இலக்கணச் செம்மையும் வளமும் கொண்ட தமிழ்மொழியின் தனிப்பெரும் சொத்துக்களாக திகழ்வது சங்க இலக்கியங்கள் ஆகும். சங்க இலக்கியப் பாடல்களில் பல்வேறு இலக்கிய உத்திகள் கையாளப்பட்டுள்ளன. ஒவ்வொரு சங்கக் கவிதையும் ஏதாவதொரு பின்புலத்தை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பெற்றுள்ளன. கருப்பொருள் காட்சிகள் இடம்பெறுகின்றன. இலக்கியத்திற்கு அழகு செய்யும் அணிகள் நிறைந்து காணப்படுகின்றன. அகப்பாடல்களில் அழகு உள்ளுறை போன்றவற்றால் சிறப்புறுவதை அறிய முடிகிறது. அவ்வகையில் எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகையில் இடம்பெறும் உள்ளுறை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

உள்ளுறை - விளக்கம்

சங்க இலக்கியங்களில் காணப்படும் நுட்பமான உத்திகளுள் ஒன்று உள்ளுறை. உள்ளுறை குறித்துக் காணப்படும் அறிஞர்களின் விளக்கங்களும் உரையாசிரியர்களின் கருத்துகளும் உள்ளுறைக்கான விளக்கத்தை முழுமையாக வரையறை செய்யவில்லை. உள்ளுறை குறித்த சிந்தனைகள் முழுமையும் தெளிவுபடுத்தப்படாமலேயே உள்ளன. இதுகுறித்து, தமிழண்ணல் கூறும் கருத்து சித்திக்கத்தக்கது.

தொல்காப்பியர் உள்ளுறை என ஒரு பொருளை எடுத்தோதுகின்றார். அதன் உட்பிரிவுகளுள் ஒன்றே உள்ளுறை உவமை ஆகும். இவ்வுள்ளுறை உவமை பற்றி ஓரளவு அறிந்திருக்கும் நாம் உள்ளுறை என்ற பொதுக்கோட்பாடு பற்றி யாண்டும் எப்பொழுதும் சிந்திப்பதில்லை. இக்கோட்பாடு பற்றிச் சங்கநூல்களுள் நிறைய மேற்கோள்கள் இருக்கின்றன. ஆயினும் அவை அனைத்தும் உய்த்துணரப்படாமல் உள்ளன. இதனால் உரையாசிரியர்கள் தாமும் இக்கோட்பாட்டினைத் தெளிவு பெற விளக்கிச் சென்றிலர்.  (தமிழண்ணல், சங்க இலக்கிய ஒப்பீடு ப.60)

தொல்காப்பிய இலக்கண நூல் கூறும் உள்ளுறை, உள்ளுறை உவமம் குறித்த வரையறைகள் உள்ளுறையைப் புரிந்து கொள்ள உதவுகின்றன.

உள்ளுறை என்பது வெளிப்படையாகத் தோன்றும் ஒரு பொருள் இருக்கவும் உட்பொருளாகப் பிறிதொன்று தோன்றும். (தமிழண்ணல், சங்க இலக்கிய ஒப்பீடு ப.66)

என்னும் சிந்தனையால் சொல்லப்படும் செய்தியின் மூலம் வேறு ஒன்றை உணர்த்துவது உள்ளுறை என்பது தெளிவாகும்.

 தொல்காப்பியர் திணையை உணரும் முறைகளை இரண்டாகக் கூறும் இடத்து உள்ளுறை உவமத்தை முன்வைக்கின்றார்.

உள்ளுறை உவமம் ஏனை உவமம் எனத்

தள்ளா தாகும் திணையுணர் வகையே. (தொல்.பொருள்.நூ.992)

கருப்பொருள்களில் தெய்வம் தவிரப் பிறபொருள்களில் உள்ளுறை பயின்று வரும் என்று தொல்காப்பியர் கூறும் கருத்து கருப்பொருள்களின் வழி உள்ளுறை விளக்கம் பெறும் என்பதைத் தெளிவாக்குகிறது.

உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை நிலன் எனக்

கொள்ளும் என்ப குறியறிந் தோரே. (தொல்.பொருள்.நூ.993)    

உள்ளுறை உவமம் ஐந்தாகப் பாகுபடுத்தப்பட்டு ஒவ்வொரு வகையும் ஒவ்வொரு வகையில் சிறப்புறும் என்பதையும் உள்ளுறையின் பயன் முடிவற்ற இன்பம் என்பதையும் தொல்காப்பியர் விளக்குகிறார். இதனை,

உடனுறை உவமம் சுட்டு நகை சிறப்பு எனக்

கெடலரு மரபின் உள்ளுறை ஐந்தே. (தொல்.பொருள்.நூ.1188)

அந்தமில் சிறப்பின் ஆக்கிய இன்பம்

தன்வயின் வருதலும் வகுத்த பண்பே. (தொல்.பொருள்.நூ.1189)

என்று தொல்காப்பியம் கூறும் உள்ளுறையின் வகைகளான உடனுறை, உவமம், சுட்டு, நகை, சிறப்பு என்னும் ஐந்தும் பாடுபொருள் சிறக்க உதவும் கூறுகளாக அமைந்திருக்கின்றன. இவற்றுக்குத் தரப்படும் விளக்கம் இலக்கியக் கட்டமைப்பிற்கு இவற்றின் பங்களிப்பை விவரிக்கும்.

உடனுறை - உடனுறைவதொன்றைச் சொல்ல அதனானே பிறிதொரு பொருள்விளங்குவது. உவமம் - என்பது ஏனை உவமம் என்பதன் வேறுபட்டு உள்ளுறைப் பொருளைத் தருவதாகும். சுட்டு என்பது ஒரு பொருளைச் சுட்டிப் பிறிதொரு பொருள் தோன்றச் செய்தல். நகை - நகையினால் பிறிதொரு பொருள் உணர நிற்றல். சிறப்பு - இதற்குச் சிறந்தது இஃது எனக் கூறுவதனால் பிறிதொரு பொருள் கொள்ளக்கிடப்பது. (தமிழண்ணல், சங்க இலக்கிய ஒப்பீடு பக்.60-61)

இத்துடன் மங்கல மொழி, வைஇய மொழி, மாறில் ஆண்மையில் கூறிய மொழி என்பவற்றிலும் உள்ளுறை பயின்று வரும் என்கிறார் தொல்காப்பியர்.

மங்கல மொழியும் வைஇய மொழியும்

மாறில் ஆண்மையில் சொல்லிய மொழியும்

கூறியல் மருங்கின் கொள்ளும் என்ப (தொல்.பொருள்.நூ.1190)

உள்ளுறையின் வகைகளுள் ஒன்றாக அமையும் உவமத்தைக் குறிப்பிடும் தொல்காப்பியர் உவமப் போலி என்னும் ஒன்றைக் குறிப்பிட்டு அதன் வகைகளை ஐந்தாகப் பாகுபாடு செய்கிறார். இதனை,

உவமப் போலி ஐந்தென மொழிப. (தொல்.பொருள்.நூ.1244)

தவலரும் சிறப்பின் அத்தன்மை நாடின்

வினையினும் பயத்தினும் உறுப்பினும் உருவினும்

பிறப்பினும் வரூஉம் திறத்தியல் என்ப (தொல்.பொருள்.நூ.1245)

என்னும் நூற்பாக்களின் வழி அறியலாம். உள்ளுறை உவமம், ஏனை உவமம் என்னும் இரண்டைக் குறிப்பிட்டு, உள்ளுறை உவமம் உய்த்துணர்ந்து பொருள் கொள்வது, ஏனை உவமம் இயல்பாகப் பொருள் உணரும் தன்மையது என்பதைத் தொல்காப்பியர் தெளிவுபடுத்துகிறார்.

உள்ளுறுத்து இதனோடு ஒத்துப்பொருள்முடி கென

உள்ளுறுத்து இறுவதே உள்ளறை உவமம் (தொல்.பொருள்.நூ.994)

ஏனை உவமம் தான் உணர் வகைத்தே (தொல்.பொருள்.நூ.995)

மேற்குறித்த செய்திகளால் உள்ளுறை என்பது புலவன் தான் படைக்கும் பாடலுக்குள் மறைபொருளாய் ஒன்றைக் கூறி விளங்கச்செய்தல் என்பது விளங்கும்.

குறுந்தொகையில் உள்ளுறை

குறுந்தொகையில் இடம்பெறும் உள்ளுறை குறித்த சிந்தனைகள் கருப்பொருள்களின் வழியாக உணர்த்தும் முறையில் அமைகின்றன. திணை அடிப்படையில் உள்ளுறையை நோக்கும்போது அதன் நுட்பம் புலப்படும்.

முல்லைத்திணை

தலைவன் பொருள் தேடச் சென்று மீண்டு வருவேன் என்று கூறிய காலம் வந்த போது, தலைவி வருத்தம் கொள்வாளே என்று தோழி வருந்திய நிலையில் தலைவி, தலைவன் பொய் கூறமாட்டான். இது கார்காலம் என்று இயற்கை கூறினும் நான் நம்பமாட்டேன். தலைவன் பொய் கூறமாட்டான் என்னும் பொருள்பட அமையும் உள்ளுறை தலைவியின் நம்பிக்கையையும், காதலின் ஆழத்தையும் வெளிக்காட்டும் பாங்கில் அமைகிறது.

வண்டுபடத் ததைந்த கொடிஇணர் இடையிடுபு

பொன்செய் புனைஇழை கட்டிய மகளிர்

கதுப்பின் தோன்றும் புதுப்பூங் கொன்றைக்

கானம் கார்எனக் கூறினும்

யானோ தேறேன்அவர் பொய்வழங் கலரே (குறுந்.21)

என்னும் குறுந்தொகைப்பாடலில் கொன்றைக்குப் பெண்ணும், தழைக்குக் கூந்தலும் பூங்கொத்துகளுக்குப் பொன் அணிகலன்களும் உவமையாகக் கூறப்பட்டன. தலைவி கொன்றை மரத்தோடு கானகமும் சேர்த்து இது கார்காலம் எனக் கூறினும் தன்னால் ஏற்க இயலாது என்று கூறுகிறாள். கொன்றை மரங்கள் அறியாமை உடையன ஆதலால் அவை புதுப் பூக்களை மலரச் செய்து கார்காலம் எனக் கூறுமாறு பெண்களின் கூந்தலைப்போலத் தோன்றின. இவ்வாறு மரம் புதுப் பூ அணியினும் பெண்ணாக இயலாததுபோலக் கானகமும் கொன்றை மலர்ந்து கார்காலம் எனக்கூறினும் கார்காலம் அல்ல என்பதைத் தெளிவுபடுத்துகிறாள். கொன்றை கார்ப்பருவத்தில் மலர்வது இயற்கை. கொன்றை மலர் மூலமாகத் தலைவி, தலைவன் மேல்கொண்ட நம்பிக்கை உள்ளுறையாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

குறிஞ்சித்திணை

 தலைவன் திருமணத்தை இடை வைத்துப் பொருளுக்காகப் பிரியும் சூழலில் தலைவியின் துன்பம் கண்டு தோழி வருந்திய நிலையில் தலைவி தோழியைத் தேற்றுகிறாள். இதனை,

துறுக லயலது மாணை மாக்கொடி

துஞ்சுகளி றிவருங் குன்ற நாடன்

நெஞ்சுகள னாக நீயலென் யானென்

நற்றோண் மணந்த ஞான்றை மற்றவன்

தாவா வஞ்சின முரைத்தது

நோயோ தோழி நின்வயி னானே (குறுந்.36)

என்னும் பரணர் பாடலில் களவுக்காலத்தில் தலைவன் கூறிய வாய்மொழிகள் எல்லாம் பொய்த்தபோது தலைவி தோழியிடம் பின்வருமாறு கூறுகிறாள். துறுகல்லின் அருகில் வளர்ந்துள்ள மாணைக் கொடி கல்லின் மீது படராமல் கல்லின் அருகில் உறங்கும் யானை மேல் படர்ந்து வளரும். களவில் தலைவி யானைக் கன்றுபோன்ற தலைவனை மானைக் கொடிபோலத் தழுவி இருந்தபோது, அவன் தலைவியை விட்டு நீங்கினான். யானை எழுந்த போது எவ்வாறு மானைக் கொடி படர இடம் இன்றித் தவித்ததோ அவ்வாறே தலைவன் நீங்கிய வழித் தலைவி துன்புற்றாள். பிரிய மாட்டேன் என்று கூறிய தலைவனின் சூளுரை பொய்யானது என்னும் உள்ளுறை கருப்பொருள்களின் வழித்தெளிவாக்கப்பட்டுள்ளது.

காமம் ஒழிவது ஆயினும் யாமத்துக்

கருவி மாமழை வீழ்ந்தென, அருவி

விடரகத்து இயம்பும் நாட! -எம்

தொடர்பும் தேயுமோ நின்வயினானே (குறுந்.42)

என்னும் கபிலர் பாடலில் மலைப்பகுதியில் மேகம் மழை பொழிந்ததை அறிவிக்கும் வகையில் மலையில் இருந்து மழை பெய்கிறது. மழை பெய்த மறு நாளும் அருவிகள் பெருக்கெடுக்கும். அத்தகைய மலை நாடனே என்று தோழி தலைவனை விளித்து, இரவுக்குறி மறுக்கப்பட்ட போதும் கூட உன்மேல் கொண்ட அன்பு மாறாது என்று குறிப்பிடுகிறாள். இங்கு அருவிக் காட்சியின் மீது தலைவன் தலைவியின் காதல் உள்ளுறையாகப் பதிவு பெற்றுள்ளது. இரவுக்காலத்தில் பெய்த மழை பலரும் மழை பெய்ததை அறியுமாறு அருவியாய் வெளிப்பட்டுத் தோன்றுகிறது. அதுபோல தலைவனின் களவுக்காதல் அவன் மீது கொண்ட அன்பால் தலைவிக்கு உடல் வேறுபாடு நிகழ்ந்தது. அலர் பரவுதற்கு வழி வகுத்தது. முதல் நாள் பெய்த மழை மறுநாளும் அருவியாய்த் தொடர்ந்து பெருக்கெடுப்பது போல இரவுக்குறி தடைப்பட்டாலும் நீங்காமல் தொடரும் என்று தோழி குறிப்பிடுகிறாள். பாடலில் அருவிக் காட்சியின் மூலம் களவு - அலர் - இரவுக்குறி மறுப்பு - தொடர்ந்த அன்பு என்பன உள்ளுறையாக அமைந்து சிறக்கின்றன.

இரவில் நிலவுக்காட்சியை முன்வைத்து முன்னிலைப் புறமொழியாகத் தோழி கூறும் சிந்தனை உள்ளுரையாக அமைகிறது.

கருங்கால் வேங்கை வீஉகு துறுகல்

இரும்புலிக் குருளையின் தோன்றும் காட்டிடை

எல்லி வருநர் களவிற்கு

நல்லை அல்லை நெடுவெண் நிலவே (குறுந்.47)

என்னும் குறுந்தொகைப் பாடலில் இரவில் வெளிப்படும் நிலவு தலைவனுக்கு நன்மை செய்யவில்லை. தீமையே செய்கிறது என்று தோழி குறிப்பிடுகிறாள். இரவுக்காலத்தில் தலைவன் கொடும் குணம் உடைய விலங்குகளைக் கடந்து தலைவியைச் சந்திக்க வருவதால் அவன் மேல் கொண்ட அன்பினால் இரவுக்குறி மறுப்பு நிகழ்கிறது. தலைவன் இரவில் வருவதால் விலங்குகள் மட்டுமன்றித் தலைவியின் தாயும் தந்தையும் உறவுகளும் உண்டு என்பதையும் தோழி உணர்த்துகிறாள். தலைவனின் இரவு வருகை களவுக்கு உகந்தது இல்லை என்பதைக் கூறிக் கற்பே நன்மை பயப்பது என்பதை உணர்த்துகிறாள்.

தோழி தலைவனுக்குக் கூறும் இரவுக்குறி மறுப்புச் செய்தி அவனுக்குத் தீங்கு நிகழும் என்று தலைவியும் தோழியும் வருந்தும் வருத்தத்தைப் பொருளாகக் கொண்டு அமைகிறது. இதை,

கருங்கட் தாக்கலை பெரும்பிறிது உற்றெனக்

கைம்மை உய்யாக் காமர் மந்தி

கல்லா வன்பறழ் கிளைமுதல் சேர்த்தி

ஓங்குவரை அடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்கும்

சாரல் நாட நடுநாள்

வாரல் வாழியோ வருந்துதும் யாமே(குறுந்.69)

என்னும் கடுந்தோட்கரவீரனார் பாடலின் மூலம் அறியலாம். மேலும் தலைவனின் எண்ணத்தை மறுக்கும் வண்ணம் தோழியின் இரவுக் குறி மறுப்பு நிகழ்கிறது. தலைவனின் மலைநாட்டுச் சாரலில் ஆண் துணையை இழந்த பெண்குரங்கு தனித்து வாழ மனம் இன்றித் தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் தன்மையை உடையது. தலைவியும் அவ்வாறே தலைவனை இழந்து வாழும் மனநிலை இல்லாதவள் என்பதையும் கூறி, இரவு வருகையால் துன்பம் நிகழும் என்று கூறி இரவுக்குறியை மறுக்கிறாள்.

தோழி தலைவனிடம் தலைவியை அழைத்துக் கொண்டு உடன்போக்குச் செல்வதற்கு முன்பு நீயே தலைவியைக் காத்தற்கு உரியவன் என்று குறிப்பிடுகிறாள்.

பெருநன்று ஆற்றின் பேணாரும் உளரே

ஒருநன்று உடையள் ஆயினும் புரிமாண்டு

புலவி தீர அளிமதி இலைகவர்பு

ஆடுஅமை ஒழுகிய தண்ணறுஞ் சாரல்

மென்னடை மரையா துஞ்சும்

நன்மலை நாட நின்அலது இலளே (குறுந்.115)

என்னும் குறுந்தொகைப்பாடலில் தோழி, தலைவனிடம் மூங்கில்கள் வளர்ந்துள்ள மலைச்சாரலில் மெலிந்த நடையினை உடைய ஆண்மான் முதுமை காரணமாக உதிர்த்த இலைகளை உண்டு மலைப்பக்கத்தில் குளிர்ச்சியும் மணமும் உடைய இடத்தில் தங்கி வாழும் என்று குறிப்பிடுகிறாள். மானுக்கு எவ்வாறு மலைச்சாரல் முதுமையிலும் கைவிடாது காக்கிறதோ அதுபோல தலைவியும் உன் அருளால் உன்னிடம் தங்குதற்கு உரியவள் என்று குறிப்பிடுகிறாள். எந்த நிலையிலும் மானுக்கு அடைக்கலம் அளிக்கும் மலைச்சாரல்போல் இவளுக்கு எப்போதும் நீயே எல்லாமும் என்று மான் என்னும் கருப்பொருள் கொண்டு உள்ளுறை கூறப்பட்டுள்ளது.

வரைவின் இடையே எவ்வாறு ஆற்றி இருப்பாய் என்று தோழி வினவும்போது தலைவி, தோழிக்கு உரைக்கும் பாடல் ஒன்று உள்ளுறைப் பொருளைக் கொண்டு சிறக்கிறது.

இனமயில் அகவும் மரம்பயில் கானத்து

நரைமுக ஊகம் பார்ப்பொடு பனிப்ப

படுமழை பொழிந்த சாரல் அவர்நாட்டுக்

குன்றம் நோக்கினென் தோழி

பண்டை யற்றோ கண்டிசின் நுதலே (குறுந்.249)

என்னும் கபிலர் பாடலில் மயில் தன் துணையுடன் மகிழ்ந்து நடனம் ஆடுவதற்குக் காரணமான மழை குட்டியுடன் இருக்கும் குரங்கினைக் குளிரால் துன்புறச் செய்யும். தலைவன் தலைவியின் களவுக்கால வாழ்க்கை இன்பத்தைத் தரும் என்றாலும் அதை விடப் பாதுகாப்பு நிறைந்தது கற்பு வாழ்க்கை என்பதால் குரங்கு தன் குட்டியுடன் வாழ்கின்ற குடும்ப வாழ்க்கை சுட்டிக் கூறப்பட்டது.

மருதத்திணை

தலைவன் பரத்தையின் பொருட்டுப் பிரிந்து இல்லம் வர வாயிலை அனுப்பிய சூழலில் தோழி வாயில் மறுக்கிறாள். இதனை,

யாரினும் இனியன் பேர்அன் பினனே

உள்ளுர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல்

சூல்முதிர் பேடைக்கு ஈனில் இழையஇயர்

தேம்பொதிக் கொண்ட தீம்கழைக் கரும்பின்

நாறா வெண்பூக் கொழுதும்

யாணர் ஊரன் பாணன் வாயே(குறுந்.85)

என்னும் குறுந்தொகைப் பாடலில் தலைவன் உறவுகள் அனைவரிடத்திலும் அன்புடையவன் என்று பாணன் கூறியதை ஏற்க விரும்பாமல் வாயில் மறுக்கிறாள். தலைவன் உண்மையான அன்புடையவன் என்று பாணன் கூறினும் தோழி அதனை மறுத்து உரைப்பதற்கான காரணம் உண்டு. பாடலில் குறிப்பிடப்படும் ஊர்க்குருவிகள் ஆணும் பெண்ணுமாக இணைந்து வாழ்பவை. ஆண் பறவை தன் பெண் துணைக்கு மெத்தென்ற கூட்டினை அமைக்கும். குருவிக்கு இருக்கின்ற அன்பும் பொறுப்புணர்வும் தலைவனுக்கு இல்லையே என்று தலைவி வருத்தம் கொள்கிறாள்.

பாலைத்திணை

பொருள் தேட எண்ணம் கொண்ட தலைவன் முன்பு பாலைவழியில் பொருள்தேடச் சென்ற நினைவினையும் தான் அடைந்த துயரத்தையும் மனத்தில் கொண்டு தலைவியையும் அவளது அழகு நலத்தையும் நினைவில்கொண்டு செலவழுங்குகிறதை,

மல்குசுனை புலர்ந்த நல்கூர் சுரமுதல்

குமரி வாகைக் கோலுடை நறுவீ

மடமாத் தோகைக் குடுமியின் தோன்றும்

கான நீள்இடைத் தானும் நம்மொடு     

ஒன்றுமணம் செய்தனள் இவள்எனின்

நன்றே நெஞ்சம் நயந்தநின் துணிவே (குறுந்.347)

என்னும் குறுந்தொகைப் பாடலின் மூலம் அறியலாம். மேலும், தலைவன் முன்பு பொருள்தேடச் சென்ற வழி நீரற்ற சுனைகளை உடையதாக இருந்தது. அவ்வழியில் மீண்டும் செல்ல நினைத்த தலைவன், தலைவி உடன் வந்தால் மனத்தின் துணிவு இனிதாகும் என்று கருதுவது அவனது செலவழுங்கலை உள்ளுறையாக உணர்த்துகிறது.

குறுந்தொகைப் பாடல்களில் இடம்பெற்றிருக்கும் உள்ளுறைகள் தலைவன் தலைவியின் காதல் வாழ்வில் நிகழும் ஒழுக்கங்களை உட்பொருளாகக் கொண்டு சிறக்கின்றன. கருப்பொருள்களின் வழியாகப் புலவர்களின் உணர்த்தல் திறன் உத்தி வெளிப்படுகின்றது. பாடல்களில் இடம்பெறும் குறிஞ்சி நில உள்ளுறைகள் தலைவனின் இரவுக்குறி வருகை, காவல், வழியின் துன்பம், வரைவு கடாதல், உடன்போக்குதலான பொருண்மைகளில் அமைந்து பாடல்களின் உட்பொருளை உய்த்தறிய உதவுகின்றன. முல்லைத்திணையின் உள்ளுறைகள் தலைவன் பிரிவு அதனால் தலைவிக்கு ஏற்பட்ட துயர் ஆகியவற்றை விளக்குகின்றன.தலைவனின் பரத்தமை ஒழுக்கத்தின் இயல்பினை மருதத்திணையும் பிரிவுத் துன்பத்தின் வலியை நெய்தல் திணையும் தலைவன் பொருள் தேடும் ஆர்வம் அதனால் தலைவிக்கு ஏற்படும் துன்பம் ஆகியவற்றைப் பாலைத் திணைப் பாடல்களும் விளக்குகின்றன.

துணைநூல்கள்

1.            இளம்பூரணர் (உ.ஆ) - தொல்காப்பியம் பொருளதிகாரம் கழகவெளியீடு 1966

2.            சண்முகப்பிள்ளை. மு(பதி) - குறுந்தொகை தமிழ்ப் பல்கலைகழக வெளியீடு, தஞ்சாவூர் முதற்பதிப்பு 1985

3.            சாமிநாதையர் உ.வே (பதி) - குறுந்தொகை மூலமும் உரையும், டாக்டர் உ.வே.ச நூல் நிலையம், பெசன்ட் நகர், சென்னை 7 ம் பதிப்பு, 2017

4.            நாகராசன்.வி (உ.ஆ) - சங்க இலக்கியம் குறுந்தொகை, நியு செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் சென்னை, 2005

- அ.தமயந்தி, முனைவர் பட்ட ஆய்வாளர், கணேசர் கலை அறிவியல் கல்லூரி மேலைச்சிவபுரி.

Pin It