Eelam childஐயா கலைஞர் அவர்களே, வணக்கம்.

முத்தமிழ் வித்தகர், டாக்டர், கலைஞர், தொல்காப்பியர், சொல்வித்தகர்... என இன்னும் பல பட்டகங்களைப் புணர்ந்த மாமேதை நீங்கள் என்பதை யாரும் மறுக்கப் போவதில்லை. படித்தவனும், படிக்காதவனும், தமிழ் ஆர்வலர்களும், ஏன் தமிழினத்தின் எதிரிகளும் கூட நீங்க தான் தமிழகத் தலைவர்ன்னு நினைச்சிட்டு இருக்கான். அகநானூற்று ஒழுக்கத்தை அப்படியே தமிழர்களின் மனத்தில் ஏற்றி அவர்களை கட்டுக்கோப்பாக வளர்த்திட்டீங்கன்னும், புறநானூற்றின் வீரம் கருவறை முதல் கல்லறை வரையிலும் உங்களால பரவிடுச்சின்னும், திருக்குறளுக்குப் பொருளெழுதி தமிழனை சிந்திக்க வச்சுட்டீங்கன்னும் முழுசா உங்களத்தானே நம்பிக்கிடந்தது இந்த தமிழ் சமுதாயம். தமிழ்நாட்டுல மட்டுமில்ல உலகத்தமிழனும் இப்படித்தான் நம்பிக்கிடந்தான்.

பெரியாரின் பகுத்தறிவும், அறிஞர் அண்ணாவின் உடன்பிறப்பு என்றும் நாளொரு மேனியும் பொழுதொருவண்ணமும் நீங்க சொன்னதுக்கு எல்லாம் பூம்பூம் மாடு மாதிரியே தலையாட்ட வைத்து எங்களைப் பழக்கி வைச்சுட்டீங்க.

இந்தியாவிற்கு உருவம் கொடுக்கவும் எல்லைகளை உருவாக்கவும் அப்போதைய வடக்கத்திய பார்ப்பனிய சக்திகள் 1956ல் உருவாக்கிய மொழிவாரி மாகாணங்களுக்காக நம்நிலங்களின் மீதான உரிமைகள் திட்டமிட்டு பறிக்கப்பட்டு கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலங்களுக்குத் தாரை வார்க்கப்பட்டது. திராவிடர்கள் என்பதால் நம் நிலங்கள் திராவிடத்தில் தானே உள்ளது என்ற நம்பிக்கையில் விட்டுக் கொடுத்திருக்கலாம் பரவாயில்லை. நிலம் எப்போது வேண்டுமோ அப்போது மீட்டிடலாம்.

இந்தியாவில் ஒருங்கிணைக்கப்பட்ட மாநிலங்களில் மாநில சுயாட்சி அந்தந்த தேசிய இனங்களின் நலனுக்காய் சீராய் நடந்துவருகிறது. ஆனால் மூத்த தேசிய இனமான தமிழினத்திற்கு மட்டும் தமிழகத்தில் விதிவிலக்கு என எழுதப்படாத ஒப்பந்தம். எந்த ஒரு மாநிலத்திற்கும் இல்லாத சிறப்பு நம் தமிழகத்திற்கு உண்டு என்றும், நாடு என்பதை நம் மாநிலம் மட்டும்தான் கொண்டுள்ளது என்றும் பெருமை பேசியே மாநிலத்தின் அதிகாரம் இந்திய அரசிடம் அடகு வைத்துவிட்டார்கள் என்பதை தமிழினத்தலைவர் என்ற முறையில் கலைஞர் அவர்களே மறுக்கத் தயாரா? இப்போதும் இந்தியாவின் மாநிலங்களில் உள்ள தேசிய இனங்கள் பாதிக்கப்படும்போது மட்டும் வரிந்து கட்டிக்கொண்டு இந்திய அரசு நடவடிக்கை எடுக்கிறது, சில நேரங்களில் வெளிநாடுகளால் பாதிப்பு ஏற்பட்டாலும். அதற்கெல்லாம் வெளிநாட்டுக் கொள்கைகள் என்ற எந்த ஒரு வரையரையும் இந்திய அரசுக்கு கிடையாது. ஆனால் தமிழன், தமிழ்நாடு என்றால் மட்டும் இந்திய அரசுக்கு கண்ணும், காதும் மூடிவிடுகிறது ஏன்? கலைஞர் அவர்களே, நீங்க எங்க தலைவர் என்ற உரிமையில் பாமரத்தமிழன் கேட்கிறேன். சொல்லுங்க ஐயா.

உச்ச நீதிமன்றம ஆணையம், நதிநீர் ஆணையம், மத்திய அரசு குழு என பல தரப்புகளின் உத்தரவுகள் கடுமையாக வெளியிடப்பட்டாலும் அதனை தன்னுடைய நரைச்ச மயிருக்கு சமம் என்பது போல் புடுங்கி வீசிவிட்டு ‘இப்ப என்ன செய்வீங்கன்னு’ ‘இப்ப என்ன செய்வீங்கன்னு’ இந்திய இறையாண்மையைக் கிழித்தெறியும் கன்னட தேசிய இனத்திற்கு என்ன பதில் கொடுத்தது இந்திய அரசு.? கலைஞர் அவர்களே, தமிழினக் காவலர் நீங்கள் என்ற உரிமையில் பாமரத் தமிழன் கேட்கிறேன் சொல்லுங்க ஐயா.

நதிநீர் ஆணையமும், உச்சநீதி மன்றமும், மத்திய அரசும் பலமுறை வலியுறுத்தியும் ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழகத்திற்குத் தரமுடியாது என்று சத்தமாய்க் கூறி இந்திய இறையாண்மையை நாறடித்த தெலுங்கு தேசிய இனத்திற்கு என்ன பதில் கொடுத்தது இந்த இந்திய அரசு? தமிழினத்தின் விடிவெள்ளி நீங்கள் என்ற நம்பிக்கையில் நாதியற்ற தமிழன் கேட்கிறேன் சொல்லுங்க ஐயா.

மத்திய அரசு, நதிநீர் ஆணையம், உச்சநீதி மன்றம் பலமுறை உத்தரவிட்டும், பரிந்துரைத்தும், மாநில முதல்வர்கள் ஒப்பந்தம் செய்தும் தமிழகத்திற்குத் தண்ணீர் தரமாட்டோம் என்று தடுப்பணைகள் கட்டி தமிழ்நாட்டின் குடிநீருக்கான ஆதாரத்தையே அழித்து இந்திய ஒருமைப்பாடு எங்களுக்கல்ல என்று பகிரங்க சவால் விடும் கேரளா மலையாளிகள் தேசிய இனத்திற்கு இந்திய அரசின் பதில் என்ன? கலைஞர் அவர்களே, தன்மானம் தெரிந்த தலைவர் என்ற எதார்த்தத்தில் தமிழ் எழுத, படிக்கத் தெரியாத பேசமட்டுமே தெரிந்த பாமரன் கேட்கிறேன் சொல்லுங்க ஐயா.

சரி.. மத்திய அரச உடுங்க. முதலமைச்சரா இருக்கிற நீங்களும், முதலமைச்சரா இருந்த ஜெயா அம்மாவும் என்ன செஞ்சீங்க? அவங்களே, உச்சநீதிமன்றமோ, தேசிய நதி நீர் ஆணையமோ, இந்தியா, இறையாண்மை, என்று எங்களின் தேசிய உரிமையை மாநில வரம்பு எனக்கூறி பறிக்க முடியாது என்று தீர்மானமாக சொல்லிவிட்டார்களே. பின்பு எந்த அடிப்படையில் உச்சநீதி மன்றத்தில் மீண்டும் வழக்கு போட்டு கெஞ்சிக் கொண்டு இருக்கீங்க. தண்ணீர் வரும் தண்ணீர் வரும் என தினம் தினம் வாயத் திறந்து காத்துக்கிடக்கிற பாட்டாளி பாமரன் கேட்கிறேன் சொல்லுங்க தலைவரே.

பீகாரிக்கோ, மராத்தியனுக்கோ, வங்காளிக்கோ, சீக்கியனுக்கோ, மலையாளிக்கோ, கன்னடனக்கோ அல்லது தெலுங்கனுக்கோ ஏதேனும் நாட்டிலோ அல்லது மாநிலத்திலோ பிரச்சனை என்றால் வரிந்துகட்டிக்கொண்டு பொங்கியெழும் மத்திய அரசு தமிழன் பாதிக்கப்பட்டால் மட்டும் எல்லாத்தையும் மூடிக்கொண்டிருப்பது ஏன்? இங்கிருக்கும் தேசியத் தலைவர்கள் கூட வாய்திறக்காமல் இருப்பது ஏன்? மாநிலக் கட்சி தலைவர்களும் தாங்கள் உட்பட வெறுமனே அறிக்கையில் அடைந்து போய்விடுவது ஏன்? கன்னட வெறித்தலைவர்கள் கூட்டாக கர்நாடகாவில் சேர்ந்து தமிழர்களை ஓடஓட விரட்டியடித்தபோதும், ஆந்திராவில் தமிழர்கள் தாக்கப்பட்டபோதும், கேரளாவில் தமிழர்கள் தாக்கப்பட்டபோதும் எங்கே இருந்தது உங்கள் இந்திய இறையாண்மை? தமிழன் தன்னுரிமைக் குரல் எழுப்பினால் மட்டும் எங்கிருந்து வருகிறது உங்கள் இறையாண்மை? கலைஞர் அவர்களே நீங்களும் காங்கிரஸாரும் கூறும் இந்திய இறையாண்மை என்பதன் அர்த்தம்தான் என்ன? கன்னடனும், தெலுங்கனும், மலையாளியும் இனப்பற்றுடன் எதையும் செய்யலாம் தமிழன் மட்டும் வாய்திறக்கத் தடைவிதிப்பது உங்கள் இந்திய இறையாண்மையின் எத்தனாவது அத்தியாயம்? சொல்லுங்க தலைவரே.

தமிழனின் தேசியத் தலைவர், உங்களால்தான் தமிழர்கள் காப்பாற்றப்படுவார்கள், நீங்கள் தான் தமிழினத்தின் விடிவெள்ளி என எல்லோரையும் சொல்லவைத்து இன்றுவரை அரசியல் பிழைப்பு நடத்திவரும் தாங்களுக்கு பதவிதான் பெரியது என்று ஒவ்வொரு முறையும் நிரூபித்துள்ளீர்கள். ஆனாலும் பாவி மக்க நாங்கதான் இன்னமும் உங்களை தமிழின காவலனாக சொல்லிக்கிட்டே இருக்கோம்.

மலேசியாவில் தமிழன் கொல்லப்பட்டான். நாடு கடத்தப்பட்டான். சிங்கப்பூரில் தமிழனுக்கு எதிராக அரசியல் சதி நடத்தப்பட்டது. அப்போது தாங்கள் என்ன செய்தீர்கள்? மகாராட்டிரத்தில் ஒரு பீகாரி கொல்லப்பட்டான் என்பதற்காக கட்சி பேதமின்றி ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, ஜால்ரா கட்சிகள், பிகாரி இன அமைப்புகள் ஒரு சேர மத்திய அரசையும், மராத்திய அரசையும் படுத்தியபாடு தங்களுக்குத் தெரியாதது அல்ல. இதேபோல், நீங்கள் ஆளும்போது எதிர்கட்சியின் போராட்டங்களிலோ அல்லது எதிர்க்கட்சியாக இருந்தபோது ஆளும் கட்சியுடனோ சேர்ந்து தமிழினத்திற்காய் குரல்கொடுத்த வரலாறு உண்டா?

Eelam war victimகிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் இன அழிப்பு போரில் சிங்களவனால் கொல்லப்பட்ட தமிழர்கள் எத்தனை பேர் என்பது உங்களால் துல்லியமாகக் கூற முடியும். தனி ஈழம் தான் இதற்குத் தீர்வு என்று ஈழத்தமிழர்கள் ஒரு சேர குரல் கொடுத்தபோது ஆரம்பித்த ஆயுதப் போராட்டம் இன்று தமிழினத்தின் மீது வெடிகுண்டுகளாய், பீரங்கிக் கணைகளாய், துப்பாக்கி ரவைகளாய் சாவுமணியாக ஒலித்துக் கொண்டு இருக்கிறது. இனத்திற்கான ஆயுதப்போராட்டம் புலிகள் தலைமையில் வலுப்பெற்று வந்த வேளையில் அமிர்தலிங்கம், பத்மநாபா, வரதராஜன் போன்றோர்கள் தமிழினத் தலைவர்கள் என்ற போர்வையில் (தமிழகத்தில் தங்களைப்போல்) ஈழத்தமிழர்களை மொத்தமாய் சிங்களவனுக்குக் கொத்தடிமையாக்க பெரும் முயற்சியெடுத்தனர். இது தமிழினத்தினை புதைகுழியில் தள்ளும் சதி என்பதால் போராளிகள் களை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் அவர்களைக் கொன்றது ஈழத்தின் பாதுகாப்பிற்கு என்று சாதாரண பாமரன் எனக்கே தெரிந்திருக்கிறது. தலைவரே உங்களுக்கு தெரியாது என்று சொல்லி எங்களை ஏமாற்ற வேண்டாம்.

அதேபோலத்தான் இராஜிவ் காந்தி ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தின் பல சரத்துக்கள் தமிழ்ஈழப் போராட்டத்திற்கு எதிராகவும், தமிழினத்தை மீண்டும் சிங்களவனுக்கு அடிமையாக்கும் வகையிலும் அமைந்திருந்தது. அதன் எதிரொலிப்பே இராஜிவின் மரணம். புலிகள்தான் இராஜிவின் கொலைக்குக் காரணம் என்றும் எனவே புலிகளின் அமைப்புக்கு இந்தியாவில் தடை என்றும் கூறி மத்திய அரசு இராஜிவின் கொலைக்கான மறுபக்கத்தை மறைத்து விட்டது என்பதைத் தாங்களால் மறுக்கமுடியுமா தலைவரே. தமிழீழம் தான் தங்களின் நிரந்தரத் தீர்வு என்று தந்தை செல்வா காலத்திலேயே முன்மொழியப்பட்டது என்பது தங்களுக்குத் தெரியாதது அல்லவே. இந்திரா காந்தி அம்மையார், எம்.ஜி.ஆர், தாங்கள் உட்பட அனைவரும் தனி ஈழத்திற்காகப் பணியாற்றியவர்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்தது. அன்று எம்.ஜி.ஆருடன் அரசியல் போட்டிக்காக ஈழத்திற்குக் குரல் கொடுத்த உங்களின் தற்போதைய நிலை என்ன?

புலிகள் தான் இராஜிவைக் கொன்றார்கள் என்று உங்கள் வாதப்படியே வைத்தாலும், புலிகளின் தலைமை மீது இதில் எந்த விதப் பழியும் சுமத்த முடியாது என்பது அரசியல் புலியான உங்களுக்குத் தெரியும். ஒரு ராஜிவ் காந்தி கொல்லப்பட்டார் என்பதற்காக ஒரு மக்கள் இயக்கத்தையே தடைவிதித்த உங்கள் அரசு, செயலலிதா அம்மையார் கைது செய்தபோது மூன்று கல்லூரி மாணவிகளை உயிருடன் தீயில் வேகவைத்து கொன்றார்களே, அது தீவிரவாதம் இல்லையா? கட்சியின் தலைமையின் தூண்டுதலில் தான் நடைபெற்றது என்று கூறி ஏன் அதிமுகவைத் தடை செய்யவில்லை? உங்களுக்கே தெரியும் ஒரு கட்சித் தொண்டன் செய்யும் தனிப்பட்ட கொலைக்கு அந்தக் கட்சியை பொறுப்பேற்க சொல்லமுடியாது. அப்படி சொன்னால் தமிழகத்தில் மட்டுமல்ல உலகத்தில் எல்லாக் கட்சிகளும், இயக்கங்களும் தீவிரவாத அமைப்புகளாகவே இருக்கும் என்று உங்களுக்கே தெரியும்.

பின் எந்த அடிப்படையில் புலிகள் அமைப்பு மட்டும் தீவிரவாத அமைப்பு என்று கூறினீர்கள். உங்களுக்கே உங்கள் கோமாளித்தனம் தெரியவில்லையா? இராஜிவ் கொலை செய்யப்பட்டதால் புலிகள் தீவிரவாத இயக்கம் என அறிவிக்கப்பட்டு மத்திய அரசுதான் கேணத்தனமாக தடைவிதித்துள்ளது என்றால் தாங்களும் அதனை வழிமொழிவது தமிழினத்திற்கு செய்யும் துரோகம் என்பது உங்களுக்குத் தெரிந்தும் செய்வதை என்னவென்று சொல்வது?

உண்மையில் சொல்லுங்கள் ஒருவேளை புலிகள் நீங்கள் சொல்லும் தீவிரவாதிகளாய் இருந்திருந்தால் இந்நேரம் இலங்கையில் ஒரு சிங்களவன் மிஞ்சியிருக்க முடியுமா? இந்தியாவில் அவர்களைப் பற்றி அவதூறாகப் பேசும் எந்த தலைவனாவது உயிருடன்தான் இருந்திருப்பார்களா? இல்லை தமிழ்நாட்டில் புலிகள் கொன்ற பொதுமக்கள் எத்தனை பட்டியலிடுங்கள் தலைவரே. இந்த திமுக உட்பட தமிழகக் கட்சிகள் நடத்திய அரசியல் கொலைகள் தான் எஞ்சி நிற்கும் என்றால் அது மிகையில்லை. பின் எந்தவகையில் அவர்கள் தீவிரவாதிகள் என்று கூறுகிறீர்கள்? சொல்லுங்கள்.

சில்லரை அரசியலில் சிறுத்துவிட்டதால், தமிழனின் வாழ்வுரிமையிலும் சில்லரையாக நடப்பீர்கள் என்பது எங்களுக்குத் தெரிந்ததே. பாவம் பாமரமக்களும், நீங்கள் தடைசெய்த புலிகளும் தான் இன்னும் உங்களை நல்லவர் என்று நம்பிக்கிடக்கிறார்கள்.

தினம் நெஞ்சைப் பிரண்டும் ஓர் அறிக்கை. உங்களின் போலி அறிக்கைகளைப் படித்து உணர்ச்சி பொங்கி ஈழத்தமிழனுக்காக குரல் கொடுக்க வீதிக்கு வரும்போது உங்களுக்கு இந்திய இறையாண்மையும் முதுகுவலியும் வந்து விடும். இதைவிட நீங்கள் செய்யும் சில்லரை அரசியலுக்கு உதாரணம் எதுவும் சொல்லவேண்டியதில்லை. இனியாவது திருந்துங்கள். 

- இரா.செந்தில்குமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It