கலை நிகழ்வுகளோடு அறிவுத் திறன் பெற்ற குழந்தைகள் கண்ணீருடன் பிரியா விடை

தமிழ்நாடு அறிவியல் மன்றத்தின் நான்காம் ஆண்டு குழந்தைகள் பழகு மகிழ்வு முகாம் 20.05.2016 முதல் 24.05.2016 முடிய திண்டுக்கல் காட்டுமடத்தில் உள்ள ஐ.சி.எம். ஹவுசில் நடை பெற்றது. திருப்பூர், கோவை,மேட்டூர், தஞ்சாவூர், நாகை,மதுரை, போன்ற மாவட்டங்களிலிருந்து 42 குழந்தைகள்கலந்து கொண்டனர்.19.05.2016 மாலையே பெரும்பாலான குழந்தைகள் முகாம் நடக்கும் இடத்திற்கு வந்துவிட்டனர்.

20.5.2016 : முதல்நாள் காலை குழந்தைகளின் பெயர் முகவரி பதிவு செய்யப்பட்டது. மதுரை யாழினி  நிகழ்வுகளை தொடங்கி வைத்தார். பயிலரங்க அறிமுகம் நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல்  மன்றத்தின் நோக்கம், செயல்பாடுகள், தனித் தன்மைகளை விளக்கி ஆசிரியர் சிவகாமி பயிலரங்கை அறிமுகம் செய்தார்.

பின்னர் குழந்தைகள் ஒருவர் மற்றொருவரைப் பற்றி அறிமுகம் செய்து கொள்ளும் விதமாக சுய அறிமுகம் வகுப்பு விளையாட்டு முறையில் நடத்தப்பட்டது. இவ்வகுப்பினை சந்திரமோகன் மற்றும் நீலாவதி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். பிற்பகல் தோழர் பூங்குழலி, 13-15 வயது குழந்தைகளுக்கு Critical thinking என்னும் பகுத்தறிவு சிந்தனை குறித்து வகுப்பெடுத்தார்.

பின்னர் அதே வயது ஆண் குழந்தைகளிடம் பாலின சமத்துவம் குறித்து கலந்துரையாடினார். பெண் குழந்தைகளுக்கு ஆசிரியர் சிவகாமி ‘பாலின சமத்துவம்’ குறித்து வகுப்பு எடுத்தார். 10-12 வயது குழந்தைகளுக்கு தன்னையறிதல் தலைப்பில் குழந்தைகள் தங்களுக்குள் இருக்கும் தனித்திறன்களை அடையாளம் காண்பது குறித்து விளையாட்டு மற்றும் பிற செயல்பாடுகள் மூலம் நெறியாளர் சந்திரமோகன் விளக்கினார்.

21.05.2016 : இரண்டாம் நாள் காலை நிகழ்வு 9.30 மணிக்குத் தொடங்கியது. முதல் நாள் வகுப்புகள் குறித்த விமர்சனங்களை குழந்தைகள் மீளாய்வு செய்தனர். கோவை வெங்கட், திருப்பூர் சதீஷ்குமார் கதை சொல்லல் நிகழ்வை நிகழ்த்தினர். ஒரு கதையை எவ்வாறு உணர்வுப்பூர்வமாகவும், நடிப்பு கலந்தும் கூறுவது என்பதை செய்து காட்டினார். பிற்பகல் நிகழ்வில் இயற்கையில் கிடைக்கும் பொருட்கள் மூலம் குழந்தைகள் தங்களுக்குத் தோன்றிய உருவத்தை தரையில் உருவாக்கினார்கள். பின்னர்அதிலிருந்து கதை, பாடல்களை தங்களின் கற்பனையில் வடிவமாக்கி வழங்கினார்கள். 5 குழுக் களாக

இந்நிகழ்வு நடத்தப்பட்டது. ஒரு குழு பிற குழுக்களுடன் தங்கள் கதையைப் பகிர்ந்து கொண்டனர். இறுதியில் கதை சொல்லல் வகுப்பின் நிறை குறைகளையும் குழந்தைகள் கூறினர். மாலை வகுப்பு - ‘மூடநம்பிக்கைள், சடங்குகள் நம் வாழ்விற்கு தேவையா?’ என்பது குறித்த விவாதமாக நடைபெற்றது. மொத்த மாணவர்களும் இரு குழுவாகப் பிரிந்து ஒரு குழு சடங்குகள் தேவையென்றும் மற்றொரு குழு சடங்குகள் தேவையில்லை என்றும் வாதிட்டனர்.

இதில் மிக அருமையான மாற்றத்தை காணமுடிந்தது. விவாத தொடக்கத்தில் சடங்குகள் தமிழர் கலாச்சார மென்றும் உறவுகளின் ஒன்று கூடல் என்றும் வாதிட்ட குழந்தைகள் இறுதியில் காலத்திற்கும், அறிவிற்கும் ஒவ்வாத சடங்குகளைப் புறந்தள்ள வேண்டும் என்றும், பெண்ணடிமைச் சடங்குகளை அறவே விட்டொழிக்க வேண்டும். அதற்கும் ஆண்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் பேசியது  நெறியாளர்களை வியக்க செய்தது. குழந்தைகளின்  நேர்மையான அணுகுமுறையைப் பாராட்டினர்.  இந்நிகழ்வினை சிவகாமி ஒருங்கிணைத்தார்.  

22.5.2016 - மூன்றாம் நாள் சுற்றுலா நாள்.  காலை 7 மணி முதலே குழந்தைகள் தயாரானார்கள்.  இரண்டு வண்டிகளில் உணவு, தண்ணீருடன் புறப்பட்டனர். முதலில் புதுக்கோட்டையிலுள்ள அருங்காட்சியகத்திற்குச் சென்றனர். மிகுந்த பயனுடைய இடமாக இருந்தது. பண்டைய தமிழர்பண்பாடு, கலை வேலைப்பாடுகள், ஓவியங்கள், கருவிகள், சிலைகள், தொல்பொருட்கள், ஆபரணங்கள் அனைத்தும் அனைவரையும் கவரும் விதமாக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

டைனோசர் ஒன்று இயங்கும் மாதிரியாகச் செய்து வைக்கப்பட்டிருந்தது. அக்காட்சியகத்தின் பொறுப்பாளர் மிகுந்த அன்போடும், பரிவோடும் குழந்தைகளை வரவேற்று உபசரித்தார். பின்னர் சித்தன்னவாசல் குகை ஓவியம் பார்க்கச் சென்றனர். மதிய உணவிற்கு பின்னர் அங்கிருந்த பூங்காவில் பல்வேறு விளையாட்டுக்களை விளையாடினர்.

மாலை வெயில் குறைந்ததும் மலையில் ஏறி ஓவியங்களைப் பார்வையிட்டனர். அங்கிருந்த வழிகாட்டி ஓவியங்கள் குறித்தும் அங்கிருந்த அறையின் அறிவியல் நுட்பம் குறித்தும் விளக்கினார். நீங்காத வியப்போடும். ஆடல், பாடலுடனும் சுற்றுலாக் கொண்டாட்டம் இனிதே நிறை வடைந்தது.

23.5.2016 - நான்காம் நாள் காலை 10.30 மணிக்கு  முகாம் தொடங்கியது. வகுப்பு, சுற்றுலா நாள் குறித்த மீளாய்வு நடத்தப்பட்டது. பிறகு வாசிப்பும் விமர்சனமுமாக வகுப்புகள் தொடங்கின. பல்வேறு தலைப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் வைக்கப்பட்டன.

குழந்தைகள் தங்களுக்கு பிடித்த நூல்களைப் படித்தனர். பின் ஒவ்வொருவராக அந்நூல் குறித்து தங்களது கருத்துக்களை வெளியிட்டனர். இதுவரை எந்த புத்தகமும் படித்ததில்லை என்றும் இனிமேல் படிக்கப்போவதாகவும் சில குழந்தைகள் கூறினர். இந்நிகழ்வை சிவகாமி ஒருங்கிணைத்தார்.

மதிய உணவிற்குப் பின்னர் 13-15 வயது குழந்தை களுக்கு சமூக சிற்பிகள் என்ற வகுப்பை தமிழ்செல்வன் ஒருங்கிணைத்து நடத்தினார். குழந்தைகள் 5 குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவும் புத்தர், அம்பேத்கர், பெரியார், சாவித்திரி பாய்புலே, முத்துலட்சுமி அம்மையார் ஆகியோரைப் பற்றி கலந்துரையாடினர்.

பின் தமது கருத்துக்களைப் பிற குழுக்களுக்குக் கூறினர். அய்யங்களைத் தெளிவு படுத்தினர். 10-12 வயது குழந்தைகள் நினைவாற்றலுக்கான விளையாட்டுக்களை சந்திரமோகன் நிகழ்த்தினார். முகாம் நடைபெற்ற நாட்களில் மாலை 6.30 லிருந்து 8 மணி வரை பல்கலை அரங்கமாக பாடல் வகுப்புகளை யாழினி, ஓவிய வகுப்புகளை சிகரன், நாடக வகுப்புகளை விரிவுரையாளர் சந்திரமோகன் ஒருங்கிணைத்தனர். குழந்தைகளிடம் சிறந்த தாக்கங்களை உருவாக்கியதை இறுதி நாள் நிகழ்வுகளில் உணர முடிந்தது.

ஒவ்வொரு நாள் மாலை 5.30 முதல் 6.30 வரை விளையாட்டு மைதானத்தில் டென்னிகாய்ட், நீளம் தாண்டுதல், பந்து விளையாட்டு, கயிறாட்டம் என விளையாட்டுகள் நடத்தப்பட்டன. தினமும் மாலை 6.30 மணிமுதல் 7.30 வரையிலும் உடற்பயிற்சிகளும் விளையாட்டுகளும் நடந்தன.

24.5.2016 - இறுதி நாள் நிகழ்வு காலை 10.00 மணிக்குத் தொடங்கியது. முகாமின் நிறைகுறைகள் முகாம் சிறக்க ஆலோசனைகள் ஆகியவற்றை குழந்தைகள் வழங்கினர். ஒரு நாடகம் நிகழ்த்தப்பட்டது. புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் பாடல்கள் பாடப்பட்டன. ஓவியங்களும் மாணவர்களின் பிற செயல்பாடுகளும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மதிய உணவிற்குப் பின்னர் வந்திருந்த பெற்றோர்கள் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்தனர்.

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்பு விருந்தினராக அழைக்கப் பட்டிருந்தார். சான்றிதழ், புகைப்படம், வரவு செலவு அறிக்கை மற்றும் சமூக சிற்பிகளின் விவரத்தொகுப்பு அடங்கிய ஒரு புத்தகம், ஒரு கோப்பு ஆகியவை அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டன.

புகைப்படம்: ஐந்து நாட்களுக்குமான புகைப்படம், ஒளிப்பதிவு நிகழ்வுகளை தனகோபால் மற்றும் இளம் புகைப் படக் கலைஞர் சிபி ஆகியோர் மேற் கொண்டனர். நெறியாளர்கள் அனைவரும் குறிப்பாக மணி மாறனும் இப்பதிவுகளை உடனுக்குடன் வலை தளங்களில் பதிவேற்றம் செய்தனர்.

உணவு : ஆரோக்கியமான சத்தான உணவுகள் பரிமாறப்பட்டன. பழக்கலவை, பயிறு, பட்டாணி, அவல், பொட்டுக் கடலை போன்ற சிற்றுண்டிகளும் சிறப்பான உணவு வகைகளும் வழங்கப்பட்டன. சுற்றுலா நாளன்று சுவையான அசைவ பிரியாணி வழங்கப்பட்டது. ஒரு நாள் மதிய உணவினை வழக்கறிஞர் ஆனந்தன் வழங்கினார். உணவுக்கான திட்டமிடல் தொடர் கண்காணிப்பு அனைத்தையும் யாழினி சிறப்பாக செய்து முடித்தார்.

இந்நிகழ்விற்கான வரவு செலவு அறிக்கை அனைத்து குழந்தைகளுக்கும் வழங்கப்பட்டது. முகாமின் வரவு செலவுகளை பொருளாளர் தமிழ்செல்வன் உடனுக்குடன் பதிவு செய்தார். திருப்பூர் தென்றல், குழந்தைகளுக்கு உணவு, சிற்றுண்டி வழங்குதலையும், தேவையான உதவிகளையும் ஆர்வத்துடன் செய்து வந்தார்.

முகாம் நிறைவின்போது பிரிய மறுத்து கண்ணீருடன் குழந்தைகள் விடைபெற்ற காட்சி உருக்கமாக இருந்தது. இக்காட்சி முகாமின் தாக்கத்தை உணர்த்தியது. இம்முகாமின் திட்டமிடல் நடைமுறை மீளாய்வு என அனைத்து நிகழ்வுகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி முகாமை சிறப்பாக நடத்திட சிவகாமி, மணிமாறன், தமிழ்ச்செல்வன், யாழினி, தனகோபால் ஆகியோரும் முகாம் குறித்த திட்டமிடல் தொடங்கிய நாளிலிருந்து அவ்வப்போது சரியான கருத்துகளை தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோரும் வழங்கி முகாமை சிறக்கச் செய்தனர். இது அறிவியல் மன்றத்தின் நான்காவது முகாம்.

செய்தி : ஆசிரியர் சிவசாமி

Pin It