19, பிப்ரவரி, 1855ஆம் ஆண்டு பிறந்த உ.வே.சாமிநாதையருக்கு 06, மார்ச்சு, 1935-ஆம் நாள் எண்பதாம் ஆண்டு நிறைவு விழாக் கொண்டாட்டம் நடத்தப்பெற்றுள்ளது.கால அளவைக் கொண்டு 25, 50, 100ஆண்டுகள் நிறைவடையும்பொழுது வெள்ளி, பொன், வைரம் எனக் கொண்டாட்டங்கள் நடத்துவதைப் போன்று, ஒருவரின் வாழ்நாட்களில் அறுபதாம் வயது நிறைவடையும்பொழுது ‘சஷ்டிபூர்த்தி’ என்றும், எண்பதாவது வயது நிறைவடையும்பொழுது ‘சதாபிஷேகம்’ என்றும் அழைப்பது வைதீக வழக்கமாகும். அந்த நாளை விழாவாகக் கொண்டாடி மகிழ்வது வைதீகர்களின் மரபாக உள்ளது.
1915, பிப்ரவரி, 2ஆம் நாள் உ.வே.சா. அவர்களுக்கு அறுபதாம் ஆண்டு நிறைவுற்றது; இந்தச் ‘சஷ்டிபூர்த்தி’யைக் கொண்டாட அன்பர்கள், உறவினர்கள் விரும்பியும் உ.வே.சா. அதைக் கொண்டாட விரும்பாமல் அன்றைய நாளில் துணைவியார் சரஸ்வதியுடன் திருக்காளத்தி சென்று அபிஷேகம் செய்து, கிரிப்பிரதட்சிணம் செய்துவிட்டு வந்ததோடு முடித்துக்கொண்டுள்ளார்.
எண்பதாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் ‘சதாபிஷேக’ விழா அன்பர்களும் உறவினர்களும் விரும்பி வேண்டிக்கொண்டு ஏற்பாடு செய்தபடி1935, மார்ச்சு 06-ஆம் நாள் கொண்டாடப்பட்டுள்ளது.
உ. வே. சாமிநாதையர் அவர்களின் சதாபிஷேக விழா வெகுசிறப்பாகக் கொண்டாடப்பட்டுள்ளது. இந்த விழாவைக் கொண்டாடுவதற்கு அன்றைய பொதுப் பணித்துறை அமைச்சராக இருந்த கனம் பி. டி. ராஜன் அவர்களைத் தலைவராகக் கொண்ட ஒரு விழாக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விழாக் குழுவில் டி. சிவராமசேதுப்பிள்ளை, பெ.நா. அப்புசுவாமி, எஸ். வையாபுரிப்பிள்ளை ஆகிய மூவரும் உறுப்பினர்களாகவும், கே.வி. கிருஷ்ணசாமி ஐயர் பொருளாளராகவும் இருந்து செயல்பட்டுள்ளனர்.
சதாபிஷேக விழாவிற்குரிய முன் ஏற்பாடுகளையும், விழா சிறப்பாக நடைபெறுவதற்குரிய காரியங்களையும் உ.வே.சா.அவர்களின் மாணாக்கர்களான கி. வா. ஜகந்நாதையர், வி. மு. சுப்பிரமணிய ஐயர், ச.கு.கணபதி ஐயர், செல்லமையர் ஆகிய நால்வரும் செய்துமுடித்திருந்தனர். உ.வேசா. அவர்களின் அன்பர்களின் பட்டியலைத் தயாரித்து அவர்களின் முகவரிகளைத் திரட்டி விழாக்குழுவின் அறிக்கைகளை அனுப்புதல், இதழ்களுக்கு விழா குறித்த அறிவிப்புச் செய்தியை அனுப்பி, அது வெளிவரும்படி செய்தல் முதலான பணிகளை இவர்கள் செவ்வனே செய்துமுடித்தனர். இதற்கிடையில், ஏற்கனவே உ.வே.சா. அவர்களைப் பற்றித் தமிழறிஞர்கள் எழுதியிருந்த குறிப்புகளையெல்லாம் கி.வா.ஜ. திரட்டி முடித்திருந்தார். அவற்றின் சிலவற்றை ஆனந்தவிகடன், கலைமகள் போன்ற இதழ்களில் வெளிவரவும் செய்திருந்தார்.
சுதேசமித்திரன், ஆனந்தவிகடன், சுதந்திரச் சங்கு, தினமணி, ஜனமித்திரன், லோகோபகாரி, தாருல் இஸ்லாம், இந்துநேசன், இந்து சாதனம், மதுரமித்ரன், பாரத ஜோதி போன்ற அன்றைக்கு வெளிவந்துகொண்டிருந்த முக்கியமான தமிழ் இதழ்களிலும், தி இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், மெட்ராஸ் மெயில் போன்ற ஆங்கில இதழ்களிலும் சதாபிஷேக விழா குறித்த செய்திகள் வெளிவந்திருந்தன.
கி.வா.ஜ. அவர்கள், உ.வே.சா. பற்றி கட்டுரைகள் எழுதியும் பிற அன்பர்களை எழுதச்சொல்லியும் கலைமகள், ஆனந்தவிகடன் முதலான இதழ்களில் வெளிவரும்படி செய்திருந்தார்.
விழாக் குழுவின் ஏற்பாட்டில் சென்னைப் பல்கலைக்கழகச் செனட் மண்டபத்தில் மார்ச்சு மாதம் 6ஆம் தேதி, புதன்கிழமை மாலை 5 மணிக்கு உ.வே.சா. அவர்களின் சதாபிஷேக விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப் பெற்றது.அதற்கு முன்பாக அன்று காலையில் உ.வே.சா. அவர்களின் ‘தியாகராஜ விலாச’ இல்லத்தில் சதாபிஷேக முகூர்த்த விழா வைதீக முறைப்படி நடத்தி வைக்கப் பெற்றது. புண்ணிய தீர்த்தங்களால் அபிஷேகம் நடத்தி முடித்த பின்னர், பலவகையான தானங்கள் வழங்கப் பெற்றுள்ளன. உறவினர்கள், அன்பர்கள், பொதுமக்கள் என பலரும் வந்து அந்நிகழ்வில் பங்கேற்று, உ.வே.சா. அவர்களை வாழ்த்தியும் வாழ்த்துகளைப் பெற்றும் சிறப்பித்துள்ளனர்.
மாலையில் சென்னைப் பல்கலைக்கழகச் செனெட் அரங்கில் விழா நடைபெற்றது. விழாவிற்கு முன்னதாகப் பல்கலைக்கழக செனெட் தோட்டத்தில் பாண்டு வாத்தியஇசை முழக்கத்துடன் உ.வே.சா. அவர்களுடைய திருமகன் கல்யாணசுந்தரம் ஐயர் அவர்களால் தேநீர் விருந்து அளிக்கப்பட்டுள்ளது.
சதாபிஷேக விழாவிற்கு,சென்னை மாகாணத்தின் தற்காலிக ஆளுநராக அப்போது நியமிக்கப்பட்டிருந்த ஸர் மஹமத் உஸ்மான் ஸாஹிப் பகதூர் அவர்கள் தலைமை வகித்திருந்தார்கள்.
விழாவில், உ.வே.சா. அவர்களுக்குப் பல உபசாரபத்திரங்கள் படித்து அளிக்கப்பட்டன. முதலில் நண்பர்களும் அபிமானிகளும் அளித்த உபசாரபத்திரத்தை விழாக்குழு உறுப்பினரான சிவராமசேதுப் பிள்ளையவர்கள் வாசித்தளித்துள்ளார். அந்தப் பத்திரம் பனையேட்டில் எழுதப்பெற்றதாக இருந்தது. அப்பத்திரம் இரண்டு தாங்கப்பெற்ற ஒரு வெள்ளிக்குழாயில் வைத்து அளிக்கப்பட்டுள்ளது.
சென்னைத் தமிழ்ச் சங்கம், சென்னைச் சமஸ்கிருத சங்கம், சென்னை வித்துவச் சிரோமணி மண்டலம், சென்னைப் புத்தகசாலைச் சங்கம், சென்னை அரசினர் பேரகராதிச் சபை (Tamil Lexicon Committee), வண்ணைத் தமிழ் அபிவிருத்திச் சங்கம், கும்கோணம் கல்லூரிப் பழைய மாணவர் சங்கம், இராசதானிக் கல்லூரித் தமிழ் மாணவர் சங்கம், லயோலாக் கல்லூரித் தமிழ் மாணவர் சங்கம், மகமதிய கல்லூரித் தமிழ் மாணவர் சங்கம், பச்சையப்பன் கல்லூரித் தமிழ் மாணவர் சங்கம், கும்பகோணம் கல்லூரித் தமிழ் மாணவர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் ஒன்றன்பின் ஒன்றாக உபசார பத்திரங்கள் வாசித்து அளிக்கப்பட்டுள்ளன.
அன்பர்களும், நண்பர்கள், மாணவர்கள் அளித்த உபசார பத்திரங்கள் அளிப்பிற்குக்குப் உ.வே.சா. அவர்களின் பதிப்புப் பணிக்கு உதவும் வகையில், விழாக் குழுவின் சார்பில் கனம் பி.டி.ராஜன் அவர்கள் 3001 ரூபாய்க்குரிய உண்டியலடங்கிய வெள்ளிப் பையன்றை ஐயரவர்களிடம் சேர்ப்பித்தார். பொதுமக்கள் பலரும் அன்புடன் அளித்த நிதியிலிருந்து இத்தொகை வழங்கப்பெற்றது. இந்த நிதியைத் திரட்டுவதற்குரிய கூட்டமொன்று, விழா நடைபெறுவதற்கு முன்னர் மார்ச்சு மாதம் முதல்தேதி வெள்ளிக்கிழமை மாலை 5-30 மணிக்குத் தேனாம்பேட்டை மௌப்ரேஸ் ரோட்டில் இருந்தவிழாக் குழுத் தலைவர் கனம் பி. டி. ராஜன் அவர்கள் வீட்டில் நடைபெற்றிருக்கிறது.
விழாக் குழுவின் நிதியளிப்பு நிகழ்விற்குப் பின்னர், நண்பர்கள் சம்மானங்கள் அளித்துச் சிறப்பித்தனர். உ.வே.சா. எழுதியிருந்த மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் சரித்திரத்தைப் படித்து இன்புற்ற அன்பர் ஒருவர் உ.வே.சா. அவர்களுடைய வரலாறு அதனினும் பன்மடங்கு அரிய, உயரிய செய்திகளையும் தமிழின் சரித்திரத்தையும் வெளிப்படுத்தித் தமிழுலகுக்கு வழிகாட்டியாக நின்று நிலவுமென்ற கருத்தில் அவர் அச்சரித்திரத்தை அவரே எழுதி வெளியிட வேண்டுமென்ற தமது விருப்பத்தைச் சபையினருக்கு 501 ரூ. அனுப்பி வேண்டியிருந்தார். பெயர் வெளியிட விரும்பாத அன்பர் அளித்த அத்தொகை விழாக் குழுவின் சார்பில் உ.வே.சா. அவர்களுக்கு வழங்கப்பட்டது. இது போன்ற கோரிக்கையை அன்பர் பலரும் சதாபிஷேக வாழ்த்துக் கட்டுரையில் விடுத்திருந்தனர். சதாபிஷேக விழா நடைபெற்று முடிந்த ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர்தான் 1942இல் தனது சரித்திரத்தை ஆனந்த விகடன் இதழில் தொடராக எழுதி வெளியிடத் தொடங்கினார் உ.வே.சா.
டாக்டர் உ.வே.சா. அவர்களின் உருவப்படத்தைச் சென்னைப் பல்கலைக்கழக மண்டபத்தில் வைப்பதற்குரிய ஏற்பாட்டையும் சதாபிஷேக விழாக் குழுவினர் செய்திருந்தனர். திருப்பனந்தாள் ஆதீனம் காசிவாசி சுவாமிநாத தம்பிரான் உதவியால் ஆர். துரை என்பவர் வரைந்த உ.வே.சா. உருவப்படம் பல்கலைக்கழகத் துணைவேந்தர் லிட்டில் ஹேல்ஸ் அவர்களிடம் அளிக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தின் சார்பாக அதை அவர் பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்துள்ளார்.
இந்தக் கொண்டாட்டத்தில் படித்துக் கொடுக்கப்பட்ட உபசார பத்திரங்கள் எல்லாவற்றையும் தொகுத்து ஒரு சிறுநூலாக டாக்டர் உ.வே.சா. அவர்களின் படங்களுடன் அச்சிடப்பட்டு விழா நடைபெற்ற அன்றைய நாளிலேயே வந்திருந்த அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளன. டாக்டர் ஐயரின் சதாபிஷேக மலர் என்று ‘கலைமகள்’ தனிப்பிரசுரமொன்றை 64 பக்கங்கள் கொண்டதாக அச்சிடப்பட்டு வந்திருந்த அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதில் டாக்டர் உ.வே.சா.அவர்களின் வரலாறும் அவரைப் பற்றிப் பலர் எழுதிய கட்டுரைகளும் அடங்கியிருந்தன.
விழாவில் முத்தையா பாகவதர் அவர்களின் பாட்டுக்கச்சேரியும் நடைபெற்றுள்ளது. ஆந்திர பல்கலைக்கழகத்தின் சார்பாக அப்பல்கலைக்கழகத் தமிழ், கன்னட மொழிகளின் பாடத்திட்டக்குழுவின் தலைவர் ராவ் பகதூர் கிருஷ்ணராவ் பான்ஸ்லே அவர்கள் உ.வே.சா. அவர்களுக்கு அறுபது ஆண்டு பழமைவாய்ந்த ஒரு எழுத்தாணியையும் ஒரு பௌண்டன் பேனாவையும் பரிசாக அளித்து மகிழ்ந்தார்.
உ.வே.சா. அவர்களின் சதாபிஷேக விழா சென்னையில் மட்டுமின்றித் தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலும் யாழ்ப்பாணம், ரங்கூன், கம்போடியா ஆகிய வெளிநாடுகளிலும் கொண்டாடப்பட்டுள்ளது. சதாபிஷேக விழாவிற்கு முன்னதாகவும் பின்னதாகவும் பல்வேறு இதழ்கள் உ.வே.சா. அவர்களை வாழ்த்திக் கட்டுரைகள் எழுதி வெளியிட்டுச் சிறப்பித்துள்ளன.
ந.மு.வேங்கடசாமி நாட்டார், ப.சம்பந்த முதலியார், வீ.இராமாநுஜாச்சாரியார், மு.கதிரேச செட்டியார், மு. இராகவையங்கார், சக்கரவர்த்தி இராசகோபாலாச்சாரியார், டி.கே.சிதம்பரநாத முதலியார், வெ.ப.சுப்பிரமணிய முதலியார், எஸ். சத்தியமூர்த்தி ஆகியோர் கட்டுரை எழுதிச் சிறப்பித்துள்ளனர். ரா.இராகவையங்கார், வ.உ.சிதம்பரம் பிள்ளை, முன்னீர்ப் பள்ளம் பூர்ணலிங்கம் பிள்ளை, கே.ஜி.சேஷையர், இ.மு.சுப்பிரமணிய பிள்ளை, வித்துவான் மா.இராசமாணிக்கம், அ.மு.பரமசிவானந்தம் உள்ளிட்ட அறிஞர்கள் பலர் வாழ்த்துப் பாக்களை எழுதி அளித்துச் சிறப்பித்துள்ளனர்.
சதாபிஷேக விழாவினையட்டி பல ஊர்களில் இருந்தும் அன்பர்கள் உ.வே.சா. அவர்களுக்குக் கடிதம் எழுதியும், தந்தி அனுப்பியும் வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்டுள்ளனர்.
சதாபிஷேக விழாவிற்கு முன்னும் பின்னுமான சில நாட்களில் உ.வே.சா. அவர்களின் வாழ்வில் சில முக்கியமான நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன. ஒன்று, அன்பர்கள் பலரும் உ.வே.சா. அவர்கள் தன் சரித்திரத்தைத் தானே எழுதி வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை நேரடியாக அவரிடம் வைத்தது; இரண்டு ‘தமிழ்த் தாத்தா’ என அவரை அன்போடு அழைத்து மகிழ்ந்தது. இந்த இரண்டும் உ.வே.சா. அவர்களின் பெரு வாழ்வில் நடந்தேறிய முக்கியமான நிகழ்வுகளாகக் கருதத்தக்கது. இவற்றுள் அவரின் ‘என் சரித்திரம்’ நூலை பலரும் படித்து மகிழ்ந்திருப்பர். ‘தமிழ்த் தாத்தா’ எனும் பெயர் அவருக்கு நிலைபெற்ற வரலாற்றை இங்கு நினைவுபடுத்தி பார்ப்போம்.
சதாபிஷேக விழாவிற்கு முன்னும் பின்னுமாகக் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மூன்று கட்டுரைகளை தொடர்ச்சியாக மூன்று வாரம் ஆனந்தவிகடன் இதழில் எழுதி வெளியிட்டிருக்கிறார். அந்த மூன்று கட்டுரைகளுள் முதல் கட்டுரை சதாபிஷேக விழாவின் அறிவிப்புச் செய்தியாகவும், இரண்டாவது கட்டுரை சதாபிஷேக விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்த விழாக் குழுவினருக்கு எழுதுவதாகவும், மூன்றாவது கட்டுரை உ.வே.சா. அவர்களுக்கு எழுதுவதாகவும் இருந்தன. இந்த மூன்று கட்டுரைகளும் மூன்று வார ஆனந்த விகடனில் தனித் தனியே வெளிவந்திருக்கின்றன. இதற்கடுத்த வார ஆனந்த விகடன் இதழை உ.வே.சா. அவர்களைப் பற்றிய கட்டுரைகள் அடங்கியதாகவே வெளிவரும்படி கல்கி செய்திருக்கிறார். இதுமட்டுமின்றி சதாபிஷேக விழா நடைபெற்று முடிந்த பின்னர் அவ்விழாகுறித்து 17-3-1935-இல் ஆனந்த விகடன் இதழில் ‘தமிழ்த் திருவிழா’ என்கிற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி வெளியிட்டு சிறப்புச் செய்திருக்கிறார்.
‘தமிழ்த் தாத்தா’ எனும் பெயர் உ.வே.சா. அவர்களுக்கு நிலைபெற்ற வரலாற்றுக் குறிப்புகள் இந்த மூன்று கட்டுரைகள் வழியே வெளிப்பட்டு நிற்கின்றன. அதனால், கல்கி அவர்கள், சதாபிஷேக விழா நடைபெறுவது குறித்தும், விழா குழுவினருக்கும், உ.வே.சா. அவர்களுக்கும் ஆனந்த விகடனில் எழுதி வெளியிட்ட அந்த மூன்று கட்டுரைகளும் வெளிவந்த வண்ணமே இங்குத் தரப்படுகின்றன.
1
ஸ்ரீமத் சகலகுண சம்பன்ன அகண்டித லக்ஷ்மீ அலங்கிருத ஆசிருத ரக்ஷிக மகாமேரு சமான தீர இகபர சௌபாக்கிய வதான்னிய மூர்த்தன்னிய சதுஷ்டய சாதாரண திக்விஜய பிரபு குல திலக மங்கள குண கணாலங்கிருத வாசாலக பரிபாக சிரோரத்ன மகா புருஷ மகாராஜமான்ய ராஜஸ்ரீ பொதுஜனம் அவர்கள் திவ்ய சமுகத்திற்கு விகடன் தாழ்மையாகச் செய்துகொள்ளும் விஞ்ஞாபனம்.
என்ன, பெரியவாள் முழிக்கிறாய்ப் போலிருக்கிறது? ஒன்றும் விளங்கவில்லையாக்கும்! “என்னமோ காமாசோமாவென்று எல்லாருக்கும் தெரிந்த பாஷையில் எப்போதும் எழுதும் விகடனுக்கு இன்று என்ன வந்தது?” என்று யோசிக்கிறீராக்கும். அதெல்லாம் முடியாது; இன்று உம்மைக் கதற வைத்துத் திணற அடித்து விடுவதாக உத்தேசம். தினம்போல் சுலபமாய்த் தப்பித்துக் கொண்டு போகலாமென எண்ண வேண்டாம். எங்கே, தைரியமிருந்தால் பின்வரும் புத்தகங்களின் பெயர்களைப் படியும், பார்க்கலாம்:-
மருதூர் யமகவந்தாதி, தில்லை யமகவந்தாதி, திருவேரகத்துயமகவந்தாதி, துறைசையமகவந்தாதி, மறைசை யந்தாதி, திருக்குற்றால யமகவந்தாதி, பழமலைத் திரிபந்தாதி, திருப்புகலூர் அந்தாதி, வயலூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி, பாலைவனப் பதிற்றுப்பத்தந்தாதி, முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ், அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ், பிரம்மவித்யா நாயகி பிள்ளைத்தமிழ், மயூரகிரி இரட்டைமணிமாலை, வாளளிபுற்றூர்ப் புராணம், வாட்போக்கிக் கலம்பகம், திருநாகைக்காரோணப் புராணம், திருவெண்ணீற்றுமை பிள்ளைத்தமிழ், கலைசைச் சிலேடைவெண்பா.........
அதற்குள்ளாகவா சரணாகதி அடைந்துவிட்டீர்? இந்த நூல்களின் பெயர்களைப் படிப்பதே உமக்குச் சிரமமாயிருக்கிறதே, அவைகளைக் கற்றல் எவ்வளவு சிரமமாயிருக்க வேண்டும்? அவற்றைப் போன்று விகடனில் நாலைந்து பக்கங்களுக்குப் பெயர் ஜாபிதா மட்டும் கொடுக்கக்கூடிய அவ்வளவு தமிழ் நூல்களையும் கற்றுத் தேர்தல் என்றால், அது எத்தகைய செயற்கரிய செயல்?
அப்பேர்ப்பட்ட அரும்பெரும் செயல் புரிந்த பெரியார் ஒருவர் நமது தமிழ்நாட்டில் இருக்கிறார். அவர் யார் தெரியுமா? அவருடைய முழுப்பெயரைப் படிப்பதுகூடக் கொஞ்சம் கடினமான விஷயந்தான். மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி டாக்டர் உ.வே.சாமிநாதையர் அவர்கள்.
அய்யர்வாள் படித்திருக்கிற பழந்தமிழ் நூல்கள் எல்லாவற்றின் பெயரையும் சொல்வதென்றால் மிகவும் பிரயாசையான காரியமே. ஆனால் அவர் படிக்காத பழந்தமிழ் நூல்களைக் குறிப்பிடுவது மிகவும் சுலபம். ‘ஒன்றும் இல்லை’ என்று இரண்டே வார்த்தையில் கூறுதல் எளிதல்லவா?
பொதுஜன ஸ்வாமி! நீரும் நானும் கூடத்தான் தமிழ் நூல்கள் படித்திருக்கிறோம். அதாவது, அத்தியாயத் தலைப்புக்களுடனும், அரும்பத அகராதிகளுடனும், முன்னுரை பின்னுரைகளுடனும் முத்து முத்தாக அச்சிட்ட புத்தகங்களைப் படித்திருக்கிறோம். ஆனால் அய்யர்வாள் தமிழ் படித்தது எப்படித் தெரியுமா? அந்தக் காலத்தில் அச்சிட்ட புஸ்தகங்களே அபூர்வம். ஒரு பண்டார சந்நதி அந்நாளில் கம்பராமாயணம் அச்சுப் பிரதியைப் பார்த்துவிட்டு “ஓகோ! இதைக்கூடப் ‘புக்கு’ (Book)ப் போட்டுவிட்டானா?” என்று வியந்தாராம்! இவ்வாறு, அச்சிட்ட புத்தகமே வியப்பளித்த காலம் அது. அந்நாளில், கறையான் அரித்த ஓலைச் சுவடிகளில் தெளிவின்றி எழுதியிருந்த எழுத்துக்களைக் கண்நோவு காணும்படி படித்தாக வேண்டும். அந்த ஓலைச்சுவடிகளும் கிடைப்பது கடினம். ஊர் ஊராகச் சென்று, யார் யாரிடம் எந்த ஓலைச்சுவடியிருக்கிறதென்று அறிந்து அவர்களிடம் கெஞ்சிக் கூத்தாடி வாங்கிக் கற்றாகவேண்டும்.
அய்யர் அவர்கள் தம் இளம்பிராயத்தில் அவ்வாறெல்லாம் பிரயாசைப்பட்டுப் படித்ததனால்தான், தமிழ்மொழிக்கு வேறு எவராலும் செய்யப் பெறாத மகோபகாரம் செய்தல் சாத்தியமாயிற்று. அவர்கள் வடமொழிக்கு வியாஸ பகவானும், தமிழ் மொழிக்கு அகஸ்திய முனிவரும் எத்தகைய தொண்டு செய்தார்களென்று சொல்லப்படுகிறதோ, அவ்வளவு சிறப்பான தொண்டை இந்நாளில் டாக்டர் சாமிநாதையர் அவர்கள் தமிழுக்குச் செய்திருக்கிறார்கள். அவர்களால் பதிப்பிக்கப்பெற்ற பழைய தமிழ் நூல்களின் ஜாபிதாவைப் பாருங்கள்:-
சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை, பத்துப்பாட்டு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், புறநானூறு, புறப்பொருள் வெண்பாமாலை, நன்னூல் மயிலைநாதருரை, நன்னூல் சங்கர நமச்சிவாயருரை, தக்கயாகப்பரணி, பாசவதைப் பரணி, திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகம், திருக்காளத்திநாதருலா, திருப்பூவண நாதருலா, தேவை உலா, மதுரைச் சொக்கநாதருலா, கடம்பர்கோயில் உலா, சங்கரலிங்க உலா, தமிழ்விடுதூது, வண்டுவிடுதூது, தென்றல்விடுதூது, திருவாவடுதுறைக்கோவை, திருமயிலைத் திரிபந்தாதி, கூழை அந்தாதி, பழனிப்பிள்ளைத் தமிழ், திருக்கழுக்குன்றச் சிலேடை வெண்பா, ஸ்ரீசிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தங்கள், ஸ்ரீமீனாட்சிசுந்தரம்பிள்ளை பிரபந்தத் திரட்டு, திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம், தியாகராஜ லீலை.
தமிழ்ச் செல்வம், தமிழ்ச் செல்வம் என்று நாமெல்லாம் பெருமையடித்துக்கொள்கிறோம்; அய்யவர்களின் அரிய முயற்சிகள் இல்லாமற் போயிருந்தால், ‘உங்களுடைய தமிழ்ச் செல்வம் எங்கே?’ என்று கேட்பவர்களுக்கு, ‘எங்கேயோ பூமியில் புதையுண்டு கிடக்கிறது; தோண்டிப்பார்த்தால் ஒருவேளை அகப்படலாம்’ என்றே பதில் சொல்ல வேண்டியிருந்திருக்கும்.
அய்யர் அவர்கள், தாம் இளம்பிராயத்தில் தமிழ் நூல் கற்பதற்காகப் பட்ட சிரமங்களை எண்ணி, அத்தகைய கஷ்டம் இனி வரும் சந்ததிகளுக்கு ஏற்படக்கூடாதென்று கங்கணங் கட்டிக்கொண்டிருக்க வேண்டும்.
பழைய ஓலைச்சுவடிகளிலிருந்து பாடபேதங்களை ஆராய்ந்து புத்தகம் பதிப்பித்தல் எவ்வளவு சிரம சாத்தியமான காரியம் என்பது தெரியுமா? எல்லையற்ற பொறுமையும், உழைப்புத் திறமையும், அறிவுத் தெளிவும் அதற்கு வேண்டும். அந்தத் தொண்டின் அருமையை அறிந்திருப்பவர்கள், அய்யர் அவர்கள் பதிப்பித்த ஒவ்வொரு புத்தகத்துக்காகவும் அவருக்குத் தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஞாபகச் சிலை நிறுவவேண்டும் என்று சொல்வார்கள்.
பொதுஜன ஸ்வாமி! தமிழ் மொழிக்கும் தமிழ் நாட்டுக்கும் அத்தகைய பரோபகாரம் செய்திருக்கும் - இன்னமும் செய்துவரும் - பெரியாருக்குச் சமீபத்தில் 80-ஆவது வயது பூர்த்தியாகப்போகிறது. இந்த விசேஷ சம்பவத்தை நாளது மார்ச்சு மாதம் 6-ஆம் நாளன்று சிறப்பாகக் கொண்டாடுவதற்காகத் தமிழன்பர்கள் சிலர் ஏற்பாடு செய்துவருகிறார்கள். அன்றைய தினம் அய்யர் அவர்களுடைய உருவப்படம் ஒன்றைப் புதிய சர்வகலாசாலை மண்டபத்தில் திறந்து வைக்கவும், அய்யர் அவர்களுக்கு ஓர் உபசாரப்பத்திரம் படித்துக் கொடுக்கவும் உத்தேசித்திருக்கிறார்கள். மேற்படி வைபவத்துக்கு இஷ்டமித்ர பந்துக்களுடன் உம்மை அழையாவிட்டாலும் நீர் வந்துசேர வேண்டியது.
ஆமாம், சந்தேகம் என்ன? தமிழ் யார் வீட்டுச் சொத்து? மற்றவர்களுக்குள்ள பாத்தியதை தமிழில் நமக்கும் உண்டு. தமிழ்த்தாய் நம் எல்லாருக்குந்தான் தாய். எனவே, அய்யர்வாள் விஷயத்திலும் நம் எல்லாருக்கும் சமமான பாத்தியதை உண்டு.
இப்படிக்கு
அன்பன், விகடன்.
2
உயர்திருவாளர் தமிழ் அன்பர் அவர்களுக்கு விகடன் வரையும் விகிதமாவது:-
தங்களுடைய அழைப்புக்கடிதம் பெற்றேன். மெத்த மெத்த சந்தோஷம். அய்யர் அவர்களுடைய எண்பதாம் வயதுப் பூர்த்தியைத் தாங்கள் விமரிசையாகக் கொண்டாட எண்ணியிருப்பது மிகவும் பொருத்தமானதே.
நம்முடைய காலத்தில், நம் கண் முன்னால், தமிழ் மொழிக்குப் பெருமையளித்தவர்களுக்குள் இரண்டு பேர் சிறந்து விளங்குகிறார்கள். ஒருவர், தேசீயகவி சுப்பிரமணிய பாரதி; மற்றவர் மகாமகோபாத்தியாய சாமிநாதையர்.
பாரதியார் வாடாமலர்களைத் தொடுத்துத் தமிழ்த்தாய்க்குப் பாமாலை சூட்டினார்; புதிய நாகரிகமுறையில் அழகிய சின்னஞ்சிறு ஆபரணங்களைச் செய்து அணிவித்தார்.
அய்யர் அவர்களோ, காணாமற்போயிருந்த தாயின் பழைய ஆபரணங்கள் பலவற்றைத் தேடிக் கண்டுபிடித்துத் தந்தார்; துருப்பிடித்துக் கிடந்த நகைகளை யெல்லாம் துருவெடுத்துச் சுத்தம் செய்து மெருகிட்டு அளித்தார்.
எனவே, இரண்டுபேரும் ஒவ்வொருவகையில் தமிழ்த்தாய்க்கு மகத்தான சேவை செய்திருக்கிறார்கள்.
ஆனால் பாரதியார் ஒரு தவறு செய்தார்; திடீரென்று யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் அவர்பாட்டுக்கு இறந்து போய்விட்டார்! என்ன அவசரமோ தெரியவில்லை?
“ஏதடா! நாம் செய்த சேவையைத் தமிழர்கள் அறிந்து பாராட்டுவதற்குக் கொஞ்சம் அவகாசம் கொடுக்க வேண்டாமா?” என்று அவருக்குச் சற்றும் தெரியாமல் போயிற்று.
ஆனால் அய்யர் அவர்கள் அத்தகைய தவறைச் செய்யவில்லை. அவர்கள் தமிழர்களின் மதாந்த குணத்தை நன்கறிந்தவர் போலிருக்கிறது. “நம்முடைய தொண்டின் பெருமையை இந்தத் தமிழர்கள் அறியவேண்டுமானால் 80 வயதுக்குமேல் ஜீவித்தே தீரவேண்டும்” என்று இளம்பிராயத்திலேயே தீர்மானித்திருப்பார் போலிருக்கிறது.
எப்படியிருந்தாலும், நம்முடைய அதிர்ஷ்டந்தான். அவருடைய எண்பத்தோராவது வயதிலாவது அவரைக் கௌரவப்படுத்த வேண்டுமென்று நமக்குத் தோன்றியது பெரிய காரியமல்லவா?
ஏதோ, இவ்வளவு தாமதமாகத் தொடங்கியிருக்கும் காரியத்தை அதற்கேற்ற பெருமையுடன் சிறப்பாக நடத்தி வைப்பீர்களென்று எதிர்பார்க்கிறேன்.
இப்படிக்கு,
நண்பன், விகடன்.
3
தமிழ்த் தாத்தா ஸ்ரீ உ. வே.சாமிநாதையர் அவர்கள் சமுகத்துக்குப் பேரன் பரிவுடன் எழுதிக்கொள்வது.
பெரியவாள் என்ன யோசிக்கிறீர்கள்? இது என்ன புதிய பட்டமாயிருக்கிறது, இவன் யார் கொடுப்பது என்றா? அப்படியெல்லாம் தாங்கள் நிராகரிக்கமாட்டீர்களென்று நம்புகிறேன். சகலமும் அறிந்த பெரியாராகிய தாங்கள் ‘நான் அளித்திருக்கும் பட்டத்தின் பொருத்தத்தை அங்கீகரிக்காமல் இருக்க முடியாது. முதலாவது ஒளவையாருக்கு எப்படி ‘தமிழ்ப் பாட்டி’ என்னும் பட்டம் பொருந்துமோ அது போலவே தங்களுடைய பிராயத்தினாலும், தமிழுக்குத் தாங்கள் செய்திருக்கும் தொண்டினாலும் ‘தமிழ்த் தாத்தா’ என்னும் பட்டம் தங்களுக்குப் பொருந்தும்.
இரண்டாவதாக, மேற்படி பட்டத்திலுள்ள இரண்டு ‘த்’ களையும் நீக்கிவிட்டால் தாங்கள் ‘தமிழ் தாதா’ ஆகிறீர்கள். நமது நாட்டின் பரம்பரை வழக்கத்தை அநுசரித்து அகப்பட்ட நூல்களையெல்லாம் ஒளித்து வைக்காமல் அச்சிட்டு வெளியாக்கிப் பதினாயிரக் கணக்கானவர்களுக்குப் பயன்படும்படி செய்த தங்களை, ‘தமிழ்தாதா’ என்று சொல்லாமல் வேறு யாரைச் சொல்வது?
மூன்றாவதாக, ‘ருசி கண்ட பூனை உறியை உறியைத் தாவும்’ என்பது போலத் தமிழன்பர்கள் இன்னமும் தங்களை நோக்கி, தமிழ் தா! தா!’ தமிழ் நூல்களைத் தா! தா! என்று கேட்டுக்கொண்டுதானிருக்கிறார்கள் (மேற்படி சிலேடை என் சொந்தமல்ல இரவல்தான் என்பதையும் பெரியவாளிடத்திலே தெரிவித்துக்கொண்டுவிடுகிறேன்.)
ஆகவே, இவ்வளவு பொருத்தமான பட்டத்தைத் தாங்கள் அங்கீகரித்தே தீரவேண்டும். அப்படி அங்கீகரிக்காவிட்டாலும் நான் என்னமோ அந்தப் பட்டத்தால்தான் தங்களை அழைப்பேன்.
ஏனென்றால், ‘மகாமகோபாத்தியாயர்’, தாக்ஷிணாத்யகலாநிதி’ முதலியவை வாயில் நுழைவதே கடினமாயிருக்க, ‘தமிழ்த் தாத்தா’ என்பதோ தங்களுடைய தமிழ் வசனநடையைப் போல் எளிதாயிருக்கின்றது.
நல்லவேளை, ஞாபகம் வந்தது. தங்களுடைய தமிழ் வசனநடையைப் பற்றித்தான் ஒன்று கேட்கவேண்டுமென்றிருக்கிறேன். அதென்ன, தாங்கள் அவ்வளவு பெரிய தமிழ்ப் புலவராயிருந்துகொண்டு எவ்வளவு எளிய தமிழ்நடை எழுதுகிறீர்கள்?
என் நண்பர் ஒருவர் தங்களைப்பற்றி நிந்தாஸ்துதியாக ஒன்று சொல்வது வழக்கம்:- ‘இந்த அய்யர்வாள் தமிழுக்கு ரொம்ப துரோகம் செய்திருக்கிறார்கள். இவர்கள் வெளியிடும் பழந்தமிழ்க் காவியங்களில் அரும்பத அகராதி ஒன்று சேர்த்திருக்கிறார்களா? அந்த அரும்பத அகராதிகளை வைத்துக்கொண்டு கடுமை கடுமையான வார்த்தைகளைக் கோத்து இந்த நாளில் சிலர் தமிழ் எழுதுகிறார்கள்!’ என்று.
அப்படியாகத் தங்களுடைய புத்தகங்களின் உதவியினால் அநேகர் பல் உடைந்து, காது கிடுகிடாய்க்கும்படியான தமிழ்நடை யெல்லாம் எழுதும்போது, தாங்கள் மட்டும் எனக்கெல்லாங்கூட விளங்கும்படியான வெள்ளைச் சொற்களையே உபயோகிக்கிறீர்களே, அது ஏன்? நானும் தங்களுடைய கட்டுரைகளை எல்லாம் படித்தேன்; தாங்கள் எழுதிய ஸ்ரீமீனாக்ஷிசுந்தரம் பிள்ளை அவர்கள் சரித்திரத்தையும் படித்தேன். எனக்கு விளங்காத வார்த்தை ஒன்றுகூட இல்லை. இது தங்களுடைய கௌரவத்துக்குக் குறைவு என்று தாங்கள் நினைக்கவில்லையா?
போகட்டும்; தங்களுக்குச் சமீபத்தில் 80-வயது நிரம்பப்போகிறது என்று சொல்கிறார்களே, அது உண்மைதானா? எனக்கு என்னமோ நம்பிக்கையில்லை. பார்த்தால் பாலியமாய்த் தோன்றுகிறதே? தாங்கள் செய்யும் வேலையைப் பார்த்தாலும் அவ்வளவு வயதானவராக நினைக்கக்கூடவில்லையே?
எனக்கு என்ன தோன்றுகிறதென்றால், தாங்கள் ஒரே மூர்த்தன்னியமாய்த் தமிழ்த்தாயின் சேவையில் ஈடுபட்டிருக்கையில் ஒருவேளை வயதுக் கணக்கை மறந்திருக்கலாமென்று.
உண்மையாகவே தங்களுக்கு 80 வயது பூர்த்தியாகிற விஷயத்தில் அதை எப்படிச் சாதித்தீர்கள் என்னும் இரகசியத்தைத் தயைசெய்து தெரிவித்துவிடுங்கள். எனக்கென்னமோ, தமிழ் மக்களாகிய நாங்கள் செய்த பூர்வஜன்ம சுகிர்தந்தான் தங்களது நீடித்த ஆயுளுக்குக் காரணம் என்று தோன்றுகிறது.
எதுவாயிருந்தாலும், மார்ச்சு மாதம் 6-ஆம் தேதியன்று தங்களுடைய பேரன் பேத்திகள் எல்லாரும் தங்களுக்குத் திருஷ்டி கழித்துக் கொட்டுவது என்று தீர்மானித்திருக்கிறார்கள். இது தங்கள் காதுக்கும் எட்டியிருக்குமென்று நம்புகிறேன்.
ஏதோ, உருவப்படமாம்; உபசாரப் பத்திரமாம்; தங்களுக்கு இதெல்லாம் உபத்திரவமாய்த்தானிருக்கும். ஆனாலும் பேரன் பேத்திகளின் மனத்திருப்திக்காகத் தாங்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
கடைசியாக ஒன்று தங்களைக் கேட்டுக்கொள்கிறேன். அதாவது மார்ச்சு மாதம் 6-ஆம் நாள் வைபவங்கள் முடிந்து 7-ஆம் நாள் பிறந்ததோ இல்லையோ, உடனே இந்த வயது விவகாரங்களை யெல்லாம் மறந்துவிடுங்கள். நீங்கள் பாட்டுக்குத் தமிழ்த்தாயின் சேவையில் ஈடுபட்டிருங்கள். தப்பித் தவறி வயதைப் பற்றி ஞாபகம் வந்தால், 81 என்பதைத் திருப்பி வைத்து 18 என்று எண்ணிக்கொள்ளுங்கள். என்றும் பதினாறு வயதாயிருந்த மார்க்கண்டனைப்போல் தாங்களும் 18 வயதுக்குமேல் போகாமலே இருந்துவிடுங்கள்.
ஏனெனில், தாங்கள் செய்ய வேண்டிய தொண்டுகள் இன்னும் எவ்வளவோ பாக்கியிருக்கின்றன. தமிழ்த்தாய் இன்னமும் கையில் ஏராளமான பழைய நகைகளை வைத்துக்கொண்டு காத்திருக்கிறாள். அவைகளையும் தாங்கள் மெருகிட்டுத் தரவேண்டுமாம். எப்படியும் ஸ்திரீ யல்லவா? அசாத்திய நகை ஆசை! நிற்க. தங்களிடமிருந்து பேரன் பேத்திகளாகிய நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிற இன்னும் ஒரு காரியம் பாக்கியிருக்கிறது. எங்களுக்குக் கதை கேட்பதில் மிகவும் பிரியம். தங்கள் சொந்தக் கதையை முழுதும் பூரணமாய்க் கேட்கவேண்டுமென்று ஆவல் கொண்டிருக்கிறோம்.
ஸ்ரீமீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்களின் சரித்திரத்தில் ஒருவாறு எங்களுக்கு ஆசை காட்டியிருக்கிறீர்கள். ஸ்ரீமீனாட்சி சுந்தரம்பிள்ளை, ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர், ஸ்ரீமான்கள் வேதநாயகம் பிள்ளை, கோபாலகிருஷ்ண பாரதி, மகாவைத்தியநாத ஐயர், இராமஸ்வாமி சிவன் முதலிய தமிழ்ப் பெரியார்கள் வாழ்ந்த அக்காலத்தைப் பற்றி மேற்படி சரித்திரத்தில் படித்த பிறகு அதற்குப் பிந்திய காலத்தைப்பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டுமென்று பேராவல் கொண்டிருக்கிறோம். அந்த ஆவலைப் பூர்த்திசெய்தல் தங்கள் பொறுப்பு.
தங்களுடைய சுயசரிதத்தை எழுதினால், அது பெரும்பாலும் தமிழ் மக்களின் சரித்திரமாகவே இருக்குமென்பதில் ஐயமில்லை.
ஏதோ நான் சொல்லவேண்டியதைச் சொல்லிவிட்டேன், அப்புறம் தங்கள் விருப்பம்.
இங்ஙனம், அடியேன்,
விகடன்.
ஆனந்த விகடன், 12-2-35
(1898, ஜூலை, மணிமேகலை மூலமும் அரும்பதவுரையும், முதல் பதிப்பு வெளிவந்தது; முதன் முதலாக உ.வே.சா. உரை எழுதி வெளியிட்ட நூல் இதுவாகும்; 1924, ஜூலை, சிதம்பரம், மீனாட்சி தமிழ்க் கல்லூரியின் முதல்வர் பொறுப்பை ஏற்றல், 1937, ஜூலை, 16, வெ. ப. சுப்பிரமணிய முதலியார் 80-ஆம் ஆண்டு நிறைவு விழாவிற்குத் தலைமை தாங்குதல்)