ambedkhar 400 copyபடித்துப் பாருங்களேன்...

Eleanor Zelliot, 2013, AMBEDKAR’S WORLD, the Making of Babasaheb and the Dalit Movement, navayana (P) Ltd, New Delhi

இந்தியாவின் ஒடுக்கப்பட்டோர் சமூகத்தின் வரலாற்றில் தனக்கென ஒரு தனியிடத்தைப் பெற்றுக் கொண்டவர் அம்பேத்கர். அவரது வாழ்க்கை வரலாறு என்பது இச்சமூகத்தின் வரலாற்றுடன் இணைந்ததாகும். எனவே தலித் இயக்கத்தையும் அம்பேத்கர் வரலாற்றையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாது. இவ்வகையில் தலித் இயக்கம் குறித்த ஆய்வில் முன்னோடியாக விளங்கும் எலினார் சிலியட் எழுதியுள்ள அம்பேத்கர் வரலாறு குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அமெரிக்காவின் மினசொட்டா பல்கலைக் கழகத்தில் வரலாற்றுப் பேராசிரியராக விளங்கிய இவர் தலித் இயக்கம் தொடர்பாக எண்பது கட்டுரைகளை எழுதியுள்ளதுடன் தலித் இயக்கம் தொடர்பாக மூன்று நூல்களையும் பதிப்பித்துள்ளார்.

1969ஆம் ஆண்டில் ‘டாக்டர் அம்பேத்கரும் மகர் இயக்கமும்’ என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டவர். ஆனால் இத்தலைப்பு அம்பேத்கரை ஒரு குறுகிய வட்டத்தில் அடைப்பதாக இவர் உணர்ந்து கொண்டார். இந்தியச் சமூகத்தின் அனைத்துச் சாதிகளின் முன்னேற்றத் திலும் அவருக்கு அக்கறை இருந்தது. இந்தியச் சமூகத்தின் பல்வேறு நிலைகளிலும் அவரது பங்களிப்பு இருந்தது. மகாராஷ்டிரத்தின் எல்லையைத் தாண்டி இந்தியா முழுவதுமான ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராக அவர் விளங்குகிறார். அதேநேரத்தில் சாதி வட்டார எல்லைகளைக் கடந்து நிற்கும் அகில இந்தியத் தலைவர் என்றும் அவரைக் கருத முடியும்.

இத்தகைய தகுதி உடைய அம்பேத்கர் குறித்து 1963-1965ஆம் ஆண்டுகளில் நூலாசிரியர் ஆய்வு மேற்கொண்டார். 2004ஆம் ஆண்டில் ‘பாபாசாகிப் அம்பேத்கரும் தீண்டத்தகாதோர் இயக்கமும்’ என்ற தலைப்பில் அவரது ஆய்வேடு நூலாக வெளிவந்தது. இதன் வளர்ச்சி நிலையாகவே இந்நூல் வெளி வந்துள்ளது. தலித் இயக்கத்தின் வரலாற்றையும், 1956இல் அம்பேத்கர் புத்த மதத்தைத் தழுவியதையும் இந்நூல் குறிப்பிடுகிறது. தலித் என்ற சொல்லாட்சி குறித்து நூலின் முன்னுரையில் ஆசிரியர் குறிப்பிடு கிறார்.

மகர்கள்

இந்திய சாதிய அடுக்குமுறையானது பிராமணர், சத்திரியர், வைசியர் என்ற மூன்று வருணங்களையும், இவற்றுக்கு வெளியே வர்ணம் அற்றவர்கள் என்ற பொருளில் ‘அவர்ணர்கள்’ (தீண்டத்தகாதோர்) என்போரையும் கொண்டது. ஆனால் இது இந்தியா முழுமைக்கும் பொதுவானதல்ல. மகாராஷ்டிரத்தைப் பொறுத்தளவில் பிராமணர், பிராமணர் அல்லாதார், தீண்டத்தகாதார் என்ற மூன்று அடுக்கு சாதிமுறை நிலவியது.

இச்சாதிகளில் மகர் சாதி 9% விழுக்காடு கொண்டதாக விளங்கியது. இவ்வகையில் மூன்றாவது பிரிவில் பெரிய அளவிலான சமூகமாக இது விளங்கியது. 17ஆவது நூற்றாண்டில் மராத்தியப் பேரரசை சிவாஜி நிறுவியபோது மகர்கள் காவலாளிகளாகவும் போர் வீரர்களாகவும் பணியாற்றினர்.
சிவாஜியின் மறைவுக்குப்பின் பிராமணர் சமூகத்தினரான பேஷ்வாக்கள் ஆட்சி நடந்தது. இக்காலத்தில் மகர்களின் வீழ்ச்சி தொடங்கியது. கலயம் ஒன்றை மகர்கள் தம்முடன் சுமந்து சென்றனர். அதில்தான் அவர்கள் எச்சில் துப்ப வேண்டும்.

தரையில் துப்பி அதனால் தீட்டு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே இம் முன்ஏற்பாடு. அவர்கள் நடந்து செல்லும்போது ஏற்படும் தீட்டைத் தவிர்க்க அவர்கள் துடைப்பம் ஒன்றால் தம் காலடித் தடத்தை அழித்தவாறு செல்ல வேண்டும்.

ஆங்கிலேயர் ஆளத் தொடங்கியபோது மேற்குப் பகுதியில் படைப்பிரிவை உருவாக்கினர். அதில் மகர்களை வீரர்களாகச் சேர்த்தனர். ஆங்கில ஆதிக்கத்தின் வருகையானது மகர்களைப் பொறுத் தளவில் முன்னேற்றத்துக்கான வாய்ப்பாக அமைந்தது. 19ஆம் நூற்றாண்டில் அறிமுகமான ஆலைகளின் உருவாக்கமும், பொதுப்பணிகளும் இராணுவத்தைவிட அதிக அளவில் வேலைவாய்ப்புகளை மகர்களுக்கு வழங்கின. இதனால் பாரம்பரிய வேலைகளில் இருந்து மகர்கள் விடுபடலாயினர்.

மற்றொரு பக்கம் பிராமணர்களுக்கு எதிரான சீர்திருத்த இயக்கம் தோன்றியது. இதன் தாக்கத்தால் மகர்களும் சமத்துவம், கல்வி ஆகியன குறித்த சிந்தனை களுக்கு ஆட்பட்டனர். சுருக்கமாகக் கூறின் ஆங்கில ஆட்சியானது, கிராமப்புறங்களில் இருந்து மகர்களை விடுவித்து முன்னேற்றத்துக்கான வாய்ப்புகளை வழங்கியது. பிராமணர் அல்லாதார் இயக்கம் அரசியலுக்கு அழைத்துச்சென்றது. எனவே ஒரு வெற்றிடத்தில் இருந்து மகர் இயக்கம் உருவாகவில்லை எனலாம். ‘எங்கெல்லாம் கிராமம் இருக்கிறதோ அங்கெல்லாம் மகர் இருப்பான்’ என்பது மராத்தியப் பழமொழியாகும்.

மகாராஷ்டிரத்தின் ஒடுக்கப்பட்ட சமூகங்களில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் தவறாது இடம்பெறும் சாதி மகர் ஆகும். இம்மாநிலத்தின் மக்கள் தொகையில் ஒன்பது விழுக்காட்டினராக மகர்கள் உள்ளனர்.

கடந்தகால வரலாற்றில் இவர்களுக்கென்று சில வேலைகளும் ஊதியமும் வரையறுக்கப்பட்டிருந்தன. இவர்களைத் தொடுவது தீட்டுக்குரியதாக இருந்தது.

சில இடங்களில் இவர்களது நிழல் கூட தீட்டுக்குரியதாக இருந்தது. சாதி இந்துக்களின் இல்லங்களில் இவர்கள் நுழைய முடியாது. கிராமப் பள்ளிக்கூடம், கோவில், குடிதண்ணீர்க் கிணறு என்பன மகர்களின் குடியிருப்புக்கு வெளியிலேயே இருந்தன. ஆடை அணிகலன்கள் அணிவது தொடர்பாக சில கட்டுப்பாடுகள் இவர்கள் மீது விதிக்கப்பட்டிருந்தன. மராத்தியர் அல்லாதார், மகர் ஆகியோரைக் குறித்த ஒரு பழமொழி மராத்தியில் உண்டு. அது வருமாறு:

‘கன்னடர்கள் ஏமாற்றுபவர்கள், தெலுங்கர்கள் திருடுபவர்கள், மகர்கள் ஒதுக்கி வைக்கப்பட்ட (விலக்கப்பட்ட) உணவை உண்ணுபவர்கள்’.

இதுபோன்று மகர்களை இழிவுபடுத்தும் பழமொழி களும் சொல்லாட்சிகளும் உள்ளன. ‘மகர் இறந்தான் அழுக்கு மறைந்தது’ என்று அவனது இறப்பில் மகிழும் பழமொழியும் கூட உண்டு. மகர்களின் தெய்வங்களும் வழிபாடும், ஏனைய சாதியினரின் தெய்வ வழிபாட்டில் இருந்து வேறுபாடானவை. 1894-ஆம் ஆண்டில் எழுதப்பட்ட மகர்களின் ஆவணம் ஒன்றில் அவர்கள் வழிபடும் தெய்வங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் நாங்கள் பிரம்மா, விஷ்ணு, மகேஷ், கிருஷ்ணன், ருக்மணி, இராமன், சீதை, இலக்குமணன் ஆகியோரை அறியோம் என்ற குறிப்பும் இடம்பெற்றுள்ளது.

இத்தகைய வாழ்க்கை முறையில் இருந்து மகர்களை விடுவிப்பதில் ஆங்கிலக் காலனியம் முக்கிய பங்கினை ஆற்றியுள்ளது. இராணுவம், நவீன ஆலைகள் ஆகியன வற்றில் அவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்தன. அவர்களிடையே இடப்பெயர்ச்சி நிகழ இரயில் போக்கு வரத்து உதவியது. இப்புதிய வேலை வாய்ப்புகளும் இடப்பெயர்ச்சியும், சமூக சீர்திருத்த 6இயக்கங்களும் நவீனக் கல்வி கற்கும் ஆர்வத்தை மகர்களிடம் தோற்று வித்தன. இதன் தொடர்ச்சியாக வருணப் படிநிலையில் தங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த கீழ்நிலையை மறுக்கும் உணர்வு உருவாகியது. ஆரியர்களுக்கு முந்தியவர்கள், மராட்டிய மன்னனின் தலைவர்கள், சத்திரியர்கள் என்பன போன்ற கருத்துக்களை அவர்கள் முன்வைத்தனர்.

மராட்டியர்களின் சமூக வாழ்வில் புறந்தள்ள முடியாத பிரிவினராக காலனியத்தின் வருகையால் மகர்கள் மாறினார்கள். மற்றொரு பக்கம் பக்தி மரபானது அவர்களுக்கு ஓர் இடத்தை வழங்கியது. இவற்றின் தொடர்ச்சியாக மகர்களிடம் இருந்து பான்சோடே, காம்ப்ளே என்ற இரு தலைவர்கள் உருவாயினர்.

இவர்களுள் காம்ப்ளே புனேயில் பட்லர் ஆகப் பணியாற்றியவர். ஆங்கில அரசுப்பணிகளில் மகர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதை இவர் வலியுறுத்தி வந்தார். மராத்தி மொழியில் செய்திப் பத்திரிகை ஒன்றையும் தொடங்கி நடத்தினார். கல்வியறிவு பெற்றிருந்த மகர்கள், குறைவான கல்வியறிவுடைய மகர்களுக்காக புனேயில் நடத்தி வந்த இரவுப் பள்ளியில் செயல்பட்டார். 1929இல் நிகழ்ந்த பார்வதி கோவில் அறப்போராட்டத்தின் தலைவராக இருந்தார். அரசு அதிகாரிகளுக்கும் செய்தித்தாள்களுக்கும் 1904இல் தொடங்கி 1930 வரையிலான காலத்தில் மகர்களின் குறைகள், மகர்களின் உரிமைகள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் மனுக்களும் கடிதங்களும் அனுப்பி வந்தார்.

மாநாடுகள், மனுக்கள், செயல்பாட்டுக்கான அமைப்புகளை உருவாக்கல், மக்களாட்சி உரிமைகளின் அடிப்படையில் அரசில் இடம்பெற முயற்சி செய்தல் என்பன காம்ப்ளேயின் வழிமுறைகளாக இருந்தன.

1920இல் அம்பேத்கர் பொதுவாழ்வில் நுழைந்த போது சோமவன்சியா அன்னா ஃபண்டு கழகம் நடத்திய பொதுக்கூட்டத்திற்கு தலைமை தாங்க அழைக்கப் பட்டார். ஒடுக்கப்பட்ட சமூகத்தின் சார்பில் அம்பேத் கரையும், சுபேதார் காட்சி என்பவரையும் மும்பை சட்ட மன்றத்திற்கு நியமிக்க வேண்டும் என்று காம்ப்ளே ஆலோசனை வழங்கினார். அம்பேத்கரும், காம்ப்ளேயும் இணைந்து பொது நிகழ்ச்சிகள் சிலவற்றில் கலந்து கொண்டனர்.
இந்தியாவுக்கு விடுதலை என்பது அவசியமானது மட்டுமன்றி நல்லதும் கூட என்ற கருத்தை 1930இல் அம்பேத்கர் முன்வைத்தார். அத்துடன் புதிய நாட்டில் தீண்டத்தகாதவர்களுக்கு உரிமைகள் வழங்கப்படுவதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

இந்திய தேசிய புரட்சி எதிர்ப்புக்கழகம் என்ற அமைப்பை காம்ப்ளே உருவாக்கி காந்தியின் சிவில் சட்டமறுப்புப் போராட்டத்தை எதிர்த்தார். தீண்டா மையை முற்றிலும் போக்கிவிட்டு நான்கு வருணக் கோட்பாட்டைத் துடைத்தெறியும் வரை ஆங்கில ஆட்சி தொடர வேண்டும் என்பது அவரது கருத்தாக இருந்தது. அவர் உருவாக்கிய கட்சி தொடக்க அறிவிப்பளவில் மட்டுமே நீடித்தது. ஆயினும் புனே மகர்களுக்கிடையில் காம்ப்ளே ஆற்றிய பணி அம்பேத்கர் பின்னாளில் மேற்கொண்ட அரசியல் முயற்சிகளுக்கு அடித்தளமிட்டது.

 •••

ஒரு தலைவராக அம்பேத்கர் பரிணமிக்கும் முன் மகாராஷ்டிரத்தின் விதர்ப்பா பகுதியில் மகர் சமூக இயக்கத்தை உருவாக்கி வளர்த்தவர் கிசான் ஃபகோஜி பான்சோட் (1879-1946). நாகபுரியில் இருந்து 24 மைல் தொலைவில் உள்ள மோப்லா நகரில் பிறந்தவர். இவரது குடும்பம் கடை வைத்திருந்தது.

பள்ளியில் பயிலும் போது வகுப்பறையின் தாழ் வாரத்தில் அமர்ந்தே கல்வி பயின்றார். மகர் மாணவர் களை வகுப்பறையினுள் அனுமதிப்பது கிடையாது. பொற்கொல்லர் வகுப்பைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் இவரை வகுப்பறைக்குள் அனுமதித்தார். பிற சாதிக் குழந்தைகளுடன் ஒன்றாக அமர்ந்து கல்வி கற்ற மகர் மாணவர் இவர்தான்.

வாழ்க்கை நடத்தும் பொருட்டு அச்சகம் ஒன்றை ஃபான்சோட் இந்நகரில் நிறுவினார். தீண்டாமைக்கு எதிரான பத்திரிகைகள், துண்டுப்பிரசுரங்கள், நூல்கள் ஆகியனவற்றை அச்சடிக்கவும் இதை அவர் பயன் படுத்தினார். இவரது முயற்சியில் ஆர்வம் காட்டிய சாதி இந்துக்கள் வழங்கிய முப்பது பெட்டி புத்தகங்ளைக் கொண்டு நூலகம் ஒன்றையும் நிறுவினார்.

சாதி இந்துக்கள் உடனான இவரது உறவு வலுவானது. இந்து மகாசபை உறுப்பினர்களுடனும் அவர் நட்பு கொண்டிருந்தார். என்றாலும் சாதி குறித்த அவர்களது கோட்பாடுகளை அவர் எதிர்த்தார். இவ்அமைப்பின் முக்கிய தலைவரான பண்டிட் மதன் மோகன் மாளவியாவுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தார். இந்து சமயத்திற்குள் ஓர் உயரிய நிலையினை தீண்டத்தகாதவர்கள் பெற உதவும் வகையில் சில நடைமுறை மாறுதல்களையும் கோட்பாடு சார்ந்த அறிவிப்புகளையும் அவர் எதிர்நோக்கினார். இதனால் மகர்களின் கிறித்தவ மதமாற்றத்தை அவர் எதிர்த்தார்.

நாகபுரியில் இயங்கி வந்த எம்பரஸ் ஆலையின் தொழிலாளர் தலைவராகவும் அவர் விளங்கினார். இவ் ஆலையின் தொழிலாளர்களில் பெரும் பகுதியினர் தீண்டத்தகாதவர்கள். இத்தொழிலாளர்களுக்காக ‘மஸ்தூர் பத்திரிகா’ (தொழிலாளர்களின் பத்திரிகை) என்ற பெயரில் தொழிலாளர்களுக்கு அறிவூட்ட 1918-22 காலகட்டத்தில் பத்திரிகை ஒன்றையும் நடத்தினார். தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்ட மக்களுக்காக மகாநாடுகள் நடத்தியதுடன் வீடு வீடாகச் சென்று அவர்களைச் சந்தித்தார்.

கடந்தகாலப் பாவங்களுக்காக இப்போது நாம் தண்டிக்கப்படுகிறோம் என்று நம்பி வந்த மக்களிடம் சுயமரியாதையைப் போதித்தார். இம்மண்ணின் முன்னாள் ஆட்சியாளர்கள் என்பதன் அடிப்படையில் மகர்களிடம் பெருமித உணர்வை ஊட்டினார். 1907இல் பெண்கள் பள்ளி ஒன்றை நிறுவினார். அவரது மனைவி தீண்டாமைக்கு ஆட்பட்ட சமூகப் பெண்களுக்கு சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொடுத்தார். இப்பெண்களில் சிலரை வளையல் விற்போர் ஆக்கினார். உணவு விடுதிக்குள் சென்று தேநீர் கேட்கும்படி பான்சோட் தூண்டினார்.

‘சன்மார்க்க போதக் நிரஷ்ரிட் சமாஜம்’ என்ற பெயரில் அமைப்பொன்றை 1903 அக்டோபரில் அவர் நிறுவினார். மகர்கள், மாங்குகள், சாம்பர்கள் ஆகிய ஒடுக்கப்பட்ட மக்கள் கிறித்தவர்களாக மதம்மாற வேண்டாம் என்று இது வலியுறுத்தியது, எதை உண்ணக்கூடாதோ அதை உண்ணக்கூடாது, எதை குடிக்கக்கூடாதோ அதைக் குடிக்கக் கூடாது என்று அறிவுறுத்தியது.

‘அந்நிய சமாஜம்’ என்ற பெயரில் அவர் நிறுவிய அமைப்பு ஒடுக்கப்பட்ட சமூகத்தினரிடையே உட்பிரிவு களின் அடிப்படையிலான வேறுபாடுகளை நீக்குவது, இறைச்சி உண்ணாமை, மது அருந்தாமை, கசாப்பு வியாபாரிகளிடம் பசுவை விற்காமை, பன்றி வளர்க் காமை என்பனவற்றை வலியுறுத்தியது. அத்துடன் கல்வியின் அவசியத்தையும் எடுத்துரைத்தது.

பாதுனூர் மகர் சபா சூன் 1924இல் பான்சோட் தலைமையில் பின்வரும் தீர்மானங்களை நிறை வேற்றியது.

பசு இறைச்சியை நாம் உண்ணக் கூடாது.

இறந்த விலங்குகளை அப்புறப்படுத்தக் கூடாது. உயிருள்ள பசுவை கசாப்புக்காரருக்கு விற்பவர் களுக்கு அய்ம்பது ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும். கணவன் உயிருடன் இருக்கும்போது விவாகரத்து செய்யாமல் மனைவி வேறு ஒருவனுடன் வாழக்கூடாது. மற்றொருவனுடைய குதிரைக்கு மலிஷ் செய்யக்கூடாது. சாணத்தைக் கையில் எடுக்கக்கூடாது. இறந்துபோன நாய் அல்லது பூனையின் உடலைத் தூக்கி எறிவதில் தீண்டாமை உணர்வு வேண்டாம். ஆனால் இச்செயலைச் செய்த பின் குளித்துவிட வேண்டும். பிணத்துக்கு அணிவித்த ஆடைகளை ஏற்றுக்கொள்ளக் கூடாது. 16லிருந்து 20ரூபாய் வரைதான் வரதட்சணை இருக்கவேண்டும். திருமணச் சடங்குகளில் மோசமான சொற்களைப் பேசக்கூடாது. கதர்த்துணியைப் பயன்படுத்த வேண்டும். நம் குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டும். கட்டாய வேலை செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். கிராமத் தலையாரிக்கு 10ரூபாய் ஊதியம் கிட்ட வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் ஒரு மகர் இடம்பெற வேண்டும்.

பான்சோடின் பிரபலமான பட்டப்பெயர் ‘குருவாரியா’ (குருக்களில் சிறந்தவர்) என்பதாகும். அவர் இறந்தபின் அவரது கவிதைத் தொகுப்பு அவரது மகனால் வெளியிடப்பட்டது, 1935இல் அம்பேத்கரின் மதமாற்றம் குறித்த அறிவிப்பு வரும்வரை இவ்விருவருக்கும் இடையில் நெருக்கமான உறவு நிலவியது. இவ்விருவருக்கும் இடையிலான வேறுபாடாக இந்து மதம் குறித்த இவரது மாறுபட்ட சிந்தனைகள் அமைந்தன. இந்து மதத்துடனும் சாதி இந்துக்களுடனும் நெருக்கமான உறவு கொண்டவராக பான்சோட் இருந்தார்.

மொத்தத்தில் காம்ப்ளே, பான்சோடு ஆகிய இருவரையும் அம்பேத்கரின் பணிகளுக்கு அடித்தள மிட்டவர்கள் எனலாம். இருப்பினும் அம்பேத்கர் தன் அரசியல் இயக்கத்தை முழுவீச்சுடன் தொடங்கியபோது இவ்விருவரையும் தாண்டிச் செயல்பட்டார்.

•••

தீண்டாமை இயக்கம்

மகர் வகுப்பில் பிறந்த அம்பேத்கர் சிறந்த கல்வி யாளராக விளங்கினார். இங்கிலாந்திலும் அமெரிக்கா விலும் உயர்கல்வி பெற்றதுடன் ஆய்வுப் பட்டமும் பெற்றார். நிர்வாக அதிகாரி, பேராசிரியர், பத்திரிகை ஆசிரியர், நூலாசிரியர், சொற்பொழிவாளர், சட்ட அறிஞர் எனப் பன்முகத்தன்மை கொண்ட ஆளுமை யாளர். ஆயினும் இவை அனைத்தையும் விட தீண்டா மைக்கு எதிரான இயக்கத்தலைவர் என்ற அவரது அடை யாளம் தனிச் சிறப்புடையது.

இச்சிறப்பை 1920இல் கோலப்பூர் மன்னர் அடையாளம் கண்டுள்ளார். கோலப்பூர் மன்னராட்சிப் பகுதியில் 1920இல் தீண்டத்தகாதோர் நடத்திய மாநாட்டிற்கு அம்பேத்கர் தலைமை வகித்தார். அதில் கலந்து கொண்ட கோலப்பூர் மன்னர், ‘உங்கள் மீட்பரை அம்பேத்கரில் கண்டுள்ளீர்கள்’ என்று பார்வையாளர் களிடம் குறிப்பிட்டார்.

1917இல் தொடங்கி 1935 முடிய உள்ள காலத்தில் தீண்டத்தகாதோர் என ஒதுக்கி வைக்கப்பட்ட மக்களின் நலனுக்காக அம்பேத்கர் தலைமையேற்று நடத்திய இயக்கம் அவரது வாழ்வில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இவ்வியக்கத்தின் செயல்பாட்டிற்காக அம்பேத்கர்

(i) மாநாடுகள், (ii) கோவில் நுழைவு போராட்டம், இதழ்கள் நடத்துதல், (iv) நிறுவனம் உருவாக்கம் என்ற நான்கு வழிமுறைகளை மேற்கொண்டார்.
அரசியலில் ஒடுக்கப்பட்ட சாதியினர் (1917-1935)

இந்திய அரசியலில் ஒடுக்கப்பட்ட சாதியினரின் பங்களிப்பு மிக அழுத்தமாக வெளிப்பட்டமைக்கு மூன்று நிகழ்வுகளைக் குறிப்பிடலாம்.

முதலாவது நிகழ்வாக அமைவது சைமன் கமிஷன். மாண்டேகு செம்ஸ்போர்ட் அறிமுகப்படுத்திய சீர்திருத்தங்களின் விளைவை அறிந்துகொள்ள சைமன் என்ற ஆங்கிலேயரை வெள்ளை அரசு நியமித்தது. இந்திய தேசியக் காங்கிரஸ் இக்குழுவைப் புறக்கணித்த துடன் இக்குழுவிற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் ஆகியனவற்றை நடத்தியது. ‘சைமனே திரும்பிப்போ’ என்ற முழக்கத் தையும் கூட உருவாக்கியது.
ஆனால் சிறுபான்மையினரும் ஒடுக்கப்பட்ட பிரிவினரும் தம் உரிமைகளை வலியுறுத்த உதவும் வாய்ப்பாக இதைக் கருதினர். இக்கருத்து நிலையிலேயே அம்பேத்கரும் செயல்பட்டார். மாநிலங்களின் முக்கிய பொறுப்பு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி வழங்குதல் என்று வலியுறுத்தினார். மாநில அரசுகள் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கத் தவறும்போது அது குறித்து கவர்னர் ஜெனரலிடம் முறையிடும் உரிமை வேண்டும் என்று வேண்டினார். குறைந்தபட்சக் கல்வித் தகுதி வயது வரம்பைத் தளர்த்துதல் ஆகியனவற்றுடன் அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வேண்டும் என்றும் கேட்டார். இராணுவம், காவல்துறை, கடற் படை ஆகியனவற்றில் தடையின்றி ஒடுக்கப்பட்ட மக்களைச் சேர்க்க வேண்டும் என்றும், ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவைச் சேர்ந்த ஒருவரை ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு ஆய்வாளராகக் காவல் துறையில் நியமிக்க வேண்டும் என்றும் வேண்டினார். இவையெல்லாம் தேவைப்படாத ஒரு காலம் இந்தி யாவில் வரும் என்று கருதிய அவர் சிறுபான்மையினர் மீதான பெரும்பான்மையினரின் அணுகுமுறையே இதை முடிவு செய்யும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

•••

சைமன் குழுவின் வருகையை அடுத்து நிகழ்ந்த வட்டமேசை மாநாடுகளும், புனே ஒப்பந்தமும் இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளாய் அமைந்தன. இவை இரண்டிலும் அம்பேத்கரின் பங்களிப்பு ஆழமான ஒன்று.

•••

மதமாற்ற இயக்கம் (1935-36)

அம்பேத்கரின் செயல்பாடுகளில் அவர் மேற் கொண்ட மதமாற்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். ஆனால் இது உணர்ச்சிவயப்பட்ட திடீர் முடிவல்ல. நாசிக் நகருக்கு அருகில் உள்ள யேலோவில் 1935 அக்டோபர் 13இல் ‘நான் ஓர் இந்துவாகச் சாகமாட்டேன்’ என்று அறிவித்தது பலருக்கும் அதிர்ச்சி அளித்த ஒன்று. அவர் நடத்திய கோவில் நுழைவுப் போராட்டங்கள் தீண்டாமைக்கு ஆட்பட்டிருந்த மக்களுக்கு இந்து என்ற தகுதியை வழங்க நடந்த போராட்டங்கள்தாம். இதன் வளர்ச்சி நிலையே மதமாற்றம் குறித்த சிந்தனை. மதமாற்றத்தின் தேவை குறித்து தன் கருத்தை வெளிப்படுத்தும் வகையில் மராத்தி மொழியில் பின்வரும் கவிதையை அச்சிட்டு விநியோகித்தார்.

மதம் மனிதனுக்கானது; மனிதன் மதத்துக்காக அல்ல.
சுயமரியாதை அடைய நீங்கள் விரும்பினால் மதம் மாறுங்கள்.
நீங்கள் சமத்துவத்தை விரும்பினால் மதம் மாறுங்கள்.
நீங்கள் விடுதலையை விரும்பினால் மதம் மாறுங்கள்.
.........................

மனிதத்துவத்தை மதிக்காத ஒரு மதத்தில் ஏன் இருக்கிறீர்கள்.
தன் கோவில்களுக்குள் உங்களை அனுமதியாத மதத்தில்
ஏன் இருக்கிறீர்கள்.

மனிதனின் சுயமரியாதையை ஏற்றுக்கொள்வதைப்
பாவமாகக் கருதும் மதம், மதமல்ல. அது ஒரு நோய்.
செத்த மிருகத்தை ஒருவன் தொட அனுமதிக்கும் மதம்
சகமனிதனைத் தொட அனுமதிக்காத போது
அது மதமல்ல மடமை.

ஒருபிரிவினர் கல்வி கற்கவும் செல்வம் சேர்க்கவும்
ஆயுதம் ஏந்தவும் அனுமதிக்காத மதம்
மதமல்ல நகைப்பிற்குரிய ஒன்று.
.....................................................    

மனிதருக்கே மதம்: மதத்திற்காக மனிதர் அல்ல.
உன் சுயமரியாதையைக் காத்துக் கொள்ள வேண்டுமா?
உன் மதத்தை மாற்று.
கூட்டுணர்வு கொண்ட சமூகத்தை உருவாக்க வேண்டுமா?
உன் மதத்தை மாற்று.
அதிகாரம் வேண்டுமா? உன் மதத்தை மாற்று.
சமத்துவம் வேண்டுமா? உன் மதத்தை மாற்று.
விடுதலை வேண்டுமா? உன் மதத்தை மாற்று.
நீ வாழும் உலகத்தில் மகிழ்ச்சி வேண்டுமா?
 உன் மதத்தை மாற்று.
உன் மாண்பை மதிக்காத மதத்தில் இன்னும் ஏன் இருக்கிறாய்?
அதன் கோயிலுக்குள் உன்னை அனுமதிக்காத
மதத்தில் இன்னும் ஏன் இருக்கிறாய்?
உனக்கு குடிக்கத் தண்ணீர் தராத மதத்தில் இன்னும்
ஏன் இருக்கிறாய்?
உன்னைக் கல்வி பெற அனுமதிக்காத மதத்தில் இன்னும்
ஏன் இருக்கிறாய்?
நல்ல வேலைகளைத் தராத மதத்தில் இன்னும்
ஏன் இருக்கிறாய்?
உன்னை ஒவ்வொரு கட்டத்திலும் அவமதிக்கும்
மதத்தில் இன்னும் ஏன் இருக்கிறாய்?
மனிதர்களுக்கிடையே மனிதநேய உறவைத் தடுக்கும்
மதம் ஒரு அர்த்தமற்ற தண்டனையே.
மனிதரின் சுயமரியாதையை அங்கீகரிப்பதை
பாவமாகக் கருதும் மதம் ஒரு நோயே.
தூய்மையற்ற மிருகத்தைத் தொடலாம். ஆனால்
மற்றொரு மனிதரைத் தொடக் கூடாதென்று கூறும் மதம்
ஒரு பைத்தியக்காரத் தனமானதே.
சமூகத்தில் ஒரு பிரிவு கல்வியறிவும்,
பொருளும் பெறக்கூடாதென்றும்
தற்காப்புக்கு ஆயுதமும் ஏந்தக் கூடாதென்றும் கூறும்
மதம் மனிதரின் வாழ்வில் கேலிக் கூத்தான ஒன்றே.
கல்வியறிவும் பொருளும் இல்லாதவர்
அவற்றைப் பெறக்கூடாதென்று
கூறும் மதம் ஒரு தண்டனையே.
மனிதரைவிட மிருகங்களை அதிகம்
மதிப்பவரையும் பிராமணரைக் கடவுளாகக் கருதுபவரையும்
ஆன்மீகவாதிகள் என்று கூறாதீர்.
எறும்புகளுக்கு சர்க்கரை தந்துவிட்டு
மனிதருக்குத் தண்ணீர் கூட தர மறுப்போரை
ஆன்மீகவாதிகள் என்று கூற வேண்டாம்.

இவ்வாறு மதமாற்றத்தின் அவசியத்தை அவர் வலியுறுத்தியிருந்தாலும் எந்த மதத்திற்கு மாறுவது என்பதை அவர் குறிப்பிடவில்லை. அதேநேரத்தில் கிறித்தவம், இஸ்லாம், சீக்கியம் என்ற மூன்று மதங்களில் ஒன்றை ஏற்றுக்கொள்வது குறித்து அவர் நுணுக்கமாக ஆராய்ந்தார். கிறித்தவமும், சீக்கியமும் சாதி வேறுபாடுகளை உள்வாங்கிய சமயங்களாக இருப்பதை அவர் தெளிவாக உணர்ந்தார். இவ்விரு சமயங்களைப் போல் இஸ்லாத்தில் சாதி வேறுபாடு இல்லாவிடினும் இந்திய நாட்டை ‘இந்து இந்தியா, முஸ்லிம் இந்தியா’ என இரண்டாகப் பிரிக்கவேண்டும் என்ற குரல் ஒலிக்கத் தொடங்கிய சூழலில், தன் சமூகத்தை மற்றொரு பெரிய சமுதாயத்துடன் இணைக்க அவர் விரும்பவில்லை.

இறுதியாக சாதி வேறுபாடு குறிப்பாகத் தீண்டா மையை ஏற்றுக்கொள்ளாத புத்தமதத்திற்கு மாறுவ தென்று அவர் முடிவு செய்தார். 1956 அக்டோபர் 14, 15 ஆகிய நாட்களில் நாகபுரியில் புத்தமதத்தை அம்பேத்கர் தழுவினார். அவருடன் ஆயிரக்கணக்கான மகர்களும் வேறு சமூகங்களைச் சேர்ந்த சிலரும் இணைந்தனர்.

திருவிழாக் கூட்டம் போல் திரண்ட மக்கள் புத்தமத முறைப்படி தீட்சை ஏற்றனர். 83வயது நிரம்பியவரும், பர்மா (மியான்மர்) நாட்டினருமான புத்த பிக்கு அவருக்கு தீட்சை வழங்கினார். இவர்கள் தழுவிய புத்தமதம் தேரவாத பௌத்தமாகும். திரி சரணம் (புத்தம் சரணம், தர்மம் சரணம், சங்கம் சரணம்) மந்திரத்தையும், பஞ்சீல விதிகளையும், 22 உறுதிமொழி களையும் கூறி மதம் மாறினார்கள். மராத்தி மொழியில் எழுதப்பட்டிருந்த அவ் உறுதிமொழிகளில் சில வருமாறு:

1.    பிரம்மா, விஷ்ணு, மகேஷ் ஆகியோரை நான் கடவுளாகக் கருதவும் மாட்டேன், வணங்கவும் மாட்டேன்.

2.    இராமனையும் கிருஷ்ணனையும் கடவுளாகக் கருதி வணங்க மாட்டேன்.

3.    கௌரி, கணபதி போன்ற இந்துக் கடவுளர்களை வணங்க மாட்டேன்.

4.    கடவுள் பிறப்பதாகவோ, எந்த வடிவிலும் அவதரிப்பதாகவோ நான் நம்பமாட்டேன்.

5.    விஷ்ணுவின் அவதாரமே புத்தர் என்பதை நம்ப மாட்டேன். இப்பரப்புரையானது தவறானதும், குசும்புத்தனமானதும் ஆகும்.

6.    சிரார்த்தம் கொடுப்பது, பிண்டம் படைப்பது போன்றவற்றை ஒருபோதும் செய்யமாட்டேன்.

7.    புத்தமதக் கோட்பாடுகளுக்கு எதிரானவை எதையும் செய்ய மாட்டேன்.

8.    பிராமணர்கள் மேற்கொள்ளும் ‘சமஸ்காரா’ (பரிகாரம்) சடங்குகளைப் பெற்றுக்கொள்ள மாட்டேன்.

9.    அனைவரும் சமம் என்பதை நம்புகிறேன்.

10.    சமத்துவத்தை நிலைநாட்ட முயற்சி செய்வேன்.

11.    மனித உரிமைகளை நசுக்குவதில் உறுதியாய் இருக்கும், சமத்துவத்தை விரும்பாத பிராமணர் களைத் தவிர மற்றவர்கள் கீழான பிறவிகள் என்று கருதும் இந்து மதத்தைத் தூக்கி எறிகிறேன்.

12.    புத்த தர்மமே சிறந்த மதம் என்பது என் உறுதியான கருத்து.

13.    இன்று நான் ஒரு புதிய பிறவி எடுத்ததாக நம்புகிறேன்.

14.    இன்று முதல் புத்த தர்மத்தின்படியே நடப்பேன் என்று உறுதி ஏற்கிறேன்.

மதமாற்ற நிகழ்வுக்குப்பின் மதம் மாறியவர்களிடம் அம்பேத்கர் மராத்தி மொழியில் உரையாற்றினார். வீரம் மிக்கவர்களும், பௌத்தர்களுமான நாகர்களின் பூர்வீக பூமி என்பதாலேயே மதமாற்ற நிகழ்வுக்கு நாகபுரி தேர்வு செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இறந்த மாடுகளை அப்புறப்படுத்துவதையும், அவற்றின் இறைச்சியை உண்பதையும் மகர்கள் விட்டு விட வேண்டும் என்று கூறினார். யேலோவில் அவர் கூறிய ‘இந்துவாக இறக்கமாட்டேன்’ என்ற தொடரைக் குறிப் பிட்டு, இன்று நரகத்தைவிட்டு வெளியேறியதாகத் தாம் உணர்வதாகக் கூறினார். (இதைக் கூறும்போது அவர் அழுததாக அவர் அருகில் இருந்தோர் கூறினர்) தன்னுடைய கடினமான வாழ்க்கையையும், தன்னுடைய சாதனைகளையும் கூறியபோது, மக்கள் திரள் கையலி எழுப்பியது. தம் உரையில் புத்தமதத்தைப் புகழ்ந்து இந்துமதத்தை விமர்சித்தார்.

நாகபுரியில் புத்த மதமாற்றம் நிகழ்ந்து இரண்டு மாதங்கள் கழித்து 1956ஆம் ஆண்டு டிசம்பர் ஆறாம் நாள் அம்பேத்கர் காலமானார்.

மும்பை நகரம் இதுவரை காணாத இறுதி ஊர் வலமாக அம்பேத்கரின் இறுதி ஊர்வலம் அமைந்தது. அவரது இறுதிச்சடங்கின்போது இலட்சக்கணக்கான மக்கள் புத்தமதத்தைத் தழுவினர். 1961 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 32,50,227 பௌத்தர்கள் இருந்தனர். இதில் 27,89,501 பௌத்தர்கள் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுள் 80 விழுக்காட்டினர் மகர் பிரிவினர்.

•••

இந்நூலின் இறுதி இயல் மகர்கள் மற்றும் அம்பேத்கரைச் சார்ந்த அரசியல் வளர்ச்சியைக் குறிப்பிடுகிறது. சுதந்திர தொழிலாளர் சங்கம், அட்டவணை சாதியினர் கூட்டமைப்பு, குடியரசுக்கட்சி ஆகிய அமைப்புகளை உருவாக்கி ஓர் அரசியல்வாதி யாகவும் அவர் விளங்கியதை இவ்வியல் விவரிக்கிறது.

•••

அம்பேத்கர் போன்ற சமூகப் போராளிகளின் வாழ்க்கை வரலாற்றை எழுதுவதென்பது எளிதான தல்ல. இந்நூல் இப்பணியை நன்றாகச் செய்துள்ளது. அம்பேத்கர் பிறந்த மகர் சமூகம் அம்பேத்கரின் முன்னோடியாக அச்சமூகத்தில் செயல்பட்டோர் குறித்த விரிவான பதிவுகள் அம்பேத்கர் வரலாற்றின் பின்புலமாக அமைந்துள்ளன. அம்பேத்கர் மகர்களின் தலைவராகவும், அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராகவும், இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவராகவும் வளர்ச்சி பெற்றமை என்பன படிப்படியாக அவரது ஆளுமையின் விரிவை உணரும்படிச் செய்கின்றன. அவரது மத மாற்றம் குறித்த இயல் சிறப்பான ஒன்று. தலைவர் ஒருவரின் வாழ்க்கை வரலாறு என்பது வெறும் துதிப் பாடலாக அமையாது குறிப்பிட்ட சமூக அமைப்பு அவரை உருவாக்கியது குறித்தும், அவரது செயல் பாடுகள் அச்சமூகத்தில் ஏற்படுத்திய பாதிப்புகளை உணர்த்துவதாயும் இருக்கவேண்டும். இந்நூல் இப்பணியைச் செய்துள்ளது.

Pin It