யாழ்ப்பாணம் குடநாட்டில் நிலாக்காலங்களில் பனையோலையை நார்நாராகக் கிழித்து மாடுகளுக்குக் கொடுப்பார்கள். இதைச் செய்கின்ற வயதான மனிதர் தன்னைச் சுற்றியிருக்கும் குழந்தைகளுக்கு பாரத, ராமாயணக் கதையைச் சொல்லிக் கொண்டிருப்பார். சில சமயம் நீதிநூல் பாடல்களைச் சொல்லி விளக்கமும் கூறுவார். இதை நிலாப்பள்ளி படிப்பு என்பார்கள். சி.வை.தாமோதரன் பிள்ளை இப்படியான நிலாப்பள்ளியில் படித்திருக்கிறார்.

anna 600திண்ணையில் படித்தவர்கள்

வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியார், வையாபுரிப்பிள்ளை என தாமிரபரணித் தமிழறிஞர்கள் சிலர் திருநெல்வேலி தெற்கு புதுத்தெருவில் இருந்த கணபதியாபிள்ளையின் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தவர்கள். 19ஆம் நூற்றாண்டிலும், 20ஆம் நூற்றாண்டு ஆரம்பத்திலும் வாழ்ந்த தமிழறிஞர்களில் பலரும் இதுபோன்ற திண்ணைப் பள்ளிக்கூடங்களில் படித்தவர்கள்தாம். ஜே.எம்.நல்லுசாமிப்பிள்ளை (திருச்சி ஓதுவார் திண்ணைப் பள்ளிக்கூடம்) மறைமலை அடிகள் (காடம்பாடி தி.ப) பண்டிதமணி கதிரேசன் செட்டியார் (மகிபாலன் பட்டி தி.ப) பி.ஸ்ரீ (தென்திருப்பேரை தி.ப) என இப்படியான தமிழறிஞர்களின் பட்டியல் நீளமானது.

தொன்மமாகிவிட்டது

திண்ணைப் பள்ளிக்கூடம் பற்றிய செய்திகள் எல்லாம் இன்று தொன்மமாகிவிட்டன. இது பற்றிய செய்திகள் பெரிய அளவில் சேகரிக்கப்படவில்லை. திண்ணைப் பள்ளிக்கூடங்களின் கற்பிக்கும் முறையும், நெறிமுறையும் தமிழகத்தின் ஒரே மாதிரியான போக்கில் இருக்கவில்லை. இது வட்டார ரீதியான வேறுபாடு இருந்தது. மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராட்டி போன்ற மொழிகளைக் கற்பித்த திண்ணைப் பள்ளிகள் இருந்தன. இதுபோல தமிழின் பாடத்திட்டமும்; கணக்கு கற்பித்தலிலும் வேறுபாடு இருந்தது.

திண்ணைப் பள்ளிக்கூடம் தொடர்பான சொற்கள் முழுதும் வழக்கில் இல்லை. இவை அழிந்து விட்டன. (பி.கு. காண்க) இவற்றில் சில பழம் அகராதிகளில் கூட இடம்பெறவில்லை. இவை எல்லாவற்றிற்கும் மாற்றுச் சொற்கள் வந்து விட்டன. தமிழகக் கல்வி குறித்த பழம் தகவல்கள் மிகக் குறைவாகவே கிடைத்துள்ளன. கல்வி உயர்வானது, கற்றவன் சமூகத்தில் மதிப்புடையவன் என்பன போன்ற அறச் சார்புடைய சில சிறு குறிப்புகள் பழம் பாடல்களில் வருகின்றன.

முந்தைய காலங்களில் இயங்கிய கல்வி நிலையம், மாணவர்களின் பாடத் திட்டம், ஆசிரியர் தகுதி, பெண்கள் கற்கும் நிலை என்பன போன்ற பல விஷயங்கள் மிகக் குறைவாகவே கிடைத்திருக்கின்றன. 17, 18, 19 நூற்றாண்டு கதைப் பாடல்களில் ஆசிரியரின் தகுதி, கற்பித்த பாடங்கள் பற்றிய செய்திகள் வருகின்றன. இவை கிராமங்களில் கற்பித்தமுறை தொடர்பானவை. கல்வெட்டுகளில் காணப்டாதவை.

அம்மானைப் பாடல்களில்

புகழேந்திப் புலவர் பேரில் உள்ள அம்மானைப் பாடல்களிலும், வில்லிசை கணியான் ஆட்டம் கலைகளுக்குரிய கதைப்பாடல்களிலும் 16-முதல் 19ஆம் நூற்றாண்டுவரை உள்ள காலகட்டத்தில் பாமர மக்கள் கல்விகற்றது பற்றிய செய்திகள் உள்ளன. இக்காலங்களில் 7 வயதுக்குப் பின்னரேதான் கல்வி கற்க வேண்டும் என்ற வழக்கு இருந்திருக்கிறது. ஆத்திசூடி முதலான நீதி நூற்களைக் கற்றவனே படித்தவன் என்ற நம்பிக்கையும் இருந்தது.

ஆசிரியரின் கல்மிஷம்

அபிமன்னன் சுந்தரிமாலை என்னும் கதைப் பாடல் உண்டு. அதில் அர்ஜூனனின் மகன் வீர அபிமன்யூ பற்றியது. கிருஷ்ணனின் மகள் சுந்தரி அபிமன்யூவைக் காதலிக்கிறாள். கிருஷ்ணன் அதற்குத் தடைசொல்லுகிறான். அவளிடம் நீ எந்த ஆசிரியரிடம் படித்தாய் எனக் கேட்கிறான். சுந்தரி உடனே ஆசிரியர் ஒருவரின் கதையைக் கூறுகிறாள். அந்த ஆசிரியர் தன் மாணவியிடம் கல்மிஷம் செய்கிறார். அவர் கடைசியில் புலிகடித்து இறக்கிறார்; கொல்லப்படுகிறார். இதுபோல் வேறு கதைகளும் உண்டு. இதுபோன்ற பதிவுகள் இலக்கியங்களிலோ கல்வெட்டுகளிலோ இல்லை.

திருவிதாங்கூரில்

திருவிதாங்கூர் அரசு பள்ளிகள் அறிமுகமாவதற்கு முன் இருந்த - திண்ணைப் பள்ளிக் கூடங்கள் பற்றி திருவிதாங்கூர் சர்ச் வரலாற்றை எழுதிய சி.எம்.ஆகூர் என்பவர் விரிவாகச் சொல்லியிருக்கிறார். “1903இல் திருவிதாங்கூரில் 1300 திண்ணைப் பள்ளிக்கூடங்கள் இருந்தன. இவற்றில் 50,000 மாணவர்கள் படித்தனர். ஒரு பள்ளிக்கு ஒரே ஆசிரியராக இருந்தார். பெண்கள் இந்தப் பள்ளிகளில் படிக்கவில்லை. திண்ணைப் பள்ளிக் கூட ஆசிரியர்கள் செல்வந்தர் வீடுகளுக்குச் சென்று பெண்களுக்குக் கற்பித்திருக்கிறார்கள்” என்கிறார்.

திருவிதாங்கூரில் 1860லேயே அரசு பள்ளிகள் வந்த பின்பும் 40 ஆண்டுகள் கழித்தும் திண்ணைப் பள்ளிகள் நடந்திருக்கின்றன. இது போன்றே தமிழகத்தின் நிலையும், சென்னையில் பல்கலைக்கழகம், ராஜதானி கல்லூரி, தாம்பரம் கல்லூரி, பிஷப் ஹியூபர் கல்லூரி, பாளை தூய சேவியர் கல்லூரி, வளனார் கல்லூரி எல்லாம் தொடங்கப்பட்ட பின்பு 60-70ஆண்டுகள் திண்ணைப் பள்ளிகள் நடந்திருக்கின்றன.

திண்ணையில் பள்ளிகள்

பள்ளி என்பது சமண சமயம் தொடர்பான சொல். மடங்களைக் குறிக்கவும் பின் கல்விக் கூடங்களைக் குறிக்கவும் பயன்பட்டது. ஆசிரியரின் வீட்டுத் திண்ணையே பள்ளியாகச் செயல்பட்டது. இது தமிழகத்தில் பரவலான ஆரம்பகால நிலை. இது பற்றிய குறிப்புகள் உ.வே.சா. போன்ற பழைய தமிழறிஞர்களின் அனுபவக் கட்டுரைகளில் உள்ளன.

பெரும்பாலும் திண்ணைப் பள்ளிக் கூடம் இருந்த ஊரில் உள்ள மாணவர்களே இங்குக் கற்றனர். மாணவர்கள் வீட்டிற்குச் சென்று திரும்பும் அளவு தூரத்தில்தான் திண்ணைப் பள்ளிக் கூடம் இருந்தது.

மாணவர்கள் அதிகாலையில் திண்ணைப் பள்ளிக்கூடத்திற்குள் நுழைந்ததும் ஆசிரியர் மாணவன் கையில் பிரம்பால் லேசாக அடித்துதான் வரவேற்பார். அது பள்ளிக்கு வந்ததன் அடையாளம். மாணவன் காலையில் கொண்டுவந்த மணலைத் தரையில் கொட்டி பரப்பிவிட்டு எழுதப் பழகுவான். வரிவடிவமும் ஒலி வடிவமும் முழுதும் பூர்த்தியான பின்புதான் ஓலையில் எழுதும் பயிற்சி ஆரம்பமாகும்.

சட்டாம்பிள்ளை

மாணவர்களில் உடல்வலு உள்ள திறமையான மாணவனே மற்ற மாணவர்களுக்குப் பாடம் சொல்லவும் செய்வான். கட்டளை இடுவான். அதிகாரம் செய்வான். இவன் சட்டாம்பிள்ளை எனப்படுவான். பிரிட்டிஷ் அரசு காலத்தில் மாணவனைக் கொண்டே மாணவனுக்குக் கற்பிக்கும் முறை இருந்தது. இதை “சட்டாம்பிள்ளை கல்விமுறை” என்றனர். இது அப்போது கம்பெனி அரசால் ஒப்புக்கொள்ளப்பட்டது.

இரண்டே பாடங்கள்

திண்ணைப் பள்ளிக் கூடத்தில் தமிழ் கணக்கு இரண்டு மட்டும் கற்பிக்கப்பட்டன. தொடக்ககாலத்தில் நீதி நூற்கள் வழி ஒழுக்கத்தைக் கற்பிப்பதே கல்வி என நம்பப்பட்டது. கணக்கு என்பது வாய்ப்பாடுகளை மனனம் செய்வதுதான். அவை கீழ் வாயிலக்கம், மேல் வாயிலக்கம் குழிமாற்று நெல்லிலக்கம் என்பவை. முக்கியமாக பெருக்கல் வகுத்தல் கூட்டல் வாய்ப்பாடுகளாகக் கற்பிக்கப்பட்டன.

மரபுவழியான தொழில் நுட்பம் கல்வியாக அங்கீகரிக்கப் படவில்லை. இவை தந்தை / மாமா வழியே அறியப்பட்டன.

முறண்டு

திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பாடத்தை ஒப்புவிப்பதை முறை சொல்லுதல் என்றனர். இதற்கு முறண்டு என்றும் பேச்சுவழக்குச் சொல்லும் உண்டு. திரும்பத்திரும்பச் சொல்லுதல் என்பது இதன் பொருள். முறண்டு பிடித்தல் என்னும்

சொல்வழக்காறு இதிலிருந்து வந்திருக்கலாம்.

சம்பளம்

மாத அமாவாசை, பிரதமை, அட்டமி நாட்களிலும் விஜயதசமி, தீபாவளி, சதுர்த்தி போன்ற நாட்களிலும் திண்ணைப் பள்ளிக்கூடத்துக்கு விடுமுறை நாட்கள். இவை வாவு நாட்கள் எனப்படும். ஆசிரியருக்கு மாதம்தோறும்கால் அதற்குக் கூடுதலோ சம்பளம் கொடுக்கும் மரபு தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் இருந்ததை உ.வே.சா. கூறுகிறார். தினமும் காய்கறி, வறட்டி, விறகு என எதாவது ஒன்றையும் கொடுப்பதுண்டு. வசதி படைத்த மாணவன் இன்னும் அதிகம் கொடுப்பார். இவர்களின் வீட்டுக் கல்யாண சமயத்தில் ஆசிரியருக்கு ஆடையும் தானியங்களும் கொடுப்பார்கள். நவராத்திரி காலத்தில் ஆசிரியருக்கு வருமானம் அதிகம். இது வட்டாரத்துக்கு வட்டாரம் மாறுபடும்.

தண்டனை

மாணவனைத் தண்டிப்பதன் மூலம் தான் நல்ல கல்வியைக் கொடுக்க முடியும் என்பது அன்றைய ஆசிரியர்களின் உறுதியான நம்பிக்கை. இதற்குப் பெற்றோர்களும் மறுப்புச் சொல்லவில்லை. ஆசிரியர் எப்போதும் பிரம்புடன்தான் இருப்பார். அம்மானைப் பாடல்களும் வில்லிசைப் பாடல்களும் இந்தத் தண்டனைகளைப் பட்டியல் போடுகின்றன. பிரதாபமுதலியார் சரித்திரம் என்னும் நாவலில், ஆசிரியர் அடிப்பது பற்றிய செய்தி கிண்டலாகக் கூறப்படுகிறது. செல்வந்தரான பிரதாபனுக்குக் கற்பித்த ஆசிரியருக்கு மாணவனுக்கு அடிகொடுக்காமல் பாடம் நடத்த முடியாது. ஜமீந்தாரின் மகனை அடிக்கவும் முடியாது. அதனால் அடிப்பதற்கென்றே ஒரு மாணவனை நியமித்தார் ஜமீந்தார். பிரதாபன் பாடம் சொல்லவில்லை என்றால் அந்தக் கூலி மாணவன் அடிபடுவான். இந்த நாவல் தமிழின் முதல் நாவல் 1878இல் வந்தது.

திண்ணைப் பள்ளிக் கூடங்களில் கற்பிக்கப்பட்ட இன்னொரு விஷயம் ஓலையில் எழுதவும் படிக்கவும் பயிற்சி கொடுத்தது. பனை ஓலையை வடிவமைப்பது, எழுதுவது, பாதுகாப்பது எனப்பல விஷயங்களை திண்ணைப் பள்ளிக் கூட ஆசிரியரே கற்பித்திருக்கிறார். வில்லிசைப் பாடல்களில் கூட இது பற்றிய செய்தி வருகின்றது (சிவராம பாண்டியன் கதை, ஆந்திரமுடையார் கதை)

தமிழகத்தில் இரண்டு வகையான ஓலைகளில் எழுதினார்கள். முதல்வகை சாதாரணப் பனை ஓலை; இந்தவகை சுவடிகள் அதிகம் கிடைக்கின்றன. இன்னொன்று சீதாளப் பனை ஓலை அல்லது தாளிப்பனை ஓலை. இந்த ஓலை நீளமும் அகலமும் அதிகம் உடையது. மென்மையானதும் கூட. அதனால் பெரிய இதிகாசங்களை எழுத இந்த ஓலையைப் பயன்படுத்தினர். இந்த ஓலை நாளடைவில் கறுத்துவிடும் என்பது ஒரு குறை. கன்னியாகுமரி மாவட்டம் பார்த்திவசேகரபுரம் என்ற ஊரில் கிடைத்த சமஸ்கிருத இலக்கியங்கள் எல்லாம் தாளிப்பனை ஓலையில் எழுதப்பட்டவை என இவற்றை சேகரித்த கணபதி சாஸ்திரிகள் கூறுகிறார். கவி பாஷனின் ஸ்வப்பன வாசவதத்தா என்ற சமஸ்கிருத நூலின் முழுமையான வடிவம் இந்தியாவிலேயே இந்த ஊரில்தான் கிடைத்தது. அதுவும் ஒரு திண்ணைப் பள்ளிக்கூட ஆசிரியரின் வீட்டிலிருந்தது.

எழுத்தாணி

ஓலையில் எழுத எழுத்தாணி என்ற கருவியைப் பயன்படுத்தினர். இது குண்டெழுத்தாணி, வாரெழுத்தாணி, மடக்கெழுத்தாணி எனப் பல பெயர்களில் இருந்தது. மிகச் சிறிய எழுத்தில் எழுத கூரெழுத்தாணி என்ற ஒருவகையைப் பயன்படுத்தினர். மந்திரவாத நூற்கள் எழுத கூரெழுத்தாணிதான் வேண்டும் என்ற செய்தியை “காணி சாவு” கதைப்பாடல் கூறும். வரைபடம் வரைய நுட்பமான குறியீடுகளை எழுத கூரெழுத்தாணியால் தான் முடியும். ஓலையை நறுக்கப் பயன்பட்ட கத்தியும் எழுத்தாணியும் இணைந்த வடிவம் உண்டு. இது மடக்கெழுத்தாணி எனப்பட்டது. பனையோலை செய்த கூட்டுக்குள் இருப்பது வாரெழுத்தாணி.

எழுதும் முறை

ஓலையை இடது கையால் பிடித்து வலது கையால் எழுதினர். சிலர் இடது கை பெருவிரலில் நீண்ட நகம் வளர்த்திருப்பார். நகத்தில் பிறைவடிவத்துளை இருக்கும். பெருவிரல் நகத்தை ஓலையில் பதித்து பிறைதுவாரம் வழி கூரிய எழுத்தாணி முனையை நுழைத்து எழுதுவர். மிகச் சிறிய எழுத்து எழுத இந்த முறை. சிவராமப் பாண்டியர் கதைப்பாடல் இதை நுணுக்கமாகக் கூறுகிறது.

ஒரு ஓலையில் இத்தனை வரி எழுத வேண்டும் என்ற கணக்கில்லை. ஓலையின் பக்க எண் இடுவது, தலைப்பு இடுவது என்ற வழக்கம் இருந்தது. இலக்கிய ஏடுகளைவிட மந்திரவாத, மருத்துவ, ஜோதிட ஓலைகளில் இந்த வழக்கம் கட்டாயமாக்கப்பட்டிருந்ததை பதனீர் குணசிந்தாமணி ஏட்டுப் பிரதி கூறும். ஓலைக்கட்டுகளில் ஒன்றோ ரெண்டோ துவாரமிட்டு நூலைச் செருகி கட்டிவைப்பர். கயிறு நழுவாமல் இருக்க பனை ஓலை நறுக்கைக் கட்டியிருப்பர், இது கிளிமூக்கு எனப்பட்டது.

ஓலை பாதுகாப்பு

ஓலைச் சுவடியைப் பாதுகாப்பது பற்றி

உ.வே.சா. போன்றோர் கூறியுள்ளனர். பதநீர் குணசிந்தாமணி என்ற ஏடு இது பற்றி விரிவாகக் கூறுகிறது. வசம்பு, மஞ்சள் பொலிவுடன் மணத்தக்காளி இலை அல்லது ஊமத்தம்பூ இலைச்சாற்றைக் கலந்து ஓலையில் பூசலாம். தர்ப்பைப் புல் கரியுடன் இலைச்சாற்றைக் கலந்தும் பூசலாம். இந்த மூலிகைக் கலப்புக் குழம்பு பூசுவதால் ஓலையைப் பூச்சி அரிக்காது.

படியோலை

ஒரு ஏட்டைப் பிரதி எடுப்பதை படியோலை என்பர். வடஇந்தியாவில் இப்படி பிரதி செய்வதற்கு என்று “காயஸ்கர்” என்ற ஒரு சாதியினர் இருந்தனர் என்று கார்த்திகேய சிவத்தம்பி கூறுகிறார். தமிழகத்தில் இப்படிப் படியோலை எடுக்க தனியான ஊர்கள் இருந்தன. இந்த ஊர்களின் அடையாளம் கேட்டு உ.வே.சா. அலைந்திருக்கிறார். திருநெல்வேலி மாவட்டம் தென்திருப்பேரை, ஆழ்வார் திருநகரி என இப்படிச் சில உதாரணங்கள். இப்படியான பல செய்திகளை திண்ணைப் பள்ளிக்கூட ஆசிரியர்கள் கற்பித்தனர்.

திண்ணைப் பள்ளிக் கூடம் தொடர்பான சில சொற்கள் இப்போது வழக்கில் இல்லை.

அண்ணாந்தாள் - மாணவனுக்குக்  கொடுக்கப்படும் தண்டனை.

ஏற்றாள் அல்லது வேற்றாள் - பள்ளிக் கூடத்துக்கு முதலில் வரும் மாணவன்

கட்டை மாட்டல் - மாணவனுக்குரிய தண்டனை

குதிரை ஏற்றம் - மாணவனுக்குரிய தண்டனை

கோதண்டம் இடுதல் - மாணவனுக்குரிய தண்டனை

சட்டம் - மாணவனுக்கு எழுத்துக்களை ஓலையில் எழுதும் முதல் பயிற்சி

சட்டாம்பிள்ளை - மாணவர் தலைவன்

சுவடிதூக்கு - ஓலைச் சுவடிகளை ஒரு பலகையில் வைத்து முதுகின் முன் தொங்கவிட்டு தூக்கிச் செல்வது.

துவக்கல் - புதிய ஏட்டை படிக்கத் தொடங்கும் முதல் நிகழ்வு

படியோலை - மூல ஓலையிலிருந்து பிரதி செய்யும் ஓலை

மானம்பூ - ஆசிரியருக்கு நவராத்திரியில் வரும் உபரி வருமானம்

முறங்கு சொல்லல் - மனப்பாடமானதை திருப்பிச் சொல்லுதல்

முறை சொல்லல் - மனப்பாடமானதை திருப்பிச் சொல்லுதல்

முரண்டு - உருப்போடுதல், திரும்பத் திரும்பச் சொல்லுதல்

வாவுநாள் - விடுமுறை நாள்

வாவுக்காசு - ஆசிரியரின் சம்பளம்

- அ.கா.பெருமாள்

Pin It