damodar mauzo

சிறப்பான இலக்கியப் பங்களிப்பிற்காக இந்திய மொழிப் படைப்பாளர்களுக்கு வழங்கப்படும் ஞானபீட விருது கொங்கணி எழுத்தாளர் தாமோதர் மாவ்ஜோவிற்கு 2021ஆம் ஆண்டு வழங்கப்பட்டிருக்கிறது. ஞானபீட விருது பெறும் இரண்டாவது கொங்கணி எழுத்தாளர் மாவ்ஜோ. முன்னர் 2006ஆம் ஆண்டு ரவீந்திர கேலேகார் என்ற கொங்கணி எழுத்தாளர் ஞானபீட விருதைப் பெற்றிருந்தார்.

கொங்கணி பாஷா மண்டல் விருது(1973,1976,1977), கோவா கலா அகாதமி விருது(1973), சாகித்ய அகாதமி விருது(1983), கதா இலக்கிய விருது(1998), ஜனகங்கா விருது (2003), விமலா பை சாகித்ய அகாதமி விருது (2011), கோவா மாநிலத் திரைப்பட விழாவில் வழங்கப்பெற்ற சிறந்த வசன ஆசிரியர் விருது (சிட்டோ -1997), சிறந்த திரைக்கதையாசிரியர் விருது (அலிஷா - 2005) எனப் பல விருதுகளின் தொடர்ச்சியாக ஞானபீட விருது அங்கீகாரத்தை தாமோதர் மாவ்ஜோ பெற்றிருக்கிறார்.

சிறுகதை, புதினம், வாழ்க்கை வரலாறு, குழந்தை இலக்கியம், விமர்சனம், திரைப்படங்களுக்குக் கதை, வசனம் எனப் பன்முக இலக்கியச் செயல்பாட்டாளராக அறியப்படுபவர் தாமோதர் மாவ்ஜோ. காந்தன், ஜாகரணா, ரூமடபூல், புர்கீ ம்ஹகேலீ தீ, சபன்மோகி, காணி ஏகா கோம்ஷேச்சி (சிறார் கதைத் தொகுப்பு), சித்தராங்கி (சிறார் கதைத் தொகுப்பு) முதலான கதைத் தொகுப்புகளும் கார்மேலீன், சூடு, சுனாமீ சைமன், ஏக் ஆஷில்லோ பாபூலோ (சிறார் புதினம்) முதலான புதினங்களும் இதுவரை இவரது எழுத்தில் வெளியாகியுள்ளன. அஷே கடலே ஷனாய் கோய்பாப், உஞ்ச் ஹாவேஸ் உஞ்ச் மாத்தே ஆகிய இரண்டு வாழ்க்கை வரலாற்று நூல்களையும் எழுதியுள்ளார்.

இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்பு கோவாவில் பிறந்த (1944) தாமோதர் மாவ்ஜோ மடுகாவில் பள்ளிப்படிப்பையும் மும்பை ஆர்.எ.போதர் கல்லூரியில் இளங்கலை வணிகவியலையும் முடித்தார். வணிகவியல் பட்டதாரியான ஷைலா என்பவரை 1968 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவருக்கு மூன்று மகள்கள். தற்போது இவர் தனது பிறந்த ஊரான மஜோர்டாவில் சொந்தமாகக் கடைவைத்துச் சிறுவணிகம் செய்து வருகிறார். தாய் மொழியான கொங்கணி தவிர ஆங்கிலம், ஹிந்தி, மராட்டி, போர்த்துக்கீசிய மொழிகளை இவர் அறிவார். பல மொழிகள் அறிந்த போதிலும் கொங்கணி மொழியிலே மிகுதியும் தனது படைப்புகளை எழுதி வருகிறார். இளம் பிராயத்தில் தந்தையை இழந்த மாவ்ஜோ அம்மாவின் அரவணைப்பில் வளர்ந்தவர். அம்மாவிடம் கேட்ட நாட்டுப்புறக் கதைகள்வழித் தன் புனைவாற்றலை வளர்த்துக்கொண்ட மாவ்ஜோ தனது வணிகப் பணியை முடித்துக் கொண்டு தாமதமான இரவுகளில் எழுதக்கூடியவர். நீண்ட இரவுகளால் தூக்கம் துறந்து எழுதப்பட்ட கதைகளே 'ஜாகரணா’ என்ற கதைத் தொகுப்பாக வெளியானது. எழுதப்பட்ட சூழ்நிலையே கதைத்தொகுப்பிற்குத் தலைப்பாக (ஜாகரணா) வைக்கப்பட்டது.

தன்னைச் சுற்றி நடக்கும் நிஜ நிகழ்வுகளையே தன் கதைகளுக்குக் கருவாக்கிக் கொள்ளும் மாவ்ஜோ மனித வாழ்க்கையில் நேரிடும் சிக்கல்களைத் துல்லியமான மனஉணர்களுடன் காட்சிப்படுத்துவதில் தேர்ந்தவர். கவித்துவமான, இயல்பான மொழிநடையை இவருடைய கதைகளில் காணலாம். கோவாவின் கிறிஸ்து, இந்துக் குடும்பப் பின்னணியிலேயே இவருடைய பெரும்பாலான கதைகள் காணப்படுகின்றன. சாகித்ய அகாதமி விருது பெற்ற கார்மேலீன் புதினம் மேற்கத்திய நாட்டிற்குப் பணிக்குச் சென்று தன் குழந்தையைக் காப்பாற்றும் தாயின் மனநிலையையும் மகளின் செயல்பாடுகளையும் இயல்பாகப் பதிவு செய்கிறது. தமிழகம், புதுவைகளில் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய சுனாமி குறித்த நிகழ்வுகளை இவருடைய சுனாமி சைமன் புதினம் விவரிக்கிறது. இவ்விரண்டு புதினங்களும் கிறிஸ்துவப் பின்னணியில் அமைந்தவையாகும்.

தும் வசூ நாக்கா (நீங்க போக வேண்டாம்) என்ற கதையே மாவ்ஜோவின் முதல் சிறுகதையாகும். இக்கதை நோவம் கோவம் என்ற இலக்கிய பத்திரிகையில் 1965 ஆம் ஆண்டு வெளியானது. அதனைத் தொடர்ந்து அசோக், மரணத்திற்கான காத்திருப்பு என்ற இரண்டு சிறுகதைகளும் வெளிவந்தன. கோவாவில் அதிகமாக வாழும் கிறிஸ்துவக் குடும்பங்களின் வாழ்க்கைச் சூழலும் குடும்ப உறவுச் சிக்கல்களுமே இவருடைய பெரும்பாலான கதைகளுக்கு அடிப்படையாக அமைகின்றன. சான்றாக மாவ்ஜோவின் முத்திரைச் சிறுகதையாக புர்கீ ம்ஹகேலீ தீ (என் குழந்தைகள்) என்னும் சிறுகதையைக் குறிப்பிடலாம். இச்சிறுகதை மேற்கத்திய நாடுகளுக்குப் பணி நிமித்தம் செல்வதன் மூலம் குடும்ப உறவில் நிகழும் பிரிவின் வேதனையையும் இடைவெளியையும் காட்சிப்படுத்துகிறது.

கொங்கணியிலிருந்து நேரடி மொழிபெயர்ப்பில் தமிழில் வெளியான முதல் படைப்பே தாமோதர் மாவ்ஜோவினுடையதுதான். சிடுமூஞ்சி என்ற பெயரில் அந்தக் கதை ‘திசை எட்டும்' சிற்றிதழில் (ஏப்ரல் - ஜூன் 2012) வெளியானது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் படர்ந்திருக்கும் அன்பினைச் சிலர் புறபாவனைகளில் வெளிப்படுத்துவர். பலர் வெளிப்படுத்துவதில்லை. புற அடையாளங்களின் மூலம் உலகிற்குத் தெரியப்படுத்தப்படாத அன்பு சமூகத்தினரால் பல நேரங்களில் அறிந்து கொள்ளப்படுவதில்லை. அன்பினை வெளிக்காட்டாத இவர்களைச் சிடுமூஞ்சி எனவும் முசுடு எனவும் இவ்வுலகம் தூற்றும். புற அடையாளங்களின் மூலம் அன்பை வெளிக்காட்டாத ஒருவரை மையப்படுத்தி எழுதப்பெற்றதே சிடுமூஞ்சி என்ற கதை. தன் பேரக்குழந்தையின் மரணத்தை அந்தச் சிடுமூஞ்சி கதாபாத்திரம் எதிர்கொள்ளும் விதமே கதை. இதைச் சிந்திக்கத் தூண்டும் சிந்தனைகளுடன் இயல்பாக மாவ்ஜோ பதிவு செய்திருப்பார். இயல்பான, எளிமையான மொழிநடையையும் நேர்த்தியான கதைப் பின்னலையும் கதையில் காணலாம்.

தாமோதர் மாவ்ஜோவின் மற்மொறு முத்திரைச் சிறுகதை வேளே வயலீ ரேவே கரா (கடற்கரை மணம் வீடுகள்). நேரடி மொழிபெயர்ப்பில் இதுவும் தமிழில் வெளியாகியுள்ளது (மணற்கேணி செப்டம்பர் - அக்டோபர் 2012). இச்சிறுகதையும் மாவ்ஜோவின் படைப்புத் திறனுக்குச் சான்றாக அமைகிறது. மரணம் நிச்சயிக்கப்பட்ட ஒரு மனிதர் தன் வாழ்வை எப்படி எதிர்கொள்கிறார் என்பதை இக்கதை எடுத்துக்காட்டுகிறது. விருப்பங்கள் அதிகம் கொண்ட ஒரு மருத்துவர் தனக்கு ஏற்பட்ட நோயினால் மரணத்திற்கான நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார். இடைப்பட்ட காலத்தில் அவர் தன் வாழ்வில் சந்திக்கும் நிகழ்வுகளே கதை. தவிர்க்க முடியாத மரணத்திற்காக வருந்தி வாழ்வதை விட வரமான நாட்களைச் சிறப்பாகச் செலவிடுதலே இனிமை என்பதே இக்கதையின் மையக் கருத்தாக அமைகிறது. தன் மழலையின் வார்த்தைகளால் வாழ்க்கைக்கான புதிய பார்வையைப் பாதிப்புக்குள்ளான அந்த மனிதர் பெறுவதாகக் கதையை நிறைவு செய்திருப்பார் மாவ்ஜோ.

இவருடைய கதைகள் மனதை வருடச் செய்யும் உயிர்ப்பான கதைகளாகும். கதையில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் ஊரில் எங்காவது ஓரிடத்தில் நாம் பார்த்த, சந்தித்த மனிதர்களாகவே இருக்கிறார்கள். படித்தபின்னர் மனது அந்தத் தொலைந்த மனிதர்களை நோக்கிப் பயணம் செய்ய ஆரம்பித்து விடுகிறது. கதையின் கவித்துவமான முடிவுகளே சீரிய இலக்கிய அங்கீகாரத்தை இவருடைய கதைகளுக்குப் பெற்றுத் தருகின்றன. கொங்கணி இலக்கியத்தில் இவருடைய கதைகள் தனித்துவமிக்கவையாகப் போற்றப்பெறுகின்றன.

ஒரு மொழியின் வளர்ச்சியை ஆராயும் அளவுகோல்களில் அம்மொழியிலுள்ள குழந்தை இலக்கியத்தின் போக்கும் வளர்ச்சியும் கவனிக்கத்தக்க கூறுகள். ஏனெனில் குழந்தைகளுக்கான மொழித் திறன் வளர்ச்சியில் குழந்தை இலக்கியத்தின் பங்கு இன்றியமையாதது. குழந்தைகளின் மொழித்திறன் வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் நோக்குடன் இரண்டு சிறுகதைத் தொகுப்புகளை (காணி ஏகா கோம்ஷேச்சி, சித்தராங்கி) வெளியிட்டுள்ளார். தன் நிலத்தின் ஆளுமைகள் குறித்த தகவல்களைத் திரட்டி அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் வகையில் வாழ்க்கை வரலாறு சார்ந்தும் இரண்டு நூல்களை வெளிக்கொணர்ந்துள்ளார் மாவ்ஜோ. அதிலொன்று கொங்கணி இலக்கியத்தின் தந்தையாகப் போற்றப்படும் ஷனாய் கோய்பாப் பற்றிய ஒரு வாழ்க்கை வரலாறு.

எழுத்துகளால் மட்டுமின்றித் தன்னுடைய சமூகச் செயல்பாடுகளாலும் அறியப்பெற்றவர் மாவ்ஜோ. கோவா தனிப்பகுதியாகத் தொடர்வது குறித்து 1967 ஆம் ஆண்டு நடந்த பொது வாக்கெடுப்பில் கோவாவுக்கு ஆதரவாக மக்களை ஒருங்கிணைத்த செயல்பாட்டில் இவருடைய பணிகள் நினைவுகூரப்படுகின்றன. தொடர்ந்து 1987 இல் கோவா தனி மாநிலமாக உருவாகவும் கொங்கணி மொழி 1992 இல் எட்டாவது அட்டவணைப் பட்டியலில் இடம்பெறவும் இவருடைய ஒருங்கிணைப்புச் செயல்பாடுகள் குறிப்பிடத்தக்கவை.

மூத்த கன்னட எழுத்தாளர் எம்.எம்.கல்புர்கி ஆகஸ்டு, 2015 இல் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து சாகித்ய அகாதமி குரல் கொடுக்க வேண்டுமென அகாதமித் தலைவருக்குக் கடிதம் எழுதினார் தாமோதர் மாவ்ஜோ. ‘தலைசிறந்த எழுத்தாளர்களின் கூட்டமைப்பான சாகித்ய அகாதமி கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக நடக்கும் பிரச்சனைகளில் அமைதியாக இருக்கக் கூடாது’ என்று காட்டமாகத் தனது கருத்தைப் பதிவு செய்தார். 2017 இல் நிகழ்ந்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலையை விசாரித்த கர்நாடகா சிறப்புப் புலனாய்வுத் துறை தாமோதர் மாவ்ஜோ உயிருக்கு இருக்கும் அபாயத்தைத் தெரிவித்திருந்தது. வலதுசாரி அமைப்புக்குத் தடை விதிக்க அரசை வலியுறுத்திய மாவ்ஜோ ‘எந்தத் துப்பாக்கிக் குண்டுகளாலும் ஒரு எண்ணத்தைக் கொல்ல முடியாது’ என்று வினையாற்றினார். பின்னர் மாவ்ஜோவுக்கும் குடும்பத்தாருக்கும் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டது.

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவாவின் வரலாற்றைத் திரித்துத் தொடர்ந்து செய்திகள் பகிரப்பட்டபோது ‘தக்.ஷிணாயன் அபியான்’ என்ற எழுத்தாளர்களின் கூட்டமைப்பின் மூலம் இந்தியக் குடியரசுத் தலைவருக்குக் கண்டனக் கடிதம் எழுதப்பட்டது. அந்த அமைப்பின் முக்கியமான செயல்பாட்டாளர் தாமோதர் மாவ்ஜோ. மறுப்பை எப்போதும் தனது எழுத்துகளின் வழி வெளிப்படுத்த தயங்குவதில்லை மாவ்ஜோ. மொழி, இலக்கியம், சுதந்திரத்திற்கான அவரின் எழுத்துகள் தொகுக்கப்பெற்று நூலாக (Ink of Dissent: Crtitical Writings on Langauge, Literature and Freedom) வெளிவந்துள்ளதே அதற்குச் சான்று. சாகித்ய அகாதமி, கோவா கொங்கணி அகாதமி, கோவா எழுத்தாளர்கள் சங்கம், கொங்கணி பாஷா மண்டல் முதலான அமைப்புகளில் பொறுப்பாளராகச் செயலாற்றுகிற வேளையில் மொழி, இலக்கியம், பண்பாட்டுத் தளங்களில் தான் சார்ந்த சமூகத்தை மேலேற்றிவிடுகிற பணியில் தீவிரமாக இயங்கியவர் மாவ்ஜோ.

தனிப்பட்ட பண்பு முறையிலும் தாமோதர் மாவ்ஜோ மேன்மையானவர். என்னுடைய ஆய்வுக்காக மாவ்ஜோவை கோவாவில் அவருடைய இல்லத்தில் சந்தித்து உரையாடியிருக்கிறேன் (டிசம்பர் 25, 2010). ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவராகப் பயின்ற நாட்களில் ஒருமுறை அவரைச் சொற்பொழிவாற்றுவதற்கு அழைத்த போதும் தமிழ்ச் சிற்றிதழுக்காக நேர்காணல் ஒன்றைக் கோரியபோதும் மறுக்காமல் இசைவு தந்து உதவி செய்தார். இந்த அனுபவங்களின் வழி அவரைத் தொகுத்துக் கூறவிரும்பினால் முன்னால் வந்து நிற்பது அவருடைய எளிமையும் அந்தப் புன்னகையும்தான்.

தனக்குள் உருவாகும் சிறு பொறியைக் கவித்துவமாகத் தொகுத்துக் கதையாக்குவதில் தேர்ந்த எழுத்தாளரான தாமோதர் மாவ்ஜோ தன்னைக் கடக்கும் இயல்பான மனிதர்களைத் தன் எழுத்துகளில் வார்த்து வாசகனுக்கு நல்ல அனுபவத்தை அளிக்கும் தனித்துவமான படைப்பாளியாகவும் தனிப்பட்ட முறையில் உயரிய பண்பாளராகவும் எளிய மக்களின் குரலாகக் களத்திலே செயல்பாடும் எழுத்துப் போராளியாகவும் திகழ்கிறார். இன்று கொங்கணியின் அடையாளமாகி யிருக்கும் மாவ்ஜோ மொழியைக் கடந்து அனைவருக்கும் நம்பிக்கை அளிக்கக்கூடியவராக இருக்கிறார். ஏனெனில் அவரின் குரல் எளியவர்களுக்கானதாக இருக்கிறது.

பயன்பட்ட தரவுகள்

  • தமிழ்ச்செல்வன் இரா. (213), ‘கொங்கணி எழுத்தாளர் தாமோதர் மாவ்ஜோவின் பதில்கள்', திசை எட்டும், குறிஞ்சிப்பாடி, (அக்டோபர் - டிசம்பர் 2013).
  • தமிழ்ச்செல்வன் இரா. (2011) ‘இரு கொங்கணிச் சிறுகதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பும் சிக்கல்களும்’ ஆய்வு நிறைஞர் பட்ட ஆய்வேடு, புதுதில்லி: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்.

- இரா.தமிழ்ச்செல்வன்

Pin It