பல்லவர், சோழர், நாயக்கர் காலத்தில் வழக்கில் இருந்த தமிழ் மொழியை இடைக்காலத் தமிழ் என்பர். இக்காலப்பகுதியில் பேசப்பட்ட மொழி ஒரு கலவையாக உள்ளது. இது பழந்தமிழுக்கும் தற்காலத் தமிழுக்கும் ஒரு பாலமாக விளங்குகிறது. ‘கில்’ என்னும் இடைச்சொல் புதிதாகத் தோன்றுகிறது. (எகா-ஒல்லகில்லேன் பொறுக்ககில்லேன், உரப்பகில்லேன்) வினைச்சொற்களில் நிகழ்காலம் தோன்றியது. சங்ககாலத்தில் இறப்பு இறப்பல்லா காலம்தான் உண்டு கிறு கின்று ஆநின்று என நிகழ்காலம் காட்டும் உருபுகள் நிலைபெறுகின்றன. தற்கால மலையாள மொழிக்கூறுகள் சிலவற்றைக் காண முடிகின்றது. மிண்டுகின்றேனை, கொய்யாமோ கொட்டாமோ, மிண்டர் போன்றவை மலையாள மொழிக்கூறுகள். மேலும் இக்காலப்பகுதியை சமஸ்கிருத காலப்பகுதி என்பார் தெ.பொ.மீ. (காண்க மொழி வரலாறு). பழந்தமிழில் ஆளப்பட்ட திரிதரு. இழிதரு. உழிதரு. எளிவந்து போன்ற கூட்டு வினைகள் இடைக்காலத்தில் தொடர்கின்றன. தற்காலத் தமிழில் காணப்படும் பண்ணுதல், ஏசுதல், தித்திப்பு, ஒற்றிவை (ஒத்திவை), சவலை கண்டுகொள் போன்ற சொற்கள் இடைக்காலத்தில் புழக்கத்தில் வந்துவிடுகின்றன சமஸ்கிருத மொழிக்கு கிரந்த எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. தமிழகத்தில் வாழ்ந்த சமணர் பாகத மொழியைப் பேசியதாகச் சம்பந்தர் கூறுகிறார் பாகதச் (பிராகிருத) சொற்களும் தொடர்ந்து பயன்பட்டன. இதனால்தான் இடைக்காலத் தமிழை ஓர் கலவை மொழி என்றோம்.

இடைக்காலத்தில் வழக்கிலிருந்து ஆனால் தற்போது வழக்கொழிந்து போன சில பிராகிருத சொற்கள் குறித்து இக்கட்டுரையில் காண்போம்

போனகம்:

இடைக்காலத் தமிழில் கல்வெட்டுகளிலும் பக்திப் பனுவல்களிலும் போனகம் என்றொரு சொல் புழக்கத்தில் வந்துள்ளது. "தயிர் போனகம் அமுது செய்தருள இட்ட வெள்ளி கச்சுகோரம்" (சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதி) என்று கல்வெட்டில் காணப்படுகிறது. கச்சுகோரம் என்பது பாத்திரத்தைக் குறித்தது. போனகம் என்பது உணவைக் குறித்து. வந்த சொல்லாகும். திருச்சி மாவட்டம் முசிறி அருகேயுள்ள சிலையாத்தி கிராமத்தில் காணப்படும் கல்வெட்டுகளில் திருப்போனகம், போனம் போன்ற சொற்கள் பயின்று வருகின்றன. (காண்க கலைக்கோவன் கட்டுரை, தினமணி, 25 திசம்பர் 2011) இச்சொல் திருவாசகத்திலும் எடுத்து ஆளப்பெற்றுள்ளது. "போனகமாக நஞ்சுண்டல் பாடி பொற்றிருச் சுண்ணம் இடித்துநாமே" திருப்பொற்சுண்ணம் என்ற பதிகத்தில் இவ்வரிகள் வருகின்றன. சிவபெருமான் நஞ்சினை உணவாக உண்ட புராணச் செய்தி இங்குச் சுட்டப்படுகிறது. இங்கும் போனகம் என்பது உணவு என்று பொருள்படும். திருப்பூவல்லி என்ற பதிகத்தில் கூட போனகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. "பெருங்கடல் ஆலாலம் அமுது செய்யப் போனகம் ஆனவா பூவல்லி கொய்யாமோ" கடலில் உண்டான ஆலகால விடமானது உண்ணுதற்குரிய உணவாக ஆயிற்று என்று பொருள்படும்படிப் போனகம் வந்துள்ளது.

மணிமேகலையில் "நால்வகை போனக மேந்தி" என்று வந்துள்ளதும் அறியமுடிகிறது கொன்றை வேந்தனில் போனகம் என்பது தான் உழந்து உண்டல் என்று வருகிறது போனகச்சட்டி என்பது சமையல் செய்கிற பாத்திரத்தைச் சுட்டும் போனகத்தி, போனகக்காரி போன்ற சொற்கள் சமையல்காரியைக் குறிக்கின்றன. போனகம் என்பதற்கு மாற்றாக போனம், போணம் போன்ற வடிவங்கள் அதே பொருளில் அகராதிகளில் காணப்படுகின்றன. போனகம், போனம், போணம் இவையாவும் ஒரு சொல்லின் வடிவங்களே. இச்சொல்லுக்குச் சோறு, பாலன்னம், உணவு, அப்பவருக்கம், உண்கை என்று சில பொருள்கள். இச்சொல் கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் காணப்படுகின்றது இது போஜன (bho­jana) என்ற சொல்லில் இருந்து வந்திருக்கலாம் (probably from bhojana) என்று அகராதியில் உள்ளது போஜன என்ற சொல் சமஸ்கிருதச் சொல்

இச்சொல் சமஸ்கிருதத்தில் இருந்து நேரடியாக வந்த சொல் அன்று பிராகிருத மொழியிலிருந்து வந்தது. அம்மொழியில் இச்சொல் (bhoo-ana) என்றுதான் வரும். இந்த வடிவம்தான் தமிழுக்கு மூலம். தமிழில் போஅண என்று எழுதிக் காட்டலாம். போஜன என்ற சொல்லில் இரு உயிர்களுக்கு இடையில் வரும் ஜ மெய் கெடும் னகரம் ணகரமாக மாறும் இது பிராகிருத இலக்கண விதி போ அண என்பது - அம் விகுதி சேர்த்து போ அணம் உருவாயிற்று உயிர் மயக்கம் கெட்டு மேலும் போணம், போனம் உண்டாகி போனகம் வந்திருக்கலாம். கல்வெட்டுகளில் திருப்போனகம், போனம் என வருகின்ற வடிவங்களும் இடைக்கால இலக்கியங்களில் இருந்து வந்த போனகம் என்பதும் பிராகிருத மொழியிலிருந்து வந்தவை என்று முடிவாகக் கூறலாம். இச்சொல் தற்கால தமிழில் இல்லை

இடைக்காலத் தமிழில் வாழ்ந்து மறைந்து போன இன்னொரு சொல்லை இனி காண்போம்.

சோத்தம் சோத்து

சோத்தம் என்பது ஒரு புதிய சொல் போல தோன்றுகிறது அல்லவா? இதுவும் இடைக்காலத் தமிழில் பயின்ற சொல்தான் நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் இச்சொல் பயன்படுத்தப்பட்டது "சோத்தம் பிரான் இங்கே வாராய்" (நா.தி.பி பாடல் 142) என்று ஓரிடத்திலும் "சோத்தம் பிரான் இவை செய்யப்பெறாய் என்று இரப்பன், உரப்ப கில்லேன்" (நாதி.பி -1915) என்று மற்றோரிடத்திலும் வருகிறது. தற்காலத் தமிழில் கும்பிடுகிறேன் என்பது போல சோத்தம் வந்துள்ளது.

திருவாசகத்திலும் சோத்தம் வந்துள்ளது. திருத்தோணோக்கம் என்ற பதிகத்தில் "சோத்து எம்பிரான் என்று சொல்லிச் சொல்லி" (பாடல் -7) என்று வருகிறது. இங்குச் சோத்து என்பதற்கு இழிந்தோர் செய்யும் அஞ்சலி என்று பொருள் காணப்படுகிறது ஆசைப்பத்து என்ற பதிகத்தில் "துயருறுகின்றேன் சோத்தம் எம் பெருமானே" (பாடல் -3) என்றும் நீத்தல் விண்ணப்பத்தில், "தொழும்பரில் கூட்டிடு சோத்து எம்பிரான்" (பாடல் 44) என்றும் வருகிறது. இவ்விடத்திலும் சோத்து இழிந்தோர் உயர்ந்தோர்க்குச் செய்யும் அஞ்சலி என்று பொருள் கொள்ளப்படுகிறது. தேவாரங்களிலும் சோத்தம் எடுத்தாளப்பட்டது.

"சோத்திட்டு விண்ணோர் பலரும் தொழ" (சுந்தரர் தேவாரம்) "சோத்தம் எம்பெருமான் என்று தொழுது தோத்திரங்கள் சொல்ல (சம்பந்தர் தேவாரம்).

மேற்கண்ட சம்பந்தர் தேவாரத்தில் சோத்தம் வேறு, தோத்திரம் வேறு என்று வேறுபடுத்தப்படுகிறது. தோத்திரம் என்னும் சொல் துதிப் பாடல்களைக் குறிக்கும். திருவாசகத்திலும் "இருக்கொடு தோத்திரம் இயல்பினர் ஒருபால்" என்று வந்தது இங்கும் தோத்திரம் துதிப் பாடல்களைக் குறித்தது.

சோத்து சோத்தம், தோத்திரம் ஆகிய சொற்களுக்கு ஸ்தோத்ர (stotra) என்பதே மூலம். ஆனால் சோத்து, சோத்தம் பிராகிருத வடிவங்கள் தோத்திரம் தமிழ்ப் படுத்தப்பட்ட சமஸ்கிருத வடிவம் சோத்தம் மறைந்துவிட்டது. தோத்திரம் ஓரளவு பயன்பாட்டில் உள்ளது குறிப்பாக கிருத்துவ மதத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இன்னொரு முக்கியமான கருத்து ஒலிமாற்றம் stootra என்ற வடிவத்தில் - stஎன்ற மொழி முதல் மெய் மயக்கம் ஒரு சொல்லில் சோ - வாகவும் இன்னோரு சொல்லில் தோ-வாகவும் மாறுகிறது. நடுவில் வரும் -- என்ற மெய் மயக்கம் - த்த் வாகவும் ,-த்தி - யாகவும் ஓரினமாகிறது. இத்தகைய மாற்றத்தால் முறையே சோத்த(ம்) தோத்திரம் உருவாகின்றன.

தேவு, தேவர்

இடைக்காலத் தமிழில் தேவர் என்ற சொல் பரவலாக சில பொருளில் பயன்பட்டது. தேவு என்ற சொல்லும் பயன்பாட்டில் வந்துள்ளது. திருக்குறளில் தேவர் என்ற சொல் வந்துவிடுகிறது "தேவர் அனையர் கயவர்" என்ற குறளில் இதனை அறியலாம். சிலம்பில் "நால்வகைத் தேவரும் மூவறு கணங்களும்" என்ற வரியில் தேவர் இடம்பெற்றது தேவன் சினவரன்" என்ற அருகக் கடவுளின் ஒரு பெயராகத் தேவன் வந்துள்ளது தமிழில் நமக்கு தேவர் என்ற சொல் சமண இலக்கியங்கள் வழியாகத்தான் அறிமுகம் ஆகிறது போல பக்திப் பாடல்களில் தேவர் அதிகமாக எடுத்தாளப் படுகிறது. திருவாசகப் பாடல் ஒன்றை இங்கே சுட்டுவது பொருத்தமாக இருக்கும்

"அத்தேவர் தேவர் அவர்தேவர் என்று இங்ஙன் பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே பத்தேதும் இல்லாதென் பற்றறநான் பற்றி நின்ற மெய்த்தேவர் தேவர்க்கே சென்றூதாய் கோத்தும்பி" (பாடல் -5). உண்மையான கடவுளர்க்கும் பொய்யான கடவுளர்க்கும் வேறுபாட்டை உணர்த்த பொய்த்தேவு என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார் மணிவாசகர் ஆட்டுத் தேவர், நாட்டுத் தேவர், சேட்டைத்தேவர், அவமாய தேவர், வித்தகத் தேவர் போன்ற புதுப்புது தொடர்களையும் படைக்கிறார். சமண தீர்த்தங்கரர்களைப் பொய்யான கடவுளர் என்கிறாரா?

நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் மதுரகவி ஆழ்வார் பாசுரத்தில் " தேவு மற்றறியேன் குருகூர் நம்பி பாவின் இன்னிசை பாடித் திரிவனே" என்று வருகிறது. இங்கு தேவு, தெய்வம் என்ற பொருளில் வந்தாலும் குருகூர் நம்பி பாவினை சற்று உயர்த்த தேவு என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.

தேவு என்ற சொல் வந்த வரலாற்றைப் பார்க்கலாம் தேவ (deva) என்ற சொல் சமஸ்கிருத மொழி அகரத்தை ஈறாக உடைய சொல் சோம், பால ராம என்பவற்றைப் போல இவை பிற்காலப் பிராகிருத மொழியில் எழுவாய் வேற்றுமையில் தேவு, சோமு, ராமு என்று திரிபு அடையும் இந்த வடிவங்கள் பேச்சுத் தமிழில் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். தேவு என்ற சொல் பொய்யான தெய்வங்களைச் சுட்ட பயன்பட்டிருக்கலாம். மெய்த்தேவர் என்பதற்கு எதிராகப் பொய்த்தேவு வந்திருக்கிறது.

தேயு, தேசு

தேசு என்ற சொல் இடைக்காலத்தில் பிரபலம் தேசு என்பதற்கு 'ஒளி பொருந்திய, அக்னி, நெருப்பு ஆகிய பொருள்கள் தரப்பட்டுள்ளன.

"தேசனே தேனார் அமுதே" (திருவா- சிவபு -63)

"தேசா நேசர் சூழ்ந்திருக்கும்" (திருவா - கோயில் மூத்த திருப்பதிகம் -5)

"தேசனே ஓர் தேவர் உண்மை சிந்தியாது என் சிந்தையே " (திருவா சதகம் -77)

இங்கெல்லாம் தேசன் என்ற சொல்லுக்கு 'ஒளி பொருந்தியவனே, என்றுதான் பொருள். தேசன் என்பது தேஜஸ் என்ற சமஸ்கிருத சொல்லில் இருந்து பெறப்பட்டது. தேச்சு என்ற வடிவமும் கிடைக்கிறது

தேசு இருக்கவே தேயு என்ற வடிவமும் கிடைக்கிறது. தேயு என்பதும் ஒளி பொருந்திய என்பது தான் "தேயுற்ற செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ" இங்கு தேயு என்பது பேரோளி பொருந்திய என்று பொருள் படும் இதனைத் தேய் + உற்ற என்றும் சிலர் பிரிப்பர் தேயு என்பதே சரி. பிராகிருத மொழியில் தே -உ (teeu) என்று வரும் தேஜஸ் (teejas) என்ற சொல்லில் இறுதி மெய் கெடுகிறது. இடையில் வரும் ஜ் மெய்யும் கெட்டு தேஅ > தேஉ என்றாகிறது. யகர உடம்படு மெய் சேர்க்கப்பட்டு தமிழில் தேயு ஆயிற்று.

அத்தன், அப்பன்

திருமுறைகளில் அடிக்கடி ஆளப்படும் சொற்கள் அத்தனும் அப்பனும் இரு சொற்களுக்கும் தந்தை என்றுதான் பொருள். தந்தையில் நகர மெய் கெட ஆதி நீண்டு தாதை என்ற வடிவம் கிடைக்கிறது. அத்தன் அப்பன் ஆகியவற்றுக்குத் திருவாசகத்தில் சில எடுத்துக்காட்டுகள் காண்போம்

"அத்தா மிக்காய் நின்ற" (சிவபு-)

"அத்தா, சால ஆசைப்பட்டேன்" (ஆசைப்பத்து)

அத்தன் ஐயாறன் அம்மானைப் பாடி (திருப்பொற்)

"அத்தன் ஆனந்தன் அமுதன்" (திருவெம்பாவை)

அத்தனுக்குப் பதிலாக அப்பன் என்ற சொல்லும் அடிக்கடி வந்துள்ளது. "அடியேனுடைய அப்பனே" (கோயிற்) அம்மையே அப்பா ஒப்பிலா மணியே (சிக்கென) ஒண்மலர் திருப்பாதத்து அப்பன் (அதிசயப்பத்து). அத்தனும் அப்பனும் ஆகிய சொற்கள் பிராகிருத மொழியிலும் தந்தை என்ற பொருளில் வருகின்றன. ஆத்மன் (ஆத்மா) என்ற சமஸ்கிருத சொல் அப்ப, அத்த என்று இரு வகையில் மாற்றம் அடைந்து வழங்கும் இரண்டுக்கும் தந்தை என்பதுதான் பொருள்.

அயிராவணம், ஐராவதம்

அயிராவணமும் ஐராவதமும் ஒரு பொருள் தான் வெள்ளை யானையைக் குறிக்கும். அயிராவணம் பாகதச் சொல். ஐராவதம் சமஸ்கிருதச் சொல். அப்பர், அயிராவணம் என்னும் சொல்லை ஓரிடத்தில் ஆள்கிறார். அயிராவணம் ஏறாது ஆனேறு ஏறி ஆரூர் ஆண்ட அயிராவணமே" சமணராகவிருந்த அப்பருக்கு அயிராவணம் தெரியாமல் இருக்குமா?

பெம்மான், பெருமான்

பக்தி இலக்கியங்களில் மேற்கண்ட இரு சொற்களும் திரும்பத் திரும்ப வருகின்றன. ப்ரேம் (prema) எனும் சமஸ்கிருத சொல்லில் மொழி முதல் மெய் மயக்கம் கெட்டு பெம்ம உருவாகிறது இது பெம்மான் என மாறுகிறது இன்னொரு முறையில் ப்ரேம் பெரும் என மாறிப் பெருமான் வந்தது இவற்றுள் பெம்மான் (பெம், பெம்ம) என்பது பிராகிருத வடிவம் "பீடுடைய பிரமாபுரம் ஏறிய பெம்மான் இவனன்றே" என்று ஞானசம்பந்தர் பயன்படுத்திய பெம்மான் என்ற சொல் பிராகிருதச் சொல்லே.

முடிவுரை:

இடைக்காலத் தமிழ் மேலும் ஆராயப்பட வேண்டும். சமணம் போகவும் சைவ வைணவம் தோன்றவும் வலுப்பெறவும் மொழியின் பங்களிப்பு முக்கியமாக இருந்திருக்கலாம் ஆரியத்தொடு செந்தமிழின் பயன் அறிகிலாதவர் சமணர்கள் என்று சம்பந்தர் கூறுகிறார்.

ஆரியத்தையும் செந்தமிழையும் முன்னிறுத்துகிறார். சமணத்தை இடித்துரைத்தும் அவர்கள் பேசிய பாகதமொழியைக் குறைத்து மதிப்பிட்டும் கருத்து மொழிகிறார். சமணர்க்கு வேத நெறி தெரியாதாம், அவர் உரைக்கும் மொழிகளை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று கூறும் சம்பந்தர் முதல் பதிகப் பாடல்களிலேயே பெம்மான் என்ற பாகதச் சொல்லைப் பலமுறை பயிலவிடுவது முரணாக உள்ளது. ஆழ்வார்களும் நாயன்மார்களும் பாகதச் சொற்களைத் தாராளமாகவே பயன்படுத்தினர். இருப்பினும் இன்றைய நிலையில் போனகம், சோத்தம், தேவு, அயிராவணம், பெம்மான் போன்ற பாகதச் சொற்கள் வழக்கொழிய போஜனம், தோத்திரம், தேவர், ஐராவதம் பெருமான் போன்றவை தெரிந்த சொற்களாக உள்ளன. இவை நிலைபெற்று அவை மறையக் காரணம்தான் என்ன?

துணை நூல்கள் :

1.            முத்துச்சண்முகன் (2014) திருவாசகத் தமிழ், இக்காலத் தமிழ், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட், சென்னை - 50

2.            மீனாட்சிசுந்தரன் தெ.பொ (2009) தமிழ் மொழி வரலாறு, பூம்புகார் பதிப்பகம் சென்னை -108.

3.            தேவாரத் திருப்பதிகங்கள் (2011) பதிப்பு: டாக்டர் நா. மகாலிங்கம் இராமானந்த அடிகளார் அறக்கட்டளை கோயம்புத்தூர் -49

4. திருவாசகம், கா.சு.பிள்ளை உரை கழக வெளியீடு

- ஆ.கார்த்திகேயன்

Pin It