முதலில் இந்தத் தலைப்பை விளக்கி விடுகிறேன். நாம் இன்று அனுபவித்து வருகின்ற பெருந்தொற்று பெருமளவில் வேகமெடுத்து கட்டுக்கடங்காமல் பரவியதை பேண்டமிக் என்று ஆங்கிலத்தில் அழைத்தனர். இது ஒரு கொடிய தொற்று, அது பெரும்பரப்பில் பரவியது என்ற காரணத்தால் இப்படி அழைத்தனர். உலகம் முழுவதும் எப்படி இதைக் கட்டுப்படுத்த அரசாங்கங்கள் செயல்பட்டன என்பதையும் நாம் அறிவோம். இதில் உயிர்ச்சேதம் மற்றும் பொருட் சேதம் எவ்வளவு நடந்துள்ளன என்பதும் நம் நினைவை விட்டு இன்னும் நீங்கவில்லை. ஆனால் தற்போது நாமெல்லாம் அது முடிந்துவிட்டது, அரசு எடுத்த நடவக்கைகளால் குறைந்துவிட்டது, இனிமேல் ஒன்றுமில்லை என நினைத்து கோவில்களைத் திற, மசூதியைத் திற, தேவாலயங்களைத் திற, பெருங்கூட்டம் கூடுவதற்கு தடை விதிக்காதே, கிராமசபையைக் கூட்டு, திருவிழா நடத்த, பெருவிழா நடத்த அனுமதி என்று அரசுக்கு கட்டளையிடுகின்றோம். கேட்பதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் இந்தக் கேள்விகளைக் கேட்பதற்குத் தகுதிப்படுத்திக் கொண்டோமா என்பதை நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்.
அரசாங்கம் இந்தத் தடைகளை விதிப்பதால் அரசும் பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது என்பதை அரசு என்ன புரியாமலா இருக்கின்றது. அரசுக்கு ஒரு நிர்பந்தம் இருக்கின்றது. அரசு ஆரூடம் பார்த்து முடிவெடுக்க முடியாது. அரசு அறிவியல் தரும் உண்மைத் தரவுகள் அடிப்படையில்தான் முடிவுகள் எடுக்க முடியும். அரசாங்கத்திற்கு கடமை, பொறுப்பு, கடப்பாடு அனைத்தும் இருக்கின்றது. அதை மீற முடியாது. அந்த நிலையில்தான் நம் அரசு மிகவும் கவனமாக தளர்வுகளை அறிவித்தாலும் கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டேயிருக்கிறது. ஏதேனும் தவறுகள் நடந்துவிட்டால் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். ஏனென்றால் அரசுதான் மக்களின் உயிருக்கு, உடமைக்கு பாதுகாப்புத் தரும் பொறுப்புமிக்க நிறுவனம்.
நமக்கு பொதுமக்களாக ஒரு சிந்தனை மற்றும் நடத்தை பழக்கத்தில் இருக்கிறது. பொதுவாக விதிகளை மதிப்பதைவிட மிதிப்பதிலும் மீறுவதிலும் ஒரு ஆர்வம் அத்துடன் அவற்றையே கலாச்சாரமாகவே வளர்த்து ஒரு விழிப்பற்ற நிலையில் செயல்பட்டு வருகிறோம். அதன் விளைவு அரசு மக்களை கோரிக்கைகள் வைத்து விதிமுறைகளை உங்கள் நலனுக்காக கடைப்பிடியுங்கள் என்று கேட்டுக் கொண்ட வண்ணம் இருக்கின்றது. தடுப்பூசி போடுவதற்குக்கூட கிரைண்டர், மிக்சி என குலுக்கல் முறையில் பரிசு கிடைக்கும் என அறிவித்து பரிசுக்காக தடுப்பூசி போட்டுக் கொள்ளும் சமூகமாக இருக்கின்றது நம் சமூகம். பல நாடுகளில் தடுப்பூசி கிடைக்கவில்லை. இங்கு கூவிக் கூவி அழைக்கின்றனர், தாங்கள் எதோ அரசுக்கு உதவி செய்வதுபோல் அங்கு சென்று தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர்.
அரசு கூறுவதை கடைப்பிடிக்க மாட்டார்கள், தடுப்பூசி போட்டுக் கொள்ள வர மாட்டார்கள். ஆனால் அவர்களை அரசு பாதுகாத்துவிட வேண்டும். அந்த அளவுக்கு ஆரோக்யம் பற்றிய புரிதல் இல்லாதவர்களாக, தங்கள் சுகாதாரத்தின் மீதே பொறுப்பற்றவர்களாக கவலையற்றவர்களாக அரசு அனைத்தையும் பார்த்துக்கொள்ளும் என்ற மனோபாவத்தில் செயல்பட்டு வருகின்றனர். இந்த மனோபாவம் தான் நம் முன் நிற்கும் மிகப்பெரிய சவால். இதை எதிர்கொள்ளத் தவறினால் நாம் மிகப் பெரிய சிக்கலுக்கு ஆளாகப் போகிறோம் என்பதை உலக ஆராய்ச்சி நிறுவனங்கள் தங்கள் அறிக்கைகள் மூலம் அறிவுறுத்துகின்றன. நம் உடல்நலம் நம் ஆரோக்யம் என்பது அரசாங்கத்தின் கையில் இருப்பதாகவே நினைத்து செயல்பட்டு பழகிவிட்டோம். இந்தச் சிந்தனை எதோ பாமரர்களிடம் மட்டும் இருப்பதாக நினைக்கின்றோம். அது உண்மையல்ல படித்தவர்களிடமே இருப்பதுதான் நம்மை வியக்க வைக்கின்றது.
இந்த புதிய சூழல் வந்து ஓராண்டு ஆகியும் மக்களின் சிந்தனைப் போக்கில், நடத்தையில் செயல்பாடுகளில் அரசு விதிக்கின்ற விதிகளை நம் ஆரோக்கியத்திற்காக கடைப்பிடிக்க மாற்றம் செய்ய பெருமளவில் மக்கள் முன் வரவில்லை என்பதுதான் நாம் பார்க்கும் எதார்த்தம். இந்த நேரத்தில் உலக சுகாதார நிறுவனங்கள் ஆராய்ச்சி அமைப்புகள் தங்களின் ஆராய்ச்சியின் விளைவாக பல புதிய செய்திகளைக் கொண்டு வருகிறது. அதாவது, நாம் வாழும் இடம் சார்ந்தும், நாம் செயல்படும் விதம் சார்ந்தும், குறிப்பிட்ட காலங்களில் நோய்த் தொற்று என்பது தொடர்ந்து தோன்றப்போகிறது. பெருந்தொற்று என்பது தொடர் தொற்றாக மாறப்போகிறது என்பதைத்தான் இப்படி எடுத்துரைக்கின்றனர் வல்லுனர்கள். அதைத்தான் பேண்டமிக் டு எண்டமிக் என்று ஆங்கிலத்தில் அழைக்கின்றார்கள். இந்த பெருந்தொற்று என்ற நிலையிலிருந்து தொடர் தொற்றாக மாற வாய்ப்பிருக்கிறது என்பதைத்தான் ஆய்வாளர்கள் எடுத்துரைக்கின்றனர்.
தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்கும்போது இந்த பெருந்தொற்றின் கோரத் தாண்டவத்தால் மக்கள் பெரும்பீதியில் இருந்தனர். மக்கள் சுவாசக் காற்றுக்காகவும், உயிர்காக்கும் மருந்திற்காகவும் அலைந்த அலைச்சலை இன்னும் நம்மால் மறக்க இயலவில்லை. பணம் இருந்தும் உயிர்களைக் காப்பாற்ற முடியவில்லை. அந்தச் சூழலை எதிர்கொண்டு மிகக் குறைந்த நாட்களில் சுகாதாரக் கட்டமைப்பில் இருந்த குறைகளைக் களைந்து செயல்பாட்டைத் தீவிரப்படுத்தி தொற்று பரவுவதை கட்டுப்படுத்தி விட்டது தமிழக அரசு. அதற்காக உழைத்த தமிழகத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியனை தமிழகத்தின் சைலஜா டீச்சராக மக்கள் பார்த்தனர். அத்துடன் மருத்துவர்கள் சுகாதார பணியாளர்கள், மற்றும் தூய்மைப் பணியாளர்கள் அனைவரையும் பொதுமக்கள் பாராட்டினர். ஆபத்தான சூழலில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து செயல்பட்டதை யாரும் மறுக்க இயலாது. இந்தச் சூழலையும் பயன்படுத்தி சில தனியார் மருத்துவமனைகள் அறம் இழந்த செயல்பாடுகளில் ஈடுபட்டு பெரும் பணம் சம்பாதித்தனர் என்ற சோக நிகழ்வும் நடந்தது. ம
க்களோடு மக்களாக இணைந்து செயல்பட்ட மா. சுப்ரமணியன் அனைவரின் பாராட்டைப் பெற்ற எளிய மனிதராக உருவானார். மக்களுடன் அரசை கைகோர்க்க வைக்க இப்படிப்பட்ட சாதாரண மனிதர்கள் அமைச்சர்களாக இருப்பது மக்கள் சார்ந்து சிந்திக்கும் ஒரு அரசாக விளங்குவதற்கு அடிப்படைத் தேவையாக இருக்கிறது நம் போன்ற நாடுகளுக்கு. சாதாரண மக்களின் அரசாக ஒரு அரசாங்கத்தை மாற்றுவதற்கு பல மா. சுப்ரமணியன்கள் நமக்குத் தேவை. இந்த நிலையில் டெங்கு பரவுவதை தடுக்க அடுத்த பணியைத் துவக்கியுள்ளது நம் அரசின் சுகாதாரத்துறை. அதுவும் வேகம் எடுக்கின்றது. இதேபோன்று தொடர்ந்து சுகாதாரம் தொடர்பான பிரச்சினைகள் நம் நாட்டிற்கு மட்டுமல்ல, எல்லா நாடுகளுக்கும் ஒன்றன் பின் ஒன்றாக வரப்போகிறது என்பதைத்தான் பேண்டமிக் டூ எண்டமிக் என்ற தலைப்பில் வந்த கட்டுரைகளில் குறிப்பிடுகின்றனர்.
எதனால் இந்த நிலை வரப்போகிறது என்றால் ஒன்று சூழல் காரணமாக, இரண்டு நம் மக்கள் பொறுப்பற்று நடந்து கொள்வதால் என்பதனைத்தான் எண்டமிக் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சூழல் சார்ந்து, பல நோய்கள் வரப் போகிறது. ஏனென்றால் நம் சுற்றுச் சூழல் அந்த அளவுக்கு சீர்கேடு அடைந்திருக்கிறது. அதேபோல் பருவ நிலை மாற்றம் பல பேரழிவுகளை கொண்டுவரப் போகிறது. அடுத்த நிலையில் மக்கள் நடத்தையால் சிந்தனையால் செயல்பாட்டால் உருவாகப் போகின்ற நோய்களும் உண்டு. ஏனென்றால் இன்று வரை நம் வாழ்விடத்தையும் வசிப்பிடத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ளும் பார்வையும் வரவில்லை, நடத்தையும் வரவில்லை. இந்தச் சூழல் சார்ந்து தோன்றுகின்ற நோய் ஒரு குறிப்பிட்ட காலத்தில் சமூகத்தை பெருமளவில் தாக்கும். இதிலிருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முக்கியமான தேவை மக்களின் விழிப்புணர்வு மற்றும் புரிதலுடன் கூடிய ஆரோக்கியப் பாதுகாப்புச் சூழல். இதனை அரசாங்கம் மட்டுமே உருவாக்கிட முடியாது. இதற்கு பெருமளவில் மக்களின் ஒத்துழைப்பு அரசாங்கத்திற்குத் தேவை. மக்கள் அரசுடன் கைகோர்த்து பங்காளியாக செயல்பட்டு தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
இந்தப் புரிதலை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். கடந்த ஓராண்டு காலமும் அரசாங்கம் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டது என்பதை யாரும் மறுக்க இயலாது. இதற்கு மக்களைத் தயார் செய்ய எவ்வளவோ முயன்றது, மக்கள் தங்களை மாற்றிக்கொள்ள முனையவில்லை. ஒரு குறிப்பிட்ட சதவிகித மக்கள் அறிவியல் அடிப்படையில் சிந்தித்து, பேராபத்தை உணர்ந்து தங்கள் உயிர்ப்பாதுகாப்பை உறுதி செய்ய தங்களை மாற்றிக்கொண்டனர். நோய் உருவாவதும், நோய் பரவுவதும் மக்களால்தான் நிகழப்போவது என்பதை ஆய்வுக் கட்டுரைகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
மக்களாகிய நாம் சுத்தம், சுகாதாரம், துப்புரவு பேண பழகிக் கொள்ள வேண்டும். துப்புரவுக்கான ஒரு கலாச்சாரத்தை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். அதற்கான நடத்தை நம் அனைவருக்கும் வரவேண்டும். அப்படி நம் நடத்தை மாறும்போது, குப்பையை கண்ட இடத்தில் வீச மாட்டோம், தண்ணீர் தேங்கவிட மாட்டோம், நெகிழிப் பைகளை கண்ட இடத்தில் வீச மாட்டோம், மக்கும் குப்பைகளை மக்கச் செய்ய பொறுப்பேற்று மக்கச் செய்து உரமாக்கிடுவோம். இல்லத்திலும், வசிப்பிடத்திலும், வீதிகளிலும் நாம் செல்லும் இடங்களிலும், கூடும் இடங்களிலும் தூய்மைச் சிந்தனையில் செயல்பட்டு பொறுப்பு மிக்க ஆரோக்யம் பேணும் குடிமக்களாக மாறிவிடுவோம். எனவே நம் மாநில அரசு சுறுசுறுப்புடன் இயங்குவது என்ற நிலையில் நின்று விடாமல் மக்களுடன் கை கோர்த்து சுகாதாரச் செயல்பாடுகளில் மக்களை பங்காளர்களாகச் செயல்பட தயார் செய்ய வேண்டும். இந்தப் பணி சாதாரணப் பணி அல்ல. இதற்கு வித்தியாசமான அணுகுமுறை அரசுத் துறைகளுக்கு வேண்டும்.
இந்தப் பணியில் குறிப்பாக உள்ளாட்சி அமைப்புக்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதிநிதிகளாக செயல்படுபவர்களுக்கு மிகப் பெரிய பொறுப்பும் பங்கும் இருக்கிறது. இந்தப் புரிதல் மக்கள் பிரதிநிதிகளுக்கு இருக்க வேண்டும். பொதுச் சுகாதாரம் என்பது பொதுமக்களின் பங்களிப்பு இன்றி உருவாகாது என்ற புரிதல் நம் அனைவருக்கும் வேண்டும். அப்பொழுதுதான் மக்களை பொறுப்புமிக்க ஆரோக்கியம் பேணும் குடிமக்களாக உருவாக்க முடியும். கட்டுமானப் பணிகளில் கவனம் செலுத்துவதைவிட பொதுமக்களிடம் ஒரு பொது விழிப்புணர்வும், பார்வையும் உடல் ஆரோக்கியம் பேணுவது பற்றியும், அதன் முக்கியத்துவம் பற்றியும் புரிதலை ஏற்படுத்துவது தான் மிக முக்கியமான பணி. அந்தப் பணி செய்வதன் மூலம் ஒவ்வொரு தனிமனிதரும் தங்கள் உடல் ஆரோக்கியம் தங்கள் பொறுப்பு, அது தங்கள் கையில்தான் உள்ளது என்ற புரிதல் ஏற்படும் வகையில் செயல்பட வேண்டும். இந்தப் பணி பற்றி மகாத்மா காலத்திலிருந்து இன்றுவரை நாம் அனைவரும் பேசி வருகின்றோம். இதைத்தான் ‘தூய்மை இந்தியா' திட்டம் என்று நம் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டம் ஒரு ஆரோக்கிய கலாச்சாரத்தை உருவாக்க ஆரம்பிக்கப்பட்டதாகும். அது இன்று கழிப்பிடம் கட்டும் பணியாக மாற்றப்பட்டு விட்டது.
தூய்மை இந்தியா திட்டம் வெற்றி பெறுவது என்பது கழிப்பறை கட்டுவதில் அல்ல, ஒரு துப்புரவு மற்றும் தூய்மை கலாச்சாரத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதில் தான். எனவே தூய்மை இந்தியா என்பது மந்திரத்தால் உருவாவது அல்ல. தூய்மை இந்தியாவை தூய்மையான குடிமக்களால்தான் உருவாக்க முடியும் என்பதை நம் அரசும், ஆட்சியாளர்களும், நம் மக்கள் பிரதிநிதிகளும் மக்களும் அறிந்து கொள்ள வேண்டும். கிராமங்களிலும் நகரங்களிலும் பிரிக்கப்படாத குப்பைகள் ஆங்காங்கே கொட்டப்படுகிறது என்றால் அதன் பொருள் பொறுப்பற்ற மனிதர்களின் பொறுப்பற்ற செயலால் வந்தது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். பொறுப்புமிக்கவர்களாக பொதுமக்கள் மாறவேண்டும் என்றால் தூய்மை அறிவியல் மக்களுக்கு கற்றுத்தர வேண்டும். அதைத்தான் பெரும்புலவன் பாரதி சுத்த சாஸ்திரம் படிப்போம் என்றான்.
துப்புரவு என்பது குப்பைகளைக் கூட்டி ஓரிடத்தில் மேடாகக் கொட்டி கொசுவை உற்பத்தி செய்வது அல்ல. உருவாக்கிய குப்பைகளை மேலாண்மை செய்வது. அது ஒரு அறிவியல். அதை இன்று வரை நம் மக்களுக்குக் கற்றுத் தரவில்லை. குப்பையில் ஒரு பெரு வணிகம் இந்தியாவில் இருப்பதை பலர் சுட்டிக் காட்டுகின்றனர். அந்த வணிகம் எப்போது சாத்தியமாகும் என்றால் குப்பைகள் பிரிக்கப்படும் போதுதான். அதற்கான பார்வையும் நடத்தையும் வந்து விட்டால், குப்பை வணிகம் செய்ய வெளிநாட்டுக் கம்பெனிகள் வந்து விடும். குப்பை வணிகமாக மாறும்போது, தூய்மைப் பணியாளர்கள் இருக்க மாட்டார்கள், மக்களே தூய்மைப் பணியைச் செய்து பணம் ஈட்ட ஆரம்பித்து விடுவார்கள். அந்த நிலை உருவாக அரசு மக்களைத் தயார் செய்ய வேண்டும். இதைத்தான் பொறுப்புமிக்க சுகாதாரம் பேணும் சிந்தனை கொண்ட குடிமக்கள் தயாரிப்புச் செய்ய வேண்டும் என உலக சுகாதார நிறுவனங்கள் கோடிட்டுக் காட்டுகின்றன.
இந்தத் தயாரிப்பு நடந்துவிட்டால் எந்தத் தொற்றுப் பரவலையும் அரசும் மக்களும் சேர்ந்து எதிர் கொள்ளலாம். இந்தக் கல்வி இன்று மக்களுக்குக் கொடுத்தாக வேண்டும். அதற்கான முயற்சியில் தமிழக அரசு இறங்க வேண்டும். இன்று நகராட்சிகளில் விழிப்புணர்வுத் தட்டிகளைப் பார்க்கிறோம். அது போதாது. இந்த விழிப்புணர்வுக்கான மக்கள் இயக்கம் உருவாக்கப்பட வேண்டும். அது பள்ளிகளில், கல்லூரிகளில், நடைபெற வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும், உன்னத் பாரத் திட்டத்தைப் பயன்படுத்தி மக்களிடம் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
தொழில் முனைவோர் குப்பையில் எவைகளைத் தயாரிக்க முடியும், குப்பைகளை எவ்வளவு சீக்கிரமாக உரமாக மாற்ற முடியும் என்பதற்கான தொழில் நுட்பத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். பல்வேறு மக்கள் இயக்க நடவடிக்கைகளை மக்கள் பிரதிநிதிகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், ஆராய்ச்சி நிறுவனங்களும், வணிக நிறுவனங்களும் கிராமத்திலுள்ள தன்னார்வலர் இளைஞர்களும் களப்பணியாற்றி இதன் முக்கியத்துவத்தை விளக்கிட வேண்டும். சிறப்பு கிராமசபைக் கூட்டம் கூட்டப்பட்டு கிராம மக்களுக்கு பொறுப்புமிக்க பொதுச் சுகாதாரம், பொறுப்பு மிக்க ஆரோக்கியம் பற்றி எடுத்துரைக்க வேண்டும். தொற்று எவ்வளவு விரைவாக பரவுகிறதோ அதேபோல் இந்தச் சிந்தனைத் தொற்று பரவவேண்டும். இதுதான் இன்றைய உடனடித் தேவை. இல்லையேல் நம் மேம்பாடு முன்னேற்றம் வளர்ச்சி எல்லாம் கேலிக்கூத்தாகிவிடும். இதை உணர்ந்து மக்களை அரசுச் செயல்பாடுகளில் பங்காளியாக்கிக் கொண்டு செயல்படுவதுதான் அனைவரின் பாதுகாப்பிற்கும் வளர்ச்சிக்கும் இன்றியமையாதது. இந்தப் புதிய சிந்தனையில் செயல்படுமா நம் சுகாதாரத்துறை.
- க.பழனித்துரை