தமிழில் படைப்பாளிகளுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் உள்ள இடம் மொழிபெயர்ப்பாளனுக்கு இல்லை. ஏன் பதிப்பாசிரியர்களுக்கும் தொகுப்பாசிரியர்களுக்கும் உள்ள இடத்தைக் கூட மொழிபெயர்ப்பாளனுக்குக் கொடுக்கப்படவில்லை. தமிழில் 1880-லிருந்து 1990 வரை உத்தேசமாக 1018 படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன என்பது ஒரு குறிப்பு. இந்திய உலக மொழிகளிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட இந்தப் படைப்புகளில் ஆங்கில மொழி மூலம் வந்தவைகளே அதிகம். இதை அடுத்து பிரஞ்சு. இக்காலக் கட்டத்தில் 26 மொழிகளிலிருந்து படைப்புகள் தமிழிற்கு வந்துள்ளன.

இந்தப் படைப்புகளில் 1941-60 ஆம் ஆண்டுகளில்தான் மிக அதிக அளவு நூற்கள் மொழிபெயர்க்கப்பட்டன. (516) கவிதை, நாடகம், நாவல், சிறுகதை என்னும் இலக்கிய வரிசையில் நாவல்களே அதிகம். (518) இந்திய விடுதலைக்குப்பின் ஏற்பட்ட கல்வி விழிப்புணர்வு, இலவசக்கல்வி, பொது நூலகக் கட்டிடம் ஆகியவை பரவலானது. பொதுவான படிப்பிற்குக் காரணமானது. அப்போது மக்களின் படிப்புத்தீனிக்கு மொழிபெயர்ப்பு தேவைப்பட்டது.

இக்காலகட்டத்தில் அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட படைப்பாளி சேக்ஸ்பியர். இவரது நாடகங்கள் 134 வடிவங்களில் வந்திருக்கின்றன. The Merchant of Venice நாடகத்திற்கு மட்டும் 13 மொழிபெயர்ப்புகள் வந்துள்ளன. அப்போது சாதாரணத் தமிழ் வாசகன் அறிந்த பெயர்கள் எமிலிஜோலா, மாப்பசான், சார்லஸ் டி கன்ஸ், வால்டர், ஸ்காட், மார்க்சிம் கார்கி, காண்டேகர், ரவீந்திரநாத்தாகூர், பங்கிம் சந்திரர், பிரேம் சந்த் என அடுக்கிக் கொண்டே போகலாம்.

ரஷ்ய படைப்புகளின் 41 நூற்களை மொழி பெயர்த்த பூ சோமசுந்தரம், பிரஞ்ச், ஆங்கிலத்திலிருந்து 28 நூற்களை மொழிபெயர்த்த கா. அப்பாத்துரை, வி.எஸ்.வெங்டேசன், க.நா.சு என நீண்ட வரிசையிலான பெயர்கள் இன்றைய நவீன வாசகர்கள் பலருக்குத் தெரியாமல் ஆகிவிட்டது. இந்நூற்களில் சிலவே மீண்டும் அச்சில் வந்துள்ளன.

40, 50, 60 -க்களில் வெளிவந்த மொழி பெயர்ப்பால் தமிழனின் வாசிப்பு தரம் உயர்ந்தது. நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்க உருவாக்கிய அஸ்திவாரம் மொழிபெயர்ப்ப்பு என்பது இன்று மறக்கப்பட்ட ஒன்று.

“மொழிபெயர்ப்பு” என்ற தமிழ்ச் சொல் Translation என்னும் ஆங்கிலச் சொல்லிலிருந்து உருவானதல்ல. தொல்காப்பியர், தொகுத்தல் விரித்தல் எனத் தொடங்கும் சூத்திரத்தில் “மொழிபெயர்ப்பு அதர்பட யாத்தல்” என்னும் சொல்லாட்சியைக் கூறுகிறார். இவர் ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு விஷயங்கள் செல்லுவதையே அதர்பட யாத்தல் என்கிறார். அதாவது மொழிக்கு மொழி மாற்றப்படுவதல்ல இது என்பதில் தொல்காப்பியருக்கு நம்பிக்கை இருக்கிறது.

இப்படியான நிலையில் மொழிபெயர்ப்பாளனைப் படைப்பாளி என்று ஏன் கூற முடியாது. கம்பனும், திருத்தக்கத் தேவரும் தமிழின் தரமான படைப்பாளிகள் என்றுதானே சொல்ல முடியும். இவர்கள் மொழி மாற்றம் செய்த தழுவலாளர்களே. இவர்களைப் போல பல உதாரணங்கள் கூறலாம்.

ஆரம்பகால இலக்கியவாதிகளான கம்பன் திருத்தக்கதேவர் போன்றோருக்கு வரிக்குவரி மொழிபெயர்ப்பதில் விருப்பமில்லை. படிப்பவனுக்குப் புரியும்படியாக பண்பாட்டைக் கட்டுப்படுத்தாத, குலைக்காத பதம், பதச்சேர்க்கை அவசியம் என்பதைச் சிலர் நன்றாகவே உணர்ந்திருந்தார்கள். விவிலிய மொழிபெயர்ப்பாளர்கள் இதில் மிகவும் கவனம் செலுத்தினர். வரிக்கு வரி மொழிபெயர்த்தால் என்ன ஆகும்? பல இடங்களில் நகைச்சுவை துணுக்காகத்தான் அவை மிஞ்சும்.

என் கல்லூரி பொருளாதாரப் பேராசிரியர் ஒருவர், பி.ஏ. பொருளாதாரம் இரண்டாம் ஆண்டிற்குரிய பாடத்திட்டத்தில் இருந்த புத்தகம் ஒன்றைத் தந்து ஒரு வாக்கியத்தைப் படிக்கச் சொன்னார். “தமிழகப் பசுக்களுக்கு இப்போது அதிகமும் எண்ணெய் ரொட்டிகள் கொடுக்கப்படுவதில்லை” என்ற வாக்கியத்தைப் படித்தேன். இதிலுள்ள எண்ணெய் ரொட்டிக்குப் பொருள் என்ன என்று கேட்டார். அவர் தந்தது தமிழ் மொழிபெயர்ப்பு நூல். ஆங்கில மூல நூலையும் தந்தார். அங்கு எண்ணெய் ரொட்டி என்பது Oil Cake என இருந்தது. உண்மையில் அது ‘புண்ணாக்கு’ என்ற சொல்லைக் குறிப்பது. புண்ணாக்கு ஆங்கிலத்தில் Oil Cake ஆனது. அது தமிழில் எண்ணெய் ரொட்டி ஆகிவிட்டது. இது வரிக்கு வரி மொழிபெயர்ப்பால் வந்த வினை. ஒரு பண்பாட்டில் உள்ள சொல்லை அப்படியே எடுத்துக்கொள்வது மொழிபெயர்ப்பை படைப்பு நிலைக்குக் கொண்டு செல்லும். அப்படியான வரிக்குவரி மொழி பெயர்ப்பை எப்படி ஒத்துக்கொள்ளுவது.

தமிழக விமான நிலையம் ஒன்றில் “Physically Challenged” என்பதற்கு உடற்கூறு அறை கூவலர் என்றும் ரயில்வே நிலையம் ஒன்றில் Tender exact fair என்பதற்கு கட்டணமே ஒப்பந்தம் என்றிருப்பதையும் பார்த்திருக்கிறேன். சேக்ஸ்பியரின் நாடகம் ஒன்றில், நீ சொல்வது சரிதான் என்ற அர்த்தத்தில் பேசும் கதாபாத்திரம். “There lies the point” எனக் கூறும். இதை “அங்கே இருக்கிறது புள்ளி” என மொழிபெயர்த்திருக்கிறார் ஒருவர். இதுபோல வரிக்குவரி மொழிபெயர்த்தற்கு எவ்வளவோ உதாரணங்கள் சொல்ல முடியும். கி.பி. 16- ஆம் நூற்றாண்டிற்கு முன் இதுபோன்ற சிக்கல் வரவில்லை.

தொல்காப்பியர் காலத்திலிருந்தே ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்குச் செய்திகளைக் கொண்டு செல்வது என்பது நடைமுறையிலிருந்தது. கி.மு.700 முதல் கி.பி.2 - ஆம் நூற்றாண்டு வரையுள்ள கால கட்டங்கள் பாலி, பிராகிரதம், சமஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகள் தமிழில் கலந்திருக்கின்றன. இந்தக் கலப்பிற்குப் பின்னால் ஒரு பண்பாட்டு அரசியல் உண்டு. பாலி மொழிச் சொற்கள் பொறிக்கப்பட்ட பிராமி ஓட்டுக் சில்லுகள் பெரும்பாலும் கடற்கரைப் பகுதிகளில் கிடைத்தன. இதனால் இங்கு பவுத்தம் பரவி இருந்ததாகச் சொல்லுகின்றனர்.

பிராகிரதம், தமிழகத்தில் உட்பகுதியில் பரவிய மொழி; இது சமணத் துறவிகள் வழி வியாபாரிகளிடமும் பொதுமக்களிடமும் பரவியது. சமஸ்கிரதம், வைதீகர்கள் நெருக்கமாக இருந்த பகுதிகளில் பரவியது. இப்படிப் பரவிய சொற்கள் வழியே மொழி சார்ந்த பண்பாடும் பரவியது. இது பழைய வரலாறு, பிராமிக் கல்வெட்டை ஆராய்ந்தவர்கள் பிராமியில் பிறமொழிப் பெயர்ச்சொற்கள் அதிகம் அமைந்துள்ளன என்கின்றனர். (எ.கா. தம்மம், பணி, நிகமம், கணி)

பிறமொழி நூற்களைத் தழுவி எழுதிய காலகட்டமாகச் சங்கம் மருவிய காலத்தைக் கொள்ளலாம். ஒருவகையில் அறம் தொடர்பான செய்திகளைத் தமிழில் சொல்ல மூலநூற்களின் பகுதிகளைத் தழுவ முற்பட்ட காலம் இது என்றும் சொல்லமுடியும். தமிழ் மக்களின் வாழ்வில் வைதீகக் கட்டமைப்பை உருவாக்கும் முயற்சியாகவும் இது விமர்சிக்கப்படுகிறது. இவை நேரடி மொழிபெயர்ப்பாகவோ தழுவலாகவோ இல்லாமல் மூலநூல் போன்ற பிரம்மையை உருவாக்கியவையாகவே விளங்கின. எ.கா. ஆசாரக்கோவை. இதில் சுக்கிரஸ்ம்ருதி உட்பட பல சமஸ்கிரத சூத்திரங்கள். ஸ்லோகங்கள் ஆகியவற்றின் மொழிபெயர்ப்பு பாடல்கள் வருகின்றன.

வையாபுரிப்பிள்ளை வள்ளுவனின் சில குறள்களை அர்த்தசாஸ்திரம் மனுஸ்ம்ருதி, வாத்சாயனரின் காமசூத்ரா ஆகியவற்றின் மொழிபெயர்ப்பு என்றும் வள்ளுவனிடம் 126 சமஸ்கிரதச் சொற்கள் உள்ளன என்றும் கூறுகிறார். சில சொற்களை வள்ளுவனே உருவாக்குகிறான். (ஏகாந்தம் - ஒருவந்தம் ; ஸம்ஸார சாகரம் - பிறவிப் பெருங்கடல்)

சங்கம் மருவிய காலத்தை அடுத்து பிற மொழிக் காவியங்களைத் தமிழில் தரும் முயற்சி ஆரம்பமானது. இது ஜீவகசிந்தாமணி காப்பியத்திலிருந்து தொடங்குவதாகக் கொள்ளலாம். சிந்தாமணியின் மூலம் க்ஷத்திர சூடாமணி, சத்ய சிந்தாமணி என்கின்றனர். ஆனால் இவற்றின் ஒட்டுமொத்த அமைப்பைக் கடந்து சென்றே காப்பியத்தைப் படைத்திருக்கிறார் திருத்தக்க தேவர். சூளாமணி, பெருங்கதை, ஸ்ரீபுராணம் ஆகியன எல்லாம் பிராகிரத சமஸ்கிருத பைசாச மொழிக் கதைகளின் தழுவல்களே.

வான்மீகியைத் தமிழிலே தந்தேன் எனக் கம்பனே கூறினாலும் அவன் உன்னதமான படைப்பாளியாகவே அவனது சமகாலத்திலும் கருதப்பட்டான். வான்மீகியிலிருந்து கதையை மட்டும்தான் அவன் எடுத்துக்கொண்டிருக்கிறான். பல சமஸ்கிருதச் சொற்களைத் தமிழ் படுத்தும் முயற்சியில் இறங்கியவன் கம்பன். வில்லிப்புத்தூராரும் கம்பனைப் போலவே தழுவி எழுதியவர்.

கம்பனுக்குப் பின் சமஸ்கிரத புராணங்கள் பல தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன. கிறிஸ்தவம் (தேம்பாவணி, இரட்சணிய யாத்ரீகம் இஸ்லாம் (சீறாப்புராணம், மிஃறாஜ் மாலை) ஆகிய மதங்களிலும் பரவலாக மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் பெருகின.

தமிழகத்தில் 16-ஆம் நூற்றாண்டை மொழிபெயர்ப்பின் ஆரம்பகாலமாகக் கொள்ளலாம். இதற்குச் சில காரணங்கள் உண்டு. 1556-இல் கேரளத்தில் முதல் தமிழ் அச்சு நூல் வெளிவந்தது. “தம்பிரான் வணக்கம்” என்ற இந்த நூல் ஆண்டிரிச் பாதிரியார் மொழிபெயர்த்தது. இலங்கைப் பேச்சுத் தமிழில் அமைந்தது. 1566-இல் ஸ்பானிஷ் மொழியிலிருந்து கிரித்தியானி வணக்கம் என்ற நூல் மொழிபெயர்க்கப்பட்டது. இதன் பிறகு எத்தனையோ மொழிபெயர்ப்புகள் வந்துவிட்டன.

19-ஆம் நூற்றாண்டில் தமிழ் பண்பாட்டிற்கு ஏற்ப மொழிபெயர்ப்பு இருக்க வேண்டும் என்ற கருத்து கொள்கையாக முன்வைக்கப்பட்டது. “சீசருக்குக் கொடுக்க வேண்டியதை சீசருக்குக் கொடுங்கள்” என்ற பைபிள் வாக்கியத்தில் சீசர் (அகஸ்டஸ்சீசர்) என்பது ராயர் (கிருஷ்ண தேவராயர்) என மொழிபெயர்க்கப்பட்டது. விவிலியம் அல்லாத மொழிபெயர்ப்புகளும் இக்காலத்தில் வந்தன. தாண்டவராய முதலியாரின் பஞ்ச தந்திரத்தை (மராட்டி) 1826-இல் வந்தது. இது தமிழ் மரபுக்கேற்ப அமைந்தது. இது போலவே பக்த விஜயம் மொழிபெயர்ப்பும்.

இந்தக் கருத்தரங்கு கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் நிகழ்வதால், இங்குள்ள மொழிபெயர்ப்பு தொடர்பான செய்திகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டம் இருமொழிப் பண்பாடுடையது. இங்குள்ள பழம் கல்வெட்டுகளில் சமஸ்கிருதக் கலப்பு அதிகம். இந்த மாவட்டத்திலும் கிறிஸ்தவர்களின் வரவிற்குப் பின்னரே நேரடி மொழிபெயர்ப்பு ஆரம்பித்தாலும் அதற்கு முன்பும் மொழிபெயர்ப்பு முயற்சி நடந்தது. நீலகண்ட ஆச்சாரியார் என்பவர் முத்திரா ராட்சசம் என்னும் சமஸ்கிரக காவியத்தைச் சாணக்கிய சூத்திரம் என்றும் கோட்டாறு குமருப் பண்டாரம் ஞானவாசிட்டத்தையும், தேசிக விநாயகம் பிள்ளை என்பவர் ஆதிசங்கரரின் சௌந்தர்ய லகரியையும் மொழி பெயர்த்துள்ளனர். இவை அச்சில் வரவில்லை.

நாகர்கோவிலில் 1820-இல் மறுமலர்ச்சி கிறிஸ்தவர்களுக்காக ஒரு அச்சகம் ஆரம்பிக்கப்பட்டது. இங்கே ரெயினிசு மொழிபெயர்த்த விவிலியம் அச்சடிக்கப்பட்டது. (1823) இந்த மொழிபெயர்ப்பிற்கு நீட், மால்ட் ஆகியோர் உதவினர். அப்போதே இதற்கு 6000 பிரதிகள் அச்சிட்டனர். இதில் மலையாளக் கலப்பு உண்டு (அச்சுகனே ஞெங்களை ரெட்சியும்)

நாகர்கோவிலில் 1823-1845 ஆம் ஆண்டுகளில் 46 சிறு பிரசுரங்களும் 1843-1870 ஆம் ஆண்டுகளில் 70 சிறு பிரசுரங்களும் அச்சடிக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலும் மொழிபெயர்ப்புகள் ஆகும். இக்கால கட்டத்தில் அறிவியல் நூற்களும் மொழிபெயர்க்கப்பட்டன. (எ.கா. Domestic Animals ஊர்திரி விலங்கியல், Fishes - மச்சவியல். Wild Animals வனவிலங்கியல்)

இதே காலகட்டத்தில் இந்த மாவட்டம் நெய்யூர் ஊரினரான வேதக்கண் (1832-1892) என்பவர் மில்டனின் Paradise Lost என்னும் காவியத்தை ஆதி நந்தவனப் பிரளயம் என்னும் தலைப்பில் உரைநடை வடிவில் மொழிபெயர்த்திருக்கிறார். இதுபோன்று வேறு நூற்களும் உண்டு. 1843-இல் நாகர்கோவிலிலிருந்து வெளிவந்த மாதர்போதினி என்னும் பத்திரிகையில் ஆங்கிலச் சிறுகதைகளும் உடல்நலம் பேணும் முறை குறித்து கட்டுரைகளும் வந்தன. இவை மொழிபெயர்ப்புகள், Under Scourt என்பதற்கு அடிப்பாவாடை என்னும் புதிய சொல்லை இந்த இதழ் பயன்படுத்தியது.

இவற்றில் பெரும்பாலான மொழிபெயர்ப்புகள் வரிக்கு வரி ஆனவை அல்ல. பண்பாட்டுக்கு ஏற்ப வளைந்து கொடுத்தவை.

- அ.கா.பெருமாள்

Pin It