50 ஆண்டுகள் நம்மை ஆட்சி செய்வதர்கள் தான் பதவியில் இருந்து கொண்டு சொத்துக்களை குவித்துக் கொண்டு வந்துள்ளனர். மக்கள் நலன் இன்றுவரை சரியாகக் காக்கப்படவில்லை.
குடிநீர் வியாபாரத்தைத் தொடங்கியது, பால் விலை, பேருந்து, மின்சாரக் கட்டணங்களை உயர்த்தியது, அரசு ஊழியர்களைக் கையூட்டு வாங்கி தரும் கையாளாக மாற்றியது, சமச்சீர் கல்வியைக் கொண்டுவருவதாகக் கூறி ஏமாற்றியது, தனியார் கல்வி நிறுவனங்களை கட்டணக் கொள்ளையடிக்கவிட்டது, பொதுப் பணிகளைத் தரமற்றதாகச் செய்தாலும் கையூட்டுப் பெற்று, கணக்கை தீர்த்தது, நீர்நிலைகளைப் பங்கு போட்டுவிற்றது, விவசாய நிலங்களைப் பெருந்தொகை பெற்று மனை போட்டு விற்றது (இன்று மனைகள் மானம் பார்த்து கொண்டுள்ளது) போன்ற பல பாதிப்புகளை உண்டாக்கியது நம்மை ஆட்சி செய்கின்ற, செய்த அரசுகளேக் காரணம்.
இப்பொழுதெல்லாம் புதுப்புது வார்த்தைகளைக் கூறி மக்களை ஏமாற்ற வருகின்றனர். ஒருவர் அண்ணா, புரட்சித் தலைவர், பெருந்தலைவர், பெரியார், அம்பேத்கர் நாமம் வாழ்க என்று கூறி மக்களுக்கு நாமம் போட ஒரு கும்பல் வந்துள்ளது. அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என்று, கூத்தாடிகள் போல் ஒரு கும்பல் வருகின்றது. செய்யாததையும் செய்வோம் என்று கூறி ஒரு கும்பல் வருகின்றது. ஓட்டுக் கேட்கும் தோரணையே நம்மை மயக்க வைக்கும்.
அந்தக் கட்சிக்காரன் இவ்வளவு கொள்ளையடித் தான்; இதைச் செய்யவில்லை; அங்கே இவ்வளவு சொத்து; இந்த வங்கியில் இவ்வளவு பணம் உள்ளது என்று அவர்களே காட்டிக் கொடுக்கின்றனர். இன்னும் பணம் வரும் என்றால் ராஜபக்சேவுக்கே நாட்டை விட்டுக் கொடுப்பார்கள். இன்னும் நாங்கள் வந்தால் இதைச் செய்வோம், அதைச் செய்வோம் என்று சொல்லி ஓட்டுக் கேட்டு வருகின்றார்கள். வெளிப்படையாகக் கையூட்டு கேட்கும் அனைவரையும் ஒழிக்க வேண்டும். கல்வியில் ஏற்றத்தாழ்வு இருக்கக்கூடாது.
நிலத்தடி நீர் மற்றும் நீர்நிலைகள் காப்பாற்றப்பட வேண்டும். விவசாயத் தொழில் சிறக்க வேண்டும். நம் மக்களைச் சிந்திக்க விடாமல் செய்யும் மதுவை ஒழிக்க வேண்டும். இவற்றையெல்லாம் அவர்கள் யாரும் செய்ய மாட்டார்கள். எந்த மாற்றமும், ஏற்றமும் ஏற்படாது அதனால் நமக்கு நாமம் போட நடத்தும் தேர்தலைப் புறக்கணிப்பதே ஒரே வழி.