kuthoosi gurusamy 263உலகத்தில் அதிகமான குஷ்டரோகிகள் எந்த நாட்டில்? இந்தியாவில்.

உலகில் அதிகமான சிசு மரணம் எந்த நாட்டில்? இந்தியாவில்.

உலகில் அதிகமான பிரசவ மரணம் எந்த நாட்டில்? இந்தியாவில்.

உலகில் அதிகமான க்ஷய ரோக மரணம் எந்த நாட்டில்? இந்தியாவில்.

உலகில் அதிகமான இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் மரணம் எந்த நாட்டில்? இந்தியாவில்.

உலகில் அதிகமான தற்குறிகள் எந்த நாட்டில்? இந்தியாவில்.

உலகில் அதிகமான கால் நடைச் சாவு எந்த நாட்டில்? இந்தியாவில்.

இப்படியாக அடுக்கிக் கொண்டே போகலாம்.

 பாரத மாதா இருக்கின்றாளே! அவள் பலே கைகாரி! இது மாதிரி விஷயங்கள் எதுவானாலுஞ்சரி! உலகப் போட்டிப் பந்தயம் வைத்தால் நிச்சயம் முதல் பிரைஸ் தான் அடிப்பாள்! வெகு காலமாகவே அடித்து வருகிறாள்!

பஞ்சாங்கமும், பத்து அவதாரமும் உள்ள நாட்டில் இவைகளில் கூட முதல் பிரைஸ் கிடைக்காவிட்டால், எப்படி?

இவைகளில் உலக நாடுகளுடன் போட்டி போட்டு இந்தியா முதல் பரிசு பெறுவதுபோல், இந்தியாவின் இதர பாகங்களுடன் போட்டி போட்டு நம் சென்னை மாகாணம் ஒரு விஷயத்தில் முதல் பரிசு பெற்றிருக்கிறது.

சென்ற ஆண்டில் மட்டும் எழும்பூர் பிரசவ ஆஸ்பத்திரியில் 7,000 குழந்தைகள் பிறந்திருக்கின்றனவாம். இவ்வளவு குழந்தைகள் ஒரே ஆண்டில் இந்தியாவில் வேறு எந்த ஆஸ்பத்திரியிலும் இதுவரை பிறந்ததேயில்லையாம்! நாள் ஒன்றுக்கு 19 குழந்தைகளைப் பெற்றெடுத்த எழும்பூர் ஆஸ்பத்திரியைப் பாராட்டுகிறேன்!

இந்த ஆஸ்பத்திரி உலகிலேயே பெயர் பெற்றது என்று சொல்லக் கேள்வி.

ஆண் டாக்டர்களிடம் பிள்ளைப் பேறு பார்த்து கொள்ளும் பெண்கள் மிக மிக அபூர்வம்! ஆனாலும் டாக்டர் லட்சுமணசாமி முதலியார் போன்ற பிள்ளைப்பேறு நிபுணர்களிடம் எத்தனையோ ஆயிரக் கணக்கான தாய்மார்கள் புத்துயிர் பெற்றுத் திரும்பியுள்ளனர்?

நம் நாட்டுப் பெண்களின் தன்மையைத் தெரியாமல் அன்றொரு நாள் தாயுமானவர் செட்டிப் பெண்ணுக்கு மருத்துவம் பார்ப்பதற்காக தாய் உருவம் கொண்டார்! “ஸ்டெதாஸ்கோப்”பைக் காதில் வைத்துக் கொண்டு (சில புது டாக்டர்களும் ஜெயில் டாக்டர்களும் காதில் வைக்காமல் கழுத்தில் மாட்டியபடியேகூட நெஞ்சு சோதனை செய்வதுண்டு!) சூட்டும் பூட்டுமாக தாயுமானவர் போயிருந்தால் செட்டிப் பெண் பிள்ளைப் பேறு பார்க்க அநுமதித்திருப்பாளா?

 அன்று தாயுமானவருக்குத் தெரியாத சங்கதியொன்று இன்று டாக்டர் லட்சுமணசாமி முதலியாருக்குத் தெரியும். அதில் அவர் உலக நிபுணர்களில் ஒருவராம். அதாவது இயற்கை முறையில் குழந்தை வெளிவர முடியாவிட்டால் வயிற்றைக் கீறிக் குழந்தையை உயிருடன் எடுத்துவிட்டு பிறகு வயிற்றைத் தைத்து விடுவாராம். இதற்குச் “சிசேரியன் ஆப்பரேஷன்” என்று கூறுவார்கள். அதாவது ஜூலியஸ் சீசர் என்ற ரோமாபுரி மன்னன் இப்படித்தான் பிறந்தானாம்!

எழும்பூர் ஆஸ்பத்திரியில் பிறந்த 7,000 குழந்தைகளில் 100-200 ஆவது இந்த மாதிரிப் பிறந்தவைகளாயிருக்கும் என்பது நிச்சயம்!

“பூ! இதென்ன பிரமாதம்? எல்லாம் தஞ்சாவூர் அரண்மனையிலிருந்த ஏட்டுப் பிரதிகளில் எழுதியிருந்தவைகளைத் திருடிப் போய்க் கண்டுபிடித்தது தானே?” என்கிறார், அதோ நிற்கும் உயர் திருவாளர் பழமைப் பண்டாராம்!

இந்த 7,000 குழந்தைகளில் அரச மரத்தைச் சுற்றியதன் காரணமாக கர்ப்பந்தரித்துப் பிறந்தவைகள் எத்தனை? ராமேஸ்வரம் போய்ப் பிறந்தவைகள் எத்தனை?

அரச மரத்தைச் சுற்றினால் யாருக்கு வேண்டுமானாலும் பிள்ளை பிறக்குமா என்று கேட்காதீர்கள்! 75 -வயது பாட்டியம்மாள் சுற்றினால் பிறக்குமா? வைதீக வைத்திநாத சர்மா அரச மரத்தைச் சுற்றினால் அவருக்குக் கர்ப்பம் தரிக்குமா? இந்த மாதிரிக் கோணல் கேள்விகளெல்லாம் என்னிடம் கேட்டால் எனக்குப் பதில் சொல்லத் தெரியாது!

ஒலிம்பிக் பந்தயம் என்ற சினிமா பார்த்தேன். 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள்கூட தலை கீழாகத் தண்ணீரில் குதித்து நீந்துகிறார்கள்! இரும்புக் குண்டு எறிகிறார்கள்! ஓட்டப் பந்தயத்தில் போட்டி போடுகிறார்கள். இவர்களில் அநேகமாக எல்லோருமே குழந்தை பெற்றவர்களாம்!

ஆனால் நம் நாட்டுப் பெண்களைப் பாருங்கள்! ஒரு குழந்தையைப் பெற்றவுடனே தேவாங்கு மாதிரிக் காட்சியளிக்கிறார்கள்!

ஒரு ஆஸ்பத்திரியில் மட்டும் ஒரே ஆண்டில் 7,000 குழந்தைகள் பிறந்திருக்கின்றன என்றால், இதே ஆண்டில் ஆஸ்பத்திரி வசதியில்லாத படியால் செத்துப் போன கர்ப்பவதிகள் எத்தனை ஏழாயிரம் இருக்கும் தெரியுமா?

எழும்பூர் ஆஸ்பத்திரியைப்போல ஒவ்வொரு நகரத்திற்கும் ஓர் ஆஸ்பத்திரி கட்டலாம்! ஆனால் கருமியிடம் அகப்பட்ட பணம் அவனுக்கும் பயன்படாமல், பிறருக்கும் பயன்படாமல் கிடப்பதுபோல, ஏராளமாகக் கிடக்கிறது! ஒவ்வொரு சாமியின் கழுத்திலும் காதிலும் இருக்கும் வைர நகைகள் கொஞ்சமா? அவைகளை விற்றால் எழும்பூர் ஆஸ்பத்திரியைப் போல குறைந்த பட்சம் ஆயிரம் ஆஸ்பத்திரிகளைக் கட்டலாமே!

இதைச் சொன்னால் - சூனாமானா! நாஸ்திகன்! என்று கூச்சல் போடுகிறார்கள்! நேரு சர்க்காருக்குப் புகார்க் கடிதம் எழுதுகிறார்கள்!

இவர்களைத் திருத்துவதைவிட ஒரு சர்க்கஸ்கூட நடத்திவிடலாம் போல் தோன்றுகிறது! (மிருகங்களின் இயற்கைக் குணத்தை மாற்றுவது கூட எளிது என்ற கருத்தில்தான் சொல்கிறேன்! வித்தியாசமாக வேண்டாம்!)

- குத்தூசி குருசாமி (14-12-1948)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It