டு, 'நச்சினார்க்கினியரின் நல்லுரை இருந்தாலும், எளிமையும் புதுமையும் கொண்ட உரை வகுப்பதே நோக்கம் எனத் தெரிவிக்கின்றது. அதன்படி, ஒரு சில இடங்களில் நச்சினார்க்கினியர் உரையை மாற்றி உரைப்பதையும் காண முடிகின்றது. ஆராய்ச்சி முன்னுரையில் மறைமலையடிகளின் கருத்துத் துணையோடு தமது சைவப் பற்றை வெளிப்படுத்துகிறார் இவர்.”

அதே போல, குறுந்தொகையில் சைவமயமாக்கலையும் வைதீகப்படுத்துதலையும் இந்நூல் சுட்டிக்காட்டியுள்ளது.

“...பாடல் பொருண்மையை வருவித்துக் கொண்டு விளக்குதலால் குறுந்தொகையின் மூன்று பாடல்கள் உரையாசிரியர் சிலரால் வைதீகப்படுத்தப் பெற்றுள்ளன.

விவரம் வருமாறு:

குறுந்தொகையின் முதல் பாடல் பாடாண் திணைக்கு உரியதாகத் தொடக்ககால உரையாசிரியர்கள் குறித்துள்ளனர். அப்பாடலினை உவேசா முருக வழிபாட்டுக்குரியது என்கிறார். இதுபோன்றே ‘கொங்குதேர்' என்று தொடங்கும் குறுந்தொகைப் பாடல் (2) சிவன் X நக்கீரர் எனும் திருவிளையாடல் புராணக் கதையோடு தொடர்புபடுத்தி உரையாசிரியர் சிலரால் விளக்கப் பெற்றுள்ளது. இப்புராணக் கதையை ‘வரலாறு’ என்றே உவேசா குறித்துச் செல்கின்றார்.

நிலத்தினும் பெரிதே (3) எனும் பாடலை உவேசாவும் இராகவையங்காரும் முற்றிலும் சமயச் சார்பு அடிப்படையிலேயே விளக்குகின்றனர். இவைபோன்றே கெழீஇய நட்பை (2) எழுபிறப்பிற்குரியது என்றும் வானினும் (3), பெரும்பெயர் உலகம் (83), புத்தேள் நாடு (101) என்பன தேவலோகத்தைக் குறிக்கின்றன என்றும் நோமென் நெஞ்சு (4) மூன்று முறை இடம் பெறுவதால் முப்பிறவிகளைக் குறிக்கின்றது என்றும் அன்புடை நெஞ்சம் தெய்வத்தால் கலந்தது (40, 371), மறுமைக்குச் செல்வதற்காகக் கொடை (137), தெய்வத்தன்மையால் தொழத்தக்க பிறை (178), திருமனை - திருமகள் தங்கும் மனை (181), அரளை மாலை - ருத்திராத்திர மாலை (214), தலைவி தெய்வத்திடம் வேண்டல் (378), ஆ நெய்யால் தெய்வத்தை வழிபடல் (398) நெடுவரை மருங்கில் பாம்புபட ஆதிசேடன் மலையைச் சுற்றியது என்றும் பாடல் பொருண்மையை வைதீகப் படுத்தும் பாங்கு ஒரு சில உரையாசிரியர்களிடம் மட்டும் காணப் பெறுகின்றது.”

இவைகளைப் பார்க்கும் போது சங்க இலக்கியத்துக்கு உரைவேறுபாட்டுக் களஞ்சியம் எவ்வளவு அவசியமானது என்பதை அறிய முடிகிறது. இப்படிக் கூறுவதினால் சமயவழி உரை வேறுபாட்டுக்கு மட்டுமே இந்த நூல் முதன்மை இடம் கொடுக்கப்பட்டுள்ளது என்று கருதிடக்கூடாது. சமயக் கண்ணோட்டத்தினால் உருவான வேறுபாட்டை இந்த நூல் கணக்கில் கொண்டுள்ளதை குறிப்பிடுவதற்காக இங்கே கூறப்பட்டது. சமய வேறுபாட்டைவிட மற்ற உரைவேறுபாடுகளே அதிகம் இந்த நூலில் காணப்படுகிறது.

இந்த உரை வேறுபாட்டுக் களஞ்சியம் உருவாவதற்குப் பாடுபட்ட முனைவர்கள் க.பாலாஜி, இரா.அறவேந்தன் ம.லோகேஸ்வரன், இரா.மகிழேந்தி, மு.முனீஸ்மூர்த்தி, மா.பரமசிவன், அ.செல்வராசு, நித்தியா அறவேந்தன் ஆகியோர்களாவர். இவர்கள் மட்டுமல்லாது மதிப்பீட்டுப் பணிக்கும் பல அறிஞர்கள் பணிபுரிந்துள்ளனர். இவர்களின் பத்தாண்டு கடும் உழைப்பால் கிடைத்த இந்த நூல்களுக்காக பாராட்டுவதோடு நன்றியையும் செலுத்த வேண்டும்.

“சங்க இலக்கிய உரைவேறுபாட்டுக் களஞ்சியம்” என்கிற இந்தப் பதினெண் மேற்கணக்கு நூல்களை வெளியிட்ட என்.சி.பி.எச். நிறுவனத்தையும் பாராட்ட வேண்டும்.

இதனை மாணவர்கள் மட்டுமல்லாது சங்க இலக்கியத்தைப் படிக்க விரும்பும் அனைவருக்கும் இந்த நூல் தொகுதிகள் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இருபத்தி இரண்டு நூல்களைக் கொண்ட இந்தத் தொகுதியை, என்.சி.பி.எச். நிறுவனம் குறைந்த விலையில் வழங்கி இருக்கிறது. இருந்தாலும் இதனைத் தனிப்பட்ட முறையில் பலரால் வாங்க முடியாது, சிறு ஊர் முதல் பெருநகரம் வரையில் உள்ள நூலகங்கள் இதனை வாங்கி வைத்தால் அனைவராலும் படித்துப் பயனடைவதற்கு உதவியாக இருக்கும்.

கீழடி போன்ற இடங்களில் தொல்லியல் ஆய்வுகள் சங்க இலக்கியத்தை வரலாறாகப் பார்க்க வைக்கிறது. கீழடி தொல்லியல் ஆய்வுகள் பொது மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டது போலச் சங்க இலக்கியமும் பொது மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அதற்கு இதுபோன்ற பதிப்புகள் தொடர்ந்து வெளிவர வேண்டும்.

சங்க இலக்கிய உரைவேறுபாட்டுக் களஞ்சியம் நூல் தொகுதிகளுக்கான அறிமுகமாகவே இதனை எழுத நினைத்தேன், ஆனால் அறிமுகத்துடன், நன்றி தெரிவித்தலாகவும், பாராட்டுதலாகவும் மாறிவிட்டது, இதைத் தவிர்க்க முடியவில்லை.

- அ.கா.ஈஸ்வரன்