படித்துப் பாருங்களேன்...

இன்றைய தமிழ்ச் சூழலில் பெருமாள்முருகன் என்ற பெயர் பரபரப்பான ஒன்றாக இடம்பெற்றுள்ளது. கல்லூரிப் பேராசிரியரான இவர் அப்பணியுடன் நின்று விடாமல் நாவலாசிரியர், சிறுகதை ஆசிரியர், கவிஞர், ஆய்வாளர், பதிப்பாசிரியர் எனப் பன்முகத்தன்மை வாய்ந்த எழுத்தாளராக விளங்கி வருகிறார். இவரது ஐந்தாவது நாவல் ‘மாதொரு பாகன்.’ இந்நாவலைக் குறித்த திறனாய்வாக அன்றி, ஓர் அறிமுகமாக இக்கட்டுரை அமைகிறது.

perumal muruganஇன்றைய பரபரப்பான விவாதச் சூழலில் இந்நூலை வெளியிட்ட காலச்சுவடு பதிப்பகம் நாவலாசிரியரின் வேண்டுகோளுக்கிணங்கி நாவலின் விற்பனையை நிறுத்திவிட்டது. இச்சூழலில் ‘படித்துப் பாருங்களேன்’ என்ற தலைப்பில் இந்நாவலை அறிமுகப்படுத்துவது பொருத்தம்தானா? என்ற வினா எழுவது இயற்கை. ஆர்வம் மிக்க இலக்கியவாதிகள் சிலரின் முயற்சியால் இந்நாவல் வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்டு வாசிக்கக் கிடைக்கிறது என்பதே இவ்வினாவிற்கான விடையாகும்.

* * *

கடந்த கால வரலாற்றுக்குள் ஊடுருவிப் பார்த்து வரலாற்று நாவல் ஒன்றை எழுதுவது என்பது வழக்கமான ஒன்று. ஆனால் கடந்த காலத்திற்குள் பயணித்து சமூக நாவல் ஒன்றையும் எழுத முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்நாவல் அமைந்துள்ளது.

* * *

நாவலின் காலமும் களமும்

இந்திய விடுதலைக்கு முந்தைய காலமே நாவலின் கதை நிகழும் காலம். ஆடவர்கள் குடுமி வைத்திருத்தலே மரபு என்ற நிலை. கிராப்பு வைத்திருத்தல் சமூக மீறலாகக் கருதப்பட்டது. மின்சாரம் கிராமப்புறங்களில் அறிமுகமாகவில்லை. எண்ணெய் விளக்குகள் பயன் பாட்டில் இருந்தன. பெண்கள் ரவிக்கை அணிவதில்லை. கடைத்தெருவிற்குப் பதில் சந்தைகள் செல்வாக்குப் பெற்றிருந்தன. மாட்டு வண்டிப் பயணம் பரவலாக இருந்தது. இவையெல்லாம் இடம்பெற்று நாவல் நிகழும் காலத்தை உணர்த்தி நிற்கின்றன. ஓரளவு துல்லியமாகக் கூறவேண்டுமானால் தமிழ்நாட்டின் பிரதம அமைச்சராக (முதலமைச்சரின் அப்போதைய பெயர்) இராஜாஜி இருந்த காலம். இதனடிப்படையில் சென்ற நூற்றாண்டின் முப்பதுகளில் நாவலின் கதை நிகழ்ந்துள்ளது என்று கருதலாம்.

இன்றைய நாமக்கல் மாவட்டத்தின் திருச்செங் கோடும் அதன் சுற்றுப்புறக் கிராமப்புறங்களும் நாவலின் களமாக அமைந்துள்ளது.

நாவலின் கரு

காளி, பொன்னா (பொன்னாயி) இணையரின் மகப்பேறில்லாக் குறையே நாவலின் சிக்கலாகும். 16 வயது பொன்னாவை காளி மணமுடித்து பன்னிரண்டு ஆண்டுகள் கழிகின்றன. 28 வயதாகியும் பொன்னா கருவுறவில்லை. நீண்டகாலமாகக் குழந்தைப் பேறு இன்றி இருந்தமையால் கணவன் மனைவி இருவரும் எதிர்கொண்ட அவமானங்கள் மனஉளைச்சல்கள் நாவலில் விரிவாக இடம்பெறுகின்றன. இதைத் தீர்க்க பொன்னா மேற்கொண்ட வழிமுறை நாவலின் கதையை முடிவுக்கு எடுத்துச் செல்கிறது.

பொன்னாவின் அவலம்

திருமணமாகி மூன்று மாதத்தில் பொன்னாவின் வீட்டுக்கு வந்த காளி, தன் வீட்டிலிருந்து பூவரசங் கட்டை ஒன்றைக் கொண்டுவந்து நட்டான். அது ‘இலையும் தழையுமா’ வளர்ந்து பூவுடன் காயும் காட்சியளிக்கிறது. பன்னிரெண்டு ஆண்டுக்காலத்தில் அதன் வளர்ச்சியைக் கண்டு பொன்னாவின் உள்ளத்தில் ஓடும் எண்ணங்கள்:

‘பன்னிரண்டு வருசத்தில் மரம் காய்த்துச் செழிக் கிறது. இந்தப் பாழும் வயிற்றில் ஒரு புழு பூச்சிக்குக்கூட வழியில்லையே என்று யோசித்திருப்பாள். எதைப் பார்த்தாலும் தன் குறை நினைவுக்கு வந்து தொலைகிறது.’

கல்யாணமானபோது அவள் அப்பனிடம் சண்டை போட்டு மாட்டுக்கிடாரி ஒன்றைப் பிடித்து வந்தாள். அது ஏழெட்டு முறை ஈன்றுவிட்டது. அதன் வருக்கம் தொண்டுப்பட்டி நிரம்பிக் கிடக்கிறது. அந்த மாட்டைப் பார்க்கும்போதெல்லாம் கண்ணீர் தானாக வரும். ‘இந்த வாயில்லாச் சீவன் வாங்கி வந்திருக்கிற வரம் நான் வாங்கலியே’ என்று வாய்விட்டுக் கதறியும் இருக்கிறாள்.

அவள் அழுகை பொறுக்காமல் அந்த மாட்டு வர்க்கத்தையே அடியோடு ஒழித்துவிட வேண்டும் என்று அவனுக்கு வெறி வரும். ஆனால் அதன் முகத்தைப் பார்த்ததும் ‘நம்ம கஷ்டத்துக்கு இது என்ன பண்ணும், பாவம்’ என்று நெகிழ்ந்து விடுவான் (பக்.19).

இரண்டு முறை காளைக்குச் சேர்த்து சினைபிடிக்காத கிடாரிக் கன்று ஒன்று காளியிடமிருந்தது. அதை வாங்க வருகிறார் செல்லப்பக் கவுண்டர். தொழுவத்தில் வேலை செய்து கொண்டிருந்த பொன்னாவைப் பார்த்து,

‘கெரகம் சீல மாடுங்க இப்படித்தான் மாப்ள. எத்தன மொற போட்டாலும் செனையாகித் தொலைக் காது. பேசாம. மாட்ட மாத்திப்புடுங்க. நீங்க செரின்னா இன்னொரு மாட்ட ஒடனே புடுச்சாந்தலாம்.’ என்று சாடை பேசுகிறார் (பக்.21). காளியின் குடுமியை மையமாகக் கொண்டு பொன்னா செய்யும் சேட்டை களை ‘எப்போதும் அவன் குடுமிமேல் அவளுக்குப் பிரியம் அதிகம். அவிழ்த்துச் சடை போட்டு விளையாடுவாள்.

‘என்னோடத விட உனக்குத் தான் மயிரு அடம்பு மாமா’ என்பாள். ‘இதப் புடிச்சு இழுத்துத் தோள்மேல ஏற ஒரு பூங்கையில இல்லையே’ என்று முடிப்பாள் என்று கூறும் ஆசிரியர் எதையும் ‘குழந்தை யோடு முடிச்சுப்போடுவது அவளுக்கு வழக்கமாகி விட்டது’ என்கிறார் (ப.26).

காளியின் தாய்மாமனின் மகனான கதிர்வேல் என்ற சின்னப்பையன் விருந்தாளியாக வந்தவன், விளை யாட்டின் போது சக சிறுவன் மீது கல்லெறிகிறான். அவன் பதிலுக்கு, கூர்நுனிகொண்ட கல்லை எறிய அவன் மீது காயம்பட்டு இரத்தம் வடிந்தது. இது அவனாக தேடிக்கொண்ட வினை. செய்தியறிந்து ஓடிவந்த அப்பையனின் தாய்,

‘பிள்ளப் பெத்திருந்தான்னா அரும தெரியும். பையன் மண்ட ஒடஞ்சு ரத்தம் கொட்டற அளவுக்கு உட்ருக்கறா. பிள்ளப் பெத்த எந்தப் பொம்பளயாச்சும் இப்பிடி உடுவாளா?’

என்று பொரிந்து தள்ளுகிறார் (ப.56). பொட்டுப் பாட்டி என்பவள் மீது இரக்கம் கொண்டு சந்தைக்கு அவளை அழைத்துப் போகிறாள் பொன்னா. அவளோ பேச்சின் ஊடாக ‘புருசனில்லாத பொம்பளயும் பிள்ள இல்லாத சொத்தும் ஒண்ணும்பாங்க’ என்று சொலவடை கூறுகிறாள்.

பக்கத்து வீட்டுப்பெண் சரசாவின் கொழுந்தன் திருமணத்திற்குப் பெண்கள் சிலருடன் சரசா புறப் படுகிறாள். அப்போது பொன்னா சற்று தாமதமாக வந்து சேர்ந்ததும் சரசாவின் கேள்வி,

“நேரத்தோட வரச் சொல்லி அவ்வளவு சொல்லியும் இப்ப வர்ற. பிள்ள குட்டிவளச் சீவிச் சிங்காரிச்சிக் கூட்டிக்கிட்டு வர இவ்வளவு நேரமாயிருச்சா?’ (ப.62).

காளிக்கு அக்கா முறையான செல்லம்மாவின் மகள் வயதிற்கு வந்துவிட்டாள். தாய்மாமன் முறைக்காரன் என்பதால் காளி பொன்னாவுடன் சென்றான். இது தொடர்பான சடங்கில் அச்சிறுமிக்கு ஆராத்தி சுற்றி, செஞ்சோற்றை எறிந்து பொட்டு வைக்க மாமன் பொண்டாட்டிகளை அழைத்தார்கள். தன்னுடன் ஓரமாக நின்று கொண்டிருந்த பொன்னாவை ‘நீயும் போ’ என்று காளி தூண்டினான். அதன் பின் நடந்தது குறித்து,

‘முந்தானையைச் செருகிக்கொண்டு முன்னால் போய் நின்றபோது ‘நீ அந்தப் பக்கம் தள்ளியிரு’ என்ற தாய்மாமன் பெண்டாட்டி கையைப் பிடித்திழுத்துப் பின்னால் விட்டாள்.’

என்று கூறும் ஆசிரியர் ‘பிள்ளை பெறாதவள் சோறு சுற்றினால் அந்தப் பெண்ணுக்குமா குழந்தை இல்லாமல் போய்விடும்? இது கூட அமங்கலமா? காளியின் கையைப் பிடித்து வெளியே கொண்டு வந்தாள்’ என்ற சிந்தனை பொன்னாவிடம் தோன்றுவதைச் சுட்டிக் காட்டுகிறார். (ப.97)

தங்கவேல் என்பவனின் வயலில் கடலை விதைப்பு. அவன் மனைவிக்குக் கால்வலி என்பதால் ஓடிஓடி பருப்பைக் கொடுக்க முடியாது. கால்கள் ஓய, ஓடிஓடி பருப்பள்ளிக் கொடுத்து உதவினாள் பொன்னா. தங்கவேல் நிலத்தில் கடலைச்செடி நன்றாக முளைக்க வில்லை.

முளைத்தாலும் காய் அதிகம் பிடிக்கவில்லை. இதுதொடர்பாக ‘வறடி பருப்பள்ளிக்கிட்டு ஓடிஓடிக் குடுக்கறா. அவ கையால தொட்ட பருப்பு எங்கிருந்து மொளைக்கும்?’ என்று விமர்சனம் ஒலிக்கிறது. இதைக் கேள்விப்பட்ட பொன்னா.

‘நான் வேண்ணா வறடியா இருக்கலாம்; என் கை பட்டு எதும் வறண்டதில்ல. நான் வெச்ச செடி பூத்து நிக்குது. நான் நட்ட மரம் காச்சுக் கெடக்குது. நான் கொண்டாந்த கன்னுக்குட்டி பெருகி நிக்கிது, நா அடவெச்ச மொட்டு பொறிச்சுச் சிரிக்குது... எங் கைபட்டு வெளங்காததில்ல. ஈரமில்லாத காட்டுல, ஆரு பருப்பள்ளிக் குடுத்தாலும் அப்படித்தான் போவும். புருசனும் பொண்டாட்டியும் வெடிய வெடியப் போயி நின்னுக்கிட்டு மண்டிருந்தா ஈரம்பட்டு மொளச்சிருக்குமோ என்னமோ’ என்று குமுறுகிறாள் (ப.99)

மாட்டுவண்டிப் பயணத்தின் போது கன்னாயா என்ற பெண்ணின் கைக்குழந்தை ஆய்போக அதன் ஈரம் பொன்னாவின் மடியில் படிந்து புடவையை நனைத்தது. இதுகுறித்து ‘கொடலப் பொரட்டறாப்ல இப்படி நாறுது’ என்ற பொன்னாவின் கூற்றுக்கு எதிர்வினையாக

‘பீன்னா நாறத்தான் செய்யும். எங்கொழந்த பீதான் நாறுதா? உங்க பீயெல்லாம் மணக்குமா? கொழந்த பெத்து வளத்திருந்தா அரும தெரியும். என்னமோ நாறுது நாறுதுன்னு மொழங்குற?’ என்ற கன்னாயாவின் கூற்று பொன்னாவிடம் விசும்பலைத் தோற்றுவித்தது (ப.131).

காளியின் அவலம்

பொன்னா மட்டுமே இத்தகைய அவலங்களை அனுபவிக்கவில்லை. தன் பங்கிற்கு காளியும் இது போன்ற குத்தல்களை அனுபவிக்கத்தான் செய்தான். கோயிலாட்டம் பழகும்போது சரிவர ஆடாத முருகேசனை காளி விமர்சித்தபோது பாலியல் தன்மை யுடன் கூடிய உடல்மொழியுடன் அவன் ஆற்றிய எதிர்வினை ஆண்மையற்றவன் என்று காளியைச் சித்திரிக்கின்றது. (ப.74).

இத்தகைய கருத்து ஊர் இளைஞர்களிடம் பரவத் தொடங்குகிறது. ‘கொஞ்சம் முயற்சி செய்து அழைத்தால் அவள் வந்துவிடுவாள் என்று நினைத்தார்கள்’ (பக்.88-89). இதில் பனங்காட்டு காளி என்பவன் முன்னாடி நின்றான். ஒரு கட்டத்திற்கு மேல் இதை பொறுக்கமுடியாத நிலையில்,

‘எனக்கு ஒரு பிள்ள இல்லீன்னுதான எல்லாரும் இப்பிடிப் பாக்கறாங்க. எனக்கு அந்த கொடுப்பின வாச்சுதுன்னா இந்தக் கேவலம் வருமா? முட்டுச் சந்துல நிக்கற கல்லுன்னு என்ன நெனச்சு எந்த நாய் வேண்ணாலும் வந்து மோண்டுட்டுப் போலாம்னு நெனைக்குதுவ மாமா’ என்று அழுதாள். (ப.89)

அவலம் போக்கும் முயற்சி

இத்தகைய அவமானங்களிலிருந்து விடுபடும் வகையில் குழந்தைப் பேறு வாய்க்குமா என்பதை அறிய கிளி ஜோசியம், கோடு பார்த்தல், கூழாங்கல், கொட்ட முத்து போட்டுப்பார்த்தல் என அலைந்தனர். அனை வரும் நல்லபலன் கூறினாலும் குழந்தைப் பேறு என்னவோ! கிட்டவில்லை. திருச்செங்கோட்டின் அறுபதாம்படி முருகனுக்கு அறுபது படிகளிலும் எண்ணெய் விளக்குகளை ஏற்றுகிறார்கள். முருகனுக்கு எண்ணெய் நீராட்டுச் செய்கிறார்கள். மலைமீதுள்ள வனபாவாத்தா கோவிலை வழிபடுகின்றனர். மலை உச்சியிலுள்ள பாண்டிஸ்வரர் கோவிலில் உயிரைப் பணயம் வைத்து வறடிக் கல்லைச் (மலடிக்கல்) சுற்றுகிறார்கள். (பக்.50-51)

வயிற்றிலுள்ள புழு இறந்து போனால் மகப்பேறு கிட்டும் என்ற நம்பிக்கையில் வேப்பிலையை அரைத் தெடுத்த சாறைக் குடிக்கிறாள் பொன்னா. இவ்வளவு செய்யினும் பயன் கிடைக்கவில்லை.

சாமி கொடுத்த பிள்ளை

பன்னிரண்டு வருட காலமாக பிள்ளைவரம் வேண்டி பொன்னாவும் காளியும் மேற்கொண்ட முயற்சிகள் எவையும் வெற்றிபெறாத நிலையில் தொல் சமயச் சடங்கினை நோக்கி நாவல் நகர்கிறது.

இது குறித்து நாவலின் முன்னுரையிலேயே:

“சுற்று வட்டார ஊர்களில் ‘சாமிகுடுத்த பிள்ளை’ என்றும் ‘சாமி கொழந்த’ என்று குறிப்பிட்டுச் சொல்லப் படுபவர் பலருண்டு. அவர்கள் எல்லாம் சாமியிடம் வேண்டிப் பிறந்தவர்கள் என்பது நம்பிக்கை எனக் கருதியிருந்தேன். ஆனால் கோயில் திருவிழாவுக்கும் சாமி குழந்தைக்கும் இருக்கும் தொடர்பை எதேச்சையாகக் கண்டறிந்தேன்” (ப.10) என்று பூடகமாகச் சொல்லியுள்ளார் நாவல் ஆசிரியர்.

வரைமுறையற்ற ‘பாலுறவு (Promiscuity) என்று மானுடவியலாளர் குறிப்பிடும் நிகழ்வு மிகவும் தொன்மையான ஒன்று. மனித சமூக வளர்ச்சி என்பது ஒரு சமூகத்தில் வாழும் மனிதர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக்கொண்டு தொடக்கத்திலிருந்தது. இதனால் மானுடச் செழிப்பை மையமாகக் கொண்ட சடங்குகளும் விதிமுறைகளும் உருவாயின. பாலியல் உறவு தொடர்பான இறுக்கமான விதிமுறைகளுக்கு இடையில் நெகிழ்ச்சியான விதிமுறைகளும் வழக்கில் இருந்தன. தொழில்நுட்ப அறிவு வளர்ச்சி பெறாத சமூகங்களில் மானுடச் செழிப்பின் வெளிப்பாடாகவே குழந்தைப்பேறு அமைந்தது. சான்றாக மனுதரும சாஸ்திரத்தில் இடம்பெற்றுள்ள பின்வரும் ஸ்லோகங் களைக் குறிப்பிடலாம். நெகிழ்ச்சியான பாலுறவில் பிறக்கும் குழந்தை யாருக்கு உரிமையானது என்பது குறித்து மனுதர்ம சாஸ்திரம் பின்வருமாறு தீர்ப்பளிக் கிறது.

‘எப்படியென்றால், ஒருவனுடைய பசு, குதிரை, ஒட்டகம், தாசி, எருமை, ஆடு முதலியவற்றை மற்றொருவன் தனது பொலி மிருகங்கள் முதலிய வற்றைக் கொண்டு பொலிந்தாலும், அதனால் பிறந்தவை எப்படிப் பொலிந்தவனுக்குடைமை யாகாதோ அது போன்ற பிறன் மனையிடமாகப் பிறந்ததும், சொந்தமாகாது. (இயல்-9: ஸ்லோகம் - 48)

‘தன்னிடத்தில் விதையிருக்கிறதென்பதனால் பிறன் நிலத்திற் சென்று ஒருவன் விதைத்துவிட்டால் அதன் விளைவு எதையும் விதைத்தவன் அடை கிறான் என்பது யாண்டுங் கிடையாது’ (இயல் - 9: ஸ்லோகம் - 49)

‘ஒருவனுடைய பசுவை மற்றவனுடைய பொலி காளையைக் கொண்டு நூறு கன்றுகளை உண்டாக்கினாலும், கன்றுகளும் பசுவின் சொந்தக் காரனுக்கன்றி, பொலிகாளையின் எஜமானுக்குச் சேராது. அவனுக்கு வீண் வீர்ய விரயம்தான் மிச்சம்.’ (இயல் - 9: ஸ்லோகம் - 50)

மேலும் தகாபுணர்ச்சிக்கான ((incest) தேவை குறித்தும் மனுதர்ம சாஸ்திரம் பின்வருமாறு வரை யறுக்கிறது.

‘சந்ததியின்றிக் குலமே முடிவடையுமானால், அப்போது ஒரு பெண், தனது கணவன், மாமனார் முதலியோரின் ஒப்புதலின் மேல் தனது மைத்துனன் அல்லது கணவனுக்கு ஏழு தலைமுறைக்குட்பட்ட பங்காளி இவர்களுடன் மேற்சொல்லியிருக்கும் விதி முறைப்படி கூடியிருந்து குலத்தின் வளர்ச்சியை முன்னிட்டுத் தக்க பிள்ளையைப் பெறலாம் (இயல் 9: ஸ்லோகம் - 59)

தொழில்நுட்ப அறிவும் உற்பத்திக் கருவிகளும் வளர்ச்சி பெறாத பண்டைய சமூக அமைப்பில் மனித ஆற்றல் அதிகளவில் தேவைப்பட்டது. போர்களும், இயற்கைச் சீற்றங்களும், தொற்றுநோய்களும் மனித சமூக வளர்ச்சிக்குத் தடையாக அமைந்தன. இக்காரணங் களால் மானுடச் செழிப்பு முக்கியத்துவம் பெற்றிருந்தது.

மனித இனப்பெருக்கத்திற்கு உதவும் வகையிலேயே மேற்கூறிய மனுநீதி ஸ்லோகங்கள் உருவாகியுள்ளன. ஒருபுறம் குடும்பம் என்ற அமைப்பு உருவாகி பாலியல் உறவுமுறைகளும் வரைமுறைகளும் வகுக்கப்பட்டன. மற்றொரு பக்கம் இம்முறைக்குப் புறனடை போன்று மேற்கூறிய விதிமுறைகளும் உருவாயின. மனித சமூகம் முழுவதுமே ஏதோ ஒரு காலகட்டத்தில் ‘ஆடையின்றி வாடையில் மெலிந்து’ வாடியது போன்றே இத்தகைய உறவுகளைக் கடந்துள்ளது என்பது மானுடவியல் அறிவுத்துறை கூறும் உண்மை. கடந்த காலத்தின் எச்சமாக இன்றும் கூட சில உறவுச் சொற்களும் வசவுச் சொற்களும் வாய்மொழிப் பாடல்களும் புராணக் கதைகளும் வழக்கில் உள்ளன. இச்செய்திகளின் பின்புறத்தில், மாதொரு பாகன் நாவலின் இறுதிப் பகுதியில் இடம்பெறும் திருச்செங்கோட்டுக் கோவிலில் நிகழும் தேரோட்ட விழாவில் பதினான்காம் நாள் விழாவினைக் காணவேண்டும்.

காளி - பொன்னாவின் உறவின் விரிசலை உருவாக்கியதுடன் நாவலின் முடிவுக்கு வாசகனை அழைத்துச் செல்வதில் இத்திருவிழா முக்கியப் பங்கு வகிக்கிறது. பொன்னாவின் ஆத்தாவிற்கும் காளியின் ஆத்தாவிற்கும் பொன்னா குழந்தைப் பேறு அடை வதற்கான வழியாக இத்திருவிழா பட்டது. இரு அம்மாக் களும் கலந்து எடுத்த முடிவை காளியிடம் அவன் தாய் கூறிச்செல்கிறாள். (ப.85) இதன்பின் ‘பொழுது விடிந்த போது சிவந்திருந்த கண்கள் அதன்பின் நிரந்தரமாயின’ என்கிறார் ஆசிரியர் (ப.85).

அவன் மனநிலைக் குறித்து, ‘அவனோடு கலந்த உடம்பு. அவன் வாசத்தைப் பத்தாண்டுகளாகச் சேர்த்துக் கொண்டிருக்கும் உடம்பு. அதன் ஒவ்வொரு துளியும் தனக்கே சொந்தம் என்று நினைத்தான். இன்னொரு வாசம் அதிலேறினால் களங்கம்தான். களங்கத்தின்மேல் தன் கை படாது என்று மனதில் உறுதியாகச் சொல்லிக்கொண் டான். எல்லா ஆண்களும் சாமிதான். இந்தக் காளியின் உடலிலும் அந்தச் சாமி வந்து குடி கொள்ளட்டும். அவள் மேல் அவனுக்கு நம்பிக்கை இருந்தது’ என்கிறார் (ப.88).

இத்தகைய மனநிலையைத்தான் பொன்னாவிடம் அவன் எதிர்பார்த்தான். இரவில் அவளைத் தழுவிய வாறே அவளைக் கேட்ட கேள்வியும் அவள் அளித்த பதிலும் இரு நல்ல உள்ளங்களுக்கு இடையேயான முரணை வெளிப்படுத்துகின்றன.

‘உங்கம்மா எங்கம்மால்லாம் சொல்றாப்பல நீ சாமி மலையேர்றன்னிக்குப் போறியா’ என்றான். அவள் சொல்வதைக் கேட்க மனம் துடித்தது. அவளும் காது களில் கிசுகிசுத்தாள். ‘இந்தக் கொழந்தச் சனியனுக்காக நீ போன்னு சொன்னாப் போறேன்’ என்றாள்.

அவன் அணைப்பிறுக்கம் தளர்ந்தது. எதிர்பார்த்த பதில் இது இல்லை. அவளை விட்டு ஒதுங்கினான். கல்யாணத்திற்கு முன் அவன் போன விசயத்திற்குப் பழி வாங்கும்படி ஒரு பேச்சுக்கு இப்படிச் சொல்லி யிருப்பாளோ என்று ஒரு கணம் தோன்றியது. வானம் பார்த்துக் கட்டிலில் மல்லாந்தான். அவன் எதிர்பார்த்த பதிலைத் தான் சொல்லவில்லை என்று அவளுக்குப் புரிந்தது. பதற்றத்தோடு ஓடி அவன் மேல் பரவி கன்னம் இழையச் சமாதான வார்த்தைகளை அவள் தேடினாள். சமாதான வார்த்தைகளைப் பயன்படுத்துவதில்தான் இந்த உறவே அடக்கம்.

‘மாமா... கொழந்தைக்காவ நீ சொல்றியோன்னு நெனச்சன் மாமா. உனக்குப் பிரியம் இல்லாத எதையாச்சும் நான் செய்வனா? நீதானே மாமா எனக்கு எல்லாம். ஊரு ஓறவும் எல்லாம் சொல்லியும் ரண்டாங் கலியாணம் வேண்டாம்னு இருக்கறியே. அதனால நீ சொன்னாச் செய் றன்னன். கோவிச்சுக்காத மாமா’ என்று குழைந்து பேசினாள். (ப.95)

பொன்னாவின் அண்ணன் முத்துவிடம் ‘என்ன பெரியவங்க மசுத்தராங்க. பெத்த பிள்ளயக் கூட்டிக் குடுக்கத் திட்டம் போட்டுட்டு அதையும் வெக்க மில்லாம எங்கிட்ட வந்து சொல்றாங்க. பெரியவங் களாம் பெரியவங்க’

‘நீ சொல்லு. உனக்குப் பிள்ள இல்லாத இருந்தா உம் பொண்டாட்டியக் கண்டவனோட அனுப்புவியா?’ என்று குமுறுகிறான் காளி (ப.117).

இக்குமுறலில் அவனது தீண்டாமை உணர்வும் வெளிப்படுவதைக் காண்கிறோம் (ப.118).

ஆனால் தாய் என்ற தகுதியைத் தன் தங்கை அடையவேண்டும் என்பதிலேயே குறியாய் இருந்த முத்து,

‘மாப்ள எல்லாத்துக்கும் செரின்னுட்டாரு பொன்னா. சாமி காரியம்னு எடுத்துச் சொல்லி ஒத்துக்க வெச்சிட்டன். அவருக்கு உம்மேல அத்தன பிரியம் போ’ (ப.119)

என்று பொய்கூறி தன் வீட்டிற்குப் புறப்படும்படி கூறுகின்றான். முத்துவின் பொய்யை அறியாத பொன்னா தாயுடன் புறப்படுகிறாள். பின்னர் அங்கிருந்து திருச்செங்கோடு பயணமாகின்றனர்.

திருவிழாக் கூட்டத்தில் அவள் கைபற்றி அழைத்துச் சென்ற இளைஞன் உடன் இணைகின்றாள். இந்நிகழ்வை (ப.180) மிகச் சுருக்கமாக எவ்வித விரசமு மின்றி ஆசிரியர் பதிவு செய்துள்ளார். (சாண்டில்யன், சுஜாதா பாணியிலான வருணனைக்குள் நுழையவில்லை). வறடி, மலடி என்ற பட்டங்களுடன் பொன்னா அனு பவித்த வேதனைகளை அறிந்த நமக்கு அவளின் இச்செயல் குறித்து வெறுப்போ கோபமோ ஏற்படாது அனுதாப உணர்வு ஏற்படும்படி ஆசிரியர் செய்துள்ளார். திருவிழாவிற்கு பொன்னா வந்ததற்கு காளியின் அவலம் குறித்த சிந்தனையும் ஒரு காரணம். திருச்செங்கோடு நெருங்கும்போது வண்டியில் இருந்தவாறே,

“என் புருசனுக்கு மனப்பூர்வமான சம்மதம் இல்லை, என் அண்ணனுக்காக ஒத்துக் கொண் டிருக்கிறான். உன்னைப் போல அவனும் என்னைத் தன் உடம்பிலேயே வைத்துக்கொள்ள விரும்பு கிறவன். பிய்த்தெடுத்து வேறொருவருக்குக் கொடுக்க அவன் ஒருபோதும் விரும்பமாட்டான். எனினும் நான் உன்னைத் தேடி வருகிறேன். நான்கு பேருக்கு முன்னால் அவன் தலை நிமிர்ந்து நிற்கட்டும். தொண்டுப் பட்டிக்குள் அடங்கிக் கிடக்கும் அவன் துள்ளல்கள் திரும்பட்டும். அவன் அணைப்பில் முன்னிருந்த காதல் பெருகட்டும். எல்லாரையும் போல நாங்களும் எங்கும் போகவும் எதிலும் கலக்கவும் நீதான் உதவ வேண்டும். அப்பனே செங்கோட்டையா... அம்மையே பாவாத்தா...”

என்ற அவளது வேண்டுதல். அவளது பயணத்தின் நோக்கத்தையும் காளி மீது அவள் கொண்டுள்ள மட்டற்ற அன்பையும் வெளிப்படுத்தி நிற்கிறது.

* * *

காளியை தன்னுடன் இறுக்கிவைத்துக் கொள் வதற்காக தென்னங்கள் குடிக்க அழைத்துச் செல்கிறான் முத்து. கள் அருந்திய காளி, போதை உணர்விலும்

கூட பொன்னாவை மறக்காது அவளைக் காண மாமனார் வீடு வருகிறான். வீடு பூட்டியிருந்ததைக் கண்டதும் நடந்ததை யூகித்துக் கொள்கிறான். அங்கிருந்து தன் வீட்டிற்குத் திரும்புகிறான்.

நாவலின் முடிவு

நாவலின் தொடக்கத்தில் பொன்னாவின் வீட்டில் அவன் வைத்த பூவரசமரம் இடம்பெறுகிறது. நாவலின் இறுதியில் அவன் வீட்டு பூவரச மரம் இடம்பெறுகிறது. இதுகுறித்து நாவலின் இறுதிப்பகுதியில் இடம்பெறும் பகுதிகள்:

‘நீ தவிச்சுக் கெட்கோனும்டி. ஏமாத்திட்டயேடி தேவ்டியா முண்ட... அப்படியே கீழே சாய்ந்தான். போரிலிருந்து சோளத்தட்டு உருவிக் கட்டிக் கொண்டு வந்து போட்ட கயிறு முதுகில் அழுந்தியது. மேலே பார்த்தான். பூவரசங் கிளைகள் வானில் விரிந்து பரவியிருந்தன. (ப.190)

பொன்னாவின் மீது கொண்ட ஆத்திரத்தால் அவளைப் பழிவாங்குவதாகக் கருதி பூவரச மரக் கிளையில் தூக்கிட்டு தற்கொலை செய்து விடுவானோ என்ற எண்ணத்தை வாசகனிடம் தோற்றுவித்து நாவல் முடிவடைகிறது.

* * *

வேளாண் குடும்பம் ஒன்றின் கலகலப்பான வாழ்வை மையமாகக் கொண்ட இந்நாவலின் சோக முடிவுக்கு காரணமாக அமைவது குழந்தைப்பேறு இன்மைதான். குழந்தைப்பேறு என்பது சொத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது என்பதை ஆங்காங்கே பாத்திரங்களின் உரையாடல் வாயிலாக நாவலாசிரியர் சுட்டிக் காட்டுகின்றார். காளியின் சொத்து தமக்குக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உறவினரிடம் மட்டு மன்றி அண்டை வீட்டாரிடமும் இடம்பெற்றுள்ளது.

எதிர்நிலைப் பண்புடன் கூடிய சிறுபாத்திரங்கள் நாவலில் ஆங்காங்கே இடம் பெற்றாலும் எவையும் எதிர்நிலைப் பாத்திரங்கள் அல்ல. குழந்தைப்பேறு வாய்க்காத கணவன் மனைவிமீது ஏவப்படும் வன்முறைத் தன்மை கொண்ட சொல்லாடல்களும், குழந்தைப் பேற்றைச் சொத்துடன் இணைத்து நோக்கும் நில வுடைமைப் பண்பாடும் எதிர்நிலைப் பாத்திரத்தின் இடத்தை வகிக்கின்றன.

இதுவே திருவிழாவிற்குப் பொன்னாவை அனுப்பும் முடிவை பொன்னாவின் தாயையும் மாமியாரையும் எடுக்கத் தூண்டியுள்ளது. இம்முடிவை நிறைவேற்றும் துணைக் கருவியாக அவள் அண்ணன் முத்துவை மாற்றியது. இம்முடிவுக்கு உடன்படும்படி பொன்னாவைத் தூண்டியது.

* * *

ஒரு மூடைக் கொட்டைமுத்துவிற்காக பொய்யான சத்தியம் செய்த நாச்சமுத்து கவுண்டரும் நிலவுடைமை மரபு தொடர்பாகக் கலகம் எழுப்பும் நல்லான் சித்தப்பாவும், பாலியல் தன்மை கொண்ட அவரின் பகடிப் பேச்சுக்களும் வேளாண் சமூக வாழ்வின் ஒரு பகுதியைச் சுட்டுகின்றன. வனவாசிகளின் சாபம், வனப்பாவத்தா வழிபாடு என்பன மரபுசார்ந்த வாய்மொழிப் புராணங்களைக் கொண்டுள்ளன.

திருவிழாவில் நிகழும் கூத்தில் இடம்பெறும் கோமாளியின் வசனங்களும், திருவிழா குறித்தும் அதில் பங்கேற்கும் மக்கள் கூட்டம் குறித்தும் நாவலில் இடம் பெறும் வருணனைகளும் நுணுக்கமான பதிவுகளாகும்.

* * *

இந்நாவலின் தொடர்ச்சி போன்று கருதும் வகையில் இரு நாவல்களை நாவலாசிரியர் படைத் துள்ளார். காளி தற்கொலை செய்துகொண்டான்

என்ற முடிவைக் கொண்டு ‘ஆலவாயன்’ (2014) என்ற நாவலையும், தற்கொலை முயற்சியிலிருந்து காளி காப்பாற்றப்பட்டதையும் அதன் பின்னர் அவன் வாழ்வு குறித்தும் ‘அர்த்தநாரி’ (2014) என்ற நாவலையும் பெருமாள்முருகன் எழுதியுள்ளார். இவ்விரு நாவல் களையும் மாதொரு பாகன் நாவலின் தொடர்ச்சியாகவும் கொள்ளலாம். தனித்தனி நாவல்களாகவும் கொள்ளலாம். இவ்விரு நாவல்களில் இடம்பெற்றுள்ள ஒரு செய்தி, பொன்னா கருவுற்று ஆண்குழந்தைக்குத் தாயானது.

நன்றி: இந்நாவலில் இடம்பெறும் கொங்கு வட்டாரச் சொற்களைப் புரிந்துகொள்ள உதவிய தோழர் என். பெரியசாமி (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெருந்துறை) அவர்களுக்கு நன்றி.

Pin It