சொ.முருகப்பா (1893 - 1956) தமிழறிஞரும், இதழியலாளரும், பதிப்பாளரும், தமிழிசை இயக்க முன்னோடிகளில் ஒருவராகவும், சொற்பொழிவாளராகவும், எழுத்தாளராகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்தவர்.

வாழ்க்கை

so murugappa1893 ஆம் ஆண்டு காரைக்குடியில் சொக்கலிங்கம் செட்டியார் - விசாலாட்சி ஆச்சி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். தமது தொடக்கக் கல்வியை திண்ணைப் பள்ளி வழியே கற்றார். காரைக்குடியில் உயர்நிலைக் கல்வி பயின்றார். தமிழ் இலக்கண இலக்கியங்களை, மதுரை தமிழ்ச் சங்கத்தில் பட்டம் பெற்ற சிதம்பரம் ஐயரிடம் கற்றுத் தேர்ந்தார். 05.06.1912 இல் காரைக்குடி முத்துப்பட்டினத்தில் அம்மான் மகளாகிய பொற்கொடியாள் ஆச்சியை திருமணம் செய்து கொண்டார். இவர் மலாயாவில் உள்ள ஈப்போ நகரத்தில் 1913 முதல் 1916 வரை தொழில் செய்து வந்தார். அங்கிருந்து ஊர் திரும்பி வந்தபின் தமிழ்க்கடல் ராய சொக்கலிங்கம் உள்ளிட்ட 20 அறிஞர்களைக் கொண்டு 1917 இல் காரைக்குடியில் விவேகானந்தரின் புரட்சிக் கருத்துக்களை பரப்பவும், நாட்டிற்கும் மொழிக்கும் பாடுபட இந்து மதாபிமான சங்கத்தைத் தோற்றுவித்தார். மகாகவி சுப்பிரமணிய பாரதியார் 1919 இல் இச்சங்கத்துக்கு வருகை புரிந்ததுடன் சங்கப் பணிகளைப் பாராட்டி சில வாழ்த்துப் பாக்களை இயற்றியுள்ளார்.

தன வைசிய ஊழியர் சங்கம்

இதனைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் கழித்து தனவணிக சமூகத்தின் குறைபாடுகளையும் சமூக முன்னேற்றம் கருதியும் “தன வைசிய ஊழியர் சங்கம்” என்ற ஒரு சங்கத்தைத் தொடங்கினார். மேலும் அதற்கென “தன வைசிய ஊழியன்” என்ற பெயரோடு ஒரு வார இதழையும் ஆரம்பித்தார். இச்சங்கத்தின் சார்பில் தொண்ணூற்றாண்டுக் கூட்டம் எனும் தன வணிக மாநாட்டைக் கோவிலூரில் 1921 இல் கூட்டி பல சீர்திருத்தத் தீர்மானங்களை நிறைவேற்றினார். அவற்றுள் மிக முக்கியமானது பெண்ணுக்கு பணம் வாங்குதல், பெண்ணைப் பெற்றவர் மணம் செய்து கொடுப்பதற்கு 35 ஆயிரம் ரூபாய் வரை பெற்றுக் கொள்ளும் வழக்கம் அன்று இருந்தது; அதனை ஒழிப்பதற்கு தன வைசிய ஊழியர் சங்கம் பெருமுயற்சி எடுத்துக் கொண்டது. ஆனால் தற்பொழுது அம்முறை தலைகீழாக நடைமுறையில் உள்ளது நினைக்கத்தக்கது. ஆனால் இதனைத் தடுக்க முயற்சி எடுக்க ஒரு சொ.மு இல்லை.

குமரன் இதழ்

1922 இல் தன வைசிய ஊழியன் பொறுப்பை ராய சொக்கலிங்கத்திடம் கொடுத்துவிட்டு சொ.மு. விலகி காரைக்குடியிலிருந்து ‘குமரன்’ என்ற இதழை 1932 இல் வெளியிட்டார். இதன் இலட்சியம் ஆரம்பத்தில் நாட்டு விடுதலை, அகிம்சா தருமம், கதரியக்கம் என்று இருந்தாலும் பிற்காலத்தில் சமூக சீர்திருத்தத்தை மிகுதியாக வலியுறுத்திக் கட்டுரைகள் வெளிவந்தன. நீதிக்கட்சிக்குச் சார்பாகவும் செய்திகள் வெளியிடப்பட்டது. காங்கிரசிலிருந்து பெரியார் விலகியபின் சுயமரியாதை இயக்கத்தையும் சமூகச் சீர்திருத்தச் சிந்தனைகளையும் தன் இதழின் நோக்கங்களாக இணைத்துக் கொண்டதுடன் நீதிக்கட்சியின் தலைவர் டி.எம்.நாயரின் வாழ்க்கை வரலாற்றையும் தொடராக வெளியிட்டு வந்தது. குமரன், நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம் நடத்திய மாநாடுகளைப் பற்றிய செய்திகளையும் பார்ப்பனரல்லாத இளைஞர் மாநாடு (1929) செய்திகளையும் வெளியிட்டது.

குமரன் இதழ் பல வகையில் சிறப்பு பெற்றதாகும். தமிழ் பத்திரிகை உலகில் முதன் முதலாக ஆண்டுமலர் வெளியிட்டது ‘குமரன் இதழ்’ என்று அறிஞர் சோமலெ குறிப்பிடுகிறார். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் முதற் கவிதை இவ்விதழில் இடம் பெற்றது. இது போல இலங்கை விபுலானந்தரின் கட்டுரைகளை வெளியிட்டு அவரைத் தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். மறுமலர்ச்சி எழுத்தாளர்களான வ.ரா, ஊழியனிலும், பி.ஸ்ரீ குமரனிலும் பணியாற்றினார்கள்; புதுமைப்பித்தன் போன்றோர் இவ்விரு இதழ்களிலும் பணியாற்றி உள்ளார்கள்.

கிராப்பு வைத்துக் கொள்ள போராட்டம்

செட்டி நாட்டில் முருகப்பா நடத்திய போராட்டங்களில் மிக முக்கியமானது, கிராப்பு வைத்துக் கொள்ள வேண்டும் என்று நடத்திய போராட்டம். இதற்காக ஒன்றரை ஆண்டுகள் போராட்டம் நடத்தினார் செட்டியார். மக்கள் தலையை முழுக்க மழித்துக் கொள்வது அக்கால வழக்கம். அவ்வழக்கத்திற்கு மாறாக முருகப்பாவும் கானாடுகாத்தான் சண்முகனாரும் துணிந்து கிராப்பு வைத்துக் கொண்டார்கள். அந்நாளில் இராமசுப்பிரமணியம் (நீலாவதி அம்மையாரின் கணவர்) மறைந்த கவிஞர் பேராசிரியர் க.தேசிகனார் போன்றோர் கிராப் வைத்ததன் காரணமாக வீட்டிற்குள்ளே அனுமதிக்கப்படாமல் ஒன்றரை மாதம் திண்ணையிலே இருக்கும்படி ஆனது.

விதவா விவாகம்

கணவனை இழந்த காரணத்திற்காக விதவை பெயர் கொடுத்து ஒதுக்கி வைக்கும் தவறான முறையை சொ.முருகப்பா கடுமையாக எதிர்த்து வந்தார். இதன் காரணமாக விதவைகள் மறுமணம் செய்து கொள்வதை அவர் ஆதரித்து தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்ததோடு தன் கருத்துக்களை எழுதியும் வந்தார். 1929 இல் செங்கல்பட்டு முதல் சுயமரியாதை மாநாட்டை அடுத்து பட்டுக்கோட்டையில் நடந்த சுயமரியாதைத் தொண்டர்கள் மாநாட்டைத் திறந்து வைத்து சொற்பொழிவு ஆற்றும்போது மாதர் மறுமணத்தை வெகுவாக வற்புறுத்திப் பேசினார். இதனைக் கேட்ட கைம்பெண்ணாயிருந்த மரகதவள்ளி என்ற பெண் தம்மை வாழ்க்கைத் துணைவியாக ஒப்புக் கொள்வதாக இருந்தால் இவரைத் திருமணம் செய்ய விரும்புவதாகத் தெரிவித்தார். ஏற்கனவே சொ.மு. மணமானவர் ஆதலின் இதற்கு பெரியார் ஈ.வெ.ரா. இசைவளிக்கவில்லை. கி.ஆ.பெ விசுவநாதம் தலையிட்டு பெண்ணும் பிள்ளையும் விரும்பும்போது நாம் ஏன் தடையாய் இருக்க வேண்டும் என்று பெரியாரை இணங்க வைத்து திருமணத்தை முடித்து வைத்தார். இத்திருமணம் பற்றி பெரியார் ஈ.வெ.ரா. 7-7-1929 குடியரசு இதழில் துணைத் தலையங்கம் எழுதி சொ.மு.வை பாராட்டி “இச்செயல் பெருத்த தியாகபுத்தியும் வீரமான காரியமும்” என்று எழுதினார். 29.06.1929 அன்று திருப்பரங்குன்றத்தில் தந்தை பெரியாரின் தலைமையில் இவர்களது வாழ்க்கை ஒப்பந்தம் நடைபெற்றது.

இதனால் சொ.மு இந்து மதாபிமான சங்கத்தை தோற்றுவித்திருந்தாலும் மத மூடநம்பிக்கைக்கு மாபெரும் வேட்டுவைத்து மறுமணம், கலப்பு மணம் - காதல் மணம் - சடங்கொழித்து மணம், சிக்கன மணம் என்ற அய்வகைத் தன்மை கொண்ட திருமணத்தை தமிழ் நாட்டிலேயே முதன் முறையாக நிறைவேற்றிய பெருமையை ஈட்டிக் கொண்டார். ஆரம்பத்தில் காங்கிரஸ் இயக்கத்தோடு இணைந்து செயல்பட்டார். சொ.முருகப்பா பின்னர் சுயமரியாதை இயக்கக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார் அவ்வியக்கத்தை பரப்புரை செய்யும் பொருட்டு குமரன் இதழ் வெளியிடுவதை நிறுத்திவிட்டு திருச்சியிலிருந்து 1932 இல் சண்டமாருதம் என்ற இதழ் தொடங்கப்பட்டது. சொ.மு அதன் நிர்வாக ஆசிரியராக இருந்து செயல்பட்டார். இதனைத் தொடர்ந்து மாதர் மறுமண சகாய சங்கத்தைத் தொடங்கினார். இச் சங்கம் கைம்பெண் மணம் செய்ய முன் வருவோருக்கு உதவிகள் செய்ததுடன், கைம்பெண் மணத்தை ஆதரித்துப் பல நூல்களையும், பிரசுரங்களையும் வெளியிட்டது. இச்சங்கத்தின் சார்பில் “மாதர் மறுமணம்” என்ற மாத இதழ் ஆரம்பிக்கப்பட்டது இவ்விதழின் ஆசிரியர் மு.மரகதவள்ளி, மாதர் மறுமணம் என்பதை மையப் பேசுபொருளாகக் கொண்ட இவ்விதழ் கைம்பெண்களின் மறுமணத்தை ஆதரித்துத் தமிழில் வெளியான முதல் மற்றும் ஒரே இதழ், கைம்பெண் திருமணத்தை ஆதரிக்கும், ஆசிர்வதிக்கும் காந்தியின் படமே இதழின் முகப்புப்படமாக இடம் பெற்றது. ஒரு கைம்பெண் மண்டியிட்டு காந்தியை வணங்க, காந்தி அவளை ஆசிர்வதிப்பது போன்ற ஓவியம் ஒவ்வொரு இதழின் முகப்பு அட்டையிலும் இடம் பெற்றது.

இவ்விதழைக் குறித்து அம்பை குறிப்பிடுகையில் 1936இல் ஆரம்பிக்கப்பட்ட மாதர் மறுமணம் பெண்கள் பிரச்சினை சம்பந்தப்பட்ட பத்திரிகை என்றாலும் அது பெண்களுக்கான பத்திரிகை மட்டுமல்ல, அது ஒரு இயக்கத்தின் குரலாக விழிப்புணா¢வூட்டும் கருவியாக உருவான பத்திரிகை. மாதர் மறுமணம் என்ற அச்சு இயக்கத்தின் நோக்கம் பெண்ணுக்கு ஆண்துணை, ஆண் பாதுகாப்பு என்ற அன்றாடத் தேவைகளின் அடிப்படையில் அமைந்திருந்தாலும் தொடர்ந்து நம்பிக்கையுடனும் உறுதியுடனும் செயலாற்றி, அச்சு மூலம் சேதிகளைத் தொடர்ந்து பரப்பி, அறைகூவல் விடுத்து விடாப்பிடியாக இயங்கி அது வெற்றி பெறுகிறது, 1937 இல் நடந்த முதல் விதவை மறுமணம் அதன் வெற்றி எனலாம். அதைத் தொடர்ந்து பல திருமணச் செய்திகள் வருகின்றன. ஒரு இயக்கத்தின் நோக்கம் அச்சு ஊடகத்தின் எல்லாவித உபயோகங்களையும் பயன்படுத்தி, வெளிப்பட்டு, இத்தகைய வெற்றிகளை ஈட்டித் தந்தது மாதர் பத்திரிகையின் நோக்கத்தின் ஈடேறல் என்று உறுதியாகக் கூறலாம்” என மதிப்பிடுகிறார்.

மாதர் மறுமணம் இதழின் நோக்கம் விதவைகளின் கண்ணீர் துடைக்கப்பட வேண்டும் என்பது. விதவை மணமே விடுதலை அளிக்கும் என்று அச்சிட்ட மஞ்சள் வர்ணப் பென்சில் (எழுதுகோல்) தயாரிக்கப்பட்டு இவ்விதழ் விற்பனை செய்தது. “கணவனிழந்து வருந்தும் பெண்ணின் தொகை இந்திய நாட்டில் இரண்டரை கோடிப்பேர் என்று சொன்னால் யாரும் திடுக்கிடாதிருக்க முடியாது, இவர்களின் கண்ணீர் துடைக்கப்பட வேண்டும். ஆனால் பொது ஜன வழக்கமானது இச்செயலை ஒரு விளையாட்டாக மதித்து வருகிறது. இப்படியே இப்பெண்களை வதைத்து வயிறெரிந்து கொண்டிருப்பது மத சமுகக் கடமையென்று கருதுவார் தொகையும் குறைவடையவில்லை. இந்நிலையில் இப்பெண்களின் கூட்டத்திற்கு விடுதலை நல்க வேண்டுமென்பதை அடிப்படையாகக் கொண்டுதான் நமது பத்திரிகை தோன்றியிருக்கின்றது” என இதழின் நோக்கத்தை ஆசிரியர் மு.மரகதவள்ளி குறிப்பிடுகிறார்.

இவ்விதழில் பாரதிதாசன், அம்மு சுவாமிநாதன், ப.நீலகண்டன், சாமி சிதம்பரனார், ஆ.எஸ்.ராஜலெட்சுமி, கமலாதேவி, சுத்தானந்த பாரதி, மாயாண்டி பாரதி, முத்துலெட்சுமி ரெட்டி, எஸ்.சத்தியமூர்த்தி, நீலாவதி ராமசுப்பிரமணியம், வித்வான் அரு.சோமசுந்தரம் செட்டியார் வித்வான் எஸ் உமைதாணுப்பிள்ளை, வி.ஆர் பாமே அவாள் பிள்ளை, தென்னாப்பிரிக்கா டர்பன், ச.முனிசாமிப்பிள்ளை, ச.மு.பார்வதிபிள்ளை போன்றோர் பல சீர்த்திருத்தக் கட்டுரைகளை எழுதினர்.

மாதர் மறுமணம் என்னும் ஒரே கருத்தை வலியுறுத்தி பல்வேறு இலக்கிய வடிவங்களில் இவ்விதழின் கட்டுரைகள் அமைந்தன. மாதர் மறுமணம் பற்றிப் பேசத் தயங்கிய காலகட்டத்தில் இவ்விதழ் தன் ஒவ்வொரு பக்கத்திலும் மாதர் மறுமணம் பற்றிய செய்திகளையும் விதவைத் திருமணத்திற்கு உதவும் மகளிர் இல்லங்கள், நிறுவனங்கள் குறித்தும் குறிப்பிட்டு முழுக்க முழுக்க ஒரு மாதர் மறுமண ஆதரவு இதழாகத் திகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. சொ.முருகப்பாவும் அவரது மனைவி மு.மரகதவள்ளியும் இணைந்து காரைக்குடியை அடுத்துள்ள அமராவதி புதூரில், மகளிருக்கான இல்லம் ஒன்று நிறுவினர். இளம் கைம்பெண்களுக்கு கல்வி கற்பித்து கைத் தொழில் பயிற்றுவித்து, மறுமணம் செய்து வைப்பது இதன் நோக்கம். இந்த இல்லம் ஏப்ரல் 14, 1938 இல் அப்போதைய கல்வி அமைச்சா¢ டாக்டர் சுப்பராயனால் திறந்து வைக்கப்பட்டது. ஆகஸ்ட் 30, 1939இல் சொ.முருகப்பா பெயரில், அமராவதி புதூரில் மழலையர் பள்ளி ஒன்று தொடங்கப்பட்டது. இதனை சுவாமி விபுலானந்த அடிகள் திறந்து வைத்தார்.

இதுபோல காரைக்குடியில் “இராம கிருஷ்ண கலாசாலை” என்ற அமைப்பை ஏற்படுத்தி அதில் தனது ஆசான் சிதம்பரம் ஐயரையே ஆசிரியராக நியமித்து பலரும் தமிழ் கற்றுக் கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தார் சொ.முருகப்பா.

இது தவிர உயிர்க் கொலைகளைத் தடுப்பதற்கு ஊர் ஊராகச் சென்று சொற்பொழிவாற்றினார். ஆண்டுதோறும் தமிழிசை வளர்ச்சிக்கு முன்னிலைத் தலைவராக வீற்றிருந்து தமிழிசை மூவருள் ஒருவரான முத்துத் தாண்டவர் விழாவைச் சிறப்புற நடத்தி வந்தார்.

பெண் கல்வி வளர்ச்சி, கைத்தொழில், கைம்பெண் மறுமணம் என சமூகம் சார்ந்த பல செயல்பாடுகளில் பல்வேறு எதிர்ப்புகள் வந்த போதும் கூட சொ.முருகப்பா உறுதியாக நின்று உழைத்தார். இவரைப் பற்றி சமூக சேவகி டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி “சமூக சீர்திருத்த ஊழியத்தில் ஈடுபட்டு உழைத்து வருபவர்களில் ஸ்ரீ மான் முருகப்பா அவர்களும் ஒருவர். இவர் மாதர் மறுமண சகாய சங்கத்தை ஏற்படுத்தி நான்கு வருஷமாக அதன் விருத்திக்காகப் பெரும் பாடுபட்டு வருகிறார், பிரசங்கம் மூலமாகவும் விதவா விவாகத்தைப் பரவச்செய்யப் பிரயத்தனப்படுவதில் அவருக்குச் சமானமாக யாரும் இல்லையென்று சொல்லலாம். தென்னிந்தியாவில், தமிழ் நாட்டில் ஸ்ரீமான் முருகப்பனைப் போல் புருஷர்கள் ஸ்திரீகளுடைய குறைகளை நிவர்த்தி செய்ய முன்வந்திருப்பது நாம் எல்லோரும் மெச்சத் தகுந்தது” என்று பாராட்டியுள்ளார்.

இது தவிர இவர் சமூக சேவையைப் பாராட்டி “சீர்திருத்தச் செம்மல்”, செட்டிநாட்டின் ராஜாராம் மோகன்ராய் என்ற பட்டங்களும் அளிக்கப்பட்டன. பல சமூக சீர்திருத்தங்கள் செய்த சொ.முருகப்பா திடீர் உடல் நலக்குறைவு காரணமாக ஜூன் 20, 1956 இல் இயற்கை எய்தினார்.

- டாக்டர் சு.நரேந்திரன், எழுத்தாளர், சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக சிறப்புநிலைப் பேராசிரியர்.