பெற்றோர்கள், குழந்தைகளுக்கு சிறுவயதில் இருந்தே தங்கள் கலாச்சாரம் சார்ந்த நல் பழக்கங்களையும் பண்புகளையும் சொல்லிக் கொடுத்துத் தங்களின் உலகத்தை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவதுதான் குழந்தை வளர்ப்பின் முக்கிய குறிக்கோள் என்று சொல்லலாம்.

குழந்தைகள் ஈரமான சிமெண்ட்டைப் போன்றவர்கள். அவர்கள் மீது எது விழுந்தாலும் தன் உருவத்தைப் பதித்துவிடும் என்கிறார் பிகிமிவி நிமிழிளிஜிஜி என்னும் குழந்தைகள் மனவியலாளர். காரணம் குழந்தைப் பருவம்தானே பசுமரத்தாணி போல எல்லாப் பண்புகளும் பழக்கங்களும் மனதில் பதியும் காலம். நம் மகாத்மா காந்தி "உலகில் அமைதி எப்போதும் தவழ வேண்டும் என்றால் நாம் குழந்தைகளிடம் இருந்து ஆரம்பிக்க வேண்டும்" என்று சொல்கிறார்.

AUTHORITATIVE PARENTINGஆக பெற்றோர்கள் சிறுவயதிலிருந்தே குழந்தைகளை ஒருவித அர்ப்பணிப்பு உணர்வோடு அக்கறையும் கண்டிப்பும் கலந்து நல்லவைகளை சொல்லிக் கொடுத்து வளர்த்தால் நிச்சயம் அவை அனைத்தும் அவர்கள் மனதில் பதியும். அதனால் பின்னாளில் அவர்களின் வாழ்க்கை பிரகாசித்து சார்ந்துள்ள சமூகமும் வளம்படும். ஐந்தில் வளைக்க முடியாமல் ஐம்பதிலா வளைக்கப் போகிறோம்?

குழந்தைகள் வளர்ப்பு முறை பற்றி ஆராய்ந்த டையானா பாமரிண்ட் மற்றும் அவருக்குப் பின் வந்தவர்களும் கீழே கொடுத்துள்ள இரண்டே இரண்டு கேள்விகளுக்கான பதில்களை வைத்துதான் நான்கு வகைகளாகக் குழந்தை வளர்ப்பு முறைகளைப் பிரித்தனர். 1. குழந்தைகளிடம் பெற்றோர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள்? 2. எதிர்பார்ப்பை வெளிக் கொணரும்படி குழந்தைகளை வளர்க்க பெற்றவர்களின் பங்களிப்பு என்ன?

இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கப் போவது AUTHORITATIVE PARENTING  என்று சொல்லப்படும் கண்டிப்பும் அக்கறையும் சேர்ந்து குழந்தை வளர்க்கும் முறையைப் பற்றிதான். குழந்தைகளுக்கான உணர்வுகளை மதித்து அவர்களுக்குத் தைரியம் கொடுத்து, மனதில் இருப்பதை ஒளிவின்றி பேசும்படி ஊக்குவித்து வளர்க்கும் இந்த முறை சிறந்தது என அனைவரும் நம்புகிறார்கள்

இந்த வகையில் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம் தெரிய வேண்டுமானால் கீழே உள்ள உதாரணக் காட்சியைப் பாருங்கள்.

சாப்பாட்டு நேரத்தில் குழந்தையைச் சாப்பிட வருமாறு கூப்பிடும் போது "எனக்கு சாப்பாடு வேண்டாம்" என்று ஒரு குழந்தை சொன்னால், ஒவ்வொரு வகையான பெற்றோரும் எவ்வாறு பதில் சொல்வார்கள் என்று பார்ப்போமா?

1. தாராள அனுமதி கொடுத்து குழந்தை வளர்க்கும் பெற்றோர்கள்.

"ஓகே. உன் விருப்பம். எப்ப வேண்டுமானாலும் சாப்பிட்டுக்கோ'

2. ஹெலிகாப்டர் பெற்றோர்கள்.

"இன்று உனக்குப் பிடித்த உணவு தயார். நானே ஊட்டி விடுகிறேன். நிறைய சாப்பிடனும்"

3. புறக்கணிப்பு பெற்றோர்கள்

"நீ சாப்பிட்டால் என்னா? சாப்பிடாமல் இருந்தால் என்ன? எது வேண்டுமானாலும்

செஞ்சுக்கோ. எக்கேடாவது கெட்டுப் போ"

4. சர்வாதிகாரப் பெர்றோர்கள்

"நீ இப்போது சாப்பிட வரலன்னா, அடி பின்னிடுவேன்"

5. கண்டிப்பும் அக்கறையும் உள்ள பெற்றோர்கள்

'உனக்கு பசிக்கலையா? ஏன் இப்படி சொல்கிறாய்? உடம்புக்கு ஒன்றும் இல்லையே? இப்போது பசிக்காமல் இருக்கலாம். எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டோமானால், நாம் அடுத்த வேலையைப் பார்க்கலாமே!'

இதிலிருந்து கண்டிப்பும் அக்கறையும் கலந்து வளர்ப்பது சற்று சிரமமானதாக இருந்தாலும் குழந்தைகள் அதைத்தான் விரும்புவார்கள் என்றும் நீங்களே தெரிந்து கொள்ளலாம்.

இவ்வகைப் பெற்றோர்கள் எப்படி இருப்பார்கள்?

இவ்வகையான பெற்றோர்களின் வீட்டில் எப்போதும் அக்கறையும் பாசமும் கண்டிப்பும் கலந்த உணர்வு பூர்வமான சூழல் இருக்கும். குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் இருத்தி, அதை அடைய அவர்களை இளம் வயதில் இருந்து எப்படி எல்லாம் வளர்க்க வேண்டும் என்று திட்டமிடுவார்கள். பெற்றோர்கள் தங்களின் விருப்பத்தை குழந்தைகளின் மீது திணித்து அவர்களின் மூலம் தங்கள் வாழ்க்கையை வாழ்வதில்லை. மாறாக குழந்தைகளுக்கு முழுதாக தனித்துவமும் தன்னம்பிக்கையும் வருமாறு வளர்க்கிறார்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் குழந்தைக்காகத் தனியாக ரோடு போடுவதை விடுத்து குழந்தையை எல்லா ரோடுகளிலும் பயணிக்கும் படி தயார்படுத்துகிறார்கள்.

அடுத்து முக்கியமான விஷயம். குழந்தைகள் என்ன சொல்ல வருகிறார்கள் என்று காது கொடுத்துக் கேட்கும் பெற்றோர்கள் இவர்கள்.

குழந்தைகளுக்காகத் தங்களின் நேரத்தையும் கவனத்தையும் செலவிடுகிறார்கள். அவர்கள் தேவைகளில் நியாயம் இருப்பின் நிறைவேற்றத் தவறுவதில்லை. நியாயம் இல்லை என்றால் கிடையாது என்று உறுதியாகச் சொல்லி விடுகிறார்கள்.

குழந்தைகளுக்கான எல்லைக் கோடுகளையும் வரைமுறைகளையும் நிர்ணயிக்கத் தெரிந்தவர்கள் இவர்கள். இந்த வகையில் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகளிடம் எதை எதிர்பார்க்கலாம் எதை எதிர்பார்க்கக் கூடாது என்று தெளிவாகத் தெரியும். அதனால் குழந்தைகளுக்கான கட்டளைகளை எளிதில் புரியும்படியாக உருவாக்குகிறார்கள். குழந்தை வளர்ப்பைப் பொறுத்த மட்டில் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் ஒரே அளவுகோலை உபயோகிப்பதை உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள். உதாரணத்திற்கு குழந்தையின் செய்கையில் தவறு இருந்தால் வீட்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் அது தவறுதான். பெற்றோர்களுக்கு தவறு என்று தெரியும் செயல் தாத்தா பாட்டிக்கும் தவறு என்றுதான் தெரிய வேண்டும். பாச மிகுதியால் எவரும் குழந்தைகளின் தவறுகளை அங்கீகரிப்பதில்லை. மாறாகத் தண்டித்துத் துன்புறுத்துவதும் இல்லை.

குழந்தைக்கான இலக்கை நிர்ணயிக்கும் போது தங்கள் குழந்தையின் திறமையையும் விருப்பத்தையும் மனதில் கொள்கிறார்கள். அந்த இலக்கைப் பற்றித் தெளிவாகக் குழந்தைக்கு சொல்லி, அவர்களுக்குத் தேவைப்பட்ட உதவிகளையும் செய்கிறார்கள். அனைத்து உதவிகளையும் செய்தாலும் குழந்தைதான் இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டுமே தவிர இவர்கள் கூடவே பயணிப்பதில்லை. குழந்தைதான் முயற்சி செய்து உயர வேண்டுமே தவிர, இவர்கள் குழந்தையின் வேலையை செய்ய மாட்டார்கள். குழந்தைத் தோல்வி அடைந்தாலும் கூட குழந்தையின் முயற்சியை மனதாரப் பாரட்டுகிறார்கள்; அவர்களை அவமானப்படுத்தி விமரிசிப்பதில்லை. முக்கியமாக இவர்கள் குழந்தைகளிடம் இருந்து அதிகமாக எதிர்பார்த்தாலும், சூழ்நிலைக்குத் தகுந்தவாறு தங்களின் எதிர்பார்ப்பைக் கூட்டியோ, குறைத்தோ கொள்ளத் தெரிந்தவர்கள்.

தங்கள் குழந்தைதான் எதிலும் எப்போதும் முதலில் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதில்லை. குழந்தைகளிடம் இவர்கள் அனைத்திலும் ஒரு பர்பெக்ஷனை, முழுமையை எதிர்பார்ப்பதில்லை. ஆனாலும் குழந்தையின் அதற்கான முயற்சியைப் பாரட்டுகிறார்கள். இந்த முழுமையற்ற உலகில் எப்படி வாழ்வது என்று சொல்லிக் கொடுத்து விடுகிறார்கள். ஸ்டீபன் ஹாக்கிங் சொல்வது போல இந்த உலகம் பர்பெக்ஷனை அனுமதிக்காது என்பதை உணர்ந்தவர்கள்.

இம்மாதிரிப் பெற்றோர்கள் தங்களின் அதிகாரத்தைப் பிரயோகித்து குழந்தைகளைக் கட்டுப்படுத்த விரும்புவதில்லை. தண்டிப்பதை விடவும் அவர்களிடம் புரிய வைத்து அவர்களின் ஒத்துழைப்போடு வழி நடத்துவது எளிது என்று தெரிந்தவர்கள்.

குழந்தைகளைக் கண்டிப்பதா அல்லது தண்டிப்பதா என்ற கேள்விக்கான பதிலை நிறைய பெற்றோர்களால் உடனடியாகச் சொல்ல முடியாது. குழந்தைகள் விரும்பாதவற்றை செய்யும்போது அதை பெற்றோர்கள் எப்படி கண்டு கொள்ளாமல் இருக்க முடியும்? திருத்தி நல்ல பண்பை சொல்லிக் கொடுக்க வேண்டியது பெற்றோர்களின் கடமை. திருவள்ளுவர் நாட்டு மன்னன் எப்படி ஆள வேண்டும் என்று சொல்லும் போது கடிதோச்சி மெல்ல எறிக என்கிறார். இது குழந்தை வளர்ப்புக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன்.

குழந்தைகள் தவறு செய்யும் போது தண்டிக்க நினைக்கும் பெற்றோர்கள் பெரிதாகத் தண்டிப்பது போல் ஆரம்பித்து லேசாகக் கண்டித்து விட்டு விட வேண்டும். அதாவது குழந்தைகளைப் பலமாகக் கண்டிக்கலாம், ஆனால் லேசாக, அவர்கள் அவமானப்படாமல், மனதில் காயம் படாமல் தண்டிக்கலாம். இங்கே தண்டனைக் குற்றவாளிகளை அழிக்க அல்ல, அவர்களைத் திருத்த என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

குழந்தையைக் கண்டிக்கும்போது எதற்காகக் கண்டிக்கிறோம் என்று சொல்லி, இம்மாதிரி தவறை மீண்டும் செய்யக் கூடாது என்று எச்சரித்து விட்டு விடவேண்டும். அடுத்து மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டியது. சிறு வயதிலேயே, குழந்தைகளைத் திருத்தி நல்வழிப்படுத்த நினைக்கும் பெற்றோர்கள் குழந்தைகள் தவறு செய்த உடனேயே திருத்த வேண்டுமே ஒழிய, இன்று செய்த தவறுக்கு ஒரு வாரம் கழித்து திருத்தவோ, கண்டிக்கவோ கூடாது.

அடுத்து இந்த வகைப் பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகளை எப்போது பாராட்டுவது, பரிசு கொடுப்பது என்பது தெளிவாகத் தெரியும். வாழ்வில் எவருக்கும் பாராட்டும் பரிசும் சாதிக்காமல் கிடைப்பதில்லை என்பதை நன்கு அறிந்தவர்கள். குழந்தைகள் ஒவ்வொரு முறையும் சாதிக்கும் போதெல்லாம் இவர்கள் பாராட்டத் தவறுவதில்லை . பரிசுகள் கொடுப்பதெல்லாம் அவரவர்களின் குடும்ப பொருளாதாரத்தையும் சூழலையும் பொறுத்தது; அவைகள் முக்கியமும் இல்லை. அதுபோல் இவர்கள் சாதிக்காதபோது குழந்தைக்கு ஆறுதல் சொல்லி தேற்றுவதற்கும் தவறுதில்லை.

இம்மாதிரியான பெற்றோர்களை குழந்தைகளும் விரும்பி மரியாதையுடன் நடத்துகிறார்கள். கவனிக்கவும். பெற்றோர்கள் மரியாதையை மிரட்டி வாங்குவதில்லை.

இதனால் குழந்தைகளுக்கு என்ன லாபம்?

இந்த வகையில் குழந்தை வளர்க்கும் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்வதால் குழந்தைகளும் தங்கள் பெற்றோர்களின் குணங்களை உள்வாங்கி வளர்கிறார்கள். பெற்றோர்களிடம் இருந்து உணர்ச்சிகளை எப்படிக் கட்டுப்படுத்துவது, கையாள்வது என்று எளிதில் கற்றுக் கொள்கிறார்கள். (மீண்டும் நினைத்துப் பார்க்கவும். குழந்தைகள் நீங்கள் சொல்வதைக் கேட்டு வளர்வதில்லை. உங்களைப் பார்த்துதான் கற்றுக் கொள்கிறார்கள்')

குழந்தைகளை சுதந்திரத்தோடு ஊக்குவித்து வளர்ப்பதால், அவர்களும் சிறுசிறு விஷயங்களில் ஆரம்பித்து தன்னிச்சையாக முடிவு எடுக்க கற்றுக் கொள்கிறார்கள். முடிவு எடுப்பது பற்றி பெற்றோர்களிடம் விவாதிப்பதால் அதில் வெற்றி அடையும்போது தன்னம்பிக்கையும் சுய கவுரவமும் சேர்ந்து குழந்தைகள் வாழ்க்கை ஏணியில் எளிதாக ஏற முடிகிறது.

இம்மாதிரி வளர்க்கும் குழந்தைகள் மன மகிழ்ச்சியுடனும் மன நிறைவுடனும் வளர்கிறார்கள். அவர்களின் பெற்றோர்களும் சமூகமும் எதிர்பார்க்கும் நல்ல பழக்கங்களையும் பண்புகளையும் எளிதில் கற்றுக்கொள்கிறார்கள்.

மற்ற குழந்தைகளுடன் இணக்கமாகப் பழகுவதால் வீண்வம்புகளும் சண்டைகளும் அவர்களின் வாழ்வில் குறைந்து விடுகிறது. பள்ளி, கல்லூரிப் படிப்பில் சிறந்து விளங்குகிறார்கள். மன அழுத்தம், போதை போன்றவைகள் கிட்டே நெருங்குவதில்லை.

இந்த முறையில் குழந்தைகள் வளருவது ஏன் சிறந்தது?

தாராள அனுமதி கொடுக்கும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கும் இவர்களுக்கும் ஒரே ஒற்றுமை. இருவருமே தன்னிச்சையாக முடிவு எடுக்க கற்றுக் கொள்வார்கள். இருப்பினும் இவர்கள் அதற்கான சாதக பாதகங்களை பெற்றோர்களிடம் விவாதித்த பிறகு முடிவு எடுக்கிறார்கள்.

தாராள அனுமதி கொடுக்கும் பெற்றோர்களும் குழந்தை வளர்ப்பில் அதிகம் பங்களிக்கிறார்கள். ஆனால் அவர்களிடம் கண்டிப்பும் எல்லைக்கோடும் கிடையாததால் குழந்தைகள் தங்கள் விருப்பப்படி வளர்கிறார்கள். அதற்கு மாறாகக் கண்டிப்பும் அக்கறையும் கலந்து வளர்க்கும் இந்த முறையில் வளரும் குழந்தைகள் பின்னாளில் மிகவும் நம்பத் தகுந்தவர்களாகவும் பொறுப்புள்ளவர்களாகவும் பரிணமிக்கிறார்கள்.

மிலிட்டரி ரூல் போடும் சர்வாதிகாரப் பெற்றோர்கள் போல், இவர்கள் தங்களின் ஆதிக்கத்தைக் குழந்தைகள் மீது பிரயோகிப்பதில்லை. குழந்தைகளைத் தண்டித்து வளர்ப்பதில்லை; அவர்களைக் கிட்டே விடாமல் தனிமைப்படுத்துவதும் கிடையாது. மாறாக அவர்களின் வரைமுறைகளுக்கான காரணத்தைச் சொல்லிக் கொடுத்து, புரிய வைத்து, அவர்களின் ஒத்துழைப்புடன் வளர்க்க முயலுகிறார்கள்.

விடலைப் பருவத்து பழக்கங்கள், படிப்பில் முன்னேற்றம் போன்றவைகளுக்கும் அவர்களின் ஆரம்ப கால குழந்தை வளர்ப்புக்கும் தொடர்பு இருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. சிறுவயதிலிருந்தே மாறுபட்ட பழக்க வழக்கங்களைக் கொண்டுள்ள குழந்தைகள், பின்னாளில் கெட்டுப்போவதைத் தவிர்க்க இந்த முறை உதவுவதாக மனவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். மேலும் இம்மாதிரி வளர்ப்பில் வந்த குழந்தைகள் மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்படுவதும் அரிது.

இந்த வகையில் குழந்தை வளர்ப்பதற்கு பெற்றோர்களுக்கு நிறைய பொறுமையும் காலமும், வீட்டில் இருப்பவர்கள் அனைவரின் ஒத்துழைப்பும் தேவைப்படும். முந்தைய கூட்டுக்குடும்ப சூழல் எல்லாம் மாறிப்போனதால் இவ்வாறு குழந்தை வளர்ப்பது சற்று சிரமமாகத் தெரிந்தாலும் குழந்தைகளின் எதிர்காலத்தை எண்ணிப் பார்க்கும் போது இதுவே சிறந்த முறை என்று தோன்றுகிறது.

மருத்துவர். ப.வைத்திலிங்கம்

Pin It