இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தில் திருமண அழைப்பிதழ், வைதீகக் கோவில் திருவிழா அழைப்பிதழ், நாட்டார் சாமிகளின் கொடைவிழா அழைப்பிதழ், பொதுமக்களின் வாழ்க்கை வட்டச் சடங்கு அழைப்பிதழ் ஆகிய எல்லாவற்றிலும் மலையாள ஆண்டு குறிப்பிடப்படுகிறது, அடைப்புக்குறிக்குள் பொது ஆண்டு இருக்கும். இது இன்றும் நடைமுறையில் உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இப்போதும் வழக்கில் உள்ள கும்பகோணம் பஞ்சாங்கத்திலும் தினமலர், தினத்தந்தி போன்ற நாட்காட்டிகளிலும் மலையாள ஆண்டை பொதுவாகக் குறிப்பிடுகின்றனர். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில், கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் வைதீக கோவில் ஆவணங்களிலும் மலையாள ஆண்டும் இடம்பெறுகிறது

kathakali 700தென் திருவிதாங்கூர் பகுதிகளில் பொ.ஆ 12 ஆம் நூற்றாண்டிலிருந்து நாஞ்சில்நாட்டில் கிடைக்கின்ற, அழகியபாண்டியபுரம் ஊரில் கிடைத்த முதலியார் ஓலை ஆவணங்களிலும் அடிமை ஆவணங்களிலும் விலை ஒற்றி பத்திரங்களிலும் மலையாள ஆண்டே குறிக்கப்படுகிறது.

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை பேச்சுவாக்கில் பத்து கொல்லம் முன்பு நடந்தது என்று இளைஞர்கள் கூட பேசினார்கள். கொல்லம் ஆண்டு எப்போது உருவானது? இதன் தோற்றக் காரணம் என்ன? என்பது பற்றிய விடை பெரிய அளவில் ஊகங்களாகவே உள்ளன. இன்றும் அது சரியான முடிவுக்கு வரவில்லை.

இந்திய வரலாற்றை எழுதியவர்கள் “பழங்கால இந்தியாவின் பழைய ஆவணங்களில் முறையாகப் பதிவு செய்யப்பட்ட ஆண்டும் தேதியும் இல்லை, இங்கே பொ.ஆ முதல் நூற்றாண்டில் கூட இந்த நிலைதான் இருந்தது. ரோமானிய வரலாற்றை எழுதியவர்கள் அப்போது இருந்த முறையான ஆண்டைக் குறிப்பிட்டது போன்று பழம் இந்தியாவில் குறிப்பிடவில்லை என்பதை சொல்லித்தான் ஆகவேண்டும்" என்று கூறுகின்றனர்.

ஆரம்பகால இந்திய வரலாற்றாசிரியர்களும் தொல்லியலாளர்களும் வடகிழக்குப் பகுதியில் இருந்து அந்நியர்கள் இந்தியாவிற்கு வந்தபோது குறிப்பிட்ட வருஷங்களை, இந்திய அரசர்களின் ஆட்சியாண்டுகளுடன் கணக்கிட்டு இந்திய வரலாற்று நிகழ்வைக் கூறும் நிலை ஒரு காலத்தில் இருந்தது.

இந்தியப் பேரரசுகளின் அறிவிப்புகள் கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் பிற ஓலை ஆவணங்களிலும், ஒரே மாதிரியான வருஷத்தைக் கொண்டதாய் இருக்கவில்லை. இந்தக் கருத்தில் யாருக்கும் மாறுபாடு இல்லை. இந்தியாவில் பேரரசுகளும் சிற்றரசுகளும், தங்களுக்கு என்ற ஏதோ ஒரு வருஷத்தைக் கொண்டிருந்தனர். இவர்கள் இப்படிப் பின்பற்றியதற்கு தனித்த காரணம் இருந்தது. அதையே தங்கள் கல்வெட்டுகளிலும் குறிப்பிட்டனர்.

இதனால் வரலாற்றாசிரியர்கள் பொது ஆண்டை கணக்கிடுவதில் சிரமப்பட்டனர். மிகுந்த உழைப்பு, தொடர்ந்த சேகரிப்பு, பெரும் போராட்டத்திற்குப் பின்னரே, இந்திய அரசர்களின் வரலாற்று ஆண்டை ஓரளவு வரையறை செய்தனர். இந்த வரையறைதான் தற்கால ஆராய்ச்சியாளர்களுக்கு பொது வழியைத் திறந்து விட்டது. இது இவர்கள் சுதந்திரமாக ஆராய்ச்சி செய்ய ஏதுவாயிற்று!

இந்தியாவில் வழக்கத்தில் உள்ள வருஷங்களை வரலாற்றாசிரியர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றனர்:

வருஷம்பெயர் தொடக்கவருஷம் (பொ.ஆ).

சப்தரிஷி                      வருஷம் 7 6

விக்கிரம்                       வருஷம்          56

சக                                      வருஷம்          78

கால சூரி                       வருஷம்          248

குப்த                 வருஷம்          320

ஹர்ஷ                            வருஷம்          660

சாலிவாகன               வருஷம்          78

போஜராஜசப்            தம்                      147

பிரதாபருத்ராப்தம்                             687

இராமதேவாப்தம்                                1300

இந்தப் பத்து ஆண்டுகள் தவிர பாண்டவாப்தம், கலியாப்தம், பிராபதி, சேஷகலி, கிருஷ்ணராப்தம் பசலி, ஹிஜிரி, கேதி, சுதர்சன், இலஷ்மண சேனா வள்ளுவர் என்னும் வேறு பல ஆண்டுகளும் உள்ளன.

கேரள வரலாற்றில் கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் கொல்லம் வருஷம் இரண்டறக் கலந்து விட்டது. கேரள நாட்டார் வழக்காற்றில் பேச்சுவழக்கில் கொல்லம் என்று குறிப்பது சாதாரணமாக உள்ளது. மலையாள நாட்டார் பாடல்களிலும் கொல்லமாண்டு குறிப்பிடப்படுகிறது.

பாமர மனிதர்களுக்குக் கொல்லம் வருஷம் தெரியும். தமிழகத்தில் சுழற்சி வருஷம் வழக்கில் இருந்தாலும் சாதாரண பாமரர்களிடம் வழக்கில் இல்லை, நாட்டார் வழக்காறுகளிலும் இல்லை. நாட்டார் பாடல்களில் மேற்கோளாக எங்குமே வரவில்லை. கதைப்பாடல்களில் வரவில்லை. நாட்காட்டியைப் பார்த்து இந்த ஆண்டின் பெயர் என்ன என்பதைத் தேடவேண்டிய நிலை இன்றும் உள்ளது. இந்த சுழற்சி வருஷம் வைதீகம் சார்ந்து இருப்பது மாதிரி ஒரு பிரம்மையை உருவாக்கிவிட்டது. கொல்லம் வருஷத்தின் நிலை அப்படி அல்ல.

கேரளத்தின் பண்பாட்டில் முழுதுமாக பரவி இருக்கின்ற கொல்ல வருஷம் முதல் முதலில் வேணாட்டு அரசனான ஸ்ரீ வல்லபன் கோதையின் மாம்பிள்ளி செப்பேட்டில் குறிக்கப்படுகிறது. இச்செப்பேடு கொல்லம் வருஷம் 149 ல் எழுதப்பட்டது (பொ. ஆ 974). இதற்கு முன்பு கொல்லம் வருஷம் குறிப்பிடப்பட்ட ஆவணங்கள் கிடைக்கவில்லை என்று கூறுகின்றனர்.

கொல்லம் ஆண்டு தென் கேரளத்தில் சிங்கம் மாதத்திலும் ( ஆகஸ்ட், செப்டம்பர்), வட கேரளத்தில் கன்னி மாதத்திலும் (செப்டம்பர்) ஆரம்பிப்பதாக கூறும் மரபு உண்டு என்கின்றனர். கொல்ல வருஷம் தோன்றியது குறித்த செய்தி தொன்மமாகவே உள்ளது. கேரள வரலாற்று பேராசிரியர் ஸ்ரீதரமேனன் “கேரள வரலாற்றில் இது ஒரு புதிர் இன்றும்கூட. இது விடுவிக்கப்படவில்லை" என்கிறார்.

கொல்லம் வருஷம் உருவான காரணம் பற்றிய ஊகங்களைப் பார்ப்போம்

திருவனந்தபுரத்திலிருந்து நாற்பது மைல் தொலைவில் உள்ள கொல்லம் நகரத்துடன் தொடர்புடையது, மலையாள வருஷம் என்பது ஒரு கருத்து. இவ்வாறு கூறுகின்ற கருத்தாளர்கள் கொல்லம் நகரம் வணிக நகரமாக உருப்பெற்ற காலத்தில் இந்த ஆண்டு தொடங்கப்பட்டு இருக்கலாம் என்கின்றனர்.

கொல்லம் ஆண்டு தோன்றுவதற்கு முன்பே இந்த நகரப்பகுதியில் குடிபெயர்ந்த நம்பூதிரிகள் இப்பகுதியை கொலம்பா என்னும் சமஸ்கிருதச் சொல்லால் அழைத்தனர். கொல்லம் தோன்றி என்பது கொல்லம் உருவானதைக் குறிக்கும் வழக்காறு என்றும் கூறுகின்றனர். நம்பூதிரிகளே இந்த ஆண்டை நிறுவினர் என்பர். இதை, மலபார் சகாப்தம் என்றும் இது கலி வருஷம் 3926ல் ஆரம்பித்தது என்றும் கூறுகின்றனர்.

நம்பூதிரிகள் கேரளத்திற்கு வந்தது கொல்லம் வருஷம் தோன்றிய பின்னர்தான். அவர்கள் குடியேறிய காலத்தில் கொல்லம் வருஷம் வழக்கிலிருந்தது. அவர்கள் தங்கள் சமஸ்கிருதச் செல்வாக்கை எல்லா இடத்திலும் நிலைநாட்டியது போல கொல்லம் நகரத்தையும் மாற்றினர். கொல்லம் வணிக நகரம் ஆனதற்கும் நம்பூதிரிகளுக்கும் தொடர்பு இல்லை என்று கூறுகின்றனர்.

வேணாட்டு அரசனான உதய மார்த்தாண்ட வர்மா, ஒரு முறை வானியல் ஜோதிடம் அறிந்த அறிஞர்களை எல்லாம் தன் சபையில் கூட்டினாராம். அவர்களிடம் வேணாட்டுக்கு என்று ஒரு வருஷத்தை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம். பன்னிரண்டு ராசிகளுக்கு உட்பட்ட நட்சத்திரங்களை ஆய்வு செய்து ஒரு ஆண்டைக் கண்டுபிடித்தார்களாம். அந்த வருடத்தின் முதல் மாதம் சிங்கம். இந்த மாதத்தின் முதல் தேதியே, வருஷப்பிறப்பு ஆகும் என்று முடிவு செய்தார்களாம். இது நடந்தது பொ. ஆ 825 ஆகஸ்ட் 15ல் (கலி 3926) இதை சூரிய ஆண்டு என்றும் கூறுகின்றனர். இப்படி ஒரு கருத்து உண்டு.

ஆரம்ப காலத்தில் திருவிதாங்கூர் வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதிய சங்குண்ணி மேனன் தன் நூலில் கொல்லம் ஆண்டு உருவானது பற்றி ஒரு காரணத்தைக் கூறுகிறார்: திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் உருவான வருஷத்தைக் கொல்லம் ஆண்டாகக் குறிப்பிட்டனர் என்றும் இந்தக்கோவிலைக் கட்டியவர் உதய மார்த்தாண்ட வர்மா என்றும் கோவிலின் தோற்றமும் கொல்லம் வருஷத் தோற்றமும் ஒன்று என்றார் அவர்.

சங்குண்ணி மேனனின் கருத்து ஆரம்பகாலத்தில் ஏற்றுக்கொள்ளப் பட்டது. ஆனால் பின்னர் இக்கருத்தை மறுத்து பலரும் விமர்சித்துள்ளனர். மனோன்மணியம் நாடக ஆசிரியரான பேராசிரியர் பெ. சுந்தரனார் சங்குண்ணி மேனனின் ‘கருத்தை ஒத்துக்கொள்ள’ முடியும் என்கிறார். ஸ்ரீதரமேனன் இந்தக் கருத்தை மறுக்கிறார். காரணமும் கொடுக்கிறார். திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் உருவான காலம் பற்றி துல்லியமான ஆவணங்கள் கிடைக்கவில்லை. ஆகவே இது பொருந்தாது என்கிறார்.

அறுபத்திமூன்று நாயன்மார்களில் ஒருவரான, சேரமான் பெருமாள் நாயனார் இஸ்லாமிய சமயத்திற்கு மாறிய பின்னர் மெக்காவுக்குச் சென்றார். அப்படிச் சென்ற ஆண்டில் உருவானது கொல்லம் வருஷம் என்பது ஒரு கருத்து.

லோகன் என்ற அறிஞர் பாரசீக வளைகுடாவில். ஒரு இடத்தில் சேரமான் பெருமாளின் கல்லறை உள்ளது என்று கூறுகிறார். சேரமான் பெருமாள் நாயனார் மறைந்தது கலி 3966ல் என்றாலும் அவர் மெக்கா புறப்பட்ட வருஷமே கொல்லம் ஆண்டு உருவாக்கத்திற்குக் காரணமானது என்பது அவரது கருத்து.

இந்தக் கருத்தை, முந்திய அறிஞர்கள் பலரும் மறுத்திருக்கிறார்கள். மனோன்மணியம் சுந்தரனார் 1894ல் வெளியிட்ட Sovereigns of Travengore என்ற தன் சிறு நூலில், ஒரு அரசன் மதம் மாறியது ஒரு நிகழ்வே தவிர அது வரலாற்று முக்கியம் உடையது அல்ல. அவரது மறைவு கேரளத்திற்குப் பெருமை சேர்ப்பது என்று கொண்டாலும் மொத்த கேரளமும் அதை தங்களின் ஆண்டின் தொடக்கமாகக் கொள்வதற்கு இணங்கி இருப்பார்களா? வைதீகர்கள் இதற்குச் சம்மதிப்பார்களா? கோவில் ஆவணங்களிலும் கல்வெட்டுகளிலும் அந்த வருஷத்திற்கு முக்கியம் கொடுப்பார்களா? இந்த ஊகம் பொருத்தமில்லாத கற்பனை என்று சிலர் மறுப்பு கூறுகின்றனர்

மேலும் சேரமான் பெருமாள் மதம் மாறியது பற்றிய நிகழ்வை | பெரியபுராணம், திருக்கயிலாய ஞான உலா ஆகிய நூற்கள் பேசவே இல்லை. கேரளத்திற்கு வந்த இஸ்லாமிய பயணிகளான சுலைமான்(பொ. ஆ850) அல்பரேணி (990 - 1030) | மார்க்கோபோலோ (பொ. ஆ. 1241- 1294) போன்றோர்கள் இப்படி ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிடவும் இல்லை. ஆகவே இந்த கருத்து முழுக்கவும் கற்பனையானது என்று கூறுகின்றனர்.

சோழர் வரலாற்றை எழுதிய சதாசிவப் பண்டாரத்தார், சேரமான் பெருமாள் கைலாயம், சென்ற ஆண்டின் ‘நினைவாக' கொல்லம் ஆண்டு உருவாகியிருக்கலாம் என்று ஒரு கட்டுரையில் கூறுகிறார். இதுவும் ஊகமே. இதற்கு வேறு சான்றுகள் இல்லை.

கேரளோப்பத்தி என்ற மலையாள நூல் கொல்லம் வருஷத் தோற்றத்தை ஆதிசங்கரருடன் இணைத்துக் கூறுகிறது. நம்பூதிரி சாதியினரான ஆதிசங்கரர் தன் ‘அனாசார வழக்கத்தை’ பின்பற்றிய வருஷமே கொல்ல வருஷம் என்று இந்த நூல் கூறுகிறது. ஆனால் இக்கருத்து பொருத்தாது என்பதற்கு ஸ்ரீதர மேனன் சான்றுகள் தருகிறார்...

சங்கரர் பொது ஆண்டு 820 இல் மறைந்தார்.. அவரது மறைவு கேரளத்தில் பொ.ஆ 825 இல் அறிவிக்கப்பட்டது. அதுவே கொல்லம் ஆண்டின் தொடக்கம் என்ற கருத்தையும் மேனான் மறுக்கிறார். சங்கர ஸ்மிருதியில் அனாச்சாரம் பற்றி பேசப்படவில்லை. சங்கரர் பொ.ஆ 778ல் பிறந்து பொ.ஆ 820 இல் மறைந்தார். எனவே மேற்கண்ட கூற்றுக்கள் முற்றிலும் தவறு உடையவை என்பது அவரது வாதம்

மகோதயப் பேரரசர்களில். ராஜசேகர குலசேகரன் (பொ.ஆ.820 - 844) என்ற அரசர் காலத்தில் கொல்லம் வருஷம் ஆரம்பித்தது. இந்த அரசன் கேரளத்து விவசாயம், மழைக்காலம், பயிர் விளைச்சல் போன்றவற்றின் பின்னணியில் ஒரு ஆண்டை உருவாக்குமாறு அறிஞர்களிடம் கேட்டுக்கொண்டான். அதுவே கொல்ல வருஷம் என்பது ஒரு கருத்து.

இந்தக் கருத்தையும் மேனன் மறுத்து இருக்கிறார். மகோதய அரசர் காலத்தில் எழுதப்பட்ட சங்கர நாராயணீயம் என்னும் வானியல் நூலில் மலையாள ஆண்டு இல்லை. இதில் கலி ஆண்டு குறிப்பிடப்படுகிறது. மகோதய ராஜசேகரன் கொல்லம் ஆண்டை தொடங்கியிருந்தால் இந்த இந்நூலில் கொல்லம் ஆண்டு குறிப்பிடப்பட்டிருக்கும். அப்படி இல்லை எனவே மேற்கொண்ட கருத்து தவறு என்கிறார்.

ஓணம் பண்டிகையுடன், கொல்லம் ஆண்டு: தொடர்புடையது. இது உருவான நாளில் கொல்லம், தொடங்கப்பட்டது என்பது ஒரு கருத்து. இதைப் பலரும் மறுக்கின்றனர். ஓணம் சங்க காலத்தில் நடந்த ஒரு விழா. இது உருவான காலம் சரியாகத் தெரியாது. ஆகவே இந்தக் கருத்து பொருத்தமற்றது என்கின்றனர்.

கொல்லத்தில் உள்ள ஒரு சிவன் கோவில் கட்டப்பட்ட ஆண்டிலிருந்து கொல்லம் வருஷம் கணக்கிடப்பட்டது என்று மலையாள அகராதியை தொகுத்த குண்டர்ட் என்பவர் கூறுகின்றார். இது வாய்மொழிச் செய்தியின் அடிப்படையில் உருவானது. அதோடு கொல்லத்தில் எந்த சிவன் கோயில் கட்டப்பட்டது என்றும் இவர் கூறவில்லை.

பாண்டியன் ஸ்ரீ மாறன் ஸ்ரீ வல்லவன் என்பவனை (பொ.ஆ. 815 - 865) ஆய் மன்னன் ஒருவன் வெற்றி கொண்ட நிகழ்ச்சியின் அடிப்படையில் கொல்லம் வருஷம் உருவானது என்கின்றார் இ.வி கிருஷ்ணய்யர். இதுவும் சரியானதல்ல என்கின்றனர். ஆய் அரசர்களின் தலைநகரம் விழிஞம் ஆகும். கொல்லம் அல்ல என்பது அவர்கள் வாதம்.

இன்றைய கொல்லத்தை அடுத்த சில பகுதிகளில் குடியேறிய புனிதர்களான சமோர், மார்பரோத் ஆகிய இருவரின் பெயரால்; கொல்லம் சகாப்தம் உருவானது என்பது ஒரு கருத்து. இது பொருத்தம் இல்லை; இப்படி உருவான ஒரு வருஷத்தை வைதீக கோவில் பூசகர்கள் ஒத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.

ஆற்றிங்கல் பக்கமுள்ள கீழப் பேரூர் என்ற இடம் குலசேகரரின் அம்மாவின் ஊர் ஆகும். இங்குள்ள கிருஷ்ணன் கோவில் உருவான நாளிலிருந்து கொல்லம் வருஷம் ஆரம்பித்தது என்னும் வாய்மொழி செய்திக்கும் வேறு சான்று இல்லை.

லோகன் என்பவர் கொல்ல வருஷம் தொடர்பாக ஒரு கருத்தைக் கூறுகிறார். கொல்லம் ஆண்டு தென் கேரளத்தில் சிங்கம் மாதத்திலும், வட கேரளத்தில் கன்னி மாதத்திலும் ஆரம்பிக்கிறது. இது குளத்து நாட்டிலிருந்து வேணாடு விடுதலை பெற்றதன் அடையாளமாகக் கூறப்படுவது என்று கூறுகிறார்.

மகோதய பேரரசு பொ.ஆ. ஒன்பதாம் நூற்றாண்டு முதல் பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை இருந்தது. அப்போது வேணாடும் கோலத்து நாடும் முழு சுதந்திர நாடாக இருக்கவில்லை. குலசேகரப் பேரரசில் இறுதிக்கு பின்னர் வேணாடு உரிமையுடைய நாடாக மலர்ந்தது, ஆகவே லோகன் கருத்து சரியல்ல என்கின்றனர்.

திராவிட மொழி அறிஞர் டாக்டர் கால்டுவெல் கொற்கை நகரத்துடன் கொல்லம் ஆண்டு தொடர்புடையது என்கின்றார். கிரேக்கர்கள் கொல் செய் என்று கூறுவது கொல்லத்தினைக் குறிக்கும். கொலச்சல், கொலம்போர என்னும் பெயர்களிலிருந்து வந்தது கொல்லம். இவை துறைமுகங்கள். எனவே ‘கொற்கை கொல்லம்Õ தொடர்புண்டு என்கிறார். இதை கற்பனையான கருத்தாக எடுத்துக் கொள்ளலாம் என்று பேராசிரியர் சுந்தரம் பிள்ளை கூறுகிறார்.

மனோன்மணியம் நாடக ஆசிரியர் பெ சுந்தரம் பிள்ளை ‘வேணாட்டு அரசர்களின் வரலாறு' என்ற நூலில் கொல்லமாண்டு பெருமாள் அரசர்களின் கடைசி அரசரின் மறைவுக்குக் காரணமாகவோ ஆதிசங்கரருடன் தொடர்புடையதாகவோ சப்தரிஷிகளின் சூரியன் கணிப்பு அடிப்படையிலோ உருவாகி இருக்கலாம் என்கின்றார்.

தென் கேரளத்தில் பொ.ஆ 824 ஆகஸ்டிலும் வட கேரளத்தில் செப்டம்பர் 21லும் கொல்லமாண்டு ஆரம்பித்திருக்க வேண்டும் என்கின்றார் சுந்தரனார். இந்தக் கருத்தைச் சிலர் ஒத்துக் கொள்கின்றனர் என்றாலும் கொல்லம் வருஷம் தோற்றம் என்பது இன்றைக்கும் புதிரான முடிவு பெறாத விஷயமாகவே உள்ளது.

- அ.கா.பெருமாள், ஓய்வுபெற்ற பேராசிரியர், நாட்டார் வழக்காற்றியல் மற்றும் சமூகப் பண்பாட்டு ஆய்வாளர்.

Pin It