தமிழில் இத்துறையில் வெளிவருகின்ற முதலாவது நூலாக இது அமைந்துள்ளது. யாழ்ப்பாணம், கொழும்பு மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்களில் பணியாற்றிய நீண்ட அனுபவத்தோடு பேராசிரியர் இந்நூலை எழுதியுள்ளார்.
பேராசிரியர் ஏலவே 'கல்வியும் பால் நிலைச்சமத்துவமும்' என்னும் நூலைத் தந்துள்ளார், அந்த நூலுடன் 'பெண்ணிய சீர்மியம்' நூலும் இணைத்து வாசிக்கத் தக்கது. அவரது ஆக்கங்கள் பெண்ணியம் என்னும் துறையின் பொருண்மை சார்ந்த விளக்கத்தை இன்னும் ஆழமும் விரிவும் கொண்டவையாக மாற்றுகின்றன.
பால்நிலைச் சமத்துவம், கல்வி, பெண்ணியம், உளவியல், முதலாம் எண்ணக்கருக்கள் பற்றிய விளக்கத்தை மேலும் ஆழம் மிக்கதாக மாற்றுகின்றது.
பெண்ணியம் என்பதை ஒற்றைப் பரிமாண நிலையில் விளக்குதல் பொருத்தமானதன்று. பத்தொன்பதாம் இருபதாம் நூற்றாண்டுகள் விடுதலைச் சிந்தனைகள் புரட்சிகரக் கோட்பாடுகள் முதலியவற்றின் காலங்களாக நீட்சியடைந்துள்ளன.
அவ்வாறான சிந்தனை மரபுகளின் உயிர்ப்பாக மார்க்சியம் மையம் கொண்டுள்ளது. அதாவது, விடுதலை அரசியல், சமூக நீதி, சமூக சமத்துவம், சமூக சனநாயகம், சோசலிசம், கம்யூனிசம் முதலாம் செயலாற்றுகைகளில் மார்க்சியம் பெரும் தாக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது.
பெண்ணியம் சார்ந்த கருத்து நிலையில் அரசியலை, விடுதலையை வடிவமைத்து ஆற்றுப்படுத்துவதில் மார்க்சியம் முதன்மை விசையாக இயக்கம் பெற்றுள்ளது. பெண்ணியச் செயற்பாட்டுக்குரிய பன்மைச் செயற்பாடுகளையும் வினைப்பாடுகளையும் அது வழங்குகின்றது.
மார்க்சியக் கருத்தியலின் அடிப்படையில் பெண்ணிய உளவியலை விளக்கும் நூலாக இந்த நூலாக்கம் அமைந்துள்ளது. பேராசிரியர் க.கைலாசபதி, பேராசிரியர் கா.சிவத்தம்பி ஆகியோரின் மாணவராகிய பேராசிரியர் சபா.ஜெயராசா அந்தப் பணியைச் சிறப்பாக நிறைவேற்றியுள்ளார்.
இந்நூல் பெண்ணிய வெளிகுறித்த மாற்றுப் பார்வையைக் கட்டமைக்கிறது. விடுதலைப் பெண்ணியம் மீதான அக்கறைக்கும் சிந்தனைக்கும் செயல்வாதத்துக்கும் புதிய களங்களை அடையாளப்படுத்துகிறது. தொடர்ந்து சமூக வரலாற்றுப் பண்பாட்டியல் நோக்கும் சிந்தனை வெளியும் உள்ளடங்கிய மனித உளவியல் பரிமாணங்களின் ஊடாட்டத்தில் இடைவினை புரிகின்றது. புதிய பாதையை, புதிய பார்வையைச் சாத்தியப்படுத்தும் வழித்தடங்கள் நோக்கிப் பெண்ணியச் சிந்தனையை ஆற்றுப்படுத்துகிறது.
பெண்ணியக் கல்வி உளவியல், பெண்ணிய சமூக உளவியல், சமூக மாற்றமும், பெண்ணிய உளவியலும், பெண்ணிய அழகியல் உளவியல், பெண்ணிய ஆக்க மலர்ச்சி, பெண்ணியச் சீர்மியம், பெண்ணிய விளையாட்டு உளவியல், பெண்களின் பாதுகாப்பு உளவியல், சூழலியற் பெண்ணியம், பெண்களின் தன்னிலை உருவாக்கம், பெண்கள் தொடர்பான தவறான புரிதல் முதலாம் விடயங்கள் நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
பெண்ணியப் பார்வையை அகலித்து ஆழ்ந்து நோக்குவதற்கான எண்ணக்கருக்களின் பின்னலமைப்பு நூலில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெண்ணிய உளவியலின் பல் பரிமாணங்களையும் அறிவொழுக்க மரபுக்கான கூறுகளையும் கட்டமைப்புச் செய்து தருகிறது. இதுவே இந்நூலின் தனிச்சிறப்புமிக்க அறிவொழுக்கப்பண்பு.
இன்று பெண்ணியம் என்பது தனித்துவமான கற்கை நெறியாக வளர்ச்சி பெற்றுள்ளது. ஆனால் சமூக மாற்றத்துடன் கூடிய பிரயோக நிலைப்பட்ட சிந்தனை அரசியல் ஆய்வுப் பரிமாணமாக வளர்ச்சி அடையவில்லை.
முன்பு “உளவியல்” என்பது தனிமனித வாதத்தை வலுவூட்டும் ஓர் அறிவுத்துறை என்று கருதப்பட்டு வந்தது. அத்தகைய ஒரு கருத்துப் பின்னலில் மார்க்சிய உளவியலாளர் மாற்றத்தை நிகழ்த்தத் தொடங்கினர், அதனால் உளவியலுக்குரிய சமூகப்பலம் விரிவடையத் தொடங்கியது.
சமூகத்தின் இருப்பும் இயல்பும் தனிமனித உருவாக்கத்தில் விசைகொண்டு செயற்படுதலை மார்க்சியம் தெளிவுபடுத்தியது. சமூக மாற்றம் குறித்த அறிவுபூர்வமான கோட்பாட்டுத் தெளிவை மார்க்சியம் முன் வைத்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழ்த்தப்படும் உதிரிச் செயற்பாடுகள் சமூக மாற்றமாகாது.
சமூக மாற்றத்தை ஆராயும் உளவியலாளர் பால்நிலை வகிபாகங்களில் இடம்பெறும் மாற்றத்தையும் மாறும் நடத்தைக் கோலங்களையும் ஆழ்ந்து நோக்குகின்றனர். மார்க்சியப் பெண்ணியலாளர் புரட்சியோடு இணைந்த அடிப்படையான சமூக மாற்றத்தின் வழிமுறைகள் ஆரோக்கியமான நிலையில் கடத்தப்படுவதில் அக்கறை காட்டுகின்றனர்.
தமிழ்ச் சூழலில் மாற்று அரசியல், விடுதலைச் சிந்தனை முதலானவற்றில் தாக்கம் செலுத்தும் பெண்ணியம் தமிழ்ச் சூழலுக்கேற்ப வளர்த்தெடுக்கப்படுதல் தவிர்க்க முடியாத தாகின்றது. சமூகமே சிந்தனைக்குரிய வளமாகவும் தளமாகவும் அமைகிறது. சமூகமாற்றம் நிகழும் பொழுது, சிந்தனைக் கோலங்களில் மாற்றங்கள் அருட்டிவிடப்படும் அவ்வாறான மாற்றங்களை உருவாக்கும் உயர்ந்த நோக்கில் இந்நூல் அமைந்துள்ளது.
மேலும் பெண்ணியச் சிந்தனையைப் பல்வேறு தளங்களிலும் பல்வேறு நிலைகளிலும் குவியப்படுத்தும் வகையில் “பெண்ணிய உளவியல்” நூலாக்கம் இடம்பெற்றுள்ளது. தமிழில் பெண்ணியத்துறை சார்ந்த எழுத்தாக்கங்களுள் இந்நூல் மாற்றுத்தன்மை கொண்டது.
இந்நூலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு தலைப்பும் ஆழ்ந்த வாசிப்புக்குரியவை. உளவியல் அறிவை தமிழ் நடைக்குக் கொண்டுவந்துள்ள ஆசிரியரின் செயற்பாடு பாராட்டுக்குரியது. பல்கலைக்கழகங்களில் நீண்டகாலம் பணியாற்றிய அவரது ஆற்றலானது இயம்பலில் இழையோடியுள்ளது. எளிமை நிலையில் இருந்து ஆழ்ந்த வாசிப்பை நோக்கிய தூண்டல் நூலில் இடம் பெற்றுள்ளது.
“பெண்ணிய உளவியல்” என்ற கருத்து வடிவத்தின் பன்மை அம்சங்கள் பலவாறு இழையோடும் வகையில் நூல் கட்டமைக்கப்பட்டுள்ளது.
காலனித்துவம், மேலாதிக்கம், மனிதநகர்வுகள், புலம்பெயர்தல், கோளமயமாக்கல், பன்னாட்டு நிறுவனங்களின் எழுச்சி, நவீனமுதலாளியத்தின் ஊடுதலையீடு ஆகியவற்றினூடே பெண்களின் நிலைவரம் தொடர்ந்து அழுத்தங்களுக்கு உட்பட்டதாகவே இருந்து வருகிறது.
பெண்கள் மீதான நவீன சுரண்டல் வடிவங்களின் உருவாக்கம் நிகழ்ந்தேறி வருகின்றது. நவீன சுற்றுலாக் கைத்தொழில், நவீன பொழுதுபோக்குக் கைத்தொழில் முதலியவற்றில் பெண்களைப் பயன்படுத்தும் விதம், பெண்களிடத்துப் பல்வேறு நெருக்கடிகளையும் உளவியல் தாக்கங்களையும் தோற்றுவிக்கின்றது.
நவீன முதலாளியம் பெண்களின் உழைப்பைப் பல்வேறு நிலைகளிலே சுரண்டியெடுக்கின்றது. பெண்களின் இன்றைய அவலநிலையையும் உளவியல் நெருக்கீடுகளையும் பகுத்தாராய்தல் நூலுக்குரிய சிறப்புப் பண்பாகின்றது.
இன்றைய பெண்கள் தொடர்பில், பன்னாட்டு, உள்நாட்டு சமூக பொருளாதார அரசியல் பின்புலத்தில் பெண்நிலைநோக்கு வயப்பட்ட பார்வைகளை நுண்ணியதாக வெளிப்படுத்தும் பாங்கு சிறப்பாகச் சுட்டிக் காட்டப்படத் தக்கது.
இது மரபுவழியான பார்வைக் கோணங்களில் இருந்தும் கருத்தாடல்களில் இருந்தும் முற்றிலும் மாறுபட்டதாக அமைகின்றது. புதிய கருத்தாடல்களை அடியொற்றிய உளவியல் அணுகுமுறைகள் நூலில் முன்வைக்கப்பட்டுள்ளன.
பெண்ணியத்தை மேலும் நுட்பமாகவும், ஆய்வுரீதியாகவும் சமூகமயப்படுத்தியும் சிந்திக்கத் தூண்டுகின்றது.
பெண் என்ற நிலையிலும் சிறுபான்மைத் தேசிய இனத்தவர் என்ற நிலையிலும் பெண்கள் இரட்டைப் பாதிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றனர். அமெரிக்காவில் கருமை இனப்பெண்களும் ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில், சிறுபான்மைத் தேசிய இனப்பெண்களும் இரட்டைப் பாதிப்புக்கு உள்ளாக்கப்படுதல் சுட்டிக் காட்டப்படுகிறது.
ஒடுக்குமுறைகள் இராணுவ மேலாதிக்கம், அகதி வாழ்க்கை, புலப்பெயர்ச்சி, புலச்சிதறல், போர் இழப்புக்கள், பொருள் மற்றும் நில இழப்புக்கள், கல்வி இழப்பு முதலியவற்றால் பெண்கள் அனுபவிக்கும் உளவியல் நெருக்கடிகளும், துயரங்களும் நீண்ட பட்டியல் கொண்டவை.
இலங்கையில் பெருந் தோட்டத்துறைப் பொருளாதாரத்தின் அடியாதாரங்களாய் இருக்கும் பெண்கள் அனுபவிக்கும் துன்பங்கள் தனியான ஆய்வுக்குரியவை. பழைய காலனித்துவம் மற்றும் புதிய காலனித்துவம் ஆகியவற்றின் கொடூரமான சுரண்டலுக்கு உள்ளாகிய நிலையில் இருந்து மீட்சி பெற முடியாத வாழ்வின் நகர்ச்சி தொடர்ந்த வண்ணமுள்ளது.
பெண்ணிலை நோக்கு பெண்நிலை உளவியல், பெண் உரிமைகள் முதலியவற்றின் அடிப்படைகளில் குவி சிந்தனையையும் விரி சிந்தனையையும் நூல் தூண்டி விடுகிறது. அவற்றினூடே நம்பிக்கை வறட்சியை ஏற்படுத்தாது நம்பிக்கை நீட்சியை நூல் வளர்த்து விடுகின்றது.
சமூகக் கட்டமைப்பில் பால்நிலை அசமத்துவத்தை நடுநாயகப்படுத்தியும் விவரித்தும் விளக்கியும் விடுதலையைக் குவியப்படுத்தியும் நூல் ஆக்கம் பெற்றுள்ளது.
சமூகக் கட்டுமையின் இயல்பு நூலில் விரித்து நோக்கப்படுகிறது.
சமூகத்தில் ஆண்களின் உழைப்பு விதந்து நோக்கப்படுவது போன்று பெண்களின் வெளி உழைப்பும் வீட்டு உழைப்பும் விதந்து நோக்கப்படுதல் இல்லை. பெண்கள் எதிர்நோக்கும் உளவியற் பிரச்சினைகள் பலவாறானவை.
பெண்களின் உடல் அதிகாரத்துக்குக் கீழ்ப்படிந்து வாழும் பணிவுடலாக (DOCILE BODY) மாற்றப்பட்டு வருகிறது. சமூகம் நோக்கிய தீர்மானங்களையும் அரசியல் தீர்மானங்களையும் ஆண்களே பெருமளவில் மேற்கொண்டு வருவதால் பெண்கள் தொடர்ச்சியான உள நெருக்கீடுகளுக்கும் பதகளிப்புக்கும் உள்ளாக்கப்பட்டு வருகின்றன.
கனங்காத்திரமான பல உளவியல் செய்திகளை நூல் தாங்கி நிற்கின்றது. தமிழுக்குப் பயனுள்ள ஒரு புதிய நூல் என்றே இதனைக் குறிப்பிடலாம். ஆழமான விடயங்களை தெளிவாக எடுத்துரைக்கும் பாங்கு பாராட்டுதற்குரியது.
பெண்ணிய உளவியலாளர்களின் பட்டியல், பழந்தமிழ்நாட்டில் இலக்கிய வழியான பெண் வினைப்பாட்டாளர் பட்டியல், தமிழ்ச்சூழலில் பெண்ணிய வினைப்பாட்டாளர் பட்டியல் முதலியனவும் நூலின் பின்னிணைப்பிலே தரப்பட்டுள்ளன.
கனங்காத்திரமான ஒரு நூலை வாசித்த உளவியற் சுகம் கிடைக்கப் பெறுகிறது.
பெண்ணிய உளவியல் | பேராசிரியர் சபா.ஜெயராசா | சேமமடு பதிப்பகம் | விலை ரூ.660
- தெ.மதுசூதனன்