குழந்தைகள் வாழ்வில் சிறக்க வழி சொல்லும் பாரதி ‘பொய் சொல்லக் கூடாது பாப்பா’ என்றும் சொல்லுகிறான். நற்பண்புகளும் பழக்கங்களும் அமையப்பெற்று வாழும் மனிதன் இந்த சமூகத்திற்குக் கிடைத்த வரம் எனலாம். நற்பண்புகளில் எல்லாம் தலையானது உண்மை பேசுதல் அல்லது பொய் சொல்லாமை என்பதுதான். திருவள்ளுவரும் யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற என்று சொல்லுகிறார். அதாவது வாய்மையைப் போல் சிறந்த பண்பு வேறு ஒன்றும் இல்லை என்கிறார்.
ஆனால் மனித வாழ்வில் யாரும் பிறந்ததிலிருந்து உண்மை மட்டுமே பேசுவதில்லை. மாறாகப் பொய் பேசும் பழக்கமும் நமக்கு சிறுவயதில் இருந்தே வந்து விடுகிறது. எப்போது குழந்தைகள் பொய் பேசக் கற்றுக் கொள்கிறார்கள் என்பதையும், பெற்றோர்களான நாம் அவர்களுக்கு எப்படி உண்மையைப் பேசச் சொல்லி நேர்மையைச் சொல்லிக் கொடுக்கலாம் என்பதையும் இக்கட்டுரையில் பார்ப்போம்.
பெற்றோர்களுக்கு முதல் இரண்டு மூன்று வருடங்கள் குழந்தை வளர்ப்பது சற்று எளிதாகவே இருக்கிறது என்றே கூறலாம். குழந்தையும் பேசவும் நடக்கவும் கற்றுக்கொண்டு, மூறு வயது ஆனவுடன் இந்த உலகத்தை ஆராய ஆரம்பித்து விடுகிறது. ஒவ்வொரு விஷயத்துக்கும் ஏன், எதற்கு, எப்படி என்று பெற்றோரைக் கேள்வி மேல் கேள்வி கேட்கத் தொடங்கி விடுகிறது. ஒவ்வொரு கேள்விக்கும் நம்மால் தொடர்ந்து பதில் சொல்ல முடிவதில்லை. கொஞ்சம் வாயை மூடுகிறாயா? என்று குழந்தையிடம் நாம் கோபமாய் பேசும்போது, குழந்தை பயத்தில் மௌனமாகிறதே ஒழிய, நம்மை சற்று அதிகமாகவே கண்காணிக்க ஆரம்பித்து விடுகிறது.
குழந்தை ஒரு பொம்மைக்கு அடம் பிடிக்கும் போது நாளைக்கு ஆபீஸ் விட்டு வரும்போது கட்டாயம் பொம்மையோடு வருகிறேன் என்று அப்பா குழந்தையிடம் உறுதிமொழி கொடுத்து விட்டு மறுநாள் வெறுங்கையோடு வரும்போது குழந்தை முதலில் ஏமாற்றம் அடைகிறது. அப்பாவின் சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள முரண்பாட்டை புரிந்து கொள்ள முயல்கிறது. அப்பா சொன்னது பொய் என்று மெல்ல மெல்லத் தெரிந்து கொள்கிறது. ஆனால் புரிவதற்குத்தான் சற்றுத் தாமதமாகிறது. வீட்டிற்கு வெளியே நிற்கும் பக்கத்து வீட்டு அங்கிளிடம் அப்பா வீட்டில் இல்லை என்று சொல்லுடா' (வீட்டில் இருந்து கொண்டே) என்று அப்பா பையனிடம் அதிகாரமாகச் சொல்லும்போது குழந்தை மெல்ல மெல்ல அப்பாவின் பொய் சொல்லும் திறமையைக் கண்டு கொள்கிறது.
பொய் சொல்வது ஒரு பரிணாம வளர்ச்சியா?
எதிராளி கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்கும் போது, நடந்த நிகழ்வைச் சொல்லாமல் மனமறிந்து அவரை ஏமாற்றும் விதமாக உண்மையை மறைத்து சொல்வதுதான் பொய் எனப்படுகிறது. விலங்கியல் ஆராய்ச்சியாளர்களும் மனித இனத்தின் தோற்றத்தைப் பற்றி ஆராயும் மானுடவியல் நிபுணர்களும், ஆராய்ந்ததில் விலங்குகளில் நமக்கு முன்னோடியான சிம்பன்சி வகைக் குரங்குகளுக்கு பொய்யான சிக்னல்கள் கொடுத்து மற்ற குரங்குகளை ஏமாற்றும் திறமை இருப்பதைக் கண்டனர். அங்கே இருந்து வந்தவர்கள் தானே நாமும். நமக்கும் அந்த DNA இருக்கத்தானே செய்யும். எனவே பொய் சொல்லும் திறமை நமக்கும் தானாகவே வந்து விடும். பரிணாம வளர்ச்சி பற்றி ஆராய்ந்த டார்வின் இயற்கையிலேயே எல்லா உயிரினங்களுக்கும் எப்படியாவது இந்த உலகில் உயிர் பிழைத்து வாழ்ந்து விட வேண்டும் என்ற உள்ளுணர்வு (SURVIVAL OF THE FITTEST) இருப்பதாகக் கூறுகிறார். மனிதனும் இந்த உணர்வால் உந்தப்பட்டு வாழ முயலும் போது பொய் சொல்லும் திறனையும் ஒரு ஆயுதமாக்கிக் கொள்கிறான்.
குழந்தைகளை வைத்து மனவியலாளர்கள் ஒரு வினோதமான ஆராய்ச்சியை மேற்கொண்டார்கள். 1989ல் லூயிஸ்ஸும் மற்றவர்களும் சேர்ந்து குழந்தைகளின் ஆசையைத் தூண்டும் விதமாக ஒரு பரிசோதனையைச் செய்தார்கள். 3 லிருந்து 5 வயது வரை உள்ள குழந்தைகளைத் தேர்வு செய்து ஒவ்வொருவரிடமும் ஒரு பொம்மையை அட்டைப் பெட்டிக்குள் வைத்து மூடிக் கொடுத்தார்கள். உள்ளே இருக்கும் பொம்மையை யாரும் பார்க்கக் கூடாது என்று சொல்லி விட்டு அந்த அறையை விட்டு வெளியில் வந்து விட்டார்கள். சற்று நேரம் கழித்து மீண்டும் உள்ளே போய் யார் யார் பெட்டியைத் திறந்து பொம்மையைப் பார்த்தீர்கள் என்று கேட்ட போது, நிறைய குழந்தைகள் பொம்மையைப் பார்த்திருந்தாலும் பார்க்கவில்லை என்றே பொய் சொன்னார்கள். இவர்களுக்குத் தாங்கள் சொல்வது உண்மையில்லை என்று தெரிந்தும் பொம்மை மீது உள்ள ஆசையால் பெட்டியைத் திறக்க வில்லை என்று கூறினார்கள். வயதைக் கவனியுங்கள், மூன்று. பொய் பேச ஆரம்பிக்கும் வயது. ஆனாலும் அடுத்தவரிடம் உண்மையை மறைத்துத் திறமையாகப் பொய் பேசக் கற்றுக் கொள்வது எல்லாம் பத்து வயதுக்குப் பிறகுதான்.
குழந்தைகள் பொய் சொல்லக் கற்றுக் கொள்வது அவர்கள் சமூகத்தோடு பழக முயற்சிக்கும் மன வளர்ச்சியின் ஒரு படியாகவே மனவியலாளர்கள் கருதுகிறார்கள். 2-3 வயதில் குழந்தை உண்மை பேச வேண்டும் என்று எதிர்பார்க்கத் தேவையில்லை. ஆனாலும் ஒரு நான்கு வயது குழந்தையால் பொய் சொல்லுவது நல்ல பழக்கம் இல்லை என்று தெளிவாகக் கூற முடியும். ஐந்து வயதிலிருந்து 7-8 வயது வரையிலும் குழந்தைகள் மீடியாக்களில் வரும் கற்பனைக் காட்சிகளையும் உண்மை என நம்பி அதுபோல தாங்களும் செய்ததாகப் பொய் சொல்வது உண்டு. அதேபோல் கேட்கும் பெற்றோர்கள் ஆச்சரியப்படுவார்கள், நம்மைப் பாராட்டுவார்கள் என்று எண்ணி உண்மை நிகழ்வுகளைக் கூட, மிகைப்படுத்தி பொய்களையும் சேர்த்துச் சொல்வார்கள். கேட்பவர்கள் தான் இவைகளில் எது உண்மை, எது பொய் என தீர்மானிக்க வேண்டும். நம் அன்றாட வாழ்வில் நடக்கும் கிண்டல், கேலி, யூகித்தல் போன்றவைகளிலும் நிறைய பொய்கள் இருக்கும். இம்மாதிரியான பொய்களால் யாருக்கும் எந்தத் தீமையும் இல்லை. இவையெல்லாம் குழந்தை இந்த சமூகத்தோடு பழகக் கற்றுக் கொள்ளும் வழிகளாகவே எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.
பொய் எப்போது குற்றமாகிறது?
பத்து வயது ஆன பிறகும் ஒரு குழந்தை தொடர்ந்து பொய் சொல்லும்போது நாம் அதைப் பற்றிக் கவலைப் படாமல் இருக்க முடிவதில்லை. ஒரு டீன் ஏஜ் பையனோ, பெண்ணோ பொய்யை மிக நேர்த்தியாகச் சொல்லக் கற்றுக் கொள்கிறார்கள். இந்த வயதினர்கள் பிறருக்கோ சமூகத்திற்கோ நன்மை பயக்கும் படியாகச் சொல்லும் பொய்கள் எல்லாம் பொய் என்ற வட்டத்திற்குள்ளே வருவதில்லை. சமூகமும் மற்றவர்களுக்குத் தீங்கு இல்லாத வரையில் இதைக் கண்டு கொள்வதில்லை. ஆனால் இந்த வயது உடையவர்கள் பெற்றோரையோ, சமூகத்தையோ எதிர்த்து நிற்கும் போது, அல்லது தண்டனையில் இருந்து தப்புவதற்கு, அல்லது ஏதாவது ஆதாயம் அடைவதற்கு அல்லது பிறருக்குத் தீங்கு உண்டாக்குவதற்கோ கூட மனதாரப் பொய் சொல்லி அதை உண்மை என்றே கடைசி வரை வாதாடுவார்கள்.
ஆக பொய் சொல்வதையே இரண்டு வகையாகப் பிரிக்கலாம். 1. பிறருக்குத் தீங்கு விளைவிக்காத பொய்கள். 2. தீங்கு விளைவிக்கும் பொய்கள்.
இவ்வுலகில் எப்படியாகிலும் பிழைத்து வாழ வேண்டும் என்று போராடி வளரும் குழந்தை 3 வயது ஆகும்போது, அதன் ஒவ்வொரு திறனும் வளரும் போது இந்த பொய் சொல்லும் திறமையும் வந்து விடுகிறது. சொல்லக்கூடிய பொய் மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிக்காமல், நன்மை மட்டுமே பயக்கும் போது சமுதாயமும் அதை அங்கீகரித்து விடுகிறது. இடம் பொருள் ஏவல் பார்த்து சமுதாயத்தால் அங்கீகரிக்கப்பட்ட முறையில் பொய் சொல்லுவது ஒரு குற்றமாகப் பார்க்கப்படுவது இல்லை. இதைத்தான் திருவள்ளுவரும் 'பொய்மையும் வாய்மையிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்குமெனின்' என்று அன்றே சொல்லி விட்டார். ஆனால் அந்த பொய்யினால் மற்றவர்களுக்கு தீங்கு வரும் போது மாறாக சமுதாயம் தண்டிக்க முயல்கிறது.
என்ன காரணம்?
குழந்தைகள் பொய் சொல்வதைக் கற்றுக் கொண்டு அதையே பழக்கமாக்கிக் கொள்ளும் போது பின்னாளில் சமூகத்தால் நிராகரிக்கப்படுகிறார்கள். இதற்கான காரணங்களை ஆராயும் போது முதலில் இருப்பது, அமைதியில்லாத பாதுகாப்பற்ற குடும்ப சூழ்நிலைதான். அடுத்து, அங்கே ரோல் மாடல் பெற்றோர்கள் இல்லாதது. எந்த நேரத்திலும் உண்மைதான் சொல்ல வேண்டும், பொய் சொல்லத் தேவையில்லை என்று வாழ்ந்து காட்டும் பெற்றோர்கள் இல்லை. குழந்தைகள் பொய் சொல்லும் போதெல்லாம் கண்டிக்காமல் ‘எவ்வளவு புத்திசாலி என் பிள்ளை' என்று பாராட்டும் பெற்றவர்களாக இருக்கலாம். இம்மாதிரி குழந்தைகள் விடலைப் பருவத்தை அடையும் போது, வெளி உலகத்தின் தாக்கமும் வேண்டாத நண்பர்களின் பழக்கமும் சேர்ந்து தவறான பாதைக்கு திசை திருப்பி விடுகின்றன.
எப்படித் திருத்துவது?
எட்டு வயது வரையிலும் பொய் சொல்வதை பெரிய குற்றமாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. அதனால் எட்டு வயது வரையிலும் எதுவும் செய்யாமல் இருந்து விட்டு திடீரென்று எட்டு வயதில் சொல்லிக் கொடுத்து விடலாம் என்றாலும் முடியாது. ஐந்தில் வளைக்க முடியாததை ஐம்பதிலா வளைக்கப் போகிறோம்? எனவே 3 வயதிலிருந்தே குழந்தைக்கு உண்மையைச் சொல்லும்படி பழக்கப்படுத்த வேண்டும். பொய் சொல்லி விட்டது என்பதற்காக பெரிய தண்டனை எல்லாம் கொடுத்து பயமுறுத்தி வளர்க்கக் கூடாது. குழந்தையின் நிலைக்கு பெற்றோர்கள் இறங்கி வந்து அவர்களுக்கு புரியும்படி சொன்னாலே போதும். முக்கியமாக குழந்தைகளின் சொல்லுக்கும் செயலுக்கும் அவர்கள் பொறுப்பேற்றுக் கொள்ளுமாறு பழக்க வேண்டும். நாளடைவில் அவர்களும் எந்த நிலையிலும் உண்மையைச் சொல்ல பயப்பட மாட்டார்கள். அதை விடுத்து பொய் சொல்லும் போதெல்லாம் குழந்தையைக் கண்டிக்காமலும், புரிய வைக்காமலும் எல்லாம் போகப் போக சரியாகி விடும் என்று இருப்பது சரியல்ல. முதலில் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு முன்னுதாரணமாக இருந்தால்தான் உண்மை, நேர்மை போன்ற குணங்களோடு குழந்தையும் வளரும். நினைவு இருக்கட்டும். குழந்தைகள் உங்களைக் கவனித்துதான் வளர்கிறார்களே ஒழிய உங்கள் பேச்சைக் கேட்டு அல்ல.
ஒரு டீன் ஏஜ் பையனோ பெண்ணோ பொய் சொல்லுவதையே பழக்கமாக்கிக் கொள்ளும்போது (HABITUAL LIARS) சமூகம் அவர்களை திருத்தப் பார்க்கிறது, முடியாத போது தண்டித்து விடுகிறது. ஒரு இளம் குற்றவாளி உருவாவதற்கான சூழலும் வந்து விடுகிறது. அப்போது எங்கே தவறு நடந்தது என்று கண்டு பிடிக்க அனைவரும் முயல்கின்றனர். கவனித்து வளர்ந்த குடும்ப சூழல் சரியில்லையா அல்லது படித்த பள்ளிக்கூடத்தில் உண்மையைப் பேச வேண்டும் என்று சொல்லித் தரவில்லையா அல்லது வாழும் சமூகம் தான் சொல்லிக் கொடுக்கவில்லையா? என்று ஒருத்தரை ஒருத்தர் குற்றம் சொல்லிக்கொள்ளும் நிலைமைதான் கடைசியில்.
- மருத்துவர். ப.வைத்திலிங்கம், குழந்தைகள் நல மருத்துவர்.