ஆதிமனிதன் உடல்நலக் குறைவிற்கான காரணங்களை அறிய முயன்றான்.  நோய்களில் இருந்து தம்மைத் தாமே காத்துக் கொள்ளும் விலங்குகளைக் கூர்ந்து கவனித்தான்.  அதன் பயனாய் விலங்குகளிடமிருந்து மூலிகை மருத்துவ அறிவினைக் கற்றான்.  இந்நோய் தீர்க்கும் கலை நூற்றாண்டுகள் செல்லச்செல்ல மென்மேலும் முன்னேற்றம் பெற்றது.  இதன் பயனாய் மனிதனுக்குத் தேவையான உணவு முதல் மருந்து வரை தாவரத்தில் இருக்கின்றது என்ற நுட்பம் வெளிப்பட்டது.  இக்கருத்தையே மூலிகை மருத்துவத்திற்கான ஆரம்பமாகக் கொள்ளலாம்.

மூலிகை தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகெங்கும் 70-80 விழுக்காடு, குறிப்பாக வளர்ந்து வரும் நாடு களில் முதன்மை மருத்துவமாக பயன்பாட்டில் உள்ளது.  உலகில் மூலிகை மருத்துவத்தின் பயன் பாடு மற்ற வகை மருந்துகளின் பயன்பாடுகளைக் காட்டிலும் இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாக உள்ளதாக உலக சுகாதாரக் கழகம் கணக்கிட்டுள்ளது.  இன்றைய ஆங்கில மருத்துவம் கூட கடந்த நூற்றாண்டுக்கு முன்னர் மூலிகையை அடிப்படையாகக் கொண்டே ஆரம்பமாகி உள்ளது.  எ.கா.: ஆஸ்பிரின், வில்லோ பட்டையிலிருந்தும், டிஜாக்சின் பாக்ஸ் கிளவ் என்ற கையுறை போன்ற செடியிலிருந்தும், குயினைன், சின்கோனா பட்டையி லிருந்தும், மார்பியா கசகசா செடியின் காயி லிருந்தும் தயாரிக்கப்படுகிறது.

மருத்துவ வரலாறு என்பது நோயைக் குணமாக்க மூலிகையிலிருந்து தொடங்குகிறது.  ஆனால், தொழிற்புரட்சிக்குப் பின் சுகாதாரக் கேடுகள் மலிந்த நிலையில் அலோபதி மருத்துவம் தோன்றியது.  அதன் பின்னர் மூலிகை மருத்துவம் ஒரு சிறந்த அரிய நோய் தீர்க்கும் மருத்துவமாக இருப்பினும் ஆங்கில மருத்துவ மோகத்தால் ஆர்வம் குறைந்து இதன் பயன்பாடும் 20ஆம் நூற்றாண்டில் குறைந்தது.

ஏனெனில், மூலிகை மருத்துவத்தினால் பயன் இல்லை அல்லது நோயைத் தீர்க்காது என்பதல்லாது, நவீன மருத்துவத்தினால் அதிக வருமானம் கிடைக் கிறது என்பதனாலும், தடுப்பு மருத்துவம் மற்றும் உடன் தீர்க்கவல்ல சில மருந்துகள் மேலை மருந்தில் கண்டுபிடிக்கப்பட்டதும் ஆகும்.  19ஆம் நூற்றாண்டில் அறிவியல் வளர்ச்சி மென்மேலும் வளர்ச்சிபெற்ற நிலையில் மூலிகை மருத்துவமானது போலி மருத் துவம் அல்லது அரைகுறை மருத்துவம் என்று ஒதுக்கித் தள்ளப்பட்டது.  ஆனாலும், 1960ஆம் ஆண்டிற்குப் பிறகு நவீன மருந்துகளால் ஏற்படும் பக்க, நச்சு விளைவுகளைக் கண்டு கவலை கொண்டு, பயந்து இதற்கு மாற்று வழியான இயற்கை மருத்துவமான மூலிகை மருத்துவமே சிறந்தது என்று மூலிகை மருத்துவத்திற்கு ஒரு புதிய வேகம் தோன்றி, பயன்பாடு அதிகரித்தது.  இதன் காரண மாக மாற்று மருத்துவ முறை என்று அமெரிக்காவில் கூட 1992ஆம் ஆண்டு தேசிய நலக் கழகத்தில் ஏற்படுத்தப்பட்டது.  மேலும், உலக சுகாதார நிறுவனம் வளரும் நாடுகளில் நவீன மருத்துவத்தால் தரமுடியாத, பெற முடியாத நிலையில் மருத்து வத்தை மூலிகை மருத்துவத்தின் மூலம் பெற ஆதரவு தெரிவித்து ஊக்கப்படுத்தியது.

இதன் காரணமாக நம்மைப் போன்ற வளரும் நாடுகளில் இதன் தேவை அதிகரித்து, பயன்பாடும் மிகுந்து வருகிறது.  ஏனெனில் இம்மருந்துகளுக் கான தயாரிப்புச் செலவு குறைவு.  தங்கள் கலாச் சாரத்திற்கு ஒத்து வருவது, உடலுக்குக் கேடு விளைவிக்காதது என்பதால் ஆகும்.  இருப்பினும் அண்மைக் காலங்களில் எல்லா மூலிகை மருந்து களும் உடலுக்குக் கேடு விளைவிக்காது என்று சொல்வதற்கில்லை.  இன்று பயன்பாட்டில் உள்ள பல மூலிகை மருந்துகள் அவற்றின் தரத்தையும் தீங்கின்மையையும், செயல் திறனையும் ஆய்வு மூலம் நிரூபிக்க தவறிவிட்டது.  இவற்றை மனதில் கொண்டே நவீன மருத்துவத்திற்கு மூலிகை மருத் துவம் ஒரு மாற்றுமுறை மருந்தாகவோ அல்லது நவீன மருத்துவத்தால் தீர்க்க முடியாத நோய்களை தீர்க்க வல்லதாகவோ அமைய அறிவியல்பூர்வமான மருத்துவசோதனைகளைச் செய்து அதன் தீங்கின் மையையும், செயல்திறனையும் நிலைநிறுத்தி மீண்டும் புத்துயிர் அளித்து மூலிகை மருத்துவம் தரமுடன் பயமின்றி பயன்பாட்டிற்கு வர அதற்கான காப்புரிமை பெற்று உலகறிய மீண்டும் தமிழ் மரபு, தமிழ் மருத்துவம் காக்க, தழைக்க வேண்டும்.

மூலிகை மருத்துவத்தின் இன்றைய பயன்கள்

நம்முடைய பரம்பரை தமிழ் மருத்துவத்தில் மூலிகையுடன் அரிய உலோகங்களும் மற்றும் கரிமப் பொருட்களும் சேர்த்தே தயாரிக்கப்படு கின்றன.  ஆனால், மூலிகை மருத்துவம் என்பது மருத்துவ குணமுள்ள தாவரங்களிலிருந்து முதன் மையாக மருந்து உற்பத்தி செய்யப் பயன்படுகிறது.  இந்திய முறைகளில் ரிக் வேதம், அதர்வண வேதம், சரகசம்ஹிதா, சுசுருத சம்ஹிதாவிலிருந்தும், தமிழகத்தில் அகத்தியர் முதலான பல நூறு சித்தர்களிடமிருந்தும் மருத்துவச் செய்திகளைப் பெற முடிகிறது.  ஆகவே, வரலாறு படைத்த வர்கள் நாம் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.

மூலிகை மருத்துவத்திற்கான மோகம்

அதிகரித்து வருவதற்கான காரணம்

மூலிகை மருந்துகளைப் பயன்படுத்தும் நோயாளிகள் தங்களை மாற்றிக் கொண்டதற்கான காரணமாகச் சொல்லப்படுவது இது மனநிறைவை அளிக்கிறது.  இதன் காரணமாக நாட்பட்ட அல்லது குணப்படுத்த முடியாத நோய்களை, எடுத்துக் காட்டாக நீரிழிவு, புற்றுநோய், மூட்டுவலி மற்றும் எய்ட்ஸ் போன்ற நோய்கள் ஏற்பட்ட நிலையில் நவீன மருத்துவம் பயனற்றது என்ற எண்ணம் பெரிதும் வலுப்பெறும் நிலையிலும் இம் மூலிகை மருத்துவம் உதவும் என்பதாகும்.

இதுபோல் வீட்டு மருத்துவத்திலும் தானே குணமாகும் நோய்களான நீர் கோர்வை, தொண்டைப் புண், தேள், தேனீ கொட்டு ஆகியவைகளுக்கும் கண்கண்ட மருந்துகள் நவீன மருத்துவத்தைவிட மூலிகை மருத்துவத்தில் உண்டு.  இதற்கு செலவும் குறைவு, குணமாகும் காலமும் குறைவு.

இவை இன்னும் பல கிராமங்களில் கடை பிடிக்கப்படுகிறது.  அதாவது கிராமப்புறங்களில் நாம் அம்மண்ணுடன் இணைந்து வாழ்கிறோம்.  நோயுள்ள இடத்தில் அதற்கான மூலிகையும் இருக்கும், கிடைக்கும் என்ற கொள்கையும் நமக்கு பரம்பரையாக உண்டு.  இன்றைய நிலையில் நவீன மருத்துவத்தால் ஏற்படும் பக்க விளைவுகள், நச்சு விளைவுகளைப் பற்றி செய்திகள் உடன் நாளிதழ் களில் பளிச்சென்று செய்தியாக வெளியாகி விடுகிறது.  ஏனெனில் அவை முன்னரே அறியப் பட்டவை.  மேலும் மூலிகை மருந்துகளை பக்க விளைவுகள் அற்றது என்று ஒதுக்கிவிடுவது உண்டு.

மூலிகை மருத்துவப் பயன்பாட்டின் வரைமுறைகளும் சட்ட திட்டங்களும்

சந்தையில் தகுதிச் சான்றிதழ் இல்லாத மூலிகை மருந்துப் பொருட்களே 80 விழுக்காடு விற்பனைக்கு உள்ளது.  இதை அம்மருந்துப் புட்டிகளைக்கண்டு அறியலாம்.  எ.கா.  செயல் படும் திறன், பாதுகாப்பு, தரம் மற்றும் பக்க விளைவுகளைப் பற்றிய குறிப்புகளும் அதில் காணப்படுவதில்லை.

மூலிகை மருந்து இன்றும் நாளையும்

மூலிகை மற்றும் சித்த, ஆயுர்வேதம் போன்ற வற்றிற்கான மருத்துவக் கழகங்கள் உலகெங்கிலும் இருந்தாலும் அவை இந்த தகுதியுள்ள நபர்களைத் தான் உறுப்பினராக சேர்த்துக் கொள்ள வேண்டும்; அவர்களும் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிக்க எந்தெந்த விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்ற கட்டுக்கோப்பும் இல்லை என்பதும் வருத்தத் திற்குரியதே.  ஆனால், அவை அனைத்தும் மேலை மருத்துவத்திற்கு உண்டு என்பதும் இங்கு கருத்தில் கொள்ள வேண்டும்.

தீங்கற்ற பயன்பாட்டிற்கான மூலிகை மருத்துவம்

பாரம்பரிய மூலிகை மருந்துகள் பலவகை களில், பல பரிமாணங்களில் இயற்கையில் கிடைத் தாலும் அவற்றுக்கு தரச்சான்று, தரக்கட்டுப்பாடு என பல தரப்பட்ட மருத்துவ சோதனைகள் சந்தைக்கு வரும்முன் இருக்க வேண்டும்.  ஆனால், அப்படி இல்லாத நிலையில் அதன் தீங்கற்ற தன்மைகளையும் அதன் பயனையும் குறித்து சான்றிதழ் பெறா மருந்துகளில் பாதரசம், வெண் பாஷாணம், காரீயம், கார்டிசோன் மற்றும் உயிர்ப்பொருள் நச்சுப் பொருள்களும் உள்ளன.  இவற்றால் சிறுநீரகக் கோளாறு முதல் இறப்பு வரையிலும் ஏற்படுகின்றன என்று செய்திகள் வந்துள்ளன.  சில ஆண்டுகளுக்கு முன் கருவிழிப் புண் (Cornea) தான்சானியாவில் 25ரூ சிறுவர் களுக்கு ஏற்படக் காரணம் என்றும், நைஜீரியா, மாளவி போன்ற நாடுகளில் பாரம்பரிய மருந்து களால் உண்டாகியது என்றும் செய்திகள் கூறுகின்றன.

ஆகவே, சாதாரண மருந்துகளுடன் மூலிகை மருந்துகளை எடுத்துக் கொள்ளும்பொழுது மிகுந்த கவனத்துடன் அந்நோய் குறித்த சிறந்த மூலிகை மருத்துவர் பரிந்துரையின் பேரிலேயே எடுத்துக் கொள்ள வேண்டும்.  இவை இல்லாத மருந்துக் கடைகளில் விற்கப்படும் மூலிகை மருந்துகளை தானே உட்கொள்ளும் பொழுது தான் மிகப் பெரிய அபாய விளைவுகள் ஏற்படுகின்றன.  அண்மையில் சீனாவில் உடல்பருமனைக் குறைக்க உட்கொண்ட மூலிகை மருந்துகளினால் சிறு நீரகக் கேடு மிகத் தீவிரமாக ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  ஆகவே, கடைகளில் விற்கப்படும் இம்மருந்துகளில் நச்சுத்தன்மையை மருந்தாளுநர்கள் ((pharmacist)) தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகிறது.

இதே முறையில் தகுந்த முறையில் பாதுகாத்து சேமித்து வைக்கப்படாத மூலிகை டீயிலும் அப்லோடாக்சின் மைகோடாக்சின் உள்ள பூஞ்சனம் வளர்ந்து கல்லீரல் புற்று உண்டாகும் வாய்ப்பு ஏற்படுகிறது.

குண பாடங்களில் இல்லாத மருந்துகள் போலியானவைகளாகவும், கலப்படம் செய்யப் பட்டு, தவறுதலாக பெயர் சூட்டப்பட்டு மூலிகைகள் சேகரிக்கப்பட்டு விற்கப்படுகிறது.  6 மாதமே மருந்துத் தூள்களுக்கு வீரியம் உண்டு.  மேலும் மூலிகை தன் குணத்தை ஓராண்டில் இழக்கிறது.  இதை அறிந்தும் இம்மருந்துகளில் காலாவதியாகும் தேதி மற்றும் பக்க விளைவுகளையும் நச்சு விளைவுகளையும் மருந்துப் புட்டிகளில் உள்ள லேபிள்களில் அல்லது தனியாக அதனுள் உள்ள மருந்தின் விவரம் அடங்கிய சீட்டுகளிலேயே போடுவதில்லை.  சில சமயங்களில் இவை அலோபதி மருந்துகளுடன் கலந்தும் விற்பனைக்கு வருகிறது.  எ.கா.  மூலிகை யுடன் கார்டிசோன் கலந்து ஈளை (ஆஸ்மா) நோய்க்கு கொடுக்கப்படுகிறது.

சில சமயம் உள்ளே உள்ள மருந்துக்கும் லேபிளில் உள்ள பொருளுக்கும் சம்மந்தம் இன்றி விற்கப்படுகின்றன.  அதாவது தரக்கட்டுப்பாடு இல்லை.  சரியாக மூலிகையைக் கண்டுபிடித்து சேகரித்து மருந்தாக்கத் தெரியாது ஒன்றுக்கு மாற்றாக ஒன்று மருந்தாகும் நிலையும் உள்ளது.  ஆகவே, மருந்து வேலை செய்யும் உறுப்புகள், நுண்நோக்காடி ஆய்வு மற்றும் தொழில்நுட்ப சோதனைகளுக்கு உட்பட்ட பின்னரே விற்பனைக்கு வரவேண்டும்.

இதுபோல் மூலிகையில் உள்ள தீங்கை, நச்சை, சுத்திகரித்து நீக்கவும் தெரிந்திருப்பதில்லை.  தெரிந் திருந்தும் மூலிகை மருந்து மிகப்பெரிய அளவில் உற்பத்தி செய்யும்போது இவைகளைப் பற்றி கவலை கொள்வதில்லை.

பயன்பாட்டிற்கு முன் மருத்துவ சோதனை அவசியம்

(Need for clinical trials)

மக்களிடம் நம்பிக்கை பெற, நிலை பெற்று மூலிகை மருந்துகளை விற்க பிரபலமடையச் செய்ய ஆராய்ச்சியாளர்கள், உற்பத்தியாளர்கள், மருத்துவர்கள் சேர்ந்து கடினமான ஆராய்ச்சி முறைகளுடன் மருத்துவப் பரிசோதனைகள் மூலம் தரக்கட்டுப்பாட்டுடன் மருந்தை உற்பத்தி செய்ய வேண்டும்.  தரமான மூலிகை மருந்துகளை உற்பத்தி செய்ய மூலப்பொருட்களின் தரத்தையும் பல வகையான மருத்துவ குணங்களைக் கொண்ட அம்மூலப்பொருட்களின் தன்மையையும் சரிவர கண்காணிப்பது அவசியம்.  ஆக சிறந்த முறையில் தயாரித்து மனிதர்களிடம் சோதனை செய்வதற்கு முன் மிருகப் பரிசோதனை போன்ற பல சோதனை களும் அவசியம்.  இவை நவீன மருத்துவத்திற்கு இணையாகத் துணைபுரிகிறது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

சோதனையாக மனிதர்களிடம் கடைசியாக நோயாளி மருந்தென்று நம்பும் மருத்துவப் பொருளையும், உண்மையான மருந்தையும் கொடுத்து ஏற்படும் பக்க விளைவுகளை ஆய்வு செய்து முடிவு களைக் கொண்டு, தரத்தையும் மற்றும் பக்க விளைவு களையும் அறிய வேண்டும்.  ஆக, மேலை மருத்துவ மருந்துகளுடன் மூலிகை மருந்து விற்பனையில் அல்லது உடல்நல மேம்பாட்டில் போட்டிபோட இச்சோதனைகள் அவசியம்.  இதற்கு பணச் செலவு அதிகமாகலாம்.  ஆனால், இவை முடியாதவை அல்ல.  இது மக்கள் நலத்திற்காகவே அன்றி ஒரு பொருளை விற்பனை செய்வதற்காக அல்ல என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.  இது போன்ற சோதனை ஸ்விட்சர்லாந்தில் சின்சங்கிற்கும், இத்தாலியில் திராட்சை விதைகளுக்கும் நடை பெற்றுள்ளது.  இதேபோல் ஜெர்மனியில் பூண்டிற்காக சோதனை வெற்றிகரமாகச் செய்யப்பட்டுள்ளது.

மனிதர்களுக்குப் பயன்படுத்த 1997இல் புதிதாக அனுமதி பெற்ற 520 மருந்துகளில் 39 விழுக்காடு இயற்கையில் கிடைக்கும் பொருட்கள் ஆகும்.  இவைகளில் 60-80 விழுக்காடு நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளும் புற்றிற்கான மருந்துகளும் ஆகும்.

பென்சிலின், பூஞ்சனத்திலிருந்தே பெறப் பட்டு பாதரசத்திற்குப் பதில் கிரந்திக்கு மருந் தானது.  இதேபோல் ஊமத்தை (பெல்லடோனா) இன்று வரை கண் மருத்துவத்திற்கும் மற்றும் இரைப்பை, குடல் நோய்க்கு நுண்ணுயிர் கொல்லி யாகவும் பயன்படுகிறது.  ராவல்பிய சர்பண்டினா என்ற (நாகதாளி வேரில்) ரிசர்பின் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை மன நோய்க்கும், இரத்தக் கொதிப்பிற்கும் மருந்தாகப் பயன்பட்டது.  இதுவே தூக்க மருந்தாக இந்தியாவில் பலநூறு ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்து வருகிறது.  1994 வரை 119 மூலிகையின் உட்பொருட்கள் உலக அளவில் மருத்துவப் பயன்பாட்டில் உள்ளன.

அமெரிக்காவில் பெரும்பான்மையாக விற்கப் படும் மருந்துகள் இயற்கையான பொருட்களி லிருந்தோ அல்லது அதை ஒத்ததாக உள்ள பொருட் களினாலோ தயாரிக்கப்படுகிறது.  மேலும், இயற்கைப் பொருட்களில் உள்ள ஆர்வம் மிகுந்து அண்மைக் காலங்களில் கடல்வாழ் உயிரினங்களிடமிருந்தும், செடிகளிலிருந்தும், புதிய வகை மருந்து கண்டு பிடிப்புகள் மிகுதியாகி உள்ளது.  கணினியால் தானே இயங்கும் மனித இயந்திர உதவியுடன் மிகச்சிறிய அளவில் கிடைக்கப்பெறும் மூலிகையில் உள்ள மருத்துவப் பொருட்களை எளிதில் ஆய்வு செய்யப்படுவது இதற்கு மிகுந்த உதவியாக உள்ளது.  இதற்குமுன் இதுபோன்ற சோதனை பல மாதங்கள் சோதனைச் சாலைகளில் நடைபெற்றன.  மேலும் மிகச்சிறந்த மருத்துவப் பொருட்களைப் புது மூலிகையிலிருந்து கண்டுபிடிப்பது எளிதானதல்ல.  தமிழ்நாட்டில் பாரம்பரியமாக நாட்டு மருத்து வர்கள், சித்த, யுனானி, ஆயுர்வேத மூலிகைகளின் பலனை அறிந்துள்ளனர்.  இதற்கான நூல்கள் நம்மிடம் வேண்டுமளவு உள்ளன.  ஆனால், இவைகளும் மறைபொருளாகவே (சித்த மருத்துவம்) தமிழில் செய்யும் வடிவில் உள்ளது.  பல பயன் படாத மூலிகைகள் காடு, மலைகளில் அழிந்து வருகின்றன.  மேலும் 12.5ரூ மருந்து மூலிகைகள் அழிந்து விடும் அபாயத்தில் உள்ளன.

இந்தியாவில் சற்றேறக்குறைய 45,000 வகை செடிகள் உள்ளன.  அவற்றில் 1500 வகை மருத்துவ குணம் உள்ளது என்று மருத்துவ ஆய்வு நூல்கள் கருதுகின்றன.  இதில் 800 வகை நாட்டு மருத்து வத்தில் பயன்பாட்டில் உள்ளது.  ஆனால், இந்தி யாவில் முக்கியமாக தமிழ்நாடு உலக அளவில் மூலிகையைப் பற்றி அதிகமாக அதன் பயன்பாட்டை அறிந்திருந்தாலும் மூலிகை மருந்து விற்பனையில், பயன்பாட்டில் பின்தங்கி உள்ளது.

நம் நாட்டில் மூலிகை மருந்து பயன்பாட்டிற்கு அல்லது வளர்ச்சியடையாத நிலைக்கு பல காரணங்கள் உண்டு.  இந்தியாவில் உள்ள பரிசோதனைக் கூடங் களிடையேயும் மருத்துவர்களிடையேயும் சரியான ஒத்துழைப்பு இல்லை.  மேலும் பொதுத்துறை நிறுவனம் கொடுக்கும் உதவியை சரிவரப் பெற மருந்து தயாரிப்பாளர்களுக்கு சரியான வழிவகைகள் தெரிவதில்லை.  ஆராய்ச்சி மற்றும் மருத்துவ வளர்ச்சிக்கான (சு & னு) நிறுவனங்களுக்கும் மூலிகை மருத்துவர்களுக்குமிடையே உள்ள செயலும் எதிர் செயலும் சிறப்பாக இல்லை அல்லது ஒத்துழை யாமையும் ஒரு முக்கிய காரணமாகும்.  ஆட்சி யாளர்களும் மூலிகை மருத்துவத்தைப் பற்றி அவ்வப்போது பேசினாலும் அங்கங்கே சிதறிக் கிடக்கும் மருத்துவர்களை ஒன்றுபடுத்தி மூலிகை மருத்துவத்தை மேம்படுத்த முயற்சிகள் சரிவர மேற்கொள்ளப்படவில்லை என்பதும் மறைக்க முடியாத உண்மை.

மூலிகை மருத்துவம் தினசரி பயன்பாட்டிற்கு வர எந்தெந்த தடைகளைத் தகர்க்க வேண்டும்

மூலிகை மருத்துவத்தின் பலன் மற்றும் தரத்தை நிலைநாட்ட பல தடைகளைக் கடந்தாக வேண்டி யவர்களாக உள்ளோம்.  தற்கால மூலிகை மருத்து வர்கள் தாவர அறிவியல் மருத்துவம் பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை.  சில பழமைவாதிகளான மருத்துவர்களுக்கு அதன் சாற்றில் உள்ள தன்மையை நாம் விளக்க வேண்டி அதன் தரத்தில் நம்பிக்கை வைக்க நம்பகத் தன்மையை ஏற்படுத்த வேண்டும்.  இத்துடன் சில மருத்துவர்கள் மூலிகையைச் சாறு பிழியாது அப்படியே கொடுப்பதுதான் மிகச் சிறந்தது.  அதனைச் சாறாக்கிக் கொடுக்கும்போது அதில் பலன் போய்விடுவதாகவும் நினைக்கிறார்கள்.  சில நாட்டு மருத்துவர்கள் குறுக்கு வழியில் அதிலுள்ள பொருளை அறிந்து கொள்ள முயற்சிக்கின்றனர்.  அப்படித் தெரிந்தாலும் இவர்கள் அதிலுள்ள பொருள்களை மற்றவர்கட்கு வெளிப்படுத்து வதில்லை.  இது தேவை எப்படியெனில் பழங்குடி மக்கள் மற்றும் நாட்டுப்புற மருத்துவர்களின் மருத்துவ முறைகளின் ரகசிய உண்மைகளை எளிதில் அறிந்து, அல்லது திருடி உள்நாடு மற்றும் வெளிநாட்டு மருந்து உற்பத்தி நிறுவனங்கள் ஏமாற்றிவிடக்கூடும்.  ஆகவே, இம்மருந்துகளை சராசரி பயன்பாட்டிற்கு பெரிய அளவில் கொண்டு வருவது என்பது ஒரு சவால் ஆகும்.

தற்பொழுது நூல்கள், ஆண்டறிக்கைகள், சஞ்சிகைகள், தொலைக்காட்சி குறிப்பாக வலைத் தளங்களில் தவறான முறையற்ற மூலிகை மருத்துவ விளம்பரங்களினால் குணமடையக்கூடும் என்ற நம்பிக்கை ஒன்றை மூலதனமாக வைத்து, ஆனால் உண்மையில்லாது, தவறான செய்திகளைப் பரப்பு கின்றனர், விற்பனை செய்கின்றனர்.  இதில் புட்டி களின் அட்டைகளில் பல மருந்துகளில் உள்ள பொருள்களும், எப்படிப் பயன்படுத்துவது என்று கூறியிருந்தாலும் சில மருந்துகளிலேயே அதன் தீங்கற்ற தன்மை அல்லது தரம் கூறப்படுகிறது.  எ.கா.: எட்டிரின் போன்ற மருந்துகளுக்கு அதன் நச்சுத் தன்மைகளை அறிந்திருந்தாலும் அவைகூட மருந்து விளம்பரங்களில் ஒரு எச்சரிக்கையாகக் கூடச் சொல்வதில்லை.

மற்றொரு பிரச்சினை, ஒரு மூலிகையின் மருந்து இந்த அளவு கொடுத்தால் நல்ல குணப்பாடு கிடைக்கும் என்று மருத்துவ சஞ்சிகைகளில் தெரி விக்கப்பட்டாலும் அவை இவர்களால் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை அல்லது அம்முறையைப் பின்பற்றுவதில்லை.  இதற்கு மாறாக, சில தவறான, மறுமுறை திரும்பப் பயன்படுத்த முடியாத முடிவுகள் மருத்துவ சஞ்சிகைகளில் வரும்பொழுது மருத்துவர் களும் அதை நம்பி கலப்படம், மற்றும் சரியாக மூலிகையைக் கண்டறியாதபொழுது கலப்படமான அதனைப் பயன்படுத்தவும் தள்ளப்படுகின்றனர்.  மற்றும் அவர்கள் சரியான மூலிகையின் அறிவியல் பெயரையும், நோயாளிக்குக் கொடுக்க வேண்டிய சரியான அளவையும் அறிந்திருப்பதில்லை.

முடிவுரை

உலகில் வளரும் நாடுகளில் மூலிகை மருத்துவப் பயன்பாடு அதிகரித்து வருகிறது.  இது பொது மக்களின் விருப்பத்தினாலும் மற்றும் அம்மூலிகை களின் அறிவியல் செய்திகளை அறிந்து கொள் வதினாலும் ஆகும்.  நல்ல மருத்துவர் இனி நோயைக் குணமாக்க மூலிகை மருத்துவத்தை ஒதுக்க முடியாது.  ஆகவே, மருத்துவர் இதைப் பற்றிய தேவையான செய்திகளை அறிந்துகொண்டு வரும் நோயாளிகளிடம் மனம் திறந்து பேசவேண்டும்.  அதேபோல நோயாளிகளும் தாங்கள் சாப்பிட்ட நல்ல மூலிகை மருந்துகளைக் குறித்து மருத்து வரிடமும் கூற, மருத்துவர்கள் அதுபோன்ற நோய் களைத் தீர்க்க அவ்வகை மூலிகை மருத்துவரை நாடிச்செல்ல வழி அமையும்.  இந்நிலையில் மருத்துவர் நோயாளியின் முழு வரலாறு, உண்ட மருந்தின் பெயர், அளவு ஆகியவற்றை நவீன மருந்துகளுடன் இணைத்து ஆய்வுக்குட்படுத்த முயலலாம்.  நாட்பட்ட நோய்கள், எ.கா.  எய்ட்ஸ், மற்றும் புற்று போன்ற நோய்களுக்குக் கொடுக்கப் படும் மூலிகை மருந்தினால் சில பக்க விளைவுகள் வரலாம்.  இதையும் நாம் நோயாளியிடம் எடுத்துக் கூறி அதற்கான சரியான மருத்துவமும் அந்நிலையில் மேற்கொள்ளலாம்.  கடைசியாக மருத்துவர் எந்த மருந்துகளைக் கொடுத்தாலும் அவைகளைக் கண்காணித்து அவை பயன்படுகிறதா அல்லது தீங்கிழைக்கிறதா என ஆய்ந்து சரியான முடிவுக்கு வந்த பிறகே மருந்தின் குணப்பாட்டை சீர்தூக்க வேண்டும்.  இப்படிச் செய்தால் மூலிகை மருந்தும் மிகச் சிறந்த முறையாக வருங்காலத்தில் வெற்றி பெற முடியும் என்பது திண்ணம்.