அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 'விமன் ஹிஸ்டரி மன்த்' என்று கடைபிடித்து வருவதாக இந்நூலின் பதிப்புரையில் குறிப்பிடும் ரவிக்குமார், அதன் தாக்கத்தால் அவரது மணற்கேணி இதழ் சார்பில் பெண் வரலாற்றறிஞர்கள் குறித்த ஆய்வரங்கை நடத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார். அவர் நடத்திய ஆய்வரங்கில் படிக்கப்பட்ட அய்ந்து கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.

இக்கட்டுரைகளைத் தொகுத்துப் பதிப்பித்துள்ள தேன்மொழி நல்லதொரு தொகுப்புரையும் எழுதியுள்ளார்.

5 womens 450திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பேராசிரியர் ராஜேந்திரன்* ‘சி.மீனாட்சி: தமிழ் நாட்டின் முதல் பெண் தொல்லியல் அறிஞர்’ என்ற கட்டுரையில், ‘பல்லவர் கால சமூக வாழ்க்கையும் நிர்வாகமும்’ என்ற நூலின் ஆசிரியரான சி. மீனாட்சி குறித்து அறிமுகம் செய்துள்ளார். இந்நூல் மட்டுமின்றி ‘வைகுண்டப் பெருமாள் கோவில்’, ‘கைலாச நாதர் கோவில்’, ‘தென் இந்தியாவில் புத்தமதம்’ ஆகிய மூன்று ஆங்கில நூல்களையும் அவர் எழுதி யுள்ளார். தமிழகத்தில் பௌத்தம் குறித்து முதலில் ஆய்வு செய்தவர் சி. மீனாட்சிதான் என்று கூறும் கட்டுரை ஆசிரியர், மன்னார்குடியில் பௌத்த மையம் இருந்தது என்ற செய்தியை அவர் வெளிப்படுத்தி உள்ளதாகவும் குறிப்பிடுகிறார். அவரது முனைவர் பட்ட ஆய்வேடே அவருக்கு வேலை வாங்கித் தந்துள்ளதாம். பல்லவர் காலம் குறித்த அவரது ஆய்வேட்டில் இசை குறித்த ஓர் இயல் எழுதியுள்ளார். மகேந்திரவர்மப் பல்லவன் ‘சங்கீரண ஜாதி’ என்றழைக்கப்பட்டான். இது அவனது சாதியைக் குறிக்கிறது என்பது கோபிநாத் ராவ், கிருஷ்ணசாஸ்திரி ஆகியோரின் கருத்தாகும். ஆனால் மீனாட்சி இதை மறுத்து, மன்னர்களின் பட்டப் பெயர்கள் திறமை சார்ந்ததே அன்றி சாதி சார்ந்தது அல்ல என்று கூறிவிட்டு ‘இசையில் மொத்தம் அய்ந்து ஜாதிகள் உண்டென்றும், அதில் அய்ந்தாவதாக இடம்பெறும் ஜாதியே ‘சங்கீரணஜாதி’ என்றும் கூறியுள்ளார். மேலும் இவ் அய்ந்தாவது ஜாதி மகேந்திரவர்ம பல்லவனின் காலத்திற்குப் பின் உருவாகியுள்ளதால் இவனே இதை உருவாக்கி இருக்கலாம் என்றும் கருதுகிறார். கலைமகள் இதழில் அவர் எழுதிய கட்டுரையில்,

“இந்த சமுதாயம் ஆண்களுடைய சமுதாயம். உடல் வலிமையில் ஆண்கள் பெண்களைக் காட்டிலும் அதிகமாக இருக்கலாம். ஆனால் மனவலிமை என்று பார்க்கும்போது பெண்கள் அவர்களுக்கு இணையானவர்கள். அதுமட்டு மல்ல, வேலை பார்ப்பதற்கும் படிப்பதற்கும் அவர்கள் துணியும்போது அவர்களுக்கு இந்த சமுதாயம் எந்த வகையிலும் நன்மை செய்வதோ உதவுவதோ கிடையாது.”

என்று வருந்தி எழுதியுள்ளதையும் எடுத்துக் காட்டி யுள்ளார். அவரது முனைவர் பட்ட ஆய்வேட்டில் இருந்து ‘பல்லவர்கால ஓவியங்கள்’ என்று பகுதியை, தொகுப்பாசிரியர் தேன்மொழி மொழிபெயர்த்துத் தந்துள்ளார்.

***

இத்தொகுப்பு நூலுக்குப் பதிப்புரை எழுதி யுள்ள ‘மணற்கேணி’ ஆசிரியர் ரவிக்குமார்,

‘தர்மா குமார்: ஒரு அபூர்வமான பொருளாதார வரலாற்றறிஞர்' என்ற தலைப்பில் ‘தென் இந்தியாவில் நிலமும் சாதியும்’ என்ற ஆய்வு நூலின் ஆசிரியர் தர்மாகுமாரை அறிமுகம் செய்துள்ளார். கட்டுரையின் தொடக்கத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கருத்தியலாளர்களில் ஒருவரான தரம்பாலை, கோவை ஞானி, நாகராசன் ஆகியோர் பாராட்டியதை விமர்சிக்கும் கட்டுரையாசிரியர், ‘வலதுசாரி மார்க்சியர்கள்’ என்ற கலைச்சொல்லை உருவாக்கி யுள்ளார். மார்க்சியர்கள் இடதுசாரிகளாகத் தானே இருப்பார்கள்! ஒருவேளை மாரீச மார்க்சியவாதிகள் சிலர் இவர்களுடன் கொண்டிருந்த நெருக்கமான உறவு இவ்வாறு நினைக்கத் தூண்டியிருக்கலாம்.

தரம்பாலின் தாக்கத்திற்கு உட்படாது, தன் ஆய்வுக்களமாக, செங்கற்பட்டு மாவட்டத்தைக் கொண்டிருந்த தர்மா குமார், தன் ஆய்வேட்டில்

1) காலனி ஆட்சிக் காலத்திற்கு முன்பு, நில உடைமை எப்படி இருந்தது, 2) யாரிடத்திலே நிலம் இருந்தது, 3) நிலத்தோடு தீண்டாத மக்களுக்கு என்ன உறவு இருந்தது, 4) அந்த நிலம் யாரிடம் இருந்தது,

5) அவர்களிடம் இருந்த அதிகாரம் என்னவாக இருந்தது என்பனவற்றையெல்லாம் விவாதிப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். ‘அடித்தட்டு மக்களிடத்திலே காலனிய ஆட்சிக்கு முந்தைய காலத்தில் இருந்த நிலம் காலனி ஆட்சிக் காலத்திலே குறைந்து போனது’ என்ற உண்மையை ‘அவரது நூல் வாயிலாகப் புரிந்து கொள்ள முடிந்தது’ என்கிறார்.

அதே நேரத்தில் நில உடைமை எவ்வளவு குறைவாக இருந்தாலும் அவர்கள் இயங்கும் வெளி பரந்திருந்ததாகவும், அதனால் அவர்களது இயக்கமும் அதிகாரமும் கூடியதாகவும் தர்மா குமார் கூறுவதை விரிவாக எடுத்துக்காட்டுகிறார்.

1990-களிலே பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்குப் பின், தர்மா குமார் அதை எதிர்த்து முன்வைத்த விவாதங்களையும், இடதுசாரி வரலாற்று அறிஞர்கள் முன்வைத்த விவாதங்களையும், ஆர்.எஸ்.எஸ். தரப்பினர் முன்வைத்த விவாதங்களையும் ஒப்பிட்டு ஆராயும் ரவிக்குமார் ‘மதவாதத்துக்கு எதிராக காந்தியை நிறுத்துவது மிகவும் பலவீனமான யுக்தி’ என்கிறார். இடதுசாரி வரலாற்றாசிரியர்களும், பொதுவான மதச்சார்பற்ற வரலாற்றாசிரியர்களும் தொடர்ந்து விவாதிக்க வேண்டிய கருத்துக்கள் இவை. இறுதியாக ‘இந்துத்துவத்தின் அடுத்த அலை வீசிக்கொண்டிருக்கிற நேரத்திலே அதுவும் பேரலையாக வீசிக்கொண்டிருக்கிற இந்த நேரத்திலே தர்மா குமாருடைய படைப்புகள், இங்கிருக்கிற சாதி அமைப்பையும், நில உடைமையையும் புரிந்து கொள்வதற்கு மட்டுமல்ல, இந்துத்துவத்தைப் புரிந்துகொள்வதற்கும் அதை எதிர்ப்பதற்கும் மிக முக்கியமான அறிவு ஆயுதங்களாக இருக்கும்’ என்று கூறி முடிக்கிறார் ரவிக்குமார்.

அடுத்து, தர்மா குமாரின் ‘தென்இந்தியாவில் நிலமும் சாதியும்’ என்ற நூலில் இருந்து ஒருபகுதியை ‘கிராமப்புற அடிமைத்தனத்தின் வடிவங்கள்Õ என்ற தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார்.

***

மூன்றாவது கட்டுரை ‘ரொமிலா தாப்பர்: ஆரிய இனக் கோட்பாட்டை நிராகரித்தவர்' என்ற தலைப்பில் கோ.ரகுபதி எழுதியது. இத்தலைப்பு தொடர்பான கருத்துக்களை ரொமிலா தாப்பரின் ‘பாஸ்ட் அண்ட் பிரிஜுடைஸ்’ என்ற நூலை முன்வைத்து விவாதிக் கிறார். 1972-ஆம் ஆண்டில் வல்லபாய் பட்டேல் நினைவுச் சொற்பொழிவாக அவர் வானொலியில் ஆற்றிய உரையின் எழுத்துவடிவமே இந்நூல்.

ஆரியக் கோட்பாட்டை இந்நூலில் ரொமிலா தாப்பர் கேள்விக்குள்ளாக்குகிறார் என்று கூறும் ஆசிரியர் இது தொடர்பாகக் கூறும் செய்திகள் வருமாறு:

பொருளாதார ஆதிக்கத்தை இந்தியாவில் நிலைநிறுத்திய ஆங்கிலக் காலனியம் அதை நீடிக்கச் செய்ய, பண்பாட்டு ஆதிக்கத்தை நிலைநிறுத்த விரும்பியது. இதை நிலைநிறுத்த இந்தியாவின் வரலாற்றை எழுதத் தொடங்கினர். அவர்கள் எழுதிய வரலாற்றில் இருமை எதிர்வுகளாக (பைனரி ஆப்போசிஷன்) ஆரியன் X மிலேச்சன் என்பதைக் கட்டமைத்தார்கள். ஜெர்மானியரான மாக்ஸ்முல்லர், ஆரியர்கள் நம்முடைய ரத்தம் என்றார். ஆங்கிலேயர் இந்தியாவுக்கு வந்ததை, ‘பிரிந்து போன இரண்டு ஆரியக் குடும்பங்கள் இப்போது ஒன்றிணைகின்றன’ என்று கேசவசென் என்பவர் எழுதியுள்ளார். ஆனால் ரொமிலா தாப்பர் ஆரியர் இனம் உயர்ந்தது, தூய்மையானது என்ற கருத்துக்களைக் கேள்விக்குள்ளாக்குகிறார். பொருளியலும், ஆன்மீகமும் இந்தியாவில் இணைந்தே இருக்கிறது என்கிறார்.  மாறாத் தன்மை கொண்ட தேக்கநிலை சமுதாயம் என்ற இந்தியா குறித்த அய்ரோப்பியரின் கருத்தை மறுத்து மோசமானதாகவோ நல்லதாகவோ, மாறுதலுக்காளான சமூகம் என்கிறார்.

அடுத்து, ஜாதியின் தோற்றம் குறித்தும் கூறுகிறார். ஜாதிகளின் தோற்றம் குறித்த கதைகளை உருவாக்கம் செய்ததில் ஆரியக் கோட்பாட்டின் பங்களிப்பையும் பதிவு செய்துள்ளார்.

ரகுபதியின் இக்கட்டுரையை அடுத்து, 1987-ஆம் ஆண்டில் ரொமிலா தாப்பர் ஆற்றிய குரோஷி நினைவுச் சொற்பொழிவின் சில பகுதிகள் திரு.நாகராஜனின் மொழிபெயர்ப்பில் இடம் பெற்றுள்ளன. இதில் பிராமணியத் துறவுநிலைக்கும், சமண, பௌத்த துறவு நிலைக்கும் இடையிலான வேறுபாடு, பௌத்த சமண மதங்கள் மீதான வைதீகத்தின் தாக்குதல், இது குறித்த இலக்கியப் பதிவுகள், சமணர் வழிபாட்டுத் தலங்களைப் பிராமணியம் கைப் பற்றியமை, பிராமணிய மரபுக்கு மாறுபட்ட நிலையில் பிற மரபுகளில் பெண்கள் உயர்நிலை பெற்றிருந்தமை என்பன இவ்வுரையில் இடம் பெற்றுள்ளன.

***

நான்காவது கட்டுரை 'வித்யா தெஹோஜியா: நமக்குத் தெரியாத ஒரு தமிழ் கலைவரலாற்று அறிஞர்' என்பதாகும். இந்நூலின் தொகுப்பாசிரியர் தேன்மொழிதான் இக்கட்டுரையின் ஆசிரியர்.

இக்கட்டுரையின் ஆசிரியர் வேதியியல் துறை ஆய்வு மாணவி. வரலாற்றிலும் முதுகலைப் பட்டம் பெற்றவர். இதனால் ஒரு கண்டுபிடிப்பை முன் வைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இயங்குபவர்.

கடவுளரின் சிற்பங்களையும், பிரம்மாண்டமான சிற்பங்களையும் மட்டுமே விவரிப்போர் இடையே, காட்சி சிற்பங்கள் குறித்த ஆய்வை வித்யா தெஹோஜியா மேற்கொண்டார் என்பது இவரது கருத்தாக உள்ளது. இச்சித்திரிப்புகள் வரலாற்றை எவ்வாறு சொல்கின்றன என்பதையும், காலத்தை எவ்வாறு கட்டமைக்கின்றன என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளதாகக் கூறுகிறார். புத்த ஜாதகக் கதைகள் தொடர்பான சிற்பங்கள் குறித்த அவரது ஆய்வு நுணுக்கங்களையும் விளக்கியுள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த இக்கலை வரலாற்று ஆய்வாளர், சோழர்காலக் கலைவரலாற்றையும் ஆய்வு செய்துள்ளார். தஞ்சாவூர், கும்பகோணம், திருப்பனந்தாள் ஆகிய ஊர்களில் உள்ள கோவில் களை ஆய்வு செய்துள்ளார். ‘உலக அளவில் கலை வரலாற்றுக்கென வெளிவரும்’ முக்கியப் பத்திரிகை யான மார்க் என்ற பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்துள்ளார்.

இவரது அணுகுமுறையைப் பயன்படுத்தியே தாராசுரம், மேலக்கடம்பூர், திருப்பனந்தாள், திருவண்ணாமலை, புரிசை ஆகிய இடங்களில் உள்ள நாயன்மார்களின் சித்திரிப்பை ஆராய்ந்து தாம் கட்டுரையெழுதியுள்ளதாக கட்டுரையாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

ஆங்கிலம், தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மூன்றுமொழிகளிலும் புலமை உடைய வித்யா தெஹேஜியா முப்பது நூல்களுக்குமேல் எழுதியுள்ளார், ஆண்டாள், சம்பந்தர், அப்பர் பாடல்களை யெல்லாம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார் என்றெல்லாம் கூறும் கட்டுரையாசிரியர், நம் வரலாற்று ஆசிரியர்களுக்கு அவரைத் தெரியவில்லை என்று வருந்துகிறார். இக்கட்டுரையையடுத்து, ‘முற்கால பௌத்த கலையில் காட்சி சித்திரிப்பு முறைகள்’ என்ற வித்யா தெஹோஜியாவின் கட்டுரை இடம்பெற்றுள்ளது. 

***

குமாரி ஜயவர்தனவின் ஆய்வுலகம்: சில அறிமுகக் குறிப்புகள் என்ற கட்டுரையை சிரிலங் காவைச் சேர்ந்த லஹினா அப்துல்ஹக் எழுதியுள்ளார்.

சிங்களவரான குமாரி ஜயவர்தன ஸ்ரீலங்கா அரசின் சிங்களப் பேரினவாதத்திற்கு எதிராகக் குரல் கொடுத்த ஆய்வாளர். இலண்டனில், இளங்கலைப் பட்டப்படிப்பையும், பாரிசில் முதுகலைப் படிப்பையும் பயின்றவர். பாரிஸ்டர் பட்டப்படிப்பையும், முனைவர் பட்டத்தையும் இலண்டனில் பெற்றார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும், இணைப்பேராசிரியராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். நெதர்லாந்தின் ஹோய்க் நகரில் அமைந் துள்ள கல்வி நிறுவனத்தில் வருகைதரு பேராசிரி யராகப் பணியாற்றியுள்ளார். இவர் ஒரு மனித உரிமைப் போராளி என்பது பரவலாகத் தெரிந்த உண்மை.

இவரது பெண்ணிய நூல்கள், பிற நூல்கள் எனப் பகுத்துக் கொண்டு கட்டுரையாசிரியர் அறிமுகம் செய்துள்ளார்.

பெண்ணியம் சார்ந்து அவர் எழுதியுள்ள நூல்களுள் மூன்று நூல்கள் முக்கியத்துவம் உடையன என்று கூறும் கட்டுரையாசிரியர் ‘மூன்றாம் உலகத்தில் பெண்ணியமும் தேசியவாதமும்’ என்ற அவரது நூலை ‘மிஸ்மெகஸின்’ என்ற அமெரிக்க நாட்டுப் பெண்ணிய இதழ் 1970-1990களில் வெளியான மிகச் சிறப்புவாய்ந்த 20 நூல்களுள் ஒன்று என்று அடையாளப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிடுகிறார். இந்நூலின் மையச் செய்திகளையும் வெளிப்படுத்தி யுள்ளார்.

இரண்டாவது நூல் காலனிய ஆட்சிக்காலத்தில் தென்னாசிய நாடுகளில் வாழ்ந்த, பணியாற்றிய ஆங்கிலேயப் பெண்கள் சிலரின் வாழ்வியலை ஆராய்கிறது. இவ்வகையில் இருவகையான போக்கு உடைய ஆங்கிலேயப் பெண்களை அடையாளப் படுத்தியுள்ளார். இறுதியாக ‘வெறுமனே நல்ல - தீய என்ற இருவகைமைகளுக்குள் அடக்கிய ஒற்றைப் பரிணாமப் பார்வையோடு அமையாமல் அவர்களின் பன்முகப்பட்ட பண்புசார் நடத்தைகளையும், செயற் பாடுகளையும் ஆழமாக ஆராய்ந்து செல்கின்றமை இந்நூலின் தனிச்சிறப்பம்சமாகும்’ என்று மதிப்பிட்டு உள்ளார்.

இலங்கையின் தொழிற்சங்க வரலாறு, 19-ஆம் நூற்றாண்டில் இலங்கையில் முதலாளித்துவம் உருவான வரலாறு, சிரிலங்காவில் இனவர்க்க முரண்பாடு என்பன குறித்து அவர் எழுதிய நூல்களில் சிங்கள பௌத்த மேலாண்மை உணர்வின் எழுச்சி குறித்தும் விரிவாக ஆராய்ந்துள்ளார். ‘வர்க்க உணர்வு படிப்படியாக மங்கி சிங்கள பௌத்த மேலாண்மை உணர்வு' தொடக்கத்தில் ‘காலனிய எதிர்ப்பின் உந்துசக்தியாக அமைந்து, பிற்காலத்தில் சிங்கள இனவெறியாகப் பரிணமித்து, ஏனைய இனங்களின் இருப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்து சிறுபான்மையின அழிப்புக்கு வழிகோலியது’ என்பது குறித்து நுணுக்கமாக இந்நூல் ஆராய்வதாகக் குறிப்பிட்டு உள்ளார். இந்நூலில் இருந்து ஒரு பகுதி ‘இன உணர்வின் தொடர்ந்த நீடிப்பு என்ற தலைப்பில் சித்திரலேகா, நித்தி என்போரின் மொழிபெயர்ப்பாக இடம் பெற்றுள்ளது.

***

இந்நூல் அறிமுகப்படுத்தும் அய்ந்து பெண் வரலாற்றாசிரியர்களில், சி.மீனாட்சி, ரொமிலா தாப்பர் ஆகிய இருவர் மட்டுமே கல்வித்துறை சார்ந்து வரலாற்றுப் பாடம் பயில்வோருக்கு மேலெழுந்தவாறு அறிமுகம் ஆனவர்கள். ஏனைய மூன்று வரலாற்றாசிரியர்களும் இன்னும் நம் கல்விப்புல வரலாற்றுப் பாடங்களுக்குள் நுழைய வில்லை. இச்சிறுநூல் இக்குறையைப் போக்கி யுள்ளது. அத்துடன் வரலாறு என்பது குறித்த புதிய பார்வைகளையும் சிந்தனைகளையும் அறிமுகம் செய்வதுடன், வரலாற்று வாசிப்பில் நாம் கட்டாயம் படித்தறியவேண்டிய நூல்கள் எவை என்பதையும் நாம் அறியும்படிச் செய்கிறது.

வரலாற்றை எழுதும் பெண்கள்

தொகுப்பு: தேன்மொழி

வெளியீடு: மணற்கேணி பதிப்பகம்,

தஞ்சாவூர்,

` 100/-

Pin It