1890 என்பது திராவிட இன உணர்வு மிகுந்த வளர்ச்சி பெற்ற காலகட்டம். 1892 - இல் இப்பாடலை மனோன்மணியம் சுந்தரனார் எழுதுகிறார். 1890-இல், அயோத்திதாச பண்டிதர் திராவிட மகாஜன சபாவை உருவாக்குகிறார். 1892-ஆம் வருடம் ஏப்ரல் மாதத்தில் சென்னை விக்டோரியா டவுன் ஹாலில் கூடியுள்ள கூட்டத்தில், சென்னை மகாஜன சபை பிரதிநிதிகளுடன் “சாதி பேதமற்ற திராவிட மகாஜன சபையின் ஒரு பிரதிநிதியாய் அமர்ந்திருந்ததாகப் பதிவு செய்கிறார். 1885 - இல் திராவிட பாண்டியன் இதழ் வந்தது. தென்னிந்திய மக்கள் ஆரியர் அல்லாதவர்கள் என்றும், தென்னிந்திய மொழிகள் ஆரியத்திலிருந்து பிறக்கவில்லை என்றும், அறிஞர் பெருமக்கள் புரிந்து கொண்ட காலகட்டம் அது. ஆரியத்தையும் பார்ப்பனியத்தையும் அடித்து நொறுக்கும் நோக்கத்தில் அறிஞர்கள் பங்களிப்பு செய்து கொண்டிருந்த காலம் அது. தங்களுடைய போர்க் கருவியாக “திராவிட” என்ற சொல்லை கைக்கொண்டு சமூக விடுதலைக் கருத்தியல் புரட்சியில் ஈடுபட்டார்கள். இதற்கு பேராசிரியர் சுந்தரனாரும் விதிவிலக்கல்ல.
மனோன்மணியம் சுந்தரனாரிடம் மிகுந்து காணப்பட்ட உணர்வு ஆரிய எதிர்ப்பு. விவேகானந்தர் திருவனந்தபுரத்தில் ஒன்பது நாட்கள் தங்கி இருந்தபோது அவரும் சுந்தரனாரும் சந்தித்து பலமுறை பேசிக்கொண்டார்கள். இந்நிலையில் சுந்தரனாரின் விருந்தினராக அவருடைய வீட்டில் விவேகானந்தர் உணவு அருந்தினார். விவேகானந்தர் மனோன்மணியம் சுந்தரனாரிடம் கண்ட குறைபாடு அவர் இன உணர்வு உள்ளவராக இருக்கிறார் என்பதுதான். தம்மைத் திராவிட இனத்தவராக அவர் கருதுகிறார் என்பதுதான் அவர் மீது உள்ள குறையாக விவேகானந்தர் கண்டார்.
தான் ஹிந்து அல்ல என்றும், திராவிடன் என்றும் விவேகானந்தரிடம் பேராசிரியர் ஆணித்தரமாகக் கூறியதை K.சுந்தர்ராம ஐயர் அவர்கள் எழுதிய கட்டுரையில் குறிப்பிடுகிறார். Reminiscences of Swami Vivekananda எனும் இன்னொரு நூலிலிருந்து :
One remark of Professor Sundaram Pillai — that, as a Dravidian, he considered himself entirely outside the Hindu polity — put him somewhat out of court with the Swami, who, later on, re-marked of him that eminent as he was as a scholar, he had thoughtlessly given himself away to the sway of race prejudice, which already during his travels the Swami had noted as an un-pleasant characteristic of certain South Indian minds of the unbalanced or mediocre type. -“Reminiscences of Swami Vivekananda” -3rd edition 1983
அதுமட்டுமின்றி, சுந்தரனாரின் வீட்டில் உணவருந்திய அன்று பேசிக் கொண்டிருக்கும் போது, உங்களுடைய கோத்திரம் என்ன என்று பேராசிரியர் சுந்தரனாரிடம் விவேகானந்தர் கேட்டவுடன் அவர் ஆத்திரம் கொண்டார். ஆனால் விருந்தினரிடம் அதைக் காட்டுவது பண்பாகாது என்று அடக்கிக் கொண்டார், இதை அவரே தம் குறிப்பேட்டில் பதிவு செய்திருக்கிறார். பல நூல்களிலும் இக்கருத்து எடுத்தாளப்பட்டிருக்கிறது.
தன் குறிப்புப் புத்தகத்தில் மனோன்மணியம் சுந்தரனார் அவர்கள் இவ்வாறு பதிவு செய்கிறார்:
“உவப்போடு என்னுடன் பேசி மகிழும் உத்தம நண்பர் விவேகானந்தர் தங்கள் கோத்திரம் என்ன என்று வினா எழுப்பினார். வேறு ஒரு தினமாகில், வினாவினைக் கேட்ட நான் வெகுண்டிருப்பேன். உறவென விருந்துக்கு வந்த அந்த உயர்ந்த நண்பரிடம் நான் மெல்லிய குரலில், எனக்கும் கோத்திரத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. தன்மானம் காக்கும் தென்னாட்டில் பிறந்த திராவிட இனத்தைச் சேர்ந்தவன் நான், என ஆத்திரமின்றிக் கோத்திரக் கேள்விக்கு விடையளித்தேன்.”
தமிழணங்கைப் போற்றி பாடுகின்ற சுந்தரனார் - ‘தமிழ நல் திருநாடு’ என்று கூட பாடி இருக்கலாம். அந்தச் சொல் அவருக்குத் தெரியாததல்ல. கடந்த காலத்தில் தமிழ்நாடு என்று இலக்கியங்களில் பயின்று வந்துள்ளதை நன்றாக அவர் அறிவார். ஆனால் ஆரியத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கி, வருணத்தையும், கோத்திரத்தையும் எதிர்த்து நிற்கும் ஒரு போக்கு அப்போது முகிழ்த்திருந்த நிலையில், அந்த உணர்வோடு “ஆரியத்தை மறுக்கும் நிலப்பரப்பு” என்ற பொருளில், “ஆரியர் அல்லாத இனத்தவர் வாழும் நிலப்பரப்பு” என்னும் பொருளில், “திராவிட நல் திருநாடு” என்று அவர் குறிப்பிடுகிறார்.
இதுதான் விவேகானந்தருக்கும் கசப்பை தந்தது. பார்ப்பனிய உணர்வாளர்களுக்கும் கசப்பைத் தந்தது. இப்போதும் அந்தச் சொல் ஆரிய, பார்ப்பனிய, வர்ணாசிரம ஆதரவாளர்களுக்கும் கசப்பைத் தருகிறது.
இவை வரலாற்றுச் சுவடுகள். மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய பாடலுடன் தமிழினத்தின் விழிப்பு தொடங்கியது. ஆகவேதான் சுந்தரனாரை இதுவரை அத்தனை அறிஞர் பெருமக்களும், தமிழ்ப் புலவர்களும் போற்றிப் புகழ்ந்து இருக்கிறார்கள்.
இப்போது “திராவிட” என்ற ஒற்றைச் சொல் தங்கள் அரசியலுக்கு ஏற்க முடியாத ஒன்று என்பதற்காக, சுந்தரனாரின் பாடலில் கை வைக்க முற்படுவது என்பது அறிவுடைய செயல் அல்ல. ஒரு பாடலை அல்லது ஓர் இலக்கியத்தை நாம் படிக்கும் போது, அது எழுந்த காலம் மற்றும்அதன் வரலாற்றுப் போக்கோடு பொருத்திப் பார்த்து புரிந்து கொள்ள வேண்டும் என்பது அவசியம்.
- பேராசிரியர் த. செயராமன்