இன்றைய சூழலில் தமிழ் மொழி பேசு பொருளாக உள்ளது, காலந்தோறும் பிற மொழி வல்லாண்மையிலிருந்து தமிழைக் காக்க பெரும் போராட்டமாக முன்னெடுத்து தமிழின் தொன்மையையும் தமிழ் மொழியின் வரலாற்றையும் சிறப்பையும் எதிர்கால தலைமுறையினருக்குக் கடத்தும் பொறுப்பு மாபெரும் தமிழ்ச் சமூகத்திற்கு உண்டு என்பதை அடிக்கடி நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறது நாட்டில் நடக்கின்ற சூழல்.

tamilnadu templeஒரு மொழி வளம் மிக்கது, தொன்மை வாய்ந்தது என்பதற்கு அம்மொழியில் தோன்றிய இலக்கண, இலக்கிய வளங்களே சான்றாகும். இருப்பினும், இலக்கியத்தை வைத்து தமிழ்மொழியின் காலத்தை நிர்ணயித்த காலங்கள் கடந்து அவற்றிற்கு பல படி மேலாக தமிழின் தொன்மையைத் தொல்லியல் சான்றுகள் வரலாற்று அடிப்படையில் உறுதி செய்கின்றன.

தொல்காப்பிய காலத்தை வரலாற்று மற்றும் தமிழறிஞர்களான பி.டி சீனிவாச அய்யங்கார், இராமச்சந்திர தீட்சிதர், லட்சுமணசாமி முதலியார், சி.இலக்குவனார், இளங்குமரனார், மு.வரதராசனார் போன்றோர்களின் கூற்று அடிப்படையில்

கி.மு 700 என்றும் சங்க இலக்கியங்களை கி.மு 500 என்றும் உறுதி செய்கின்றனர், எழுதப்பட்ட இலக்கியங்களுக்குப் பழமை 2500, 2700 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் போது, பேச்சு மொழி தோன்றிய காலம் இதை விட பல்லாயிரம் ஆண்டுகள் முந்தையது என்பதற்கு இந்த இலக்கியச் சான்றுகளை விட இப்போதைய தொல்லியல் சான்றுகள் அகழாய்வுகளில் அகழ்ந்தெடுக்கப்பட்ட சுத்தி, கோடரி போன்ற இரும்புக் கருவிகளை வைத்தும் இரும்பு பயன்பாட்டுக் காலம் பத்தாயிரம் ஆண்டு பழமையானது என்பதை நிரூபிக்கிறது.

கே.கே பிள்ளை, நீலகண்டசாஸ்திரி, கா.சுப்பிரமணிய பிள்ளை போன்ற வரலாற்று அறிஞர்கள் குமரிக்கண்டத்தில் முதல் சங்கம் இருந்ததாகவும் அதன் காலம் கி.மு 8000 என்றும் மெய்ப்படுத்தி இருக்கிறார்கள். பழனி, கொடுமணல், ஆதிச்சநல்லூர், பூம்புகார் பொருந்தல், அரிக்கமேடு ஆகிய இடங்களில் நடந்த ஆய்வுகள் பழந்தமிழரின் புதைவிடங்களாகக் கண்டெடுக்கப்பட்டன, இவற்றின் காலம்

கி.மு 1000 ஆகும்.  சிந்துசமவெளி நாகரிகமே தமிழரின் பண்பாட்டுக்கு அடித்தளம் எனும்போது அதுவே நமக்குத் தொன்மையானது. ஆனால் அதைவிடத் தொன்மையான தூண்கள், தொழிற்சாலைகள், கட்டிடங்கள் கீழடி அகழாய்வுகளில் கிடைத்ததாகத் தொல்லியல் அகழாய்வுகள் சான்று பகர்கின்றன.

அசோகர், கனிஷ்கர், மௌரியர், புத்தர் கால பிராமி, பிராகிருதம், பாலி மொழியிலான வரிவடிவங்கள், தமிழ் பிராமி - அதாவது தமிழ் - வரிவடிவங்கள் இன்னும் அந்த வடிவங்களில் எழுதும் ஆற்றல் பெற்றவர்கள் இருக்கும்போது தமிழ்மொழி காலந்தோறும் தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளும் மொழியாகத் திகழ்வதைப் பார்க்கிறோம், தமிழி வரிவடிவத்தில் திருக்குறளை எழுதி உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடாக தமிழ்நாடு அரசு அதை வெளியிட்டுள்ளது.ஆக பேச்சிலும் எழுத்திலும் செழுமை பெற்றது நம் தமிழ் மொழி.

தமிழே, திரமிள, திராவிட என மருவியது.தமிழ் மொழியில்தான் முதல் எழுத்து வடிவம் தோன்றியது என்பது ஆய்வாளர்களின் கூற்றாகும். சிந்து சமவெளி நாகரிக காலம் கி.மு 12000 என (2009)இல் மேற்கொள்ளப்பட்ட பிரித்தானிய ஆய்வுக்குழு சொல்கிறது. சிந்து சமவெளி நாகரிகத்தை ஆய்வு செய்து வெளிப்படுத்திய அடையாளங்கள் மற்றும் மொழி தடயங்கள் தமிழ் மொழியின் வடிவங்களைக் கொண்டுள்ளன என இராசு பாதிரியார் விவரிக்கிறார்.

இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பமே உலக மொழிக் குடும்பங்களில் பெரியது, அசோகர் கால பிரமிடுக்கு வெகுகாலம் முன்பே கி.மு 800 தமிழ் எழுத்து உருவாகி விட்டது என்கிறார் வரலாற்று அறிஞர் கார் (carr)

தமிழே உலகின் முதன்மை மொழி, மூத்த மொழி

மாந்தன் தோன்றிய முதல் கண்டம் குமரிக்கண்டம்

(லெமூரியா)

மாந்தன் பேசிய முதல் மொழி தமிழ்; ஆரியத்திற்கு மூலம் தமிழ்

எனத் தமிழ் முழக்கம் கொண்டவராக பாவாணர் திகழ்ந்தார்.

“பஃறுளியாற்றுடன் பன்மலை அடுக்கத்துக்

குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள”

(சிலம்பு11;19-20)

“மலிதிரை ஊர்ந்து தன்மண்கடல் வெளவலின்”                                                                                                     (கலி104;1)

என கடல்கோளால் பெரும் நிலப்பரப்பு அழிந்ததை இலக்கியங்கள் சான்று காட்டுகின்றன.

ஆங்கிலப் புவியியலாளர் சீயர்லஸ் வுட் (Searles V.Wood)  ஆல்பிரட் வேலாஸ் (Alfred Russell Wallace)   ஃபிலிப்ஸ்க்லெட்டர் (Philip Scleter),  ஹேக்கெல் (Haeckel) போன்ற மேலைநாட்டு அறிஞர்களின் கூற்றும் லெமூரியா கண்டம் இருந்ததை உறுதி செய்கின்றது.

ஜெர்மனி,இலத்தீன்,கிரேக்கம்,ஹீப்ரு, சமஸ்கிருதம் என அத்தனை மொழிகளுக்கும் மூலம் தமிழ். இதைப் பாவாணர் தனது சொல்லாராய்ச்சி மொழியாராய்ச்சிக் கட்டுரைகளின் வழி மற்ற மொழிகளில் தமிழின் மூலம் இருப்பதை இது போன்ற சொற்களின் வழி. (coin-காசு, Coir-கயிறு, Paise - பைசா, Cry- கரைதல், Navy - நாவாய்) நிரூபிக்கின்றார்.

Coffin  என்கிற லத்தீன் சொல்லிலிருந்து coffee  என்கிற ஆங்கிலச் சொல் வந்திருக்கிறது, cafe என்றால் கன்று. கன்றின் குளம்படி போல காப்பியின் விதை இருப்பதால் காப்பிக்குக் “குளம்பி” என்று பெயர் வந்தது என வேர்ச்சொல் மூலம் விளக்குகிறார் பாவாணர்.

தமிழ்மொழி ஒவ்வொரு சொல்லுக்கும் வேர்ச்சொல்லைக் கொண்டுள்ளது. உந்துதலால் உலகம், ‘ஞால்’ என்றால் ‘தொங்குதல்’.தொங்குவதால் ‘ஞாலம்’ நிலைப்பதால் ‘நிலம்’ எனவும்,சுர் என்றால் ’சுடுதல்’. சுடுவதால் சுரம். நீரின் ஓட்டம் சலசல என இருப்பதால் சலம் எனத் தமிழ் மொழியின் சிறப்புக்கும் தொன்மைக்கும் சான்றுகள் இருக்கின்றன.

 “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்

தமிழ் கூறும் நல்லுலகம்”

தமிழில் இருந்துதான், கன்னடம், துளு, மலையாளம் எனத் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி தமிழ் மொழி பரவி 13 கோடி மக்கள் பேசும் மொழியாகவும் எழுத்து மொழியாகவும் சிறப்புப் பெற்றிருக்கிறது என்றால் இதைவிட வேறு என்ன சொல்வது.

தமிழ்மொழி மிகச்சிறந்த செவ்வியல்மொழி எனவும் தமிழ்ச்சொற்கள் செம்மொழிகளான கிரேக்கம், இலத்தீனில் இடம்பெற்றுள்ளன எனவும், தமிழ் மொழியிலிருந்து பிரிந்தவையே தெலுங்கு,கன்னடம்,மலையாளம், துளு மொழிகள் எனவும் இவையாவும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவை. திராவிடம் வடமொழி சார்பற்றது என்றும் வட சொல் என மயங்கும் பல சொற்கள் திசைச் சொற்களே என்றும் தமிழ்மொழி வடமொழியின் துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல் உடையது என்கிறார் ராபர்ட் கால்டுவெல்.

தமிழ் என்பதன் திரிபே திராவிடமானது  (தமிழ் வரலாறு.ப33)

எமனோ, பர்ரோ, கமில்சுவலபில், சுசமு, ஓனோ, குரோ, அலெக்சாண்டர் டுபியான்சசி, தக்காசி போன்றோர் தமிழை உலகத் தரத்திற்குக் கொண்டு சென்றனர்.

திராவிட மொழிக் குடும்பம் தனித்தது. அதற்கும் ஆரிய மொழிக் குடும்பத்திற்கும் சம்பந்தமில்லை என்ற கருத்தை முதலில் (1816) முன்வைத்தவர் பிரான்சிஸ் டபிள்யு எல்லிஸ் ஆவார்.

தமிழ் மொழி மீது காதலும் மதிப்பும் கொண்டவர்கள் தமிழர்கள் என்கிறார் ஜார்ஜ் எல் கார்ட்.      

தமிழ் மொழியையும் தமிழ் இலக்கியங்களையும் கற்று ஆராய்ந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதில் என் வாழ்நாளைச் செலவிட்டேன் என்கிறார். (ஜி.யு போப்)

“பொய் அகல நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம் ?

வையகம் போர்த்த வயங்கு ஒலி நீர்-கையகலக்

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு

முன் தோன்றிய மூத்தகுடி தமிழ்”

“திங்களடும் செழும்பரிதி தன்னோடும்

விண்ணோடும் உடுக்களோடும் மங்குல் கடல்

இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்”

-என்கிறார் பாவேந்தர்

ஆதி மனிதன் தமிழன் தான்

அவன் மொழிந்ததும் செந்தமிழ் தேன்

“மயிர்நீப்பின் வாழாக் கவரிமான் அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின்”(திருக்குறள், 969)

“நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி” (புறம்., 132)

நரந்தை என்னும் புல்லைத் தின்னும் கவரி இமயமலைப் பகுதியில் வாழும் மாட்டு இனமாகும். சடை சடையாக முடியை உடைய கவரிலிருந்து சபரி வந்திருப்பதற்குச் சான்று பதிற்றுப்பத்து.(63;12) சவரி என்பது செயற்கை முடி. ‘மா’ என்பது விலங்கினப் பொதுப்பெயர், கவரியின் ஆண்பால் ஏறு என்பதைத் தொல்காப்பியம் மரபியல் சுட்டுகிறது. சீவகசிந்தாமணி “மானக்கவரி” என்றும், கம்பராமாயணம் ‘மானமா’, பெருங்கதை பெருந்தகை ‘கவரி’ என்றும் சுட்டுகிறது.இவையெல்லாம் குமரி முதல் இமயம் வரை தமிழ் பேசிய மக்கள் வாழ்ந்தனர் என்பதற்குச் சான்றாகிறது.

இயற்கையோடு தோன்றிய மொழி தமிழ் மொழி என்பதற்கு இலக்கண, இலக்கியங்களும் அதன் வரலாற்றுத் தொன்மத்தைத் தொல்லியல் ஆய்வுகளும் உறுதி செய்கின்றன. இருப்பினும் காலம் தோறும் தமிழ், வடமொழிக் கலப்பு, இந்தி திணிப்பு என மொழிக்கான குரல் எழுப்புவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மணிப்பிரவாள நடை முதல் தனித்தமிழ் இயக்கம் கண்டது தொடர்ந்து மொழிக்கான போராட்டங்கள் தொடர்ந்த வண்ணம்இருக்கின்றன. தெலுங்கு-ஆந்திரம், மலையாளம்-கேரளம், கன்னடம்-கர்நாடகம் என்று அந்தஅந்த மாநில தாய்மொழிப் பெயர் மாநிலங்களுக்குச் சூட்டவில்லை. தமிழ் பேசும் தமிழ்நாட்டிற்கு மட்டுமே தமிழ் நாடு என்று இரு மாபெரும் பேறு உள்ளது. ஆகவே தமிழ் என்பது மொழி அல்ல, அது தமிழர்களின் அடையாளம்.அடையாளத்தைத் தொலைத்து விட்டு தேடுவது என்பது முகவரியில்லாத வீட்டைத் தேடுவது போன்றது என்பதே காலத்தின் குரலாகவும் மக்களின் குரலாகவும் உள்ளது.

தொன்மைக் காலங்களில் அதாவது சங்க இலக்கியப் பாடல்களில் சமஸ்கிருதக் கலப்பு அதாவது மொழிக் கலப்பு என்பது நூற்றில் ஐந்து விழுக்காடு கலந்து இருக்கிறது. அதற்குக் காரணம் பாடிய புலவர்கள். பாடப் பெற்ற இடம், அரசாட்சி செய்யும் மன்னன் போன்ற புறச் சூழலால் மொழிக்கலப்பு ஏற்பட்டிருக்கிறது. திருக்குறளில் முதல் குறளில் உள்ள “ஆதி பகவன்” இதில் பகவன் என்ற சமற்கிருதச் சொல்லைத் திருவள்ளுவர் கையாளவில்லையா என்னும் கேள்வி எழும்போது திருவள்ளுவர் கடவுள் வாழ்த்துப் பாடவில்லை, அது உரையாசிரியர்களால் சேர்க்கப்பட்டிருக்கலாம் எனும் ஐயமே மேலோங்குகிறது, முதலில் மதம் சார்ந்த உரைகளும் அதற்குப் பிறகான காலங்களில் பகுத்தறிவு சார்ந்த உரைகளும் தோன்றின.

உரைகளில் பகவன் என்பதைப் “பகலவன்” என்றே குறிப்பிடுகின்றனர். குறிப்பாகப் புலவர் குழந்தை எழுதிய திருக்குறள் உரையில் பகவன் என்பதில் வேர்ச்சொல் ‘பகவு’ என்பதாகும். பகவு என்பது பகுதியைக் குறிப்பதாகும். அன் என்னும் ஆண்பால் விகுதி சேர்ந்து பகவன் ஆயிற்று. பகவன் என்பதை முதன்மையான குணங்களை உடையவன் என்கிறார். இரவையும் பகலையும் பகுப்பது சூரியன் என்பதால் பகலவன் என்பதே பொருத்தம் ஆகிறது. உயிரினத் தோற்றத்திற்கு எல்லாம் முதன்மை சூரியனே ஆவான். மேலும் பகவன் என்ற சொல்லுக்கு தேவன், அருகன், சிவன், திருமால், சூரியன், கடவுள், இறைவன் எனப் பல பொருட்கள் இருக்கின்றன.

திருக்குறள் உலகப் பொதுமறை நூல் என்பதாலும் திருக்குறள் மதநல்லிணக்க நூல் என்று குறிப்பிடப்படுவதாலும் திருவள்ளுவர் இறைவன், கடவுள் எனும் பொருளில் பகவன் என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கமாட்டார் எனும் நிலையில் பகவானுக்கு பகலவன் என்பதே பொருத்தமாகிறது. தமிழ் இலக்கியங்களைச் சாடிய பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் ஏற்றுக் கொண்ட ஒரே நூல் திருக்குறள், திருக்குறளைப் பரவுதல் செய்வதில் பெரும் பங்கு கொண்டவர். சென்ற இடங்கள் எல்லாம் திருக்குறள் நூல்களை விற்றவர். திருக்குறள் மாநாடு நடத்தியவர்.

இப்படித் தமிழ் மொழியில் உள்ள இலக்கிய வளத்தை சொல்லிக் கொண்டே போகலாம். தமிழைப் பழிப்பது தாயைப் பழிப்பது போல..! எனும் உணர்வு மேம்பட்டால் தமிழ் மொழிக்கு சிறு தாழ்வு வந்தாலும் நாம் வெகுண்டு எழுவது இயல்பானது. ஆகவே தமிழால் இணைவோம்..! தமிழால் வெல்வோம்! தமிழால் வாழ்வோம்...!