சமீபத்தில் பெங்களூருவில் ஒரு புத்தக வெளியீட்டு விழா. விழா நடந்த இடம் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம் (IIM). நடத்தியது இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனமும், ஜெர்மன் நாட்டு கொலோன் பல்கலைக்கழகமும். அந்தப் புத்தகம் இலக்கியம் சார்ந்தது அல்ல. அது இந்தியாவில் மாணவர்களை எப்படி வேலைவாய்ப்பு உலகத்திற்கு நம் கல்வி நிறுவனங்கள் தயார் செய்கின்றன என்பது பற்றிய கல்வியாளர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகள் அடங்கிய புத்தகம். அதை வெளியிட்டது ஜெர்மன் நாட்டு பதிப்பகத்தார். இதில் பதினேழு கட்டுரைகள் உள்ளன. அவைகளை எழுதியவர்கள் அனைவரும் இந்தியர்கள் அல்ல. இந்த ஆராய்ச்சி நூலை தொகுத்தவர் கொலோன் பல்கலைக்கழக பேராசிரியர் மத்தியாஸ் பில்ஸ். இந்த நூலை வெளியிட்டவர் இந்தியாவிற்கான ஜெர்மனியின் தூதர் ரோடே. இந்தியாவில் இந்தப் புத்தகத்தை ஜெர்மனி பதிப்பகத்தார் விற்கின்றபோது அதன் விலையில் பாதியை ஜெர்மன் அரசிடம் பெற்றுக் கொண்டு பாதிவிலைக்குத்தான் விற்க வேண்டும் என ஜெர்மனி அரசு அந்தப் பதிப்பகத்தார்க்கு உத்தர விட்டுள்ளது.

இந்தப் புத்தகம் இரண்டு ஆண்டிற்கு முன் ஜெர்மனியில் நடந்த ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கில் இந்தியா பற்றி வாசிக்கப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரை களின் தொகுப்பாகும். ஏன் இந்தியாவிற்கு இப்பொழுது ஒரு தனிக்கவனம் என்பதுதான் இன்றைய கேள்வி. இதைவிட மிக முக்கியமாக ஜெர்மனி ஏன் இந்தியா மீது இவ்வளவு அக்கறை காட்டுகிறது என்பதுதான்.

நம் நாட்டில் நம் மக்கள் தொகை என்பது நமக்குக் கிடைத்த வரப்பிரசாதம், அது நமக்கு பாரம் அல்ல. நம் நாட்டு இளைஞர்களின் திறனையும், ஆற்றலையும் வேலை உலகத்திற்குத் தேவையான அளவு வளர்த்து விட்டால், அது செல்வமாக மாறிவிடும் என்று மிகப் பெரிய அளவில் பேசி வருகின்றனர். ஆனால் நம் இளைஞர்களைத் தரமானக் கல்வியையும், பயிற்சியையும் தந்து திறமைவாய்ந்த பணியாளர்களாக மாற்றுவது என்பது நாம் நினைப்பதுபோல் எளிதானது அல்ல. இதிலுள்ள பிரச்சினைகளை நுணுக்கமாக ஆய்வு செய்து எழுதப் பட்ட கட்டுரைகளின் தொகுப்புதான் இந்தப் புத்தகம். இந்தப் புத்தகத்தை விமர்சனம் செய்த உலக வங்கி ஆய்வாளர் ஒரு ஆழமான கருத்தினைப் பதிவு செய்துள்ளார்.

இந்த நூலை இந்தியாவில் உள்ள ஆட்சியாளர்களும், ஆராய்ச்சியாளர்களும், அறிவுஜீவிகளும், பல்கலைக்கழகத் தலைவர்களும், கல்வியாளர்களும் கட்டாயம் படிக்க வேண்டும். ஏனென்றால் வெற்றுப் பேச்சு மாற்றத்தைக் கொண்டுவராது. ஆக்கப்பூர்வமான ஒருங்கிணைந்த செயல்பாடுகள் மட்டுமே எதிர் பார்க்கின்ற மாற்றங்களைக் கொண்டுவர முடியும். அதற்கு மத்திய மாநில அரசுகளும், கல்வி நிலையங் களும் இணைந்து போர்க்கால அடிப்படையில் செயல் பட்டால்தான் இது சாத்தியமாகும் என்பதை எடுத்துக் காட்டியுள்ளது இந்தப் புத்தகம்.

இந்திய நாட்டு இளைஞர்களை திறன்கூட்டுவது என்பது எவ்வளவு பெரிய சவால், அதில் உள்ள இடர்ப்பாடுகள் என்னென்ன இன்றைய நிலையில் இந்தியக் கல்வி எங்குள்ளது, எங்கு அது பயணிக்க வேண்டும், நம் பேச்சிற்கும் எதார்த்தத் திற்கும் உள்ள இடைவெளி எவ்வளவு என்பதை ஆதாரப் பூர்வமாக இந்தப் புத்தகம் வெளிக்கொண்டு வந்துள்ளது என்பதைப் பதிவு செய்துள்ளார்.

எனவே இந்தப் புத்தகம் நம் ஆட்சியாளர்களின் மற்றும் கல்வியாளர்களின் கண்ணைத் திறக்கும் என்று பதிவு செய்துள்ளார். ஆகையால்தான் இந்த நூலுக்கு ஜெர்மன் அரசு மானியம் வழங்கியுள்ளது.

இந்தப் புத்தகத்தை வெளியிட்டுப் பேசிய ஜெர்மன் நாட்டு இந்தியாவிற்கான தூதர் ரோடே இதைவிட முக்கியமான ஒரு கருத்தைப் பதிவு செய்தார்.

இந்திய இளைஞர்கள் இந்தியாவிற்கு மிகப்பெரிய பலம். நம் பொருளாதாரம் வளம்பெற அவர்கள் பயன் படுவார்கள். இதில் யாருக்கும் சந்தேகம் கிடையாது. அது உண்மைதான். ஆனால் அந்த விளைவினை அல்லது பலனைப் பெறுவதற்கு எவ்வளவு உழைக்க வேண்டும் என்பதை இந்திய ஆட்சியாளர்களும், கல்வி யாளர்களும் புரிந்துகொண்டு ஒரு பெரிய இயக்கம்போல் செயல்பட வேண்டும் என்ற கருத்தினைப் பதிவு செய்தார்.

அவர் கூறும்போது “இந்த இளைஞர்களின் திறனும், ஆற்றலும் தேவையான அளவிற்குக் கூட்டப் படவில்லை என்றால், அதுவே மிகப்பெரிய அச் சுறுத்தலை இந்தச் சமுதாயத்திற்கு ஏற்படுத்திவிடும்” என்பதனையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் இந்த நூலை வெளியிட்டுப் பேசியபோது இன்னும் சில முக்கியமான கருத்துக்களைப் பதிவு செய்தார். உலகத்தில் எந்தெந்த நாடுகளிலெல்லாம் இந்தத் திறன் வளர்ப்பை கல்வியில் இணைத்துச் செயல்படுத்தப்படுகின்றதோ அங்கெல்லாம் வேலை இல்லாத் திண்டாட்டம் மிகவும் குறைவாகவே உள்ளது. அது மட்டுமல்ல, உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரமும் மிகவும் நன்றாக உள்ளது. உழைக்கும் வர்க்கம் மதிக்கத்தக்க நல்ல மரியாதையுடைய விஞ்ஞானப்பூர்வ மானுட வாழ்க்கையைப் பெற்று சிறப்பாக வாழ்கின்றனர் என்று கூறினார். இந்தியாவில் திறன் இடைவெளி என்பது மிகவும் அதிகம். இந்திய மற்றும் உலகத் தேவைக்கும், இந்திய இளைஞர்களின் கல்வி நிலைக்கும் உள்ள இடைவெளி என்பது அதிகம். அதைக் குறைக்கத் தான் இந்திய அரசாங்கம் கொள்கை அளவிலும், நிதி ஒதுக்கீட்டு அளவிலும், மிகப்பெரிய உத்வேகத்துடன் செயல்பட்டு வருகின்றது. உலக நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை உருவாக்கி செயல்பட்டு வருகின்றது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இரண்டு நிலைகளில் இந்திய இளைஞர்களுக்கு உதவிடும். ஒன்று, இந்த வேலைக்கான திறன் மேம்பாட்டுக் கல்விக்கும் பயிற்சிக்கும் உதவிட மேற்கத்திய நாடுகள் உதவிடும், இந்தச் சூழலை நம் கல்விக்கழகங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இரண்டு, கல்வி பயின்ற மாணவர் களை வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்கள் பணியாட் களாக அமர்த்திடுவதற்கும் உதவிகரமாக இருக்கும். ஆனால் மத்திய அரசு எடுக்கும் இந்த முயற்சிகள் அனைத்தும் பலன் தர வேண்டும் என்றால் மாநில அரசுகளின் செயல்பாடுகள் என்பது அசுர வேகத்தில் நடைபெற வேண்டும். அது ஒரு வெறிச் செயல்பாடாக “செய் அல்லது செத்துமடி” என்ற தாரக மந்திரம்போல் நடைபெற வேண்டும்.

கல்வி நிறுவனங்கள் அனைத்தும் ஒரு மிகப்பெரிய சவாலை சமாளிக்க தயார்படுத்தப்பட வேண்டும். அந்தப் பணிக்கு இந்தப் புத்தகம் பல்வேறு செய்திகளை ஆராய்ச்சி மூலம் கொண்டு வந்துள்ளது. இந்தப் புத்தகத்தைத் தொகுத்த பேராசிரியர் தன் அறிமுக உரையில் ஒரு கேள்வியை முன் வைத்தார். இந்த நாட்டில் இன்று 500 மில்லியன் இளைஞர்களுக்கு திறன் பயிற்சியளிக்கும் மிகப்பெரிய திட்டத்தை நடைமுறைப் படுத்தும் ஒரு நாட்டில் என்னால் விரல்விட்டு எண்ணும் அளவிற்குத்தான் இந்தப் பிரச்சினை பற்றி ஆராய்ச்சி செய்யும் ஆராய்ச்சிப் பேராசிரியர்கள் இருக்கின்றார்கள். இந்திய நாட்டில் இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பில் உள்ள சவால்கள் பற்றி ஆராய்ச்சி சஞ்சிகைகளில் வரும் கட்டுரைகள் பெரும்பாலானவைகள் மேற்கத்திய நாட்டினரால் எழுதப்படுகிறது. இந்த முக்கியமான பிரச்சினைகள் பற்றி ஆய்வு இன்னும் இந்தியாவில் தீவிரப்படுத்த வேண்டும், அதிக எண்ணிக்கையில் ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வுத் திட்டங்களில் இறங்கவேண்டும் என்று கூறினார்.

இந்தியாவில் உயர்கல்வியின் வளர்ச்சி அசுர வேகத்தில் உலகம் வியக்கும் வண்ணம் உள்ளது. ஆனால் அங்கு தரம் உயர்கின்றதா என்று பார்த்தால் அது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த நிலை மாற தரமான ஆய்வுகள் இந்தியப் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களால் நடத்தப்பட வேண்டும். அதை ஊக்குவிக்கத்தான் இந்த மாதிரி நடவடிக்கைகளில் நாங்கள் இறங்கியுள்ளோம் என்று தன் கருத்தினைப் பதிவு செய்தார்.

ஒட்டுமொத்தத்தில் இந்தப் புத்தகம் இந்தியக் கல்விச் சூழலில் இந்தத் திறன் வளர்ப்பு எங்கே உள்ளது என்பதைப் படம்பிடித்துக் காட்டியுள்ளது. இந்தப் புத்தகத்தில் நானும் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை எழுதி யிருப்பதால் இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்தேன். ஒட்டுமொத்தத்தில் நம் கல்வி மாறுமா? நம் ஆட்சியாளர்கள் மாநிலத்தில் அந்தப் பார்வையையா வைத்திருக்கின்றார்கள்? என்பதுதான் இன்றைய கேள்வி.

Pin It