பாரதியின் குயில் பாட்டு வற்றாத நதி போல இலக்கிய இன்பம் தரும் ஓர் அரிய படைப்பு. கற்பனை, மடை திறந்த வெள்ளம் போல் பாய்ந்து வரும் காவியம்.தொட்டனைத்தூறூம் மணற்கேணி போல் வாசிக்க வாசிக்கப் புதுப்பொருள் பயக்கும் பெட்டகம். அவரவர் அறிவு நீட்சிக்கு ஏற்ப பொருள் நீட்சியும் விரிவும் காணத் தக்க களஞ்சியம்." குக்குக்கூவென்று குயில் பாடும் பாட்டினிலே/தொக்கப் பொருளெல்லாம் தோன்றியதென் சிந்தைக்கே" பாரதியின் பாடல் வரிகள் மண்ணிலிருந்து விண்ணைத் தொடும் முயற்சி. பேடைக்குயில் ஒன்றினுள் பிரபஞ்சத்தை அடங்கிவிடும் வித்தை. 'மின்னற் சுவை, நெட்டைக் கனவு, நாதக்கனல், இன்பத்தீ போன்ற பல சொல் இணைவுகள் நெஞ்சை விட்டகலா விந்தைக் சொற்செட்டுகள். இவ்வாறு சொல்லும் பொருளும் மண்டிக் கிடக்கும் குயில் பாட்டு பல்வேறு ஆய்வறிஞர்களுக்கு ஆய்வுப் பொருளாக விளங்கியதில் வியப்பேதுமில்லை. பலர் குயில் பாட்டு குறித்து நூலெழுதி வெளியிட்டுள்ளனர். அந்த வரிசையில் பேராசிரியர் செ.வை. சண்முகனார் எழுதிய 'குயில் பாட்டுத் திறன்' என்ற நூல் புதிய அணுகுமுறையில் எழுதப்பட்ட நூல்.அதனைக் குறித்த சுருக்கமான ஓர் மதிப்புரையை இக்கட்டுரையில் காண்போம்.இந்நூல் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்-இன் வெளியீடாக 2019-டிசம்பரில் வெளிவந்துள்ளது.
இலக்கியத் திறனாய்வு பழைய துறை.மொழியியல் இலக்கியத் திறனாய்வு புதிய துறை. மொழியியல் கோட்பாடுகளைக் கொண்டு இலக்கியத்தை அதன் கட்டமைப்பைப் பகுத்தாய்தல், இயல்பு மொழியிலிருந்து இலக்கிய மொழி வேறுபடும் பாங்கினைக் கண்டறிதல், ஆகியவை மொழியியல் இலக்கியத் திறனாய்வில் முக்கிய இடம் பெறுகின்றன. பேராசிரியர் செ.வை.ச அவர்கள் இலக்கியம், மொழியியல் ஆகிய இரண்டிலும் செறிந்த புலமை மிக்கவர்.கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக மொழியியல் இலக்கியத் திறனாய்வில் ஈடுபட்டு வருகிறார்.
கவிதை மொழி, கவிதை ஆய்வு, குறள் வாசிப்பு, கவிதைக் கட்டமைப்பு,அழகின் சிரிப்பு ஆகிய நூல்கள் அவரது மொழியியல் இலக்கியத் திறனாய்வு திறனுக்கு சான்றுகளாக விளங்குகின்றன.அவ்வாறே குயில்பாட்டுத் திறன் -நூலும் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. தமது வகுப்புத் தோழர்கள்(1952-55) பேரா.கு.சிவஞானம், பேரா.கு.சிவமணி ஆகிய இருவரும் முன்னரே படைத்த குயில் பாட்டு குறித்த நூல்களே இவரது நூல் தோன்றுவதற்கு மூலகாரணம், உந்துவிசை என்கிறார் பேரா.செ.வை.ச. இது அவர்களின் மீது கொண்ட ஆழமான நட்பைக் காட்டுவதோடு அவர்கள் ஈடுபட்ட ஆய்வில் தாமும் பங்களிக்க வேண்டும் என்ற ஆசை யையும் காட்டுகிறது. பின்னோக்கி நட்புத் தடத்தில் பயணித்து முன்னோக்கி அறிவுத் தடத்தில் பயணிப்பது.
குயில்பாட்டுத் திறன் நூலின் உள்ளடக்கம் எட்டு படலங்களாகப் வகுக்கப் பட்டுள்ளது.அவையாவன:
1) மொழியியல் இலக்கியத் திறனாய்வு
2) மொழித் திறன்
3) பொருண்மையியல் திறன்
4) அணித்திறன்
5) மெய்ப்பாட்டுத் திறன்
6) எடுத்துரைப்பியல் திறன்
7) யாப்புத் திறன்
8) வேதாந்தம்
மொழியியல் இலக்கியத் திறனாய்வு:
முதல் படலம் மொழியியல் இலக்கியத் திறனாய்வு என்றால் என்ன என்ற வினாவிற்கு விடை காண்பதாய்ச் சற்று விரிவாக அமைந்துள்ளது. ஏற்கனவே பல நூல்களை இத்துறையில் எழுதிய அனுபவம் விரிவான அறிமுகத்திற்குக் காரணமாக இருக்கலாம். பேராசிரியர் மொழியியல் இலக்கியத் திறனாய்வை இரு கோணங்களில் இருந்து விவரிக்கிறார்.ஒன்று: மேலைநாட்டு அறிஞர்கள் தரும் கோட்பாடு. இரண்டு: தமிழில் ஆணிவேராக இருக்கும் தொல்காப்பியம் தரும் இலக்கியத் திறனாய்வு கோட்பாடுகள்.தொல்காப்பியம் மொழியியல் இலக்கியத் திறனாய்வை உள்ளடக்கியது என்பது பேராசிரியரின் நம்பிக்கை.
மரபு சார்ந்த இலக்கியத் திறனாய்வு நெறிமுறைகளை மடைமாற்றி பழமையில் புதுமையைக் காண்கிற புதுநெறி.
தொல்காப்பியத்தில் பொதிந்துள்ள மொழியியல் இலக்கியத் திறனாய்வு கோட்பாடுகளைத் தமிழிலக்கிய மாணவர்களும் எளிதில் அறிந்து கொள்ள முதல் படலம் பயன்படும்.
குயில் பாட்டின் பொது மொழி:
அடுத்து பாரதியின் குயில் பாட்டில் காணப்படும் பொதுவான மொழியைப் பேராசிரியர் விவரிக்கிறார்.'குயில் பாட்டில் பறவைகளும் விலங்குகளும் பல சமூகத்தைச் சார்ந்த மனிதர்களும் கதை மாந்தர்களாக இருப்பதால் பேச்சு மொழியும் தொல் வழக்கும் திரிசொற்களும் எழுத்து வழக்கோடு கலந்து வருகின்றன. பாரதி தாம் வாழ்ந்த காலத்தில் வழக்கில் இருந்த எழுத்து வழக்கையே பிரதானமாகக் கொண்டு குயில் பாட்டு அமைந்துள்ளது. பாட்டில் வரும் எழுத்து, வேற்றுமை உருபுகள், வினை, வினையெச்ச வடிவங்கள், மூவிடத் திணை பால் காட்டும் விகுதிகள் ஆகியவற்றை விவரித்துப் பட்டியலிடுகிறார். சில பேச்சு வழக்குச் சொற்களாக 'கண்ணாலம், வெளுத்தல், பட்டப்பகல், போன்றவவை குரங்கன் குயிலி ஆகியோர் உரையில் வருகின்றன.இவை பாத்திரங்களின் பண்பை படைப்பு மொழியில் உணர்த்தும் முயற்சி.குயில் பாட்டில் வரும் (உனை -உன்னை போன்ற) உழற்சிகளைப் பட்டியலிட்டு அவற்றிற்கு ஆசிரியர் தரும் விளக்கம் அறியத் தக்கது.இவற்றை நூலில் விரிவாகக் காணலாம்.
பொருண்மை உறவுகள்:
பொருண்மையியல் திறன் என்ற படலத்தில் முரண் சொற்கள்,ஒரு பொருள் பல சொற்கள், பல பொருள் ஒரு சொல்,மீமிசைச் சொற்கள் ஆகியவற்றை விவரித்து குயில் பாட்டில் வரும் பொருள்நிலை (sense relations) உறவுகளைப் படம்பிடித்துக் காட்டுகிறார். "கவிஞர்கள் மொழியின் பரந்த அறிவு காரணமாகவும் ஓசை இன்பத்துக்காகவும் நிறைய ஒரு பொருள் பல சொல்லையும் பல பொருள் ஒரு சொல்லையும் உருவாக்கி அதாவது படைத்துக் கையாளுவார்கள்" (106-107).யாப்பு நோக்கமும் கருத்தாடல் நோக்கமும் இத்தகைய ஆக்கங்களுக்கு அடிப்படையாகலாம். எடுத்துக்காட்டாக:உலகு, அவனி,வையம்,
ஞாலம்,புவி,பார்,மண்,மேதினி,பூமி(108). புதிய சொற்செட்டுகளை உருவாக்குவது ஒரு வகையான புதிய இலக்கியச் சுவையைப் பயக்கும்.இவற்றைப் பல்பொருண்மைச் சொல் (polysemy) என்ற தலைப்பில் விளக்குகிறார்.
வான்மேகம்
வான்மழை
வான்நிலா
என்ற தொடர்கள் இயல்பாவை.ஆனால், ‘வான்காதல்' புதிய ஆக்கம்.மிக உயர்ந்த உன்னத காதலைத் தான் வான்காதல் என்கிறார் பாரதி.
குடத்தில் இருக்கும் நீர் ததும்பும்.
ததும்பி நீர் வெளியே சிந்தலாம். ஆனால் பாரதியோ ‘ஆசை ததும்பும்' என்று புது தொடர் படைக்கிறார். பெருகும் என்ற பொருளில் பயன்படுத்துகிறார்.
சோதி வெள்ளம்
நெருப்போடும் கண்
பிச்சைக் சிறுக்கி -இப்படி பல பல்பொருண்மைச் சொல்லை விரிவாக கொடுத்துள்ளார்.
ஆகு பெயர் அனைவருக்கும் தெரிந்ததே.ஒன்றின் பெயர் மற்றொன்றுக்கு தொன்றுதொட்டு ஆகி வருவது ஆகுபெயர். பேராசிரியர் ஆகுவினை, ஆகுஇடை என்றெல்லாம் புதிய இலக்கணக்கூறுகளை விவரிக்கிறார். அவ்வாறு விவரித்து குயில் பாட்டிலிருந்து எடுத்துக் காட்டுகளைத் தருகிறார்.
1) 'ஆவியிலே தீப்பற்றி'-சினம் பொங்கி உவமை ஆகுவினை
2) 'கண் இரண்டும் மாரி பொழிய'-உவமை ஆகுவினை (பக்-121) பேராசிரியர் சுட்டும் ஆகுவினை, ஆகுஇடை போன்ற இலக்கணக் கலைச்சொற்கள் மாணவருக்குப் புதியவை.
அணித் திறன்:
உவமையும் உருவமும் இலக்கிய இன்பம் தரும் மிக சிறந்த உத்திகளாகும்.பாரதியும் குயில் பாட்டில் புத்தம் புதிய உவமைகளையும் உருவங்களையும் பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளார்.இவை யாவற்றையும் அணித்திறன் என்ற இயலில் அழகுபட ஆசிரியர் விளக்குகிறார். உவமை உருபுகளையும் உவமை வகைகளையும் தொகுத்தளித்துள்ளார்.
சில உவமைத் தொடர்கள்:
1) இருபது பேய் கொண்டவன் போல்
2) பஞ்சுப் பொதிபோற் --- திருவடி
3) பாட்டினைப் போல் ஆச்சரியம்
4) வானத்திடி போல உருவங்களுகுச் சில எடுத்துக் காட்டுக்கள்:
1) கவிஞர் பெண் குயிலைப் பார்த்து 'திரவியமே!' என்று உருவகித்துப் பாடுகிறார்.
2) குயில் மாட்டைப் பார்த்து,'பெண்டிர் மனத்தைப் பிடித்திழுக்கும் காந்தமே!' என்பது
உருவகம்
படைப்பு முழுவதும் பயின்று வரும் உருவகங்கள் பாரதியின் கற்பனைக்கு கட்டியங் கூறுகின்றன.
மெய்ப்பாடுகள்:
குயில் பாட்டில் இடம் பெறும் மெய்ப்பாடுகள் குறித்து அடுத்த ஓர் இயல் ஆய்வு செய்கிறது.'இலக்கியக் கருத்தாடலில், பயன்படுத்தும் சொற்களும் சிறப்பாக அடைச்சொற்களும் மெய்பாட்டின் அடையாளமாக அமையும்' (பக்:159). குயில் பாட்டில் "வெகுண்டேன், கலக்கமுற்றேன்,நெஞ்சில் அனல், மெய் விதிர்த்தேன், குமுறினேன்'" போன்ற சொற்களே வாசகர்களுக்கு மெய்ப்பாட்டை ஏற்படுத்துகின்றன என்று நூலாசிரியர் வலியுறுத்துகிறார்.
குயில் பாட்டு முழுவதும் மருட்கை என்ற மெய்ப்பாடு மேலோங்கி நிற்கிறது என்று ஆசிரியர் முடிவாகக் கருதுகிறார். விந்தை, ஆச்சரியம், வியப்பு, அற்புதம், அதிசயம் போன்றவை திரும்பத்திரும்ப வருகின்றன.
"புல்லை நகையுறுத்திப் பூவை வியப்பாக்கி/மண்ணைத் தெளிவாக்கி நீரில் மலர்ச்சிதந்து/விண்ணை வெளியாக்கி விந்தை செய்யும் சோதி" என்று காலைப்பொழுதைக் கவிஞர் விவரிப்பது மருட்கை (வியப்பு) மெய்பாடே. குயில் பாட்டு முழுதும் குயிலி, குரங்கன், மாடன், கவிஞர் போன்றோர் வெளிப்படுத்தும் பல்வேறு மெய்பாடுகளையும் பகுத்து நூல் விவரிக்கிறது.
நிறைவாக:
எடுத்துரைப்பியல் நோக்கிலும் குயில் பாட்டின் வேதாந்தப் பின்னணி குறித்தும் அடுத்த இரண்டு இயல்கள் விரிவாக விளக்குகின்றன. திணை நோக்கில் குயில் பாட்டு, சமூக வரலாற்று நோக்கில் குயில் பாட்டு போன்றவை கடைசியாக விவரிக்கப்படுகின்றன. இவையாவும் பாரதி ஆய்வில் ஈடுபடும் ஆய்வாளர்களுக்குப் பெரிதும் பயன்படும். மரபிலக்கணத்தில் வரும் கலைச் சொற்களும் மொழியியலில் வரும் கலைச்சொற்களும் கலந்து வருவது சிலருக்குப் பொருள் புரிந்து கொள்வதில் சிக்கல் ஏற்படலாம். மொழியியல் இலக்கியத் திறனாய்வை அனைவருக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்பது பேராசிரியரின் அவா. அது இந்நூலின் வழி நிறைவேறியிருக்கிறது. குயில் பாட்டின் படைப்பு மொழியைப் பல கோணங்களிலும் விளங்கிக் கொள்ள இந்நூல் பெரிதும் துணை நிற்கும்.
- பிரசன்னா கார்த்திகேயன்