தஞ்சை மாவட்டம் சுவாமிமலையில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த தேனுகா (எ) சீனிவாசன் தனித்த அடையாளங்கொண்ட கலை விமர்சகர். இரங்கலுக்கான வெறுஞ் சொற்றொடராக அல்லாமல் அவரின் இடத்தை பிறிதொருவர் நிரப்பவே இயலாது எனும் பேருண்மையை காலம் நமக்குணர்த்தும்.

Dhenugaதொன்னூறுகளின் தொடக்கத்தில் அவரைக் காணச் சென்றபோது கும்பகோணம் பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்துகொண்டிருந்தார். அப்போது கணினிமயமாக்கல் அறிமுகமாகிக் கொண்டிருந்த நேரம். சற்று ஆசுவாசப்படும் வங்கி நேரங்களில் அவரைச் சந்திக்கும்போதெல்லாம் அந்த வங்கியின் கான்டீனுக்கு அழைத்துச் சென்று காப்பி அருந்தியவாறு பேசிக்கொண்டிருப்பது அவரது பழக்கங்களில் ஒன்று. மாலைப் போழ்து களில் கும்பகோணம் பசும்பால் அய்யர் கடையில் பல நாட்கள் காப்பியோடு கலை உணர்வுகளையும் பகிர்ந்ததுண்டு. வங்கி அலுவலர் என்ற பரபரப் போ, அங்கலாய்ப்போ, மேலாளராக பதவி உயர்வு பெற்று ஓய்வு பெறும் வரையிலும்கூட அவரிடம் வெளிப்பட்டதில்லை. கலைகள் மீதான அவரது தணியாத ஆர்வமும் ஈடுபாடுமே, பணியிடத்தில் தன் அலுவல்களையும் ஒரு கலையம்சமாக மாற்றிக் கொண்ட மனநிலையை அவருக்களித்திருக்கக் கூடும்.

இலக்கியம் மட்டுமல்லாது ஓவியம், சிற்பம், நடனம், இசை, கட்டடக்கலை ஆகிய நுண்கலை களில் ஆழ்ந்த புரிதலும், ஈடுபாடும், தேர்ந்த ஞானமும் கைவரப் பெற்றவர். தமிழில் இத் துணைக்குமாகச் சிறப்புற செயலாற்றியவர். திருவா வடுதுறை டி.என்.ராஜரத்தினம் தொடங்கி வழுவூர் ராமையா பிள்ளை, திருவிடைமருதூர் மாலி, அரித்வாரமங்கலம், வலையபட்டி, பந்தைநல்லூர் என அவர் சிலாகித்துப் பேசுவதைக் கேட்பதற்கே ஒரு ரசனை வேண்டும். இடையிடையே தெரிதா, மாப்பசான், ஃபூக்கோ, சார்த்தர், காப்கா, டாவின்சி எல்லாம் தொட்டுவிட்டு திரும்பவும் தமிழ்ப் பண் பாட்டுக் கூறுகளைப் பேசுவார். அவரது மேடைப் பேச்சுகளிலும் அப்படியான பாணியையே கடைப் பிடிப்பார். கட்டற்ற உரையாடலை மிகவும் விரும்பிய கலைஞர். எந்த சந்தர்ப்பத்திலும் எவ்விடத்திலும் பேசுவதற்குத் தயாரானவராகவே அவரைக் கண்டுணரமுடியும். தனித்த அரசியல் முகாந்திரத்திற்குள் சுருக்கிக்கொள்ளாமல் பல தரப்பட்ட இலக்கிய நிகழ்ச்சிகளிலும் பங்கேற் பாளராக இருந்திருக்கிறார். அழைப்பித்த எந் நிகழ்வையும் அவர் புறக்கணித்ததேயில்லை. அவ் வனைத்திலும் பல்வேறு நினைவுகளையும் நுண் கலை, கலைஞர்கள், விழாக்கள், எழுத்தாளர்கள் பற்றியும் சுவையான அரிய தகவல்களை, காணக் கிடைக்காத பல அம்சங்களை அளவற்றுத் தந்திருக் கிறார். ஆரம்பநிலைக் கலைஞர்களே ஆர்ப் பரித்துக் கெக்கலிக்கும் இக்காலத்திலும் அவரிடம் வழுவாத எளிமையும் இயல்பான புன்னகையும் அபூர்வமும் அதிசயமும் நிறைந்ததுதான்.

மத்திய மாநில அரசுகளின் பல பாராட்டுகள், விருதுகள், பல்வேறு அமைப்புகளின் கௌரவிப்பு, பாராட்டுகள் எனப் பலவும் அவரை அலங்கரித் திருந்தாலும் எவ்வித ஆர்ப்பாட்டமோ, சுய தம் பட்டமோ இல்லாமல் அதன் நிழல்சுவடுகூட தன்னை அணுகாது கவனமாக தன்னை நிலை நிறுத்திக்கொண்டவர். எம்.வி.வெங்கட்ராமுக்கு ‘சாகித்ய அகாதமி விருது’ வழங்கப்பட்டபோது அவருடன் நெருக்கமாகவும் உற்ற துணையாகவும் இருந்து செயலாற்றினார். உடலும் வாழ்வும் நலிவுற்றிருந்த நேரத்தில் எம்.வி.வி.க்குக் கிடைத்த அந்த விருதில் எம்.வி.வியை விடவும் அதிக மகிழ்ச்சி கண்டவராக தேனுகாவை காண முடிந்தது மறக்க வியலாத நினைவு. எம்.வி.வி அவர்களின் காது கேட்புக் குறைபாட்டையடுத்து அவருக்கான நெருக்கமான அருந்துணையாக விளங்கியவர். வெளித் தெரியாமல் பல கலை இலக்கிய ஆளுமைகளை உதவித்து பல இலக்கியச் செயல்பாடுகளுக்கு காரணமாயிருந்தவர்.

உலகளாவிய நவீன இலக்கிய ஆளுமைகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போதே தமிழ் அடையாளங்களுடன் பொருத்திப் பார்த்து தமிழின், தமிழரின் மற்றும் இந்தியப் பெருமைகளை சிலாகிப்பார். கும்பகோணம் இராமசாமி கோவிலின் ஓவியங்கள், தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலின் சிற்பங்கள், வான்காவின் மஞ்சள் வண்ணம், சுவாமிமலை கோவில் வீதியுலாவின் மல்லாரி இசை, செட்டிநாட்டு வீடுகளின் கட்டடக் கலை நேர்த்தி, ஆதிமூலத்தின் கோட்டோவியம் என எந்த விஷயத்தைப் பற்றிப் பேசினாலும் நாம் திசை திருப்பும்வரை நுட்பமாகவும் ஆழமாகவும் விவரித்துக் கொண்டே இருப்பார். உரையாடல் கலையை அதிகம் பயன்படுத்துகிற கலைஞர்களில் அவரைப்போல காண்பதரிது.

கும்பகோணம், சுவாமிமலை, திருவாரூர், மதுரை என ஊர்களைப் பற்றிப் பேசும்போது தெருக்கள், விழாக்கள், வீதிஉலாக்களைப் பற்றி பிரதாபமாக அவர் சொல்லி முடிக்கையில் நாமும் அந்த உலாவில் கலந்து கரைந்து நிற்போம். கச்சேரி, நடனம், ஓவியம், சிற்பம் என அவர் சொல்லும் ஒவ்வொன்றும் நமக்கு மேலதிக தகவலைத் தேடு வதற்கான வாய்ப்பையே தராது. தத்ரூபமாக நிகழ்வு அடுக்குகளை அவர் சொல்லும் விதமே நம் முன் உருக்கொண்டு காட்சிகளாகத் தென்புறும்.

அக்டோபர் 25ம் தேதி இரவு அவர் இறந்த செய்தி கேட்டு நண்பர்கள் பலரும் ஞாபகங்களைப் பகிர்ந்து கொண்டிருந்தார்கள். வாழுங் காலத்தில் ஒருவர்தம் வாழ்வும் தொண்டும் மதிப்புறாத துரதிர்ஷ்டம் நிரம்பிய தமிழிலக்கியத்தில் அவரது உரையாடல்களும் கலை குறித்தப் பதிவுகளும் மேலதிக கவனம்பெறவேண்டியது அவசியமானது. யாவரும் கருத்தில் கொள்ள வேண்டியது. தேனுகாவின் கலைச் செயல்பாடுகள் மரபார்ந்த தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளின் படிமங்களில் ஒன்றெனக் கலந்தவை. இசை, ஓவியம், சிற்பம் தொடர்பானவற்றைக் கண்ணுறும்போது தேனுகாவின் முகம் எதிர்ப்பட்டுப் புன்னகைப்பதை அவரை அறிந்தவர்களால் உணர்ந்திடமுடியும் என்றே நம்பலாம்.

Pin It