rajamohan.vஇந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர்களில் ஒருவராக விளங்கிய தோழர் வீ.ராஜமோகன் 30.01.2021 அன்று சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு சென்னையிலுள்ள கிண்டி கிங்ஸ் இன்ஸ்டிடியூட் கொரோனா மருத்துவமனையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மரணமடைந்தார். அவருக்கு வயது 76.

2009ஆம் ஆண்டிலிருந்து ‘ஜனசக்தி’ இதழின் பொறுப்பாசிரியர், துணை ஆசிரியர் என்ற பொறுப்புகள் வகித்து வந்தார்.

‘ஜனசக்தி’ தினசரியாக வந்த காலத்தில் தலையங்கம் எழுதுவதில் தொடங்கி, ஆங்கில இதழ்களில் வரும் அரசியல் கட்டுரைகளை மொழிபெயர்ப்பது, கட்டுரைகள் எழுதுவது எனத் தொடர்ந்து சமீபகாலமாக வாரஇதழாக வந்த பின்னர் 16 பக்கங்களிலும் பிழைத் திருத்தம் செய்வது வரை ‘ஜனசக்தி’யோடு தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார் வீ.ஆர்.

கட்சியின் சார்பில் ‘ஜனசக்தி’ பொறுப்பை நான் கவனித்துக் கொண்ட காலத்தில் துணை ஆசிரியர்களான எஸ்.சோமசுந்தரம், கவிஞர் கே.ஜீவபாரதி, மேலாளர் இளசை எஸ்.கணேசன் ஆகியோர் அன்றைய பொறுப்பாசிரியராக விளங்கிய வீ.ராஜமோகன் அவர்களுக்கு மிகவும் உறுதுணையாக விளங்கினர்.

ராமநாதபுரத்தைப் பூர்விகமாகக் கொண்டவர் வீ.ஆரின் தந்தையார் வீரபாகு தமிழக அரசின் காதி போர்டில் பணிபுரிந்தார். வீ.ஆரின் தாய்வழிப் பாட்டனார் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் எக்சைஸ் ஆபீசராகப் பணியிலிருந்தவர். புதுக்கோட்டையிலிருந்த தாய்வழித் தாத்தாவின் வீட்டில் 28.08.1944 அன்று வீ.ஆர். பிறந்தார்.

1960 ஆம் ஆண்டு அவரது தந்தை சென்னைக்கு மாற்றலாகி வந்த பின்னர் அதே ஆண்டில் சென்னை நந்தனம் அரசுக் கல்லூரியில் புகுமுக வகுப்பில் சேர்ந்தார். அதன் பின்னர் கலைக்கல்லூரியில் மாலைநேர வகுப்புகளில் சேர்ந்து பி.ஏ (பொருளாதாரம்) படித்தார்.

அச்சுத் துறையில் ஆர்வம் ஏற்பட்ட காரணத்தினால் அடையாறு சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரியில் எல்.பி.டி. என்ற பிரிண்டிங் டெக்னாலஜி டிப்ளமோ படிப்பை முடித்தார்.

இவரது பெற்றோருக்கு இவர்தான் மூத்த மகன். இவருக்குக்கீழ் ஐந்து சகோதரிகள் உள்ளனர். அத்தனை பேரையும் அரிதின் முயன்று படிக்க வைத்துள்ளார் வீ. ஆரின் தந்தை.

ஒரே அண்ணன் என்ற முறையில் சகோதரிகளின் மீது இவர் வைத்திருந்த பாசமும், அன்பும், அரவணைப்பும் - அவர்களுக்கு இவரைப் பற்றியான ஒரு புரிதலும் எண்ணி மகிழத்தக்கதாகவே இருந்துள்ளது.

தனது தாய்மாமா மகளான ஞானசவுந்தரியை 01.05.1971 அன்று திருமணம் செய்து கொண்டார் வீ.ஆர். இவர் தமிழ்நாடு அரசு கதர் வாரியத் தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்து 2006 இல் ஓய்வு பெற்றுள்ளார்.

வீ. ஆர் தம்பதியர்க்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகள் ஆர். ராதா திருமணமாகி அவரின் குடும்பத்துடன் சென்னையில் வாழ்கிறார். மகன் ஆர். வீரபாகு. தனது தந்தையின் பெயரையே மகனுக்குச் சூட்டியுள்ளார் வீ.ஆர். மகன் பி.ஏ (பொருளாதாரம்) படித்ததோடு ஆங்கிலம், தமிழ் தட்டச்சில் மேல்நிலைத் தேர்ச்சி பெற்றுள்ளார். நியூரோதேரபி படிப்பையும் முடித்துள்ளார். கராத்தேவில் பிளாக் பெல்ட் பெற்றுள்ளார்.

இத்தனை தகுதிகளும் ஆர்வமும் உள்ள வீரபாகுவுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென்று படிப்படியாக கண் பார்வை மங்கத் தொடங்கியது. மகன் வீரபாகுவுக்கு வீ.ஆர். எராளமான வைத்திய முயற்சிகளை மேற்கொண்டும் பலன் கிடைக்கவில்லை.

ஏறத்தாழ 1960 களின் தொடக்கத்திலேயே தோழர் வீ.ஆருக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்களோடு தொடர்பு ஏற்பட்டுள்ளது. கல்லூரி மாணவராக இருந்த காலத்தில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தில் இணைந்து செயல்பட்டுள்ளார்.

1968 & 1969களில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் வீ.ராஜமோகன், தியாகராயா கல்லூரி மாணவர் சீ.குணாளன், சட்டக்கல்லூரி மாணவர் மா.சுந்தரராஜன் ஆகியோர் சென்னை மாவட்ட மைய அனைத்திந்திய மாணவர் பெருமன்ற அமைப்பில் ஒரு குழுவாகச் செயல்பட்டனர்.

1969ல் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் இதழான ‘மாணவர் முழக்கம்' தொடங்கப்பட்டது. அதற்கு தா.பாண்டியன் ஆசிரியர். மே.து.ராசுகுமார் பொறுப்பாசிரியர். வீ.ராஜமோகன் துணை ஆசிரியராக இருந்தார்.

1970ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருச்சியில் நடைபெற்ற மாணவர் பெருமன்ற ஆறாவது மாநில மாநாட்டில் ‘மாணவர் முழக்கம்' சார்பில் சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. வீ.ஆர் அம்மலரை முழுமைப்படுத்தி, அச்சிட்டு, திருச்சி மாநாட்டிற்கு எடுத்துச் செல்லும் பொறுப்பை நிறைவேற்றினார்.

பல ஆண்டுகள் வீ.ஆரின் பணிமையம் சென்னை மாவட்ட கட்சி அலுவலகம்தான். அப்போது மாவட்டச் செயலாளராக விளங்கிய டி.பழனிசாமி, துணைச் செயலாளராக இருந்த பக்தவச்சலம் ஆகிய இருவருக்கும் கட்சிப் பணிகளில் முழுமையாக உடனிருந்து பணியாற்றக் கூடியவராக தோழர் வி.ஆர். விளங்கினார்.

கட்சியின் அலுவலகச் செயல்பாடுகள், மையப் படுத்தப்பட்ட கட்சிப் பணிகள் ஆகியவற்றிற்கான தொடக்க காலப் பயிற்சி நிலையமாக வீ.ஆருக்கு சென்னை மாவட்ட கட்சி அலுவலகமே விளங்கியது. பின்னர் வீ.ஆர். கட்சியின் சென்னை மாவட்ட துணைச் செயலாளராகவும், பிறகு மாவட்டச் செயலாளராகவும் திகழ்ந்தார்.

கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகப் பொறுப்பாளர், மாநிலக்குழு, மாநில நிர்வாகக்குழு, செயற்குழு உறுப்பினர் ஆகிய பொறுப்புகளிலிருந்து செயல்பட்டுள்ளார் வீ.ஆர். ‘ஜீவா முழக்கம்’ இதழ் தொடங்கப்பட்ட பிறகு தோழர் வீ.ஆர். பொறுப்பாசிரியர் தோழர் மு.பழனியப்பன் அவர்களுடன் இணைந்து இதழியல் பணிகளை மேற்கொண்டார்.

அக்கால ஜனசக்தி, மாணவர் முழக்கம், சாந்தி, ஜீவா முழக்கம் ஆகிய இதழ்களில் தொடர்ந்து முக்கிய அரசியல் கட்டுரைகளை எழுதி வந்தார். தமிழகம் முழுவதிலுமுள்ள இயக்கச் செய்திகளை ஆங்கிலப்படுத்தி ‘நியூ ஏஜ்' இதழுக்கு அனுப்பும் வேலையை பல்லாண்டுகளாகத் தன்னார்வத்துடன் செய்து வந்தார்.

மாணவப் பருவத்திலிருந்தே விரிந்த வாசிப்பாளராக விளங்கியுள்ளார் வீ.ஆர். இவரது தொடர்ந்த புத்தகங்கள் மற்றும் இதழ்கள் வாசிப்புப் பழக்கமும், அகில இந்திய மாநாடுகளில் பங்கேற்ற அனுபவமும், அடிப்படைக் கல்வியும், இவருக்கு இருந்த ஆர்வமும் இவரது ஆங்கில மொழித் தேர்ச்சிக்கு அடிப்படைகளாக இருந்துள்ளன.

1970களின் முற்பகுதியில் தோழர் வீ.ஆர்.மாஸ்கோவில் நடைபெற்ற ஓராண்டு மார்க்சிய பயிற்சி வகுப்பில் பங்கேற்று மார்க்சிய கல்வி கற்றார்.

ஏற்கெனவே மார்க்சியத்தின் அடிப்படைகளைக் கற்றிருந்த வீ.ஆருக்கு ஓராண்டு மார்க்சிய உயர் வகுப்பு அழுத்தமான அரசியல் தெளிவுபெறும் வாய்ப்பாக அமைந்தது. ‘ஐ.சி.எஃப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் ஏஐடியூசி’ என்ற இச் சங்கத்தில் கடந்த 15 ஆண்டுகளாக துணைத் தலைவர் பொறுப்பை வகித்தவாறு தொழிலாளர்களை வழிநடத்தி வந்தார் வீ.ஆர். இச்சங்கத்தில் சுமார் 600 தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். செஞ்சட்டைச் சீருடையுடன் தங்களின் தலைவருக்கு வீர

அஞ்சலி செலுத்தி விடை கொடுத்தனர் ஐ.சி.எஃப் தொழிலாளர்கள்.

 துறைமுகத் தொழிலாளர் சங்கத்திலும் தொடர்ந்து பல முக்கியப் பொறுப்புகளை வகித்துச் செயல்பட்டு வந்தார் தோழர் வீ.ஆர். துறைமுகத் தொழிலாளர்களின் ஒப்பற்ற தலைவராக விளங்கியவர் ஏ.எஸ்.கே அய்யங்கார். அவர் 1978 இல் மறைந்தார். அவர் இறப்பதற்கு சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு வீ.ஆர் தோழர் எம். கல்யாணசுந்தரம் அவர்களின் வழிகாட்டுதலின்படி துறைமுகத் தொழிலாளர்கள் சங்கத்தில் பணியாற்றி வந்தார்.

எம்.கே. மறைவுக்குப் பின்னர் சென்னை துறைமுக ஐக்கியத் தொழிலாளர் சங்கத் துணைத் தலைவராக விளங்கினார் வீ.ஆர். ரயில்வே தொழிலாளர் சங்கம் ( SRLU ), ஆவடி டேங்க் பேக்டரி தொழிலாளர் சங்கம், மின்சாரத் தொழிலாளர் சம்மேளனம் போன்ற பல தொழிலாளர் அமைப்புகளில் துணைப் பொறுப்புகளிலிருந்து செயல்பட்டிருக்கிறார்.

அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகத்தில் (AIPSO) முக்கியப் பொறுப்புகளிலிருந்து பல்லாண்டுகளாகச் செயல்பட்டு வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அகில இந்திய அளவில் எய்ப்சோவை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து வழி நடத்துவதென்று இரு கட்சித் தலைமைகளும் சேர்ந்து தீர்மானித்தன.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தோழர் பல்லப்சென் குப்தாவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தோழர் அருண்குமாரும் எய்ப்சோவின் அகில இந்திய கூட்டுத் தலைவர்களாகத் திகழ்கின்றனர். தமிழகத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தோழர் வீ. ராஜமோகன் அவர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தோழர் ஏ. ஆறுமுக நயினார் அவர்களும் எய்ப்சோவின் மாநிலப் பொதுச் செயலாளர்களாகப் பொறுப்பு வகிக்கின்றனர். 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சத்தீஷ்கர் மாநிலத் தலைநகரான ராய்ப்பூரில் நடைபெற்ற எய்ப்சோவின் அகில இந்திய மாநாட்டில் தோழர் வீ.ஆர் அவ்வமைப்பின் அகில இந்தியத் துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அக்காலத்திலேயே படிப்பும், அரசுப் பணிப் பின்புலமும் கொண்ட பிடிப்புமிக்க குடும்பத்தில் பிறந்த தோழர் வீ.ஆர். 60 ஆண்டுகால, இடையறாத, தொடர் அரசியல் முழுநேரப் பயணத்திற்குப் பின்னரும், சென்னையில் ஒரு சிறிய சொந்த வீடுகூட இல்லாத சூழலில் மறைந்துள்ள செய்தி அவரின் அப்பழுக்கற்ற நேர்மையையும், எளிமையையும் பறைசாற்றுகிறது.

எப்போதும் சிரித்த முகத்தோடு உரையாடும் வீ.ஆர். நம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி விட்டு விடைபெற்று விட்டார்.

வீ.ஆருக்கு வீர வணக்கம்!

- த.ஸ்டாலின் குணசேகரன்

Pin It