vatti 350வட்டிக்கு வாங்கி அட்டிக பண்ணு

அட்டிக வித்து வட்டிய குடு

என்பது ஒரு தமிழ்ப் பழமொழி. அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே பணத்தை வட்டிக்குப் பெற வேண்டுமென்ற விழிப்புணர்வை இந்தப் பழமொழி சுட்டி நிற்கிறது. வட்டி என்பது ஒரு தனிநபரிடமோ வங்கியிடமோ கடனாகப் பெறும் பணத்தொகைக்குக் கொடுக்கப்படும் வாடகைத் தொகையாகும். முதலில் கொடுக்கப்படுகின்ற பணத்தொகை ‘முதல்’ எனப் படுகின்றது.

அந்த முதலுக்காக ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்குக் கொடுக்கப்படும் வட்டியளவு அம்முதலின் விழுக்காட்டு அளவில் மதிப்பிடப் படுகிறது. இந்த விழுக்காட்டு அளவு வட்டி வீதம் எனப்படும். இன்றைக்கு வழங்கும் வட்டி எனும் சொல்லுக்குப் பொருளாதாரத் துறையினர் சுட்டும் பொருள் இது. நாம் இந்த வட்டியைப் பற்றிப் பேசப்போவதில்லை. வட்டி என்ற சொல்லுக்கு இன்றைய வழக்கிலிருக்கும் பொருள் பற்றிய விளக்கத்திற்காகவே இந்தச் செய்தி.

வட்டி என்பது இலக்கண வகையுள் ஒரு பெயர்ச் சொல். அவற்றுள்ளும் இது காரணப்பெயர். இந்த ‘வட்டி’ என்பது சங்க காலத்தில் அன்றாடப் பயன் பாட்டிலிருந்த ஒரு புழங்கு பொருள். இது பற்றிய குறிப்புகள் நமது பழந்தமிழ் நூல்களில் எந்தச் சூழலில் வழங்கியிருக்கிறது, அது எவ்வகைப் புழங்குபொருள் என்பதைத்தான் இங்குப் பார்க்கப்போகிறோம்.

நற்றிணை 210ஆம் பாடல் நல்வேட்டனார் எனும் புலவர் பாடியது. தோழிக் கூற்றாக அமைந்த இப் பாடலில் வட்டி எனும் சொல் பயின்று வரும் பாடலடிகள்

அரிகால் மாறிய அம் கண் அகல் வயல்

மறு கால் உழுத ஈரச் செறுவின்

வித்தொடு சென்ற வட்டி பற்பல

மீனொடு பெயரும் யாணர் ஊர ( நற். 210: 1-4)

என்று உள்ளன. இதற்கு ‘நெல் அறுத்து நீங்கப்பெற்ற அழகிய இடமகன்ற வயலின் கண்ணே மறுபடியுழுத ஈரமுடைய சேற்றில் விதைக்கும் வண்ணம் விதை கொண்டு சென்ற கடகப் பெட்டியில் மிகப் பலவாகிய மீன்களைப் பிடித்து போகட்டு மீண்டுகொண்டு வருகின்ற புதுவருவாயினுடைய ஊரனே’ (நாராயண சாமி ஐயர், ப. 387) என்பது பொருளாகும். வட்டி என்பது உழவர் விதை கொண்டுசெல்லப் பயன்படுத்தும் பெட்டி என்பதும் அது மீனைக் கொண்டுசெல்லவும் பயன்படும் என்பதும் இந்தப் பாடல் உணர்த்துகிறது.

குறுந்தொகையின் 155ஆம் பாடல் உரோடகத்துக் கந்தரந்தன் பாடியது. முல்லைத் திணை வகையுள் தலைவி கூற்றாக இடம்பெற்றுள்ள பாடலாகும் அது. பொழுது வந்தது, பிரிந்து சென்ற தலைவன் வரவில்லை என்று ஏங்கி வருந்துவதாக உள்ள அவற்றுள், முதைப்புனங் கொன்ற ஆர்கலி உழவர் விதைக்குறு வட்டி போதொடு பொதுளப்பொழுதோ தான்வந் தன்றே (குறுந். 155: 1- 3) வட்டி எனும் சொல் பற்றிய குறிப்பு காணப் படுகின்றது.

இப்பாடலடிக்கான பொருள் ‘காலையில் விதைக்கும் பொருட்டுச் சென்ற உழவர் மாலைக் காலத்தில் மீள்கையில் தாம் விதையைக் கொண்டு சென்ற வட்டியில் வழியிற் பூத்த முல்லைப் பூவைக் கொணர்ந்தனர்’ (உ.வே.சா. ப. 336 - 337) என்பதாகும். வட்டி என்பதற்குப் ‘பனையோலை முதலியவற்றால் முடையப்பெற்ற சிறு பெட்டி’ என்கிறார் உ.வே. சாமிநாதையர் (மேலது, ப. 337). விதை கொண்டு செல்லவும் பூவைக் கொழுது கொண்டுசெல்லவும் வட்டி பயன்பட்டுள்ளது. வட்டியில் மீனையும் கொண்டு சென்றுள்ளனர், பூவையும் கொண்டு சென்றுள்ளனர்.

ஐங்குறுநூற்றில் ஓரம்போகியார் பாடிய இரண்டு பாடல்களில் வட்டி பற்றிய குறிப்புக்கள் காணப் படுகின்றன. 47,48ஆம் எண் கொண்ட அவ்விரண்டு பாடல்களும் தோழிக்குரைத்த பத்தில் அமைந்துள்ளன. தலைவி கூற்றாக உள்ள 47ஆம் பாடல்

முள்ளெயிற்றுப் பாண்மகளின் கெடிறு சொரிந்த

அகன்பெரு வட்டி நிறைய மனையோள்

அரிகாற் பெரும்பயறு நிறைக்கும் ஊர

மாணிமழை ஆயம் அறியும்நின்

பாணன் போலப் பலபொய்த் தல்லே (ஐங். 47)

என்பதாகும். முட்போலும் கூரிய பற்களையுடைய பாண் மகளின் இனிய கெடிற்றுமீன் பெய்த அகன்ற பெரிய வட்டி நிறைய மனையவள் அரிகாலிடத்து வித்திப் பெற்ற பெரும்பயிற்றைக் கொடுக்கும் ஊரனே, நினக்கு வாயிலாய்ப் புகுந்த பாணனைப் போல நீயும் பொய்பல கூறுதலைச் சிறந்த இழையணிந்த ஆய மகளிரும் அறிவாராகலின், யான் மெய்யென்று கொள்ளுமாறு இல்லை (ஒளவை.சு.து. ப. 138).

இப்பாடலில் வரும் வட்டி என்பதைக் ‘கடகப் பெட்டி’ என்றும் அது உட்புறம் பனங்குருத்தாலும், வெளிப்புறம் அதன் அகணியாலும் செய்யப்படும் என்கிறார் துரைசாமிப்பிள்ளை (மேலது). மேலும் அவர் ‘இது பாணரும் கடையரும் மீனும் ஊனும் பெய்து வைத்தற்குப் பயன்படுவதேயன்றி உழுதொழிலோர் விதை முளை வைத்தற்கும், மகளிர் பூப்பெய்து வைத்தற்கும் பயன்படுமென்று அறிக. முளை வைத்தலாவது வித்திற்குரிய விதை முளைத்தற்குரிய செவ்வி பெறுவித்தல்’ (மேலது, ப. 139) என்ற விளக்கத்தையும் தருகிறார்.

குறுந்தொகைப் பாடலில் (155) வரும் வட்டி என்பதற்கு உ.வே.சா. ‘பனையோலை முதலியவற்றால் செய்த சிறு கூடை’ என்பார். பனைக் குருத் தோலையையும் அதன் அகணியையும் (பனை மட்டையின் புறநார் (Tamil Lexicon, Vol.1, ð.9) 1, ப.9) கொண்டு செய்யப்படும் பெட்டி என்கிறார் ஒளவை துரைசாமிப் பிள்ளை. இதனோடு விதைத்தற்குரிய விதைகளை முளைத்தற்குரிய அளவில் பக்குவப்படுத்துவதற்கும் இந்த வட்டி பயன்பட்டுள்ளது என்ற குறிப்பையும் அவர் தருகிறார். மேற்சுட்டிய பாடல்கள் ‘விதைக்கும் பொருட்டுச் சென்ற உழவர் மாலைக் காலத்தில் மீள்கையில் தாம் விதையைக் கொண்டு சென்ற வட்டியில்’ எனும் பொருள்பட அமைந்திருத்தலும் இங்கு நினைவுகொள்ளத்தக்கது. இன்னொரு ஐங்குறு நூற்றுப்பாடல்

வலைவல் பாண்மகன் வாலெயிற்று மடமகள்

வராஅல் சொரிந்த வட்டியுள் மனையோள்

யாண்டுகழி வெண்ணெல் நிறைக்கு ஊர

வேண்டேம் பெருமநின் பரத்தை

யாண்டுச் செய்குறியோடு ஈண்டுநீ வரவே (ஐங். 48)

என்கிறது. அதாவது, மீன்வலை வீசுதலில் வல்ல பாண்மகனும் வாலிய பற்களையுடைய இளையளாய பாண்மகளும் வரால் மீனைக் கொணர்ந்து சொரிந்த வட்டி நிறைய மனையவள் பழமையான வெண் ணெல்லை உதவும் ஊர, நின் பரத்தை ஆண்டுச் செய்த குறியுடன் ஈண்டு வரும் நினது வருகையை யாம் விரும்புகின்றிலேம் (ஒளவை, ப. 141). என்கிறது இந்தப் பாடல்.

பாண்மகள் மீன் கொண்டுவந்து கொடுத்த வட்டியில் வீட்டுப் பெண் ஒருத்தி நெல்லைக் கொடுத் தனுப்பிய குறிப்பை இப்பாடல் சுட்டுகிறது. கலித் தொகைப் பாடலொன்று இன்னொரு புதிய செய்தியைச் சுட்டுகிறது. 109ஆம் பாடல் முல்லைக் கலி வகை யினதாகும். இப்பாடல் தொல்காப்பியர் கூறும் கைக்கிளை வகையினுள் அடங்குவன. பருவ வயதுடைய ஆடவனொருவன் பருவ வயதை அடையாத பெண்ணைக் கண்டதும் அவளின் அழகில் மயங்கி அவளைப் பற்றி இவனாகப் புலம்பிக்கொள்வதாக அமைந்ததாகும். அவளது அழகைக் கூறும் இடத்தில்

இவள் தான் திருத்தாச் சுமட்டினள், ஏனைத் தோள் வீசி

வரிக் கூழ வட்டித் தழீஇ, அரிக் குழை

ஆடல் தகையள் ...... (கலி. 109: 13-15)

எனும் ஒரு குறிப்பு இடம்பெற்றுள்ளது. அதாவது, இவள்தான் பலநிறத்தையுடைய நெல்லையுடைய வாகிய வட்டியை ஒருகையால் அணைத்து மற்றைத் தோளை இளமைச் செருக்குத்தோன்ற வீசித் தன் அழகிற்குத் திருந்தியிராத சுமையினையுடையவளாய் மெய்க்கட் பூண்டனவன்றிக் கழுத்திடத்திலும் அழகை யுடைய மகரக் குழையாடுதலுண்டான அழகை யுடையவள் (சி.வை.தா. ப. 357). என்கிறது அந்தப் பாடலடிகள்.

காண்பவரை மயக்கும் அழகு மிகுந்த ஆயர் குலப் பெண்ணொருத்தி பல நிறத்தையுடைய நெல் நிறைந்த வட்டியை இடுப்பில் தாங்கிக் கொண்டு தெருவில் நடந்து சென்றாள் என்கிறது இப்பாடலடிகள். பனையால் முடைந்த கூடையில் பல நிறத்தையுடைய நெல்லைக் கொண்டு செல்வதற்குப் பயன்படுத்தி யுள்ளனர் சங்க கால முல்லை நில மக்கள். தெருவில் பூ விற்கும் பெண்ணொருத்தி மல்லிகைப் பூவை வட்டியில் (கூடையில்) வைத்து விலை கூவி விற்றுச் சென்றாள் என்கிறது அகநானூற்றுப் பாடலொன்று. தோழி ஒருத்தி யிடம் தலைவி சொல்வதாக அமைந்த அப்பாடல்

பார்வல் வெருகின் கூர்எயிற்று அன்ன

வரிமென் முகைய நுண்கொடி அதிரல்

பல்கல வட்டியர் கொள்விடம் பெறாஅர்

விலைஞர் ஒழித்த தலைவேய் கான்மலர்  (அகம். 391: 1-4)

என்பதாக அமைந்துள்ளன.

தனக்குரிய இரையைப் பார்த்திருக்கும் காட்டுப் பூனையின் கூர்மையான பற்களைப் போன்ற அரும்பு களைக் கொண்ட காட்டுமல்லிகை மலர்களை அகன்ற கூடையையுடைய பூ விற்போர் அதனை வாங்குவாரின்றி எஞ்சிய மலர்களையெல்லாம் நம்பால் விட்டுப் போயினர். அந்த மலர்களோடு முல்லை மலர்களை ஒரு சேரக் கட்டிக் கூந்தலிலே சூடிக் கொண்டேன்; நம் தலைவரோ அம்மலர்களை அப்புறப்படுத்திவிட்டு என் கூந்தலையே பாயலாக்கித் துயில் கொண்டார் (என்.சி.பி.எச். ப. 1130). என்பதாக அப்பாடல் நீண்டு செல்லும். வட்டி, பூ விற்கும் பெண்களுக்கும் பயன் பட்டுள்ளது.

..................................... வேட்டுவன்

மான்தசை சொரிந்த வட்டியும் ஆய்மகள்

தயிர்கொடு வந்த தசும்பும் (புறம். 33: 1- 3)

இப்பாடல் கோவூர் கிழார் பாடிய வாகைத் திணைப் பாடலாகும். இப்பாடலடிக்கு ‘காட்டின் கண்ணே தங்கும் வாழ்க்கையுடைய சினம் பொருந்திய நாயையுடைய வேட்டுவன் மானினது தசையைச் சொரிந்த கடகமும் இடைமகள் தயிர்கொண்டு வந்த மிடாவும் நிறைய ஏரானுழுது உண்டு வாழ்வாரது பெரிய மலையின் கண் மகளிர் குளத்துக் கீழ் விளைந்த களத்தின்கட் கொள்ளப்பட்ட வெண்ணெல்லை முகந்து கொடுப்ப’ என்கிறது புறநானூற்றுப் பழைய உரை யன்று (உ.வே.சா. ப. 88). இங்கு வரும் வட்டி என்பதற்குக் ‘கடகப் பெட்டி; அதாவது பனை அகணியாற் செய்த பெரிய பெட்டி’ என்பார் உ. வே. சாமிநாதையர் (ப. 87). புறப்பாடலாயினும் முல்லை நிலக் காட்சியே இங்குச் சுட்டப்படுகிறது.

சில செய்திகள்

வட்டி என்பது சங்க காலத்தில் அன்றாட வழக்கிலிருந்த ஒரு புழங்கு பொருளாகும். இது பனை ஓலையும், பனை மட்டையின் நாரையும் கொண்டு செய்யப்பட்டுள்ளது. ஊன், மீன் வகைகளையும் மல்லிகை, முல்லை மலர்களையும் கொண்டு செல்ல வட்டி பயன்பட்டுள்ளது.

தெருவில் பூ விற்கும் பெண்கள் வட்டியில் பூவை வைத்துக்கொண்டு விற்பனை செய்துள்ளனர். வேட்டு வனும், பாண் மகளும் மீன்களை வைப்பதற்கும் மனைப் பெண்களிடம் தானியம் பெறுவதற்கும் வட்டி பயன்பட்டுள்ளது.

இவற்றிற்கெல்லாம் மேலாக உழவர்களுக்கு வட்டி மிக முக்கியமான பயன்பாட்டுப் பொருளாக இருந்துள்ளது. உழவிற்கு வேண்டிய விதைகளைக் கொண்டுசெல்லவும் நெல் போன்ற முளைக்கத்தகுந்த தானியங்களை விதைக்கத் தகும் பக்குவ நிலைப்படுத்துவதற்கும் வட்டி பயன்பட்டுள்ளது. இதனால்தான் உழவுத்தொழில் சார்ந்த மருதம், முல்லை நிலப் பாடல்களில் மட்டுமே வட்டி எனும் சொல் பயின்று வந்துள்ளதைக் காணமுடிகின்றது.

உழவர்கள் காலையில் விதை கொண்டு சென்ற வட்டியில் மாலை வீடு திரும்பும்போது மீன்களைக் கொண்டுவந்த குறிப்பும் உள்ளது. இது வட்டமான வடிவில் இருந்திருக்க வேண்டுமென்பதாலேயே வட்டி எனும் பெயர் அமையப் பெற்றிருக்கக் கூடும். மண்ணால் செய்யப்படும் ஒருவகைப் பயன்பாட்டுப் பொருள் ‘சட்டி’ என்று சுட்டும் வழக்கம் தமிழில் உண்டு. இந்தச் சட்டி சதுர வடிவில் இருப்பதை நாம் பார்த்திருப்போம். தமிழ் மரபில் எந்தக் காலப்பகுதி வரையில் பனையால் செய்யப்படும் வட்டி எனும் பொருள் பயன்பாட்டில் இருந்தது என்பதை அறிய முடியவில்லை.

துணைநின்ற நூல்கள்

1. பரிமணம், அ.ம. & பாலசுப்பிரமணியன், கு. வெ. (ப.ஆ.); செயபால், இரா. (உ.ஆ.). 2011 (4ஆம் பதிப்பு). சங்க இலக்கியம் அகநானூறு (தொகுதி - 2) சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.

2. சாமிநாதையர், உ.வே. (ப.ஆ.). 1971 (7ஆம் பதிப்பு). புறநானூறு மூலமும் பழைய உரையும், சென்னை: டாக்டர் உ. வே. சாமிநாதையர் நூல் நிலையம்.

3. தாமோதரம் பிள்ளை, சி. வை. (ப.ஆ.). 1887. நல்லந்துவனார் கலித்தொகை, மெட்ராஸ்: ஸ்காட்டிஷ் பிரஸ்.

4. துரைசாமிப்பிள்ளை, ஒளவை. சு. (பதிப்பும் உரையும்). 1978 (2ஆம் பதிப்பு). ஐங்குறுநூறு மூலமும் விளக்கவுரையும், அண்ணாமலை நகர்: அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

5. சாமிநாதையர், உ.வே. (ப.ஆ.). 1947 (2ஆம் பதிப்பு). எட்டுத்தொகையுள் இரண்டாவதாகிய குறுந்தொகை, சென்னை: கபீர் அச்சுக்கூடம்.

6. நாராயணசாமி ஐயர், அ. (பதிப்பும் உரையும்). 1915. எட்டுத்தொகையுளன்றாகிய நற்றிணை, சென்னபட்டணம்: சைவ வித்தியானுபாலன யந்திர சாலை.

Pin It