திருமாலின் வழிபாடு இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மக்களின் மனதில் இருந்து வளர்ந்து வந்துள்ளது. சமூகத்தில் பல மாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளது. முல்லை நில மக்களின் வாழ்க்கையில் நிலவிய மாயவனின் வழிபாட்டை “மாயோன் மேய காடுறை உலகமும்” என்று தொல்காப்பியர் தம் நூற்பா வழியில் வைணவத்தைக் கூறியுள்ளார். மேலும் சங்க இலக்கியங்களில் திருமாலின் சிறப்புகளை விளக்கும் அவதாரக்கதைகள் பற்றிய குறிப்புகள் பல பாடல்களில் காணப்படுகின்றன. கலித்தொகை, பரிபாடல், திருமுருகாற்றுப்படை முதலான நூல்களில் மிக அதிகமாகவே திருமாலின் சிறப்புகளை உரைக்கின்றது.
சங்ககாலத்திற்குப் பின்பு களப்பிரர்கள் காலத்தில் சமணம் பௌத்தத்தின் வழியில் தோன்றிய பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் நாண்மணிக்கடிகையின் ஆசிரியர் விளம்பி நாகனார், திரிகடுகத்தின் ஆசிரியர் நல்லாதனார், கார்நாற்பதின் ஆசிரியர் கண்ணங்கூத்தனார், களவழிநாற்பதின் ஆசிரியர் பொய்கையார் போன்றோர் வைணவ வழிபாட்டைப் பின்பற்றி யவர்கள்.
இவர்களைத் தொடர்ந்து மக்களின் வழிபாட்டில் குறைந்தளவில் சிறப்பு பெற்ற வைணவ வழிபாடு பக்தி இலக்கிய காலமான ஏழாம் நூற்றாண்டில் வலிமை பெற்றது. சைவம், வைணவம் மேலோங்கி வளர்ந்தது. சமுதாயத்தில் பக்தியின் மூலம் பல மாற்றங்களையும் நற்செயல்பாடுகளையும் செய்யும் முயற்சியில் ஆழ்வார்களும் நாயன்மார்களும் செயல்பட்டனர்.
அந்தவகையில் வைணவத்தின் கருத்துக் களைத் தத்துவமாக இவ்வுலகிற்கு அளித்த கொடையாளர்கள் ஆழ்வார்கள். பக்தி ஒன்றி லேயே திளைத்தெழுந்த இந்த ஆழ்வார்கள் உலகத்தோரை மறந்துவிடவில்லை. ஆகையால் தங்கள் பாசுரங்களில் சமுதாயத்திற்கு வேண்டிய சில உபதேசங்களைக் கூறிச்சென்றுள்ளனர். ஆழ்வார்கள் கூறிய உபதேசமானது மனித வாழ்க்கையில் காணப்பெறும் ஏற்றத்தாழ்வுகள் பொய்மை பொறாமை போன்ற தீய குணங்களால் அவதியுற்றிருக்கும் மக்களின் துன்பங்களை நீக்கி தாம் வாழ்கின்ற வாழ்நாளில் இன்பமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கு உரிய வழிகளையும் இறைவனை அடைவதற்குரிய வழிகளையும் வகுத்துக்கொள்ள வழிகாட்டியுள்ளனர்.
கி.பி. ஏழு, எட்டு, ஒன்பதாம் நூற்றாண்டுகளில் தமிழகத்தில் வாழ்ந்த வைணவப் பெரியோர்கள் ஊர் ஊராகச் சென்று பக்திப் பாசுரங்களை பாடல்களாகப் பாடி தம் சமயமான வைணவத்தைப் பரப்பி வந்தனர். நாட்டில் செல்வாக்கு பெற்றிருந்த பௌத்த சமண சமயங்களை எதிர்த்து மக்களைத் திரட்டுவதற்கு கலை நயத்துடன் கூடிய பக்திப் பாடல்களின் சிறப்பினையே பயன்படுத்தியுள்ளனர். ஆழ்வார் களில் பலர் இசையோடு பாடல்களைப் பாடி ஆலயங்கள்தோறும் இறைவனை வழிபட்டனர்.
“பால் ஏய் தமிழர் இசைகாரர், பத்தர் பரவும் ஆயிரத்தின்”
“செயில் இல் சொல் இசைமாலை”
“பண்ஆர் தமிழ்”- என்று திருவாய் மொழியில் வரும் சொற்றொடர்கள்,
“விழுமிய இசையினொடு ஒலி சொலும் அடியவர்” - என்ற பெரிய திருமொழித் தொடரும் பாசுரங்கள் இசையுடன் பாடப்பட்டது என்பதை உணர்த்துகிறது.
சமணர்களும் பௌத்தர்களும் புலனடக்கம், உண்ணாநோன்பு, இன்பவெறுப்பு முதலியவற்றை மக்களிடம் எடுத்துரைத்துக் கொண்டிருந்தனர். துறவறத்தையே பெருமையோடு பேசி அதனை மக்களிடம் பேரளவில் பரப்புவதற்கு முனைந்தனர்.
ஆனால், ஆழ்வார்களும், நாயன்மார்களும் பக்தியைப் போற்றினர். அதற்கு இசைவாக இருக்கும் ஆடல் பாடல் முதலான கலைகளைப் போற்றிப் பாராட்டினர். இல்லற நெறியைப் பின்பற்றி அதில் இன்பமுற்றிருந்தாலும் எந்த தொழிலை மேற்கொண்டிருப்பினும் உள்ளத்தில் இறைவனுக்கு மட்டுமே இடம் தந்து வாழ்க்கை நடத்தினால் அதுவே போதும் என்றனர்.
பலவகைக் கலைகளையும் வளர்க்கும் பல்கலைக்கழகமாகத் திகழ்வதற்கு அவர்களுடைய பக்தி இயக்கம் துணையாக அமைந்தது. மக்களிடையே அவர்களின் இயக்கம் பரவுவதற்குத் தமிழ்ப்பாசுரங்கள் இசையோடு அமைந்த பாடல் அமைப்பு முறையே பெருந்துணை புரிந்தது.
ஆழ்வார் என்ற சொல்லுக்கு இறைவனுடைய குணங்களில் ஆழ்ந்து ஈடுபடுபவர்கள் என்று பொருள் கூறுவர். ஆழ்வார்கள் பாடியருளிய பாசுரங்கள் 4000. இந்தப் பாசுரங்களை நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என்று அழைப்பர். பிரபந்தம் என்ற சொல்லுக்கு நன்கு கட்டப்பட்ட என்பது பொருளாகும். திவ்யம் என்றால் அழகு என்று பொருள்படும். அந்தவகையில் நான்காயிரம் அழகியப் பாடல்களாக வைணவப்பாடல்கள் அமைந்துள்ளது. அதில் திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை பாடல்களில் ஆழ்வார்களின் சமுதாயக் கண்ணோட்டம் சிறப்புற விளங்குகிறது.
திருப்பள்ளியெழுச்சி
மேனாட்டுத் திறனாய்வாளர்கள் இலக்கியம் என்பது வாழ்க்கையைப் பிரதிபலித்துக் காட்டும் கண்ணாடி என்று கூறுவர். மேலும் இலக்கியம் வாழ்க்கையினின்று மலர்கின்றது. அது வாழ்க்கைக்குரியது என்றும் தம் கருத்தை நிலைநாட்டுவர்.
பண்டைத் தமிழர்களிடையே இருந்து வந்த ஒரு மரபு திருப்பள்ளியெழுச்சி என்ற ஒரு நிகழ்வு. இந்நிகழ்வு பிரபந்தம் தோன்றுவதற்கு அடிப்படைக் கருவாக அமைந்திருக்கலாம் என்று கருத இடமுள்ளது. உறங்குகின்ற அரசனை அதிகாலையில் துயிலெழுப்பும் முறை தமிழ்ச் சமுதாயத்தில் நிலவி வந்துள்ளதை தொல்காப்பியத்தில் காணலாம். தொல்காப்பியர் இதனைத் துயிலெடைநிலை என்ற புறத்திணைத் துறையாகக் காட்டுவார். துயிலெடைநிலை என்பது உறக்கத்திலிருந்து எழுப்புதல் என்று பொருள்படும்.
“தாவில் நல்லிசை கருதிய கிடந்தோர்க்குச்
சூதர் ஏத்திய துயிலெடை நிலையும்” (தொல். பொருள். புறத்: 30)
என்ற தொல்காப்பிய நூற்பா வழியில் அறியலாம்.
பக்தி இயக்க காலத்தில் சமுதாயத்தில் நிலவிவந்த இவ்வழக்கம் இறைவனை எழுப்புவதற்காக அமைந்தது. உறங்கலும் விழித்தலும் இன்றி “உறங்குவான் போல் யோகு செய்வானாய்” தானே முழுதுணரும் இயற்கை உணர்வினனாய்த் திகழும் இறைவன் மீது இவ்வழக்கம் திருப்பள்ளி எழுச்சியாகப் பரிணமித்துள்ளது.
“அரங்கத்து அரவணைப் பள்ளியானை”
ஆம் முதல்வன் இவன்” - என்று தேறிய அப்பனை உறங்கிவிழிக்கும் இயல்பினராகிய மாந்தரின் துயில் எழுங்காலத்துத் தொழுதுகொண்டு எழுதல் இன்றியமையாதது. ஆதலினால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கித் துயிலெழும் வழிபாட்டு நெறிமுறையினை மக்களுக்கு அறிவுறுத்தும் நோக்கத்துடன் ஆழ்வாரால் அருளப் பெற்றது திருப்பள்ளியெழுச்சி என்ற பாடல்களாகும்.
“கதிரவன் குணதிசை சிகரம் வந்தடைந்தான்
கனையிருளகன்றது காலையம் பொழுதாய்
மது விரிந்தொழுகின மாமலரெல்லாம்
வானவர் அரசர்கள் வந்து வந்தீண்டி
எதிர்திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த
இருங்களிற்றீட்டமும் பிடியொடு முரசும்
அதிர்தலில் அலைகடல் போன்றுளதெங்கும்
அரங்கத் தம்மா பள்ளி எழுந்தருளாயே!” -
என்று தொண்டரடிப்பொடியாழ்வார் திருவரங்கத்து பெருமானுக்கு திருப்பள்ளியெழுச்சி பாசுரங்களை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பாவைப்பாட்டு
பண்டைய காலத்தில் வாழ்ந்த இல்லறத்தார் பின்பற்றி வந்த நோன்புகளில் ஒன்று பாவைநோன்பு. இந்நோன்பை மார்கழி நோன்பு என்றும் கூறுவர். பாவைநோன்பில் மகளிர் பாடல் பாடுவர். அவர்கள் பாடிய பாடல்களே பாவைப்பாட்டாகும். சமுதாயத்தில் பல்லாண்டு காலமாகப் பின்பற்றிவந்த நோன்பு பற்றிய கருத்தே பாவைப்பாட்டில் பாடுபொருளாக அமைந்துள்ளது.
“மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளில்” அதிகாலையில் திருமணம் ஆகாத மகளிர் ஒருவரையொருவர் துயில் எழுப்பி குழுக்களாகக் கூடி பொய்கைக்கு சென்று நீராடி பாவை வைத்து வழிபாடு நடத்திப் பாடுவது பாவைப்பாட்டாகும். மழை பெய்து நாடு நலம் பெறுவதற்காகவும், தமக்கு நல்ல கணவர் வாய்த்துத் திருமணம் நடைபெறுவதற்காகவும் கன்னிப் பெண்கள் வைகறைப் பொழுதில் நீராடி நோன்பு நோற்பது பழங்காலத்து வழக்கமாகும்.
பக்தி இயக்க காலத்தில் அது கடவுள் வழிபாட்டோடு ஒன்றி அமைந்துவிட்டது. ஆண்டாளின் திருப்பாவையும், மாணிக்கவாசகரின் திருவெம்பாவையும் அவ்வகையில் அமைந்த பாடல்களேயாகும்.
மார்கழி நோன்பின் பண்டைய செய்திகள் திருப்பாவையில் காணப்படுகின்றன. கன்னியர் நிகழ்த்திவந்த பரமன் ஆடிப்பாடுதல், நாட்காலே நீராடுதல் போன்ற செயல்பாடுகளும் மை எழுதுதல், மலரிடுதல் இவற்றை மேற்கொள்ளாதிருத்தல் ஆகிய செயல்களும் குறிப்பிடப்படுகின்றன.
பாஞ்சசன்னியம், பெரும்பறை போன்ற இசைக்கருவிகளின் முழக்கமும் பல்லாண்டு இசைத்தலும் கோலவிளக்கு, கொடிவிதானம் போன்ற விருந்துகளும் கூறப்பெறுகின்றன. நோன்பு முடிந்ததும் மகளிர் மேற்கொள்ளும் கோலமும் விருந்தும் தெரிவிக்கப்பெறுகின்றன.
பாவை நோன்பால் விளையும் பயன், மழைபெய்து வளம் பெறுவது, நாடு செழிப்படைவது, ஆனிரை என்ற பெரும் செல்வம் பெருகவேண்டுவது என்ற கருத்தை அடிப்படையாக வைத்து 3ஆம் பாசுரத்தின் பாடல்கள் அமைந்துள்ளது. மேலும் இந் நோன்பை கன்னியர் நோற்பதையும் அவர்தம் குறிக்கோளையும் பாசுரம் 29இல் காணமுடிகிறது. மார்கழி முழுவதும் நீராடுவதற்கு உரியதாயினும் திருவாதிரை நாளே அதற்குச் சிறந்த நாளாக உள்ளதை, பரிபாடலும், திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களின் வழியில் அறிய முடிகின்றது.
இங்ஙனம் திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை இவற்றை ஆராயும் பொழுது சுட்டி ஒருவர் பெயர் கூறப்பெறாததால் இன்னார் என்று உணரமுடியாத கற்பனை மாந்தர் இருவரின் காதலாக இருந்த பாடல்கள் மாறி தெய்வத்தின் மீது கொண்ட காதலைப் பாடும் பாசுரங்களாக வளர்ந்து செழிந்துள்ள நிலை புலனாகின்றது. மன்னர்களின் வீரச்செயல்களைப் பாடும் நிலை மாறி இறைவனின் அற்புதத் திருவிளையாடல்களைப் பாடும் நிலை வளர்ந்துள்ளது. இறைவனின் செந்நெறிகளைப் பாடும் பாசுரங்கள் தோன்றியது.
ஆழ்வார் பாசுரங்களில் துறவறம் பழிக்கப்பெறவில்லை. இல்லறம் வெறுக்கப் படவுமில்லை. நிலையாமை உணர்த்தப்படுகின்றது. கலைகள் போற்றப்படுகின்றது.
உலக இன்பங்களை நுகர்ந்தவாறே இறைவனிடத்தில் பக்தி செலுத்தலாம் என்பதைப் பாசுரங்கள் தெளிவாக்குகின்றன. உலக வாழ்வைக் கண்டு அஞ்சும் நிலைமாறி மக்கள் கூட்டமாகத் திரண்டு இறைவனை வழிபட்டு பக்தியுணர்ச்சியில் திளைக்கலாம் என்ற கருத்தோடு ஒற்றுமைக்கும் ஊக்கத்திற்கும் வழிவகை செய்வதாக அமைகின்றது.
இறைவனுக்கு முன் எல்லோரும் சமமானவர்கள், இறைவன் ஒருவனே மக்களின் தலைவன் என்ற கருத்தைப் பரப்பும் நோக்கில் பாசுரங்கள் பெருந்துணை நிற்கின்றன. மன்னர்களையும் செல்வர்களையும் போற்றிப் பாடுவதற்குப் பயன்பட்ட தமிழ் மொழிப்பாடல்கள் இறைவனைப் பாடுவதற்கு மட்டுமே பயன்பட வேண்டும் என்ற கொள்கை பிறந்து, வளர்ந்து, ஓங்கியது. அரசர்கள் வாழ்ந்த அரண்மனைகளுக்கு இருந்த சிறப்புகள் எல்லாம் திருக்கோயில்கள் பக்கம் மாற்றமடைந்தது.
பக்திப் பாசுரங்கள் ஊட்டிய உணர்ச்சியின் விளைவாக அரண்மனைகளின் கட்டிடங்களைவிடத் திருக்கோயில்களின் கட்டிடங்கள் சிறந்து விளங்கியது. விண்ணை முட்டும் கோபுரங்கள் கோயில்களின் வாயிலாகத் தோன்றின.
அதிகாலையில் அரசர்களுக்குப் பாடிய துயிலெடைநிலை திருப்பள்ளி எழுச்சியாக மாறியது. அரசனும் வைகறையில் எழுந்து மக்களுடன் சேர்ந்து திருப்பள்ளியெழுச்சி வழிபாட்டில் கலந்து கொள்ளும் நிலைமை ஏற்பட்டது.
அரண்மனை விழாக்கள் திருக்கோயில் விழாக்களாக மாற்றமடைந்தது. மனிதர்களுக்குள் இருந்துவந்த உயர்வு தாழ்வுகளும், சாதி வேறுபாடுகளும் ஒருவாறு நீக்குவதற்கு இப் பாடல்கள் பயன்பட்டது.
கோயில் கோபுரத்தின் உயரத்தைவிட குடிமக்களின் வீடு உயரம் குறைவாக இருக்கக்கூடிய மரபு பக்தி நெறி வாழ்க்கையில் இன்றும் மரபாக பின்பற்றப்படுகிறது.
இவ்வாறு சமூகத்தின் ஒற்றுமைக்கும் மக்களின் மன வளர்ச்சிக்கும் ஆறுதலுக்கும் ஆழ்வார்களின் பாடல்கள் துணைசெய்துள்ளதை நாம் இதன் வழியில் அறியலாம்.