அறம் வெல்லும் மறம் வீழும்’ என்ற பொதுப் புத்தி நிலவுகிற தமிழர் வரலாற்றில் உண்மையிலே அறம் இருக்கிறதா? யோசிக்க வேண்டியுள்ளது. சங்க இலக்கியப் படைப்புகள் முதலாகத் தமிழிலக்கியப் பரப்பில் பெரிதும் வலியுறுத்தப்படும் சொல் அறம். பூமியில் மனித இருப்பு, காலங்காலமாக எதிர் கொள்கிற சமூகரீதியிலான பிரச்சினைகளையும், தனிமனிதச் சிக்கல்களையும் கடந்து சென்றிட அறத்தை முன்னிறுத்துவது வழக்கமாக உள்ளது. அறம் என்ற சொல்லின் பின்னர் பொதிந்திருக்கிற நுண்ணரசியல் வலுவானது. அறத்தின் இன்னொரு எதிரிணையான விதியானது, பிறப்பு, பால் அடிப்படையில் ஒவ்வொரு வருக்கும் தனித்தனியாக விதிக்கப்பட்டுள்ளது என்ற வைதிக இந்து மதத்தின் கருத்து, இன்றளவும் தமிழர் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்துகிறது. விதியின் விளையாட்டு, விதியை வெல்ல முடியுமா? விதியின் கைப்பாவை போன்ற சொல்லாடல்கள் கவனத்திற் குரியன. அறம் என்ற சொல்லானது ஆட்சியதி காரத்தில் இருந்து ஆள்கிறவர்களின் நலன்களைப் பேணுவதற்காகப் பெரிய அளவில் பயன்பட்டுள்ளது.
பொதுவாக மதங்கள் வலியுறுத்துகிற ஐம்புலன்களை அடக்கியடுக்குதல் என்ற நடத்தையானது அறமெனப் போற்றப்பட்டதில், உடைமைச் சமூகம் வலுவடைந்த சூழலில், அடக்கியடுக்கப்பட்ட அடிமை உடல் களை உருவாக்குதல் அடங்கியுள்ளது. அறம் என்பது விளிம்புநிலையினருக்குச் சார்பானது என்ற கருத்தியல் ஒருவகையில் நம்பிக்கை சார்ந்தது. தீமையை எதிர்த்திடும் ஆற்றல் அறத்தின் வயப்பட்டது என்ற பொதுப்புத்தி காரணமாகத்தான் ஒடுக்கப்பட்டோர் வரலாறு முழுக்க அடங்கி இருக்கின்றனர். இன்றைய இளைய தலைமுறையினருக்கு அறம் பற்றிய பிரக்ஞையோ புரிதலோ இருந்திட வாய்ப்பு இல்லை. நுகர்பொருள் பண்பாட்டில் எல்லாம் சந்தைக்கானதாக மாற்றப்படுகிற நிலையில், மதிப்பீடுகளின் வீழ்ச்சியும் தொடங்கியுள்ளது. என்றாலும் படைப்பு சார்ந்து இயங்குகிற சில படைப்பாளர்கள் அறத்தின் மாண்பைப் போற்றுகின்றனர்; எழுத்தின் வழியாகக் கண்டறிந்த உண்மைகளைச் சித்திரிக்கும்போது, அறச்சீற்றமடைகின்றனர். அறத்தையும் அன்பையும் முன்னிறுத்திச் சரவணன் சந்திரன் எழுதியுள்ள கட்டுரைகளை வாசித்தபோது, இன்னும் அறம் இருக்கிறது என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. கங்கை ஒருபோதும் வற்றாது என்பதுபோல அறம் என்றும் நிலைத்திருக்கும் என்று தோன்றுகிறது, அன்பின் வழியது அறம் எனப் புதிய போக்கினைக் காட்டி யுள்ள சரவணனின் கருத்தியல், இன்றைக்கு நிரம்பத் தேவைப்படுகிறது. சரவணன் சித்திரிக்கிற அறத்தை முன்னிறுத்தி நிரம்பப் பேசுவோம். அன்பைப் பற்றியும்தான்.
ஆனந்த விகடன் இதழில் தற்செயலாக வாசிக்க நேர்ந்த நண்பர் சரவணன் சந்திரனின் ‘அன்பும் அறமும்’ என்ற தொடரின் தலைப்பு, என்னைக் கவர்ந்தது. ஒவ்வொரு வாரமும் அறத்தை முன்வைத்துச் சரவணன் விவரித்த காட்சிகளும், அனுபவங்களும் மனிதர்களும் எனக்கு நெருக்கமானவர்களாக இருந்தனர். மேனாமினுக்கி, கருமி, பொறுக்கித் தனம், சுயநலம் போன்ற அற்ப விஷயங்கள் எங்கும் ஆதிக்கம் செலுத்துகிற நவீன வாழ்க்கையில் எதன்மீது நம்பிக்கை வைப்பது என்ற கேள்விக்கு விடையாகச் சரவணனின் விவரணைகளைக் கருதிட வேண்டி யுள்ளது. எளிய மொழியில் தருக்கரீதியில் சரவணன் விவரித்துள்ள வாழ்வியல் கதைகள் தழுவிய கட்டுரைகள், பிரசுரமானபோது, அவை வாசகர் களால் விருப்பத்துடன் வாசிக்கப்பட்டன. எனக்கு முந்தைய தலைமுறையினர் வாழ்க்கைக்கு அவசியம் எனக் கருதிய அறத்தினை எதிர்வரும் இளந்தலை முறையினர் அறிந்திடும்வகையில் சரவணனின் எழுத்து முயற்சி அமைந்துள்ளது. உலகமயமாக்கல் காலகட்டத்தில் அறம் என்பதன் நீட்சியாக அன்பின் வெளிப்பாடு எங்கும் படர்ந்திட வேண்டியதன் அவசியம் இன்று எல்லா மட்டங்களிலும் உணரப் பட்டுள்ளது. அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை என்று விளக்கமளிக்கிற திருவள்ளுவர், திருக்குறளின் பாயிரத்தில் ‘அறன் வலியுறுத்தல்’ எனத் தனியாகப் பத்துக் குறள்களைச் சொல்லியிருப்பது, தற்செயலானது அல்ல. சிவில் சமூகத்தில் அறத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவது வள்ளுவரின் நோக்கமாகும். யோசிக்கும் வேளையில் சமூக ஒழுங்கு அல்லது ஒழுக்கத்தின் ஆதாரமாக அறம் விளங்குவதை அறிந்திட முடிகிறது.
பதற்றமும் பயமும் எங்கும் பற்றிப் படர்கிற இன்றைய வாழ்க்கை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரமிது. எல்லோருக்கும் முன்கூட்டியே ஏதோவொரு திட்டம் காத்திருக்கிறது. எலியோட்டமாக ஓடிட வேண்டிய நெருக்கடி துரத்துகிறது. இயற் கையின் பிரிக்கவியலாத தன்மையை அறியாமல், எதுவும் செய்யலாம் என மனிதர்கள் பூமியை நாச மாக்கிடத் துடிக்கின்றனர். பூமிப் பந்தில் நுழைந்தது எவ்வளவு யதார்த்தமோ அதுபோல பூமியைவிட்டு வெளியேறுவதும் யதார்த்தம்தான். இடைப்பட்ட காலத்தில் மனிதர்கள் செலுத்துகிற வன்முறையும் அதிகாரமும் எல்லாவிதமான விழுமியங்களையும் சிதலமாக்குகின்றன. கையறு நிலையில் தவிக்கிற மனிதர்களுக்குத் தேறுதல் சொல்வதற்காக ஏற்படுத்தப் பட்ட மதங்கள், ஒருநிலையில் மனிதனைக் குள்ள மாக்கி விட்டன. உலகின் முதன்மையான பாசாங்குக் காரரும் கொடுங்கோலருமான கடவுளின் இருப்பு அல்லது மறைவு துயரங்கள் பல்கிப் பெருகிட வழி வகுத்துள்ளது. ஏன் தேவனே என்னைக் கை விட்டீர்? எனத் தேவகுமாரன் சிலுவையில் தொங்கியபோது கதறிய கதறல், இன்னும் காற்றில் மிதக்கிறது.
பனிக்குடம் உடைந்து தாயின் வயிற்றில் இருந்து வெளியேவரும் பச்சிளம் சிசு, ஒரு மணி நேரத் திற்குள் அம்மாவின் மார்பில் பால் குடித்திடக் கற்றுக் கொள்கிறது. காலந்தோறும் புதிய விஷயங்களைக் கற்றிட முயலும் முயற்சியானது, சிசுவின் மரபணுவில் பொதிந்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் சமூகத்தில் எதிர்கொள்கிற அனுபவங்களைச் சரியாக உள்வாங்கிக் கொள்கிற மனிதர்கள், இறுதிவரையிலும் கற்றலைத் தொடர்கின்றனர். எல்லாம் எனது கைக்குள் என்ற பிரேமைக்குள் சிக்கியவர்களின் நடைமுறை வாழ்க்கை, துயரத்தில் ததும்புகிறது. யதார்த்தத்தில் புனைவு எழுத்தாளர்கள் ஒருபோதும் கற்பனை செய்திட இயலாதவாறு நாளும் சம்பவங்கள் நடைபெறு கின்றன. ‘ஐந்து முதலைகளின் கதை’ நாவல் தொடங்கி வெற்றிகரமான நாவலாசிரியராக விளங்குகிற சரவணன், தான் கண்டு, கேட்டு அறிந்த கதைகளை விவரிக்கிற முறை, ஒருவகையில் அதிர்ச்சியை அளிக்கிறது. அதிகாரம், போலிப் புகழ்ச்சி, வீண் பெருமை, ஊழல், ஆடம்பரம், தற்பெருமை என அலைந்து திரிகிறவர்கள் ஒருபுறம் எனவும், கடுமையாக உழைத்து நேர்மையான முறையில் எளிய வாழ்க்கை வாழ்கிறவர்கள் இன்னொருபுறம் எனவும் இருவேறு உலகங்களை அடுத்தடுத்துச் சித்திரிப்பதுடன், சமூக விழுமியங்களை நாசுக்காகச் சொல்வது சரவணன் எழுத்தின் தனித்துவம்.
அன்றாட வாழ்வில் மனிதன் தவறு செய்வது இயற்கை. அதேவேளையில் செய்த தவறு குறித்துக் குற்ற மனம் இல்லாமல் கடந்து போவது இயல்பாகிப் போன சூழலில் என்ன செய்வது? என்ற கேள்வியை நூலில் இடம் பெற்றுள்ள சில கட்டுரைகள் முன் வைக்கின்றன. வாலிப வயதிலே சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு, கொலை உள்ளிட்ட சம்பவங் களை எவ்விதமான வருத்தமும் இன்றி, சாதாரணமாகச் செய்த சூசையண்ணன், வயதான காலத்தில் தவிக்கிற தவிப்பும் படுகிற பாடுகளும் கவனத்திற்குரியன. ஏன் சூசையண்ணனுக்கு இப்படியான வன்முறை வாழ்க்கை லபித்தது என்பதற்கு விடை எதுவுமில்லை. யாரோ ஒருவரின் தேவைக்காகச் சாகச மனநிலையுடன் செய்த கொலைகள் தந்த உற்சாகம் ஒருபுறம் என்றால், அந்தக் கொலைகளின் பின்விளைவாக எப்பொழுது தான் கொல்லப்படுவோமா என எந்த நேரமும் அஞ்சி நடுங்குகிற வாழ்க்கை இன்னொருபுறம் காத்திருக்கிறது. சூசையண்ணன் போலத் தான் செய்த தவறுகளுக்கு வருந்தாமல், தொடர்ந்து வன்முறையில் ஈடுபடுகிற வர்கள் வாழ்வின் இறுதிவரையிலும் சௌகரியமாக இருக்கச் சாத்தியமுண்டு. அறத்தின் மீதான அக்கறை யினால், சரவணன் மறச்செயல்களைக் கண்டிக்கும் வகையில் தனது எழுத்தினைக் கட்டமைத்துள்ளார். என்று சொல்லலாமா?
தெருவோரக் கடைகள் முதலாக வணிகம் குறித்த பதிவுகள், தனிமனித வாழ்க்கையின் மேம்பாட்டின் ஆதாரமாக விளங்குவது நுட்பமாகப் பதிவாகியுள்ளன. சரவணன், தொழில் தொடங்கு வதில் இருக்கிற சிக்கல்களைக் கிழக்குத் தைமூர் நாட்டில் ரமலோவிடமிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள், வாசிப்பில் வியப்பை ஏற்படுத்துகின்றன. முதலீடு, முதலீட்டாளனின் தகுதி பற்றிய பேச்சு களின் பின்புலத்தில் அறம் பொதிந்திருக்கிறது. Òதேவைக்கு அதிகமான விஷயங்களை நீ யாரிடமும் கேட்காதே, தேவைக்கு அதிகமான விஷயங்களை யாரிடமும் சொல்லாதே” என்ற ரம்லோவின் மந்திர வாசகம் தொழிலுக்கு மட்டுமல்ல, நடப்பு வாழ்க் கைக்கும் பொருந்துகிறது. உணவகத்தில் தரத்தைத் தொடர்ந்து பின்பற்றுகிறவர்கள் தவறிப் பிறந்தவர்கள் அல்ல. Òபணத்திற்காக எதையும் செய்யலாம். யாரையும் ஏமாற்றலாம் என்பது ஒரு காலகட்டத்தின் மனநிலையாக மெல்ல உருண்டு திரண்டு வந்து கொண்டிருக்கிறது” என்று ஆதங்கப்படுகிற சரவணனின் பார்வையில் அசலையும் போலியையும் இனம் பிரித்துக் கண்டறிந்து வாழ்கிறவர்கள்தான் நாகரிக சமூகத்தின் ஆன்மாக்கள்.
‘எதையும் கடந்தவர்கள்’ என விவரிக்கப் பட்டுள்ள சம்பவம், நடப்புச் சமூகத்தின் இன்னொரு முகம். குறிப்பாக இளம் தலைமுறையினர் செய்த தவறு பற்றிய பதற்றமின்றி இயல்பாக இருப்பதாக மாறிவரும் சூழல், எப்படி சாத்தியம் என்ற கேள்வி தோன்றுகிறது. இதுவரை சமூகம் கட்டமைத்திருந்த ஒழுங்கு, ஒழுக்கம், அறம் குறித்த அக்கறை எதுவுமற்ற நிலையில், துளிகூட குற்ற உணர்வின்றி இருக்கிற இளைஞன்/இளைஞியை எதில் சேர்ப்பது? குறைந்தபட்சம் நல்லது எது? கெட்டது எது? என்ற புரிதல் இன்றி வளர்கிறவர்கள்தான் மிதமிஞ்சிய சுயநலத்தில் எதையும் செய்யத் தயாராகின்றனர். Òகுற்றவுணர்வே கொள்ள வேண்டியதில்லை என்கிற மனநிலையை இவர்களுக்குக் கடத்தியது யார்? ஒரு குற்றம் நடந்தால் அது எல்லோருக்கும் பொறுப் பிருக்கிறது என்பது பாலபாடம். ஒளிந்து மறைந்து திரிந்து ஒரு தலைமுறை செய்ததை இப்போது இவர்கள் வெளிச்சத்தில் செய்ய ஆசைப்படுகிறார்கள்... ஒரு சமூகம் எதை வேண்டுமானாலும் உதறி விடலாம். அடிப்படை அறம் சார்ந்த குற்றவுணர்வை மட்டும் உதறிவிடக் கூடாது என்று எளிமையாகப் புரிந்து கொள்கிறேன். தொகுக்கப்பட்ட குற்றவுணர்வுகளின் வழியாகத்தான் ஒரு சமூகம் அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது என்பதை அழுத்தமாக நம்புகிறேன்” என்று நூலில் சரவணன் குறிப்பிட்டிருப்பது, யோசிக்க வைக்கிறது. குற்றம் செய்வது பிரச்சினை அல்ல. குற்றம் குறித்த குற்ற மனம் இல்லாமல் உருவாகிக் கொண்டிருக்கிற இளந்தலைமுறையினர்தான் பிரச்சினைக்குரியவர்கள். இத்தகையோரிடம் அன்பும் இல்லை, அறமும் இல்லை என்பது வேதனை யளிக்கிறது.
இன்றையப் பொருளியல் வாழ்க்கையில் குடும்ப உறவுகள், சிதலமாகி, அர்த்தமற்றுப் போவதைச் சில சம்பவங்கள் மூலம் சரவணன் விவரித்திருப்பது, வாசிப்பில் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. பெற்றோர் பொருளியல்ரீதியில் சிரமப்பட்டுப் படிக்கவைத்த குழந்தைகள், வளர்ந்து, வேலைக்குப் போய், திருமணமான பிறகு, அவர் களைப் புறந்தள்ளுவது, சமூக அடுக்கில் எல்லா மட்டங்களிலும் இன்று துரிதமாக நடைபெறுகிறது. தமிழரின் பாரம்பரியமான குடும்ப வாழ்க்கையைத் தொலைப்பது வேகவேகமாக நடைபெறுவது குறித்த கட்டுரை, சரவணனின் ஆதங்கமாக வெளிப் பட்டுள்ளது. முன்னர் கிராமத்து வாழ்க்கையில் யாரோ ஒருவரின் கேள்விக்குப் பயந்து, குடும்பத்தில் நடைபெறும் அத்துமீறல்கள் கட்டுக்குள்ளிருந்தன. இன்று அடையாளம் இழந்திட்ட நகரமயமான வாழ்க்கையில், சின்ன மனவருத்தம்கூட அடைய வேண்டாத நிலையில், வயதான பெற்றோர்களைக் கைவிடுவது சாதாரணமாகி விட்டது. கனியிருப்பக் காய் கவர்ந்திடும் நிலையில், கசப்பான சொற்களைச் சொல்வதனால் முறிந்திடும் குடும்ப உறவுகள் கட்டுரை, நுட்பமாகப் பிரச்சினையை அணுகி யுள்ளது. சுடுசொற்களைப் பேசுவதன் மூலம் நாச மடையும் கணவன் - மனைவி உறவு, குடும்ப உறவுகள் பற்றிய விவரிப்பு, நாற்பதாண்டுகளுக்கு முன்னர் ஊர்ச் சாவடியில் இருந்துகொண்டு, ஆலோசனை வழங்கிய பெரியவர்களை எனக்கு நினைவூட்டுகிறது.
மதம், இளமைக் கனவுகள், கண்காணிப்பு, பேரம், போலிப் பெருமிதம், கானகத்து விலங்குகள், பயம், போதை, குடிவெறி, வறுமை, கிராமத்து எளிய மனிதர்கள் என விவரிக்கப்பட்டுள்ள அனுபவம் சார்ந்த பதிவுகள், வாசிப்பில் வாசகர்களைத் தொந்தரவு செய்கின்றன; சமநிலையைச் சிதலமாக்கு கின்றன. குறிப்பாகக் குடியினால் சீரழிந்துகொண் டிருக்கும் தமிழக இளைஞர்களின் மனைவியர், பிள்ளைகள் அடைந்திடும் துயரங்களுக்கு அளவில்லை. இன்றோடு மதுக் குப்பிகள் கிடைக்காது என்பது போல, மட்டமான சரக்கினைக் குடித்துத் தீர்த்திட முயன்று மட்டையாகிடும் வாலிபர்கள், ஒரு வகையில் உளவியல் நோயாளிகள். இன்னும் சாதிக்க வேண்டிய வயதில் சீக்குக் கோழி போலத் தலையைத் தொங்கவிட்டுத் திரிகிற குடிநோயாளிகளான வாலிபர்கள் குறித்த சரவணனின் அவலம் தோய்ந்த பதிவுகள், நிகழ்ந்து கொண்டிருக்கிற அபாயத்தை முன்னறிவிக்கின்றன. குடியினால் சீரழிந்திடும் வாழ்க்கை வாழ்கிறவர்கள், குடும்பத்தில் அன்பையும் சமூகத்தில் அறத்தையும் இழந்து தட்டையாகி விட்டனர்.
இருபத்தோரு கட்டுரைகளில் சரவணன் விவரித்துள்ள சம்பவங்களும் அதனையட்டிய அவருடைய கறாரான அபிப்ராயங்களும் முக்கிய மானவை. சரவணனின் கட்டுரைகள் வாரந்தோறும் ஆனந்த விகடன் பத்திரிகையில் பிரசுரமானபோது, லட்சக்கணக்கான வாசகர்களால் வாசிக்கப்பட்ட நிலையில், நிச்சயம் குறைந்தபட்சம் 10,000 வாசகர் களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி யிருக்க வாய்ப்புண்டு. சவசவத்த சூழலில், கெட்டி தட்டிய இறுக்கமான மனதுடன் ஈரம் எதுவுமில்லாமல் வாழ்கிற மனிதர்களின் வாழ்க்கை குறித்துக் கேட்கப் பட்டுள்ள நுட்பமான கேள்விகள், ஒவ்வொரு கட்டுரையையும் உயிரோட்டம் மிக்கதாக மாற்றி விட்டன. தற்பொழுது நூல் வடிவம் பெற்றுள்ள கட்டுரைகளை ஒட்டுமொத்தமாக வாசிக்கும்போது ஏற்படுகிற அதிர்வுகள், தமிழ்ச் சமூகத்தில் ஆழமாக வினையாற்றக்கூடியன. தமிழரின் நடப்பு வாழ்க்கை குறித்து அறிந்திட விழைகிறவர்கள் ஒவ்வொருவரும் அவசியம் ‘அன்பும் அறனும்’ நூலை வாசித்து விட்டு, அது உருவாக்கிடும் முடிவற்ற பேச்சுக்களை விவாதிக்க வேண்டும்.
அச்சு ஊடகத்திலும், காட்சி ஊடகத்திலும் பல்லாண்டுகள் பணியாற்றிய சரவணனின் விவரிக்கிற சம்பவங்களின் மொழி, சுவராசியமாக உள்ளது. எந்த விஷயத்தை எப்படிச் சொல்ல வேண்டுமென்ற திட்டம் எதுவுமில்லாதபோதிலும் சரவணனின் ஊடக அனுபவம், அவரை அற்புதமான கதை சொல்லியாக மாற்றியுள்ளது. அறிவுரை வழங்கினால், யாரும் அதைப் பொருட்படுத்தாத சூழலில், நடப்புச் சமூகம் குறித்த பேச்சுகளை உருவாக்கிடும்வகையில் எழுதுவது என்பது ஒருவகையில் சவால்தான். ஏதோ வொரு வெகுஜனப் பத்திரிகையின் பக்கங்களை வாரந்தோறும் நிரப்பிடும் முயற்சி என்றில்லாமல், தன்னைச் சுற்றிலும் நடக்கிற விஷயங்களை நுட்பமாக அவதானித்து, பொதுப் புத்தியில் அதிர்வை ஏற்படுத்தச் சரவணன் முயன்றிருப்பது, இன்றைய காலகட்டத்தின் தேவையாகும்.
ஒரு தலைமுறையினர் கண்டறிந்திட்ட நுணுக்க மான விஷயங்களை அடுத்த தலைமுறையினருக்கு அளிப்பது என்பது பட்டறிவின் தனித்துவம். இத்தகைய அறிவுமயமான காலச் சங்கிலியின் கண்ணி, இன்று அறுபட்டுள்ளது. பிராய்லர் கோழி போலக் கல்விக்கூடங்களில் வளர்க்கப்படுகிற பதின் பருவத்தினர் அசலான அறிவு இல்லாமல், வறண்டிருக் கின்றனர். எல்லாம் ஆயத்தமயமாகிப்போன சூழலில், சுயமுன்னேற்ற நூல்கள், போட்டித் தேர்வுக்கான நூல்கள் போன்றவற்றை மட்டும் வாசித்து, உயர்ந்த நிலையை அடைந்திடத் துடிக்கிற இளைய தலை முறையினர், தாங்கள் இழந்தது எது என்ற புரிதல் இல்லாமலும், சமூகத்துடன் பொருந்திப் போக முடியாமலும் தத்தளிக்கின்றனர். தன்னைச் சுற்றிலும் நடைபெறுகிற காத்திரமான விஷயங்களைப் புரிந்திடாமல் ஒதுங்குவதுடன், தன்னையும் ஒதுக்கிக் கொண்டு வாழ்கிறவர்கள் எண்ணிக்கை பெருகிக் கொண்டிருக்கிற காலகட்டத்தில், சரவணனின் ‘அன்பும் அறமும்’ நூல், நுட்பமான பாதிப்புகளை ஏற்படுத்தும் ஆற்றல் மிக்கது. உன்னதமான மதிப்பீடுகள் சரிவடைந்த பின்புலத்தில், அசலான கதைகளுடன் நவீன வாழ்க்கையின் வீழ்ச்சி குறித்த சரவணனின் தீவிரமான இலக்கியப் பதிவுகள், இன்னும் தொடர்ந்திட வேண்டும். இளைய தலை முறைப் படைப்பாளியான சரவணன் சந்திரன் அறத்தைப் பற்றிக் காத்திரமாக எழுதியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.