அழுகை தொல்காப்பியர் குறிப்பிடும் எண் வகை மெய்ப்பாடுகளுள் ஒன்று.  ஏதாவது சோக நிகழ்வைக் கண்டோ அல்லது கேட்டோ தோன்றுவது அழுகையாகும்.   இழவை நிலைகளனாகக் கொண்டு அழுகை என்னும் மெய்ப்பாடு தோன்றும்.  நெருக்க மான ஒருவர் இறந்துபட்டால் மனிதர்க்கு அழுகை தோன்றுவது இயல்பன்றோ? தலைவன் போரில் இறந்துபட்டான்.  அவன் திரும்ப வராததால் பெருந் துயருற்ற மனைவி அவன் வீழ்ந்த இடத்துக்குச் செல்கிறாள்.  அப்பகுதி புலிகள் நடமாடும் இடம்.  கணவனின் உடலைக் கண்டு ஓவென்று அரற்றி அழ நினைக்கிறாள்.  அவள் அழும் சப்தத்தைக் கேட்டுப் புலி வந்து கணவனின் உடலையும் எடுத்துச் சென்று விடுமோ என்று அச்சப்படுகிறாள்.  அற மில்லாத கூற்றுவன் என்னைப் போலவே பெருந் துயர் உறுக என்று சபிக்கிறாள்.  என் கையைப் பிடித்து நடப்பாயாக என்று இறந்த உடலை நோக்கிப் புலம்புகிறாள்.  வன்பரணர் பாடிய இப்புறநானூற்றுப் பாடல் (255) அழுகை என்னும் மெய்ப்பாட்டிற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.

இழவில் அழுகை தோன்றலாம்.  ஆனால் உவகை என்ற மெய்ப்பாடு தோன்றுதல் உலக இயற்கைக்கு மாறானதன்றோ? போர் அறம் என்ற அடிப்படையில் எதிரிகளோடு போரிட்டு மடிதல் மகிழ்ச்சியானதாக அக்காலத்தில் கருதப்பட்டது.  இந்த அடிப்படையில் அமைந்த ஓர் அபபிரம்சா பாடலையும் ஒரு புறநானூற்றுப் பாடலையும் ஒப்பிட்டுக் காண்போம்.  முதலில் அபபிரம்சா பாடலைக் காண்போம்.  ஒரு தலைவி தலைவனைப் போருக்கு அனுப்பிவிட்டு அவனது வரவுக்காகக் காத்திருக்கிறாள் என்று கூறலாம்.  அனைவரும் போர் முடிந்து வீடு திரும்பி விட்டனர்.  இன்னும் தன் தலைவன் மட்டும் வீடு திரும்பியபாடில்லை.  தலைவியின் உள்ளத்தில் எதிர்பார்ப்பும் அச்சமும் சூழ்ந்து கண்களில் கலவரம் வெளிப்பட்டது.  பக்கத்துத் தோழிமார்களெல்லாம் அவளது வீட்டுக்கு வந்து ஆறுதலாகச் சூழ்ந்து நின்றனர்.  கணவன் உயிரோடு இருப்பதற்கு வாய்ப்பில்லை.  மனதில் பலவித எண்ணங்கள் சரம்போல தோன்றி மறைந்தன.  இறுதியாகத் தலைவன் போர்க் களத்தில் வீரத்துடன் போரிட்டு மடிந்தான் என்ற செய்தி தலைவியின் செவிகளுக்கு எட்டியது.  இதனைக் கேட்ட தலைவி, “என் தலைவன் இறந்து விட்டான் என்ற நல்ல செய்தியைச் (யாரோ) சொன்னார்கள்.  தோழி அவர் புறமுதுகிட்டு உயிரோடு வீட்டுக்குத் திரும்பியிருந்தால் நண்பர் களுக்கு மத்தியில் அவமானப்பட்டிருப்பேன்” என்று கூறுகிறாள்.1

statue karthikeyan 600‘செய் அல்லது செத்துமடி’ என்று இக் காலத்தில் கூறுதல் போலவே ‘வெற்றி அல்லது வீரமரணம்’ என்று அக்காலத்தில் கூறினர்.  இப் பாடல் தலைவியின் கூற்றாக அமைந்துள்ளது.  இளைய மனைவியின் தோற்றம் குறித்தோ, தலை வனுக்கும் தலைவிக்குமான உறவுநிலை குறித்தோ இப்பாடலில் எந்தச் செய்தியும் இடம்பெற வில்லை.  அவன் வீட்டுக்கு வராததால் வீரத்தோடு போரிட்டான் என்று அமைதி கொள்கிறாள்.  அச்செய்தியை நல்ல செய்தியாக அவள் நினைக் கிறாள்.  உவகை கொள்கிறாள்.  இதே தொனியில் சற்று வீரியமாக அமைந்துள்ள பாடல் ஒன்றைப் புறநானூற்றில் காணமுடிகிறது.  பாடல் தாயின் கூற்றாக அமைந்துள்ளது.  அப்பாடல் பின்வருமாறு:

நரம்பெழுந் துலறிய நிரம்பா மென்றோள்

முளரி மருங்கின் முதியோள் சிறுவன்

படையழிந்து மாறின னென்றுபலர் கூற

மண்டமர்க் குடைந்தன னாயி னுண்டவென்

முலையறுத் திடுவென் யானெனச் சினைஇக்

கொண்ட வாளொடு படுபிணம் பெயராச்

செங்களம் துழவுவோள் சிதைந்துவே றாகிய

படுமகன் கிடக்கைக் காணுஉ

ஈன்ற ஞான்றினும் பெரிதுவந் தனளே.  (புறம். 278)

முளரி மருங்கு - தாமரை இலை போன்ற அடிவயிறு, படையழிந்து - படைக்கு அஞ்சி, மாறினன் - புறம் கொடுத்து (இறந்து படுதல்), மண்டமர் - நெருங்கிச் செய்யும் போர், உடைந்தனன் - அஞ்சி இறத்தல், சினைஇ - சினந்து கோபப்பட்டு, படுபிணம் - இறந்து கிடக்கும் பிணங்கள், செங்களம் - இரத்தம் படிந்த போர்க்களம், காணுஉ - கண்டு, ஈன்ற ஞான்று - பெற்றெடுத்த நாள்.

நரம்புகள் வெளியே தெரியுமாறு இளைத்துப் போய் மெல்லிய தோள்களையுடைய தாமரை யிலையின் அடிப்பகுதியைப் போன்ற வயிற்றை யுடைய முதிய தாய் தன்னுடைய மகன் எதிரிகளின் படைக்குப் பயந்து புறமுதுகிட்டுப் போரில் மடிந்தான் என்ற செய்தியைப் பலர் கூறக் கேட்டு மிகவும் வெகுண்டு பலரும் நெருங்கிச் செய்யும் போரில் என் மகன் புறமுதுகிட்டு இறந்திருப் பானேல் அவனுக்குப் பால் தந்த என் மார்பகங் களை அறுத்து விடுவேன் என்று சபதமிடுகிறாள்.  உடனே கையில் கொண்ட கத்தியோடு போர்க் களம் விரைந்து செல்கிறாள்.  அங்கே ஒவ்வொரு பிணமாகப் பெயர்த்துப் பெயர்த்துத் துழாவித் தன் மகனைத் தேடுகிறாள்.  எதிரிகளால் இரு கூறாகச் சிதைக்கப்பட்டு இறந்து கிடக்கும் தன் மகனைக் கண்டு பேருவகை கொள்கிறாள்.  உவகை எவ்வாறு எனின் தன் மகனைப் பெற்றெடுத்த அன்று அடைந்த மகிழ்ச்சியைவிடப் பெரிதாக விருந்தது.

அபபிரம்சா பாடலை ஒப்பிட இப்பாடல் வீரியத்துடன் வெளிப்பட்டுள்ளது என்று ஏற்கனவே கூறினோம்.  மென்றோள், மண்டமர், செங்களம், படுபிணம், படுமகன் போன்ற தொகைச் சொற்கள் விரிந்த பொருளைக் கச்சிதமாக உணர்த்துகின்றன.  வீரர்களின் இரத்தத்தால் சிவந்த போர்க்களம் ‘செங்களம் எனப்படுகிறது.  படுபிணம், படுமகன் ஆகிய தொகைகள் பிணமாகிக் கிடக்கின்ற காட்சி யினைச் சுருக்கமாக உணர்த்துகின்றன.  இக்காலத்திலும், தெருக்கூத்துகளில் படுகளம் என்ற சொல் பயன் பாட்டில் உள்ளது.  தாயின் வருணனை பெரிய அவலத்தை உணர்த்துவதாகவும், கொண்ட வாளொடு போர்க்களம் செல்வது வீரச்சுவையை உணர்த்துவதாகவும் முரண்பட்டு அமைந்துள்ளன.  வயதான காலத்தில் தனக்குப் பற்றுக்கோடாக விளங்க வேண்டிய மகனை அதுவும் சிறுவனாக இருக்கின்றவனை இழந்து நிற்கிறாள்.  தனியே போர்க்களம் சென்று பிணங்களைத் துழாவிக் காணுதல் முதியோளின் துணிவை, மறக்குடி மாண்பை உணர்த்துகின்றது.

புறநானூற்றுப் பாடலில் தாயின் தோற்றம், சிறுவன் படையழிந்து மாறினன் என்ற செய்தி, தாய் வஞ்சினம் கூறுதல், அவன் வாளொடு போர்க்களம் சென்று செங்களம் துழாவுதல், படுமகன் கண்டு பெரிதுவத்தல் ஆகிய கருத்துக்களைக் காண முடிகின்றது.  அபபிரம்ச பாடல் சற்று எளிமையாக உள்ளது.  இரண்டு பாடல்களையும் தும்பைத் திணையினுள் தானைமறம் என்ற துறைக்குள் அடக்கமுடியுமன்றோ?

1. “It is well, O, sister! that my husband was killed in the battle, (for) if he had fled and returned home, I would have been put to shame amongst my friends” (P.67).

Pin It