‘அறிக்கை’ பற்றிய ஆராய்ச்சியில் பல்லாண்டுகள் செலவிட்ட தாமஸ் குஸின்ஸ்கி (Thomas Kuczynski) ‘மூல அறிக்கை’, அதன் வெவ்வேறு ஜெர்மன் பதிப்புகள், மார்க்ஸ் தனது வேறு படைப்புகள் சிலவற்றில் மேற்கோள்களாகக் காட்டும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் பகுதிகள் ஆகியவற்றை ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு ஏறத்தாழ 850 பாடபேதங்கள் இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளதாக டெர்ரெல் கார்வெர் கூறுகிறார். இவற்றில் சில அச்சுப் பிழைகளால் நேர்ந்தவை என்றாலும் ‘மூல அறிக்கை’ என்று சொல்லப்படக்கூடியது இதுதான் என்று யாராலும் எதையும் திட்ட வட்டமாகச் சொல்ல முடியாது என்றும் மார்க்ஸியத்தின் வரலாற்றில் ‘அறிக்கை’ ஒரு சிறு நிகழ்வாக (episode) மட்டுமே இருக்கிறதேயன்றி தொடர்ந்து அரசியல் பொருத்தப்பாடு கொண்டுள்ள ஆவணமாக அல்ல என்று கார்வெர் கருதுகிறார்” (ராஜதுரை 2014:21).

s v rajadurai book 400ஒரு பிரதி அச்சில் வெளிவரும் போது அது இரண்டாவது பிரதியாகவே வெளிவருகிறது. முதல் பிரதி படைப்பாளனுக்குள் புதைந்திருக்கும் என்கிறது உளவியல். இலக்கியத்திற்குப் பொருந்தக்கூடியதாக உணரத்தக்க இந்தச் சிந்தனை அறிவியல், தத்துவம், சமூகவியல், கோட்பாட்டு அடிப்படையிலான நூல் களுக்கு முற்றிலும் பொருந்தாதெனினும் ஒதுக்கி வைக்க முடியாது. இவ்வாறான நிலையில் அச்சில் வெளிவரும் பிரதிகள் மொழிபெயர்ப்பின் மூலம் பிற மொழிகளுக்குச் செல்லும் போது அவை மேலும் பல பிரதிகளாகவே உருமாற்றம் அடைகின்றன. இத்தகு உருமாற்றங்களால் நேரிடும் விளைவுகள் இலக்கியத்தைப் பொருத்த வரையில் சில நேரங்களில் உன்னதமானவையாகக்கூட அமைகின்றன. ஆனால் இலக்கியம் சாரா நூல்களுக்கு அப்படியல்ல. அவற்றின் விளைவுகள் ஆபத்தானவை. மொழிபெயர்ப்பில் பின்பற்றப்பட வேண்டியவை குறித்து வெளியான நூல்கள் பலவும் இலக்கியம் சாரா மொழிபெயர்ப்பு பற்றி அறிவுரைகளை வாரி வழங்கி யிருக்கும். நேர்ந்த ஆபத்துகளைச் சுட்டிக்காட்டி யிருக்கும். கவனத்துடன் மேற்கொள்ளவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருக்கும். இந்நிலையில் ஆழமான கோட்பாட்டுப் பின்புலத்தில் அமைந்த நூல் ஒன்றின் மொழிபெயர்ப்பு, கவனத்தில் கொள்ளத்தக்க படிப்பினைகள் சிலவற்றை நமக்குத் தருகிறது. அது எஸ்.வி.ராஜதுரையின் தமிழாக்கம், அறிமுகவுரை, விளக்கக் குறிப்புகளுடன் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடாக வந்துள்ள (2014) ‘கார்ல் மார்க்ஸ், பிரெடெரிக் எங்கெல்ஸ் - கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை’ என்ற நூல்.

ஜெர்மன் மொழியில் 1848 இல் மார்க்ஸ், எங்கெல்ஸின் உருவாக்கத்தில் வெளிவந்த கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை உலகெங்கும் பல மொழிகளிலும் மொழிபெயர்ப்பாகிப் புதிய எழுச்சிக்கு வித்திட்டது. இந்த ‘அறிக்கை’ தமிழில் இடதுசாரி பதிப்பகங்களின் வழி நமக்கு இன்று வாசிக்கக் கிடைக்கிறது. அதிலொன்றே எஸ்.வி.ராஜதுரையின் மொழிபெயர்ப்பு. தமிழில் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையை வாசிக்க விரும்புவர்களுக்கு இம்மொழிபெயர்ப்பே பெரும்பாலும் அறிவுறுத்தப்படுகிறது. ஒரு மொழிபெயர்ப்புப் பிரதியாக இந்நூலில் கைகொண்டிருக்கிற முயற்சிகளே இந்நூலைப் பலரும் பரிந்துரை செய்வதற்கு அடிப்படையாக அமைகின்றன. நூலில் மேற்கொள்ளப்பெற்றுள்ள மொழிபெயர்ப்பு அணுகுமுறைகளும் அவற்றின் வழி இந்நூல் தொடும் எல்லைகளும் சுட்டிக்காட்டத் தக்கனவாக உள்ளன.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கைக்குத் தமிழில் இதுவரை ஆறு மொழிபெயர்ப்புகள் காணக் கிடைக்கின்றன.

முதல் மொழிபெயர்ப்பு, பெரியார் ஈ.வெ.ரா.வின் குடியரசு இதழில் 1931 ஆம் ஆண்டு வெளியானது. ‘சமதர்ம அறிக்கை’ என்ற பெயரில் குடியரசு இதழில் தொடர்ச்சியாக வெளியான மொழிபெயர்ப்பு முதல் பாகத்துடன் நின்றுவிட்டது. முதல் பாகம் முற்றுப் பெற்ற கடைசி இதழில் ‘இனி இரண்டாம் பாகம் வரும்’ என்ற அறிவிப்பு வெளியானது. ஆனால் தொடர்ச்சி எதுவும் வெளிவரவில்லை. குடியரசு இதழில் வெளியான முதல் பகுதியின் மொழிபெயர்ப்பினைச் சிறுநூலாகத் தற்போது பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.

ஜனசக்தி பிரசுராலயத்தின் வெளியீடாக 1948 இல் வெளிவந்த எம்.இஸ்மத் பாஷாவின் மொழிபெயர்ப்பே ‘அறிக்கை’க்குத் தமிழில் வெளிவந்த முதல் முழுமையான தமிழாக்கமாக அறியமுடிகிறது.

‘அறிக்கை’யின் பல்வேறு பதிப்புகளுக்கு எழுதப் பெற்ற ஏழு முன்னுரைகளின் தமிழாக்கத்துடன் ரா.கிருஷ்ணய்யாவின் ‘அறிக்கை’க்கான தமிழ் மொழிபெயர்ப்பு 1979 இல் வெளியானது. முன்னேற்றப் பதிப்பகத்தாரால் முதலில் வெளியிடப்பட்ட இந்நூலில் விளக்கக் குறிப்புகள் தேவையான இடங்களில் தரப் பெற்றுள்ளன.

அறிவுப் பதிப்பகத்தால் 2001 இல் வெளியிடப் பட்ட ‘மார்க்சியம் - எதிர்காலம்’ என்ற நூலில் ‘அறிக்கை’யின் சில பகுதிகள் நூலாசிரியர் ஆர்.பார்த்த சாரதியால் மொழிபெயர்க்கப் பெற்றிருப்பதாக அறிய முடிகிறது.

கி.இலக்குவனின் பெயர்ப்பில் ‘அறிக்கை’யின் தமிழ் மொழிபெயர்ப்பு ஒன்று 2007 இல் வெளியானது. இந்நூலில் 1888 ஆம் ஆண்டில் வெளியான ‘அறிக்கை’யின் ஆங்கிலப் பதிப்பிற்கு எங்கெல்ஸ் எழுதிய முன்னுரையைத் தமிழாக்கம் செய்து தந்துள்ள கி.இலக்குவன் இந்தியாவில் கம்யூனிஸ்டு அறிக்கை பதிப்பிக்கப்பட்ட வரலாற்றை ஒரு கட்டுரையாகவும் அளித்துள்ளார்.

ஜெர்மன் (1872,1883), ஆங்கிலம் (1888) மொழிப் பதிப்புகளுக்கு எழுதப்பெற்ற முன்னுரைகளின் தமிழாக்கம், அறிமுகவுரை, பதிப்பாசிரியர் குறிப்பு களுடன் தேவ.பேரின்பனின் மொழிபெயர்ப்பு 2008 இல் வெளியானது.

மேற்கண்ட ஆறு மொழிபெயர்ப்புகளில் நான்கு ‘அறிக்கை’யின் முழுமையான மொழிபெயர்ப்புகளாகும். முழுமை பெறாத பெயர்ப்புகள் இரண்டு. இந்நிலையில் ‘அறிக்கை’க்கான எஸ்.வி.ராஜதுரையின் மொழி பெயர்ப்பு முன்னர் எழுந்த நூல்களிலிருந்து வேறு பட்டதாகவும் மொழிபெயர்ப்பில் கவனத்தில் கொள்ளத் தக்க சிந்தனைகளையும் தந்திருக்கிறது.

எஸ்.வி.ராஜதுரையின் மொழிபெயர்ப்பு நூல், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் தோற்றம், ‘அறிக்கை’ பற்றி வெளிவந்த விவாதங்கள், வெளியான ஆண்டு குறித்த முரண்பாடுகள், உலக, இந்திய மொழிகளில் அறிக்கையின் மொழிபெயர்ப்புகள் என ‘அறிக்கை’ பயணித்து வந்த பாதைகள் தொடர்பான விரிவான கட்டுரையுடன் தொடங்குகிறது.

தொடர்ந்து எஸ்.வி.ராஜதுரையின் ‘அறிக்கை’க் கான தமிழ் மொழிபெயர்ப்பு இடம்பெற்றுள்ளது. தமிழாக்கத்தின் ஒவ்வொரு பத்திக்குக் கீழேயும் மூர் - எங்கெல்ஸ், ஹால் ட்ரேப்பர் ஆகியோரின் ஆங்கில மொழியாக்கங்கள் தரப்பெற்றுள்ளன. ஒரே இடத்தில் ‘அறிக்கை’க்கான மூன்று மொழிபெயர்ப்புகள் (தமிழ் - 1, ஆங்கிலம் - 2) வாசிக்கக் கிடைக்கின்றன.

மேலும் தமிழாக்கத்தில் கையாளப்பெற்ற சொற்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கக் குறிப்புகளும் ‘சொல்’ தேர்விற்கான காரணங்களும் விரிவாக அளிக்கப் பெற்றுள்ளன.

இறுதியில் இணைப்புகளாக ‘அறிக்கை’யின் ஜெர்மன் பதிப்பிற்கும் (1872) ரஷ்யப் பதிப்பிற்கும் (1882) கார்ல் மார்க்ஸ், பிரெடெரிக் எங்கெல்ஸ் இணைந்து எழுதிய முன்னுரைகளின் தமிழ் மொழிபெயர்ப்பும் அவற்றின் ஆங்கில மூலமும் தரப்பெற்றுள்ளன. தொடர்ந்து ஜெர்மன் பதிப்பு (1883, 1890), ஆங்கிலப் பதிப்பு (1888), போலிஷ் பதிப்பு(1892), இத்தாலி பதிப்பு (1893) ஆகியவற்றிற்கு எங்கெல்ஸ் தனியாக எழுதிய முன்னுரைகளின் தமிழ் மொழிபெயர்ப்பும் ஆங்கில மூலமும் கொடுக்கப்பெற்றுள்ளன. இறுதியில் ‘1848-49 ஆம் ஆண்டு ஐரோப்பியப் புரட்சியும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் அரசியலும்’ எனும் கட்டுரை இடம் பெற்றுள்ளது. ஜெர்மன் மொழியில் 1848 இல் வெளியான ‘அறிக்கை’ யின் முதல் பதிப்பின் பக்க எண்கள் 23 (கடைசிப் பக்கத்திற்கு எண் அச்சிடப் படவில்லை) என்றும், இரண்டாம் பதிப்பு 30 பக்கங்களைக் கொண்டிருந்தது என்றும் அறிய முடிகிறது. எஸ்.வி.ராஜதுரையின் தமிழாக்கம், விளக்கக் குறிப்புகளுடன் வெளியாகியிருக்கிற ‘கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை’ என்ற இந்நூல் ஐந்நூறு பக்கங் களைத் தொட்டிருக்கிறது.       

மொழிபெயர்ப்பின் தேவை, முன்னர் எழுந்த மொழிபெயர்ப்புகள், பாட பேதங்கள், மூலநூல் எழுந்த காலச் சூழல் என அடிப்படையான விடயங்களை உள்வாங்கிக் கொண்டு மொழிபெயர்ப்பினைத் தொடங்கி யிருக்கிற சிந்தனை அறிவுச் செயல்பாட்டின் ஓர் அங்கம்.

இதுபோன்ற ஒரு மொழிபெயர்ப்பைக் கொண்டுவர வேண்டியதன் அவசியத்தை இந்நூலைக் கடப்பதற்குள் எவரும் எளிதில் கணித்துவிட முடிகிறது. ‘அறிக்கை’யின் மூன்று மொழிபெயர்ப்புகள் தமிழ் - 1 (எஸ்.வி.ராஜதுரை), ஆங்கிலம் - 2 (மூர் - எங்கெல்ஸ், ஹால் ட்ரேப்பர்) ஒரே நூலில் வாசிக்கக் கிடைக்கின்றன. ஒரு நூல், மொழிபெயர்ப்பின் மூலம் பிற மொழிகளுக்குச் செல்லும் அது ஒவ்வொரு மொழியிலும் ஒரு பிரதியாக உருமாறுவது இயல்பு. இவ்வாறு பல பிரதிகளாக இருப்பவற்றை ஒரே இடத்தில் குவிக்கிற போது அவை உடைந்து ஒரு பிரதியாக மாறுவது நிகழும். ஒரு பிரதியாக மாற்றுகிற வேலையை இங்கு வாசகரே மேற்கொள்வார். அந்த வகையில் படிப்பவர்களிடத்தில் பிரதியைத் தந்துவிட்டு மொழிபெயர்ப்பாளர் காணாமல் போய்விடுகிறார். இதுவே இங்கு வெற்றியாக அமைகிறது. மூலநூலுக்கான நெருக்கத்தை நோக்கி நகர்த்தியிருக்கிற முயற்சியின் மூலம் அரசியல் பொருத்தப் பாடு கொண்டுள்ள ஆவணமாக ‘அறிக்கை’யை மாற்றுவதன் தொடக்கத்தைத் தமிழ்ச்சூழலில் நிகழ்த்தி யிருக்கிறார் மொழிபெயர்ப்பாளர்.

‘அறிவு என்பது கருத்தை வெளிப்படுத்தும் விதத்தில் இருப்பது. செயல்வடிவம் தொடர்பானது, பூடகமானது. அறிவுக்கு அடிப்படை, விவரணை மொழியும் சுயமாகக் கற்றுக்கொள்ளும் திறனுமே’ என்பார் பேராசிரியர் ஷிவ் விஸ்வநாதன். அந்த வகையில் கருத்தை வெளிப் படுத்தும் விதத்திலும் விவரணை மொழியிலும் சிறந்து விளங்குகிற இந்த மொழிபெயர்ப்புப் பிரதி ஓர் அறிவார்ந்த முயற்சி. விளக்கக் குறிப்புகள், ஒப்பீடு ஆகியன சுயமாக நமக்கு நாமே கற்றுக்கொள்ளச் செய்கிற வகையைச் சார்ந்தவை. ஒரு செய்திக்கான காரண காரியங்களை ஒப்பிட்டு விளக்குதல் என்கிற பாங்கின் அடிப்படையில் படிப்பவரையும் அறிவுத் தளத்தில் நிறுத்தி வைக்கிறது இந்த மொழிபெயர்ப்பு.

மேற்கூறிய கருத்துகள் இலக்கியம் சாரா நூல்களை மொழிபெயர்ப்புச் செய்யும் போது மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டுதல்களாகவும் அமைகின்றன. அந்த வகையில் எஸ்.வி.ராஜதுரையின் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கைக்கான தமிழ் மொழிபெயர்ப்பு இலக்கியம் சாரா பிரதிகளை மொழிபெயர்ப்பதற்கான கோட்பாடு களை அளிக்கிற நூல் என்ற நிலையையும் அடைகிறது.

ஐம்பத்தைந்திற்கும் மேற்பட்ட மொழிகளில் 554 பதிப்புகளாக (1848 முதல்1918 வரை) வெளிவந்து (ராப் பீமிஷ் எஸ்.வி.ராஜதுரை) உலகம் முழுவதும் பரவலாகக் கிடைக்கப்பெறுகிற பாட்டாளி வர்க்கத்தின் போர்ப் பிரகடனமாகத் திகழ்கிற ஒரு வரலாற்று ஆவணத்தை ஓர் உயரிய ஒழுங்குடன் தான் சார்ந்திருக்கிற சமூகத்திற்குத் தந்துவிடவேண்டுமென்கிற மொழிபெயர்ப்பாளரின் முனைப்பினை நூலின் முன்னுரை வழி அறிந்துகொள்ள முடிகிறது.

‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’க்குத் தமிழில் இனியரு மொழிபெயர்ப்பு எழுவதற்குத் தேவையான வெற்றிடங்களை இந்நூலுக்குள் கண்டறிவது எளிதானதல்ல.

பயன்பட்ட தரவுகள்

அறிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்புகள்

1)இலக்குவன்,கி. (2007), மார்க்ஸ் எங்கெல்ஸ் கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை, சென்னை: பாரதி புத்தகாலயம், இரண்டாம் பதிப்பு (2011).

2)கிருஷ்ணய்யா, ரா. (2004), மார்க்ஸ் எங்கெல்ஸ் கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை, சென்னை:நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட், இரண்டாம் பதிப்பு (2012).

3)பாரதி புத்தகாலயம்(பதி.) (2011), (குடியரசு -1931), மார்க்ஸ் - எங்கெல்ஸ் சமதர்ம அறிக்கை, சென்னை: பாரதி புத்தகாலயம்.

4)பேரின்பன், தேவ. (2008), கார்ல் மார்க்ஸ் பிரெடெரிக் எங்கெல்ஸ் கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை, சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட், இரண்டாம் பதிப்பு (2010).

ராஜதுரை, எஸ்.வி. (2014), கார்ல் மார்க்ஸ் பிரெடெரிக் எங்கெல்ஸ் கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை, சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட், (திருத்தப்பட்ட பதிப்பு).

கட்டுரை

ஷிவ் விஸ்வநாதன், (மொ.ஆசை) (2015), “அறிவு உற்பத்தி எப்போது”, தி இந்து, சென்னை, (ஏப்ரல் 8, 2015).

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

தமிழாக்கம்: எஸ்.வி.ராஜதுரை

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,

41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்.,

அம்பத்தூர், சென்னை - 600 098

விலை:ரூ.550/-

Pin It