படித்துப் பாருங்களேன் - Jeyasela Stephen.S., 1997, The Coromandel Coast and its Hinterland, economy, Society and political system (a.d.1500-1600), manohar publishers, Delhi

jeyaseela stephenஅண்மைக்காலமாக ஒரு குறிப்பிட்ட பகுதியை மையமாகக் கொண்டெழுதப்படும் நுண் வரலாற்றாய்வுகள் வெளிவரும் போக்கு வளர்ந்துள்ளது. இத்தகைய வட்டார வரலாறுகள் வரலாற்று வரைவுக்குப் பெரிதும் துணை புரிகின்றன. இவ்வரிசையில் ஜெயசீலன் ஸ்டீபனின் இந்நூலும் இடம்பெறுகிறது. சாந்திநிகேதன் பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் தமிழரான இவர் போர்ச்சுக்கீசிய மொழியறிவு பெற்றவர். இதனால் தமிழ்நாட்டின் தொடக்க காலக் காலனியவாதிகளான போர்ச்சுக் கீசியர்கள் தமிழ்நாட்டில் நிலைகொண்டதையும், கடல் வாணிபம் மேற்கொண்டதையும் மையமாகக் கொண்ட நூல்களையும், கட்டுரைகளையும் இம்மொழி ஆவணங் களின் துணையுடன் எழுதி வருகிறார்.

இங்கு அறிமுகம் செய்யும் நூல் பதினாறாம் நூற்றாண்டில் விஜயநகர ஆட்சியாளர்களும் போர்ச்சுக் கீசியர்களும் தமிழ்நாட்டின் சோழமண்டலக் கடற் கரையில் அதன் உள்நாட்டுப் பகுதிகளிலும் மேற் கொண்ட வாணிப நடவடிக்கைகளை ஆராய்கிறது. அத்துடன் 16ஆம் நூற்றாண்டில் இப்பகுதியின் பொருளியல் சமூக நிலைகளையும், அரசியல் முறை யையும் அறியச் செய்கிறது. ஆங்கிலக் காலனியவாதி களை மட்டுமே மையமாகக் கொண்ட இந்திய வரலாற்றைக் கற்று வந்தவர்களுக்கு இந்திய வரலாற்றின் மற்றொரு பகுதியை இந்நூல் அறிமுகம் செய்கிறது.

சோழமண்டலக் கடற்கரை

வங்க விரிகுடாவில் வடக்கே சுவர்னமுகி ஆற்றின் முகத்துவாரத்தில் தொடங்கி, தெற்கே கோடியக்கரை வரை யிலான பகுதியே கோரமண்டல் என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படுகிறது. இச்சொல் சோழமண்டலம் என்ற தமிழ்ச்சொல்லில் இருந்தே உருவாகியுள்ளது. பதினொன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டில் முதல்முறையாக சோழமண்டலம் என்ற சொல் இடம் பெற்றுள்ளது. பின்னர் பதினாறாம் நூற்றாண்டிலும் இச்சொல் தொடர்ந்துள்ளது. இவ்வகையில் இடைக் காலத் தமிழகத்தில் உருவான சொல்லாக இதைக் கருத முடியும்.

சோழமண்டலத்தின் எல்லை

ஆந்திரத்தின் சூலூர்பேட்டை வட்டத்தில் உள்ள படை நாடு, ஆற்றூர் நாடு வரை வடக்கில் சோழ மண்டலம் இருந்துள்ளது. 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர்ச்சுக்கீசிய ஆவணங்கள் பழவேற்காடு ஊருடன் சோழமண்டலக் கடற்கரை முடிவுற்றதாகக் குறிப்பிடுகின்றன.

ஜோ.டி.பரோஸ் என்ற போர்ச்சுக்கீசியர் சோழ மண்டலக் கடற்கரையின் தென் எல்லையாக அதிராம் பட்டிணத்தைக் குறிப்பிடுகிறார்.

சோழமண்டலக் கடற்கரைகளுக்கு மேற்கில் உள்ள பகுதிகளே அதன் உள்நாட்டுப் பகுதிகளாக அமையும். இதன்படிப் பார்த்தால் 16ஆம் நூற்றாண்டில் இன்றைய சித்தூர் மாவட்டத்தில் உள்ள சித்தூர், நகரி, புத்தூர், சத்தியவேது, சந்திரகிரி, காளகஸ்தி ஆகிய வட்டங்களும், நெல்லூர் மாவட்டத்தில் உள்ள சூலூர்ப்பேட்டை வட்டம், சென்னை, செங்கல்பட்டு, வடஆற்காடு, தென்ஆற்காடு, தஞ்சாவூர் மாவட்டங்கள், திருச்சி மாவட்டத்தில் உள்ள குளித்தலை, லால்குடி, உடையார் பாளையம், முசிறி வட்டங்களும் சோழமண்டலக் கடற்கரையின் உள்நாட்டுப் பகுதிகள் என்று வரை யருக்கலாம்.

(இதன்பின்னர் விஜயநகரப் பேரரசு - நாயக்கர் ஆட்சி நிர்வாகப் பிரிவுகள் என்பனவற்றையும், அரசியல் பொருளாதாரம் குறித்த செய்திகளையும் குறிப்பிடுகிறார். அடுத்து தமிழக நிலவுரிமை குறித்து நொபுரு கரோஷிமா, பர்டன் ஸ்டெயின் ஆகியோர் முன்வைக்கும் கருத்துக் களையும் விவாதிக்கிறார்).

வேளாண் உற்பத்தி

நில உடைமையாளர்கள் - பயிரிடுவோர் ஆகி யோருக்கிடையே விளைவைப் பங்கீடு செய்ய வழி முறைகள் இருந்தன. மேல்வாரம் என்பது நிலஉடைமை யாளனுக்கும், குடிவாரம் என்பது பயிரிடுவோனுக்கும் உரிய பங்கைக் குறிக்கும் சொற்களாகும். 33 முதல் 75% வரை மேல் வாரம் ஆக இருந்தது. வறட்சியின் போதும் பயிர்விளைச்சல் குன்றியபோதும் மேல்வாரம் குறைக்கப் பட்டது. நெல் முக்கிய பயிராக விளங்கியது. குறுவை, பஞ்சவாரி, சம்பா என்பன முக்கிய நெல் வகைகளாகும். ராஜனர் என்ற நெல் உயர்தர நெல்லாகும். பல வகையான நெற் பெயர்களைப் போர்ச்சுக்கீசிய ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.

காடுகளை அழித்து விளைநிலங்கள் ஆக்குவது குறித்து கிருஷ்ண தேவராயர் தமது ‘ஆமுக்த மால்யதா’ நூலில் குறிப்பிடுகிறார். காடுகளை அழித்துப் புதிதாக உருவாக்கிய வேளாண் குடியிருப்புகள் பாளையம் எனப் பட்டன. வடஆற்காடு மாவட்டப் பகுதியில் எல்லப்ப நாயக்கர் என்பவர் காடுகளை அழித்து விளைநிலமாக்கி அங்கு உழவர்களைக் குடியேற்றினர். முதல் மூன்று வருடங்களுக்கு அவர்களுக்கு வரிவிதிப்பு இல்லை. நான்காவது வருடத்தில் இருந்து குடும்பம் ஒன்றுக்கு ஆண்டுதோறும் மூன்று பணம் வரியாக வாங்கப் பட்டது.

வரையறுக்கப்பட்ட அளவிலான விளைபொருளைத் தருவதாக ஒப்புக்கொண்டு ஒருவரது நிலத்தைப் பயிரிடும் குத்தகை முறையும் வழக்கில் இருந்தது. விளைவு பொய்த்தாலும் குத்தகை அளவில் சலுகை எதுவும் வழங்குவதில்லை என்ற நிலை இருந்தது.

குறிப்பிட்ட தொகையைப் பெற்றுக்கொண்டு நிலங்களைப் பயிரிட அனுமதிக்கும் கட்டுக்குத்தகை முறையும் வழக்கில் இருந்தது. நிதி மூலதனம் திரட்டும் வழிமுறையாகக் கோவில்கள் இதைக் கருதின. சில நேரங்களில் பணம், விளைபொருள் இரண்டுமே குத்தகையாக வழங்கப்பட்டன.

பருத்தியும் ஒரு முக்கிய பயிராக விளங்கியுள்ளது. தஞ்சை மாவட்டத்தின் பாபநாசம் வட்டம் பருத்தி விளையும் பகுதியாக விளங்கியுள்ளது. பொதுவாக, கரிசல் நிலத்தில் பருத்தி பயிரிடப்பட்டு வந்துள்ளது. ‘காணிய வித்து கரிசல வாங்கு’ என்ற பழமொழி பருத்தியின் பொருளியல் மதிப்பைச் சுட்டுகிறது. இக்காலக் கல்வெட்டுக்கள், ‘நெல்லுப்பருத்தி’ ‘வரகுப் பருத்தி’ ‘தனிப்பருத்தி’ என்ற மூன்று வகையான பருத்திகளைக் குறிப்பிடுகின்றன. முதல் இரு பருத்திகளும் முறையே நெல், வரகு ஆகிய பயிர்களுக்கு இடையில ஊடு பயிராகப் பயிரிடப்பட்டிருக்கலாம். பருத்தியை மட்டுமே பயிரிடும் முறை ‘தனிப்பருத்தி’ எனப்பட்டிருக்க வேண்டும். முதல் இருவகைப் பருத்திகளும் அதிக வரி விதிப்புக்கு ஆளாகியுள்ளன. இதனால் இவை உயர்ரகப் பருத்திகளாக இருந்திருக்கக் கூடும்.

தொடர்ச்சியாகப் பாசன வசதியுள்ள பகுதிகளில் கரும்பு பயிராகியுள்ளது. காஞ்சிபுரம் வட்டாரத்தில் பெண்ணை ஆற்றின் தென்கரையிலும், வெள்ளாற்றின் மேற்குப் பகுதியிலும், பாலாறு பாசனப்பகுதியிலும் கரும்பு பயிராகியுள்ளது. எள், ஆமணக்கு ஆகியனவும் பயிராகி யுள்ளன.

சோழமண்டலப் பகுதியில் நஞ்சை, புஞ்சை, தோட்டம், நத்தம், படுகை என அய்ந்து வகையான நிலப்பிரிவுகள் இருந்துள்ளன. நிலம் - பயிர்வகை - பருவம் என்ற மூன்றுக்கும் இடையிலான உறவை உணர்த்தும் வகையில் இப்பகுப்புகள் அமைந்துள்ளன.

புன்செய் நிலங்கள் ‘கொல்லை’ என்றும் அழைக்கப் பட்டன. பருவ மழையை எதிர்நோக்கியே இங்கு வேளாண்மை நிகழ்ந்தது. சோளம், கம்பு, எண்ணெய் வித்துக்கள், பயிறுவகைகள் ஆகியன இங்கு பயிராயின.

கிணற்றுப் பாசனத்தின் துணையால் மரம் வளர்க்கும் பகுதி ‘தோட்டம்’ எனப்பட்டது. பட்டி, நந்தவனம் (பூந்தோட்டம்), தோப்பு என்ற பெயர் களிலும் கல்வெட்டுக்கள் தோட்டத்தைக் குறிப்பிடு கின்றன. வீடுகளின் பின்னால் உள்ள ‘புழக்கடை’ என்ற பெயரிலான நிலம், மருவம், தவனம், துளசி ஆகியனவற்றைப் பயிரிடப் பயன்பட்டது.

நத்தமும், கரம்பையும் தரிசு நிலங்களாகும். இவற்றில் புல் வளர்ந்திருக்கும். கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலமாக இவை அமைந்தன. இவை மேய் வதற்கு நாயக்க மன்னர்கள் வரி வாங்கினார்கள். வேளாண் விரிவாக்கம் நிகழ்ந்தபோது இந்நிலங்களை விலைக்கு வாங்கி விளைநிலம் ஆக்கிப் பயிர் செய்தனர். ஆற்றங்கரை அருகிலுள்ள நிலம் ‘படுகை’ எனப்பட்டது. இது வளமான மண்ணைக் கொண்டது. இதனால் கரும்பு, வெற்றிலை ஆகிய வாணிபப்பயிர்கள் இங்கு பயிராயின.

···

கைவினைப் பொருளாதாரம்

தொழிற்கூடம் என்ற பொருளைத் தரும் பட்டறை என்ற சொல், ‘பட்டடை’ என்று கல்வெட்டுக்களில் இடம் பெற்றுள்ளது. ஊர் பட்டடை, சில்லறைப் பட்டடை, செக்குப்பட்டடை, சக்கிலிப் பட்டடை என்று பல வகையான பட்டடைகளைக் கல்வெட்டுக்கள் குறிப்பிடு கின்றன.

நூல் நூற்றல், நெசவு, சாயமேற்றல் என்பன முக்கிய தொழில்களாக விளங்கின. இத்தொழில் புரிவோரிடம் இருந்து வரி வாங்கப்பட்டது. கொம்புத்தறி, சட்டித்தறி என்ற பெயரிலான தறிகளைக் கல்வெட்டுக்கள் குறிப் பிடுகின்றன. இத்தறிகளின் அமைப்பு குறித்து எதுவும் அறிய இயலவில்லை என்றாலும் பயன்பாட்டிற் கேற்றவாறு பலவகைத் தறிகள் இருந்துள்ளமையை அறியமுடிகிறது. கைக்கோளர், சாலியர், பறையர், சேனியர் என்போர் தறிகளின் உரிமையாளர்களாக விளங்கினர். வணிகர்களும் தறி உரிமையாளர்களாக விளங்கினர்.

ஏற்றுமதித் தரத்துக்கான துணிகளை கிராமப்புற நெசவாளர்களால் நெய்ய முடியவில்லை. துணிச் சந்தை குறித்த விவரங்களை அறியாமையாலும், அதிக மூலதனம் தேவைப்பட்டமையாலும் இவர்களது செயல்பாடு குறுகிய உள்நாட்டுச் சந்தையை நம்பியே இருந்தது. இத்தகைய சூழலில் வணிகர்கள் இவர்களது உற்பத்தியைத் தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். நெசவாளர்களுக்குத் தேவையான மூலப் பொருட்களை வழங்குதல், முன்பணம் கொடுத்தல் என்ற செயல்பாடுகளின் வாயிலாக அவர்களது உழைப் பையும் உற்பத்தியையும் தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இந்நிகழ்வு 16ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வாகும். ‘வாணிபத்தின் வாயிலான சுரண்டல்’ என்று கார்ல் மார்க்ஸ் குறிப்பிடுவதற்கு எடுத்துக்காட்டாக நெசவாளர்கள் மீதான வணிகர்களின் ஆதிக்கம் அமைகிறது.

சோழமண்டல வணிகர்களின் இச்செயல்பாடானது துணி உற்பத்தியைத் தம் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள உதவியதுடன் மூலதனத் திரட்டலுக்கும் துணை நின்றது. வட்டார வணிக முதலாளித்துவமானது பன்னாட்டளவில் சமூக வாணிப மாறுதல்கள் உருவாக ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் வழிகாட்டியாய் அமைந்தது.

···

நுகர்வோரின் அடிப்படைத் தேவைப் பொருட் களான சர்க்கரை, எண்ணெய், உப்பு ஆகியன சோழ மண்டலக் கடற்கரையில் உற்பத்தியாயின. கரும்புச் சாறைக் கொதிக்க வைத்து வெல்லம் தயாரிக்கப்பட்டது. பனைமரத்தின் பதநீரில் இருந்து கருப்புக்கட்டி தயாரிக்கப்பட்டது. கோவிலுக்குரிய காணிக்கைப் பொருட்களில் இதுவும் ஒன்றாக அமைந்தது. தூளாகவும், கட்டியாகவும் சர்க்கரை கிடைத்ததாக பார்போசா என்ற போர்ச்சுக்கீசியர் குறிப்பிட்டுள்ளார். பெண்ணை ஆற்றின் கரையோரப் பகுதிகளிலும், வெள்ளாற்றின் மேற்குப் பகுதிகளிலும் சர்க்கரை உற்பத்தி, பரவலாக நடைபெற்றது. வெள்ளார் பகுதியில் கரும்பு பயிரிடும் படி விஜயநகரப் பேரரசு கட்டாயப் படுத்தியது. கரும்பு உற்பத்தியாளர்கள் தம் கிராம எல்லையைக் கடந்து கரும்பைக் கொண்டு செல்வது தடை செய்யப்பட்டது. ஆனால் மக்கள் இதை எதிர்த்ததுடன் இடம்பெயர்ந்து செல்லப்போவதாக அச்சுறுத்தியதால் இக்கட்டுப் பாட்டை ஆட்சியாளர்கள் தளர்த்தினார்கள். சர்க்கரை உற்பத்தியாளர்கள் மீது விதிக்கப்பட்ட கடுமையான வரிவிதிப்பானது அதன் தேவையையும் கிடைப்பருமை யையும் சுட்டுகிறது. சோழமண்டலத்தின் சர்க்கரை உற்பத்தி உள்ளூர்த் தேவையை நிறைவு செய்யும் நிலையில் இருக்கவில்லை.

···

எள், ஆமணக்கு ஆகியனவற்றில் இருந்து எண்ணெய் எடுக்கப்பட்டது. சமையலுக்கும், வீட்டிலும், கோவிலிலும், விளக்கு எரிக்கவும் எண்ணெய் பயன்படுத்தப்பட்டது. எண்ணெய் எடுக்க செக்கு பயன்பட்டது. எண்ணெய் எடுப்போர் மீது நாயக்க மன்னர்கள் வரி விதித்தனர். சில கிராமங்களுக்கு இவ்வரியில் இருந்து விலக்களிக்கப் பட்டது. சில நாயக்க மன்னர்கள் உள்ளூர் கோவிலுக்கு எண்ணெய் வழங்க உத்தரவிட்டனர்.

···

உப்பளம் என்ற பெயரில் உப்பு விளைவிக்கும் இடங்கள் கடற்கரைப் பகுதிகளில் இருந்தன. கடற்கரைக் கிராமங்களில் இருந்த கோவில்களும் மடங்களும் உப்பளங்களை உரிமையாகக் கொண்டிருந்தன. இவை நாயக்க மன்னர்களாலோ, கிராமத்தவர்களாலோ வழங்கப்பட்டவை ஆகும். இவ் உப்பளங்களை மேல் வாரமாக, இவை உற்பத்தியாளர்களுக்கு குத்தகைக்கு விட்டன. உப்பின் மீது வரிவிதிக்கப்பட்டது. சிவபோக மடம் என்ற மடம் உப்பு வரி செலுத்துவதில் இருந்து விலக்களிக்கப்பட்டிருந்தது. நாயக்க மன்னர்களின் கட்டுப்பாட்டின் காரணமாக உப்புத்தொழில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

···

குன்னிமேடு துறைமுகத்தை ஒட்டியுள்ள உள் நாட்டுப் பகுதிகளில் இரும்பு கிடைத்ததாகப் போர்ச்சுக் கீசிய ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. சேலம் பகுதி இரும்பும் குன்னிமேடு துறைமுகத்திற்கு வந்தது. பீரங்கி, பீரங்கிக் குண்டுகள் செய்ய இரும்பைப் பயன்படுத்தி யுள்ளனர். ஆம்பூர், குடியாத்தம் பகுதியில் செயல்பட்ட பட்டரைகள் பீரங்கி தயாரிப்பில் புகழ்பெற்றிருந்தன. பீரங்கி உற்பத்தியாளர்கள் மீது வரி விதிக்கப்பட்டது. சோழமண்டலக் கடற்கரையில் பீரங்கி உற்பத்தி செய்யப்பட்டது தொடர்பாக போர்ச்சுக்கீசிய ஆவணப் பதிவுகள் உள்ளன. பழவேற்காடு துறைமுகத்தின் உள்நாட்டுப் பகுதிகளில் தயாரிக்கப்பட்ட பீரங்கிக் குண்டுகளை போர்ச்சுக்கீசிய தளபதி ஒருவன் விலைக்கு வாங்கி கொச்சி நகருக்கு அனுப்பியுள்ளான். 1524 ஆகஸ்ட் 16ஆம் நாள் சோழமண்டலக் கடற்கரையின் போர்ச்சுக்கீசியத் தளபதி 250 பீரங்கிக் குண்டுகளை ஏற்றுமதி செய்துள்ளான்.

நிக்கோலஸ் பிமண்டா என்ற சேசு சபைத் துறவி செஞ்சி நகரில் மிகுதியான அளவில் படைக்கலச் சாலை களும், துப்பாக்கிக் குண்டுகளும், வெடிமருந்துகளும் கிடைப்பதாக எழுதியுள்ளார்.

···

கொல்லர்கள், பொற்கொல்லர்கள், பித்தளை வெண்கல உலோகத் தொழில்புரிவோர் ஆகியோரைப் பற்றிய குறிப்புகள் கல்வெட்டுக்களில் உள்ளன. பாத்திரங்கள், வாள் சண்டையில் பயன்படுத்தும் கோடாரி, ஈட்டிகள், வில், அம்பு, எறி ஈட்டி ஆகியன இக்கைவினைஞர்களால் உற்பத்தி செய்யப்பட்டன. சமையல் பாத்திரங்கள் செய்ய செம்பு பயன்பட்டதாக போர்ச்சுக்கீசியப் பயணி பார்போசா குறிப்பிட்டுள்ளார். திருவண்ணாமலைக் கோவிலில் உலோகத்தொழில் புரிவோர் பணிபுரிந்தனர். மலைக்காவல் என்ற வருவாயில் இருந்து இவர்களுக்கு ஒரு பணம் ஊதியமாக வழங்கப்பட்டது. 1535இல் திருப்பதிக் கோவிலுக்கான பித்தளைப் பாத்திரங்கள் செய்வதிலும் இவர்கள் ஈடுபட்டிருந்தனர். தேரோட்டத்தின் போது தேரை நிறுத்தப் பயன்படுத்தும், ‘திருத்தேர் இரும்புமுட்டி’ என்ற கருவியும் கொல்லர்களால் செய்யப்பட்டது. கண்டா மணிகள், பலவகையான பித்தளை விளக்குத்தாங்கிகள், வெண்கலப் படிமங்கள், கோவில்களில் உள்ள கற்படிகள் மீதான உலோகத் தகடுகள் ஆகியனவற்றைக் கொல்லர்கள் தயாரித்தனர். கொல்லர்கள் பயன்படுத்தும் ஊதுலைக்கு, ‘உலைப்பாட்டம்’ ‘உலைக்கடமை’ என்ற பெயர்களில் நாயக்க மன்னர்கள் வரி வாங்கினர்.

பொற்கொல்லர்கள் தட்டான், நகைஆசாரி, கம்மாளர் என்ற பெயர்களில் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படுகின்றனர். 1582இல் சாந்தோம் அருகில் பொற்கொல்லர் குடியிருப்பொன்று இருந்துள்ளது. போரில் பயன்படுத்தும் குதிரைகள், யானைகளுக்கான வெள்ளி, தங்க உலோக முகபாடம், முத்து, கற்கள் பதித்த பெண்களுக்கான பலவகைத் தங்க அணிகலன்கள், நடனத்தின் போது அணியும் அலங்கார அணிகலன்கள் ஆகியன பொற்கொல்லர்களால் தயாரிக்கப்பட்டன. இத்தகைய அணிகலன்களைக் கோவிலுக்கு கொடை யாகச் சிலர் வழங்கினர்.

கோவில்கள் அவ்வப்போது பொற்கொல்லர்களை ஊதியத்திற்கு நியமித்து இவற்றைப் புதுப்பித்து வந்தன. இதன்பொருட்டு கோவில் நிர்வாகம் பணம் ஒதுக்கியது. பொற்கொல்லர்கள் மீது ‘தட்டாவபாட்டம்’ என்ற பெயரில் நாயக்க மன்னர்கள் வரிவிதித்தனர்.

‘சிற்பி’ ‘கோவில் சிற்பி’ ‘கல்தச்சன்’ என்ற பெயர் களில் கல்வேலை செய்வோர் பணிபுரிந்து வந்தனர். கல்லில் செதுக்குச் சிற்பங்களையும், தெய்வ உருக் களையும், கோவில் கட்டடங்களையும் இவர்கள் உருவாக்கினர்.

···

‘கைக்கோளர்’, ‘சாலியர்’ என்ற பெயர்களிலும் ‘தேவாங்கர்’, ‘பட்டு நூல்காரர்’ என்ற பெயர்களிலும் நெசவாளர்கள் செயல்பட்டு வந்தனர். முதல் இரு பிரிவினரும் தமிழர்கள். தேவாங்கர்கள் தெலுங்கு பேசும் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வந்தவர்கள். பட்டு நூல்காரர்கள் பட்டு நெசவில் தேர்ச்சி பெற்றவர்கள். குஜராத் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வந்தவர்கள். இப்பிரிவினர் ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட வகையிலான துணிகளை உற்பத்தி செய்வதில் தேர்ச்சி பெற்றவர்கள். கபிஸ்தலம் (சாலியர்), பட்டீஸ்வரம் (பட்டுநூல்காரர்), அன்னியூர் (தேவாங்கர்), வில்லியனூர் (கைக்கோளர்) ஊர்களில் குறிப்பிடத்தக்க அளவில் இந்நெசவாளர்கள் வாழ்ந்தனர். இவர்கள் தமக்கென்று அமைப்புகளை உருவாக்கியும் செயல்பட்டுள்ளனர்.

···

இரும்பு, பொன், பித்தளை, வெண்கலம் ஆகிய உலோகம் தொடர்பான தொழில் புரிந்த கைவினைஞர் களும், கல், மரம் ஆகியன தொடர்பான தொழில் புரிந்தோரும் ‘அஞ்சு ஜாதி பஞ்சாலத்தார்’ என்றழைக்கப் பட்டனர். இவர்கள் மீது ‘காணிக்கை’ ‘கட்டாயம்’ என்ற பெயர்களில் நாயக்க மன்னர்கள் வரிவிதித்தனர். இவ்விரு வரிகளும் கடுமையானதாய் இருந்தன. காணிக்கை வரியைக் கட்ட சில நேரங்களில் சொத்துக்களைக் கூட விற்க வேண்டியிருந்தது. வரி எதிர்ப்பின் ஒரு வடிவ மாக இடம்பெயர்ந்து செல்லுதலும் நிகழ்ந்தது. இடப்பெயர்ச்சியின் விளைவாய் நாயக்க மன்னர்கள் வரிக்குறைப்பும் வரிவிலக்கும் மேற்கொண்டனர்.

கைவினைஞர்களின் உற்பத்தி அதிகரிப்பு நாயக்க மன்னர்களின் வருவாய் அதிகரிப்பதற்கு உதவியதால் சில சலுகைகள் இவர்களுக்கு வழங்கப்பட்டன.

பயன்பாட்டு நோக்கில் உற்பத்தி நிகழ்ந்தாலும் சில நேரங்களில் பரிமாற்ற மதிப்பிலும் நிகழ்ந்தன. இதனால் உழைப்பு, மூலதனம் என்ற அளவில் வேலைப் பிரிவினைகள் உருவாயின.

வாணிபம்

சோழமண்டலக் கடற்கரையின் உள்நாட்டுப் பகுதியில் வாணிபம் நிகழும் இடங்களாக நகரம், பேட்டை, சந்தை, அங்காடி ஆகியன விளங்கின. வாணிபத்தை ஊக்குவிப்பதிலும், முறைப்படுத்துவதிலும் நாயக்க மன்னர்கள் ஆர்வம் காட்டினர். ஒரு சந்தையில் குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு வரிவிலக்களித்தல், உள்ளுர் வாசிகளுக்கு முன்னுரிமை வழங்கல், வணிகர் களைக் குடியமர்த்துதல் என்பன போன்ற நடவடிக்கை களை மேற்கொண்டனர். கோவில்களும்கூட வாணிபம் நிகழும் பேட்டைகளை உருவாக்கின.

மற்றொரு பக்கம் துறைமுக நகரங்களில் வாணிபம் தழைத்தது. இஸ்லாமியர்களான மரைக்காயர்களும் போர்ச்சுக்கீசியர்களும் இதில் முக்கிய பங்கு வகித்தார்கள். சில நேரங்களில் இவ்விரு பிரிவினருக்கும் இடையே வாணிபத்தின் அடிப்படையில் மோதல்களும் உருவாயின. நாகப்பட்டிணம் துறைமுகத்தின் வழியாக அரிசி ஏற்றுமதியை போர்ச்சுக்கீசியர் நடத்தினர்.

கொல்லத்தில் இருந்து விழிஞம் வழியாகவும், கொச்சியில் இருந்து பாலக்காடு, ஆரல்வாய்மொழிக் கணவாய்கள் வழியாகவும் மிளகு கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. மிளகு வாணிபத்தை தம் ஏகபோக வணிகமாக்கிக் கொள்ள விரும்பிய போர்ச்சுக் கீசியர் படைவீரர்களின் துணையுடன் இதைத் தடுத்தனர். என்றாலும் இதில் அவர்களால் முழுமையாக வெற்றி பெற இயலவில்லை. போர்ச்சுக்கீசிய வணிகர்கள் சிலரும் கூட இக்கடத்தலில் ஈடுபட்டனர்.

···

செட்டியார்கள், தெலுங்குச் செட்டியார்களான கோமுட்டி, கவரை செட்டி, மரைக்காயர், போர்ச்சுக் கீசியர் ஆகியோர் முக்கிய வணிகர்களாக விளங்கினர்.

மலாக்கா, இந்தோனேசியா, சீனா, பெகு, சயாம், ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளுடன் வெளிநாட்டு வாணிபம் நிகழ்ந்தது. இவை தவிர மேற்கு ஆசியா, அய்ரோப்பா ஆகியனவற்றுடனும் வாணிப உறவு இருந்தது. அய்ரோப்பியர்களான போர்ச்சுக்கீசியர்களின் பங்களிப்பு, டச்சு, ஆங்கில மற்றும் பிற அய்ரோப்பிய நாடுகளை சோழமண்டலக் கடற்கரையின்பால் ஈர்த்தது.

சமூகச் சூழல்

விஜயநகரப் பேரரசின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த சோழமண்டலக் கடற்கரையின் உள்நாட்டுப் பகுதி வேளாண் குடிகளை மிகுதியாகக் கொண்டிருந்தது. இவர்கள் மீதான வரிவிதிப்பு கடுமையாக இருந்தது. கலப்பையின் மீதான வரியானது தறி போன்ற கருவிகளின் மீதான வரியைவிட அதிக அளவில் இருந்தது. ஒரு கட்டத்தில் குடியானவர்கள் வரிக்கொடுமைக்கு எதிராக ஒன்று திரண்டனர். விளைச்சலுக்கு ஏற்றார் போல் எது நியாயமான வரி என்று அவர்களுக்குத் தெரிகிறதோ அதைக் கொடுப்பதென்று முடிவு செய்தார்கள். ஊரைவிட்டு இடம்பெயர்ந்து செல்லுதல், நிலத்தை விற்றுவிடல், பயிரிடாது தரிசாக நிலத்தைப் போடுதல், வரி கொடாதிருத்தல் என்பன அவர்களது போராட்ட வடிவங்களாய் அமைந்தன. இதை எதிர்கொள்ளும் வழிமுறையாக, இடம்பெயர்ந்தோரை அழைத்து வந்து மீண்டும் குடியேறச்செய்தல், வரிச்சலுகை வழங்கல் ஆகியனவற்றை ஆளுவோர் மேற்கொண்டனர். மற்றொரு பக்கம் அடிக்கடி ஏற்படும் வறட்சி, பஞ்சம் ஆகியனவற்றால் வேளாண்குடிகள் ஏழைகளாயினர். அத்துடன் சில சமூகத்தடைகளினால் கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

···

கோவில் சடங்குகளுடன் ஏற்பட்ட தொடர் பினால் நெசவாளர்கள் சமூக உயர்மதிப்பைப் பெற்றிருந் தனர். பல்லக்கு ஏறல், சங்கு ஊதுதல் போன்ற உரிமைகள் இவர்களுக்கு வழங்கப்பட்டன.

இத்தகைய உரிமைகளை பஞ்ச கம்மாளர்கள் போராடிப் பெற்றனர். சில நேரங்களில் இவ்வுரிமைகள் அவர்களுக்கு மறுக்கப்பட்டன. என்றாலும் வணிகர் களைவிட சமூகப்படி நிலையில் உயர்வான இடத்தில் நெசவாளர்கள் இருந்தனர். கோவில் சார்ந்த சடங்குகள் தொடர்பாக இவ்விரு பிரிவினருக்கும் இடையே நிகழ்ந்த வேறுபாடுகளில் நெசவாளர்களுக்கு ஆதர வாகவே மன்னர்கள் தீர்ப்பளித்துள்ளனர்.

அடிமைகள்

அடிமைகள் பரவலாக இடம்பெற்றிருந்தனர். ‘அடிமைக் காசு’ என்ற பெயரில், அடிமை உரிமையாளர் களிடம் இருந்து வரி வாங்கப்பட்டது. கைக்கோளர், முதலியார், படையாட்சி ஆகியோர் அடிமைகளை வைத்திருந்தனர். அடிமை விற்பனை, ஓலைகளில் பதிவு செய்யப்பட்டது. இவ்வோலை ‘ஆள் விளைப் பிராமாண இசைவுதீட்டு’ எனப்பட்டது. குடும்பங்கள் மீது விதிக்கப் பட்ட வரியைச் செலுத்த இயலாதவர்கள் குடும்பமாகத் தங்களை அடிமைகளாக விற்றுக்கொண்டுள்ளனர்.

வேளாண்மை விரிவாக்கமும் அடிமை வேலையை ஊக்குவித்துள்ளது. சலுகை பெற்றவர்கள், சலுகை பெறாதவர்கள் ஆகியோருக்கிடையே நிலவிய இடை வெளியை அடிமைமுறை சுட்டிக்காட்டுகிறது.

சாதி

அரசியல் பொருளாதாரச் சூழல்கள் சாதி அமைப்பில் மாறுதல்களைத் தோற்றுவித்தன. இந்துச் சட்டம் தமக்கு விதிக்காத தொழில்களைச் செய்ய சாதிகள் முற்பட்டன. பிராமணர்கள் நன்செய் நில வேளாண்மையையும் விஜய நகரப் படையின் போர் வீரர்களாகவும் மாறினர்.

போர்ச்சுக்கீசியர்

சோழமண்டல வரலாற்றில் போர்ச்சுக்கீசியர்கள் முக்கிய இடம்பெற்றுள்ளனர். போர்ச்சுக்கல் மன்னனின் அதிகாரிகளாகவும், இராணுவத்தினராகவும் பணி புரிந்தோர் தம் பதவிகளை விட்டுவிட்டு, சோழ மண்டலத் துறைமுக நகர்களில் வணிகர்களாக மாறினர். இப் பகுதியில் உபரிப் பொருட்களாக இருந்த அரிசி, துணி ஆகிய பொருட்களின் வாணிபத்தில் ஈடுபட்டனர்.

இந்தியர், போர்ச்சுக்கீசியர்களிடையே ஏற்பட்ட மண உறவில் தோன்றியோர் ‘கசோதாக்கள்’ எனப் பெயர் பெற்றனர். பழவேற்காடு, தேவனாம்பட்டிணம், நாகப் பட்டிணம் ஆகிய ஊர்களில் வாழ்ந்த கசோதாக்கள் உள்ளூர் வணிகர்களான முதலியார், செட்டியார், மரைக் காயர் ஆகியோருடன் தொடர்பு கொண்டிருந்தனர். செட்டியார்களிடம் கடன்வாங்கி கப்பல்கள், சிறு மரக்கலங்கள் ஆகியனவற்றின் உரிமையாளர்களாயினர்.

போர்ச்சுக்கல் மன்னனை, கசோதாக்கள் பொருட் படுத்தவில்லை. இதனால் போர்ச்சுக்கல் அரசுக்கு இவர்களால் பொருள் ஆதாயம் எதுவும் கிட்டவில்லை. இவர்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இப்பகுதித் துறைமுகங்களில் நிரந்தரமாகப் படைத்தலைவன் ஒருவனை நியமிக்கும் போர்ச்சுக்கல் மன்னனின் திட்டத்தை இவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தங்களிடம் இருந்தே ஒரு படைத்தளபதியைத் தேர்வு செய்ய வேண்டும் என்று மன்னனுக்கு எழுதினார்கள்.

நாகப்பட்டிணத்தில் வாழ்ந்த போர்ச்சுக்கீசியர்கள், போர்ச்சுக்கீசிய படைத்தலைவனாலும் உள்ளூர் மக்கள் நாயக்க மன்னனாலும் ஆளப்பட்டனர்.

முடிவுரை

சோழமண்டலக் கடற்கரைப் பகுதியும் அதன் உள்நாட்டுப் பகுதிகளும் தம்மிடம் உபரியாக இருந்த அரிசி, துணி ஆகிய இரண்டையும் ஏற்றுமதிக்கான வாணிபப் பொருள் ஆக்கின. இவ்வாணிபம் மூலதன திரட்டலுக்குத் துணை புரிந்தது. அத்துடன் துறை முகங்கள், கோட்டைகள், கோவில் நகரங்கள், நிர்வாக நகரங்கள் ஆகியனவற்றின் வளர்ச்சிக்குத் துணை நின்றன. இவை யாவும் நகர வளர்ச்சியின் அடையாளங்களாக அமைந்து சோழமண்டலத்தின் வாணிபப் பொருளி யலுக்கு முக்கிய பங்காற்றியுள்ளன.

இப்புதிய போக்கானது பணப் பொருளாதார வளர்ச்சிக்கு அடிகோலியது. கிராமவாசிகள் தம் தேவையை வெளியில் இருந்து பெற்றனர். இது பணப் பொருளாதார வளர்ச்சிக்குத் துணை நின்றது.

Pin It