தமிழின் முக்கிய எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் சிந்திப்பதை நிறுத்தினார். அவரின் மரணம் மனதுக்கு வருத்தமளிக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் வருடந்தோறும் மேமாதம் நடைபெறும் கலை இலக்கியப் பெருமன்றத்தின் நெட்டா முகாமொன்றில் பல வருடங்களுக்கு முன்னால் ராஜம் கிருஷ்ணனுக்கு பாராட்டுவிழா நடைபெற்றது ஞாபகத்தில் நிழலாடுகிறது. பெண்ணியக் கோட்பாடுகள் தீவிரம் பெறுவதற்கு முன்பான காலத்திலேயே பெண்ணின் நோக்கில் அடித்தள மக்களின் படைப்புலகங்களை தனது நாவல்களில் படைத்துக்காட்டினார். ஒரு படைப்பை உருவாக்கும் முன்பு அந்நியமாக இருக்கும் அந்த மக்கள் பகுதிக்குள் சென்று தானும் அவர்களில் ஒருவராய் பலமாதங்கள் வாழ்ந்து நாவலின் கதாபாத்திரங்களை படைத்தளிக்கும் முறையியலை மேற்கொண்டார். படைப்புலக கோட்பாடுகளின் அடிப்படையில் சமகால வாழ்வும் களஆய்வும் இணைந்த இவரது நாவல்களின் தன்மை இயல்புவாத நெறியில் அமைந்திருக்கிறதா, யதார்த்தவியல் சார்ந்து உருவாகியுள்ளதா, இல்லை ஆவணத்தன்மை யதார்த்தமா என்பதாகவெல்லாம் விவாதங்கள் நிகழ்ந்துள்ளன.

rajam krishnanராஜம் கிருஷ்ணன் 1948-இல் ‘சுதந்திர ஜோதி’ என்ற நாவல் மூலம் எழுத்துலகில் நாவலாசிரியராக அறிமுகமாகிறார். நாற்பதுக்கும் மேற்பட்ட நாவல் களைப் படைத்துள்ளார். ‘சேற்றில் மனிதர்கள்’, ‘கரிப்பு மணிகள்’, ‘அலைவாய்க் கரையில்’ ஆகியவை அடித்தள உழைக்கும் மக்களின் வாழ்வியல் யதார்த்தத்தைப் பதிவு செய்கின்றன. ‘குறிஞ்சித்தேன்’, ‘வளைக்கரம்’, ‘கரிப்பு மணிகள்’ போன்ற நாவல்களில், அந்தந்த இனப் பகுதி மக்களின் நம்பிக்கைகள், மரபுவழக்கங்கள், சடங்குகள் சித்திரிக்கப்பட்டிருக்கின்றன.

கடலோர மீனவர் வாழ்வின் சிக்கல்களைப் பேசும் நாவல் ‘அலைவாய்க் கரையில்’ கவனத்தைப் பெற்றது. இடிந்தகரை, மணப்பாடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் அரியவகை சுறா மீன்கள் அதிகம் கொண்ட பகுதி. இதன் இறக்கையும் வாலும் துவி என அழைக்கப் படுகின்றன; இது பொருளியல் மதிப்பு மிக்கது. இதுவே அங்குள்ள பல்லாயிரக்கணக்கான மீனவ மக்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கிறது. இப்பகுதியில் வாழ்ந்த மீனவர்களின் ஏழ்மை நிலையை பயன்படுத்திக் கொண்ட சமய அதிகார மையங்கள் பயனற்ற பொருள் என்ற பெயரில் துவியைப் பெற்று ஏற்றுமதி செய்துப் பணமாக்கி தேவாலயத்திற்கு வருமானமாக மாற்றி விடுகிறது. கடலில் உழைக்கும் மீனவர்கள் ஏமாந்து போகிறார்கள். எழுபதுகளில் தமது ‘அலைவாய்க் கரையில்‘ நாவலில் இந்த உழைப்புச் சுரண்டலை ராஜம்கிருஷ்ணன் கட்டுடைத்துக் காட்டுகிறார். மீனவ மக்களுக்கும் தேவாலயங்களுக்கும் இடையே ஏற்படும் துவி பங்கு தொடர்பான பிரச்சனையை முன்னிட்டு இந்துத்துவ இயக்கங்கள் அங்கு நுழைந்து அவர்களை மதமாற்றம் செய்து அவர்களிடையே கலவரமேற்படுத்த முயல்வது குறித்தும் கூறிச் செல்லும் இந்த நாவல் யதார்த்த வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு புனைவாக எழுதப்பட்டது.

‘குறிஞ்சித்தேன்’ நாவல் நீலகிரி மலைப்பகுதி பழங்குடிகள் படுகர் வாழ்வின் இலக்கிய உருவாக்க மாகும். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் குறிஞ்சி மலரின் பூக்கும் காலத்தை அடிப்படையாகக் கொண்ட ஐந்து குறிஞ்சிப் பருவங்களான அறுபது ஆண்டுகளில், படுகர் இன மக்கள் வாழ்வின் மாற்றங்களை கலைப் படைப்பாக பதிவு செய்கிறது. மரபுவழி விவசாயப் பயிர் உற்பத்தியும் சாகுபடி முறைகளும் கைவிடப்பட்டு பணப்பயிரான தேயிலை விவசாயத்துக்கு மாறிச் செல்லும் காலத்தை அடையாளப்படுத்துகிறது. இயற்கையின் பகுதியாக வாழும் மலைவாழ் மக்கள் அதிகபட்சமாக தினை, சாமை, வரகு, கிழங்குகள் போன்ற தானியங்களை மட்டுமே பயிரிட்டு மலைவளத்தையும், வன வளத்தையுமே தமது வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்திருக்கிறார்கள். நவீன வாழ்க்கை முறை தரும் நெருக்கடிகளால் உந்தப்பட்டு பாரம்பரிய விவசாய முறையைக் கைவிட்டு தங்கள் சிறு நிலங்களில் தேயிலை பயிரிட நேரும் அவலத்தையும், பொருளாதார வாழ்வியலுடன் அது அவர்களது பண்பாட்டு வாழ்க் கையிலும் மாற்றங்களை உருவாக்குவதை இப்படைப்பு பேசுகிறது.

‘கரிப்பு மணிகள்’ தூத்துக்குடி உப்பளத் தொழி லாளர்களின் உவர்ப்பு வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் எழுத்துலகம். கோவா நாட்டின் மண்ணில் பின்புலச் சூழலில் உருவான புதினம் ‘வளைக்கரம்’. ‘கூட்டுக் குஞ்சுகள்’ நாவலில் குழந்தைகளைத் தீப்பெட்டித் தொழிலில் முடக்கித் தீக்குச்சிகளை அந்தப் பெட்டியில் அடைப்பதைப் போன்று குழந்தைகளின் உடலும் மனமும் நொறுங்கும் அவல உலகை மறுபடைப்பாக்கிக் காட்டுகிறது. மானுடவியலும் உளவியலும் கலந்த படைப்புலகின் தரிசனமாக ராஜம் கிருஷ்ணனின் எழுத்துலகம் விரிவடைந்திருந்தது.

ஆய்வாளர் பா.ஜீவசுந்தரி தனது மதிப்பீட்டில் இவ்வாறு எழுதுகிறார். 1950களில் எழுதத் தொடங்கி பிரபலமான லட்சுமி, அநுத்தமா போன்ற பெண் எழுத்தாளர்களெல்லாம் மணிப்பிரவாள நடையிலும், பிராமண நடையிலும் பெரும்பாலும் எழுதிக்கொண் டிருந்த நிலையில் சாதாரண மக்கள் பேசும் மொழியில் எழுதியவர் ராஜம் கிருஷ்ணன். மேலும் அவர் பல நாவல்கள், சிறுகதைகள் எழுதிய போதும் அவரது நாவலான ‘ரோஜாவின் இதழ்கள்’ மட்டுமே அம் மொழியில் எழுதப்பட்டது. மற்ற அவரது பெரும் பாலான படைப்புகள் அடித்தட்டு மக்களான பழங்குடியினர், தலித் விவசாயத் தொழிலாளர்கள், மீனவர்கள், உப்பளத் தொழிலாளர்கள், சிறிய விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் ஆகியோரின் அவல வாழ்க்கையை வெளிச்சமிட்டுக் காட்டுபவை. ‘பெண் குரல்‘ நாவலும் கூட கூட்டுக் குடும்பங்களில் வாழ நேரும் பெண்களின் அழுத்தப்பட்ட குரலாகத்தான் வெளிப்பட்டது. மற்ற அவரது நாவல் பரப்பு சம்பல் பள்ளத்தாக்குக் கொள்ளைக்காரர்கள் வரை விரிந்து பரந்து ஒரு இந்தியத் தன்மையை அளிப்பவை.

‘முள்ளும் மலர்ந்தது’ என்ற சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளையரைப் பற்றிய நாவல் மிகவும் பிரசித்தி பெற்றதற்குக் காரணம், இவர் நேரடியாக அவர்களை சந்தித்துப் பேசியதாலேயே! இதற்காகத் தனது கணவரின் பணியையே உதறிவிட்டு வரச் சொல்லி அவர்களைத் தேடிப் போனவர்.

இவரது நாவல்களில் மிக முக்கியப் படைப்பாக கருதப்படக்கூடியது ‘பாதையில் பதிந்த அடிகள்‘ நாவல் ஆகும். வரலாற்றில் மறந்துபோன முகமான மணலூர் மணியம்மையார் என்ற முக்கியமான ஆளுமையைப் பற்றிய நாவல். கீழத்தஞ்சைப் பகுதியில் காலங்காலமாக அடிமைப்பட்டுக் கிடந்த அடிமைத் தொழிலாளர்கள் வீறு கொண்டு எழுந்து பண்ணையடிமை முறைக்கு எதிராகப் போராடத் தூண்டிய இவரை தஞ்சைத் தரணி இன்றும் மறக்காமல், தங்கள் நாட்டுப்பாடல்களில் “மணியம்மா” என்றே அழைத்து உயிர்ப்புடன் வைத் திருக்கிறது. இவர் பிராமண குடும்பத்தில் பிறந்து இளம் வயதிலேயே விதவையானவர். ஒருமுறை இவரது கிராமத்துக்கு சங்கராச்சாரியார் வருகிறார் என கேள்விப்பட்டு அவரைப் பார்க்கச் சென்றபோது, ‘மொட்டைப் பாப்பாத்திக்கு பரமாச்சார்யாள் தரிசனமா?‘ என அவமானப்படுத்தப்படுகிறார். அதன் பின்னர் சனாதனக் கட்டுப்பாடுகளை மீறி மக்களின் அடிமைத்தளையை எதிர்த்துப் போராட தம்மை அர்ப்பணிக்கிறார். பொது உடைமை இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றுகிறார்.

இதனால் ஆதிக்க சாதியினரின் ஏவல் நாய்களின் தாக்குதலைச் சந்திக்க சிலம்பம் பயில்கிறார். பெண் என்னும் தனது அடையாளத்தை நிறுவும் புடவை துறந்து, வேட்டி சட்டை அணிந்து கொண்டு, தலைமுடி வளர்த்து கிராப் வைத்துக்கொள்கிறார். மக்கள் அவரை அம்மா என்றும் அவரது இயக்கத்தை அம்மா கட்சி என்றும் அழைத்தனர். இந்த நாவல் எழுதப்பட்டிருக்கா விட்டால் மணலூர் மணியம்மையின் வாழ்க்கை பற்றி பரவலாக வெளியே தெரியாமலே போயிருக்கும் என்பதாக அவர்தம் மதிப்பீடு அமைந்துள்ளது.

இன்று வட்டார இலக்கியங்களும் தலித்திய பெண்ணிய விளிம்புநிலை மக்களுக்கான இலக்கியங் களும் இதைத்தான் முன்வைத்து எழுதப்படுகின்றன. அப்படியானால் அடித்தட்டு மக்களுக்கான இலக்கியம் குறித்த ஒரு முன்னோடிப் பார்வை அவரிடம் இருந்தது. இத்தகைய ஆய்வு நோக்கில் எழுதிய முக்கிய நாவலாசிரியராக வங்க மொழியில் எழுதி வரும் மகாஸ்வேதா தேவியைக் குறிப்பிடலாம் என்பதான அவர்தம் ஒப்பீட்டையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

ராஜம் கிருஷ்ணன் ‘வேருக்கு நீர்’ நாவல் 1973 இல் சாகித்ய அகாதெமி பரிசு பெற்றது. 1975இல் ‘வளைக்கரம்’ சோவியத் நாடு நேரு பரிசு பெற்றது. இலக்கியச் சிந்தனை விருதை 1980 இல் ‘கரிப்புமணிகள்’, 1983 இல் ‘சேறில் மனிதர்கள்’, ஆகிய நாவல்கள் பெற்றன.

ராஜம் கிருஷ்ணனின் முதல் சிறுகதையான ‘வெள்ளி டம்ளர்’ சாவி அவர்களின் ‘வெள்ளிமணி’யில் வெளிவந்தது. அலைகடலில், பவித்ரா, அல்லி போன்ற குறுநாவல்கள், டாக்டர் ரங்காச்சாரி வாழ்க்கை

வரலாறு, பயணநூலான அன்னை பூமி, மாஸ்கோ போன்ற நூல்களையும் எழுதியுள்ளார். கதையின் கதை, கானாற்றின் செல்வங்கள் போன்ற இருபத்தைந்து வானொலி நாடகங்களையும் படைத்துள்ளார். இராஜம் கிருஷ்ணன் சிறுகதை, வாழ்க்கை வரலாறு, வானொலிக் கட்டுரைகள், வானொலி நாடகங்கள், மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம் போன்ற பல துறைகளில் சாதனை முத்திரை பதித்திருந்தாலும் நாவல் துறையில்

மட்டுமே அதிகக் கவனம் செலுத்தியுள்ளார். மிகச் சிறந்த நாவலாசிரியரான இவர் இருமுறை இலக்கியச் சிந்தனை பரிசு பெற்றுள்ளார். இருமுறை சோவியத் நாடு சென்றுள்ளார்.

பெண்சார்ந்த அபுனைவு ஆய்வியல் எழுத்துக் களையும் ராஜம் கிருஷ்ணன் படைத்துள்ளார். இந்திய வரலாற்றில் பெண்மை என்னும் நூல், ஆதிகாலம் தொடங்கி தற்காலம் வரையிலான பெண்களின் நிலை, வரலாற்று பண்பாட்டியல் சார்ந்து பனிரெண்டு கட்டுரையாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. புராணங்களும் திரிக்கப்பட்ட கதைகளும் பெண் ஒடுக்குமுறையின் பிம்பங்களாக உருவாக்கம் பெற்றிருப்பதை இவை விவரிக்கின்றன.

திருச்சி மாவட்டம் முசிறியில் 1925-ம் ஆண்டு பிறந்தவர் ராஜம் கிருஷ்ணன். பெற்றோர்கள் யஞ்ஞ நாராயணன், மீனாட்சி. கணவர் மின்வாரியப் பொறி யாளரான முத்துகிருஷ்ணன். 1946லிருந்து பல்வேறு பத்திரிகைகளில் எழுதி வருகிறார். ஊட்டி, குந்தா, கோவா போன்ற இடங்களுக்கு கணவரோடு பணியின் நிமித்தம் புலம்பெயர்ந்து சென்றமை இவர்தம் நாவல் உருவாக்கத்திற்கு உறுதுணையாக இருந்திருக்கிறது. இடதுசாரி இயக்கங்களோடும், இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தோடும் நெருங்கிய உறவினை கொண்ட வராகவும் இருந்தார்.

4)1950-லேயே புகழ்பெற்ற நியூயார்க் ஹெரால்ட் டிரிபியூனின் சர்வதேச விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் இராஜம் கிருஷ்ணன் 2002-ம் ஆண்டு தன் கணவர் கிருஷ்ணனை இழந்தார். பிள்ளைகள் கிடையாது. அதன் பிறகு தனது உறவுக்காரர்கள் சிலரை நம்பி தன்னிட மிருந்த பணத்தையும், சொத்துக்களையும் விட்டு வைத்திருக்கிறார். ஆனால் அவர்களோ இவரை ஏமாற்றி இருக்கிறார்கள். எண்பது வயதில் நடுத்தெருவில் நிர்க்கதியாய் நின்றவரை, சில நண்பர்களும் அவரது ஒரு சகோதரரும் பாதுகாக்க முயற்சி செய்து ராஜம் கிருஷ்ணனை ‘விச்ராந்தி’ என்ற முதியோர் இல்லத்தில் சேர்த்திருக்கிறார்கள். ஆனால் யாரும் தன்னைப் பார்த்து இரக்கப்படுவதை இந்த நிலையிலும் விரும்பாத ராஜம் கிருஷ்ணன் இறுதிக்காலத்தில் அநாதமையாக வாழ்ந்து ஒரு துன்பியல் நிறைந்த காவியமாக தனது வாழ்வின் இறுதிவரிகளை எழுதியுள்ளார்.

தொண்ணூறு வயதில் உடல்நலக் குறைவால் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு அங்கு 21 - 10 - 2014 அன்று ராஜம் கிருஷ்ணன் உயிர் துறந்தார். தான் இறந்துவிட்டால் தன் உடலை ராமச்சந்திரா மருத்துவமனைக்குத் தானம் செய்ய விருப்பம் தெரிவித்திருந்தார். அதன்படி அவரின் உடல் அந்த மருத்துவமனைக்கே தானம் செய்யப்பட்டுள்ளது. ராஜம்கிருஷ்ணன் தனது எழுத்தை மட்டுமல்ல. இறந்துபோன தன் உடலைக் கூட மக்கள் சேவைக்கே அர்ப்பணித்துள்ளார்.

Pin It