உலகில் உள்ள எல்லா பொருட்களிலும் ஒரு இயக்கம் இடையறாது இயங்கிக் கொண்டே இருக்கிறது. அவ்வியக்கம் பொருட்களோடு அல்லது மனிதர்களோடு உடன்பட்டும் அல்லது முரண்பாடு கொண்டும் கலந்து இருக்கிறது. முரண்பாடுகள் மேலும் மேலும் வளர்ந்து பெரிதாகும்போது அல்லது மாறுபடும்போது சமநிலை சிதைகிறது. உயிரினங்கள் மீது இத்தகைய இயக்கம் இயல்பானது. எந்தவொரு படைப்பாளரின் படைப்பிலும் பாத்திரங்கள், சூழ்நிலைகள், வருணனைகள், உரையாடல்கள் எனப் பலவற்றிலும் அவ்வியக்கம் வெளிப்பட்டு நிற்கிறது.

ஒரு நவீனப் படைப்பாளியின் சிந்தனா முறையும் தொழிற்படும் முறையும் இப்படி எப்போதும் சமூகம் குறித்து இயங்கிக் கொண்டிருக்கும். அவனது படைப்புகள் சமூகத்தில் மனிதனுக்கு எதிரான கருத்தியல்கள் நோக்கிப் போராட்டத்தை முன்னெடுப்பனவாகவும் போராடத் தூண்டுவனவாகவும் இருக்கும். அவனால் மரபு அல்லது சமூகத்தில் தொடர்ந்து வரும் வழமையான செயற்பாடு என்கிற பெயரால் நிகழும் அபத்தங்களை, மனித இன வளர்ச்சிக்கு எதிரானவற்றை ஏற்றுக்கொள்ள இயலாது முரணியக்கம் கொண்டே இயங்கும். இத்தகைய இயல்பான முரணியக்கம் குழுத்தன்மையைச் சிதைத்துத் தவறான முன் முடிவுகளை மனித இழிவுகளைச் சித்தரித்துக் காட்டும்; பொதுப்புத்தியைச் சிதைக்க முயலும்; கள்ள மௌனங்களைக் கேள்விக்குள்ளாக்கும்.

தனுஷ்கோடி ராமசாமியின் எழுத்துகள் இவ்வகைப்பட்டதுதான். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து தொழிற்சங்கவாதியாகவும் தமிழ்நாடு கலை இலக்கிய மன்றத் தலைவராகவும் முற்போக்கு இலக்கியவாதியாகவும் விளங்கிய தனுஷ்கோடி ராமசாமியின் எழுத்து உணர்ச்சிகரமான, நேரடியான அடித்தள மக்களின் வாழ்க்கையைச் சித்தரிப்பனவாகும். சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி ஆகிய வறண்ட நிலப்பகுதியை, சூழலை, எளிய மக்களை இரத்தத்தோடும் தசையோடும் எழுத்தில் கொணர்பவர். உண்மையான மனிதாபிமானம், அறச்சீற்றம் ஆகியன அவர் படைப்புகளில் எங்கும் நிறைந்திருக்கும். இதனை வெளிப்படுத்தும் வகையிலேயே ’சேதாரம்’ என்னும் தலைப்பிலான சிறுகதைத் தொகுப்பில் அமைந்த ’பாரதவிலாஸ்’ எனும் சிறுகதை மட்டும் இங்கு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.

dhanushkodi ramasamy booksதனுஷ்கோடியின் இச்சிறுகதை முழுக்க அடித்தள மக்களின் இயலாமை, வறுமை, உணவின்மை, தொழில் சார்ந்த சிக்கல்கள், பொருளாதாரச் சிக்கல், ஏமாற்றுதல், அறச்சீற்ற உடைமையின் மீதான அதிகாரம், சாதி அரசியல், பெண்ணுக்கு எதிரான சமூகக் கொடுமைகள் எனப் பல்வேறு சமூகச் சிக்கல்களை வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும், வெளிப்படுத்தல் மட்டுமில்லாது தீர்வு நோக்கியும் தம் கதைகளை வடிவமைத்துள்ளார்.

’பாரத விலாஸ்’ – கதைச்சுருக்கம்

முருங்கைக்காய்களைத் திருட்டுத் தனமாய்ப் பறித்துவிட்டுச் சென்றதாய்க் குற்றம்சாட்டிப் ‘பாரதவிலாஸ்’ குடியிருப்புக்குள் கக்கூஸ் கழுவ நுழையக்கூடாது என மிரட்டுகிறார் ஆடிட்டர் மனைவி. தான் திருடவில்லை; உடைந்த கிளையில் இருந்து இரண்டு காய்களை ஒடித்து எடுத்துச் சென்றதாய்க் கூறிக் கெஞ்சுகிறாள் ‘கருப்பாயி’ என அழைக்கப்படும் ’காந்திமதி’. அவளின் குழந்தைகள் கையில் ஈயத் தட்டை வைத்துக்கொண்டு ’பசிபசி’யென அரற்றிக் கொண்டிருக்கின்றன. 

பாரத விலாஸ் 17 வீடுகள் கொண்டது. மலை பெயராலும் நதி பெயராலும் வீடுகள். குடியிருப்பு உரிமையாளரின் மைத்துனர் ஆடிட்டர். அதனால், குடியிருப்பின் பொறுப்பு அவரிடம் உள்ளது. எவரெஸ்ட் என்னும் குடியிருப்பு அவருடையது.

ஆடிட்டரம்மாவிடம் எவ்வளவு கெஞ்சியும் இறங்கி வராததால் கோதாவரி குடியிருப்பில் உள்ள வக்கீலம்மா வீட்டிற்குச் செல்கிறாள் காந்திமதி. கக்கூஸ் கழுவ தண்ணீர் இறைத்துத் தர அழைக்கிறாள். ஆனால், அங்கிருந்தும் பதில் வரவில்லை. குழந்தைகள் பசியால் ‘சோறுசோறு’ என வலுவாக அழத் தொடங்குகின்றன. அவர்களை அழக் கூடாது என மிரட்டுகிறாள். பின்னர், கண்களில் கண்ணீர் வழிய வக்கீலம்மாவை அழைக்கிறாள். கோபத்தோடு வெளியில் வரும் வக்கீலம்மா அவளை மிரட்டுகிறாள். அப்போது அங்கு வரும் ஓட்டலம்மா காந்திமதிக்கு ஆதரவாய்ப் பேசுகிறார். “நீயே நீர் இறைத்து, கக்கூஸ் கழுவி விட்டுப் போ” என்கிறார். இதனை ஆடிட்டரம்மாவும் வக்கீலம்மாவும் எதிர்க்கின்றனர் வாய்த் தகராறு ஏற்படுகிறது.

நடந்த சண்டையை மாலையில் வீட்டுக்கு வரும் தங்கள் கணவரிடம் சொல்ல, அவர்களும் குடியிருப்பில் உள்ள பிறரும் உடனே அது குறித்துக் கேட்க ஓட்டலம்மா வீட்டுக்குச் செல்கின்றனர். சில விதிகளுக்கு உட்பட்டு இருப்பதென்றால் இங்கு இருக்கலாம் என அவர்கள் கூறுகின்றனர். ஆனால், அவை எல்லாவற்றையும் முடியாது என மறுக்கும் ஓட்டலம்மா, அவர்களை எதிர்த்துப் பேசுகிறார். நியாயம் என்பது அனைவருக்குமான ஒன்று என்பதை வலியுறுத்துகிறார். செயலின்மையும் மௌனங்களும் அர்த்தமற்றவை என்பதனையும் உணர்த்துகிறார்.

எளியோர்மீதான ஒடுக்குமுறை வடிவங்கள்

சமூகத்தில் எளியோர்மீது பல வகைகளில் ஒடுக்குமுறை செலுத்தப்படுகிறது. அவர்களுக்கான பெயர், புழங்குபொருள், தொழிற்பாகுபாடு, கல்விச்சூழல், பொருளாதாரம், சமூக உறவு என எல்லா நிலைகளிலும் அதனைக் காணமுடியும். பாரதவிலாஸ் சிறுகதையிலும் இதனைக் காட்சிப்படுத்துகிறார் ஆசிரியர். ஒடுக்கப்பட்ட பெண்ணான காந்திமதியை அவளின் சொந்தப் பெயரில் அழைக்காமல் கறுப்பாயி என அழைப்பதும், அதன்மூலம் நிறத்தைச் சொல்லி இழிவு செய்வதும், கையில் ஓட்டை உடைசலான பாத்திரங்கள், அழுக்கடைந்த கிழிந்த துணிகள் அணிந்திருப்பதைக் காட்சிப்படுத்துவதும், அவர்கள், தங்கள் கையால் நீர் இறைத்தாலே தீட்டு எனக் கூறுபவர்களாகவும், கக்கூஸ் கழுவும் தொழிலாலேயே அவளை இழிவாகப் பார்ப்பதும், கல்வி அறிவற்றவர்களாக மட்டுமல்லாமல் பொருளாதாரச் சூழலால் கல்வி குறித்த ஆர்வம் இல்லாதவர்களாயும், உணவுக்காக அலைபவர்களாயும், சமூக உறவில் அதிகாரத்தை, சாதி, பொருளாதார மேலாண்மையை ஏற்றுக்கொள்பவர்களாகவும், உடைமை அதிகார ஒடுக்குமுறைக்குப் பணிந்துப்போகக் கூடியவர்களாகவும் இருக்கும் சூழலை ஆழமாக ஆசிரியர் புலப்படுத்தியுள்ளார். மேலும் இவற்றையெல்லாம் கேள்விக்குள்ளாக்கும் வகையிலும் பொதுப்புத்தியை உடைத்துச் சிந்திக்கத் தூண்டுபவளாகவும் காந்திமதியின்மீது நடத்தடப்படும் ஒடுக்குமுறைகளை எதிர்ப்பவளாகவும் ஓட்டலம்மா என்னும் பெண் கதாப்பாத்திரத்தையும் சிறப்பாகப் படைத்து உலவவிட்டுள்ளார்.

உடைமை அதிகாரத்தின் ஒடுக்குமுறை 

தங்களின் உடைமை மீது அதிகாரத்தைக் கருவியாக வைத்து எளியோர்மேல் ஒடுக்குமுறையைக் கையாள்வது சமூகத்தில் எப்போதும் ஒரு செயற்பாடாகவே நிகழ்ந்து வருகிறது. சாதிய அடக்குமுறை சார்ந்தும் பால் சார்ந்தும் தொழில் சார்ந்தும் பொருளாதாரம் சார்ந்தும் அந்த அடக்குமுறை, அதிகாரம் அடித்தட்டு மக்களின் இருத்தலியல்மீது பலவகையிலும் தொழிற்படுகிறது. அதிகாரம் குறித்துப் பேசும் பூக்கோ, அதிகாரம் என்பது யாரோ ஒருவர் தன் வசத்தில் இருந்து பிரயோகிக்கும் ஒன்றல்ல. மாறாக, அது அதிகாரம் / அறிவு ஆகும். அதிகாரம் அறிவின் வடிவில் அல்லது அறிவு அதிகாரத்தின் வடிவில் அமைகிறது. உலகத்தைப் பற்றி நமக்கு என்ன தெரியும் என்று நினைக்கிறோமோ அது (உலகத்தைப் பற்றி சிந்திக்க நாம் பழக்கப் படுத்தப்பட்டுள்ள கருத்துருவாக்கம்) பெரும் அதிகாரத்தை செயலுக்குக் கொண்டு வருகிறது. (ஜோனதன் கல்லர் இலக்கியக் கோட்பாடு (மொ.பெ.), 2012 (ம.ப.); ப – 12)

பாரதவிலாஸ் கதையில் வரும் கறுப்பி என அழைக்கப்படும் காந்திமதி மீது உடைமை அதிகார ஒடுக்குமுறை செலுத்தப்படுகிறது. அவள் மீது திருட்டுப்பழி சுமத்தப்படுகிறது. குடிகாரக் கணவன், பசியால் துடிக்கும் குழந்தைகள், வறுமை மிக்க வாழ்க்கை, வேலை வாய்ப்பின்மை, சமூகச் சூழல் ஆகியன அவளைப் பிடர் பிடித்துத் தள்ளுகின்றன. கக்கூஸ் கழுவுகிற வேலை. இந்த வேலை போனால் தன் வாழ்க்கையை எப்படித் தள்ளுவது என்கிற கவலை அவளை ஆட்கொள்கிறது. கெஞ்சுகிறாள்; தான் திருடவில்லை எனச் சத்தியம் செய்கிறாள். ஏ... எச்சிக்கல கழுத... கக்கூசு மரசல்ல நின்னு மரத்த வளச்சி நால...சி முருங்கைக்காயை புடுங்கி வாளிக்குள்ள போட்டுக்கிட்டு வேகமா நடையைக் கட்டி இருக்கே. அத அந்தப் பையன் பார்த்துட்டு வந்து சொன்னான். கீழே கெடந்தத எடுத்துகிட்டுப் போனேன்னு பொய் சொல்றே... ஒஞ் சாதிக்குத் தக்கனதானே ஒம் புத்தியிருக்கும்... நீ இப்ப மரியாதையா வெளியே போறயா... இல்லையா...? (சேதாரம்(சி.தொ.), 1987, ப-29) என்கிற ஆடிட்டரம்மாவின் வார்த்தைத் தேளாய்க் கொட்டுகிறது. குழந்தைகள், யம்மா... சோறு... யம்மா... சோறு... (ப-31) எனத் தங்கள் பசியை வெளிப்படுத்திச் சிணுங்குகின்றன.

குழந்தைகள் அழுகையை மிரட்டி அடக்கிவிட்டு மீண்டும் மீண்டும் கெஞ்சுகிறாள். இந்த நேரத்துக்குப் பொம்பளைங்க கக்கூஸ் நாலையும் ஆம்பளைங்க கக்கூஸ் மூனையும் நல்லா கழுவிவிட்டுச் சுற்றுப்புறத்தை எல்லாம் பெருக்கிவிட்டு நாலஞ்சு வீட்டிலாவது அவங்களுக்கு ஆகாத பழையது, கழிவுகளைப் போடுவாங்க... அத வாங்கித் தென்னை மரத்தடியில் உட்கார்ந்து பிள்ளைகளைப் பசியமர்த்தியிருப்பாள்... அதுக பிரியமா அவகாச்சியோட திங்கறத பாத்து மனசுக்குள்ள ஆனந்த கண்ணீர் விடுவாள். சாப்பிட்டது போக மிச்சமிருப்பதை வீட்டுக்கு எடுத்துட்டுப் போவாள். எப்படியும் கவலையில்லாம ரெண்டு நேரம் பொழுது போயிடும்... வீட்டுக்கு ஒரு ரூபா வீதம் 17 ரூபாய் இதுல கிடைக்கும்... இந்த வேலை போச்சுன்னா... நினைக்க நினைக்க மனசு கொலஞ்சது. கக்கூஸ் அள்ற வேலையா இருந்தாலும் கிடைக்கணுமே... முனிசிபாலிட்டி வேலை பரம்பரைகாரங்களுக்குத்தான் உண்டு. அதுக்கு அறுநூறு, எழுநூறு தண்ட வட்டிக்கு வாங்கி ஆபிசர்மாருக்கு லஞ்சம் குடுக்கணும்.

(ப – 32) என்கிற எண்ணம் அவளுக்குள் ஓடுகிறது. இயலாமையும் வாழ்க்கைச் சூழலும் அல்லல் தருகின்றன. மனித உறவுகள் சுயநலக் குணத்தோடு தன்கீழுள்ள அடித்தள மக்களை அடக்கி ஒடுக்கக் கூடியதாக மாறிப் போகின்றன. தொடர்ந்து துன்பத்திற்கு உள்ளாக்குகின்றன என்பதனை இந்தக் கூற்றுக் காட்டி நிற்கிறது. 

முதலாளித்துவ சமுதாயம் வளர வளர மனிதருக்கு இடையிலான உறவுகளைவிட மனிதருக்கும் பொருட்களுக்கும் இடையே உள்ள உறவே முக்கியத்துவம் பெறுகிறது. இந்த உடைமை உறவு மனித உறவை நிர்ணயிக்கிறது. (தமிழ் நாவல் இலக்கியம்,1984; ப-132) என்கிற க.கைலாசபதியின் கூற்றும் இங்கு நினைவுகூரத்தக்கது.

உலகம் முழுவதும் வர்க்க வேறுபாடுகள் ஏதாவது ஒரு வகையில் வெளிப்பட்டு அதிகாரம் மிக்கவர்களிடம் அதிகாரமற்றவர்கள் துன்பப்படும் போக்கு நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அதிகாரமற்றவர்களான அடித்தள மக்கள் மீது ஒரு பொதுப்புத்தியைக் கட்டமைக்க அதிகார வர்க்கம் முயலுகிறது. அடித்தள மக்கள் புத்தியற்றவர்கள், கொடுமையை விரும்பி ஏற்றுக் கொள்பவர்கள், பலவீனமானவர்கள், அதிகார வர்க்கத்தின் உதவியை எதிர்ப்பார்த்து வாழ்பவர்கள், திருடர்கள், சுத்த மற்றவர்கள் ஆகியனதான் அந்தப் பொதுப்புத்திகள். கருப்பாயியைப் பார்த்து ’ஒஞ் சாதிக்குத் தக்கனதானே ஒம் புத்தி இருக்கும்’ (ப – 29) என்று ஆடிட்டரம்மா கூறுவது சாதிக்கும் புத்திக்கும் தொடர்பு இருப்பதாக ஒரு கருத்தைப் பொதுப்புத்தியை உருவாக்கும் போக்கும் சாதிய ஏற்றத் தாழ்வை மேலும் வளர்த்தெடுக்கும் போக்கும் அதிகார வர்க்கத்திடம் எப்போதும் வெளிப்படுவதைச் சுட்டிக்காட்டுகின்றன. கிராம்சி கூறுவதைப்போல கருத்தியல் ரீதியான மேலாண்மையைச் சமூகத்தில் நிறுவுவதிலேயே எந்த ஒரு ஆளும் வர்க்கமும் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும். எனவே எந்த ஒரு வர்க்கமும் ஆளும் வர்க்கமாக மாறுவதற்கும் (ஆவதற்கும்) அதிகாரத்தைப் பெறுவதற்கும் கருத்தியலே அடிப்படையாகும் (ர.சுரேஷ், பெயல் இதழ், ப – 74) எனும் கருத்து இங்கு இதனுடன் ஒப்பு நோக்கத்தக்கது.

அதிகார எதிர்ப்பு 

வர்க்க வேறுபாடுகள் நிறைந்த இந்த ஆதிக்க அதிகாரச் சமூக அமைப்பில் மனிதநேயமே அடித்தள மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை எதிர்க்கத் தூண்டுகிறது. இந்த இயங்கியல்தான் தன்னைச் சுற்றியிருக்கும் எளிய மனிதர்கள் உடைமையின் பெயராலோ, சாதியின் பெயராலோ, மதத்தின் பெயராலோ, பொருளாதாரத்தின் பெயராலோ அடக்கி ஒடுக்கப்படும்போது தன்னைச் சுதந்திரமற்ற உயிரியாகவும் கருதி அவர்களுக்காகப் போராடத் தூண்டுகிறது. சமூகத்தில் தன்னைப் பிரித்துப் பார்க்க முடியாத ஒருவன் எப்போதும் அதிகாரத்திற்கு எதிராகப் போராடியபடியே இருப்பான். தனுஷ்கோடியும் தம் படைப்பின் வழிப் போராடுகிறார்.

கதை ஆசிரியர் பார்வையிலிருந்தே நகர்கிறது. சமூக மனங்களை, மனங்களுக்குள்ளாகப் பொதிந்திருக்கும் போலித்தனங்களை, கருத்துகளைப் பாத்திரங்களுக்கு உள்ளாக நின்று வெளிப்படுத்த முனைகிறார். அவருக்கென்று ஓர் அரசியல் இருக்கிறது. மார்க்சியத்தின்மீது மிகுந்த ஈடுபாடு உடையவரான அவரின் எழுத்திலும் அது வெளிப்படுகிறது. சிறுகதையில் வரும் ஓட்டலம்மா என்பவரின் குரல் அவருடையதுதான். 

ஆடிட்டரம்மாவும் வக்கீலம்மாவும் காந்திமதியை மிகக் கேவலமாகப் பேசி விரட்ட, அதைப் பார்க்கும் ஓட்டலம்மா, ஏய்... காந்திமதி... ஏன் விழுந்து கெ...சிக்கிட்டு இருக்கே... நீ பாட்டுக்குக் கிணத்துல தண்ணி இறைச்சு கக்கூச கழுவி விட்டுப் போ... (ப – 34) என்கிறாள். காந்திமதியோ திகில் பிடித்தவள் போல அப்படியே மூவரையும் பார்த்து நிற்கிறாள். நான் சொல்றது உன் காதுல கேக்குதா இல்லையா...? பேசாம கிணத்துல தண்ணி எறச்சு ஒன் வேலைகள பாத்துட்டுப் போ... (ப – 34) என்கிறார் ஓட்டலம்மா. ஆனால், காந்திமதி எதுவும் செய்யாது பயந்தபடி நிற்கிறாள். சமூகத்தில் கட்டமைக்கப்பட்ட கருத்துருவாக்கம் அவளைச் செயல்பட முடியாதபடி செய்கிறது. 

உலகம் புனைவியல் ரீதியாகக் கட்டமைக்கப் பட்டுள்ளது. சமூகத்தில் வாழும் மனிதர்களும் புனைவியல் தன்மையோடு அலைகிறார்கள். கருத்துருவாக்கம் சமூக வாழ்வியக்கத்தோடு நெருக்கமானதாகவும் ஒட்டுமொத்த மக்களின் மனங்களையும் ஆக்கிரமித்துள்ளதால், தன்னிச்சையாகத் தம்மால் இயங்க முடியாது என்கிற எண்ணமும் பொருளாதார அதிகாரம் மிக்க ஆளும் வர்க்கத்தை எதிர்த்து எதுவும் செய்ய இயலாது என்கிற அவநம்பிக்கையும் உடல் முழுக்க மனம் முழுக்க நிரம்பிக் கிடக்கிறது. அதனால்தான் ஓட்டலம்மா ‘நீயே கிணற்றிலிருந்து நீர் இறைத்துக் கக்கூசைச் சுத்தம் பண்ணு’ எனச் சொல்லும்போது செயலற்று நிற்கிறாள்.

 ஏன் உன்னால எறச்சுக்க முடியாதா...?

 நாங்க கீழ்ச் சாதிக்காரங்கள்ளே...     (ப – 35)

எனும் பதில், காந்திமதியிடமிருந்து ஓட்டலம்மாவுக்குக் கிடைக்கிறது. 

அதிகாரம் எப்போதும் இரட்டைத் தன்மை கொண்டது. இங்கு, ‘ஒஞ் சாதிக்குத் தக்கனதானே ஒம் புத்தி இருக்கும்’ என்னும் ஆடிட்டரம்மாவின் கூற்றின்வழியும் ’நாங்க கீழ்ச்சாதிக்காரங்கள்ளே’ என்னும் காந்திமதியின் கூற்றின்வழியும் இரண்டு வகையில் அதிகாரம் செயல்படுவதைக் காணமுடியும். முதல் கூற்றில் சாதியின்படியே புத்தியும் கீழானதாக இருக்கும் என்னும் கருத்தியலை மேலும் கெட்டிப்படுத்தி அதிகார மேலாண்மையை ஒடுக்கப்படும் சமுதாயத்தின்மீது காட்டுதல் வெளிப்பட்டு நிற்கிறது. இரண்டாவது கூற்றில் ஒடுக்கப்பட்ட சமூகமே எதிர்க்க இயலா சூழலுக்கு உள்ளாகி அந்த அதிகாரத்தைப் பேணும் நிலைக்குத் தள்ளிவிடப்படும் நிலை வெளிப்பட்டு நிற்கிறது. இந்த நிலைதான் காந்திமதிக்கு ஏற்படுகிறது என்பதை ஆசிரியர் உணர்த்துகிறார். இதுதான் அதிகாரத்தின் வெற்றி என்பதையும் ஆசிரியர் அம்பலப்படுத்துகிறார்.

காந்திமதிக்கு ஆதரவாக ஒட்டலம்மா பேசுவது ஆடிட்டரம்மாவுக்கும் வக்கீலம்மாவுக்கும் பிடிக்காமல் போகிறது. அதிகாரத்துக்கு எதிரான குரல் எந்த மூலையில் இருந்து வந்தாலும் அதிகாரத்தைத் தக்க வைக்க அதிகார வர்க்கத்தினர் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டே இருப்பார்கள். அதற்காக, அவர்களின் பேச்சும் செயலும் எந்த எல்லைக்கும் போகும். 

ஆடிட்டரம்மா தன் பேச்சால் ஓட்டலம்மாவை அவமானப்படுத்தப் பார்க்கிறார். திருட்டுக் கழுதைக்கு சப்போட்டா திருட்டுக் கூட்டம்தான் வரும்... வேறு யார் வருவா...? (ப – 35) என்று மோசமான வார்த்தையை இறைக்கிறாள். ஆனால், எதற்கும் அசராத ஒட்டலம்மா ஆடிட்டரம்மாவை நோக்கி, காந்திமதி நாலு முருங்கைக்காய திருடிட்டாள்னு குதிக்கிறேளே... உங்க ஆத்துக்கு விறகு, வரால் மீனு, கோழி, மாம்பழம், தேங்காய், காய்கறிகள் கொண்டாந்து கொட்டுறாங்களே... இதெல்லாம் உங்க மேலே உள்ள பாசத்தினாலயா...? லஞ்சமாத்தான் கொடுக்குறாங்க... இது திருட்டில்லியோ... உங்க ஆத்துல இருக்கிற ஸ்கூட்டர், டிவி, கேசட், ஸ்டீல் பீரோ, டேபிள், மணி நகர்ல நீங்க பிளாட் வாங்கி லட்ச ரூபாய்க்கு வீடு கட்டி இருக்கிறது எல்லாம் உங்க புருஷனோட எழுநூறு... எண்ணூறு... சம்பளத்தில வாங்கினதுதானா...? அது பொதுமக்கள் பணத்தைத் திருடினதுல இல்லே...? உங்க களுத்துல... காதுல... கையிலே ஜொலிக்குதே அதெல்லாம் இவங்கள மாதிரி ஏழைகளின் ரத்தத்தைத் திருடிப் போட்டதுதான். (ப – 36) எனத் தன் எதிர்வினையை ஆற்றுகிறாள். 

ஆடிட்டரம்மாவுக்கு வக்காலத்து வாங்க வரும் வக்கீலம்மாவை நோக்கி, நான் காந்திமதிக்கு வக்காலத்து வாங்கறது நியாயங்கிறதால... இரக்கத்தினால... உம் புருஷன் இந்தத் தண்ணீர்ப் பஞ்ச காலத்துல பாப்பாக்குடி சமுதாய கிணத்து டீசல் மோட்டாரத் திருடியவனுக்காக வாதாடியது கேவலம் ஆயிரம் ரூபாய் காசுக்காக... தீப்பெட்டி கள்ள பண்ரோல் அடிச்சு... லட்ச லட்சமாகக் கொள்ளை அடிக்கிறவனுங்களுக்கு எத்தனை கேசுல வக்காலத்து வாங்கி இருக்காரு ஒம் புருஷன் சொல்லட்டுமா...? (ப – 37) என்று அதிகாரத்திற்கு எதிராகத் தன் குரலை நியாயம் நோக்கி உயர்த்துகிறாள். படைப்பாளர் தனுஷ்கோடி ராமசாமி இத்தகைய எதிர்க் குரல்களைக் காட்சிப்படுத்துவதுவதன் மூலம் அதிகாரத்திற்கு எதிரான மனப்பான்மையைத் தூண்டிவிட்டுத் தீவிரமாகப் போராட வற்புறுத்துகிறார்.

அதிகார மேலாண்மை

கறுப்பர்களை ஒடுக்கும் இனவாத அரசியல்வாதி தொழிலாளர்களை அடக்கி ஆளும் பூர்சுவா, பெண்களை அடிமைப்படுத்தும் தந்தை, ஆதிக்கக் குடும்பம் (இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்களை ஒடுக்கும் மேல் சாதிக்காரர்கள்) ஆகிய அனைவரும் தங்கள் ஆதிக்கத்தைத் தங்களுக்கான கருத்தாக்கங்களின் மூலம் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள மிகவும் விழிப்புணர்வுடன் முயற்சி செய்துவருகின்றன, (பெண் எனும் படைப்பு,1994 ; ப – 108) என்கிறார் கா. பஞ்சாங்கம். அடித்தள மக்களின் இயங்கியலுக்கு எதிராக ஆதிக்கம் செய்வோரின் செயல் குறித்த இந்தக் கருத்து தனுஷ்கோடி ராமசாமியின் சிறுகதையிலும் காணமுடிகின்றது. காந்திமதியை ஆதரிக்கும் ஓட்டலம்மா எதிர்கொள்ளும் சூழல்கள் அதற்குச் சான்றாகும்.

அதிகாரத்தை எதிர்க்கும் இன்னொரு அதிகாரத்தை, அதிகார மேலாண்மை செய்து ஒடுக்க அதிகார அமைப்புகள் ஒன்று சேரும். பலவகையிலும் நெருக்கடி கொடுத்துத் தங்களுக்கு எதிரான அதிகாரத்தை அழித்து ஒழிக்க அல்லது தங்கள் பக்கம் இணைத்துக் கொள்ள முயலும். இவ்வாறுதான் தங்களது அதிகார மேலாண்மையை நிலைநிறுத்த அதிகார அமைப்புகள் தொடர்ந்து செயல்படுகின்றன. காந்திமதிக்கு ஆதரவாக இருக்கும் ஓட்டலம்மாவை எதிர்க்க, பாரத விலாஸில் இருக்கும் குடித்தனக்காரர்கள் அனைவரும் ஒன்று சேருகின்றனர். அவர்கள் ஓட்டலம்மாவை மிரட்ட முயலுகின்றனர். 

இந்த குடியிருப்பில் இருக்கிறவங்க எல்லாருமே கௌரவமான உத்தியோகத்திலே இருக்கிறவங்கதான்... 

ஒவ்வொருத்தரும் ஏழு... எட்டு... பத்து... வருஷம்னு இந்த வீடுகள்ள குடியிருக்கோம். நீங்க புதுசா இப்ப மூணு மாசத்துக்கு முன்னாடி வந்து இருக்கீங்க. நீங்க வந்ததிலேருந்து ஏதாவது பிரச்சினைகள் வந்துகிட்டே இருக்கு.

இதுவரை இங்க சாதிப் பிரச்சினைங்கிறதே ஏற்பட்டதில்லை... இப்ப நீங்க சாதிப் பிரச்சனையைக் கெழப்பி விட்டிருக்கீங்க...

கீழ்ச்சாதிக்காரங்கள்ளாம் இங்கே குடி இருக்காங்கன்னு பேசி இருக்கீங்க நீங்க வீட்டை காலி பண்ணிக்கிடனும்.(பக் – 38, 39) என்றெல்லாம் கூறி ஓட்டலம்மாவைப் பணிய வைக்க முயலுகின்றனர். ஆனால், அதிகாரத்திற்கு அடிபணியாமல் முரண்படும் ஓட்டலம்மா அவர்களின் அறமற்ற செயலை எதிர்க்கிறார். 

புதிய சமூக உருவாக்கம்

முரண்பாடுகளின் அளவில் மாறுதல் ஏற்படும்போது சமநிலை சிதைகிறது. இந்த அளவு மாற்றம் பொருட்களின் மனமாற்றத்திற்கு இட்டுச் செல்கிறது. முன்பு இருந்த நிலை மறுக்கப்படுகிறது. புதிய மேலான நிலைக்கு வழி கிடைக்கிறது. ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்Õ நிகழ்கிறது. (இயக்கவியல் : தமிழ் புதினங்களில் வழி, 2013;

ப - 14) என்பார் சோ. முத்து மாணிக்கம். பாரத விலாஸ் சிறுகதையிலும் இதுதான் நிகழ்கிறது. பாரத விலாஸில் வாழும் மற்ற குடும்பத்தினருடன் முரண்படுகிறார் ஓட்டலம்மா. அதுவரைக் கூட்டமாக இருப்பவர் பக்கம்தான் நியாயம் இருக்கும் என்கின்ற எண்ணத்தை உடைத்து, அறச் சிந்தனையையும் ஏற்படுத்திப் புதிய சிந்தனைக்கு இட்டுச் செல்ல ஓட்டலம்மா மூலம் ஆசிரியர் முனைகிறார். ஓட்டலம்மா தொடர்ந்து பாரத விலாஸில் இருக்க வேண்டுமென்றால், நம்பர் ஒன், கருப்பாயியை நாளையிலிருந்து வேலையிலி ருந்து நீக்கணும். நம்பர் ட்டூ, நீங்க காலையிலே கன்னாபின்னான்னு பேசினதுக்கு எல்லார்கிட்டேயும் மன்னிப்புக் கேக்கணும். நம்பர் திரி, இனிமே நீங்க பாரதவிலாஸ் பிரச்சனை எதிலேயும் தலையிடக் கூடாது. (ப – 40) என மூன்று விதிகளை விதித்து அதற்கு உடன்பட வேண்டும் என்று வற்புறுத்துகின்றனர். ஆனால், ஓட்டலம்மா அதற்கு உடன்பட மறுக்கிறார். ஆடிட்டரை நோக்கி, உங்க பேச்சிலே ஒரு திருத்தம். அவங்க பேரு கறுப்பாயி இல்லே. காந்திமதி. அவங்க அப்பாவுக்கு மகாத்துமா மேல இருந்த பக்தியினாலே தன் பெண்ணுக்கு காந்திமதின்னு பேரு வச்சிருக்காரு. அதை மாத்தி கருப்பாயி, கறுப்பி, காளின்னு கூப்பிடறது நல்ல நாகரிகம் இல்லே. (ப – 40) என்று கூறுகிறார். பெயரை வைத்துப் பிறரை இழிவு செய்யும் மடத்தை, இழிவான செயலைக் கண்டிக்க முயல்கிறார். மனிதர்களே, மனிதர்களின் கக்கூசை சுத்தப்படுத்தும் மனிதத்தன்மையற்ற செயலை, பொருளாதாரச் சூழலால் செய்யும் ஒருவரின் தொழிலை அடிப்படையாகக் கொண்டு இழிவுசெய்வதும் திருடர்கள், புத்தியற்றவர்கள், அடங்கிப்போக வேண்டியவர்கள் என எண்ணுவதனையும் தவறானது எனச் சுட்டிக்காட்டுகிறார். சுத்தம் செய்ய வேண்டியது அவ்வாறு நடந்து கொள்ளும் மனிதமனங்களே என உணர்த்துகிறார். 

மனிதர்கள் எப்போதும் செய்வது ஒன்றாகவும் சொல்வது ஒன்றாகவும் தங்கள் வாழ்க்கையில் நடக்கின்றனர். பொதுவாழ்க்கையில் பணியிடங்களில் தங்களை நல்லவர்களாக, பொதுவுடமைவாதிகளாக பிறர் நன்மைக்கு உதவுபவர்களாகக் காட்டிக்கொள்ளும் அதிகார வர்க்கத்தினர் தங்கள் சொந்த வாழ்க்கையில் அதற்கு எதிராகவே செயல்படுகின்றனர். இதனை ஒட்டலம்மா வழி ஆசிரியர் கேள்விக்கு உள்ளாக்குகிறார். படிச்சவங்க... பதவியிலே இருக்கிறவங்கதான் மனுஷங்க... அவங்களுக்குத்தான் பிள்ளைகள், குடும்பம் இருக்கு. அவங்களுக்குத்தான் வேலைப் பாதுகாப்பு... நியாயமெல்லாம் வேணும்... ஏழைக் கூலிகள்... நமக்காக அசிங்கமான தொழில் செய்யறவங்களுக்கெல்லாம் வேலைப் பாதுகாப்போ... நியாயங்களோ வேண்டியதில்லை... அப்படின்னு நான் நினைக்கல (ப – 41) என்பதாகத் தன் கருத்தினை அவர்களின் அறிவில் படும்படி உணர்வுப்பூர்வமாக எடுத்துரைக்கிறார். கேள்வியின் நியாயம் அவர்களில் சிலருக்கு உறைக்க, எதுவும் பேசாமல் அங்கிருந்து மௌனமாய் வெளியேற முயல்கின்றனர். 

எந்தப் பதிலும் சொல்லாமல் மௌனமாய் வெளியேற முயலும் அவர்களையும் நோக்கி, சார்... நில்லுங்க... பிரச்சனை என்ன... அணிசேரலாமா... கூடாதான்னு கொஞ்சங்கூட யோசிக்காமல் தலையைக் காட்டறதும் நியாயத்தைப் புரிஞ்சுகிட்ட பின்னாடி மௌனமாக எழுந்து போறதும் ஆம்பளைகளுக்கு அழகில்லை... அழகில்லேங்கிறது மட்டுமல்ல... அது அசட்டுத்தனம். இது மாதிரிப்பட்ட அசட்டுத்தனங்கள் நம்ம ஜனங்களுக்கு செய்யற துரோகமாக ஆயிடும்... நியாயம் பேச வந்தீங்கள்ளே... உட்கார்ந்து நியாயத்தைச் சொல்லிட்டுப் போங்க (பக் - 41, 42) என்பதாக வினா எழுப்புகிறார் ஆசிரியர். நடுவுநிலைமை என்பதும் எந்த ஒரு அநியாயத்துக்கும் எதிராகத் தன் குரலை உயர்த்தாமல் மௌனமாக வெளியேற நினைப்பதும் அறத்திற்கு எதிரானது மட்டுமல்ல, அது ஏதேச்சதிகார அதிகாரத்திற்கு ஆதரவு அளிக்கும் நிலையைக்கூட ஏற்படுத்திவிடும். ஆகவே, தங்களுடைய இச்சைகளுக்கும் சாத்தியங் களுக்குமிடையே சமரசத்தை உருவாக்கி வாழும் போக்கைக் கைவிட்டு நியாயத்துக்கு எதிராக எந்த சமரசத்தையும் ஏற்றுக்கொள்ளக் கூடாது. எதிர்க்குரலும் போராட்ட குணமும்தான் புதிய சமூகத்தைக் கட்டமைக்கும் என்பதனை பாரதவிலாஸ் என்னும் இச்சிறுகதை உணர்த்துகிறது.

தனுஷ்கோடி ராமசாமியின் பார்வை

படைப்பாளர்களைப் பொறுத்துப் படைப்பில் கதையின் நோக்கம், உள்ளடக்கம், தீர்வு, பாத்திர உருவாக்கம், பண்புகள் என எல்லாம் அமையும். படைப்பில் ஒரு சமூகத்தைப் பற்றி அச்சமூகத்தைச் சார்ந்த ஒருவர்தான் ஆழமாக வெளிப்படுத்த முடியும் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு கருத்தாகும். தலித் சமூகத்தைப் பற்றிய ஒரு கதையை தலித் சமூகத்தைச் சார்ந்த படைப்பாளரால்தான் உயிர்ப்போடு படைக்க முடியும். பூமணி, இமையம் ஆகியோர் படைப்புகள் அதற்குச் சான்று.

தனுஷ்கோடி கம்யூனிசக் கொள்கைகளின்மீது மிகுந்த ஈர்ப்புடையவர் மட்டுமன்றி அக்கொள்கைகள் சார்ந்தே தன் கதைகளை வடிவமைத்தவர். பாரத விலாஸ் சிறுகதையில் ஒடுக்கப்படுபவளான காந்திமதி தனக்கு ஏற்படும் சிக்கலை, ஒடுக்குமுறையை ஏற்றுக்கொள்பவளாகவும் குரலற்றவளாகவும், அவளுக்கு ஆதரவு வழங்கவும், நீதியைப் பெற்றுத்தரவும் பொருளாதார பலம் மிக்க ஓட்டலம்மா தேவைப்படுவது போலவும் படைக்கப்பட்டுள்ளனர். ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிரான போராட்டங்களில் பொருளாதார பலம் மிக்கவர்களிடமிருந்தும் அதிகாரம், துணிவு மிக்கவர்களிடமிருந்தும் ஆதரவுக் குரல் வரவேண்டும் என்பது அவரது பார்வையாக வெளிப்படுகிறது. மேலும் காந்திமதியிடமிருந்து அதிகாரத்திற்கும், ஒடுக்குமுறைக்கும் எதிரான கலகக் குரல் வெளிப்படாமல் தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் எங்கே உணவு கிடைக்காமல் போய்விடுமோ என்கிற அவளின் பதற்றத்தைத் தணித்து, ஆதிக்க அதிகாரக் கூட்டத்துள் இருக்கும் ஒருவர் வந்து சமநிலைப்படுத்த முயல்வதும் என்பதான கதையாடல் தனுஷ்கோடி இராமசாமியின் அரசியல் பார்வையை வெளிப்படுத்துவதாக அமைகிறது.

முடிவுரை

 சமூகத்தை அதனுள் வாழும் அடித்தள மக்களின் இயங்கியலை தனுஷ்கோடி ராமசாமியின் பாரத விலாஸ் சிறுகதை பெரிதும் வெளிக்காட்டி நிற்கிறது. அதிகாரம் இரட்டைத் தன்மை கொண்டது. ஒன்று, தனது மேலாண்மையை நேரடியாக ஒடுக்கப்படும் சமூகத்தின் மீது காட்டும். அது வக்கீலம்மாவின் செயல். இரண்டு, ஒடுக்கப்பட்ட சமூகமே அந்த அதிகாரத்தைப் பேணும் நிலைக்குத் தள்ளிவிடும் அது அந்தக் கூலிக்காரப் பெண்ணின் குரலில் வெளிப்படுகிறது. இதுதான் அதிகாரத்தின் வெற்றி. இதனை மையப்படுத்தியே கதை இயங்குகிறது.

மனிதர்கள் தங்கள் அறிவினைப் பிறரை அடிமைப்படுத்தவோ, அச்சுறுத்தவோ பயன்படுத்த முனையாமல் அறம் நோக்கிய எல்லோருக்குமான வாழ்வின் சாத்தியங்களை உருவாக்க மனித மனத்தைச் சுத்தப்படுத்த கதை முனைகிறது. போராட்டமே அதற்கான வழி என்பதை எடுத்துரைக்கிறது. மேலும், எளிய மனிதர்கள் மீது இரக்கம் காட்டவும் அவர்களின் துன்பத்தைப் போக்குவதையும் தனுஷ்கோடி ராமசாமியின் படைப்புகள் நோக்கமாகக் கொண்டுள்ளன. இதனோடு அடித்தள மக்கள் மீது மனித நேயம் கொண்டு அவர்களுக்கு எதிரான சமூகச் சூழலை, மேன்மைமிக்க மானுடச் சூழலை, கீழான நிலைக்குத் தாழ்த்துகிற வர்க்க வேறுபாட்டுச் சமூகத்தை மிக்கப் பகையோடும் நோக்கி அவர்களை மாற்ற வேண்டிய அவசியத்தை உணர்த்துகின்றன தனுஷ்கோடியின் படைப்புகள்.

துணைநின்ற நூல்கள் 

1.            க.கைலாசபதி, தமிழ் நாவல் இலக்கியம் என்.சி.பி.எச்.(பி) லிட், சென்னை 1984.

2.            ஆர். சிவக்குமார் (மொ.ஆ), ஜோனதன் கல்லர் இலக்கியக் கோட்பாடு – மிகச் சுருக்கமான அறிமுகம், அடையாளம், புத்தாநத்தம், 2012 (ம.ப.)

3.            தனுஷ்கோடி ராமசாமி, சேதாரம் (சி.தொ) அன்னம், சிவகங்கை, 1987 (மு.ப.) 

4.            ர.சுரேஷ், திருஞானசம்பந்தர் பாடல்களில் வைதீகக் கருத்தியல்(கட்), பெயல், அரையாண்டு ஆய்விதழ், ஏப்ரல் 2020 - செப்டம்பர் 2020. 

5.            டாக்டர் க. பஞ்சாங்கம், பெண் எனும் படைப்பு - சில மானுடவியல் குறிப்புகள், செல்வம் பதிப்பகம், புதுச்சேரி, 1994 

6.            சோ. முத்துமாணிக்கம், இயக்கவியல்; தமிழ்ப் புதினங்களின் வழி, காவ்யா, பெங்களூரு, 2000

- முனைவர் கு.சுந்தரமூர்த்தி, உதவிப் பேராசிரியர், தமிழ் முதுகலை & ஆய்வுத்துறை புதுக்கல்லூரி, சென்னை.